மனச் சோலையின் மழையவள்_15_ஜான்சி

0
767

அத்தியாயம் 15

ஹால் கிச்சனோடு கூட இரண்டு அறைகள் கொண்ட ப்ளாட் அது. சற்று முன்பு சுத்தப் படுத்தி இருந்த அந்த மற்ற அறையில் குடும்பம் மொத்தமும் சூழ இருந்தது.

அப்பம்மா தனக்கு வாங்கி வந்திருந்த விளையாட்டுப் பொருட்களை தரையில் பரப்பி பெல்சியா விளையாடிக் கொண்டு இருந்தாள். சீக்கெட் சீக்கெட் என அவள் சொல்ல வந்தது தன் தாயின் வருகையைத் தான் என உணர்ந்தவன் உடனேயே சாக்கி தருவதாக மகளிடம் சமாதான உடன்படிக்கைக்கு வந்திருந்தான்.

சற்று முன்பு தானே சண்டையிட்டு முடித்து மாமியார் மடியில் படுத்து அழுதுக் கொண்டிருந்த மனைவியை பார்த்தவாறு வளன் வாயிலில் நின்றிருந்தான்.

‘இவக்கிட்ட இது ஒன்னு, அவளே சண்டை போடுவா அவளே அழுவா’

 அவன் பார்வை அறையில் இருந்த வழமையான பொருட்களை தழுவிச் சென்றது.

உயரத்தில் பீடம் அதன் மேல் அன்னை மரி, ஏசு இவர்களின் புகைப்படங்களில் இருந்து நகர்ந்த அவனது பார்வை சட்டமிடப்பட்ட அவர்களது திருமணத்தின் வாழ்த்துரையில் நின்று நிலைத்தது.

சில வருடங்கள் கடந்திருந்தும் கூட வளனரசு மற்றும் பனி அரசி இருவருக்குமான அந்த மண வாழ்த்து மெருகு குலையாமல் இருந்தது. அவன் கட்டிலில் அமர்ந்திருந்த தாயின் மற்ற பக்கம் வந்து அமர்ந்தான். எட்டி தனது மனைவி மீது கையை வைக்க அவள் தட்டி விட்டாள்.

“ம்மா நோ அடிச்சிங்க்… நோ நோ” மகள் தாய்க்கு எதிராக கொடி பிடித்தாள்.

“அப்பாக்கு துணைக்கு வந்துட்டா … போ, போ உங்கப்பா போன் எங்கேன்னு கேளு போ”

“என் கிட்ட பேசுறதுக்கு நடுவில உனக்கு ஒரு ஆள் தேவையா பனி? அதுவும் நம்ம பாப்புவ ஏன் அதட்டுற? என் கிட்ட கோபம்னா என் கிட்டதான் பேசணும். ரொம்ப ஓவரா பண்ணுற நீ?”

தாயின் திட்டலில் உதடு பிதுக்கி அழுகைக்கு தயாராக நின்ற மகளை தோளில் போட்டவன், மகள் தான் சண்டையிடுவதாக நினைத்து பயந்து விடக் கூடாதென எண்ணி மனைவியை குரலெழுப்பாமல் அதட்டினான்.

“எப்ப வச்சு போன் செய்றேன், எடுக்கிறீங்களா இல்லை உங்க மேல கோபப்படாம கொஞ்சவா செய்வாங்க?”அவள் குரலும் தணிந்திருந்தது.

“இங்க வா பாப்பு அம்மா சாரிடா”மகளை வாங்கிக் கொண்டாள். அவள் முகம் தக்காளிப்பழமென சிவந்து இருந்தது.

“இந்த அம்மா அவங்க மகன் இரண்டு பேரும் பேட் அதான் டா திட்டுனேன். உன்னை திட்டுவேனா? என் செல்லமில்ல” முத்தம் வைத்தாள்.

