மனச் சோலையின் மழையவள்_16_ஜான்சி

0
774

அத்தியாயம் 16

தங்கையின் பெயரில் மாறன் அவள் தங்கியிருந்த வீட்டையே மாற்றிக் கொடுத்து இருந்தான். இரண்டு மகள்களையும் நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்திருக்க சில அரசியல் வேலைகளில் இருந்தாலும் கூட தற்போது ஓய்வு தான்.

சுபாவிற்கு மகள்கள் இருவரின் திருமணம், பேறுகாலம் என மாற்றி மாற்றி வேலைகள் இருந்துக் கொண்டிருந்தன. கணவனின் கண்டிப்பில் இன்னொரு முறை நாத்தனாரிடம் எந்த பிரச்சனையும் செய்தாளில்லை. தான் பல வருடங்களாக பயந்த வண்ணம் அந்த வீடு தெரசாவின் பங்காக போய் சேர்ந்து விட்டிருக்க, அது அவளது மனதில் ஏமாற்றம் தந்திருந்தது.

அரசு மென்மேலும் படித்ததும், பல்வேறு வேலைகளை செய்ய ஆரம்பித்ததும் மிகத் திறமையாய் பணம் ஈட்ட ஆரம்பித்ததும் அவளுக்கு ஆச்சரியமே. உருப்படவே மாட்டான் அல்லது உருப்பட்டு விடக் கூடாது என நினைத்த பையனல்லவா?

தனது மகள்களின் திருமணத்திற்கு தாயோடு நின்று சபையில் நிரக்க அவன் சீர் செய்யவும், அவனையும் அவளுக்கு இப்போது பிடிக்க ஆரம்பித்து இருந்தது. வாழ்வில் வெற்றிப் பெற்றவர்களை யாருக்குத்தான் பிடிக்காது?

அரசுவின் வாழ்க்கையில் மெதுமெதுவாய் மாற்றங்கள் வர, தன் மாமாவை எதிரியாய் பாவிப்பதை தவிர்த்தான். எல்லோருடனும் சுமூக உறவை வளர்க்கவும் ஆரம்பித்தான்.

வேலையோடு கூட தனியாக சில பிசினஸ்களில் பணம் ஈட்ட ஆரம்பித்தவன் முதலில் தான் பணிக்கு செல்ல ஏதுவாக அருகாமையில் இருந்த பலமாடிக் கட்டிடங்களில் ஒரு வீட்டையும், காரையும் தவணையில் வாங்கியதும் தனக்காக பெண் கேட்க வரச் சொல்லி தாயையும், மாமாவையும், மாமியையும் அழைத்தான்.

பனி அரசியின் வீட்டை அடைந்தவர்களுக்கு முதலில் வியப்பே எழுந்தது.

“இவங்க நமக்கு எப்படிடா பொண்ணு தருவாங்க?” தெரசா மலைக்க,

“வாங்க வாங்க, அம்மா நல்லா இருக்கீங்களா?”என தன்னை வெகு நாட்களாக தெரிந்தவள் போல வரவேற்று வந்த பனி அரசியின் பாவனையில் தெளிந்தார்.

“உனக்கு காதல் கீதல் எல்லாம் கூட வருமா?” மகனை பார்த்த பார்வையில் அவனுக்கு சிரிப்பு வந்தது.

“இந்த முசுட்டுப் பையனை இந்த அழகான பொண்ணுக்கு எப்படி பிடிச்சது?” மற்றொரு ஆராய்ச்சிப் பார்வை.

“அம்மா உங்க பார்வைலாம் எனக்கு நல்லா புரியுது. இதனாலத்தான் உங்க கிட்ட முதல்லயே சொல்லலை. ஒருவேளை உங்களுக்கு முதல்லயே சொல்லி இருந்தேன்னா நீங்களே எனக்கெதிரா பேசி அவ மனசை மாத்திருப்பீங்க… நல்ல வேளைப்பா”

அவன் விளையாட்டாய் தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு அபிநயிக்க..

‘எம் புள்ளைக்கு இவ்வளவு சிரிக்கத் தெரியுமா?’ என அவனையே தெரசா மகிழ்ச்சியோடு பார்த்திருந்தாள்.

