மனச் சோலையின் மழையவள்_14_ஜான்சி

0
629

அத்தியாயம் 14

அரசியும் லல்லியும் அங்கிருந்து சென்று சில நிமிடங்கள் ஆகி இருந்தன.

“என்னடா இப்படி சொல்லிட்ட?” கவின் பதறினான்.

“அவ கேட்டா, கேட்டதுக்கு பதில் சொன்னேன், உங்களுக்கு என்னடா பிரச்சனை?”

“அவ சின்னப் பொண்ணுடா, நம்மை நம்பி வந்து பழகினா…”

“நான் அவளுக்கு ஒன்னும் கெடுதல் செய்யலையே? எனக்கு மனசில தோணுனதை சொன்னேன், அவ என் கிட்ட அந்த கேள்வி கேட்கலைன்னா நான் சொல்லிருக்க மாட்டேன். நீங்க ஏன்டா இப்படி பதறுறீங்க?”

“பைத்தியமாடா நீ”

தர்க்கங்கள் வாதங்கள் தொடர்ந்தன. ‘தங்களை நம்பி நட்பு பாராட்டிய பெண்ணின் பெயர் கெட தாம் காரணமாகின்றோமோ?’ என நண்பர்களுக்கிடையே பதட்டம் ஏற்பட்டு இருந்தது.

அதன் பின்னர் கல்லூரி கேம்பஸின் உள்ளே அரசி மற்றும் அரசுவுக்கான வதந்திகள் தங்கு தடையில்லாமல் பரப்பப் பட்டன. இருவரும் எதிர்பாராமல் எதிர் எதிரில் வந்தாலும் கூட அவர்கள் இருவரும் எங்கோ செல்ல தயாராக வந்ததாகக் கூறப்பட்டது. இன்னும் எத்தனை எத்தனையோ கதைகள் புனையப் பட்டன.

அவள் அரசுவுடன் அவளுக்கு காதல் காதல் எனக் கத்தியவர்களுக்கு காதை கொடுத்தாளில்லை. அவளிடம் படிப்பில் முன் போல அதே தீவிரம் இருந்தது, வழக்கமாக நட்புக்களுடன் நடைபெறும் அவளது சந்திப்புக்கள் நடைப் பெற்றுக் கொண்டே இருந்தன.

பழங்கள் நிறைந்த அவளது டிஃபன்கள் தவறாமல் பகிர்ந்துக் கொள்ளப் பட்டன.

வழக்கம் போல அவர்களுடன் பேசினாள், பழகினாள், சிரித்தாள், அதட்டினாள். அரசு வழக்கம் போல அமைதியாக இருந்தான். வழக்கம் போல அவர்கள் பேச்சில் கலந்துக் கொள்ளவில்லை. வழக்கம் போல அவளிடம் வலியச் சென்று உரையாடவில்லை. ஆனால், நாளுக்கு நாள் நெருப்புச் சூழ்ந்த இரும்பைப் போல அவன் மனம் இளகிக் கொண்டிருந்தது.

மனம் இரும்பாக இருக்கலாம், கல்லாகத்தான் இருக்கக் கூடாது. ஏனென்றால், கல் இளகாது, உடைந்து சிதற மட்டும் செய்யும். ஆனால், இரும்பு உரிய தட்பவெட்பத்தில் இளகும், பின்னர் இறுகும் பலவிதமாய் மாற்றம் பெறும் அல்லவா?

நாட்கள் இறக்கைக் கட்டிக் கொண்டு பறந்திருந்தன.

அன்று கல்லூரியின் மூன்றாம் வருட மாணாக்கரின் பிரியாவிடை விழா. ஜீனியர்களின் ஏற்பாட்டில் அத்தனை தயாரிப்புகளும் செய்யப் பட்டு இருந்தன.

விழா என்ற பெயருக்கு ஏற்ப ஆட்டம் பாட்டம் ஆனால், மகிழ்ச்சியற்ற மிக இறுக்கமான சூழல் மிக மிக இறுக்கமான சூழல் அது. இனி மூன்றாம் வருட மாணாக்கர்களின் இறுதி தேர்வு அதன் குறித்த காரணங்களுக்காக மட்டும் அவர்கள் கல்லூரி வந்துச் செல்ல வேண்டி இருக்கும்.

அதன் பின்னர் அவர்கள் அந்த கல்லூரியின் மாணாக்கர்கள் அல்ல. விருப்பம் போல அந்த காம்பஸில் சுற்றி வர முடியாது. நண்பர்களோடான எத்தனை எத்தனை நினைவுகள் அத்தனையும் இனி நெஞ்சில் மட்டுமே சுமந்தாக வேண்டும். எத்தனை துன்பம் அது?

