மனச் சோலையின் மழையவள்_2_ ஜான்சி

0
788

மனச் சோலையின் மழையவள்

ஜான்சி

அத்தியாயம் 2

அதே கல்லூரி ஏறத்தாழ பத்து வருடங்கள் முன்பு…

அன்று அந்த கல்லூரியின் மிகப் பெரியத் திடலில் அனைவரும் குழுமி இருந்தனர். கடந்த ஒரு வாரமாக இண்டர் காலேஜ் ஸ்போர்ட்ஸ் காம்பெடிஷன் அவர்களது கல்லூரியில் ஏற்பாடு செய்யப் பட்டு இருந்ததால் ஒட்டு மொத்த மாணாக்கர்களின் கூட்டமும் அங்கேதான் குழுமி இருந்தது. பல்வேறு கல்லூரிகளிலிருந்து வந்த பேருந்துகளும் அணிவகுத்து நின்றன.

நூற்றுக் கணக்கான மாணாக்கர்களால் அந்த கல்லூரியே அமளி துமளிப் பட்டுக் கொண்டு இருந்தது.அன்றைய தினம் கால்பந்தாட்டப் போட்டி அரையிறுதி சுற்று நடைப் பெற்றுக் கொண்டிருந்தது. இந்தப் போட்டியில் வென்றால் அவர்களது கல்லூரி இறுதிச் சுற்றுக்குச் செல்ல தகுதி பெறும்.

அங்கொருவன் கடந்த வருடத்தில் தங்கள் கல்லூரிக்கு வெகுவாக முயன்று வென்று கொடுத்த முதல் பரிசு கோப்பையை இம்முறையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்ற முனைப்பில் இருந்திருக்க, எதிர்பாராத நேரம் தன்னை கல்லூரி நிர்வாகம் போட்டியில் பங்குக் கொள்ளக் கூடாதென விலக்கி வைத்திருந்ததால் மிகவும் மனம் நொந்து அமர்ந்திருந்தான்.

நெடு நெடுவென உயரம், மாநிறம், நீண்ட அழகான மூக்கில் ஒரு மச்சம் என மிக வசீகரனாய் இருந்தான் அவன், அவன் தான் அரசு. அவன் முகத்தில் துளியும் மலர்ச்சியில்லை. எப்போதும் போல ‘தனக்கு மட்டும் ஏன் இப்படி?’ எனும் கழிவிரக்கம் அவனை இப்போதும் தின்றுக் கொண்டு இருந்தது.

இன்று வரை அவன் விரும்பியது போல அவனது வாழ்வின் நிகழ்வுகள் அமைந்ததில்லை என்பதே அவனது மன ஆதங்கம். தனது இருபது வயதிற்குரிய துறுதுறுப்பு எதுவும் இல்லாமல் இறுகிப் போய் சலிப்பாய் அமர்ந்திருந்தான். விடை தெரியாத கேள்விகள் பல அவன் தலைக்குள் வண்டாய் குடைந்தன.

கடந்த நாட்கள் முழுக்க மௌனத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டவனாக கல்லூரிக்கு வருவதை தவிர்த்து வீட்டில் இருக்க முடியாமலும், கல்லூரிக்கு வந்த பின்பும் போட்டியை சென்று கண்டு களிக்க முடியாமலும் போட்டி நேரம் முழுக்க கல்லூரியின் அந்த ஆளண்டா பகுதியில் ஒதுங்கி அமர்ந்திருப்பவனை அவனது நட்புக்கள் தனிமையில் விடாது கூடவே இருந்தனர்.

அரசுவின் எத்தனை எத்தனை பிரச்சனைகளிலும் இது நாள் வரையில் அவனை மனம் தளராமல் வைத்திருப்பது அவனது பள்ளிப் பருவ நட்புக்களான கவின், ரமேஷ், சுப்பு அலையஸ் சுப்ரமணி மற்றும் செழியன் ஆவர். உடன் பிறப்புகள் அற்றவர்க்கு இப்போதெல்லாம் நட்புக்கள் தானே உடன்பிறப்புகளாக திகழ்கின்றனர்?! அவனுக்கு அவர்களும் அப்படித்தான்.

