மனச் சோலையின் மழையவள்_12_ஜான்சி

0
649

அத்தியாயம் 12

அரசு ஒன்றைச் சொல்லி அதை பனி அரசி கேட்டுவிட்டால் அது சரித்திர சம்பவமாகி விடாதா? அதன் பின்னர் உலகம் தான் தன் இயக்கத்தை நிறுத்தி விடாதா என்ன?

அடுத்த நாள் அரசு மருத்துவமனை செல்ல வேண்டி இருந்ததால் கல்லூரி வராதிருக்க அவன் நட்புக்களுக்கு செம்மையாக மண்டகப் படி கிடைத்தது.

“நட்புன்னா ஒருத்தங்க மத்தவங்க கிட்ட அவங்க நல்லது கெட்டது எல்லாத்தையும் உள்ளது உள்ளபடி சொல்லுறது, வழி நடத்துறது தானே ஒழிய, தப்பா சரியான்னு யோசிக்காம தன்னோட நட்போட இஷ்டம் போல ஆடுறது இல்லன்னு” எங்க வீட்டு பாட்டி எப்பவும் சொல்லுவாங்க.

“…….”

“எனக்குத்தான் அரசு பத்தி அவன் சொல்லுறவரைக்கும் தெரியாது, உங்களுக்கு எல்லா விஷயமும் முன்னமே தெரியும் தானே? அப்படி இருந்தும் அவன் தான் கோபப்படுறான்னா அவனை இப்படி செய்யாதன்னு சொல்லுறதை விட்டுட்டு அவன் கூட சேர்ந்து நீங்களும் சண்டை போடுவீங்களா? இதுதான் உங்க நட்பா?”

“……”

“இப்ப நீங்க எல்லாத்துக்கும் அநியாயத்தை கண்டு பொங்குறேன் பொங்குறேன்னு பொங்குனா உங்களுக்குத் தான் இதோ வச்சுக்கோங்கப்பான்னு நியாயம் கிடைச்சிருமா? இல்லை மெடல் குத்துவாங்களா? இல்ல உங்களை ஃபீஸ் கட்டி படிக்க வைக்கிற அம்மா அப்பாக்கு நீங்க எல்லோரும் செய்யற விஷயம் சந்தோஷம் தான் தருமா?”

“…….”

“ஒரு பிரயோஜனமும் இல்லாம இனியும் நீங்க எல்லோரும் சும்மா சும்மா பொங்குனீங்கன்னா…இனி ஒரு நாள் அரசு கூட சண்டைக்கு புறப்பட்டீங்கன்னா…நானே உங்க வீட்ல வந்து அம்மா அப்பா கிட்ட பேசி படிப்பில அக்கறை இல்லாத இவங்களை தண்ணி தெளிச்சு விட்டுருங்க. இவங்களுக்கு ஃபீஸ் எல்லாம் தண்டமா கட்டாதீங்க, படிக்க வாய்ப்பில்லாத வேற யாருக்காவது ஃபீஸ் கட்டுங்க. அவங்களாவது படிக்கட்டும், படிக்க வைக்கிற உங்களுக்கு அதனாலயாவது புண்ணியம் வந்துச் சேரும்னு பத்த வச்சிடுவேன் பார்த்துக்கோங்க”

அவளது மிரட்டலில் அவர்கள் ஓருவரை ஒருவர் திருதிருவென முழித்துப் பார்த்துக் கொண்டு அமைதியாக அமர்ந்து இருந்தனர்.

“இவ சொல்லாம விட்டது ஒன்னுதான்” கவின் முனக…

“என்னவாம்?”

“யூ ஸ்டுப்பிட், ஸ்கவுன்ட்ரல், ராஸ்கல்ஸ்” அவன் சொல்லவும் மற்றவர்கள் பக்கென சிரித்து வைத்தனர்.

