என்றும் நீதானே!?_8_ஜான்சி

0
253

அத்தியாயம் 8

கிருத்திகாவிற்கு தன்னை சுத்தி என்ன நிகழ்ந்துக் கொண்டு இருக்கின்றது எனப் புரியவில்லை. காலையில் தனது ஆதார் கார்டு மற்றும் சில விபரங்களை கேட்டு வாங்கிச் சென்றவன் இன்னும் திரும்ப வரவில்லை.

‘இதுக்கு நான் வேலைக்காவது போயிருப்பேன்ல?’ கடுப்பாகி இருந்தாள். முன் தினம் அவன் வந்தான்,அழுதான் தான்… தான் இரண்டாம் திருமணம் செய்வது அல்லது செய்ததுக் குறித்து வருந்துகிறான் போலும் என நினைத்துக் கொண்டாள். அவள் வீட்டிலேயே அவன் உறங்கியது அவளை இன்னும் குழப்பியது. ‘எழுதி வாங்கிட்டு வந்தாதான் வீட்டில விடுவேன்னு அவன் இரண்டாவது பொண்டாட்டி சொல்லிருப்பாளோ? என எண்ணிக் கொண்டாள்.

உணவு உண்ட பின்னர் அலைபேசியில் யார் யாரிடமோ பேசினான், இவளுக்கு ஆங்கிலத்தின் ஆ கூட தெரியாதே? அவன் என்ன பேசுகிறான் என என்ன அறிவாள்?

அவளிடம் இன்னின்ன டாகுமெண்டுகள் வேண்டும் எனக் கூறவும், அவள் தந்தவற்றை பெற்றுக் கொண்டு “நான் வரேன்” என புறப்பட்டுச் சென்றவன் தான் மதியம் மணி மூன்றாகியும் வரவில்லை.

கூடுதலாக அரைமணி நேரம் கழிய செல்வன் வியர்த்து ஊற்றிய உடையோடு வீட்டிற்குள் வந்தான். “இன்னும் ஒரு வாரத்தில இருக்கும், ரொம்ப அலைஞ்சு திரிஞ்சதில் காசு கொடுத்து சீக்கிரமா வைக்கச் சொன்னேன்” என்றான் அவன். தலையும் வாலும் இல்லாமல் அவன் சொன்னதில் ‘ஏது ஒரு வாரத்தில விவாகரத்தா? அவ்வளவு சுளுவா?’ வியந்தாலும் தனக்கு விதிக்கப்பட்டது இதுதான் என கடந்த நாட்களில் மனதை தேற்றிக் கொண்டு இருந்ததில் அவளின் மனம் மரத்துப் போயிருந்தது.

‘அதெப்படி ஒன்னுமே நடக்காதது போல சிரிக்கிறான்?’ அவன் முகம் கண்டு வெகு கடுப்பாக இருந்தது. ‘இதெல்லாம் அவன் வீட்லருந்து செய்ய வேண்டியதுதானே? அது ஏன் இங்க வந்து செய்றான்? நினைச்ச நேரம் அழக்கூட முடியலை இவனோட… இவன் சிரிச்சா பதிலுக்கு நானும் சிரிக்கணுமா? நான் என்ன பைத்தியமா?’ பொருமினாள்.

தான் அவனது வீட்டில் இருந்த நாட்களுக்காக அவனை பொறுத்துப் போனாள். ஆம், அவளைப் பொறுத்தவரையில் வீட்டுக்காரன் என்பது தான் தங்கி இருந்த வீட்டுக்காரன் எனும் பொருள் மட்டுமே தந்தது.

“சாப்பிட்டியா?” எனக் கேட்டவன் சாப்பாடு அப்படியே இருந்ததைக் கண்டு அவளுக்கும் உணவு பரிமாறிக் கொடுத்து தானும் உண்ண அமர்ந்தான். இப்போதும் கைக்கும் வாய்க்கும் சண்டை என வெகு தீவிரமாக உண்டுக் கொண்டு இருந்தான். உண்ணும் அவசரத்தில் இருந்தவனை கிருத்திகா நிதானமாக பார்வையிட்டாள்.

நல்ல கருத்த நிறம், சிகை முன் நெற்றியை மறைத்துக் கொண்டு இருந்தது. அந்த அளவான மீசை அவனுக்கு அழகுதான். அவசரமாய் அவன் குனிந்து உண்டதில் தலையின் பின்பக்கம் சின்னதாக ஒரு வெளிச்சம் இவளுக்குத் தெரிந்தது. அவனுக்கு விரைவில் வழுக்கை விழ ஆரம்பித்து விடும் அறிகுறிகள் தெரிந்தன. முகத்தில் படித்தக் களையோடு கூட கவலையின் சாயலும்.

‘பின்ன சும்மாவா? ஒரு கல்யாணம் செய்றவனே லோல் படும் போது இரண்டு கல்யாணம்னா பாவம் தானே?’ தங்கள் விவாகரத்திற்குப் பிறகு அவனை தன் வீட்டிற்கு உள்ளேயே அனுமதிக்கக் கூடாது என எண்ணிக் கொண்டாள்.

