மனச் சோலையின் மழையவள்_5_ ஜான்சி

0
643

மனச் சோலையின் மழையவள்

ஜான்சி

அத்தியாயம் 5

அடிமேல் அடி வைத்து இரு குடும்பத்தினரும் அம்மியை அல்ல தங்கள் மக்களை இணைத்து வைத்தனர். கல்லூரியை எதிர்பார்த்தவளுக்கு 17 வயதிலேயே கிடைத்தது திருமண வாழ்க்கை அதுவும் தன்னை விரும்பாதவனோடு.

தெரசாவைப் பொருத்தவரையில் சூர்யா நல்லவன் தான். சொந்த அத்தை மகளாயினும் அந்தஸ்து பேதம் என்று இருந்ததால் அவளுடன் அவன் அதிகமாய் பேச்சு வைத்துக் கொண்டதில்லை. அப்படியே என்றாவது ஒரு நாள் அத்தை வீட்டிற்கு செல்ல நேர்ந்தாலும் தெரசாவுடன் சிறிய தங்கை போல இடைவெளி விட்டுப் பேசிப் பழகுவானே அன்றி, அத்தை மகளென்று ஒரு போதும் கிண்டல் கேலி என சீண்டியதும் இல்லை. தவறான பார்வைகள் பார்த்ததும் இல்லை. ஆனால், அவள் தம் வீட்டில் நிகழும் உரையாடல்களால் அவனது அத்தனைச் செய்திகளையும் ஏற்கெனவே அறிந்திருந்தாளே?

சூர்யாவின் தனிப்பட்ட அத்தனைக் கெட்டப் பழக்கங்களும் மறைவானவைகள் தான். தன்னை எல்லோரிடமும் வெளிப்படுத்திக் கொள்ளாத அகம்பாவமான ஒரு இறுக்கம் அவனில் உண்டு.  நான் யாருக்கும் விளக்கம் கொடுக்கத் தேவையில்லை என்பதான ஒரு நிமிர்வும் துணிவும் கூடத்தான்.

அவன் நல்லவனாக இருப்பது இல்லாதது ஒரு பக்கம். ஆனால், அவனை தனது கணவனாக அவளால் ஒருபோதும் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. படிப்பதற்கான வாழ்வின் மற்ற சாதனைகளுக்கான எத்தனையோ ஆசைகள், கனவுகள் அவளிடத்தில் இருந்தன. பெற்றத் தாயே கழுத்தைச் சுற்றிய பாம்பாய் அவளை நிதம் நிதம் நெருக்கிக் கொண்டிருக்க பலவீனமான ஒரு தருணத்தில் அவள் நெருக்கடி தாங்க இயலாமல் திருமணத்திற்கு சம்மதிக்க நேர்ந்தது.

இரு குடும்பத்தினரும் எதற்கோ அஞ்சி, எதையோ செய்து முடித்தனர். அமலிக்கு அண்ணன் வீட்டில் மகளைக் கட்டிக் கொடுத்து தனது பிறவிக் கடனை அடைத்ததுப் போன்ற ஒரு பெருமித உணர்வு.

இவை எல்லாம் எண்ணி மொத்தம் ஒன்றரை வருடங்கள் ஆம் பதினெட்டே மாதங்கள் தான். எல்லாம் நன்றாகவே நடந்துக் கொண்டிருப்பதாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தனர். மகள் திருமணமாகி சில மாதங்களில் கருவுற்றதும், அமலி மகளை சிறப்பாக வளைகாப்பு முடித்து தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று பேறுகாலம் பார்த்தார்.

பேரன் பிறந்ததும் இருகுடும்பத்திலும் அத்தனை மகிழ்ச்சி. மகளின் வாழ்க்கையைக் கண்டு அமலிக்கு பெருமை பிடிபடவில்லை. தெரசா தனது மனைவியான பின்னும் கூட சூர்யா அவளோடு அவ்வளவாய் ஒட்டி உறவாடவில்லை. மனைவியை மட்டுமல்லாது ஒரு எல்லைக்கு வெளியேயே எல்லோரையுமே நிறுத்தி இருந்தான்.அது அவனது இயல்பென்று ஆனதால் யாருக்கும் அதைக் குறித்து தவறாக தோன்றவில்லை.

தெரசாவிற்கோ அவசரத் திருமணம், உடனே கருவுறுதல் அதன் உடல் நிலை மாற்றங்கள், மன நிலை மாற்றங்கள் என கணவனின் மன நிலையை அவ்வளவாய் கணிக்கத் தெரியவில்லை.அவளது வயதும் மனமுதிர்ச்சியும் கூட அதற்கு போதுமானதாக இல்லையே? அவளும் தான் என்னச் செய்வாள்?

