2. மெல்ல ,மெள்ள எது சரி?!

0
531

படித்ததில் பிடித்தது…

பேச்சுவழக்கில் இந்த ஒரு சொற்களையும் நாம் பயன்படுத்துகிறோம். எழுத்திலும் மெல்ல, மெள்ள என்று மாற்றி எழுதுபவர்கள் உண்டு. இவற்றுள் எது சரி?

இரண்டுமே சரிதான். எங்கே எந்த அர்த்தத்தில் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து இவற்றுள் மிகச் சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

மெல்ல, மெள்ள இரண்டில் ஒன்றுக்கு மென்மையாக என்று அர்த்தம், இன்னொன்றுக்கு மெதுவாக என்று அர்த்தம். எதற்கு எது? என்று புரிந்துகொண்டுவிட்டால் அதன்பிறகு குழப்பமே வராது.

ஒரு பிரபலமான திருக்குறள், பின்னர் கண்ணதாசன் உபயத்தில் சினிமாப் பாடலாகவும் வந்தது:


யான்நோக்குங் காலை நிலன்நோக்கும், நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்

இதன் அர்த்தம், ‘நான் அவளைப் பார்த்தால், அவள் தரையைப் பார்க்கிறாள், நான் வேறு எங்கேயாவது பார்த்துக்கொண்டிருக்கும்போது, என்னைப் பார்க்கிறாள், தனக்குள் மெல்லச் சிரித்துக்கொள்கிறாள்.’

இங்கே ‘மெல்ல’க்கு மென்மையாக என்று அர்த்தமா? அல்லது, மெதுவாக என்று அர்த்தமா?

அந்தப் பெண் அவனை நேருக்கு நேர் பார்க்க நாணுகிறாள், இப்போது அவன் எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பதால், கொஞ்சம் தைரியம் வந்து அவனை ஓரக்கண்ணால் பார்க்கிறாள்.

அப்போதும், ‘இவன் சட்டென்று திரும்பி நம்மை நேருக்கு நேர் பார்த்துவிடுவானோ’ என்கிற அச்சம் அவளுக்குள் இருக்கும், அந்த நேரத்தில் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுப்பதுபோல் மெதுவாகச் சிரித்துக்கொண்டிருப்பாளா?

ஆக, இங்கே அவள் மெதுவாகச் சிரிக்கவில்லை, ‘புன்சிரிப்பு’ என்பதுபோல் மென்மையாகச் சிரிக்கிறாள். பின்னர் சட்டென்று மீண்டும் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொள்கிறாள். அதைக் குறிப்பிடும்வகையில் திருவள்ளுவர் ‘மெல்ல’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.

அடுத்து, கம்ப ராமாயணத்திலிருந்து ஒரு மிக அழகான வர்ணனைப் பாடல்:

மழைபடப் போதுளிய மருதத் தாமரை

தழைபடப் பேர் இலைப் புரையில் தங்குவ,

விழைபடு பெடையொடும் மெள்ள நள்ளிகள்

புழை அடைத்து ஒதுங்கின வச்சை மாக்கள்போல்!

மருத (விவசாய) நிலம், அதில் மழை பெய்கிறது, அதனால் தாமரை செழித்து வளர்ந்திருக்கிறது. அந்தப் பெரிய தாமரைகளின் இலைக்குக் கீழே, நண்டுகள் ஜோடியாகத் தங்கியிருக்கின்றன.

மழை அதிகரிக்க அதிகரிக்க, நண்டுகளால் அங்கே இருக்கமுடியவில்லை. தங்களுடைய வளைக்குள் செல்கின்றன.

ஒருவேளை, மழைத் தண்ணீர் அங்கேயும் வந்துவிட்டால்? குளிர் காலக் காதல் விளையாட்டுக்கு இடையூறாக இருக்குமே!

ஆகவே, நண்டுகள் தங்களுடைய வளையின் வாசலை மண்ணால் அடைத்து மூடிவிடுகின்றன.

இந்தக் காட்சியைப் பார்க்கும் கம்பர், அதற்கு ஓர் அட்டகாசமான உவமை சொல்கிறார், ‘நண்டுகள் தங்கள் வளையின் வாசலை அடைத்தது எப்படி இருந்தது தெரியுமா? கஞ்சப் பயல்கள் தங்கள் வீட்டுக்கு யாரேனும் வந்துவிடுவார்களோ என்ற பயத்தில் வீட்டு வாசலை எப்போதும் மூடியே வைத்திருப்பார்கள், அதுபோல, இந்த நண்டுகளும் கதவைச் சாத்திக்கொண்டு வளைக்குள் ஒதுங்குகின்றன!’

பாட்டின் அழகு ஒருபுறமிருக்க, நாம் அந்த ‘மெள்ள’வைக் கவனிப்போம். மெல்ல இல்லை, மெள்ள!

இங்கே ‘மெள்ள’க்கு மென்மையாக என்ற அர்த்தம் இருக்க வாய்ப்பு இல்லை. மழைத் தண்ணீர் உள்ளே வந்துவிடுமோ என்ற பயத்தில் பதற்றத்துடன்தான் நண்டு வளையின் வாசலை அடைக்கப் பார்க்கும், மென்மையாக அல்ல.

ஆனால், நண்டுக்குச் சின்னக் கை(கால்?)தானே உண்டு. அதில் மண்ணை அள்ளி அள்ளி அடைக்க நெடுநேரம் ஆகும். அதனால்தான் ‘மெள்ள’, அதாவது மெதுவாக என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார் கம்பர்.

ஆக, ’மெல்ல’ என்பதன் வேர்ச்சொல் ‘மெல்’, ‘மென்மை’, doing something softly, ஆனால் ’மெள்ள’ என்பது, மெதுவாக, doing something slowly, இவை இரண்டும் ஒரேமாதிரி தோன்றினாலும் ஒன்றல்ல.

ஆஹா, மெல்ல நட, மெல்ல நட, மேனி என்னாகும்!’


என்றால், ’மென்மையாக நட, அதிர்ந்து நடக்காதே’

என்று அர்த்தம். அதே இடத்தில் ‘மெள்ள நட’ என்றால், ’உனக்கு என்ன அவசரம்? மெதுவாக நடந்து வா, இன்னும் நிறைய நேரம் இருக்கிறது’ என்று அர்த்தம்.


இந்தக் கட்டுரையை நீங்கள் மெல்ல படித்தீர்களா? மெள்ள படித்தீர்களா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here