மனச் சோலையின் மழையவள்_10_ஜான்சி

0
750

அத்தியாயம் 10

வகுப்பு முடிந்ததும் தனது டூ வீலரில் அரக்கப் பரக்க வீட்டிற்கு சென்றுக் கொண்டிருக்கும் அரசுவை அவன் நட்புக்கள் நமுட்டுச் சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதிசயமாய் வாசலில் அந்நேரம் வண்டி சப்தம் கேட்க அமர்ந்த இடத்திலிருந்தே தெரசா எட்டிப் பார்த்தாள். மகன் உள்ளே விறுவிறுவென்று நுழைய வெளியே மழை வருகின்றதா என அவள் மறுபடி எட்டிப் பார்க்கவும் மகனுக்கு சுறுசுறுவென்றது.

“அதெல்லாம் மழை, புயல் ஒன்னும் இல்லை மதர் தெரசா… என்னை ரொம்ப ஒன்னும் நக்கலடிக்க வேணாம்.”

வீட்டினுள்ளே இதமாய் ஒலித்துக் கொண்டிருந்த இசை, கையில் காஃபியை வைத்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்த அம்மா. திடீரென அவளது இருக்கை முன்பாக அவன் தரையில் அமர்ந்துக் கொண்டான்.

“இப்ப நேரமில்ல ஓடிரு… என் காஃபியை டிஸ்டர்ப் செய்யாதே போ” அவனது எதிர்பார்ப்பு தெரியும் என்பதால் பிகு செய்துக் கொண்டாள்.

அவசரமாக சமையலறை சென்றவன் அந்த சின்ன உலோக சட்டியை அடுப்பில் வைத்து சூடேற்றினான். ஸ்டவ்வை அணைத்து அதில் தேங்காய் எண்ணையை சற்று ஊற்றினான். வீடெல்லாம் தேங்காய் எண்ணை மணம் பரவியது. பக்கத்து அலமாரியிலிருந்து பஞ்சு கொஞ்சம் எடுத்தவனாக ஒரு ட்ரேயில் சூடான எண்ணை சட்டியை வைத்து அலுங்காமல் குலுங்காமல் கொண்டு வந்தான். அம்மாவின் அருகாமையில் இருந்த டேபிளில் அவை தஞ்சமாகின…எண்ணையின் சூடு குறையாமலிருக்க தலைக்கு மேலே சுற்றிக் கொண்டிருந்த மின்விசிறியை அணைத்தான். மறுபடியும் பிடிவாதமாய் அம்மா காலடியில் அமர தெரசா அவனிடம் நீட்டிய கப்பை வாங்கி டேபிளில் வைத்து விட்டு தன் தலையை அவளிடம் நீட்டினான்.

இதற்கு மேல் எங்கே அவனை விரட்ட முடியும்? சுடச் சுட இருந்த எண்ணையை பஞ்சில் சற்று தோய்த்து பொறுக்கும் சூடென உறுதி செய்து, மகன் தலையில் அங்கங்கே வகுடெடுத்து நீளமாய் மண்டை ஓட்டில் படுகின்ற வண்ணம் அழுத்தி தேய்க்க, அமர்ந்திருந்தவனுக்கு அது சுகானுபவம்… முதலில் வெம்மையாய் அதன் பின்னர் அதே எண்ணை வெப்பம் தணிந்து குளிர்மையாய் ஆஹா இரசித்தான்.

“இங்க உச்சித் தலையில், அப்புறம் பின்னந்தலையில் எண்ணை நிறைய வைக்கணும் அப்பதான் நல்லது அம்மம்மா சொன்னத மறந்திட்டியா?” மகனதிகாரம் தூள் பரந்தது.

“ஒன்றரையணா முடிக்கு இத்தன எண்ணை சூடாக்க என்ன தேவை?”

