மனச் சோலையின் மழையவள்_11_ஜான்சி

0
685

அத்தியாயம் 11

மகன் நடந்ததை விவரித்துக் கொண்டிருக்க “அவனுக்கு கண்ணு போயிரும் தானே?” எக்களிப்புடன் கீதா கேட்டுக் கொண்டிருந்தாள்.

அந்த அரசு மீது ஏற்கெனவே அவளுக்கு அளவற்ற வன்மம். தனது கணவனின் உருவில் மகனை பெற்று வைத்திருக்கும் அவனது தாய் மீதும் தான். என்னதான் ஊர் உலகில் தன்னை சூர்யாவின் மனைவி என பிரகடனப் படுத்திக் கொண்டாலும் கூட அவள் மனதில் தான் சூர்யாவின் இரண்டாம் மனைவி எனும் தாழ்வுணர்ச்சி உண்டு.

அவர்கள் கண்ணுக்கு மறைவாக இருந்து தொலைத்தாலும் பரவாயில்லை, தினம் தினம் கண்ணில் பட்டுக் கொண்டு அவளுக்கு அவர்களைப் பார்க்கையில் எல்லாம் உள்ளுக்குள்ளே ஒரு நெருடல். அவளது உறவினர்களும் கூட “ஏற்கெனவே திருமணம், பிள்ளை என இருப்பவனை ஏன் மணந்தாய்?” என ஆரம்பத்தில் அவளிடம் கேள்விகளாய் கேட்டு துளைத்து விட்டிருந்தனர்.

அனைவரையும் ஊருக்கு அழைத்து, தஙகளுக்கு இருக்கின்ற சொத்துக்களை, இந்த 10 செண்ட் நிலத்தில் அந்த காலத்திலேயே கோடியை தொடும் செலவில் பிரம்மாண்டமாக கட்டப் பட்டிருந்த மூன்று மாடி வீட்டைக் காட்டி அவள் சமாதானப்படுத்தி இருந்தாள். அதைக் கண்டும் சமாதானம் ஆகாமல் அவள் செயலோடு முரண் பட்டவர்களை உறவிலிருந்து விலக்கி வைத்து இருந்தாள்.

‘இது என் கோட்டை, இவை என் சொத்துக்கள்’, என இறுமாந்திருக்கும் போது தான் மாமியார் பின்னர் மாமனார் என இரு பெரியவர்கள் இழப்பும் நேர்ந்தது. மாமியார் இறப்பிற்கு வந்தவர்கள் சொன்னதைக் காட்டிலும், மாமனார் இறப்பிற்கு பின்னர் அவர்கள் வீட்டில் விசேசத்திற்கு வந்த பெரிய தலைகள் ஏராளமாக நியாயம் பேசினர்.

தாத்தா சொத்து எனும் வகையில் இந்த சொத்துக்கள் அத்தனையும் மூன்றாக பிரித்து அதில் ஒரு பாகம் அரசுக்கு நியாயமாக போக வேண்டும் எனச் சொல்லியதில் இருந்தே தீயாய் தகித்துக் கொண்டிருந்தாள்.

“எப்படியும் எல்லா சொத்துக்களும் என் பெயரில் தானே இருக்கின்றன. அதில் யாருக்கும் பங்கு கொடுக்க தேவை ஏற்படாது” என சூர்யா தன் மனைவியை சமாதானப்படுத்தி இருந்தான்.

ஆனால், அதற்கு ஆப்பு வைத்தார் போல சில நாட்களில் பெரியவர் உயில் விஷயம் தெரிய வர வீட்டில் மற்றொரு பூகம்பம் வெடித்தது. அந்த பெரிய வீட்டை, தங்களது மரியாதையை நிலை நிறுத்தும் அந்த கோட்டையை அந்த பஞ்ச பராரி அரசுவுக்கு கொடுக்க வேண்டும் எனத் தெரிந்ததில் இருந்து கீதாவால் பொறுக்க முடியவில்லை.

