மனச் சோலையின் மழையவள்_6_ஜான்சி

0
617

அத்தியாயம் 6

மகளின் வாழ்க்கை பறிபோனதில் குடும்பத் தலைவர் செல்வராஜ் மனதிற்குள் புழுங்கி புழுங்கியே சில வருடங்களில் போய் சேர்ந்தார். வருடங்கள் கடந்து தற்போது தெரசாவின் அண்ணன் மாறனுக்கு திருமணம் ஆனது.

மாறனின் மனைவி சுபாவிற்கு கணவனின் தங்கை தெரசாவும் அவளின் மகன் அரசுவும் ஒட்டுப் புல்லாய் தங்கள் வீட்டில் இருப்பது திருமணமாகி வந்த நாளினின்றே பிடிக்கவில்லை. ‘என் கணவனின் வீடு எனக்கு மட்டுமே உரிமையானது இவர்கள் ஏன் வந்து சொந்தம் கொண்டாடுகின்றார்கள்?’ எனும் மனப்பான்மையில் இருந்தாள்.

‘பெண்ணானவள் கட்டிக் கொடுத்த இடத்தில் என்ன துன்பமானாலும் சகித்து வாழ வேண்டும் இப்படி திமிராய் தனித்து வந்து வாழக்கூடாது குறிப்பாக பெற்றோர் வீட்டில் வந்து இருக்கக் கூடாது’ எனும் எண்ணங்களில் ஊறி இருந்தாள். அதன் காரணமாகவே வீட்டில் பற்பல பிரச்சனைகள் எழ ஆரம்பித்தன.

மாறனுக்கு திருமணமான போது அரசு மூன்றாம் வகுப்பு மாணவன். துறுதுறுப் பையன்… துள்ளலான குழந்தையாக இருந்தான். அமைதியாய் வேலைக்கு போவதும் வருவதுமாக இருக்கும் நாத்தனாரிடம் ஆரம்பிக்க முடியாத சண்டைகளை சுபா முதலில் அரசுவிடம் இருந்தே ஆரம்பிக்கலானாள்.

அதுநாள் வரையிலும் தனது அம்மம்மா அம்மப்பா (தாத்தா பாட்டி) வீட்டில் சுதந்திரமாய் புழங்கியவன் தற்போது எதைச் செய்தாலும் அதற்காக கண்டிக்கப் பட்டான். எந்த அறையில் போய் விளையாடினாலும், எந்த இடத்தை உபயோகித்தாலும் விரட்டப் பட்டான்.

தன்னோடு படுக்கும் இடம் முதலாய் எல்லாவற்றிற்கும் போட்டிப் போடும் சுபாவின் எண்ணம் அறியாத துறுதுறு குழந்தையான அரசு, தன் தாயும் வேலைக்குச் சென்று விடுவதால் துணைக்கு யாரும் இல்லாத நிலையில் தனது இயல்பினால் மாமியிடம் எல்லாவற்றிற்கும் பதிலுக்கு பதில் பேசுவதும், சண்டை போடுவதுமாக ஆரம்பித்தான். அவனது குழந்தைத்தனம் மறைந்து எரிச்சலும் சிடுசிடுப்புமான குணத்தின் மாற்றம் நிகழ்ந்தது இங்குதான்.

மருமகளை ஒன்றும் சொல்ல முடியாமலும், பேரனை அடக்க முடியாமலும் அமலி தவித்துப் போவார். தெரசா மற்றும் மாறன் தத்தம் வேலையிலிருந்து திரும்பி வருகையில் தினமும் சண்டைகளால் வீடு இரண்டு பட்டிருக்கும்.

தினம் தினம் நிகழும் இந்த போராட்டத்தைக் கண்ட தெரசா ‘வீட்டின் அமைதி கெடாமல் இருக்க என்னச் செய்யலாம்?’ என யோசிக்கலானாள். தாயிடம் பேசி அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி, உபயோகிக்கப் படாமல் இருந்த தகப்பன் வழி பாட்டியின் வீடான அந்த ஓட்டு வீட்டிற்கு மகனுடன் குடி வந்தாள். அமலி தற்போது மகளுக்குத் துணையாக அவளோடு வந்து தங்கிக் கொண்டு மகன் வீடு மகள் வீடு என பயணிப்பதுமாக இருந்து வந்தார்.

