மனச் சோலையின் மழையவள்_1_ஜான்சி

0
1060

மனச் சோலையின் மழையவள்

ஜான்சி

அத்தியாயம் 1

நகரத்திற்கும் கிராமத்திற்கும் நடுவில் சிக்கிக் கொண்ட அந்த ஊரின் பற்பலக் கல்லூரிகளுள் ஒன்று அது.வாயிலில் கல்லூரியின் பெயர் எழுதிய ஆர்க் வடிவ அமைப்பு கவனமீர்த்தது. அந்த வளைவைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் சுற்றிலும் கண்ணைக் கவரும் பச்சைப் புல்வெளிகளும், விளையாட மிகப்பெரிய மைதானமும் முதலில் கண்ணைப் பறித்தாலும் கூட அதனையும் தாண்டி நெடிதுயர்ந்த அந்த கல்லூரிக் கட்டிடம் மிக கம்பீரமாய் கண்ணைக் கவர்ந்தது.

வழக்கமான கல்வி நேரம் ஆதலால் உற்சாகம், இளமைத் துள்ளல், எதையாவது பிறர் கவனத்தைக் கவரும்படி பேசி தம் நட்பு வட்டத்திற்க்குள் கவனிக்கப் படுவதற்கான முயற்சிகள்.ஓங்கிய கைகளின் ஹை ஃபைவ்களும், அலட்டலான குரல்களும், ஹே…உற்சாக ஆரவாரிப்புமென உலகத்தையே மறந்து ஒருவர் மற்றவரை பல காலமாய் அறிந்தது போல ஒட்டி உறவாடும் கல்லூரி என்னும் இனியதான நட்புலகமாய் உள்ளத்தை கவர்ந்துக் கொண்டு இருந்தது.

அங்கே அந்தக் கல்லூரியின் காரிடாரில் வைஸ் பிரின்ஸிபல் வளன் கடந்துச் சென்ற ஒரு நிமிடம் மட்டும் அமைதிப் பேணப்பட்டது.  காரணம் பயமா? என்றால் இல்லை, அவர் குறித்த மரியாதை என்றேச் சொல்ல வேண்டும். 

தோழமை உணர்வோடு பழகும் அவருக்கு அக்கல்லூரியில் விசிறிகள் மிக அதிகம். முப்பதின் ஆரம்பத்தில் கல்லூரி மாணவன் போலவே அவர் தோற்றமளிப்பது அதன் ஒரு காரணமென்றால், தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் மாணவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பது, அனாவசிய அதிகாரத் தோரணை இல்லாத நட்பான அணுகுமுறை என்பவை மற்ற காரணங்கள்.

தான் பதவியேற்று ஒரு சில வருடங்களிலேயே தனது அமைதியான அணுகுமுறையால் அந்த கல்லூரியின் பல்வேறு சின்ன சின்னக் குறைபாடுகளை களைந்து அதிகம் கவனம் ஈர்த்துக் கொண்டவர்.படிப்பில் மட்டுமல்லாது கலை, விளையாட்டு என அக்கல்லூரியை முன்னிலைக்கு கொண்டு வந்துள்ளதால் அனைவரின் நல்மதிப்பையும் பெற்றிருந்தார்.

தற்போது அக்கல்லூரிக்குள்ளே இரண்டு குழுவினராக பிரிந்து நின்றுச் சண்டை இட்டவர்களை சமாதானப் படுத்தி விட்டு தன் இருக்கைக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.தம் அறையில் நுழைந்து ஓய்வாய் அமரும் வேளையில்,

“ஏய் அந்த வைஸி பேசினதப் பார்த்தல்ல… எப்படி அந்த கிரிக்கு சப்போர்ட்டா பேசினாரு? ….” எனப் பொருமும் சப்தமும் தொடர்ந்த உரையாடலும் கேட்டது. 

