என்றும் நீதானே!?_9_ஜான்சி

0
303

அத்தியாயம் 9

அவளது காலை நேர வேலைகள் நடக்கும் போதே எழுந்து படுக்கையை சரி செய்து வைத்தவன் வெளியில் சென்று பாலையும் காலை உணவையும் வாங்கி வந்தான்.

வழக்கமாக டீ போட்டுக் கொண்டு இருந்தவள் எண்ணும் முன்பாக அவள் முன் பால் பாக்கெட் இருக்க விழி விரித்தாள். காலை உணவாக இட்லியும் வடையும் இருக்க அவன் கரிசனையில் மனம் மகிழ்ந்தது. பிடித்த உணவு, அதுவும் வெகு நாளாய் உணவில் நாட்டமில்லாது போயிருக்க மணமூட்டும் அந்த வாசனையில் மயங்கி, அருகில் அமர்ந்திருந்த தன் சாப்பாட்டு இராமனை கணக்கில் கொள்ளாமல் விரும்பிய மட்டும் எடுத்து உண்டாள்.

மதிய உணவு தயாரித்து வைத்து, எளிமையான சேலை ஒன்றை அணிந்து தலைமுடி வாரி பின்னலிட்டு க்ளிப்பை மாட்டியவள். முகத்திற்கு சற்று பவுடர் பூசி சின்னதாய் பொட்டிட்டு கண்ணாடிப் பார்த்தாள். தனது நைந்த கைப்பையை அவள் எடுத்து, மதிய உணவை எடுத்து டிபனில் வைக்கும் போதுதான் செல்வனுக்கு அவள் வேலைக்குச் செல்ல புறப்படுவது உரைத்தது.

“கிருத்திகா, நீ இனி வேலைக்கு போக வேண்டாம்.”

கடந்த நாட்களில் இவள் நிலை புரியாமல் எப்படி இருக்க? நல்லா இருக்கியா? மட்டுமில் தன் வாழ்க்கையை நகர்த்தியவன். இருந்தாயா செத்தாயா? எனக் கவலைப்படாதவன் அவளது வேலையில் தலையிடவும் சுள்ளென எரிந்தது அவளுக்கு.

“அப்படின்னா பூவாவுக்கு என்னச் செய்ய?” கடுப்பில் நக்கலாகவே கேட்டாள்.

“நான் தருவேன் கிருத்திகா”

“அதெல்லாம் யார் தயவும் எனக்குத் தேவையில்ல, உங்க கிட்ட ரூபா வாங்கி வாழணும்னு எனக்கு என்ன தேவை?” ஜீவனாம்சம் குறித்து பேசுகிறானோ என்றே அவளுக்குத் தோன்றியது. அவள் மண்டை மனம் எல்லாம் மரத்து விட்டது போலும்.

“இல்ல, நீ வேலைக்கே போக வேணான்னு சொல்லலை. பன்னிரெண்டு மணி  நேரம் நிக்கணும்னா எவ்வளவு கஷ்டம்? வேற வேலை பார்த்துன்னா போகலாம்ல?” தாழ்ந்து போனான்.

“அதனால என்ன? இந்த வேலையாலத்தான் நான் மானம் மருவாதயோட காலம் கடத்தினேன். இந்த வேலைதான் எனக்கு கடவுள். நான் வேற எங்கயும் வேலைக்கு போகிறதா இல்லை.”

அவளின் கூற்றில் தன் தாய், தங்கை செய்த குற்றங்கள் நினைவிற்கு வர அவன் அமைதியாகிப் போனான். விறுவிறுவென புறப்பட்டுச் சென்றவளுக்கு ‘அவளது வீட்டில் இருக்கின்றவன் என்னச் செய்கிறான்? என்னச் செய்யும் நோக்கத்தோடு வந்திருக்கிறான்?’ எனும் நோக்கம் புரியாமலே போயிற்று.

