மனச் சோலையின் மழையவள்_3_ஜான்சி

0
656

அத்தியாயம் 3

தென் தமிழகத்தில் ஒரு கிராமம்

படிப்பிற்குப் பெயர் போன அந்த ஊர் வளமையானது என்பதற்கு அதன் வரிசையான தெருக்களின் இருமருங்கும் இரண்டடுக்கும் மூன்றடுக்கு வீடுகளுமாக நிமிர்ந்து நிற்கும் கட்டிடங்களே சாட்சி பகிர்ந்தன. “திரைக் கடலோடியும் திரவியம் தேடு” எனும் முதுமொழியை தமக்காகவே சொல்லப் பட்ட ஒன்று என்று நம்பும் அந்த ஊரின் பெருவாரியான ஆண்மக்கள் பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து சேர்த்த செல்வங்கள் அனைத்தும் உயர்ந்த வீடுகளாக மட்டும் பரிணமித்து நில்லாமல் தத்தம் தாய், மனைவி மகள்களை நகைக் கடைப் பொம்மை போல கழுத்து நிறைக்க உருக்கி வடிவமைக்கப் பட்ட தங்கம் சுமப்பவர்களாக மாற்றி இருந்ததிலும் வெகுவாக வெளிப்பட்டது.

அவ்வூரின் சமமான எண்ணிக்கையில் இருந்த கிறிஸ்தவ மற்றும் இந்து மக்கள் ஒற்றுமைகளை அவ்வூரின் இரு பெரும் விழாக்களான மாதா திருவிழா மற்றும் வினாயகர் விழா இரண்டிலும் ஒருவரை ஒருவர் அரவணைத்துச் செல்லும் விதத்திலேயேக் காணலாம்.

மதம் தாண்டி பெண் எடுத்து, கொடுத்து என்று உறவு முறைகளில் இருக்கும் மக்கள் என்பதால் அங்கே மதரீதியான பிணக்குகள் முற்றிலும் இல்லை என்பதே உண்மை.

அந்த ஊரில் தண்ணீர் பிரச்சனை உண்டு. விலை கொடுத்து வாங்கும் தண்ணீரில் தான் குடிக்கவும், சமைக்கவும், செலவழிக்கவும் செய்வார்கள் எனும் நிலை என்று சத்தியம் செய்தாலும் நம்ப இயலாதவண்ணம் மக்களின் பராமரிப்பில் ஊர் மரங்கள்,செடிகள், கொடிகள் என பச்சை பசேலென இருந்தது.அதே நேரம் நாங்கள் விவசாயத்தை கைவிட்டு மாமாங்கம் ஆகிற்று என்பதைச் சொல்லும் வண்ணம் அங்கு ஆடு, மாடுகள் எவற்றையும் சாதாரணமாக காண இயலவில்லை.

விவசாய நிலங்களில் வீடுகட்டி குடியேற ஆரம்பித்து இருந்தனர்.தண்ணீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியவில்லை. விவசாயம் செய்யாததால் வீட்டுமனைக்கு விற்றுவிட்டோம் எனச் சொல்ல ஆயிரம் காரணங்கள் இருந்தும், வெளிநாட்டு வேலைகளில் இலயித்து விட்டதால் வைட் காலர் வேலைகள் செய்ய ஆரம்பித்து விட்டதால், ‘பண வரவிற்கு உத்தரவாதம் இல்லாத நஷ்டப்படுத்தும் விவசாயம் எதற்கு?’ என்று சேற்றுக்கும் சகதிக்கும் உள்ளே அங்கு எவரும் பணி புரிய விரும்பவில்லை என்பதே நிதர்சனம்.

அந்த ஊர் மலைத் தொடரின் அருகே அமைந்து இருந்ததால் மின்காற்றாடிகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஏராளமான பிரமாண்ட காற்றாடிகள் அங்கே காணக் கிடைப்பதுண்டு.

அங்கிருந்த அமைப்பான தெருக்களில் வலப்பக்கம் நுழைந்தோமானால் சுற்றிலும் இருந்த புதிதாகக் கட்டப்பட்ட பல மாடிக் கட்டிடங்கள் போலல்லாமல் அந்த ஒரே ஒரு வீடு மட்டும் சற்றுக் களையிழந்து, பழைய ஓட்டு வீடு முறையில் இருப்பதை காணலாம்.

அமர்ந்துக் கதை பேச என அந்த வீட்டின் முன்புறம் நுழைவாயில்  அடுத்து முற்றத்திற்கு சற்று இடம் விட்டு அமைந்து இருந்தது. வீட்டின் பின்பகுதி விஸ்தாரமாக இருக்க அங்கே ஒரு கிணறு சுற்றிலும் மரங்கள் என காற்று தாராளமாக புழங்கிக் கொள்ளும் வண்ணம் இருந்தது.

