என்றும் நீதானே!?_6_ஜான்சி

0
343

அத்தியாயம் 6

எளியவர்களின் குடியிருப்பு அது, அவள் சம்பளத்தில் ஏறத்தாழ பாதி வாடகைக்கு செலவாகப் போகின்றது எனத் தெரிந்தும் பாதுகாப்பு கருதி அங்கேயே வீட்டை வாடகைக்கு பார்த்துக் கொண்டாள்.

வீட்டிற்கு டெபாசிட் கொடுக்க அவள் வாங்கிய தொகையை மாதாமாதம் சம்பளத்தில் ஆயிரம் ரூபாயாக கழிப்பதாகவும் பணியிடத்தில் கூறி இருந்தனர்.

இந்த வீட்டிற்கு குடி வந்து ஏழெட்டு நாட்கள் ஆகி இருந்தாலும் கிருத்திகாவிற்கு இன்னும் மனம் நிலைக் கொள்ளவில்லை.தனது வாழ்க்கையை எண்ணி எண்ணி நொந்துக் கொண்டு இருந்தாள்.

செல்வனைப் பார்த்து வருடம் இரண்டாகின்றது. திருமணத்தின் முதல் இரண்டு நாட்கள் தான் அவள் அவனோடு இருந்தாள். அப்போது மிரண்டு போய் இருந்த அவளை சமாதானப்படுத்துவது தான் அவனது முதன்மையான நோக்கமாக இருந்தது என்பதால் அவர்கள் சாதாரண கணவன் மனைவியாக வாழ்ந்திருக்கவில்லை.

தங்களது திருமணத்தன்று அலைபேசியில் எடுத்த புகைப்படத்தின் பிரதியை எடுத்து அவளுக்கும் தன் வீட்டினருக்கும் ஆளுக்கொன்று கொடுத்திருந்தான். செல்வன் வீட்டை விட்டு புறப்பட்டுச் சென்றதும் காயத்ரி செய்த பறிமுதலில்  கிருத்திகாவிடமிருந்து இருந்து பறிபோகாத ஒரே பொருள் அதுதான்.

அப்புகைப்படத்தில் சோர்ந்து அழுத கண்களோடு இவளும், நிமிர்வான பார்வையில் அவனுமாக கழுத்தில் மாலையுடன் இருவரும் நின்றனர். வழக்கம் போல அதனை இலயித்து பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவளுடைய கணவனுக்கு இரண்டாவது திருமணம் செய்ய அவன் வீட்டினர் நினைக்கையிலேயே அவள் எதிர்த்து போராடி இருக்க வேண்டும் தான். “என் கணவனுக்கு பெண் பார்க்க நீ யாரடி?” என மாமியாரையும், நாத்தனாரையும் பிடித்து உலுக்கி இருக்க வேண்டும் தான். ஆனால், அவளால் அதை செய்ய முடியவில்லை.

இன்னமும் கூட கணவனின் அன்பில் அவளுக்கு நம்பிக்கை இல்லை… அல்லது அவர்களது அன்னியோன்னியம் அவ்வளவாக பலப்படவில்லை என்பதே உண்மை. ‘தன்னிடம் பேச வேண்டுமென்றாலும் ஊடே தாய்க்கு அழைத்து அவர் மூலமாக தன்னிடம் பேசுகின்றவனுக்கு தனக்கு உபயோகிக்க அலைபேசி வாங்கித் தர வேண்டும் என்கின்ற அளவுக்குமா தோன்றவில்லை? இல்லை இவளிடம் இவ்வளவு பேசினால் போதும் இல்லை இவள் தகுதிக்கு இது போதாதா? எனும் எண்ணமா?’

அதிலும் காயத்ரி தன் மகளிடம் புவனியை குறித்து பேசுகையில் என் மகனுக்கு ஏத்த மகராசி எனும் போது இவளுக்கு தாழ்வுணர்ச்சி மனதை அரிக்கும். உண்மைதானே? அவனுக்கும் அவளுக்கும் பொருத்தமே இல்லையே?