இரண்டாம் வருட மாணாக்கர்களான அவர்களோடு கூட முதல் வருடத்து மாணாக்கர்களான பரசு மற்றும் ஸ்டெஃபினும் அங்கு அமர்ந்து இருந்தனர். அவர்களுக்கு அரசு மீது ஏதோ ஒரு வகை கதாநாயக பிம்பம் அது தந்த ஈர்ப்பு  எனவே, தானாகவே வந்து இக்கூட்டத்தில் இணைந்துக் கொண்டிருந்தனர்.

தங்களது முதலாண்டு மாணாக்கர்களின் குழுக்களுக்கும் அவர்கள் செல்வார்கள் தான்.ஆனால், இன்று கல்லூரி வந்ததும் திடலில் கால்பந்தாட்ட விளையாட்டின் ஆரம்பம் பார்த்து விட்டு சலித்துப் போய் திரும்பி வந்து இங்கு இவர்களொடு அமர்ந்திருந்தனர்.

“அந்த வெள்ளப் பன்னி… அவனுக்கு விளையாடவே தெரியலை, எப்படிடா அவன் செமி ஃபைனல்ல போய் இப்படி சொதப்பி வைக்கிறான்?”பொருமினான் ஸ்டெஃபின்.

“லூசுப்பய, நல்லா இருந்த டீம்ல வம்படியா அரசுவை நீக்க வச்சு அவனே புகுந்துக்கிட்டான், விளையாடத் தெரிஞ்சா விளையாடணும் இல்லைனா சும்மா இருக்கணும்.” இப்போது ரமேஷ்.

யாரைப்பற்றி பேசுகிறார்கள் எனத் தெரிந்து இருந்ததால் தனது மனப் போராட்டத்தை சமப்படுத்த கையில் இருந்த பந்தை தரையில் வீசி எறிந்து, பிடித்து என கவனம் திருப்பிக் கொண்டு இருந்தான் அரசு.

“விடுங்கடா…” பேசாதீர்கள் என அரசுவை நோக்கி கண்ணைக் காட்டி தடுத்துப் பார்த்தான் செழியன். ஆனால், யாரும் அதனை கவனிப்பதாக இல்லை… தங்கள் கல்லூரி இம்முறை தோற்று விடும் எனும் ஏமாற்றம் அவர்களை சூழ்ந்திருந்தது.

“இந்த வருஷம் இல்லைனா, கப் (cup) அடுத்த வருஷம் ஜெயிச்சுக்கலாம் விடுங்கடா” கவின் ஆற்றுப் படுத்த முயன்றான்.

“எங்கடா? என்னத்த விடுறது @@@###” கோபம் தீர சில கெட்ட வார்த்தைகளை முணுமுணுத்தான் பரசு. கூடவே மற்றவர்களும் அவனோடு சேர்ந்துக் கொண்டனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு நிகழ்ந்தவைகள் அவர்கள் மனதினை விட்டு இன்னும் அகன்று இருக்கவில்லை.

அன்று வழக்கம் போல அரசுவும் அவனது குழுவும் பயிற்சியில் ஈடுபட்டிருக்க, திடீரென அவர்களுக்குள் சலசலப்பு. அரசு அவர்கள் குழுவில் இருந்த ஒருவனை நையப் புடைத்துக் கொண்டு இருந்தான்.

அடி வாங்கியவனது மூக்கு உடைந்து இரத்தம் கொட்டிக் கொண்டு இருந்தது. கல்லூரி முடிந்த பின்னதான பயிற்சி நேரம் என்பதால் சுற்றிலும் வெகுவான ஜனங்கள் இல்லை. ஆனால், பிரின்ஸிபல் அதுவரைக்கும் அங்கே தான் இருந்தார் என்பதால் அந்த விஷயம் உடனே கவனத்தில் எடுக்கப் பட்டது.

அரசுவின் அம்மாவும், மாமாவும் விரைந்து வர அரசுவிடம் விசாரணை செய்தனர்.

“அவன் தப்பா பேசுனான் சார் அதனாலத்தான் அடிச்சேன்” எஃகாய் நின்றான் அரசு, அவனிடம் குற்ற உணர்வோ, தாழ்மையோ இல்லை.