அந்த மாணாக்கர் தமது அறைச் சன்னலின் அருகே நின்றுப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று வளனுக்குப் புரிந்தது. வெளியே இருந்துப் பார்த்தால் உள்ளே யாரும் இருக்கிறார்களா?, இல்லையா? என அறிந்துக் கொள்ள இயலா அமைப்பு, அதனால்தான் தாம் உள்ளே இருப்பது அறியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றெண்ணியவருக்கு அவர்கள் பேச்சால் எழ வேண்டிய கோபத்திற்கு பதிலாக புன்னகையே மலர்ந்தது.

சிறுவராகவோ, பெரியவர்களாகவோ எண்ண இயலாத இரண்டும் கெட்டான் வயது இளமைப்பருவம் அவர்களது எல்லாவற்றையும் உணர்வு பூர்வமாக அளவிட வெளிப்படுத்த முனைகின்றவர்கள் என்று அறிந்ததாலேயே அந்த முறுவல்.

 “என்னமோ பெரிய காலேஜ் பெருமை பேசினாரு…இங்கே எப்பவும் எதுவும் பிரச்சினையே நடக்காத மாதிரியும், ஏதோ நம்மளால அந்த பெருமைக் கெட்டுப் போன மாதிரியும் ரொம்பத்தான்”…

“சும்மாயிருடா, அதுதான் முடிஞ்சிடுச்சே…வா கிளாஸுக்கு போகலாம்”…

“தோ போடா வைஸிக்கு சப்போர்ட்டா நீ?”…

“இவ்வளவுச் சொல்லுறாரே, முன்னே ஒரு தடவை இந்தக் காலேஜில தான் பெரிய சண்டைலாம் நடந்து போலீஸ் வந்து சமாளிக்க வேண்டியதாகிப் போச்சாம் உங்களுக்குத் தெரியுமா?”…

“எதுவும் சொல்றதுக்காக சொல்லாதே, என்னமோ எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுறதப் பாரேன். சும்மா அடங்குடா”….

“ஏய் நான் ஒண்ணும் சும்மாச் சொல்லல….எங்க அண்ணன் தான் சொன்னாரு.”

“அண்ணனோட க்ளாஸ்மேட் அரசுன்னு ஒருத்தன் பெரிய ரவுடியாம். யாருக்கும் பயப்படவே மாட்டானாம். யாரும் எதுவும் சொன்னால் போதும் பயங்கர அடி தடி தானாம். இவங்கல்லாம் எதுக்கு வம்புன்னு அவன் கிட்ட அளவாதான் பேசுவாங்களாம்”….

அப்புறம்…

“ஏய் என்னடா கதை கேட்க ஆரம்பிச்சிட்ட?, வா கிளாஸுக்கு போகலாம்.”

“விடுடா கொஞ்ச நேரம் கழிச்சி போகலாம். நீ சொல்லுடா…போலீஸ் கேஸ் ஆகிற அளவுக்கு என்னாச்சு?”

“அவனை யாரோ கிண்டலா ஏதோ பேசியிருப்பாங்க போல, அவன் அடிச்ச அடில வம்பு பேசினவனுக்கு மண்டையில நாலுத் தையலாம்.அப்படி ரவுடிங்கலாம் இந்தக் காலேஜில இருந்திருக்காங்க.வந்துட்டாரு வெள்ளைக் கொடிய பறக்க விட்டுட்டு, பெரீய்ய சமாதான தூதுவர்.”

“இந்தக் காலேஜுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு.”

வளனைப் போலவே பேசிக் காட்டியதும் மற்றவர்கள் சிரிக்கும் சப்தம் கேட்டது.

