மனச் சோலையின் மழையவள்_13_ஜான்சி

0
614

அத்தியாயம் 13

காட்டாற்றுப் போல சீறிப் பாயும்,

வரையில்லா கோபம் உன்னது,

அதை நெறிப்படுத்தும் கருவியாய் நான்.

உந்தன் கோபத்தின் சீற்றம்,

கரைக் கடக்கும் வேளைகளில்எனை

ராணுவ சேனையாக கருதி

உன் நண்பர்கள் எனைத்தேடி,

உன் முன் நிறுத்தி விடுகிறார்கள்.

நீயும் உடனேநிறுத்திவிடுகின்றாய்.(!)

எந்தன் ஓர் துளிக் கண்ணீர் முன், 
உந்தன் காட்டாற்று வெள்ளம்

கரைக்கட்டி தேங்கி நின்று விடும் அதிசயமே

உந்தன் பெயர் தான் காதலா!

தன்னைச் சுற்றி என்ன நிகழ்கின்றது என பனி அரசியால் கணிக்க முடியவில்லை. தனது நண்பர்கள் நலம் கருதி என அவள் தனது மனதிற்கு சரியெனப் பட்டவைகளை சொல்லி வைக்க, அவர்கள் அதனை அத்தனை தீவிரமாய் பின்பற்றுவார்கள் என அவள் கனவிலும் சிந்தித்து இருந்தாளில்லை.

முதல் இரண்டு வாரங்கள் அவள் பார்க்கும் போதெல்லாம் அவர்கள் ஏதேதோ சிந்தனையில் அலைந்தனர்தான். பேய்க்கதையும் ஊர்க்கதையும் முன்னைப் போல அவ்வப்போது பேசினாலும் கூட அதையும் தாண்டி எதிர்காலம் குறித்த சில சிந்தனைகள் அவர்களிடம் வந்திருந்தது. படிப்பை முடித்த பின்னர் என்னச் செய்ய வேண்டும் என தீவிரமாகவே கலந்துரையாட ஆரம்பித்து இருந்தனர்.

“நம்ம பேச்சுக்கு இவ்வளவு பலனா?” அவளுக்கு பெருமை தாளவில்லை. அப்பாவிடம் அதைச் சொல்லிச் சொல்லி பெருமை பீற்றியதில் அவர் காதில் ஓட்டை விழாத குறைதான்.

இத்தனையிலும் அந்தக் குழுவில் அவள் சொல்லி திருந்தாத ஒரே ஒரு ஜீவன் உண்டென்றால் அது அரசுதான். அவன் இன்னும் அவள் மேல் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான். தான் பலகாலமாக சரியென எண்ணிக் கொண்டு இருந்தவைகளை ஒருவர் தவறென்று சுட்டிக் காட்டினால் அதை அவனால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்?

இந்த கடுப்பின் காரணமாக அவர்கள் வீட்டிலும் எப்போதும் புலியின் உறுமல் தான். மகனுக்கு ஏதேனும் பிரச்சனை போல என எண்ணிய அவன் அன்னை “தலைக்கு எண்ணை தேச்சு விடவாடா அரசு” எனக் கேட்க அதற்கும் எரிந்து விழுந்தான்.

பனி அரசி அவனுடைய நட்புக்களை அவனுக்கு எதிராகவே திருப்பி விட்டதும் அதன் பின்னர் அவனுக்கே அறிவுரை சொன்னதும் என அவளது செய்கைகள் அவனுக்கு சற்றும் பிடிக்கவில்லை.

இவளுக்கு என்னைக் குறித்து என்ன தெரியும்? என் துயரங்கள் அவளுக்குத் தெரியுமா? என் மனக் கஷ்டங்கள் அவளுக்குப் புரியுமா? வந்துட்டா பெரிசா அட்வைஸை தூக்கிக் கிட்டு…இதில் நான் அம்மா கிட்ட போய் கேட்கணுமாம். கேட்டு தெரிஞ்சுக்கணுமாம்… இவ சொல்லித்தான் எங்கம்மாவை எனக்குத் தெரியணுமா? எங்கம்மா பத்தி எனக்கு நல்லாவே தெரியும் இன்னும் என்னெப்பவோ ஆதங்கத்தில் இதே எரிச்சலில் அவனது நாட்கள் கடந்திருந்தன.