பனி அரசியின் அப்பா சேவியர் உடல் நலக்குறைவில் மிகவும் நலிந்திருந்தார். அரசு சில நாட்களாக வந்து அவரிடம் பேசி நம்பிக்கை ஏற்படுத்தி இருக்க, பண வசதிகளைத் தாண்டி அவனை அவருக்குப் பிடித்திருந்தது.

விடலைப் பையனாக காதல் கீதல் என வந்திருந்தால் அவர் அவனை ஒருவேளை தவிர்த்திருக்கக் கூடும். ஆனால், தன்னை நிலை நிறுத்திய பின்னர் அவன் வந்து தன்னைக் குறித்த விபரங்கள் தந்தது அவரை வெகுவாக கவர்ந்து இருந்தது.

கடந்த வருடங்களில் சொந்த தொழில் ஆரம்பித்து இருந்த மகளுக்கு அவனும் அவன் தோழர்களும் உதவியதெல்லாம் அவர் அறிந்தே இருந்தார். ஏன் அவனிடம் தனது விருப்பத்தை தெரிவித்த அன்றே பனி அரசி தந்தையிடம் வந்து சொல்லி விட்டிருந்தாளே?

திருமணத்திற்காக பேச வரும் முன்பே தனக்கு இருப்பது தாயும், மாமாவும் மட்டும் என அவன் வலியுறுத்திச் சொல்லி இருக்க, அவர் மற்ற எதையும் ஆராய விரும்பவில்லை.

இப்போது அவன் வீட்டுப் பெரியவர்களை பார்த்ததும் அவருக்கு பரம திருப்தி.

மன நிறைவோடு மகளை மணமுடித்துக் கொடுத்து இருந்தார். அவ்வப்போது மகள் ஓரிரு வாரங்கள் வீட்டிற்கு வந்து தங்கிச் செல்வதும் உண்டு. மாமியார் கெடுபிடிகள் இல்லாது அங்கும் மகள் போல் இருக்க அவருக்கு நிறைவுதான்.

பேத்தி பிறந்த பின்னர் இன்னுமாய் மகிழ்ச்சி கொண்டார்.

இப்போது அரசு தனது ஊர் வீட்டை புதுப்பித்துக் கட்டியிருக்க அவன், அவன் குடும்பம், அவன் நட்புக்கள் அனைவரும் ஊரை நோக்கி பயணப்பட்டுக் கொண்டு இருந்தனர்.

ஒரு வாரம் முன்பே ஊருக்கு அவர்கள் வந்து விட்டிருந்தனர், வீட்டில் இன்னும் சில வேலைகள் முடிவுறாததால் மாமாவின் வீட்டில் அனைவரும் தங்கி இருந்தனர். அரசுவைத்தான் வந்த நாள் முதலாக அங்கு யாரும் காண முடியவில்லை.

“இவ்வளவு வேலையை விட்டுட்டு எங்க போனாங்க?” அரசி சலித்துக் கொண்டு இருந்தாள். யாரிடமும் அதற்கான பதில் இல்லை.

அங்கு அரசுவோ சூர்யாவின் வீட்டில் ஊர் பெரியவர்களோடு கூடி இருந்தான். தனது வீட்டில் வந்திருந்தவனை காண துணிவில்லாது அங்கு சூர்யா அமர்ந்திருந்தான்.

உழைக்காமல் உட்கார்ந்தே உண்டால் எந்த பணக்காரனும் போண்டி ஆவது நிதர்சனமல்லவா? அதிலும் அரசியல் என பல இடங்களில் கால் வைத்திருந்த சூர்யா தேர்தலுக்காக வெகுவாக பணத்தை இறைத்து தோல்வியுற்றிருந்தான். அத்தோடு பெருமளவில் பணமும் நஷ்டமாகி இருந்தது. அரசியலும் ஒரு வகை சூதாட்டமல்லவா?

அதன் பின்னர் மகள் கவிதாவை பெரிய இடத்தில் கட்டிக் கொடுத்திருக்க அதற்கு சில சொத்துக்களை விற்றாகி விட்டது. சுரேந்தரை கீதா ஆரம்பத்தில் இருந்தே எல்லாவற்றிற்கும் கொம்பு சீவி விட்டிருக்க ஒரு சில அடிதடி கேஸ்களில் அவன் போலீசில் மாட்டியதில் அவனை விடுவிக்க வெகுவாக பணம் செலவாகி இருந்தது.