விழாக்கள் முடிய எல்லோரும் வீடு திரும்ப மனமில்லாமல் தத்தம் வழக்கமான இடத்தில் சென்று சுற்றிக் கொண்டிருக்க அது போலவே தங்களிடத்தில் அந்தக் குழுவும் கூடி இருந்தது. ஆனால், அவர்கள் முகத்தில் இப்போது நம்பிக்கையின் ஒளி இருந்தது. ஒரு சின்னப் பெண் அவர்களது தன்னம்பிக்கையின் சுடரை தூண்டி விட்டிருந்தாள். நட்பாய், சகோதரியாய் அவர்களுள் மாற்றம் கொண்டு வந்திருந்த அவள் சின்னப் பெண் அல்ல அவள் அவர்களின் தேவதை.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சின்ன சின்ன பரிசுகளோடு வந்திருந்தவள் செழியன், கவின், சுப்பு, சுரேஷ் என பெயர் பார்த்து பார்த்து தனது பரிசுகளை கொடுத்துக் கொண்டே வர அவள் முகம் கசங்கி இருந்தது.

இனி முன் போல அவர்களோடு அவளால் தினம் தினம் அரட்டை அடிக்க முடியாதே…இனி புதிய நட்புக்களை தேடி கண்டு பிடிக்க வேண்டுமோ? தேடினாலும் இதுபோல அமையுமா? கடந்த நாட்களில் ஞாபகம் வந்த அத்தனையையும் விடாமல் பேசித் தீர்த்தனர்.

அவள் கையில் கொடுக்கப் படாமல் வீற்றிருந்த மற்றொரு பரிசு அதை ஏந்திய வண்ணம் தயங்கி நின்றவளுக்கு தனிமை கொடுத்து மற்றவர்கள் அங்கிருந்து நகர்ந்துச் செல்ல வழக்கம் போல அவர்கள் பேச்சில் கலந்துக் கொள்ளாமல் நிற்பவனிடம் சென்று நின்றாள்.

“உங்களுக்கு என்னை பிடிக்காதில்ல அரசு, ஆனாலும் இந்த கிப்ட் வாங்கிக்கணும்” உதடுகள் நடு நடுங்கலாயிற்று.

அவள் தந்தவைகளை வாங்கிக் கொண்டான். அத்தோடு விட்டாளில்லை “எனக்கு உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்”

“ம்ம்”

“இப்பவும், ஏன் எப்பவுமே நான் உன் ப்ரெண்டா இருக்க வேணாம்னு தோணுது அரசு.”

“…………” புரியாமல் நிமிர்ந்துப் பார்த்தான்.

“நான் நானாகவே எப்பவும் இருக்க ஆசையா இருக்கு. எப்பவும் இப்படியே படபடன்னு பேசிக்கிட்டு, முந்திரிக் கொட்டைத்தனமா எல்லோருடைய விஷயங்களில் மூக்கை நுழைச்சுக்கிட்டு, யாரும் கேட்காம அவங்க கிட்ட போய் அட்வைஸ் சொல்லிக்கிட்டு…”

“……’ ‘இது அன்று அவன் அவளிடம் சொன்னதல்லவா?’ காதல் சொன்னதோடு அவளை ஒருபோதும் எதற்காகவும் வற்புறுத்தி இராதவன் அவள் சொல்ல வருவதைக் குறித்து புரியாமல் நின்றான்.

“உங்களுக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காதுன்னு தெரிஞ்சும் இது அத்தனையும் செய்து உங்களை எப்போதும் டார்ச்சர் செஞ்சுக்கிட்டு உங்க கூடவே… உங்க கூடவே எப்போதும் இருக்கணும்னு ஆசையா இருக்கு.”

‘அவள் சொன்னதன் அர்த்தம் என்ன?’ இன்பமாய் அதிர்ந்து நின்றவனின் கையில் மெதுவாய் கை கோர்த்தவள்…

“உங்க அம்மாவை யார் கிட்டேயும் விட்டுக் கொடுக்காத மாதிரியே என்னையும் விட்டுக் கொடுக்க மாட்டேன்னு நம்புறேன்”

தயக்கமாய் அவன் தோள் சாய்ந்தாள்… “விட்டுக் கொடுக்க மாட்டீங்கல்ல?” அவள் கண்கள் அவனிடம் இறைஞ்சின.

வளன்

சிந்தனைகள் மனதை சூழ வெளிமனம் மயங்கி இருந்தாலும் தனது ஆழ்மனதின் வழி நடத்துதலில் வழக்கமான பாதையில் பயணித்து தனது இருப்பிடத்திற்கு ஜீவன் வந்துச் சேர்ந்தான். காரை பார்க் செய்தவன் லேப்டாப் பேக் எடுத்து தோளில் மாட்டி, கார் கதவை லாக் செய்து விட்டு லிஃப்ட் நோக்கி நடந்தான்.

நான்காவது மாடியில் லிஃப்டிலிருந்து வெளியே வந்தவன் வீட்டின் கதவு உட்புறம் பூட்டப் பட்டிருக்க அதன் அழைப்பு மணியை அழுத்தினான். கதவு திறந்து தலையை எட்டிப் பார்த்தது மூன்று வயது முழுமையாகி இராத ஃப்ராக் அணிந்த அந்த சின்னச் சிட்டு.

“அப்பா”

“குட்டிப்பா”

உள்ளே வந்து பையை சோஃபாவில் வைத்து மகளை தூக்கிக் கொண்டான்.

“அப்பா, ஒரு சீக்கெட் சொன்னா… என்ன தரும்?’