அன்று கல்லூரிக்கு வந்தவன் அமைதியாய் தன்னுடைய டூ வீலரை பார்க்கிங்கில் நிறுத்தி திரும்பும் நேரம், எதிரில் வண்டி ஓட்டி வந்தவன் ஏதோ தவறான கணக்கீட்டில் வண்டியை ஓட்ட அரசுவின் வண்டியை அது லேசாக இடித்து விட்டிருந்தது. அதற்குள்ளாக அரசு அவனது காலரை பிடித்து விட்டு கை ஓங்கி விட்டிருந்தான்.

சட்டென்று எங்கிருந்து வந்தாளென தெரியாமல் திடீரென அரசி அங்கு வந்து நின்றாள். அதற்கு மேல் பிரச்சனையை வளர்க்க விரும்பாதவனாக அந்த சக மாணவனின் காலரை அவன் விட்டான்..

“சாரிண்ணா தெரியாம பட்டிருச்சு” அவன் தாழ்ந்து போக இவனோ “ம்ம்” எனும் பதிலோடு எதிரில் நின்ற அவள் முகத்தை பார்க்கப் பிடிக்காதவனாக அங்கிருந்து சென்று விட்டிருந்தான்.

இப்படி ஒன்றல்ல பல சம்பவங்கள், இப்போதெல்லாம் அரசு கோபத்தில் இருக்கிறான், சண்டை நடக்கவிருக்கின்றது எனத் தெரிந்தாலே எங்கிருந்தாவது அரசியை தேடி அவனருகில் கொண்டு வந்து விடுவது அவன் நண்பர்களது வேலையாகிப் போனது. அவன் அடங்குவது அவள் பார்வைக்கு மட்டும் தானே?

தனக்கு அரசு பயப்படுகின்றானா? ஆஹா என்ன ஒரு மகிழ்ச்சி. தன்னை பெரிய வீரி, சூரியாக நினைத்துக் கொண்டு இதனையும் தகப்பனின் காதுகளில் அவள் போட்டு வைக்க அவள் தந்தை ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியதன் அடையாளமாக அவரது நெற்றிச் சுருங்கியது.

“எதுக்கு உனக்கு இந்த வேண்டாத வேலை அரசி? அப்படில்லாம் யாரையும் கட்டாயப்படுத்தி திருத்த முடியாது. ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி இருப்பாங்க ஊரில் இருக்கிற எல்லோரையும் திருத்துறதா உன்னோட வேலை?” முதன் முறையாக மகளை கடிந்தார்.

“அவன் என் பிரண்ட் பா” என அவள் முனகினாலும் அதன் பின்னர் அரசு குறித்த எதையும் அப்பாவிடம் பகிர்ந்தாளில்லை.

அரசியின் வகுப்பறை

எதையோ எழுதிக் கொண்டிருந்தவள் காதுகளில் லல்லி கிசுகிசுத்தாள்.

“ஏ அரசி, ஆங்க்ரி யங்க் மேன் அரசு உன்னை லவ் செய்றதா எல்லோரும் சொல்றாங்க அது உண்மையா?”

தோழியின் கேள்வியில் தான் எழுதியதை அப்படியே விட்டு விட்டு பேந்த பேந்த விழித்தவள், “என்னாது? நானா? லவ்வா? லூசாடி நீ?”

“ஆமா நீதான்… நீயும் அரசுவும் டீப் லவ்வாம். பின்ன வேறென்ன? அரசு சண்டை போடும் போது நீ போய் நின்னா போதுமாம். எல்லா சண்டையையும் நிறுத்திடறானாம். அவன் முன்னை போல இல்லையாம் இப்பலாம் கோபத்தை குறைச்சு ரொம்ப அமைதியா ஆகிட்டானாம். அரசி… ஏ அரசி பெரிய ஆளுதான்டி நீ?”