அதன் பின் தனக்கு பிடிக்காத போதும் கூட தன் கணவனை எப்படியோ தாஜா செய்து அவன் முன்னாள் மனைவி, மகனிடம் கையெழுத்து வாங்கி வர அவள் அனுப்பினால் அவன் அவர்களை வீட்டை விட்டு காலி செய்ய சொன்னானாமே? என்ன திமிர்? அவளால் அதனை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

‘அவனை அந்த அரசுவை அழிக்கும் வரை ஓயக் கூடாது’ மனதெங்கிலும் அவனுக்கெதிரான வன்மம், வன்மம்… வன்மம் மட்டுமே.

“அந்த பையனை எது வேணா செய், உனக்கு ஒன்னும் ஆகாம நான் பார்த்துக்கிறேன் சுரேந்தர்” என்ன புரியுதா? மகனுக்கு மனதில் விஷத்தை ஏற்றியவள் அரசுவை மகன் தள்ளி விட்டதால் அவனுக்கு வலக்கண் போய் விடும் என அறிந்ததில் இருந்து வெகு உற்சாகமாக இருந்தாள்.

*****

அடுத்த நாள்

மருத்துவமனை

மருத்துவமனையில் அப்பாவை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள் அரசி. மகளின் அழுகை பொறுக்க முடியாமல் அவரும் வந்திருந்தார். வெளியில் நின்றுக் கொண்டிருந்த அரசுவின் நண்பர்களை கண்டவள், “அப்பா, இவங்க என் ஃபிரண்ட்ஸ்” கை நீட்டி காண்பித்தாள்.

அருகாமையில் வந்து நின்றவனிடம், “அரசுவுக்கு இப்ப ஓகேவாண்ணா” மகளும் அவள் நண்பனும் பேசுவதை தூரம் இருந்து பார்த்த போதிலும் பெண் பிள்ளையின் தகப்பனாக ஒவ்வொன்றையும் மனதில் குறித்துக் கொண்டார்.


“இப்ப நல்லாயிருக்கான் மா, நீ ஏன் பாப்பா இந்நேரம் இங்க வந்த?” சுரேஷ் கேட்டதை தள்ளி இருந்து பார்த்தவருக்கு மனதில் திருப்தி.

“நான் தனியா வரலண்ணா, இதோ அப்பா” அவள் கை நீட்ட அவர்கள் சற்று மிரண்டு விட்டிருந்தனர். மகளிம் நட்புக்கள் அவர்கள் தோற்றம் மூலம் அறிய முடிந்த குடும்ப நிலை…அவர்கள் நடுத்தர வர்க்கமாக இருந்தாலும் கூட மகளோடு அவர்கள் பழகும் விதம் திருப்திகரமாக இருக்க புன்னகை பூத்தவராக நின்றார்.

சின்ன சின்னதாய் பேசி, நலம் விசாரித்து ஓரளவு சகஜமானார்கள்.

“என்னால தான் அரசுக்கு பட்டுருச்சுன்னு எனக்கு அழுகை அழுகையா வருதுண்ணா, அரசு அம்மா எங்க? நான் அவங்க கிட்ட சாரி சொல்லணும்?” சிறு பிள்ளையாய் பரிதவித்து நின்றாள்.

சற்று முன் தங்களை மாறன் வெளியே விரட்டி விட்டதால் வெளியே வந்து இருப்பதை மறைத்தவனாக,

“அதெல்லாம் ஒன்னும் இல்லைமா உன்னால அவனுக்கு அடிபடலை, அவங்கம்மா இப்ப உள்ளே அரசு கூட இருப்பாங்க, அதிகமா ஒன்னும் அடிபடலை, சீக்கிரம் சரியாகிடும்னு சொல்லிருக்காங்க. இப்ப போய் அவங்க கிட்ட பேசினா அவங்களும் அழுவாங்க அதான் நாங்க எல்லோரும் வெளியே உட்கார்ந்திருக்கிறோம். அவனுக்கு சரியானதும் நாம போய் பேசுவோம் சரியா?” என்றான்.

“ம்ம்…ம்ம்.. அவனுக்கு கண்ணு போயிடும்னு சொல்றாங்க அப்படியா?”