கண்ணாடி முன் நின்று கரிய தன் நிறத்தை உற்றுக் கவனித்தாள், சுருண்ட நீண்டுக் கிடந்த பின்னலை முன்னே எடுத்து போட்டுப் பார்த்தாள். உயரம் குறைவாகவும், குண்டாகவும் இருப்பதாகத் தோன்றியது.

சிரிக்க முயன்றாலோ, சிரிப்பே வரவில்லை உதடு ஒரு பக்கம் இழுத்து ஏதோ விகாரமாய் தோற்றமளித்தது. இதற்காகத்தான் நான் கண்ணாடியே பார்ப்பதில்லை மனதிற்குள் எண்ணிக் கொண்டாள்.

எத்தனையோ முறை போல செல்வனின் செயலில் அப்போது கேள்வி எழுந்தது. ‘அந்த செல்வன் என்னை எதற்காக திருமணம் செய்துக் கொள்ள வேண்டும்? அப்போது ஏதோ ஒரு பரிதாபத்தில் நம்மை திருமணம் செய்து இருப்பானாக இருக்கும். இப்போது அவனுக்கு இணையான பெண் கிடைக்கவும்….வெட்கமில்லாமல் மறுபடியும் திருமணம் செய்துக் கொண்டான்.இவன் விருப்பத்திற்கு எல்லாம் செய்ததில் அப்புறம் என்ன? ஆரம்பித்த வேகத்தில் என் வாழ்க்கை முடிந்து விட்டது. இத்தனைக்கும் நடுவில் என் வாழ்க்கை? நான் தான் வாழவே இல்லையே?’ கண்களில் நீர் முட்டிக் கொண்டு நின்றது.

ம்ஹீம்… இன்று காலைதானே அவனுக்கு திருமணம், இந்நேரம் புது மனைவியோடு திருமண விழாவை கொண்டாடிக் கொண்டு இருப்பான்… அதை எண்ண எண்ண அவள் இதயத்தில் இரத்தம் வடியாத குறை. அதனின்று தப்பிக்கத்தான் அன்றைய தினம் வேலைக்குச் சென்று திரும்ப வந்திருந்தாள். வீட்டில் அமர்ந்து அழுதால் மட்டும் என்ன நடக்கப் போகின்றது?

இதையே திரும்ப திரும்ப நினைத்துக் கொண்டு இருந்தால் என்னாவது? அடுத்த நாள் வேலைக்கு செல்ல வேண்டியதற்கு தயாரிப்போம் என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டவளாக முதலில் குடிக்க தண்ணீரை பாட்டில் ஒன்றில் ஊற்றி எடுத்து வைத்தாள்.

மனச்சோர்வு காரணமாக வந்ததும் படுத்தே கிடந்ததில் அன்றைய தினம் கொண்டுச் சென்ற சாப்பாட்டு டப்பாவை கழுவாதிருக்க, அதனை தன் பையினின்று எடுத்துக் கழுவி வைத்தாள்.

அப்போது,‘உலகமே இடிஞ்சு விழுந்தாலும், நான் சாப்பிடாம இருக்க மாட்டேன்” தன்னைத் தானே பகடி பேசி தன்னுள் சிரித்தாலும், “நான் ஏன் யாருக்காகவும், சாப்பிடாமல் இருக்கணும். என் கையில் உழைப்பு இருக்கு, நான் யாரை நம்பியும் இல்லை. நான் நல்லா சாப்பிடுவேன்” சூளுரைத்துக் கொள்ளாத குறையாக எண்ணிக் கொண்டாள்.  அப்போது தான் அவளது வீட்டின் கதவு தட்டப்பட்டது.