‘நான் பரம்பரை பணக்காரன், பிறருக்கு வேலை கொடுத்துத்தான் பழக்கம், பிறரின் கீழ் வேலை செய்து பழக்கம் கிடையாது’ எனும் எண்ணத்தில் நிலைமை புரியாமல் உழைக்க பிரியப்படாமல் சுரேந்தர் தகப்பனைப் போலவே நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு ஊர் சுற்றிக் கொண்டிருந்தான். தற்போது கடன்கள் சேரச் சேர, அதனை அடைக்க ஒவ்வொரு சொத்தாக விற்க வேண்டிய நிலையில் அவர்கள் இருந்தனர்.

தற்போதைய நிலையில் இந்த வீட்டில் இருப்பது ஒன்றுதான் தங்கள் வீட்டின் பொருளாதார சீர்கேடு வெளியில் தெரியாத வண்ணம் காண்பிக்க வழி என்று அவர்கள் இருக்க, காலையில் ஊர் பெரியவர்களோடு அரசு வந்த வேகத்தில் அவன் தங்களை வீட்டை விட்டு வெளியேற்றி விடுவானோ? எனும் பயத்தில் சூர்யா உறைந்திருந்தான்.

கீதாவோ உள்ளறையினின்று வெளியே வரவே இல்லை. காலையில் போதையில் வந்து தூங்கிய் சுரேந்தருக்கோ இன்னும் போதை தெளிந்து உணர்வு வந்திருக்கவில்லை.

ஊரே அவர்கள் வீட்டில் கூடி இருந்தது, விஷயம் புரியாமல் மாறனும் அழைப்பின் பேரில் வந்திருந்தான்.அவர்களுக்கு நடுவில் எழுந்து நின்ற அரசு பேச ஆரம்பித்தான்.

“என் பொறப்புக்கு காரணமான இந்தாளோட அப்பா என் பேரில் இந்த வீட்டை எழுதி வச்சிருந்தாங்கன்னு உங்களுக்கு தெரிய வந்திருக்கும்” நிறுத்த அனைவரும் ஆமோதித்தனர்.

“நான் ஒருவேளை இந்த வீட்டை சொந்தம் கொண்டாடிடுவேனோன்னு பயந்து இவங்க அதற்கு எதிரா சில சட்ட நடவடிக்கைகளை எடுத்திருந்தாங்க” ஒவ்வொரு தாளாக காண்பித்து விளக்கினான்.

“அந்த உயிலோட விபரம் இவங்க மூலமாக எனக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்பதால நான் மாற்று முறையில் நகல் எடுத்து வைத்திருக்கிறேன்.”

அவன் கையில் இருந்த அந்த உயிலின் நகலில் தனது உயிர் இருப்பதாக எண்ணி சூர்யா துடித்தான்.

“எங்கம்மாவுக்கு உங்க எல்லோர் முன்னால தான் திருமணம் நடந்தது, இந்த பஞ்சாயத்தில தான் அவங்க திருமணத்தை இரத்து செய்தீங்க. அது உண்மைதானே?”

“ஆமாம்” என அங்கிருந்த பெரியவர்கள் தலைவர்கள் பதிலளித்தனர்.

“அப்படி இருந்தும் கூட எங்கம்மாவை இதோ இவர் சட்ட ரீதியா எனக்கு திருமணமே ஆகலைனு ஏமாத்தினார், அதோட மட்டும் இல்லை எவ்வளவு நெஞ்சுரத்தோட இன்னொரு திருமணம் செஞ்சு இதே ஊரில் கடுகளவும் மனசு உறுத்தாம வாழ்க்கை நடத்தினார். யாராவது அவருக்கெதிரா ஏதாச்சும் என்னிக்காவது கேட்டிருப்பீங்களா?”

யாரிடமும் அவனுக்கான பதில் இல்லை.