அரசு பிறந்து சில மாதங்களுக்குப் பின்னர் அமலி குடும்பத்தினர் பேரனுக்கு நகைகள், துணிமணி என ஆசையாசையாய் வாங்கிக் கொடுத்து சொந்தங்களை அழைத்து மிகச் சிறப்பாய் விருந்து கொடுத்து மகளை புகுந்த வீட்டிற்கு விட்டு வந்த மறுநாள் சூர்யா தனது காதலி கீதாவை தேடி சென்று விட்டிருந்தான்.

பதினெட்டு வயது நிரம்பும் முன்பாகவே கணவன் கைவிட்டுச் செல்ல, கைக்குழந்தையுடன் நின்ற தெரசாவிற்கு ஒன்றும் புரியாத நிலை. அவளுக்கு மட்டுமா? பெரியவர்களது நிலை அதனினும் மேல் மோசமாக இருந்தது. யாருமே அவன் திருமணமாகி, குழந்தைப் பிறந்தப் பின்னர் முன்னாள் காதலியைத் தேடிச் செல்வான் என நினைத்து இருக்கவில்லை. விபரம் தெரிய வந்து, அது உண்மைதான் என ஜீரணித்துக் கொள்ளவே ஒரு வாரம் எடுத்திருந்தது. அமலி குடும்பத்தினர் வெகுவாய் அதிர்ந்து நின்றனர்.

சூர்யாவின் பெற்றோர் தெரசாவுடனான திருமணத்திற்கு மகனை சம்மதிக்க வைக்க, பெரும்பாலான சொத்துக்களை மகன் பெயரில் மாற்றியிருந்தனர். அதனால், இப்போது இவர்களது பிடி சூர்யாவின் கையில் என்றானது. அவர்களுக்கு இத்தனை நடந்த பிறகும் தன் மருமகள் வாழ்வு பெரிதாக தெரியவில்லை. மகன் தனது காதலியின் பின்னால் சென்றதால் அவர்களது குடும்ப கௌரவம் வீணாகிப் போனதாகப் பெரியதாக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஊர் உலகம் அனைத்தும் கூடிக் கூடிச் சேர்ந்து வாய் வலிக்கப் பேசி, தெரசாவுக்கு கொடுத்தது எல்லாம் ‘கணவனை முந்தியில் முடிந்து வைத்துக் கொள்ள தெரியாதவள்’ எனும் பட்டம் மட்டும் தான்.

அவர்கள் அப்படி என்றால் அவர்களின் மகன் மட்டும் எப்படியாம்? தனது சுயநலத்திற்காக ஒருத்தியின் வாழ்வு பாழ்படுவது குறித்த அக்கறை சூர்யாவிற்கு சிறிதளவும் கிடையாது. அவனைப் பொருத்தவரையில் ‘தான் இன்னொருத்தியை காதலிப்பவன் என்றுத் தெரிந்து தானே இந்த தெரசா என்னை திருமணம் செய்தாள்? தனது செயலுக்கு அவள் நன்றாக அனுபவிக்கட்டும்’, எனும் எண்ணப் போக்கு மட்டுமே.

தனதுப் பெற்றவர்கள் செல்வாக்கு குறித்தும் தான் பிற மாநிலத்தவளை திருமணம் செய்துக் கொள்ளக் கூடாதென அவர்கள் எந்த அளவிற்கு செல்லக் கூடும் என அறிந்துக் கொண்டிருந்த சூர்யா அவர்களை ஏமாற்றுவதற்காகவே வேறுவழியின்றி தெரசாவை திருமணம் செய்துக் கொண்டிருந்தான்.

“இந்திக்காரிய கல்யாணம் செய்யுறதா? நம்மக் குடும்பத்துக்கு ஆகவே ஆகாது”

என அவனுடைய கீதாவை அவன் முன்பாகவே எத்தனையாகப் பேசி இருப்பார்கள்? அவர்கள் அதற்கு அனுபவிக்க வேண்டாமா? பெற்றவர்களிடமிருந்து சொத்துக்களை வாங்கிக் கொண்டதல்லாமல், இவர்கள் கைப்பிடியில் இருந்து தப்பிக்க இன்னும் என்னென்ன செய்ய வேண்டும் எனத் திட்டமிட அவன் தெரசாவின் கணவனாக நடிக்கும் காலம் பயன்பட்டது. அவனுக்கு திருமணம் நிகழ்ந்தது தெரிந்தும், அவன் கொடுத்த வாக்கை மீறாமல் தன்னை திருமணம் செய்துக் கொள்வான் என கீதாவும் அவனை நம்பி காத்திருந்தது அவன் மனதிற்கு உரமளித்தது.