“திட்டி முடிச்சிட்டியா தாயே?” சுப்பு

“இல்ல இன்னும் என்ன சொல்லணும்னு யோசிச்சுட்டு இருக்கேன்”

“என்னது யோசிச்சுட்டு இருக்கியா?” செழியன் அதிர…

“சரி உங்க வீட்டு பாட்டிக்கு என்ன வயசு இருக்கும் பாப்பா?” பேச்சை மாற்றவென சுரேஷ் கேட்க

“பதினெட்டு முடிஞ்சு இப்பதான் பத்தொன்பது”

“என்னது?” கோரஸாக அதிர்ச்சிக் குரல் எழுப்பினர்.

“அப்பா எப்பவும் என்னை தான் வயசான பாட்டி மாதிரி பேசுறன்னு சொல்வாங்க” முனகலாய் பதில் சொன்னாள். அதைக் கேட்டு அவர்கள் சிரித்து முடிய சிறிது நேரம் எடுத்தது. தன்னை கிண்டலாய் சிரிப்பவர்களை முறைத்துக் கொண்டு இருந்தவளிடம்

“சரி அப்படின்னா இனி நீ எங்களுக்கும் பாட்டிதான்” ஒருமனதாகச் சொல்ல…

“போங்கப்பா”

சற்று அமைதி தொடர

“நீ சொல்லறது பார்த்தால் அதுவும் சரியாதான் தெரியுது அரசி. எதற்காக எல்லா நேரமும் சண்டை? கொஞ்ச நாளா நானும் இதைத்தான் யோசிச்சுட்டு இருக்கிறேன்.” சுப்பு சொல்ல அதையே அவள் பிடித்துக் கொண்டவளாக தொடர்ந்தாள்.

“நாம அடுத்ததா வாழ்க்கையில் என்ன செய்யணும்னு அதைப் பற்றியே யோசிக்க ஆரம்பிச்சோம்னா… நமக்கு இப்படிப்பட்ட விஷயங்கள் எல்லாம் பெரிசாவே தெரியாது. இந்த வயதில எப்பவும் நம்மக் கிட்ட எதிர்காலத்தில் என்னவாகனும்னு ஒரு இலட்சியம் இருக்கணும். அதைப் பத்தியே யோசிக்கணும்…அதுக்காகவே உழைக்கணும்… அப்படி மட்டும் இருந்தா போதும் இப்படி நமக்கு வர்ற பிரச்சனைகளை எல்லாம் தூசுன்னு கடந்து வந்திடலாம்.

நம்மை பிடிக்காதவங்க எத்தனை பேரோ இருப்பாங்க, அவங்க நம்மை சீண்டிக்கிட்டே தான் இருப்பாங்க எல்லாத்துக்கும் ரியாக்ட் செஞ்சுட்டே இருந்தோம்னா கொஞ்ச நாள் கழிச்சு யோசிச்சுப் பார்க்கிறப்ப நாம இதுக்கா இவ்வளவு கோபப்பட்டோம் இதை தவிர்த்து இருக்கலாமேன்னு நமக்கே தோணும்.”

“நம்மை கோபப்படுத்துறதுதான் அவங்க நோக்கம்னு தெரியும் போது, நாம கோபப்பட்டு அவங்களை எதுக்கு ஜெயிக்க விடணும்? நீங்களே சொல்லுங்க பார்ப்போம்”

இவளை அழைத்துச் செல்ல கார் வரும் வரையில் அவர்களிடம் ஏதோ ஒன்றை பேசிக் கொண்டே இருந்தாள்.

அடுத்த நாள் அரசு இவளை வந்து முறைத்து நின்றபோது எதிர்பார்த்தது தானே என்பது போல அவள் அவனை இலகுவாக எதிர்கொண்டாள்.

“என்ன நான் என்னச் சொன்னேன்? நீ என்ன செஞ்சுட்டு இருக்க அரசி?” உறுமல் தான் ஆனால் இவள் அசருபவளா என்ன?

“நான் ஒன்னும் செய்யலையே, நீங்க எதுக்கு என்னை வந்து அதட்டுறீங்க? ஆ..”

“என் பிரண்ட்ஸை எனக்கு எதிராவே தூண்டி விட்ருக்க, அவங்க எல்லாம் இப்ப மாத்தி மாத்தி பேசுறாங்க. உன்னைக் கண்டாலே எனக்கு கடுப்பாகுது போ”

“நான் சொன்னது எல்லாம் சரியான விசயம் தான், நான் தப்பா ஒன்னும் சொல்லலை. அதுக்கு நீங்க ஏன் இவ்வளவு கடுப்பாகணும்?”