சுபாவிற்கு தனது மாமனார் வழிச் சொத்தான வீட்டில் நாத்தனார் இருப்பதிலும் கூட விருப்பமில்லை. தன் மாமியார் தெரசாவிற்கு அந்த வீட்டை எழுதி வைத்து விடுவாரோ? என உள்ளூர ஒரு பயம் இருந்துக் கொண்டிருந்தது. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக தெரசாவையோ, அரசுவையோ விலக்கி வைக்க ஆரம்பித்தாள். பலவித போதனைகள் காரணமாக மாறனும் அரசுவின் செயல்பாடுகளில் எல்லாவற்றிலும் குறை காணத் தொடங்கினான்.

மாறன் தனது தங்கை தங்கை மகனிடமிருந்து விலகி நிற்க,தெரசா மற்றும் தெரசாவின் மகன் இருபக்கச் சொந்தங்களும் இல்லாத நிலையில் தனிமையான நிலையில் இருந்தனர்.

மாமா வீட்டில் அன்பும் அரவணைப்புமில்லை. மாமாவின் குழந்தைகள் இவனை கண்டுக் கொள்வதுமில்லை என்றாலும் அமலி தான் இவர்களை அரவணைத்து வந்தார். சற்று வளர்ந்த பின்னர் ஊரார் பேச்சுக்களை எல்லாம் கேட்டு ஒரு விதமாக தனது தற்போதைய நிலைக்கு காரணமானவர் தனது அம்மம்மா எனும் முடிவிற்கு வர அவரையும் வெறுக்க ஆரம்பித்தான்.

அவன் வளர வளர ஊர் மக்கள், பள்ளி நண்பர்கள் அவன் மனதில் பலவிதமான சிந்தனைகளை தோற்றுவிக்க, தனது தகப்பனற்ற நிலை அறிந்தவனுக்கு தாழ்வு மனப்பான்மையும், அதன் காரணமாய் சிடுசிடுப்பு, எரிச்சல், கோபம் என கடின மனமாய் தன்னை மாற்றிக் கொண்டான்.அவனது கடுமையான குணத்தை அவனது அன்னையின் அறிவுரைகளாலும் கூட மாற்ற இயலவில்லை.

அடிக்கடி விளையாடச் செல்லும் இடம், பள்ளி எங்குச் சென்றாலும் சண்டை பிரச்சனை என்று வர, குழந்தையாக இருக்கும் மட்டும் தெரசா தன்னால் முடிந்த அளவிற்கு சமாளித்துப் போக வாலிபனான பின்னர் அவனை யாராலும் கட்டுப்படுத்த இயலவில்லை.

யாரோ யாருக்காகவோ எதையோ செய்து வைக்க அம்மாவும் பிள்ளையும் நிம்மதியின்றி தவித்தனர்.

****

சூர்யா தற்போது ஊரின் வார்டு கவுன்சிலராக மாறியிருந்தான். பெரியவர்கள் சேர்த்து வைத்த சொத்து ஒரு பக்கம். தற்போது செல்வாக்கும் சேர்ந்து விட ஊர் உலகம் அவனை வெகுவாக மதித்தது. அவன் முகத்தின் எதிரே அவனை அவன் செயல்களை குறை சொல்வார் யாருமிலர்.

ஒரே ஊரில் வசிக்கின்ற போது ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருக்க முடியுமா? ஆனாலும், அவன் செய்த தீமைக்கு சாட்சியான தெரசாவும், அரசுவும் எதிரில் கண்டாலும் கூட அவனை மனிதனாகவே மதிக்காமல் கண்டுக் கொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்து விடுவர்.

அரசுவிடம் சூர்யாவிற்கு பொதுவாகவே அன்போ எந்த உரிமை உணர்வோ சற்றும் கிடையாது. “உன் மூத்த மகன் உன்னைப் போலவே இருக்கான், அவன் நடக்குறது, பேசுரது ஏன் மேனரிசம் எல்லாமே அச்சொட்டா நீயேதான்” என அவனுக்கு தெரிந்தவர்கள் அவனிடம் சொல்லுகையில் ‘அருகாமையில் கீதா இல்லாமல் இருக்க வேண்டுமே’ எனும் பயத்துடன் திரும்பிப் பார்த்துக் கொள்வான்.