“யூ சில்லி கர்ள், உங்கூர்ல பாய் அண்ட் கர்ள் பேசினாலே லவ்வா? நான் அவன் பிரண்ட் அவ்வளவுதான். ம்க்கும்” நொடித்தாள்

“பொய் சொல்லாதே நான் கேள்விப் பட்டிருக்கேன். எல்லோரும் முதல்ல லவ் இல்லைனு தான் சொல்வாங்களாம். என்னதான் எல்லோரிடமும் மறைச்சாலும் ரொம்ப நாளைக்கு காதலை மறைக்க முடியாதாம். நான் உன்னோட ப்ரெண்ட் தானே? பிகு செய்யாம எனக்கு மட்டும் உண்மை சொல்லுடி. ப்ளீஸ் ப்ளீஸ்… நான் இப்படி ஆகும்னு முதல் நாளே நான் நினைச்சேன் தெரியுமா? உங்க லவ் … லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டா? ம்ம் சொல்லுடி சொல்லு”

“உன்னை கழுத்தை நெறிச்சு கொன்னுடுவேன் பார்த்துக்க, எதுக்குடி இத்தனை நேரோ மைண்டடா இருக்க? வீ ஆர் ப்ரெண்ட்ஸ்… ஜஸ்ட் ப்ரெண்ட்ஸ்”  தோழியின் பேச்சில் சலிப்பாக அவள் குரல் தேய்ந்தது.

“……”

“ப்ராமிஸா சொல்றேன் லல்லி, அவன் என் கிட்ட ஒரு நாளும் நல்லா கூட பேசினது கூட இல்ல, நம்ம டிரைவர் அண்ணா வரும் வரைக்கும் அங்கே நான் அவன் ப்ரெண்ட்ஸ் கூடதான் அரட்டை அடிச்சுட்டு இருப்பேன். இனி அடிதடின்னு ஏதாச்சும் பிரச்சனைன்னு வந்ததுன்னா அவனை காலேஜ் விட்டு தூக்கிடறதா பிரின்ஸிபல் சொல்லிருக்கார். அதுக்காகத்தான் நான் ஒரு ப்ரெண்டா அவனுக்குப் போய் புத்தி சொன்னேன். ஆனா, அவன் இதுவரைக்கும் கேட்கவே இல்லை தெரியுமா?”

பேசாமல் அமைதியாக இருந்த லல்லி இவள் ரீல் சுத்துவதாக சைகையில் காட்டவும் அரசிக்கு கோபம் கட்டுக்கடங்காமல் பெருகியது.

“நீயே என்னை நம்ப மாட்டேங்கிறேல்ல… பொறு இன்னிக்கே உன் முன்னே அவன் கிட்ட போய் பேசி இதை க்ளியர் பண்ணுறேன். அப்பவாவது என்னை நம்புவியா?”

“….”

“இன்னிக்கு காலேஜ் டைம்கு அப்புறம் நீ என் கூட வர… என்ன புரியுதா?” சொன்னவள் சலனமில்லாமல் தனது புத்தகத்தில் அமிழ்ந்தாள். தோழியின் பேச்சில் லல்லியின் நெற்றிச் சுருங்கியது.

மாலை நேரம்

லல்லியும், அரசியும் அங்குச் சென்ற நேரம் ஏதோ ஒர் நுழைவுத் தேர்வு குறித்து அரசுவின் நண்பர்கள் பேசிக் கொண்டு இருந்தனர். வழக்கம் போல அரசு அமைதியாக அமர்ந்திருந்தான்.

இவள் ஒரு இருக்கையில் அமர்ந்து லல்லியை தன் அருகமர்த்தி தனது டிஃபன் பாக்ஸீகளை கடைப் பரப்ப ஆளுக்கொன்றாக ஆப்பிள் துண்டுகளை அவர்கள் எடுத்து உண்ணவும் சில நிமிடங்களில் டிஃபன்கள் காலியானது.

“இது என் பிரண்ட் லல்லி” அறிமுகப் படுத்தினாள்… சில ஹாய்கள் பரிமாறப்பட்டன. சற்று அளவளாவிய பின்னர்….

“அரசு” என பனி அரசி அழைக்கவும் அவளைப் பார்த்தான்.

“என் பிரண்டுக்கு ஒரு சந்தேகம்…நாம இரண்டு பேரும் லவ் செய்றதா காலேஜ்ல எல்லோரும் சொல்றாங்களாமாம். நான் அதெல்லாம் இல்லை நாம ப்ரெண்ட்ஸ் மட்டும் தான்னு சொன்னேன். அதுவும் இப்ப எல்லாம் நீ என் கூட பேசுறதே இல்லை, கோபமா இருக்கேன்னும் கூட சொல்லிட்டேன்…ஆனால், அவ என்னை நம்ப மாட்டேங்கிறா… நீங்க சொல்லுங்களேன்”

அரசுவின் நட்புக்களுக்கும் அரசி சொன்ன விஷயம் அரசல் புரசலாய் காதில் விழுந்திருந்தது. இருவரும் பேசிக் கொள்வதே இல்லை என்பது அவர்களுக்குத்தான் தெரியுமே.

