27. கொஞ்சம் பொறு _ கவிதை _ ஜான்சி

0
474

கொஞ்சம் பொறு

யுத்தக் களத்தின் போராளியைப் போல,
மலர்விழி அம்புகளும்,
மேகப் பொதி போன்ற மென் கரங்களின் ஸ்பரிசமுமாய்… எனைத் தாக்கியவண்ணம்

என் எதிரில் நிற்கின்றாய் நீ

நானோ எனை உன் கரங்களில் சமர்ப்பித்து
நிராயுதபாணியாய் நிற்கின்றேன்.

நம் மணமாலைகளின் மணத்தை விடவும்,
உன் நெருக்கமும், ஸ்பரிசமும் உணர்த்திய…
உந்தன் கைகளின் மருதாணி வெகுவாய் மணக்கின்றது…

ஓ இதுவும் கூட உனது மற்றொரு தாக்குதல் முறையாமோ?

என் மனதின் கட்டுப்பாட்டுக்கு கட்டுப்பட்டு நிற்கும் கைகளை பரிகசித்த வண்ணம்…
உரிமையாய் உன் கைகள் எனை தழுவிக் கொண்டு நிற்கின்றன.

மெது மெதுவாய் எனை
உன்மத்தம் கொண்டவனாய்,
மாற்றிக் கொண்டிருப்பது அறியாமலேயே…

உந்தன் இதழ் பிரித்து
புன்னகை அம்பால் எனைக்
கொஞ்சம் கொஞ்சமாய்
கொய்துக் கொண்டிருக்கிறாய் நீ…

உந்தன் ஸ்பரிசங்களுக்கானஎன் பதில்கள் காத்திருக்கின்றன…
கொஞ்சம் பொறு…

உந்தன் அத்துமீறல்கள் அனைத்திற்கும் தண்டனைகள் காத்திருக்கின்றன…
கொஞ்சம் பொறு.

உந்தன் குளிர் மலர் வதனம்
எனை நெருப்பாய் தீண்டிச் செல்வதால் உண்டான ,

சூறாவளி உனை தாக்க காத்துக் கொண்டிருக்கின்றது…
கொஞ்சம் பொறு.

தனிமை கிட்டட்டும்
முத்த யுத்தத்திற்கான
ஆயத்தங்கள் காத்திருக்கின்றன
கொஞ்சம் பொறு.

நீ

கொஞ்சம்

பொறு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here