என்றும் நீதானே!?_7_ஜான்சி

0
316

அத்தியாயம் 7

நள்ளிரவு பணிரெண்டு தாண்டி ஐந்து நிமிடமாகி இருந்தது. கிருத்திகா தனது ஒற்றைப் படுக்கையையும் பறிக் கொடுத்து விட்டு அவ்வீட்டின் மூலையில் பேந்த பேந்த விழித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

செல்வன் மீது அக்கறையா ஆதங்கமா? எனப் புரியாமல் ‘ஏசி ரூமை விட்டுட்டு இங்க வந்து புழுக்கத்தில கிடக்காரே?’ என அவள் எண்ணங்கள் பயணித்தன.

செல்வனுக்கோ தாம் பதறி தேடியவளை கண்ணால் கண்டதால் எழுந்த ஆசுவாசமா? இல்லை, அவளது மடியிலேயே அழுததும் கிடைத்த மன நிம்மதியா எனத் தெரியவில்லை. அவளுக்கு எந்த விளக்கமும் சொல்ல முற்படாமல் தன் கண்ணீர் படிந்த முகத்தோடு தன் கைகால்களைக் கழுவி வந்தான்.

இவன் வீட்டிற்கு வருவதற்கு முன்பாகவே கிருத்திகா ஏற்கெனவே உருண்டு எழும்பி இருந்த அந்த படுக்கை. அந்த ஒற்றை போர்வை மற்றும் சில சேலைகளை தலையணை போல சுருட்டி வைத்திருந்த கொண்ட அந்த படுக்கையை கண்டதும் செல்வன் நீட்டி நிமிர்ந்து படுத்தவன் தான் அதன் பின்னர் அப்படியொரு தூக்கம்.

இங்கோ கிருத்திகாவின் நிலை பரிதாபமாக இருந்தது.அவளிடம் இருந்தது அந்த ஒரே ஒரு போர்வைதான் தான், மூடிக்கொள்ள கூட தன் சேலையையே உபயோகித்து வந்தாள். அவள் கண்கள் தூக்கத்திற்கு சொக்க, படுக்க இடம் கிடைக்காமல் தூக்க மிகுதியில் கடுப்பானவள் செல்வனை பார்த்து காண்டாகி காண்டாமிருகமாகும் சாத்தியக் கூறுகள் அதிகரித்து இருந்தன.

‘நல்ல மனுசன்யா நீ… உங்கம்மா என்னை வீட்டிலிருந்து விரட்டினான்னா நீ என் படுக்கைலருந்து விரட்டிட்ட. என் வீட்டுக்கு வந்து என் படுக்கையில் படுத்து பொசுக்குன்னு தூங்கிட்ட? இப்ப நான் எங்க தூங்குறதாம்?’ முணுமுணுத்தவாறு இருந்தவள் வேறு வழியில்லாமல் போர்வையில் அவன் ஆக்கிரமித்த பின்னர் மீதி இருந்த சின்ன இடத்தில் படுக்க ஆயத்தமானாள்.

அவன் படுத்திருந்ததற்கு எதிர்பதமாக இவள் படுத்தாள். அவனது கால் பக்கம் இவளது தலை இருக்க, இவளது கால் பக்கம் அவனது தலை இருந்தது. கிடைத்த இடத்தில் நெளிந்து நெளிந்து உடலை வசதியாக நிமிர்த்தி படுத்தவளுக்கு தான் எப்போது தூங்கினோம்? என்றே தெரியவில்லை. காலையில் விழித்தவளால் தன் உடலை அசைக்க முடியவில்லை. தனது கால்கள் எங்கோ சிக்கிக் கொண்டதான உணர்வு.

முயன்று திரும்பி பார்த்தால் இவள் கால்களை தன் மாரோடு அணைத்துப் பிடித்து அவன் உறங்கிக் கொண்டு இருந்தான்.முன்பு ஒரு போதும் அவனுடன் இந்த நெருக்கத்தை அனுபவித்து இல்லாதவளுக்கு கூச்சமாகவும், அசௌகரியமாகவும் இருந்தது. அதெப்படி இவனால் முன் பின் வந்திராத இந்த வீட்டில் இவ்வளவு இலகுவாக உறங்க முடிகின்றது? அதுவும் தனது கால்களை கட்டிக்கொண்டு?