மனைவி கீதாவுடன் அவன் விரும்பியதைப் போன்ற காதல் வாழ்க்கைத்தான் என்றாலும் கூட கீதா இவனது ஆதி முதல் அந்தம் வரை அறிந்ததனால் அவனிடம் மிகவும் கண்டிப்பானவள். மற்றப் பெண்களோடு அவன் சாதாரணமாக பேசுவதைக் கூட பொறுக்காதவள்.

அதுவும் தெரசாவைக் குறித்து அவள் முன்னால் யாராவது பேசினால் அவர்கள் தமிழகத்தின் மருமகளானதில் தமிழை கரைத்துக் குடித்த அவளது வாயில் இருந்து கண்டமேனிக்கு வசவுகள் வாங்கிக் கட்ட நேரிடும்.

அவளைப் பொருத்தவரையில் தான்தான் சூர்யாவின் ஒரே மனைவி, தெரசா மற்றும் அரசு குறித்து யாரும் பேசவே கூடாது என்பதாகும். பாதிக்கப் பட்ட அவர்களே வாளாவிருக்க, போவோர் வருவோர் வந்து அவர்களைக் குறித்து பேசுவானேன்? எனும் ஆத்திரங்கள் அவளில் உண்டு.

சூர்யா தனது வீட்டை முழுக்க முழுக்க மனைவி கீதாவினை ராஜ்ஜியம் செய்ய விட்டிருந்தான். அவர்களது பிள்ளைகள் மகன் சுரேந்தரும், கவிதாவும் பணச்செருக்கும், ஆணவமுமாக இவனது பிரதிபிம்பமாகவே வளர்ந்து இருந்தனர்.

அவர்கள் அரசு படிக்கும் அதே பள்ளியில் படிப்பவர்களாக இருக்க, கூடுதலாக அரசுவை சீண்டி நேரம் போக்கும் இவர்களுக்கு ஆதரவான ஒரு கூட்டமே அங்கிருக்க எப்போதுமே பிரச்சனைக்கு குறைவில்லாமல் இருந்தது. சுரேந்தர் தான் நேராக அரசுவிடம் சண்டையிடாமல் மற்ற யாரையாவது வீண் வம்பு இழுக்கச் சொல்லி சண்டையிட வைப்பான் அதில் அவனுக்கொரு ஆனந்தம். எல்லாவற்றின் பின்னாலும் இருப்பது அவன்தான் என எல்லோருக்கும் தெரிந்தாலும் கூட எவராலும் அதனை நேரில் கேட்டு விட முடியாது. கீதா அவர்களை கிழித்து தோரணம் கட்டி விடுவாளே?

அரசுவின் கோப குணத்தால் அடிக்கடி பள்ளியிலிருந்து தெரசாவிற்கு அழைப்பிற்கு மேல் அழைப்பு என வர, பிரச்சனைகளை தவிர்க்க, தெரசா அரசுவை ஹாஸ்டலில் விடவும் முயற்சித்தாள். அரசுவோ நான் அப்படி விலகிச் சென்றால் இவர்களுக்கு நான் பயந்து போனதாக ஆகிவிடும் என வீம்பிற்காக மறுத்தான்.

வருடங்கள் ஒவ்வொன்றும் இப்படியே போராட்டமாக கழிந்திருக்க, சுரேந்தர் இவனை விடவும் ஒரு வருடம் சிறியவனானதால் அரசுவின் முதலாமாண்டு கல்லூரி வாழ்க்கை சுரேந்தர் இன்றி நலமாய் கடந்தது.

எத்தனையோ கல்லூரிகள் இருக்க இனியாவது சுரேந்தர் மகன் படிக்கும் கல்லூரியில் சேர மாட்டான் என நினைத்திருக்க, சுரேந்தர் அதே கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்தான் மறுபடி சின்னச் சின்னப் பிரச்சனைகள் ஆரம்பித்தன்.