அரசுவின் மாமா மாறன் அவர்களது ஊரின் பெரியதொரு கட்சியின் அலுவலகத்தில் தலைமைப் பதவியில் இருப்பதால் அவரது பேச்சிற்கு மதிப்புக் கொடுத்து பிரின்ஸிபல் உடபட அனைவரும் தயங்கி நின்றனர்.

மற்றவர்கள் தண்டிக்கும் முன் அனைவர் முன்பும் மாறன் தங்கை மகனை இரண்டு அறைகள் விட்டான். அரசுவோ தன் மாமாவிடம் அடி வாங்கினானே ஒழிய, அதற்காக கலங்கவெல்லாம் இல்லை. தான் செய்ததில் தவறில்லை என்பதையே மனதில் உருவேற்றிக் கொண்டு இருந்தான்.

“பாருங்க சார், அத்தனை மோசமா அந்த பையனை அடிச்சுட்டு, தான் செஞ்ச தப்புக்கு உங்க வீட்டுப் பையன் சாரி கூட சொல்ல மாட்டேங்கிறான்? இப்படிப்பட்ட ரவுடித்தனமான பையனுங்களை எல்லாம் எப்படி சார் காலேஜ்ல வச்சுக்கிறது? இதைப் பத்தி தெரிஞ்சா மத்த பேரன்ட்ஸ் பயப்படுவாங்க தானே? இப்பவே டி சி வாங்கிட்டு பையனை அழைச்சுட்டு போயிடுங்க சார்”பிரின்ஸிபல் தீர்மானமாகச் சொன்னார்.

அரசுவின் தாய் தெரசா “ப்ளீஸ் சார், அவன் படிப்பு வீணாகிடும்”இறைஞ்சிக் கொண்டிருந்தார் …அவரே தொடர்ந்து…

“அவன் நல்ல பையன் தான் சார், சும்மாவாச்சும் யாராவது அவனை சீண்டி விட்டுருப்பாங்க இல்லைனா…”

தங்கையை பேச விடாமல் குறுக்கே மறித்தான் மாறன்.

“இப்ப அவங்க என்ன சொல்லிட்டு இருக்காங்க? நீ என்ன உன் புள்ளயப் பத்தி சொல்லிட்டு இருக்க? ஆங்க்” கர்ஜித்தான்.

“……”

“உன் புள்ள நல்ல புள்ளயா இருந்தா நாம இங்க வந்து நிக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.. என்ன புரியுதா?” இன்னும் அலறினான்…தொடர்ந்து,

“கொஞ்ச நேரம் சும்மா இரு… நான் பார்த்துக்கிறேன்” தாயை மாமா திட்டுவது பிடிக்காமல் வெறுப்பாய் பார்த்துக் கொண்டிருந்தான் அரசு.

யார் யாரிடமோ பேசி, என்னென்னமோ செய்து அரசுவை கல்லூரியை விட்டு நீக்கும் நிலைமையை மாற்றி, அதற்குப் பதிலாக அவனை கல்லூரி சார்பாக எந்த விளையாட்டிலும் பங்கேற்கக் கூடாதென கல்லூரி நிர்வாகம் தடை விதித்தனர்.

தான் கல்லூரி வருவதே இந்த விளையாட்டுக்களுக்காக என்றிருக்க அதையும் தன்னிடம் இருந்து பிரித்த உணர்வில், ‘இதற்கு தன்னை கல்லூரியில் இருந்தே நீக்கி இருக்கலாம்’ என வருந்தினான் அரசு. அதன் பின் என்ன? யார் திட்டத்தால் இது நிகழ்ந்ததோ அந்தக் குழுவினர் கால்பந்தாட்டக் குழுவில் இணைந்து இப்போது விளையாடிக் கொண்டு இருக்கின்றனர்.

அவரவர் சிந்தனையில் அவரவர் மூழ்கி இருக்க, திடலினின்று பெருத்த ஆரவாரம் எழவும் போட்டியின் இறுதிப் பகுதி போலும் என உணர்ந்துக் கொண்டனர்.