கடுகடுத்தாலும் விரல்கள் மகனின் தலையில் மசாஜ் செய்ய ஆரம்பித்தது. வெகு நாளைக்கு அப்புறம் மகன் தன்னிடம் வந்து தலையை சாய்த்து எண்ணை தேய்க்க கொடுத்த மகிழ்ச்சி அவளுக்கு. மகன்கள் சற்று வளர்ந்ததும் விலகி நின்று விடுகின்றார்கள். அம்மாக்கள் தான் வளர்வதே இல்லை,அங்கேயே மகன்கள் அருகாமை தேடும் அம்மாக்களாக நின்று விடுகின்றார்கள்.

முதலில் தெரசாவின் விரல்கள் மகன் தலையில் வட்ட வட்டமாக கோலம் போட, அதன் பின்னர் தலை கோதும் விதமான மசாஜ், அடுத்து உள்ளங்கையால் அம்மா அரக்கித் தேய்க்க அரசு தன் தலையை ஒப்புக் கொடுத்து அமர்த்திருந்தான்.

கைகள் தன்பாட்டிற்கு செயல்பட மனதிற்குள் ஏதேதோ நினைவலைகள் எழ, ‘இவன் செய்யற சேட்டைக்கு மண்டையில ஒரே கொட்டு வைப்போமா?’ மனதில் எண்ணியதை செய்யாமல் முறுவலித்தவளாக விரல் நுனியால் மகன் மண்டையில் தட்டி விட தலை குனிந்து வாங்கிக் கொண்டு இருந்தான்.

“இன்னும் 10 நிமிசம் மா…” தலையில் இருந்து கை எடுத்தவளிடம் மறுபடி பிடிவாதம் பிடிக்க, “போடா வேலை இருக்கு”

“வேணும்னா இந்த பரீட்சை பேப்பர் உனக்குப் பதிலா நான் திருத்துறேன், இன்னும் கொஞ்ச நேரம் ப்ளீஸ் ப்ளீஸ்”

முறைத்தவள்… “பரீட்சை பேப்பர்ல கையை வச்சியோ? உனக்கு இருக்கு” அவசரமாய் எண்ணைக் கையை கழுவியவள், கையை துடைத்து பரீட்சைத் தாள்களை பத்திரப் படுத்தினாள்.

பின்னோடு வந்து நின்றவன் அவள் பின்னலை தன் தலையில் தேய்த்து மீதமான எண்ணையை எடுக்க ஆரம்பித்தான்.

“டேய், சும்மா இருடா, இதுக்குத்தான் அதிகம் எண்ணை தேய்க்க வேண்டாம்னு அப்பவே சொன்னேன்” அவள் பேச்சை அவன் கேட்டால் தானே?

“எனக்கும் காஃபி” கேட்க கொடுத்தவள்

“என்னடா இன்னிக்கு உன்னை காலேஜ் விட்டு துரத்திட்டாங்களா? சீக்கிரம் வந்திட்ட?”

“அட போம்மா” அதற்கு மேல் அவன் சொல்ல மாட்டானென தெரியும். பூனைக்குட்டி வெளியில் வரும் போது தெரிந்துக் கொள்ளலாம் அவனைக் கண்டுக் கொள்ளாமல் தன் வேலையை தெரசா தொடரலானாள்.

பின் வாயிலில் காஃபியோடு அமர்ந்திருந்தவன் கண்களில் அவன் வெட்டிய முருங்கை மரம் சில நாட்களாய் பெய்த தூரலில் துளிர்த்திருந்தது தென்பட்டது.

***

கல்லூரி…

“டேய் சுரேஷ் உன் பாப்பா தொல்ல தாங்கலடா, தயவு செய்து அவளை என்னை திருத்த வேண்டாம்னு சொல்லுங்கடா, முடியலை”

அவன் புலம்பலில் கிளுக்கென செழியன் சிரித்து வைக்க…

“சிரிங்கடா நல்லா சிரிங்க, சரி இங்க இருக்கிறதில் யார்டா அவளுக்கு என் மொபைல் நம்பர் கொடுத்தது?”

