மனச் சோலையின் மழையவள்_17(நிறைவு அத்தியாயம்)_ஜான்சி

0
971

அத்தியாயம் 17

“என்னா வாத்தியாரே என்னாச்சு?”

கணவனை சீண்டிக் கொண்டிருந்தாள் அரசி.

“போடி” திரும்பிப் படுத்தான் அரசு.

மகளை பெரியவர்களிடம் விட்டுவிட்டு முன் தினம் கேரளாவிற்கு சுற்றுலா வந்திருந்தனர்.

வந்ததும் வராததுமாக அவள் அவனை அழைத்துக் கொண்டு ஊரை சுற்றிக் காண்பிக்க வைத்து இருந்ததில், களைத்துப் போய் இரவு தூங்கி விட்டிருக்க அரசு சலித்துக் கொண்டான்.

“யோவ், இன்னிக்கு நாம எங்கேயும் போக வேண்டாம் சரியா?”

“இப்படித்தான் சொல்லுவ, ஆனா மறுபடி ஏமாத்துவ?” அரசு சலித்துக் கொண்டான்.

“ஒன்னு லேப்டாப்போட குடும்பம் நடத்துறது இல்லன்னா காலேஜை கட்டி மேய்க்கிறது, இவர் எனக்கு நேரம் தர்றதில்லை ஆனால் என் மேல பழி போடுறது இது சரியில்லை சொல்லிட்டேன்”

“அதான் ஆறு மாசத்துக்கு ஒரு வாரம் இப்படி வெளியே சுத்த வர்றதா நாம தீர்மானம் செஞ்சிருக்கோம் இல்லை, இங்க வந்தும் ஊர் சுத்தச் சொன்னா? பாப்பு கூட நம்ம கூட இல்ல”

“யோவ் பாப்புவோட அப்பு, இங்கேயும் உம்ம புள்ள ஞாபகம் வந்தா இப்பவே ஊருக்கு கிளம்பி போயிடணும் சொல்லிட்டேன். நான் தனியே சுத்திட்டு வரப் போறேன். என்ன புரியுதா?”

கோபத்தில் சாடியவளை இழுத்து அணைத்து அவள் பேச்சை நிறுத்த அவனது முத்தங்களில் கரைந்துக் கொண்டிருந்தாள். பதிலுக்கு அவளும் அவனை முத்தமிட

“வைஸி வர வர நீ ரொம்ப ஹேன்சமாகிட்டு போற”

அவன் புன்னகைக்க… “ஆனா ஒன்னா நம்பர் முசுடு” அவனை கொஞ்சித் தீர்த்தாள்.

“மோஸ்ட் அன்ரோமாண்டிக் பர்சன், அறிக்கை வாசிச்ச மாதிரி அதுவும் எல்லோருக்கும் முன்னே ப்ரபோஸ் செஞ்சப்பவே சுதாரிச்சிருக்கணும், உன்னை போய் காதலிச்சு தொலைச்சேன் பாரு என் கிரகம்”

“வாயாடி”அவள் பேச்சைத் தடைச் செய்ய மறுபடி இதழ் கொய்ய துவண்டாள்.காதல் போதையும், பிதற்றல்களும் அவர்கள் இப்போது வேறு உலகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கி இருந்தனர்.

சொர்க்கத் தருணங்களில் இலயித்து, அவர்கள் பூமி திரும்ப வரும் முன்பாக கடிகார முள் சற்று முன்னோக்கி நகர்ந்து இருந்தது. கைகளுக்குள்ளாக கிடக்கும் தன் சொர்க்கத்தைப் பார்த்தான்.

“தேங்க்ஸ் அரசி”

“ச்சீ ச்சீ இதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லாத மேன்”

“வாய் கூடிப் போச்சு” செல்லமாய் அவள் வாயில் தட்டியவன்,

“நான் சொன்ன தேங்க்ஸ் நீ என் வாழ்க்கையில் வந்ததுக்காக…”

“போய்யா நான் தான் தேங்க்ஸ் சொல்லணும், ஆனா நான் சொல்ல மாட்டேன்…லவ் யூ மட்டும் தான்”இறுக்கிக் கொண்டு அவனுக்கு முத்தம் வைத்தவள் தூக்க மயக்கத்தில் அயர்ந்தாள்.

அவள் அவனை இதுவரை எத்தனை முறை “அன்ரோமான்டிக் பர்சன், அறிக்கை வாசிச்ச மாதிரி ப்ரபோஸ் செய்தவன் தானே நீ” எனச் சொல்லி சீண்டி இருந்தாலும் அன்றைய நிலையில் அவனது மன நிலையை அவன் தானே அறிவான்.

சமூக நிலையிலோ, பொருளாதார நிலையிலோ, குடும்ப நிலையிலோ ஏதோ எந்த வகையிலும் தனக்கு எந்த சிறப்பும் இல்லாதிருக்க, கிடைத்த வாய்ப்பில் தனது காதலை சொல்லி விட்டாலும், தனக்கு எதுவும் வாய்க்காது எனும் வெறுமையில் அவன் அப்போது மிகவும் தாழ்வுணர்ச்சியோடு இருந்தான்.

 அவளுக்கு காதல் சொல்ல நமக்கு என்ன தகுதி இருக்கின்றது? கிடைத்தது வாய்ப்பென்று தான் தன் காதலை சட்டென்று உடைத்துச் சொல்லி இருக்கக் கூடாதோ? எனும் சிந்தனைகள் பல இரவுகளில் தூக்கத்தையும் தொலைத்து இருந்தானே?

அதன் பின்னர் மறுபடி அவளிடம் போய் தன்னை வெளிப்படுத்தவோ, வற்புறுத்தவோ அவனுக்கு விருப்பம் இல்லை. அன்பை, காதலை யாசிப்பது காதலுக்குச் செய்யும் இழிவு என்பது அவன் கருத்தாக இருந்தது. கல்லூரியின் அந்த கடைசி நாள் அவள் அவனிடம் வருவாளென்றோ, அவனிடம் நேசம் பகிர்வாளென்றோ அவன் யோசித்தே இருக்கவில்லை.

 அந்நேரம் அந்த எதிர்பாராத தருணம், அவள் அவனது தோளில் சாய்ந்து சொன்ன அந்த வார்த்தைகள் தந்த வாழ்வின் பிடிப்பைக் கொண்டுத்தான் அவன் தன் வாழ்வில் இத்தனை தூரம் கடந்து வந்திருந்தான். தன்னை நம்பி ஒருவள், என்னை கைவிடாதே எனும் ஒருவள், நான் உன்னை நம்புகின்றேன் எனச் சொல்லும் உரியவள்… அது ஆணாக அவனுக்கு எத்துணை ஊக்கம் தர வல்ல விஷயம் என்பதைக் குறித்து அவளுக்கு என்னத் தெரியும்? இந்த முட்டாளுக்கு லவ் யூ சொல்ல மட்டும் தான் தெரியும் மற்ற ஒன்றும் தெரியாது அவள் முகத்தை வருட தூக்கத்திலும் புன்னகைத்தாள்.

அவனவள் அவனுக்கு மழைப் போன்றவள், அவனது பாலைவன வாழ்வை சோலையாக்கியவள். எந்த மழைக்குத்தான் தான் வளமைப் படுத்திய சோலைக் குறித்த விபரம் தெரிந்திருக்கக் கூடும்?

அவனது மனச் சோலையின் மழை அவளல்லவோ?

சுபம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here