சூர்யா மற்றும் தெரசாவிற்கு அவசரமாக திருமணம் செய்ததால் அவனது குடும்பத்தினர் வீட்டிலேயே திருமணம் செய்வித்து இருந்தனர். திருமண வயது நிரம்பாத பெண்ணுக்கு ஆலயத்தில் திருமணம் நடத்த இயலாது என்பதால் ஆலயத்தில் திருமணம் நடத்தவும் இல்லை. அதே காரணத்தால் அவர்களது திருமணம் பதிவு செய்யப் படவும் இல்லை. கூடுதலாக, சூர்யா சாமார்த்தியமாக தனது திருமணத்தின் புகைப்படங்கள் எடுப்பதை தடுத்திருந்தான். திருமணத்தின் பின்பும் கூட எந்தவொரு புகைப்படத்திலும் தெரசாவுடன் அவன் ஒருபோதும் இருக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். ஆக, அடிப்படையில் அது சட்டத்தின் முன் ஒரு சாட்சியற்ற செல்லா திருமணம் மட்டுமே.

சூர்யா தனது இந்த முன்னேற்பாடுகள் காரணமாக தனக்கு எதிராக யாரும் சட்ட ரீதியாக ஒரு சுண்டு விரலைக் கூட அசைக்க முடியாது என்பதை மிகத் தெளிவாக அறிந்திருந்தான்.

திருமணம் செய்வித்த ஆரம்பத்தில் சூர்யாவின் பெற்றவர்கள் மகன் மீது ஒரு கண் வைத்தவர்களாக மிக எச்சரிக்கையுடன் இருந்தாலும் தெரசா கருவுற்று, குழந்தைப் பெற்ற பின்னர் அவர்களது கண்காணிப்பு வெகுவாக தளர்ந்திருந்தது. அவனது மனைவியை குழந்தையோடு சூர்யாவின் வீட்டிற்கு திரும்ப விட வரும் விழாவில் அனைவரும் கவனம் வைத்திருந்த நேரத்தில், அவன் இதுதான் கிடைத்த வாய்ப்பெனக் கீதாவுடன் ஓட்டம் பிடித்து விட்டிருந்தான். திட்டமிட்டபடி அவளுடன் சில நாட்களில் பதிவு திருமணமும் செய்துக் கொண்டான்.

ஒன்றரை வருட காலம் ஒரு பக்கம் தெரசாவிடம் நல்ல கணவன் போல இருந்துக் கொண்டே, கீதாவுடன் அவன் தொடர்பில் இருப்பதையே அறிந்திராத அவனது பெற்றவர்களுக்கு அது முகத்தில் கரியை பூசியது போலானது.

எப்படியாவது அவனை கீதாவிடமிருந்து பிரித்துக் கொண்டு வந்து மருமகளோடு சேர்த்து வைக்க துடித்த பெரியவர்கள் சில மாதங்கள் கழித்து சூர்யாவின் பேச்சிற்கே தலையாட்ட தொடங்கினர்.

என்ன இருந்தாலும் ஒரே மகனாயிற்றே? சொத்துக்களும் முழுக்க அவனது கையில் இருந்ததே? அதனால் அவர்கள் தங்கள் மருமகளுக்காக ஒரு தீர்வை கண்டுபிடித்தனர்.

“சூர்யா தெரசாவுக்கான கடமைகளை மறக்கவோ மறுக்கவோ மாட்டான் என்பதாகவும், அவனது மகனுக்கான செலவினங்களும் அவனுடையது என ஏற்றுக் கொள்வதாகவும், சொத்திலும் சரி சமமான உரிமையை கொடுத்து விடுவதாகவும் தெரிவித்தனர். மற்றபடி கீதாவையும் சூர்யாவால் கைவிட முடியாதாம். விரும்பினால் கீதாவுடன் தெரசாவும் ஒரே வீட்டில் வாழ வரலாம் என்றும் இல்லையென்றால் தெரசா தனி வீடு எடுத்து இருந்தாலும் அவர்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லை”, என்றும் பெருந்தன்மையாக கூறினர்.