எல்லோரும் அமைதி காக்க…

“போங்கடா… உங்க எல்லோருக்கும் என்னை விட அவ தான் பெரிசா போயிட்டாளா?” பொருமினான்.

அவன் மொபைலில் மெசேஜ் டோன் கேட்க… அதைப் பார்த்தவன் முகம் அஷ்டகோணலாகியது. கவின் அவன் மொபைலை தன் கையில் வாங்கி  அவனுக்கு வந்த டெக்ஸ்ட் மெசேஜை திறந்து வாசிக்க ஆரம்பித்தான்.

“கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு, உனக்கு நீயே கொடுத்துக் கொள்ளும் தண்டனை, காலை வணக்கம்” தங்கிலிஷில் டைப்பி இருந்தாள் வேறு யார் அரசி தான்.

“Anger doesn’t solve anything, it builds nothing, but it can destroy everything. Good night.” முன் தினம் இரவில் அனுப்பியிருந்த செய்தி கண்ணில் பட்டது.

“நான் பாட்டுக்கு நானுண்டு என் வேலை உண்டுன்னு என் போக்கிலத்தானே இருக்கிறேன். இவளுக்கு என்னடா பிரச்சினை? என்னை துரத்தி துரத்தி திருத்தப் பார்க்குறா. ஒரு வாரமா இவ டார்ச்சர் தாங்காம வீட்டுக்குப் போனா அங்க எங்கம்மா கேள்வியா கேட்டாகுது.”

“…”

“ எல்லோரும் திருத்துறதுக்கு நான் என்ன கொஸ்டின் பேப்பராடா? ஆமா எனக்கு கோபம் நிறைய வரும் அதுதான் என்னோட இயல்பு. நான் அப்படித்தான் இருப்பேன்….பிடிச்சா பழகுங்க… இல்லன்னா தள்ளிப் போங்க அவ்வளவுதான் சொல்லுவேன். யாரும் எனக்கு வந்து புத்திச் சொல்ல தேவையில்ல ஆமா.”

“டேய் விட்ரா, அவ சின்னப் பொண்ணுடா கோபப் படாத” சுப்பு சமாதானப் படுத்த..

“அப்படி என்ன நான் தப்பு செய்துட்டேன்னு இவங்க எல்லோரும் என் பின்னால திருத்த அலையுறாங்க? கடுப்புடா… இனி அவளை இங்கே வரக் கூடாதுன்னு சொல்லுறீங்க புரியுதா?”

“……”

“வீட்ல ஒரு மதர் தெரசா தொல்ல, இங்க இந்த அரசி தொல்லை…, இப்பல்லாம் காலேஜ் வரவே எனக்குப் பிடிக்கலை”

“அப்படின்னா என்னையும் அடிக்க வேண்டியது தானே?” எதிரில் வந்து நின்று முறைத்தாள் அரசி.

“அறைஞ்சேன்னா… பல்லு கொட்டிரும், இனி இங்கே வரக் கூடாது சொல்லிட்டேன். வேற க்ரூப் யார் கூடவாவது போய் பேசு புரியுதா?”

“அதெல்லாம் போக முடியாது, இங்க என் அண்ணன் என் பிரண்ட்ஸ் எல்லோரையும் பார்க்க நான் வருவேன், போவேன். இது ஒன்னும் யாரோட ப்ரைவேட் ப்ராப்பர்ட்டி கிடையாது. நீங்க ஃபீஸ் கட்டிருக்க மாதிரி தான் நானும் ஃபீஸ் கட்டிருக்கேன். ஐ ஹேவ் ஆல் ரைட்ஸ் டு கம் ஹியர் ( எனக்கு இங்கே வர போக எல்லா உரிமையும் இருக்கு) ம்ஹீம்”

அவனை கடந்த நாட்களில் சாயங்கால நேரம் வந்து தேடி சோர்ந்தவள் அன்று காலையே வந்து அவனிடம் ரைட்ஸ் பேசி வீராப்பாய் தன் வகுப்பிற்குச் செல்ல, அலுத்துப் போய் அரசு அங்கே அமர்ந்து விட்டான்.