திருமண நாட்களின் ஆரம்பத்தில் அவனது அருகாமையை வெகுவாக நாடியவள் அவள். அப்படியிருக்க, கொஞ்ச நாளேனும் அவன் தனது இருப்பிடத்தில் தங்கி இருப்பதில் உள்ளூர அவளுக்கு மகிழ்ச்சியே. அது மட்டுமில்லாமல் வீட்டிற்கு வந்து இருப்பவனிடம் எப்போது போகிறாய்? என கேட்பதுவும் அவ்வளவு மரியாதையாக தெரியவில்லை.

வேலைக்குச் சென்றவள் லாவண்யாவை நாட அன்று அவள் விடுப்பில் இருந்தாள். லாவண்யாவிற்கு அழைத்த போதோ, “நீ ஏன்டி வேலைக்கு வந்த?” எனக் கேட்டவள் குழந்தையின் அழுகுரல் கேட்க, “பாப்பாக்கு சரியில்ல கிருத்தி, நான் அப்புறம் அழைக்கிறேன்” என்றாள். தோழியிடம் தன் கணவன் குறித்து விசாரிக்க எண்ணினாலும் அது அப்படியே நின்றுப் போயிற்று. மற்ற யாரிடமும் தனது மனதை திறந்து பழக்கமில்லை என்பதால் மனக்கதவை இறுக்கியே பூட்டி வைத்தாள்.

இரண்டு நாட்கள் இப்படியே கடந்திருந்தன, தனது வீட்டினரைக் குறித்துப் பேச துணியாத கணவன் எப்போதுதான் பேசுவான்? அப்படி பேசும் போது பதிலுக்கு நான்கு கேள்விகள் நறுக்கென கேட்டாக வேண்டும் என எண்ணிக் கொண்டாள்.

‘நாலு கேள்வி நீ கேட்கப் போறியா?’ அவள் மனம் கெக்கலித்துச் சிரித்ததை புறம் தள்ளினாள்.

அவளுக்கு மட்டும் என்ன தனியே வாழ வேண்டுமென்கின்ற ஆசையா? தனது கணவனுடனான அந்த இரண்டு நாட்களை மனதில் ஓட்டியே… புகைப்படம் பார்த்து பார்த்தே, அவளும் எத்தனை கனவுகள் கண்டிருப்பாள்? தன் கோபத்தை வெளிப்படுத்தி தான் எதையாவதுச் சொல்லி அவன் திரும்பச் சென்று விட்டால்? அதனால்தான் அவளால் அவனிடம் தன் மனக்குமுறல்களை வெளிப்படுத்த முடியவில்லை.

என் வாழ்க்கைக்கு கூடுதலான இந்த இரண்டு நாட்கள் போனஸா கிடைச்சிருக்கு போல?… கணவன் இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் தன்னுடன் இருப்பான் என எண்ணியவளுக்கு குமுறி அழ ஆசையாக இருந்தது. ஆனால், அதற்கான தனியான இடமும், தாங்க மடியும் தான் இல்லை.

முன் தினமும் இன்றும் அவள் வேலையில் இருந்து வீட்டிற்குத் திரும்பிய பின்னர் வீட்டிற்குத் தேவையான சிலவற்றை செல்வன் வாங்கி வைத்திருந்தான். அவளுக்கு மேலுக்கு ஊற்ற வெந்நீரும்தான் தயாராக இருந்தது.

வீட்டில் அமர வசதியாக இரண்டு ப்ளாஸ்டிக் இருக்கைகள், அழகான மென்மையான இரு தலையணைகள், பொருட்கள் வைக்க சின்னச் சின்ன கண்டெய்னர்ஸ்… எல்லாம் பார்க்க நன்றாகவே இருக்கின்றன என நினைத்தாலும் அவை எல்லாவற்றையும் அவன் தனக்கு நஷ்ட ஈடாக தருவதாகவே அவள் எண்ணிக் கொண்டாள். அந்த வெந்நீரை டீலில் விட்டு விட்டாள் போலும்.

“வேலைக்குப் போகாதே” என செல்வன் அவளிடம் சொன்னபோது கோபித்துக் கொண்டாள் தான். அதன் பின்னர் தங்களுக்குள் ஒன்றுமே நிகழாதது போல அவர்கள் சாதாரணமாக பேசிக் கொண்டார்கள். காயத்ரி வந்து குட்டையை குழப்பும் வரைக்கும் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here