மனச் சோலையின் மழையவள்_4_ ஜான்சி

0
667

அத்தியாயம் 4

தெரசாவிடம் இருந்ததெல்லாம் கடந்த காலத்து நினைவுகள் மட்டுமே…

“இப்படி ஆகும்னு நான் நினைச்சு கட்டிக் கொடுக்கலியம்மா… எம்புள்ள வாழ்க்கையே வீணா போயிடுச்சே”

சாகுமளவும் புலம்பிக் கொண்டே குற்ற உணர்ச்சியில் இறந்த தாயின் மீதோ, தன் வாழ்க்கையில் விருப்பம் போல விளையாடிய பலர் மீதோ எவர் மீதும் அவளுக்கு எள்ளளவும் கோபம் உட்பட எந்த உணர்வுமில்லை.

எல்லாவற்றிற்கும் எதிர்வினையாகி நிற்கும் தன் மகன் வாழ்க்கை குறித்து மட்டுமே தற்போதைய அவளுடைய கவலைகள் எல்லாம்.

தெரசா மற்றும் மாறனின் தாய் அமலியின் பெற்றோர் சிறுவயதில் மறைந்து விட, தனது அண்ணன் அண்ணி இவர்களின் பாதுகாவலில் வளர்ந்தவர்.

தாய் தந்தையற்றவர் வாழ்வு எப்படி இருக்கும்? என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன? அண்ணி ஆதிக்க குணத்தவளாக இருக்க, மனதின் துயர் வெளியே காட்டவும் இயலாத அடிமை போல பல்வேறு மனக்கஷ்டங்களோடு தான் அமலி அங்கே வளர்ந்திருந்தார்.

தாய் தந்தை தவறி விட்டிருந்தாலும் தமக்கென்ன என தங்கள் பொறுப்பை அமலியின் அண்ணன் தட்டிக் கழிக்காமல் தங்கைக்கு திருமணம் செய்வித்து இருந்தார். அதனால் அமலிக்கு கிடைத்ததோ மனம் நிறைந்த வாழ்க்கை.

அமலியின் அண்ணன் அண்ணிக்கு அமலிக்கு திருமணம் செய்வித்ததன் மூலம் ஒருவேளை தங்கள் கடமை தீர்ந்தது எனும் உணர்வு இருந்திருக்கலாம். ஆனால், அமலிக்கு தான் பிறந்து வளர்ந்த ஊரிலேயே வரதட்சணை எதிர்பார்க்காத நல்ல குணசாலியான கணவன் அமைந்து விட்டதென மட்டற்ற மகிழ்ச்சி. அமலியின் புகுந்த வீடு சற்றுப் பெரியது, அவர்களது வீடும் கூட இரண்டடுக்குடன் இருந்தது செல்வாக்காக இருந்த வாழ்ந்துக் கெட்ட குடும்பம்.

வருடங்கள் கடந்து அமலி தனது குடும்ப வாழ்வில் மாறன், தெரசா, என இரு பிள்ளைகளுக்கு தாயாகி நல்லதொரு குடும்ப வாழ்வை கணவனோடு வாழ்ந்த போதிலும் எப்போதும் தனக்கு நல்லதொரு மணவாழ்க்கை அமைத்து தந்த ஒரு செயலுக்காகவே அண்ணி செய்த கொடுமைகள், புறக்கணிப்புகள் எல்லாம் மறந்து விட்டிருந்தார்.

தனது மனதின் நன்றியுணர்வின் காரணமாக தன் அண்ணன் குடும்பத்திற்கு தேவை ஏற்படின் எந்த விஷயமானாலும் செய்யலாம் என்பதான கண் மண் தெரியாத பாசம் கொண்டவராக இருந்தார்.