அதே பயம் தான் எங்களுக்கும் என எப்படிச் சொல்வான்? கவின் தான் அவளிடம் “இல்லம்மா அப்படி எதுவும் ஆகாது. அவனுக்காக வேண்டிக்கோ சரியா? நல்லா ப்ரே செஞ்சுக்கோ”

“சரி சரி” என தலையசைத்தவள் வீட்டிற்குத் திரும்பினாள்.

******

புருவங்கள் நெரிச்சிட தெரசா அந்த மருத்துவமனை காரிடாரில் அமர்ந்திருந்தாள். பொறுமை பொறுமை என தான் எவ்வளவுதான் பொறுமை காப்பது? அதென்ன தன் மகனை அந்த சுரேந்தர் தொடர்ந்து துன்புறுத்துவது? தானும் கண்டும் காணாமல் செல்வது?

இரண்டு குடும்பத்திற்கு இடையே பிரச்சனை வரும் போதெல்லாம் தன் அண்ணன் எப்போதும் சூர்யாவின் பணபலம் அதிகாரபலம் காட்டி தன்னை கட்டுப் படுத்துவதும், தானும் தன் மகனுக்காக அடங்கிப் போவதும் என இன்னும் எத்தனைக் காலம்?

தாயாக உரிய செயல் செய்ய புறப்பட்டாள். அதற்காக அவள் தன் அண்ணன் மாறனுக்கு எதிராக நிற்க வேண்டி இருக்கும் அவ்வளவுதானே? எத்தனைப் பிரச்சனைகளை பார்த்தாகி விட்டது. அவற்றில் இன்னொன்றாக இதுவும் இருந்து விட்டுப் போகட்டும்.

மருத்துவர்களிடம் மகனது நிலையை கேட்டு அறிந்தவள் அவனது நிலை குறித்த மருத்துவமனை சான்றிதழ் ஒன்றை வாங்கினாள். வெளியில் வந்து பார்த்தால் அந்த நான்கு பிள்ளைகளும் அரசுவுக்காக வெளியில் இருப்பதைக் கண்டாள். மகனின் சிறு வயது நண்பர்கள், முரடர்கள் தான்… அவள் மகனைப் பொலவே உள்ளொன்றும் வெளியொன்றும் என்றறியாத வளர்ந்த குழந்தைகள். அவளைக் கண்டதும் அருகில் வந்து நிற்க,

“சாப்பிட்டீங்களா?” விசாரித்தாள்.

செலவுக்கு கையில் பணம் திணித்தாள். அரசுவுக்கு ஒன்றும் ஆகாது என ஆறுதல் சொல்லி அவர்களையும் வீட்டுக்குச் செல்ல சொல்லி அங்கிருந்து கடந்துச் சென்றாள்.

காவல் துறைக்குச் சென்று மகனுக்கு ஏதாவதொன்று நிகழ்ந்தால் சூர்யாவும் அவன் குடும்பத்தினரும் தான் காரணம் என மகனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகாரளிக்கவும் மறுபடி இரு குடும்பத்தினரும் கொந்தளித்து சமாதானமாக சில நாட்கள் எடுத்தன. அக்கம் பக்கத்தவர், ஊராருக்கு இவர்கள் செய்திகள் வந்துக் கொண்டிருக்க, ஊரார் மெல்லும் அவலாகினர்.

தன்னை நம்பாமல் தங்கை நடவடிக்கை எடுத்திருப்பதாக எண்ணியதால் மாறன் இப்போதெல்லாம் கோபத்தில் தன் தங்கையிடம் பேசுவதில்லை. பிரச்சனை வேண்டாமென சூர்யா கட்டுப்படுத்தி இருந்ததால் கீதா வாலை சுருட்டிக் கொண்டு இருந்தாள். தெரசாவின் நடவடிக்கையை தனது பணபலத்தால் சூர்யா அடக்கி விட்டாலும் கூட சும்மா இருப்பவளை சீண்டி விட்டோமோ? என மனதில் அஞ்சாமலும் இல்லை.

******

மாதம் ஒன்று கடந்திருந்தது.