“கிருத்தி, கிருத்தி…. தூங்கிட்டியாடி?” வெளியில் கேட்ட குரலில் ‘இந்நேரம் லாவண்யா இங்கு ஏன் வந்தாள்?’ என்னமோ? ஏதோ?’ வென பதறியவளாக கிருத்திகா கதவை திறந்தாள்.

கதவை திறந்ததும் முதலில் அவள் பார்வைக்கு வந்தவள் லாவண்யா, அவளது பின்னே நிற்பவர் அவளது கணவர் இவர்கள் எதற்காக இந்நேரம்? என யோசித்துக் கொண்டிருந்தவள் அவர்கள் பின்னால் வந்து நின்றவனை கண்டு உறைந்தாளெனலாம்.

விபரம் எதுவும் சொல்லாமலேயே லாவண்யா “நேரமாகிருச்சு கதவை சீக்கிரம் பூட்டிக்கோ, வரோம்டி” என்றவளாக விரைந்து விட்டாள்.

“உள்ள வரலாமா கிருத்திகா?” என்றவனிடம் பதில் சொல்ல தடுமாறி நின்றவளிடம் அந்த நேரம் வாசலில் ஆட்கள் வந்துச் சென்றது கண்டு எதுவும் பிரச்சனையா? எனக் கேட்க வீட்டம்மாள் வந்து நின்றார்.

“என்னாச்சும்மா? யாரிது?”

“என் வீட்டுக்காரங்க” தட்டுத்தடுமாறிச் சொன்னாள்.

“ஓ அன்னிக்கு கூட போட்டோ காட்டினியே, தம்பியை நேர்ல பார்க்கவும் அடையாளம் தெரியலை, திரும்ப வந்தாச்சாப்பா?” கேட்கவும் அவன் முறுவலித்து பதில் சொல்ல அவர் விடைப்பெற்றார்.

‘அந்த ஒரு போட்டோவால் இன்று தனது மானம் கப்பலேறாமல் தப்பித்தது’, என கிருத்திகா எண்ணினாள். இரவு நேரம் தனியே இருக்கின்ற பெண்ணின் வீட்டிற்கு ஆண் ஒருவன் வந்தால் ஆதிகாலம் முதலாக அதன் காரணம் பாலுறவாக மட்டும் தானே கணிக்கப் படுகின்றது?

தன் எதிரில் திகைத்து நிற்கின்றவள் தன்னை உள்ளே அழைப்பாளா? எனும் எண்ணவோட்டத்துடன் எதிரில் நின்றவனை கிருத்திகா கவனித்தாள். சோர்ந்து வேலை செய்யாமலிருந்த அவள் மூளை சுறுசுறுப்பாகியதும், அவன் வந்த காரணம் எதுவாக இருந்தாலும் முதலில் அவனை உள்ளே அழைத்து பேசிக் கொள்ளலாம் எனும் முடிவிற்கு வந்தாள்.

செல்வனை நம்புகின்றாளோ இல்லையோ அவனை அழைத்து வந்து வீட்டில் விட்டுச் சென்ற லாவண்யா மீது அவளுக்கு அபரிமிதமான நம்பிக்கை இருந்தது. தனக்கு கிடைத்தது போல உலகிலே யாருக்கும் கிடைக்க முடியாத அரியவகை நட்பு அவள் எனும் பெருமிதம்.

செல்வனுக்கு வழி விட்டு “வாங்க” என்று உள்ளே அழைத்து அக்கதவை உள்ளே பூட்டினாள். அவளுக்கு அந்த சிறிய வீட்டில் அவனை எங்கே அமர வைப்பது? என்பதில் தான் இப்போது குழப்பம்.

அவளது சொற்ப வருமானத்தில் அந்த வீட்டை வாடகைக்குப் பிடித்து சில சாமான்கள் நிரப்பவே அவளுக்கு மூச்சு முட்டிப் போயிற்று. இதில் இருக்கைக்கெல்லாம் எங்கு போவாள்? ஒரு நொடி முன்பு தோழியைக் குறித்து பெருமிதமாக எண்ணி இருந்தாலும் செல்வனை இந்நேரம் தன்னிடம் கொண்டு சேர்த்த தோழியை இப்போது மனதிற்குள்ளாக திட்டத்தான் முடிந்தது.