அது நாள் வரையிலும் தங்கை வாழ்வில் தன்னால் குழப்பம் வேண்டாம் என பொறுமை காத்த மாறன் அவர்கள் கூற்றைக் கேட்டதும் கொந்தளித்து எழுந்தான். மாமா குடும்பத்தின் முன் சென்று ருத்ரதாண்டவமே ஆடிவிட்டான் எனலாம். பெரியவர்களோ கதவை மூடிக் கொண்டு வீட்டின் உள்ளே பதுங்கிக் கொண்டார்கள்.

அதுவரை தன்னைச் சூழ என்ன நடக்கின்றது என்பதையே அறியாமல் மாமனார் வீட்டில் இருந்த தெரசா தனது புகுந்த வீட்டினர் இப்படி ஒரு பேச்சை கொண்டு வரவும்தான் மனதளவில் ஒரு முடிவிற்கு வர முடிந்தது. அதன் பின்னரும் அவள் வாளாவிருந்தால் அவள் மனித ஜென்மத்திற்கு இணை ஆவாளா என்ன?

எத்தனையோ தடைகள் வந்த போதும், பலத்த எதிர்ப்புகளுக்கிடையே தெரசா சூர்யாவிடமிருந்து விவாகரத்தை பெற்றுக் கொண்டாள். ஊர் பஞ்சாயத்தில் அவர்களது திருமணம் இரத்தானதும் தெரசா தாய் வீட்டை திரும்ப வந்தடைந்தாள்.

செல்வராஜீக்கும், அமலிக்கும் மகள் வாழ்வை நினைத்து உள்ளத்தில் இரத்தக் கண்ணீர் வடிந்தது. மகள் வாழ்வில் நடந்தவற்றில், விரும்பாத ஒருவனுடன் அவள் திருமணத்தை அவசரமாக செய்து வைத்ததில், முழுக்க முழுக்க அவர்களதும் பங்கு இருக்கின்றதல்லவா?

தெரசா விவாகரத்துப் பெற்றுக் கொண்டு விலகிய சில வருடங்களில் சூர்யா தன் பெற்றோர்களோடு மறுபடி இணைந்துக் கொண்டான். வேற்று மாநில மருமகள் மீது இப்போது அவர்களுக்கு ஏனோ எந்த துவேஷமும் வரவில்லை.திருமணத்தின் அடுத்த வருடமே சூர்யாவின் சட்டபூர்வ மனைவி கீதா அவளைப் போலவே கோதுமை மாவு நிறத்தில் ஆண் குழந்தை ஒன்றையும் சில வருடங்கள் கழித்து பெண் குழந்தையும் அழகாய் பெற்றுக் கொடுக்க, சூர்யாவின் பெற்றோருக்கு இப்போது வேறு யாரையும் நினைக்கவே நேரமில்லாது போயிற்று.

அவர்களது அந்தஸ்து விளையாட்டின் நடுவில் பலியாடாய் பயன்படுத்தப் பட்ட தெரசா குறித்தோ, அவள் மகன் அரசு குறித்தோ எவருக்கும் கவலையும், அக்கறையும் இல்லை. அதே நேரம் அங்கே மறுபுறம் தெரசாவிற்கு தற்போது யாரைக் குறித்தும் கவலைப்பட சற்றும் நேரமில்லை. தனது படிப்பிற்கேற்ற வேலைகளை பார்த்துக் கொண்டு மகனை வளர்க்க ஆரம்பித்தாள். அடுத்து படிக்கவும், தனது தகுதிகளை உயர்த்தவும், முன்னேறவும் வாய்ப்புகளை தேடினாள். இனியாவது அவள் வாழ்வில் நல்லது நடக்கட்டும் எனும் முனைப்பில் குடும்பத்தினர் அவளுக்கு உறுதுணையாக இருந்தனர்.

இரண்டாவது திருமணம் என்பவற்றில் அவளது ‘சூடு பட்ட பூனை’ மனநிலை காரணமாக அவளுக்கு நம்பிக்கையோ ஆர்வமோ ஏற்படவில்லை.

தனது சுய மரியாதையை எவ்விதத்திலும் அவள் விட்டுவிட விருப்பப் படவில்லை. மகனை கணவன் வீட்டினரை சாராதவளாக தனது உழைப்பில் மட்டும் வளர்த்துக் கொண்டு இருந்தாலும் கூட, மகனுக்கான உரிமை விஷயத்தில் அவள் முடிவெடுக்க தலைப்படவில்லை. அவனுக்கு விருப்பமென்றால் அவனது சொத்துக்களை பெற்றுக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டாள். குடும்பச் சொத்து என்பது இங்கு செல்வம் மட்டுமல்ல, பிறப்பு உரிமையும் அல்லவா?

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here