தொடர்ந்த பிரச்சனைகளால் தெரசா மனம் சோர்ந்து விட்டாள். இன்னமும் கூட பிரச்சனைகள் கூடும் என்பது போல சூர்யாவின் அப்பா இறப்பும், அவர் உயிலும் இவர்கள் குடும்பத்தை மற்றொரு முறை உலுக்கியது.

இறக்கும் முன்பாக தனது மனதின் குற்ற குறுகுறுப்பு காரணமாக அவரது சொத்தாக இருந்த அந்த மூன்று மாடி வீட்டை அரசுவிற்கு அவர் எழுதி வைத்திருந்தார்.

கீதாவிற்கு இந்த விஷயம் தெரிந்ததிலிருந்து அவளால் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை.

“அப்படி என்ன மாயம் செய்து கிழவனிடமிருந்து எங்கள் சொத்தை வாங்கினாயடி. நீ என் கணவனுக்கு மனைவியே கிடையாது அதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. அப்படி இருக்க உனக்கு சொத்து கேட்கிறதோ? சொத்து?”

“…..”

“இல்லீகலா புள்ளைய பெத்து வச்சிட்டு அதுக்கு உனக்கு சொத்து வேற கேட்குதோ?, என்ன இருந்தாலும் அவன் சூர்யா பொண்டாட்டிக்கு பொறந்தவன்னு சொல்ல மாட்டாங்க, நான் தான் அவன் பொண்டாட்டி, வேணும்னா அந்தப் பையன் கள்ளப் பொண்டாட்டிக்கு பொறந்தவன்னு தான் சொல்லுவாங்க…” மனதின் ஆத்திரம் மிக வாசலில் நின்று கீதா ஆட்டம் போட்டுச் செல்ல… சுபா பெரிய இடத்தில் மோத வேண்டாமென மாறனை கீதா சண்டையிடும் போது செல்ல வேண்டாமென் அடக்கி விட்டாள்.

எல்லாம் முடிந்த பின்னர் சம்பிரதாயத்திற்கு என்னவென்று மாறன் விபரம் கேட்டுச் சென்றான். பிரச்சனை நிகழ்ந்த அந்த நேரம் அரசு தன் வீட்டில் இல்லாதிருக்க, அன்று பெரிய சண்டையொன்று தவிர்க்கப் பட்டிருந்தது.

தனக்கு தீமையே செய்திருந்தாலும் கூட மாமாவின் இறப்பு அன்று தெரசா அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக வீட்டில் இருந்து ஜெபிக்க மறக்கவில்லை. ஆனால், அவர் உயில் மற்றும் சொத்து விபரம் குறித்து தெரசா, கீதா தன் வாயிலில் வந்து ஆட்டம் போடும் வரையிலும் அறிந்திருந்தாளில்லை. சொல்லப் போனால், அதன் மேல் எல்லாம் அவளுக்குச் சற்றும் ஆசையுமில்லை.

கீதாவின் வார்த்தைகள். அவளை அவமானப் படுத்தியச் செயல் உள்ளத்தைக் கீறினாலும் கூட தெரசாவின் மனம் ஏற்கெனவே மரத்துப் போய் விட்டிருக்க , அவளது கண்ணீர் சுரப்பிகள் எல்லாம் எப்போதோ வேலை நிறுத்தம் செய்திருக்க இப்போது நடந்தவைகளுக்கு பிரதிபலிக்க அவளிடம் உணர்வுகள் ஏதும் மிச்சமில்லை.

அரசுவிற்கு நண்பன் ஒருவன் வந்து விபரம் சொல்லி இருக்க, வேகம் வேகமாய் வந்து கோபம் தாளாதவனாக தாயிடம் விபரம் கேட்டு, கத்திக் கத்திப் பேச அவனுக்கும் அவள் பதில் கொடுத்தாளில்லை.

‘சும்மாவே எண்ணையிலிட்ட அப்பம் போல குதிப்பான்’, என மகனைக் குறித்து எண்ணியவள் கீதாவின் அபாண்ட ஏச்சுக்கள் மனதை பாதித்தாலும் தன் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.