“ஏண்டா அப்போ அந்த அரசுவை டிஸ்மிஸ் செய்திருப்பாங்க இல்ல?” அடாத மழைப் பெய்தாலும் விடாமல் கதை கேட்கும் ஆர்வம் மற்றவனிடம்,

“இல்லடா, அவங்க அம்மா வந்து மன்னிப்புக் கேட்டு எப்படியோ அவனை காலேஜ் விட்டு எடுக்க விடாம செய்துட்டாங்களாம். என்னதான் இருந்தாலும் அவன்லாம் படிச்சு உருப்பட்டுருப்பான்னு நினைக்கிற?…..சான்ஸே இல்ல. இதுல சாருக்கு காதல் வேற…”

காதல் என்னும் வார்த்தைக்கு அவ்வளவு ஈர்ப்பு சக்தி போலும் இப்போது அங்கு சுற்றியிருந்த கூட்டமே காதல் கதைக் கேட்கத் தயாரானது,

“செகண்ட் இயர் வரை அந்த ரவுடி இப்படி அடாவடிப் பண்ணுறதும் அவன் அம்மா வந்து மன்னிப்புக் கேட்கிறதுமா இருந்திருக்காங்க”. 

“கோரஸாக அப்புறம்…”

“அவன் தர்ட் இயர் படிக்கும் போது காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்ல சேர்ந்த ஒரு பொண்ணைப் பார்த்து ஃபிளாட்டாயிட்டானாம்….”

“ஓ… ஓ”

“பிறகென்ன எப்படியோ அவங்க லவ் ஸ்டார்ட் ஆகியிருக்கு. அதற்கு பின்னால எப்போ எங்கே சண்டை ஆரம்பித்தாலும் அவன் ஃபிரண்ட்ஸ் எல்லோரும் அவளைத் தேடிப் போய் கூப்பிட்டு வந்திடுவாங்களாம்.”

“ம்ம்”

“அவளைப் பார்த்ததும் அப்படியே இவனும் பாஸ் (Pause) பட்டன் அழுத்தின மாதிரி சண்டையை நிறுத்திடுவானாம்.”

“ஓ…” உற்சாகமாக கேட்டுக் கொண்டிருந்தார்கள் மற்றவர்கள்.

“ஒரு தடவை அவன் சண்டயை நிறுத்தினதும் எதிரில இருந்தவன் சட்டுன்னு தள்ளி விட்டதில் அவன் கண் புருவத்துக்கு மேல வெட்டி ஒரே ரத்தமாம்…”

“அச்சச்சோ, அப்புறம்…”

“ஏண்டா நான் என்ன கதையா சொல்லிகிட்டு இருக்கேன். போங்கடா…”

“ஏய் சொல்லுடா…”

“வேற அதிகமா எதுவும் சொல்லல, அந்தப் பொண்ணு ரொம்ப வசதியாம், அவன் மிடில் கிளாஸ். அவங்க காதல் எங்கே சேர்ந்திருக்கப் போகிறது? இப்படி ரவுடிக்கு எங்கே வேலை கிடைத்திருக்கும்.எங்கயாவது ரவுடித்தனம் செய்துக் கொண்டு இருப்பான்.என்னச் சொல்றே நீ….”

“அது சரி தாண்டா…சரி நேரமாச்சுப் போகலாம்.”

சற்று நேரத்தில் அரவம் அடங்கியது , அவர்கள் வளனின் மனதில் ஆரவாரத்தை எழுப்பிச் சென்றிருந்தார்கள். கடல் அலையின் ஊடே கிழிஞ்சல்கள் கரைக்கும் கடலுக்குமாய் பயணிப்பதுப் போல அவன் ஞாபக அலையில் ஒரு சில நினைவுகள் வந்து அலைமோதின.

அவன் அந்த அரசு இப்போது எப்படி இருப்பான்?

அவள் அவனது காதலி என்னவாகி இருப்பாள்?

கல்லூரிக் காலம் வரை காதல்கள் எப்போதுமே வெற்றிகரமாய் வலம் வரும் கனவுக் காலம், அதைக் கடந்த பின்னர் கனவாகுமோ? நினைவாகுமோ?

நிஜமாகுமோ? இல்லை நிழலாகுமோ?

யாரறிவார்? இதற்கானப் பதிலை யார் தானறிவார்?

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here