அமலியின் குடும்பம் ஓரளவிற்கு நல்ல நிலைக்கு வர ஆரம்பித்து இருந்தது. அதே நேரம் அவரது அண்ணனும் அண்ணியும் கடந்த சில வருடங்களாக ஒரு சில வியாபாரங்களில் கால் பதிக்க, செல்வத்தில் கொழிக்க ஆரம்பித்திருந்தனர். அச்செல்வத்தின் செருக்கில் தங்களது ஒரே மகனான சூர்யாவிற்கு அதீத செல்லம் கொடுத்தும் வளர்த்தனர். சூர்யாவிற்கோ தாம் கேட்டவையெல்லாம் உடனே கையில் கிடைக்க, கேளாமலேயே பலதும், பலவிதமாகவும் பழகிக் கொண்டான். அவனுக்கு இல்லாத கெட்ட பழக்கம் என்று ஒன்றுமே இல்லை எனும் நிலை வந்திருந்தது.

பெண்கள் சகவாசம், குடி, சிகரெட் என தன் போக்கில் வாழ்ந்துக் கொண்டிருந்தவன் தனது 25வது வயதில் கீதாவை பார்த்ததும் ஜென்ம சாபல்யமடைந்தவனைப் போலானான். அவனது நடவடிக்கைகளில் பற்பல மாற்றங்கள் ஏற்பட்டன.

கீதாவோ வேற்று மாநிலத்துப் பெண். வேலை நிமித்தம் அவர்கள் ஊரில் வந்து வாடகை வீடெடுத்து தன் தோழிகளுடன் தங்கி இருக்க சூர்யாவின் பெற்றவர்கள் மனம் மகன் கெட்டழிந்த போது கூட இவ்வளவாக மனம் வருந்தி இருக்கவில்லை. தனது மகன் வேற்று மாநிலத்துக்காரியை திருமணம் செய்யப் போகிறான் என்றதும் வெகுண்டெழுந்தனர்.

தான் கீதாவை திருமணம் செய்துக்கொள்ளப் போவதாக சூர்யா உறுதியாகக் கூறியதும் அவர்கள் தாம் தூமென குதித்தனர். பெற்றவர்கள் பாசம் மட்டுமல்லாது கெடுபிடியும் அறிந்திருந்தவன் கீதாவை விட்டுக் கொடுக்க முடியாதென அறிந்து தற்கொலைக்கு முயன்றான். எப்படியும் நம்மை காப்பாற்றி விடுவார்கள் எனும் முன் திட்டத்தில் பிறர் கண் முன்பாகவே வீட்டிலிருந்த மாத்திரைகளை அள்ளி விழுங்கி வைக்க, இலபோ திபோவென வயிற்றில் அடித்துக் கொண்டு அவனை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து பிழைக்க வைத்தனர்.

அத்தனை களேபரமான சூழ்நிலையிலும் அவனது பெற்றோர்கள் சூர்யா உடல் நிலை தெளியும் முன் செய்ய வேண்டியவற்றை திட்டமிட ஆரம்பித்தனர். அதுவரையிலும் அவர்கள் குடும்பத்தில் அடிக்கடி வந்து போய் இருந்தாலும் கூட அவர்களால் மனுஷியாகவே மதிக்கப்படாத அமலி மேல் அவர்களுக்கு திடீரென பாசம் பொங்கிற்று. ஆம், பலி கொடுக்கத் தகுந்த ஆடொன்று அமலியின் வீட்டில் உள்ளதல்லவா?

அந்த நாட்களில் பன்னிரண்டாவது படித்து முடித்து மேல்படிப்பிற்காக தகப்பனிடம் தெரசா பேசி வைத்திருந்தாள். படித்து நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது அவளுடைய வெகுநாளைய அவா.

அம்மா அமலி ஒரு வகை பிற்போக்குவாதி என்றால் அப்பா செல்வராஜ் அதற்கு மேல் பிற்போக்குவாதி. கணவன் மனைவிக்குள் ஆயிரம் பேதங்கள் இருப்பினும் பெண்களை படிக்க வைத்தால் அதிக வரதட்சணைக் கொடுத்து கட்டிக் கொடுக்க நேரிடும் என்பதால் அதிகம் படிக்க வைக்கக் கூடாது என்பதில் மட்டும் இருவரும் உறுதியாக இருந்தனர்.அவர்களது ஊரின் நிலையும் அதுதானே?