“கொஞ்ச நேரம் எத்தாம தூங்க விடு கிருத்தி” அவன் தூக்கத்தில் பேசவும், ‘அச்சோ இவனை ராத்திரி மிதிச்சிருப்போம் போலவே?’ முதலில் பாவமாக எண்ணியவள் ‘பரவால்ல தூக்கத்திலயாவது கோபம் தீர மிதிச்சிருக்கோம்’ என ஆசுவாசம் கொண்டாள்.

“தண்ணி வர்ற நேரம் இப்ப பிடிச்சா தான் உண்டு, இல்லன்னா போயிடும் காலை விடுங்க” என்றாள். அடுத்து கிருத்திகாவின் காலை வேலை சுறுசுறுப்பாக ஆரம்பிக்க அந்த குட்டி வீட்டின் சலசலப்பில் செல்வனால் நெடுநேரம் உறங்க முடியவில்லை.

குளித்து விட்டு வெளியே வந்தவள் ‘கதவு போட்ட குளியலறையா இருக்கப் போய் பரவாயில்லை’ தனது தற்போதையை நிலை குறித்து எண்ணிக் கொண்டாள். அவசரமாக அவள் உணவை தயாரிப்பதை செல்வன் அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தான். தானும் குளித்து முன் தினத்தின் உடைகளையே அணிந்து இருந்தான்.

வீட்டம்மாளின் அலைபேசியில் இருந்து லாவண்யாவின் அழைப்பு வந்தது… செல்வன் கேட்டுக் கொண்டதன் பெயரில் அவளுக்காக லாவண்யா விடுப்பு சொல்லி விட்டதாகவும், கிருத்திகா இன்று அலுவலகம் வர வேண்டாம் எனவும் அவள் தெரிவித்தாள்.

‘தன்னை வேலைக்கு போகாமல் தடுக்க இவன் யார்?’ என அவன் மீது அவளுக்கு கோபம் கோபமாக வந்தது.

அலுவலகத்திற்காக புறப்பட்டு இருந்தவள் செய்ய ஒன்றும் இல்லாமல் தரையில் அமர்ந்தாள். தான் சமைத்து வைத்தவை நினைவிற்கு வர, உப்புமாவை இரண்டு தட்டுகளில் இட்டவள் தொட்டுக் கொள்ளவென ஒரு கிண்ணத்தில் சீனியை வைத்தாள். இரண்டு கிளாஸ்களில் தயாரித்த டீயை வடிக்கட்டியினால் அரித்து ஊற்றி தங்கள் இருவருக்கும் பறிமாறினாள்.

சாப்பிடு என்றெல்லாம் அவள் அவனிடம் சொல்லாவிடினும் செல்வன் அவசரமாக முதலில் டீயை எடுத்து குடித்தவன் சற்று நேரத்தில் உப்புமாவை உண்டு தீர்த்தான். அவனது சாப்பிடும் வேகத்தில் பசி புரிய பாத்திரத்தில் இருந்த மீதியையும் கொண்டு வந்து பறிமாறினாள்.

உண்டதும் பசியின் மிகுதியில் துடித்துக் கொண்டு இருந்த தன் உயிர் திரும்ப வந்தாற் போல செல்வனுக்கு இருந்தது. அவனிடம் பணம் இல்லாமல் இல்லை, வேண்டுமானால் அவன் வெளியே சென்று உண்டு வந்திருக்கலாம். ஆனால், அவன் கிருத்திகாவிடமிருந்து சிலவற்றை எதிர்பார்த்தான். அவன் கேட்காமலேயே அவள் பறிமாறிய விதத்தில் மனம் குளிர்ந்துப் போயிருந்தது.

மீண்டும் சொதப்ப போவதை அறியாமல் …தான் சொதப்பி வைத்து இருக்கின்றவைகளை முதலில் சரிப்படுத்த எண்ணினான்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here