வகுப்பிற்குச் செல்ல நேரம் ஆகவும், அவனை மற்றவர்கள் வலுக்கட்டாயமாக தள்ளிச் சென்றனர்.

கடந்த நாட்களைப் போல அன்றும் அவன் வீட்டிற்குத் திரும்பி இருக்கலாம் ஆனால், விதி யாரை விட்டது?

“இந்த புள்ளப் பூச்சிக்கெல்லாம் பயந்து இனி சீக்கிரம் வீட்டுக்கு போகிறதா இல்ல” வீம்பாக அரசு அன்று அங்கேயே அமர்ந்துக் கொண்டான்.

கொஞ்ச நேரத்தில் அவர்களது இருப்பிடத்திற்குச் சற்றுத் தள்ளி இருவர் உரையாடல் கேட்டுக் கொண்டிருந்தது. ஹிந்தி உரையாடல் என்பதால் அவர்களுக்கு புரியவில்லைதான்.

“ஹாய், ஆப் மும்பை சே ஆயே ஹோ க்யா?” (“ஹாய் நீங்கள் மும்பையிலிருந்தா வந்திருக்கின்றீர்கள்?”)

“ஹான்… ஆப் கோன்?” (“ஆமாம், நீங்க யாரு?”)

“மே சுரேந்தர் செகண்ட் இயர் ஸ்டூடண்ட்”

“ஓ.. மே அரசி தர்ட் இயர்”

“அப் இஸ் வக்த் தும் யஹா க்யா கர் ரஹே ஹோ?” (“இங்கே இந்த நேரம் உனக்கு என்ன வேலை?”) பேசிய அடுத்த கணம் “ஆப்” லிருந்து “தும்”மிற்கு ஒருமைக்கு மாறிய அவனுக்கு பதிலளிக்காமல் சற்று கூர்ந்து கவனித்தாள் அரசி.

“மேரா சச்சேரா பாயி மும்பை மே பட் ரஹா ஹை, லாஸ்ட் வெகேஷன் மே மை வஹா ஹோகர் ஆயா தா” (“என் ஒன்று விட்ட சகோதரன் மும்பையில் படித்து வருகின்றான், நான் கடந்த வருடம் அங்கு சென்று வந்திருந்தேன்”)

இப்போது அவனை பேச விட்டு முறுவலோடு நின்றுக் கொண்டிருந்தாள் அரசி. அவள் மனதிற்கு ஏதோ சரியாகத் தோன்றவில்லை.

“எக்ஸ்க்யூஸ்மி…ஒரு அவசர கால் செய்யணும்” போனை எடுத்து டயல் செய்யும் பாவனையில் அவள் முன் செல்ல அவனும் பின் தொடர்ந்தான். ‘பெண் பிள்ளைகளை டீஸ் செய்யும் எண்ணம் கொண்டவன் போலும். தனது நட்புக்களோடு சென்று அமர்ந்து விட்டால், பிரச்சனை இராது’ என அவள் எண்ணிக் கொள்ள அவன் பிரச்சனை செய்ய வந்திருப்பதே அவர்களோடுதான் என அவளுக்கு அப்போது புரிந்திருக்கவில்லை.

அவள் விறுவிறுவெனச் சென்று சுரேஷ் அருகாமையில் அமர்ந்துக் கொள்ள, அவள் கைகள் சில்லிட்டு இருந்தன.

“என்னாச்சு பாப்பா?”

“ஓன்னுமில்ல அண்ணா சும்மா” பேச்சை தவிர்த்தாள்.

“சரி” சுரேந்தர் அங்கு வந்து நின்றிருந்தாலும் கூட அவனை கண்டுக் கொள்ளாமல் இருந்தனர். சென்ற முறை அடிதடி போது அவனுக்கு அடிப்பட்டதனால் அதிலும் நாலு தையல்கள் போடுமளவுக்கு காயம் என்பதால் அரசுவுக்கு தொடர்ந்து நடந்த பிரச்சனைகள் எத்தனை என்று அவர்கள் அறிவார்களே?