திருமணத்திற்கு வரதட்சணையாக ஏழை எளிய மணமகனுக்கே 40-50 பவுன் தங்கமெல்லாம் கொடுப்பது எனும் நிலை இருக்க, படிக்கவும் வைத்து அதற்கு தக்க பவுனும் சேர்ப்பது சாத்தியமா? என பெற்றவர்கள் தீவிர யோசனையில் இருந்தனர்.

“நான் அஞ்சாம் வகுப்புதான் படிச்சேன் மோளே, நீ பத்தாவது படிச்சிருக்க இதுவே பெரிய விஷயம். இனி உன் பிள்ளையை அதுக்கு மேல படிக்க வைச்சுக்கோ.” என்று முரண்டியவரிடம் போராடியல்லவா அவள் தனது பன்னிரண்டாவது படிப்பை முடித்திருந்தாள்.

அன்று…

மாடியறையில் கட்டில் மேல் அமர்ந்து எதையோ கிறுக்கிக் கொண்டு இருந்த தெரசாவை அணுகினார் அமலி. கட்டிலின் கீழே அவர்களது வளர்ப்பு பூனைகள் இரண்டும் கட்டிப் புரண்டு சண்டை போட்டுக் கொண்டிருக்க அவற்றை திட்டி குரல் கொடுத்தவள் தன்னருகே அமர்ந்த அன்னையின் நோக்கத்தை அறிந்திருக்கவில்லை.

“சூர்யா அத்தானை கட்டிக்க தெரசா?” அம்மா தலையும் வாலும் இல்லாமல் சொல்ல,

தாயின் கூற்றில் “என்னது?” என அதிர்ந்தவளின் சின்ன மூளைக்குள்ளே கடந்த நாட்களின் விஷயங்கள் சுழன்றடித்தன. ‘சூர்யா அத்தான், யாரையோ காதலிச்சு அதுக்காக மாத்திரைலாம் சாப்டாங்க, இப்பதானே ஹாஸ்பிடல்ல இருந்து டிஸ்சார்ஜ் ஆனாங்க?” இடறல் ஆரம்பித்தது.

“அம்மா, உனக்கு அறிவிருக்கா? எனக்கு இன்னும் 18 வயசு கூட முடியலை, நானே இன்னும் நிறைய படிக்கலாம்னு இருக்கேன். அதுக்குள்ள கல்யாணப் பேச்செல்லாம் பேசுற நீ?”

அம்மா மூக்குறிஞ்ச ஆரம்பித்தார், “வேற ஒருத்தி எங்கண்ணன் வீட்டில மருமகளா வந்ததுக்கு அப்புறம் நான் அங்க உரிமையா போகத்தான் முடியுமா? வரத்தான் முடியுமா?”

“அதான் தினமும் போய்ட்டும் வந்துட்டும் தானே இருக்காங்க, இப்ப என்ன புதுசா?” தினம் தினம் மாமா வீட்டிற்கு ஓடோடிச் சென்று வந்துக் கொண்டிருக்கும் அம்மா திடீரெனெ புலம்பவும் தெரசாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

தன் வயதிற்கு மீறி தனக்கு முரணானவைகளாக பட்ட அனைத்தையும் குறித்து பேசினாள். இந்த வயதில் தனக்கு திருமணம் வேண்டாம், படிக்க வேண்டும் என எடுத்துரைத்தாள்.

சூர்யாவின் பழக்க வழக்கங்கள், காதல் என தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் தாயிடம் சொல்லி பார்த்தாள் எதையுமே காதில் ஏற்றிக் கொள்ளாமல் மகள் மனதை மாற்ற வேண்டும் என்பதிலேயே முனைந்திருந்தார் அமலி. மகளை மேலும் படிக்க வைக்க விருப்பப் படாத செல்வராஜீக்கும் இந்த திருமண ஏற்பாடு பிடித்து இருந்தது.

அவளது எதிர்காலத்தை சொல்லுவது போன்று கட்டிலின் கீழே விளையாடிக் கொண்டு இருந்த பூனையொன்று தெரசாவின் குதிங்காலை கடித்து வைத்தது. பதறி எழுந்தவள் கால்களிலோ பற்தடங்களும் இரத்தமும்.

அவளது எதிர்காலம் என்னவாகும்?

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here