“இந்தாள் ஒரு துரோகின்னா இவரோட இரண்டாவது மனைவி எங்கம்மாவை இத்தனை வருடங்களாக எவ்வளவு கீழ்த்தரமா பேசியிருக்காங்க தெரியுமா?”

என் பேரில் இந்த வீடு இருக்கிறது, இப்ப நான் நினைச்சா நான் இவங்களை இங்கிருந்து விரட்டி விடலாம். ஆனால், நான் இவங்களுக்கு ஒரு வாய்ப்பு தரேன். ஒரே ஒரு வாய்ப்பு…இவங்க செஞ்ச தவறுகளுக்காக எங்கம்மா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாங்கன்னா இந்த வீட்டை இப்பவே இவங்க பேரில் எழுதி கொடுத்திருவேன். இவங்களை மன்னிப்பு கேட்கச் சொல்லுங்க.

அனைவரும் உறைந்து நிற்க வெளியே “அரசு” எனக் குரல் கேட்டது. கூட்டத்தை விலக்கிக் கொண்டு வெளியே சென்றான்.

“எனக்கு இவங்க எல்லாம் யாருமே கிடையாதுடா… இவங்களை எனக்கு தண்டிக்கவும் வேணாம். இவங்க மன்னிப்பும் எனக்கு வேண்டாம். நீ என் புள்ளைன்னா இப்பவே இந்த வீட்டை அவங்க பேரில் மாத்திக் கொடுத்திட்டு வர்ற… நான் சொல்லுறது புரியுதா?”

வேறு வழியின்றி தாயின் சொற்படியே அவன் செய்தாலும், இப்போது அவன் மனதில் ஏதோ நிறைவு இருந்தது.

பலவித வேலைகள் செய்து முடித்திருக்க களைப்பே இல்லை. தனது புது வீட்டின் பூட்டை திறந்தான். மனைவிக்கு அழைப்பு விடுத்தான்…

“சாப்பிட்டு போனவங்க ஆளையே காணோம்…எங்க இருக்கீங்க?”கடுகடுத்தாள் மனைவி.

“பாப்பா அம்மா கூட தூங்கிட்டால்ல, வா நம்ம வீட்டுக்கு வா”

“இப்பவா?”

“அட வாங்கிறேன்ல”

அடுத்த பத்து நிமிடத்தில் வந்து நின்றாள்.

“உங்களுக்கு விவஸ்தையே இல்லை, இந்த இராத்திரி இப்படி வந்தா யார் என்ன நினைப்பான்னு அறிவிருக்கா?”

“எல்லோரும் சரியாதான் நினைப்பாங்க, நீ கொஞ்சம் சும்மா இரு”

உள்லே நுழைந்ததும் தாளிட்டவன் வீட்டின் பின் வாசலில் அந்த கிணற்றினருகே அமர நிலவொளி அவர்களை மிகவாய் ஈர்த்தது. புடவையும், நீள் பின்னலும் அதில் நெருங்கக் கட்டிய ஜாதிமல்லிச் சரம் அணிந்து மனதை மயக்க அவன் பார்வை அவளில் இலயிக்க ஆரம்பித்து இருந்தது.

“அம்மாடியோ வைஸிக்கு ரொமான்ஸ்லாம் வரும் போலவே?”

“அதெல்லாம் நல்லா வரும்…”

வா நம்ம ரூம் செட் செய்திருந்தேன் வந்துப் பாரு… மாடியில் அந்த ஒரு அறை மட்டும் மிக அழகாக அமைத்திருந்தான்.

“நல்லாயிருக்கு, இதைப் பார்க்கவா இந்த இராத்திரி அழைச்சீங்க?”தன்னிடம் இழைந்தவனை தள்ளி விட்டாள்.

“பால்காய்ப்பு நடக்காத வீட்டுல புழங்குறது தப்பு. இங்கே வச்சு வேற ஏதாவது எண்ணம் இருந்தா இத்தோட மறந்துடணும். உங்க மாமா வீட்டு சாவி என்கிட்டதான் இருக்கு. வாங்க வீட்டுக்கு போகலாம்.”