“உங்கம்மாக்கு சூப்பர் உமன்னு நினைப்பா என்னன்னு கேளுங்க நீங்க?” மகள் பயப்படுகிறாள் என இன்னமும் கூட குரலை தணித்து கேள்வி கேட்டாள்.

“வேளாங்கண்ணிக்கு போறேன்னு சட்டுன்னு புறப்பட்டு போனாங்க, இப்ப திரும்பி வர்றப்ப இன்னிக்கு வரேன்னு சொல்லலாமில்ல? நானாவது அழைச்சுட்டு வர இரயில்வே ஸ்டேஷன் போயிருப்பேனில்ல?”

“இப்ப ஒரு மணி நேரம் முன்னால போன் செய்து, நான் வீட்டுக்கு வந்திருவேன், என்னை அழைக்க யாரும் வர வேணாம்னு சொல்லியாகுது. பாப்பாவை வச்சுட்டு உடனே எங்கே போகன்னு உங்களுக்கு போன் செய்து அழைச்சுட்டு வரச் சொல்லலாம்னு நினைச்சா நீங்க போனே எடுக்கலை.”

அரசுவின் அலைபேசியில் அவளது தவற விட்ட அழைப்புகள் முப்பதை தாண்டி இருந்தன.

“சாரி பனி”

“இந்த ராத்திரி நேரம், தனியே வராங்க. எனக்கு பயமா இருக்காதா?”

“இரண்டு பேருக்கும் வேலை இருக்கும்னு தான் நானே வந்திட்டேன், இப்ப என்ன எனக்கு தெரியாத ஊரா இது? இதுக்கு இவ்வளவு அழுகையா?”

மருமகளின் கண்களைத் துடைக்க…

“அம்மா நீங்க என் கிட்ட பேசாதீங்க, எப்பவும் உங்க இஷ்டம் போலவே செய்றீங்க, எனக்கு இதெல்லாம் பிடிக்கலை”

இப்போது அப்பம்மாவின் மடியில் தாயைப் போலவே மகளும் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள்.

“லீவில் சேர்ந்து போகறதா இருந்தோம் தானே அம்மா, எதுக்கு இப்ப அவசரமா போனீங்க. அப்பவே வச்சு இவ எனக்கு திட்டுதான்.”

“அப்ப நீங்க அம்மாவை தனியா அனுப்பினது தப்பில்ல, நான் திட்டுனது தான் குத்தமா?”

“சரி இனி உங்க பேச்சு கேட்குறேனப்பா, இரண்டு பேரும் சும்மா இருங்க”தெரசா சலிக்க

“அப்பா சுப்” “அம்மா சுப்” இருவர் வாயிலும் சின்னவள் கரம் வைத்து மூடினாள். ஆவென தூக்கத்திற்கு அவள் கொட்டாவி விடவும்….

“வாங்க சாப்பிட வாங்க, பெல்சியாக்கு தூக்கம் வருது, அப்புறம் சாப்பிடாம தூங்கிடப் போறா”

“ஏற்கெனவே உன் கல்யாணத்துக்கு முன்னமே வச்ச வேண்டுதல் தாமதமாகிட்டே இருந்ததா அதனாலத்தான் இப்ப போயிட்டு வந்தது. வீடும் கட்டி முடிச்சதுக்கு நன்றி சொல்ல வேண்டாமா? இப்ப பால்காய்ப்புக்கு முன்னாடி போயிட்டு வந்திடணும்னு அவசரமா போய்ட்டு வந்தேன். போகும் போது இருந்தது போலவே இப்ப திரும்ப வரும் போதும் எல்லாம் வசதியா இருந்திச்சு ஒன்னும் பிரச்சனை இல்லை.” தனது பயண விபரங்களைச் சொல்லிக் கொண்டே இருக்க பேசிய வண்ணம் உண்டு முடித்து இருந்தனர்.