எல்லோரும் பயந்தது வண்ணம் கண்கள் பாதிக்கப் படாமல் அரசு நலமாய் திரும்பி இருந்தான். சற்று நலமானதுமே கல்லூரிக்கும் வந்து விட்டிருந்தான், இனி கல்லூரி வளாகத்திற்குள் பிரச்சனைகள் நிகழ்ந்தால் யார் பொறுப்பானாலும் சரி உன்னை கல்லூரியினின்று நீக்கி விடுவேன் என அரசுவை தனியாக அழைத்து பிரின்ஸிபல் மிரட்டியே இருந்தார்.

வந்த நாள் முதலாக பாடம் பாடம் என பறந்தவனை கண்டபோது தான் பனி அரசிக்கு அவன் நன்கு படிப்பவன் என்றே புரிந்தது. அங்கிருக்கும் மற்றவர்களும் கூட அவ்வளவாய் படிப்பில் சோடை போனவர்கள் அல்ல எனும் உண்மையும் தெரிய வந்தது.

“வாத்தியார் புள்ள மக்குன்னு சொல்வாங்கல்ல?” என அரசு குறித்து பனி அரசி அவன் நட்புக்களுள் யாரிடமோ கேட்டு வைக்க அது அனைவர் காதிலும் விழுந்து கொல்லென சிரித்து வைத்தனர்.

அவள் அவர்களுடன் இருக்கும் நேரத்தை குறைத்துக் கொண்டாள். அப்படியே இருந்தாலும் பத்தடி தள்ளியே அமர்ந்திருப்பாள். அந்த அமைதி அவர்கள் குழுவையே வெகுவாக பாதித்தது எனலாம்.

காலாண்டு தேர்வு முடிவுகள் வெளிவந்திருக்க, நல்ல மதிப்பெண்களோடு அனைவரும் தேர்வாகி இருந்தனர். பனி அரசியின் பழங்கள் நிறைந்த டப்பாக்களை அவர்கள் காலி செய்திருக்க அவற்றை எடுத்துக் கொண்டு அரசு அவளை நோக்கி நடந்தான்.

அவள் இருந்த இடத்தினின்று சற்றுத் தள்ளி அமர்ந்தவன் நீட்டிய டிஃபன்களை வாங்கி பையில் வைத்தவள் அவனை நோக்கி தடுமாற்றமாய் புன்னகைத்தாள். அரசுவின் புருவத்தின் மேல் இருந்த அந்த நீண்ட வெட்டுக் காயம் அவளை குற்ற உணர்ச்சியில் மருட்டியது.

“அரசி அன்னிக்கு எனக்கு அடிப்பட்டதுக்கு நீ காரணமில்ல”

ஏதோ சொல்ல வந்தவளை தடுத்தவன் தனது அன்னையைக் குறித்து, அவளது திருமணம், வாழ்வின் துரோகம், தற்போதைய பிரச்சனைகள் எல்லாவற்றையும் எல்லாவற்றையுமே முதன் முதலாக அவளிடம் பகிர்ந்துக் கொண்டு இருந்தான்.

“இப்ப நான் இதெல்லாம் எதற்குச் சொல்லுறேன்னா… நீ மத்த எல்லோர் கூடவும் முன்ன போலவே பழகு. எனக்காக பார்த்து ஒதுங்கி இருந்தன்னா அவங்களுக்கு கஷ்டமா இருக்கு. ஆனால், என்னை திருத்தணும்னு மட்டும் நினைக்காதே…இது ஒரு வகையான போர்னு வச்சுக்கோயேன். என்னால இவங்க செய்யறதுக்கு எல்லாம் பதிலடி கொடுக்காம இருக்க முடியாது. குறிப்பா எங்கம்மா பத்தி இழிவா யாரும் சொன்னால்… சத்தியமா என்னால அதை எல்லாம் கேட்டுட்டு கேளாதது போல இருக்க முடியாது. உனக்கு இதெல்லாம் புரிய கஷ்டம் தான், ஆனால் புரிஞ்சுக்குவன்னு நினைக்குறேன்.”

கல்லேனச் சொல்லி கடந்துச் செல்பவனை கண்கொட்டாமல் பார்த்து நின்றாள் பனி அரசி.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here