 விறுவிறுவென்று அவள் முன்னே நடந்துச் செல்ல…

“அடியே ஓரு முத்தம் கூடவா தரக் கூடாது? இதெல்லாம் என்ன ரூல்? யார் போட்ட ரூல்?”புலம்பிக் கொண்டே வெளியே வந்தவன், கதவை இழுத்துப் பூட்டினான்.

“ச்சே” சலித்துக் கொண்டே வந்தவனைப் பார்த்து அவளுக்கு சிரிப்பு வந்தது.

புதுமனை புகுவிழா:

பாதிரியாரை அழைத்து புதுமனை புகுவிழா ஜெபங்களை ஜெபித்து முடித்தவர்கள் தமிழர் சம்பிரதாயத்தின் படி பால் காய்ச்ச அது பொங்கி வழிந்து உற்சாகத்தை தந்தது.

உறவினர்களோடு கூட முன் தினமே வந்து இருந்த நட்புக்களால் அவர்களது இல்ல விழா சிறப்புற்றது. சமீபத்தில் திருமணம் செய்திருந்த கவின் மனைவி திவ்யாவுடனும், சுப்பு மனைவி மலர் மற்றும் நான்கு வயது மகன் வேந்தனுடனும், சுரேஷ் மனைவி சுகன்யா மகன் மூன்று வயது பரத் ஆறு மாதக் குழந்தை மகள் பாரதியுடனும், செழியன் மனைவி ஷர்மிளாவும், நான்கு வயது மகள் நந்திதாவுடனும் வந்துச் சேர்ந்திருக்க வீடு களைக் கட்டியது.அனைவருமே நல்ல வேலை, தொழில் என மிக நல்ல நிலையில் இருந்தனர்.

அத்தை அத்தை என அரசியை நட்புக்களின் குழந்தைகள் சுற்றி வர, பெல்சியா தனது மாமாக்கள் மாமிகளுடன் செல்லம் கொஞ்சிக் கொண்டு இருந்தாள். மற்ற உறவினர்கள் சற்று இடைவெளி விட்டுப் பழக, அங்கே நட்புக்கள் நெருக்கமாய் நின்றனர்.

“என் தங்கையின் வீட்டு விழா என்பதால் இதெல்லாம் அண்ணனின் சீர்”, என சுரேஷ் தான் பெரிதாக பலவும் செய்தான் என்றால், மற்றவர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு பரிசுப் பொருட்களோடு வந்திருக்க, ஒற்றையாய் பிறந்திருந்தாலும் நட்பெனும் வகையில் தங்கள் பிள்ளைகளுக்கு இத்தனை உறவுகள் அமைந்தது குறித்து அரசு மற்றும் பனி அரசியின் பெற்றவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியே.

சேவியர் அவர்களை அழைத்து அவர்களிடம் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டார். அவர்களும் தங்களது உரையாடல்களில் தங்களது தற்போதைய நல்வாழ்விற்கு ஊக்கம் தந்ததாக அரசியையே கைகாட்டி நின்றனர். மகள் முன்பு சொன்ன போதெல்லாம் புரியாதது அனைத்தும் அந்த தகப்பனுக்கு இப்போது புரிந்தது.

சொல்லி வைத்தவர்கள் போல நட்புக்கள் அவர்கள் அனைவருமே “அடுத்த முறை ஒரு வாரம் வந்து தங்கிட்டு போறோம், இப்ப முடியவே முடியாது” எனச் சொல்லி விழாவின் அன்று மாலையே தங்களது பணிகளை காரணம் காட்டி விடைப் பெற்றிருந்தனர்.

மிகச் சிறப்பாக அனைத்தும் நடைப்பெற்றிருக்க, அனைவருக்கும் அப்படியொரு நிறைவு. கீழே இருந்த அறைகளுள் ஒன்றை தாய்க்கு பாவிக்க வசதி செய்திருந்தவன், மற்றதில் மாமனாருக்கும் வசதி செய்து கொடுத்து இருந்தான்.

மற்ற நாட்களைப் போல அப்பம்மாவிடம் செல்ல விரும்பாத சின்னவள் அன்று பெற்றோருடன் படுத்துக் கொண்டாள். சுவரோரம் மகளை படுக்க வைத்து மனைவிக்கும் மகளுக்கும் நடுவில் இனிய துயில் கொண்டான் வளனரசு.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here