“இதுவே உங்கம்மா பத்தி சொல்லிருந்தா உனக்குப் புரியும், அவங்க என் அம்மா பத்தி அசிங்கமா பேசுறாங்க அப்ப எனக்குத்தானே கொதிக்கும்? உனக்கெப்படி அந்த வலி தெரியும்?”

“எங்கம்மா என் கூட இல்லதான் அப்படியே எங்கம்மா பத்தி எவனும் சொல்லிருந்தாலும் நான் இப்படில்லாம் உங்களை மாதிரி ரியாக்ட் செய்ய மாட்டேன். அதுக்காக எனக்கு அடிக்க தெரியாதுன்னோ, அடிக்க பயம்னோ நினைச்சுக்காதீங்க. தேவைப் பட்டா… ஆமா தேவைப்பட்டா மட்டும் நானும் திருப்பி அடிப்பேன். வேற வழியே இல்லாத போதுதான் வன்முறையை கையில் எடுக்கணும்னு நான் நம்புறேன்.”

“…….”

“அது போக நம்மளை பெத்தவங்களை நாம யார் கிட்டேயும் போய் நிரூபிக்க தேவையில்லை. யார் சொன்னாலும், சொல்லாட்டியும் யார் ஏத்துக் கொண்டாலும் ஏத்துக் கொள்ளாவிட்டாலும் கூட அவங்க நல்லவங்க தான்.

நீங்க கோபப்பட்டு யாரையும் அடிச்சுட்டா மட்டும் உங்கம்மா பத்தி உலகத்துக்கு உண்மையை தெரிவிச்சுட்டதா அர்த்தமா என்ன?”

இவளிடம் போய் தன் சொந்தக் கதையை சொன்னோமே எனும் கொந்தளிப்பில் “ஏய் நீ ரொம்ப பேசுற அரசி” கோபத்தில் அவன் மூக்கு விடைத்தது.

“நான் பேசுவேன், இன்னும் பேசுவேன் தைரியம் இருந்தா கேளுங்க… சரி உங்க கிட்ட அம்மா பத்தி இத்தனை பேசுராங்களே… இதையே உங்கம்மா காதில விழுறது மாதிரி பேசாம இருந்திருப்பாங்களா என்ன? உங்கம்மா இதுவரை அதுக்காக யார் கிட்டேயாவது சண்டைக்கு போயிருக்காங்களா? யோசிங்க… அப்படி அவங்க சண்டை போடலைன்னா காரணம் என்னவா இருக்கும்னு சிந்திச்சுப் பாருங்க. அப்படியும் புரியலைன்னா அவங்க கிட்டயே போய் கேளுங்க. உங்களுக்கு பதில் கிடைக்கும்.”

இதுவரை யோசிக்காத கோணத்தில் அவனை யோசிக்க விட்டவள் தொடர்ந்தாள்.

“வாழ்க்கையில் எல்லா நேரமும், எல்லோருக்கும் நாம பதில் கொடுத்திட்டே இருக்கணும்னு தேவையில்லை அரசு. நம்ம மனசுக்கு எது சரின்னு படுதோ அதை செய்யணும், அதை விட்டுட்டு குரைக்கிற எல்லா நாயையும் எறிய கல் தேடிட்டு இருந்தன்னா கல்லை தேடி தேடி அலையுறதிலயே வாழ்க்கை கழிஞ்சுடும்… அடுத்ததா நாம எங்க போகணும்னு நினைச்சுருந்தோம்னு கூட வழியே மறந்து போயிடும்.

அவளது பதில்களை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அவனது ஈகோ அதற்கு அனுமதிக்கவில்லையோ என்னமோ? ஆனால், அரசுவுக்கு மட்டுமல்ல அவன் நட்புகளுக்குள்ளும் அவள் ஒரு புதிய சிந்தனையை விதைத்திருந்தாள்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here