“விடுடா அரசு, எவளாவது வந்து எதுவும் சொல்லிட்டுப் போனா அதுக்காக நாம எதுக்கு டென்ஷனாகனும்?. நொய்யு நொய்யுன்னு கேள்வி கேட்காதே. எனக்குச் செய்ய நிறைய வேலை இருக்கு. நாளைக்கு ஸ்கூல் போக சேலை அயர்ன் செய்யணும்”

நெடுநேரமாய் தன்னை முறைத்துக் கொண்டு, திட்டிக் கொண்டிருக்கும் மகனை அவள் கண்டுக் கொள்ளவில்லை. ஓரமாய் சோகமாய் அமர்ந்து இருக்கும் அம்மம்மாவை அன்று ஏனோ அவன் திட்ட மறந்து விட்டான்.

வழக்கம் போல கோபம் தாள முடியாதவனாக வீட்டை விட்டு வெளியே சென்று விட வீடு அமைதியை பூண்டுக் கொண்டது.

அதுவரையிலும் ஏதோ ஒரு காரணத்திற்காக உயிரைப் பிடித்து வைத்துக் கொண்டிருந்த அமலியின் உயிர் கீதா சொன்ன “கள்ளப் பொண்டாட்டி” எனும் வார்த்தையில் சிக்கித் தவித்தது. மகளுக்கு தான் தேடித் தந்த அவப்பெயரை எண்ணி எண்ணி துடித்து, அன்றிரவே அவ்வுயிர் உடலை விட்டுப் பிரிந்தது.

காலையில் எழுந்து பள்ளிக்கு ஆசிரியர் வேலைக்குப் புறப்பட்ட தெரசா, அம்மா மூச்சற்றுக் கிடந்ததைப் பார்த்ததும், வெகு வருடங்களுக்குப் பிறகு வெடித்து அழுதாள்.

துயரங்கள் அவ்வளவுதான் என நினைத்துக் கொள்ளாதே? என்பதாக அவளது விதி அவளைப் பார்த்து இன்னுமாய் சிரித்துக் கொண்டிருந்தது.

அமலியின் மரணத்திற்கு அடுத்த நாட்களை தெரசா எவ்வாறு கடந்து வந்தாள்? எனக் கேட்டால் விவரிக்கவே முடியாது. இன்று அமலியின் விசேஷம், உற்றார்கள் உறவினர்கள் ஒன்று கூடி செய்ய வேண்டியவைகளை எல்லாம் செய்ய முன் நின்றனர். இரவு உணவு நேரம் கழிந்த போது உறவினர்கள் அனைவர் முன்பாக சூர்யா வந்து நிற்பான் என்பதனை அங்கு எவருமே எதிர்பார்த்து இருக்கவில்லை.

தெரசாவின் மனம் தளர்ந்த இந்த இக்கட்டான சூழலில் உறவினர் முன்பாக தான் கேட்டால் தனது விருப்பம் போல கையெழுத்து இட்டு விடுவாள். அரசுவையும் கையொப்பம் இடச் சொல்வாள் எனும் கணக்கீட்டோடு அவள் முன்பாக வந்து நின்றான் சூர்யா.

“தெரசா…அப்பா ஏதோ உணர்ச்சிவசப்பட்டு வீட்டை உன் மகன் மேல எழுதி வச்சுட்டார். நாம இரண்டு பேருக்கும் எந்த ஒட்டும் இல்ல, உறவும் இல்லன்னு ஏற்கெனவே நாம தீர்த்துக் கிட்டோம் தானே? இப்ப இந்த சொத்து மட்டும் உனக்கு எதுக்கு? உன் மகன் கிட்டச் சொல்லி இதில் ஒரு கையெழுத்து வாங்கி கொடுத்தீன்னா…”

சூர்யா தயங்கி பேச்சை இழுக்க… அவன் கையினின்று அந்த பத்திரம் பிடுங்கப் பட்டு டார்டாராக கிழிக்கப் பட்டது.

தாயின் முன் வந்து நின்றான் அரசு,

“டேய் சீக்கிரம் என் வீட்ட காலி செய்யு, நானும் என் அம்மாவும் அந்த வீட்டுக்கு வந்து தங்குறதா இருக்கோம். என்னல புரியுதா?”

அது நாள் வரை தன்னை ஒரு போதும் ஏறிட்டும் பாராதவன் இப்போது எதிரில் நின்று எகத்தாளமாக பேசிய விதம் கண்டு சூர்யா அதிர்ந்து நின்றான்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here