கவிதை 40. நவயுக செல்லப் பிராணி _ ஜான்சி

0
600

கன்னங்கரு நிறத்தினனாம்,

சாக்கடையில் உழலுவனாம்,

முன்னம் பற்கள் வலிமை கொண்டு

கோட்டையையும் துளைப்பவனாம்.

அவனைக் கண்டால் அருவருப்பர்.

அலறி தன்னில் திகைத்திடுவர்.

ஆயினும் அவன்தான் இந்நவயுகத்தின் செல்லப் பிராணி என்றிடுவேன்;

ஏனென்று நீவிர் அறிந்திடுவீர்.

நாய்கள்,பூனைகள் பல நேரம் பசியால் வருந்துதல் பார்த்திருந்தேன்…

பசித்து நலிவுற்ற எலிதனையே என்றும் எங்கும் பார்த்ததில்லை.

விலையுயர்ந்த தானியங்கள், காய்கறிகள் தான் சமைத்து,

ருசியும் ,மணமும் தான் சேர்த்து,

வயிறும், மனமும் தான் நிறைய,

மகிழ்வுடனே உட்கொண்டு,

எஞ்சிய அனைத்தும் குளிர் பதன பெட்டியில்தாமே வைத்திடுவார்.

பழையதை உண்டிடல் கூடாது எனும் நல் கருத்தை பின்பற்றி ,

சில நாட்கள் கழித்த பின்னர் சாக்கடையில் அதனை கொட்டிடுவார்.

செல்லப் பிராணிகள் மிக ரசித்தே அதனை உண்டுக் கொழுத்திடுவார்.

கொழுத்து செழித்த வலிமையுடன் வீட்டை துளையிட முனைந்திடுவார்.

நாமும் குறைந்தவர் அல்லர் அன்றோ?!

வளைத்து பிடித்திட எலிக்கூண்டு,

அவை தின்று மரிக்க விஷ மருந்து,

நடக்கும் போதே அதன் உடலில் ஒட்டி பிடிக்கும் சாதனங்கள்

என நம்மிடம் உண்டு பல வழிகள்…

எதுவும் கை வரவில்லை என்றால்

அரசாங்கத்தை குறை சொல்ல நம்மிடம் உண்டு பல பழிகள்.

போதிய அளவில் நாம் சமைப்போம்.

உணவு எஞ்சிய பொழுதுகளில் எல்லாம் எளியோரோடு நாம் பகிர்வோம்.

உணவை வீண் ஆக்கும் வழமை விடுப்போம்.இத்தகைய

செல்லப்பிராணிகள் பெருகா நிலை வகுப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here