வழக்கம் போல தெரசாவிடம் பெல்சியா படுக்கச் சென்று விட்டிருக்க, அரசு தங்களது அறையை சுத்தப் படுத்திக் கொண்டு இருந்தான். படுக்கை விரிப்பை அவன் உதறி விரிக்கவும் அடுத்த பக்கத்தில் இருந்து பனி அரசி இழுத்து நீவி விட்டு சரிப்படுத்தினாள்.

அருகில் அமர்ந்தவளை அவன் தன் கைகளுக்குள் இழுத்து அணைத்துக் கொள்ள, முரண்டாமல் அவனுக்குள் அடங்கினாள்.

“குறுக்க குறுக்க பேசாம கதை கேட்ப்ன்னா நான் இன்னிக்கு காலேஜ்ல நடந்ததை சொல்லுவேன்”அவன் சொன்ன விதத்தில் அவனை கோபத்தில் முறைத்தாலும் சொல்ல அனுமதித்தாள்.

“அப்படின்னா அந்த அரத பழசான கதையை நினைச்சுட்டு நான் போன் அடிச்சது காதில கேட்காம வந்திருக்கீங்க?”

“எவ்வளவு ஆர்வமா ஒரு விஷயம் சொல்லுறேன் அதை புரிஞ்சுக்காம எடக்கு மடக்கா கேள்வி கேட்குற நீ. நம்ம கதை இத்தனை வருசம் கழிச்சும் காலேஜ்ல எப்படி கெத்தா நிக்குது பார்த்தியா?”

“அதில் பாதிக்கு பாதி கற்பனை தன் இஷ்டத்துக்கு கதை கட்டிருப்பாங்க, நீங்க வேற இதை பெருமையா பேசிட்டு”

“வர வர இந்தப் பொண்ணு டல்லா பேசுதே, இது அதே அரசி தானா? இல்லை கல்யாணத்தன்னிக்கு பொண்ணு மாறிடுச்சா?” மூக்கை திருகினான்.

“உங்களுக்கு நான் சரின்னு சொன்னதே பெரிசு ஞாபகம் இருக்கட்டும், இதில வேற பொண்ணு மாறுதாமாம்”அவன் மீசையை இழுத்து விட்டாள்.

“போடி”

“போடா”

அழுததில் வாடி இருந்த முகம் என்றாலும் பொலிவாகத்தான் இருந்தாள். காற்றில் அசைவாடிய கூந்தலை வருடினான். நெற்றியில் முத்தமிட்டான், முகத்திலும் சில முத்தங்கள் பரிமாறப்பட்டன.

“சும்மா சும்மா அழக்கூடாது புரியுதா? முகமே வாடிப் போச்சு, எனக்கு கஷ்டமா இருக்கு”

“ம்ம்”

“கோபமா இருக்கிறப்ப சட்டு சட்டுன்னு என் கையை தட்டி விட்டுடறது, அந்த நேரம் உன் கிட்ட வரவும் பயமா இருக்கு”

சிரித்தவள்“உங்களுக்கு பயமா இருக்கா இதை யாரும் நம்புவாங்களா ஆங்க்ரி பர்ட்?”

“என்னச் செய்யறது? இப்ப இந்த ஆங்க்ரி பர்ட் சிச்சுவேசன் சாங்க் எது தெரியுமா?”

“சொல்லுங்க கேட்போம்”

“குயிலப் புடிச்சு கூண்டிலடைச்சு கூவச் சொல்லுகிற உலகம்

மயிலப் புடிச்சு கால உடைச்சு ஆடச் சொல்லுகிற உலகம்”

அவன் ஆரம்பிக்க…

“அது எப்படி பாடுமைய்யா? அது எப்படி ஆடுமைய்யா?” அவள் தொடர

“ஓஹோ ஓஓஹோ…”

“ரொம்பத்தான் ஃபீலிங்கு சீ நிறுத்துங்க நாராசமா இருக்கு” வயிற்றைப் பிடித்துக் கொண்டு இருவரும் சிரித்து முடித்தனர்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here