சுற்றுபுறத்தின் அமைதியை கெடுப்பது போன்று அந்த வீடு அதிர, அதிர ஏதேதோ நொறுங்கும் சப்தங்கள் கேட்டன. அக்கம் பக்கத்தவருக்கு அந்த சப்தங்கள் வழமையானவை என்பதால் யாரும் அங்கு நிகழ்ந்த எதனையும் கண்டுக் கொள்ளவில்லை.

பின் வாசலில் இருந்த அந்த முருங்கை மரத்தின் கிளைகளையெல்லாம் தனது ஆத்திரம் தீர அரிவாளால் வெட்டி சாய்த்து விட்டு வந்தவன் வீட்டிலுள்ள பொருட்களை அப்போதுதான் நொறுக்க ஆரம்பித்து இருந்தான்.

வீட்டின் சப்தம் தூரம் வரையிலும் கேட்க, யார் மூலமோ விபரம் தெரிந்து தங்கை வீட்டிற்கு வந்த மாறன் அரசுவை அடித்து கட்டுப் படுத்த முயன்றான். அவனை எங்கே அடித்து உடனே அடக்குவது? அது நடக்கின்ற செயலா என்ன?

இதுவரையில் தனது ஆத்திரங்கள் தீர உடைத்து நொறுக்கியது போதுமென்று தன்னை அடித்தவனை முறைத்துக் கொண்டு அரசு அங்கே நின்றுக் கொண்டிருந்தான்.

வீட்டினுள்ளே நொறுங்கிக் கிடக்கும் ப்ளாஸ்டிக் நாற்காலித் துண்டுகளை அவை யார் காலிலும் பட்டு காயம் ஏற்படுத்தி விடாதபடிக்கு கவனமாய் பொறுக்கிக் கொண்டு இருக்கும் தன் தாயை அரசு வெறித்துப் பார்த்தான்.

‘தெரசா, பெரிய அன்னை தெரசான்னு நினப்பு, யார் எப்படி ஆட்டி வச்சாலும் ஆடுறது?’

தங்கையை அவன் முறைப்பதை அவதானித்த அவனருகில் இருந்த மாறன், “என்னல? என்ன திமிரு உனக்கு?” அவனை அடிக்க கை ஓங்கிக் கொண்டு வந்தான்.

“விட்ருண்ணே” மகனை ஏற்கெனவே அண்ணன் அடித்து அவன் உதடுகள் வீங்கி இருக்க, இன்னும் அடித்து விடக் கூடாதென தெரசா நடுவில் வந்து நின்றாள். இதோ அவளுக்காகத்தான் அவள் மகன் அரசுவை அண்ணன் அடித்ததுவும் கூட ஆனால், தாயாயிற்றே அவளால் அவன் மகனை அடிப்பதைப் பார்த்து பொறுக்க முடியவில்லை.

“சரி என்னமோ போ, என் கண்டிப்பில வளர்ந்திருந்தா இவன் இப்படி ஆகிருப்பானா? நடக்குறதுக்கு எல்லாம் நீ கொடுத்த செல்லம் தான் காரணம். இனி என்ன பிரச்சனை வந்தாலும் என்னை மட்டும் கூப்பிடக் கூடாது சொல்லிட்டேன்” தனது ஈகோ சீண்டப்பட்டவனாக மாறன் விருட்டென்று அங்கிருந்து நகர்ந்துச் சென்றான்.

அதுவரை காயம் பட்ட சிறுத்தையாக உறுமிக் கொண்டிருந்த அரசுவின் பார்வை அங்கே புகைப்படத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் அம்மம்மா (அம்மாவின் அன்னை) புகைப்படம் நோக்கித் திரும்பியது. சற்று நேரம் அதனையே உறுத்துப் பார்த்தான்… அவர் சில மாதங்கள் முன்பு இறக்கும் வரையிலும் கூட அவன் அவருடன் ஒரு நாளும் சண்டையிடாமல் இருந்ததே இல்லை எனலாம்.

“எங்கம்மா வாழ்க்கையை கெடுக்க உனக்கு என்ன உரிமை இருக்கு?”

பேரனின் கேள்விகளில் நியாயம் இருந்ததாலேயே அவர் அவனுக்கு பதில் சொல்வதை நிறுத்தி இருந்தார். மற்றபடி என்ன காரணம் சொன்னாலும் அவன் கேட்பதாகவும் இல்லையே?

தன் கோபம் இப்போது அனைத்திற்கும் ஆரம்ப புள்ளியாய் இருக்கும் தற்போது இல்லாமல் போன அம்மம்மா மீது திரும்ப,

“எல்லாம் இந்த கிழவியால வந்தது, அதுக்கு ஒரு போட்டோ போட்டு நடுவீட்டுல வச்சிருக்க நீ” ஆத்திரத்துடன் புகைப்படத்தை நோக்கி பாய்ந்தவனை பேசி தடுக்க முடியாது என அறிந்தவளாக தெரசா நடுவில் பாய்ந்து அந்த புகைப்படத்தை மறைத்து நின்றுக் கொண்டாள்.