கணவன் பார்வையோ, உரிமையோ எடுத்துக் கொள்ளும் உத்தேசத்தில் அவன் இருந்ததாக தெரியவில்லை என்றதால் இப்போதும் அவன் அவளோடு இருப்பது அவளுக்கு அவ்வளவாக நெருடவில்லை. ‘என்ன இருந்தாலும் அந்த புவனேஸ்வரி அளவுக்கு நான் இல்லை, என் மேல இந்தாளுக்கு ஆசை எப்படி வரும்?’ அவனது உரிமை எடுத்துக் கொள்ளப்படாமைக்கு அவள் தன் மனதில் காரணம் கற்பித்துக் கொண்டாள்.

அவளது வீரமெல்லாம் மனதிற்குள்ளாகத்தான். சூடு பட்ட பூனையாய் தன்னை சுருக்கிக் கொண்டு வாழவே பழகி விட்டிருந்தாள்.

அவளது காயப்பட்ட மனது எந்நேரமும் எல்லாவற்றிலும் தன்னையும் புவனேஸ்வரியையும் ஒப்பிட்டு காயப்படுத்திக் கொண்டு இருந்தது.

இவள் உணவு சூடு ஆறி காய்ந்து போயிருக்க அவன் உண்டு எழுந்து, “என்ன ஏன் சாப்பிடலை நீ? உனக்காக எதையாச்சும் வாங்க நினைச்சேன். ஆனால், அந்த நேரம் எல்லா கடையும் அடைச்சிருந்தது.” என்றான்.

“பரவால்ல, எனக்கு பசிக்கலை, அதான் சாப்பிட முடியலை” என்றாள். என்னச் சொல்வதென புரியாமல் நின்றவன்…

“நான் கொஞ்ச நேரம் தூங்கிக்கவா?” கேட்டு அந்த போர்வையை அவனே விரித்து சேலைகளை பொதிந்து தலையணையாக்கி தூங்கியே விட்டிருந்தான்.

‘அடப்பாவி மறுபடி தூங்கிட்டானா?’ இவள் மனதிற்குள்ளாக செல்வனை தாளித்து முடித்திருந்தாள்.

மாலை நேரம் அவர்கள் வாடகைக்கு எடுத்து இருந்த வீட்டின் பக்கத்து அறையில் ஏதோ வேலை நடந்துக் கொண்டிருக்க அந்த சப்தத்தில் எழுந்தமர்ந்தான். சுவற்றோரம் தலை சாய்த்து உறங்கிக் கொண்டு இருந்தவளைக் கண்டு மனம் பிசைந்தது. அவளிடம் மனம் விட்டுப் பேச முயன்றும் அவனால் முடியவில்லை.

செல்வன் நல்ல படிப்பாளிதான், பணி புரியும் இடத்தில் நல்ல பெயர் எடுத்தவன்தான். ஆனால், தன் வாழ்க்கையில் வறுமையின் துயரம் அனுபவித்து இருந்தாலும் இப்படிப்பட்டச் சிக்கல்களை சந்தித்தவனல்ல. பணியிடத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பவனவன்.

தான் சட்டென்று முடிவெடுத்து கிருத்திகாவை திருமணம் செய்தது குறித்து அவனுக்கு இப்போதும் ஆச்சரியமே. இப்படியிருக்க கடந்த நாட்களின் பிரச்சனைகளை எப்படி சரிசெய்வதென்றே அவனுக்கு புரியவில்லை. தான் எதையாவது பேசி அல்லது செய்து இன்னும் பிரச்சனையை இழுத்து வைத்துக் கொள்வோமோ? என பயந்தான்.

மனைவியிடம் முன்பு நிகழ்ந்தவைகளை பேச ஆரம்பித்தால் அவற்றில் தன் தாய் மற்றும் தங்கையின் குற்றங்கள் மட்டுமே இருக்கும் எனப் புரிந்ததில் அதை எதிர்கொள்ள தயங்கி தள்ளிப் போட்டான். தான் இரண்டாம் திருமணம் செய்துக் கொண்டதாக அல்லது செய்துக் கொள்ளப் போவதாக கருதுகின்றவளுக்கு இன்னமும் விளக்கமே கொடுக்கவில்லை என்பதை அவன் உணரவில்லை. தன்னுடைய உடனிருப்பும், அனுசரணையும், செயல்களும் அவளுக்கு புரிய வைத்து விடும் என எண்ணினான். பேசாத வார்த்தைகள் எத்தனை எத்தனை கற்பனைகளுக்கு காரணமாகிவிடும் என்பதை அவன் உணர்ந்தானில்லை. உணரும் போது என்னாகும்?

உறங்கிக் கொண்டு இருந்தவளை தொந்தரவு செய்யாமல் வெளியே சென்றவன் உண்பதற்கு சிலவற்றை வாங்கி வந்தான். அதற்குள்ளாக அவள் விழித்து இருந்தாள். இவன் வந்ததும் டீ போட பாத்திரத்தில் தண்ணீர் வைத்தாள். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் டீத்தூளை ஸ்பூனில் எடுத்துப் போடவும் டீயின் புத்துணர்வூட்டும் மணம் வீட்டில் பரவியது. டீத்தூள் வெந்துக் கொதித்துக் கொண்டு இருக்க தேவைக்கு சர்க்கரை சேர்த்தாள். அது வெந்து கொதிக்க பால் சட்டியில் இருந்த பாலை ஊற்றினாள்.