அவளை பாட்டி பாட்டி என்பவர்கள், அரசு இவளது தொணதொணப்பு தாளாமல் சண்டைக்கு போகாமலிருக்கிறான் என்பதை புரிந்துக் கொண்டிருந்தனர். அதற்காகவே “பாட்டிம்மா கொஞ்சம் இங்கே வாயேன்” என அவளை அவன் சண்டையிடும் இடத்தில் அழைத்துச் சென்று விடுவது உண்டு. அரசுவும் அத்தோடு பிரச்சனையை வளர்க்காமல் அங்கிருந்து நகர்ந்து விட்டிருப்பான்.

இந்த புதிய வதந்திகள் வந்த நாளினின்று சும்மா இருக்கிறவங்களை யார்டா கோர்த்து விட்டது? என தங்களுக்குள் பேசியிருந்தாலும் அரசியிடம் அது குறித்துச் சொல்லும் தைரியம் அவர்களிடம் இல்லை எனலாம். இவர்களைக் குறித்து அவள் தவறாக எண்ணிக் கொள்வாளோ? எனும் தயக்கம் இருந்தது. அந்த அழகான நட்பை அவர்கள் இழக்க விரும்பவில்லை.

அரசியின் வெளிப்படையான கேள்வியில் இவர்கள் முதலில் அதிர்ந்தாலும் சும்மாவே இவளிடம் பேச மாட்டான். இப்போது மட்டும் என்ன பதில் சொல்லிவிடப் போகிறான்? என அலட்சியமாய் இருக்க, லல்லி சுவாரஸ்யமாக பார்த்தாள்.

அரசு பதில் சொல்ல ஆரம்பித்தான், அவர்கள் புருவங்கள் உயர்ந்தன.

“இப்பவும், ஏன் எப்பவுமே நான் உன் ப்ரெண்ட் இல்லை அரசி, எனக்கு நீ எப்பவும் இப்படி படபடன்னு பேசுறது. முந்திரிக் கொட்டைத்தனமா அடுத்தவங்க விஷயத்தில மூக்கு நுழைக்கிறது, யாரும் கேட்காம வந்து அட்வைஸ் சொல்லுறது இதெல்லாம் சுத்தமா பிடிக்காது”

அரசு சொன்னது அவளை காயப்படுத்தினாலும் லல்லிக்கு தான் சொல்ல நினைத்த பதில் கிடைத்திருக்கும் எண்ணியவளாய் மலர்ச்சியாய் அவள் திரும்பிப் பார்த்த அந்நேரம்…

“என்னடா…இவன் இப்படி பேசுறான்? அந்தப் பொண்ணு மனசு காயப்படாதா?” என அவன் நண்பர்கள் அவனை கலவரமாய் பார்த்த அந்த நேரம் அவன் தன் பேச்சை தொடர்ந்தான்.

“ஆனால், அரசி நான் உன்னை விரும்ப ஆரம்பிச்சிருக்கிறேன்னு நினைக்கிறேன். உனக்காக என்னை மாத்திக்கிட்டாதான் என்னன்னு இப்பவெல்லாம் எனக்கு தோண ஆரம்பிச்சிருக்கு. நீ சொல்லுறதில் நியாயம் இருக்கோ?ன்னு யோசிக்க கூட ஆரம்பிச்சு இருக்கிறேன்.”

அவனை சுற்றி இருந்தவர்கள் ஆவென வியப்பில் பேச்சற்று நிற்க அவன் முதன் முறையாக மனத்தடையற்று சரளமாக பேசிக் கொண்டு இருந்தான்.

“எனக்கு எங்கம்மாவிடம் கூட நிறைய விஷயங்கள் பிடிக்காது ஆனால் அவங்களை என்னால ஒரு போதும் விட்டுக் கொடுக்க முடியாது.அது போல உன் கிட்ட நிறைய விஷயம் சுத்தமா பிடிக்கலை ஆனால், நீ என் கூட எப்பவும் இருக்கணும்னு மனசுக்கு தோணுது. Yes, Iam deeply madly in love with you Arasi (“நான் உன்னை மிகவும் அதிகமாய் நேசிக்கின்றேன் அரசி”)

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here