இரகசியமாக மகள் அவனிடம் மழலையில் மிழற்றினாள்… “பெல்சியா பாப்பு சீக்கெட் சொன்னா அப்பா முத்தா தரும்” பஞ்சுக் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.

சட்டென்று இவர்களை மின்னல் வேகத்தில் பார்வையிட்டுச் சென்றது அவனின் மின்னல்.

“அதுதான் சின்னப் புள்ள இந்த மனுசனுக்கு புத்தியே கிடையாது… வந்ததும் கைகால் கழுவாம சின்ன்ப் புள்ளைய தூக்கலாமா? முத்தம் கொடுக்கலாமா? அது ஒரு பக்கம்னா ஸ்கூல் புள்ள மாதிரி பையை எங்கேயாச்சும் போடுறது, அப்புறம் என் முக்கியமான ஃபைல் இருந்துச்சு…அச்சோ லேப்டாப் அப்படி ஆகிடுச்சு இப்படி ஆகிடுச்சுன்னு புலம்புறது. இதில் இவர் காலேஜ் பிரின்ஸிபலாம்… இவர்தான் மெச்சிக்கணும்”

தாயின் கோபக்குரலில் மகள் தன் வாயை இரண்டு கைகளாலும் மூடிக் கொள்ள தகப்பனுக்கு சிரிப்பு பீறிட்டது.

“அம்மா என்னை அடிக்கப் போறா” முகத்தை இவன் சீரியஸாக வைத்துக் கொள்ள அவன் முகத்தை மகள் தடவிக் கொடுத்தாள்.

“வா, நாம இரண்டு பேரும் கை கால் வாஷ் செஞ்சுட்டு வரலாம்”

“இப்பதான் பாப்பாக்கு துணி மாத்தினேன்… மறுபடி போய் தண்ணில விட வேணாம்”

‘இவளுக்கு பாம்புக் காது’ மனதில் எண்ணியவன் “வரேன் பாப்பா இங்கே இரு…”

“அப்பா சீக்கெட்…அப்பா சாக்கி…” மகள் இராகம் பாடினாள்.

“வந்து சாக்கி தரேன் பாப்பா” அவசரமாய் லேப்டாப் பையை எடுத்து அதன் இடத்தில் வைத்தவன் முகம் கழுவி உடை மாற்றி வந்தான். இன்று மனைவி கோபத்தில் இருப்பது அவனுக்கு தெள்ளத் தெளிவாய் புரிந்தது.ஆனால், அதன் காரணம் தான் புரியவில்லை.

“அப்பா சாக்கி”

“சரி சீக்கெட் என்ன அதை முதல்ல சொல்லு பெல்சியா…மா”

“அது அது வந்து…”

“இங்க வீட்ல ஒருத்தி இருக்கிறான்னு என்னை மனுசியாவே மதிக்கிறதில்ல, தன்னிஷ்டம் போல எல்லோரும் இருக்கிறது…எதுனாலும் ஒரு வார்த்தை சொல்லுறது இல்ல.”

வீட்டில் நிலவும் கொந்தளிப்பின் காரணம் புரியாமல் முழித்தான். ‘இவளை சமாளிக்கிறதுக்கு காலேஜ்ல நாற்பது பிரச்சனைகளை சமாளிச்சுடுவேன்டா சாமி’ புலம்பிக் கொண்டான் மனதில் மட்டும் தான். வெளியில் அவனால் சொல்லத்தான் முடியுமா?

“எனக்கு வாச்ச மாமியார் இருக்கிறாங்களே, ஊர் உலகத்தில இப்படி மாமியார் எங்கேயும் பார்க்க முடியாது சாமி” கோபத்தில் அழுந்தி தேய்த்ததில் கிச்சன் டேபிள் பளிச்சென்றாகி இருந்தது.

“ஓ அம்மா மேல கோபமா? என்ன பிரச்சனைன்னு தெரியலியே?” இவன் யோசித்துக் கொண்டு இருக்கையில் அவன் கையில் இருந்த மகள் அவனிடம் சீக்கெட் சீக்கெட் எனச் சொல்லி சலித்துப் போய் கையிலிருந்து இறங்கிப் போய் விட்டிருந்தாள்.

சமையலறை சென்று நின்றவன்… “ஏதாச்சும் உதவி செய்யட்டுமா?”  கேட்கவும் அவனை முறைத்தாள்.

“இப்போதைக்கு சாப்பிடுற வேலைதான் இருக்கு அதை சரியா செய்யுங்க”

“என்னாச்சு?” தோளில் கை வைக்க தட்டி விட்டாள்.

“வேலை வேலைனே இருங்க வீட்டில எதையும் கவனிக்காதீங்க”

“இப்ப என்னன்னு சொன்னா தானே…” அந்நேரம் அழைப்பு மணி சப்தம் கேட்க இருவரும் வாயில் நோக்கிச் செல்லும் முன் பெல்சியா கதவை திறந்து இருந்தாள்.

“அப்பம்மா” தன்னிடம் தாவியவளை ஏந்திக் கொண்டு நின்றார் தெரசா.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here