தயாரான டீயை இரண்டு கிளாஸீகளில் ஊற்றியவள் தனக்கும் அவனுக்குமாய் பகிர்ந்துக் கொண்டு செல்வன் வாங்கிக் கொண்டு வந்திருந்த எண்ணைப் பலகாரங்களுள் சில எடுத்துக் கொண்டாள். “எடுத்துக்கோ” எனச் சொல்லியும் அதிகமாய் எடுத்துக் கொள்ளவில்லை அவன் பசியின் அளவு புரிந்திருந்தாளல்லவா?

“உங்க வீட்டிலருந்து யாரோடயும் அப்புறம் பேசுனியா?” என்றவனிடம்,

“என் கிட்ட போனில்ல, அவங்க நம்பரும் இல்லை” என்றாள். போனில்லை என்பது உணமைதான் ஆனால் நம்பர் இல்லை என்பது உண்மையல்லவே? தன்னை வேண்டாத பொருளாக பார்க்கின்றவர்களை அவளும் முற்றும் வெறுத்து விட்டாள் என்பதே உண்மை.

கணவன் தன் தாய், தங்கை செய்தவற்றை தவிர்த்து வேறு எதையாவது பேச முனைகிறான் என்பதை அவள் புரிந்துக் கொண்டாள். இகழ்ச்சி முறுவல் எழுந்த போதும் அதை தவிர்த்து வேறு சில பொருளற்றவைகளை பேசிக் கொண்டு இருந்தார்கள்.

தலையும் வாலும் இல்லாமல் “பக்கத்து வீடு இன்னும் இரண்டு நாளில் தயாராகிடுமாம்” என்றான். ‘வழக்கம் போல உளறுகிறான்’ என எண்ணியவள் அதை கண்டுக் கொள்ளவில்லை.

வீட்டுக்கார அம்மாள் வாசலில் வந்து அவனிடம் ஏதோ பேசிக் கொண்டதையும், “இரண்டு நாள் தான தம்பி, அது வரைக்கும் இங்க இருக்கட்டும்.” என்று கேட்டதும் ‘ஓ இரண்டு நாள்தான் இங்க இருப்பான் போல?’ என கசந்த முறுவலுடன் எண்ணிக் கொண்டாள்.

மறுபடி வெளியே சென்று வந்தவன் கையில் இப்போது ஒரு பை அதில் இருந்த வேறு உடைகளை எடுத்து அணிந்துக் கொண்டு இலகுவாக இருந்தான். அவன் ஹோட்டலில் வைத்து இருந்த லக்கேஜீக்களை வீட்டு ஓனரின் வீட்டில் பத்திரப்படுத்தி விட்டு சின்னப் பையில் தனக்கு தேவையான துணிகளை மட்டும் கொண்டு வந்தது இவளுக்குத் தெரியாது.

உணவு உண்டு முடிந்ததும் வீட்டை ஒதுக்க ஆரம்பித்தான். அவனது உயரத்திற்கு இவள் அங்கங்கே வைத்திருந்த பொருட்களை மேலடுக்குகளில் அடுக்குவது சுலபமாக இருந்தது. வீடு ஒதுங்கியதும் பெரிதாக காட்சியளித்தது.

“ஐயோ அந்த பேக், அந்த பாத்திரம்லாம் நாளைக்கு வேணுமே?” என்றாள் கேள்வியாக…

“நாளைக்கு எல்லாம் எடுத்து தரேன், சரியா?” என்றானவன்.

தனது பையிலிருந்து புதுப் போர்வைகள் சில எடுத்து விரித்தான். இருவருக்குமான தாராளமான இடமிருந்தது. காற்று ஊதி தலையணை ஒன்றை பெரிதாக்கினான்.

‘இதை நீ வச்சிக்க கிருத்தி, எனக்கு நேத்து மாதிரி உன் சேலை சுத்தி தர்றியா? மதியம் எனக்கு சரியாவே பொதிய தெரியலை” ஏதோ பெரிய குற்றம் போல அவன் சொன்ன விதத்தில் அவளுக்கு சிரிப்பாக இருந்தது.

முன்னிரவு போல அவன் படுத்ததும் அவனது கால்மாட்டில் தன் தலை வரும்படி தான் அவள் தூங்கி இருந்தாள். அடுத்த நாள் விழிக்கையில் அவளது கால்கள் அவன் மார்பில் கட்டுண்டு கிடந்தன. ‘முன் தினம் தான் இடமில்லை என அவனை நெருங்கிப் படுத்து இருந்தேனென்றால் இன்றுமா? அடக்கடவுளே?’ நொந்துக் கொண்டு தன் கால்களை விடுவித்து வேலைகளை ஆரம்பித்தாள்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here