‘எதற்கடா சும்மா சென்றவனை நான் சீண்டி சண்டை இழுத்து இத்தனை பிரச்சனைகள்?’ என சுப்பு மிகவும் மனம் வருந்தி இருந்தான்.

“போயும் போயும் இவங்க கூடவா பழகுற அரசி, உன் ஸ்டேடஸ் என்ன? இவனுங்க ஸ்டேடஸ் என்ன? பழகுற ஆட்கள் தராதரம் பார்க்குறதில்லையா?” உதடுகள் நெளிய அவன் கேட்ட விதத்தில் அங்கு பதட்டம் சூழ்ந்தது.

“இட்ஸ் நன் ஆஃப் யுவர் பிசினஸ், நான் உன் கிட்ட ஏதாச்சும் அட்வைஸ் கேட்டனா? உன் வேலைய பார்த்துப் போடா… முன்ன பின்ன தெரியாத பொண்ணுக்கிட்ட எப்படி பேசுறதுன்னு தெரியல உனக்கெல்லாம்…” பற்களை நரநரவென்று கடித்த படி அரசி பேச…

“அதிலயும் இவன் இருக்கானே, இவன் பொறப்பு கூட சரியில்ல… இவனுங்க கூட சங்காத்தம் வச்சுக்காதே” அரசுவை கை நீட்டிப் பேசவும் திமிறிய அரசுவை அவன் நட்புக்கள் பிடித்தும் அடக்க முடியவில்லை. அதையும் மீறி அவன் வேகம் எடுத்து ஆக்ரோஷமாய் அவர்கள் பிடியில் இருந்து திமிறி தாண்டியதைக் கண்ட அரசிக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலானது.

தன்னால் தான் பிரச்சனை என்று மிரண்டவள், “வேணாம் சண்டை வேணாம் என நிலவரம் புரியாமல் நடுவில் போக அரசு பாய்ந்த வேகத்தில் பனி அரசி நடுவில் வருவதைக் கண்டு அவள் மேல் எதுவும் பட்டு விடும் என தன்னைக் கட்டுப் படுத்தி திசை மாற முயன்றான்.

அவனது தடுமாற்றத்தைக் கண்டுக் கொண்ட சுரேந்தர் எதிர்பாராத தருணத்தில் அவனை தள்ளி விட்டு கொக்கரித்தான்.

நொடி நேரத்தில் சமநிலை தடுமாறி தரை பார்க்க விழுந்தவனது மண்டையில் கூரான கல் ஒன்று தாக்க, அலறலோடு எழ முடியாமல் கிடந்தவன் வலக்கண் பகுதி முழுவதுமாக இரத்தம் பரவலாயிற்று. தனது நாலு தையல் காயத்திற்குப் பதிலாக எட்டாக திரும்ப கொடுத்த திருப்தியில் சுரேந்தர் அங்கிருந்து நகர்ந்தான்.

யாரோ அரசுவின் தலையில் துணியால் கட்டுப் போட, பாப்பா உன் கிட்ட குடிக்க தண்ணீர் இருக்கில்ல? கேட்டவனுக்கு கைகள் நடு நடுங்க தண்ணீர் பாட்டிலை அவள் எடுத்துக் கொடுத்தாள். திரும்ப தண்ணீர் பாட்டில் வந்த போதோ அவற்றில் அரசு தண்ணீர் குடித்ததற்கு அடையாளமாக இரத்தக் கறையிருந்தது. ஆம்புலன்ஸிற்காக நிற்காமல் அவர்கள் அவனை கார் வரவழைத்து அழைத்துச் சென்றிருந்தார்கள்.

அங்கோ வீட்டிற்கு எவ்வாறு வந்தோம் என்றே புரியாமல் அரசி அப்பாவின் மடியில் தஞ்சம் புகுந்து அழுதுக் கொண்டிருந்தாள்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here