புகைப்படத்தை மறைத்து நிற்கும் தெரசா 20 வயது இளைஞனுக்கு தாய் எனச் சொல்ல முடியாத அளவிற்கு இளமையாய் இருந்தாள். ஆம், இன்னும் அவள் வயது நாற்பதை எட்டவில்லையே? அப்படி இருக்க எப்படி வயதானவளாக தோற்றமளிக்க முடியும்?

விபரம் புரியாத வயதில் தன் தாய்ச் சொல்லை தட்டக் கூடாதென தலையை ஆட்டியதன் விளைவு இப்போது அவளின் எதிரில் உறுமிக் கொண்டிருக்க அவளால் இப்போதும் தான் என்ன செய்து விட முடியும்?

அம்மம்மாவின் புகைப்படத்தை அடித்து நொறுக்க முடியாத ஆத்திரத்தில் மேல்மூச்சு வாங்க கோபத்தில் நின்றவனை சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் தெரசா. புகைப்படத்தை உடைத்தெரிய நினைத்தவன் தாய் அதனை மறைத்து நின்றதும் என்னச் செய்வது எனப் புரியாமல் அங்கிருந்து நகர்ந்தான்.

புலியின் உறுமல் அவனது மூச்சில் தெரித்தது.

வழக்கம் போலவே தெரசா தனது வாயைத் திறந்து மகனை ஒன்றும் கூறவில்லை. மனதிற்குள் மகனுக்கான பிரார்த்தனைகள் உருண்டுக் கொண்டு இருந்தனவோ?

“மாமாவ என்னை அடிக்க விட்டுட்டு பார்த்துட்டு இருந்தில்ல?”

மகன் தாயிடம் விரல் நீட்டி பேச, இவள் மனமோ விட்டுப் போயிற்று. கண்ணில் கண்ணீர் சேர்ந்தும் அது கண்ணை விட்டு இறங்கவில்லை.

‘அவளைச் சூழ நிற்கும் பிரச்சனைகள் ஒன்றா இரண்டா? எதற்கெல்லாம் அழுவதாம்?” அதனால் அவள் கண்ணீருக்கு விடுப்பு விடுத்து வெறித்த பார்வையை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு மிகுந்த நாட்களாகிற்று.

என்னதான் அரசு கத்தினாலும் தாய் மேல் கை ஓங்குவது எனும் அற்பச் செயல்கள் செய்ததில்லை என்பதால் தாயிடம் மேலும் அநாவசியப் பேச்சுக்களைத் தொடராமல் அவசர அவசரமாக முகம் கழுவி வேறு உடை மாற்றி அங்கிருந்து நகர்ந்து விட்டான்.

அவன் தனது இருபது வயதிலேயே வயதிற்கு அதிகமான சிந்தனைகள் கொண்டவன் மற்றும் தனது வயதிற்கேற்ற முழுமையான உடல் வளர்ச்சியை அடைந்து விட்டான் என்பதால் தோற்றத்தில் முழு ஆண் மகனாக பரிணமித்தான். அவனது உடை அணியும் விதம், நடை, பேச்சு எல்லாவற்றிலும் மிகுந்த நேர்த்தி தெரியும். தனது இளம் பருவத்திலிருந்தே எல்லோருடனும் இலகுவாக பழக இயலாத கடினமான குணம் அவனுடையது.

விரும்பியோ விரும்பாமலோ தகப்பன் சூர்யாவின் அத்தனை வசீகர பாவனைகளையும், தோற்றத்தையும் அவன் பெற்றிருந்தான். தனது டீ ஷர்ட் காலரை பின்னங்கழுத்தில் இழுத்து விட்டுக் கொண்டு விடுவிடுவென்று அங்கிருந்து நகர்ந்தான்.

மகன் கடந்துச் சென்ற வேகத்தில் அவனது நடையுடை பாவனைகளில் கணவனைக் கண்டதும் தெரசாவிற்கு கணவன் ஞாபகம் எழுந்து அதனால் காதல் பொங்கி எழுந்ததென எல்லாம் கூறவே இயலாது. அப்படி பொங்கி எழும் படி அவர்களது திருமணம் காதல் திருமணமாக நடந்திருக்கவும் இல்லை. காதலாக அவர்கள் வாழ்ந்திருக்கவும் இல்லை.

தான் மறைத்து நின்ற தன் அம்மாவின் புகைப்படத்தினின்று விலகி நின்ற தெரசா தாயின் புகைப்படத்தை நிமிர்ந்துப் பார்த்தாள். அந்தப் பார்வையிலும் அதே வெறுமை புன்னகை. அது தவிர்த்து மற்றவருக்கு கொடுக்க அவளிடம் எதுவுமே இல்லை. என்னதான் செய்வதாம்?

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here