சற்று நேரத்தில் அறிவிப்புகள் வெளியிடப்பட அவர்களது கல்லூரியின் அணி தோல்வி பெற்றிருந்தது. கால்பந்தாட்ட அரை இறுதிச் சுற்று விளையாட்டு முடிவடைந்ததை தொடர்ந்து திடலிலிருந்து சாரம் சாரமாய் மாணாக்கர்கள் வெளியே வர சிலர் அவர்களையும் கடந்துச் சென்றனர்.

அவர்கள் இது நேரம் வரை விவரித்த அந்த வெள்ளைப் பன்னி அ.கா சுரேந்தர்  விளையாட்டு உடையோடு வியர்த்து வழிந்தவனாக ஏதேச்சையாய் இவர்கள் இருந்த பகுதியை கடந்துச் செல்ல அவனைக் கண்டதும் பொறுமையிழந்த சுப்பு…

“ஒவ்வொருத்தனுங்களுக்கு அடுத்தவன் வாழ்க்கையில் விளையாடத் தெரியுற அளவுக்கு ஃபுட்பால் விளையாடத் தெரியிறதில்ல என்னடா கவின்?” என்றான்.

அங்கே சண்டை மேகம் சூழும் அபாயம் எழுந்தது. சுரேந்தரின் பின்புலம் அறிந்த அவனது வகுப்பு மாணாக்கரான ஸ்டெஃபினும், பரசுவும் தங்கள் வாயில் பசை போட்டாற் போல மூடிக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர வாய்ப்புத் தேடினர்.

சுப்புவின் சீண்டலைக் கேட்டதும் சென்றுக் கொண்டிருந்தவன் நின்று திரும்பினான்.

“எவன்டா அவன்? யாரடா சொல்லுற நீ?”

ஏற்கெனவே, விளையாட்டில் தோல்வியுற்றதில் அனைவரும் வெகுவாக இகழ்ந்து பேசி இருக்க, குறிப்பாய் சிலர் இவனுக்குப் பதிலாக அணியில் அரசு இருந்திருந்தால் வெற்றிப் பெற்றிருக்கலாம் எனச் சொல்லி இருக்க தனது ஈகோ சீண்டப்பட்டு இருந்தவன் அழைத்தது யாருடைய நண்பன் எனத் தெரிந்து இருந்ததனால் வாய்ப்பு கிடைத்தது எனத் துள்ளினான்.

சுப்புவோடு, செழியனும் பதில் கொடுத்தவாறு முன்னேறிச் செல்ல ரமேஷ் அங்கு சண்டை நிகழாமல் செய்ய முயன்றான்.“சும்மா இருங்கடா டேய்” கவின் எத்தனையோ முறைகள் சொல்லியும் பலனில்லை. வாய்த் தகராறு முற்றியதால் அங்கு சத்தம் கேட்டதும் வேடிக்கைப் பார்க்க சிலர் கூட தொடங்கினர்.

காரசாரமான விவாதம் தொடர அரசுவிற்கோ தன்னால் தன் தோழமைகள் எந்த பிரச்சனைக்குள்ளும் சிக்குவது பிடிக்காதவனாக தன் நட்புக்களிடம்,

“டேய் சும்மா இருங்களேன்டா”என்றவன், எதிரில் நின்றவனிடம்

“இவனுங்க உன் பேரைச் சொல்லியா எதையும் சொன்னானுங்க, வழியில் போயிட்டு இருந்தவன் அப்படியே போக வேண்டியது தானே? எதுக்கு திரும்பி வந்து வம்பு இழுக்கிற?”என கேட்கவும்…

“டேய் நான் உன் கிட்ட எதுவும் பேசலை… நீ என் கிட்ட எதையும் கேட்கவும் வேணாம் புரியுதா?”

வன்மம் அனைத்தையும் வார்த்தைகளில் திரட்டி,

“போடா போடா டேய் கீப்புக்கு பொறந்தவனே”கூறவும்…

அதன் பின்னர் அரசுவை கட்டுப்படுத்த அங்கிருந்தவர்களால் இயலாமல் போயிற்று.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here