செல்வனின் வீடு மிக நவீனமானது, அதிலும் அவள் அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய அவனது அறையில் தானே தங்கி இருந்தாள்… உழைத்து வீடு கட்டியவனுக்கு, அதை அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லை என அடிக்கடி எண்ணி இருக்கிறாள்.

அப்படிப்பட்ட அவனது அறையை கடந்த வருடங்களில் அவள் உபயோகித்து விட்டு, இப்போது அந்த அறையில் பாதியளவில் இருக்கும் இடத்தில், காற்றே வராத அந்த கொடகொடக்கும் மின்விசிறியின் சப்தத்தில், அவனை அமர கூடச் சொல்ல வசதியில்லாமல் தான் நிற்க வைத்திருப்பது குறித்து அவமானமாக உணர்ந்தாள்.

வந்த வேலையை செய்து விட்டு திரும்ப போய்விடுவான் எனும் எண்ணத்தில், “உங்களுக்கு என் கையெழுத்து எதுவும் வேணுமா?” எனக் கேட்டாள்.

செல்வனுக்கோ காலையில் இருந்து மனைவியை காணாமல் அவன் தவித்த தவிப்புகள் காரணமாக எழுந்த பயம், பரிதவிப்பு எனும் உணர்வெழுச்சிகள் இப்போது அவளை கண்ட பின்னரும் சமனப்பட்டு இருக்கவில்லை.

தன் மனைவியை வீட்டினர் நடத்தியவற்றை மூன்றாம் மனிதர்களான புவனேஸ்வரி மற்றும் லாவண்யா கூறியதில் இருந்து குற்ற உணர்ச்சியால் அவன் துடித்துக் கொண்டு இருந்தான். அதை விடவும் தான் அவளை தேடி வந்தது தனது மறுமணத்திற்கான ஏதோ கையெழுத்திற்காக என எண்ணி அவள் கேட்ட கேள்வி அவனை மிக பலமாக தாக்கியது.

அவன் மனமும் உடலும் களைத்திருக்க,

“குடிக்கிறதுக்கு கொஞ்சம் …. தண்ணி”, கேட்க முடியாமல் அவன் தொண்டை வரண்டு இருந்தது. கிருத்திகா பொருட்கள் போட்டு வைக்க வைத்திருந்த அந்த பெரிய டப்பாவின் மேல் சில சேலைகளை சுருட்டி இருக்கை போல வைத்து இருந்ததைக் கண்டதும் அதனை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.அப்பாத்திரம் க்றீச்சென சப்தம் எழுப்பி அமைந்தது.

அவனுக்கோ பசி ஒரு பக்கம், தாகம் மறுபக்கம் என இருக்க, அவள் தந்ததும் அவசரமாக தண்ணீரை தொண்டையில் சரித்தவன் புரையேறி இரும ஆரம்பித்தான். அவனது கண்களினின்று கண்ணீர் வடிந்ததைக் கண்ட இவள் பதறினாள். முதலில் தயங்கியவளாக அவன் தலையில் மிக லேசாக தட்டியவள், தொடர்ந்து இருமவும் அவன் முகத்தை உயர்த்தி அவன் முதுகை நீவி விட்டாள்.

ஒருவழியாக அவன் சமனப்பட சில நிமிடங்களாகி இருந்தன. அவள் இப்போது அவனருகில் இருந்து நகர யத்தனிக்க, செல்வனோ அவளது இடுப்பைக் கட்டிக் கொண்டு அவள் வயிற்றில் முகம் புதைத்தான், அவனது கண்ணீர் அவளது இரவு உடையை தாண்டி அவளை சுட்டது.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here