22. பேரழகி ரோஜா _ கவிதை _ ஜான்சி

0
461

பேரழகியாய்

பெரும் கர்வத்துடன்

அவன் வலக் கரத்தில் வீற்றிருந்தேன்.

வழி நெடுக என் மேல்

அனைவர் பார்வை படிய,

கர்வத் திமிருடன் – நானும்

பார்த்திருந்தேன் .

மழைப் பொழிவினில்

அன்ன நடைப் பழகி

அவளும் எங்கள்

எதிரில் வந்தாள்.

பார்த்ததுமே என் போல் அவள்

பேரழகி இல்லை

என்பதை நானும்

உணர்ந்து கொண்டேன்.

நீருக்குள் இருந்தது

அறிவுக் கெட்ட கல்லொன்று

அன்ன நடை பழகியவளை

பேடித்தனமாய்த் தாக்க,

அவள் நடை தடுமாற,

அவன் நிலை தடுமாறியவனாய்

எனை விடுத்து

அவளைப் பற்றிக் கொண்டானே?

பேரழகியை

கைப்பல்லக்கினின்று

நீரில் வீசி,

சாமான்யளை ஏந்திக் கொண்டானே?

அன்று தான் தவமிருந்தேன்

வரமாய் முட்களை வாங்கிய பின்னர்த் தான் – எந்தன்

உக்கிரமும் தணிந்தேன்.

இனி எந்தன் அழகை தரிசிப்பது சுலபமல்ல.

ஒவ்வொரு முறையும்

ஒரு சில இரத்தத் துளிகள்

பரிசாய் அளித்து

எனை நெருங்கு.

முட்களைத் தாண்டியே வந்து

எனை வருடு.

இப்படிக்கு,

பேரழகி ரோஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here