மனச் சோலையின் மழையவள்_7_ஜான்சி

0
803

அத்தியாயம் 7

சூர்யாவிற்கு ‘தான் சற்று நேரம் முன்பு கேட்டது உண்மையா?’ என தனது காதுகளை சரிபார்க்கத் தோன்றிற்று. தன்னைக் கண்டாலே கண்டுக் கொள்ளாதவன் இன்று தன்னிடம் இப்படி மட்டு மரியாதை இல்லாமல் பேசுவதா? ‘என்ன திமிர்? என் வீட்டை நான் காலி செய்ய வேண்டுமாமே?’

சுற்றிலும் இருந்தவர்களை தயக்கத்துடன் ஏறிட்டுப் பார்த்தான். அதுவரை அவனை மதிப்புடன் பார்த்தவர்கள் தற்போது இகழ்ச்சியாக பார்த்ததாக அவனுக்குத் தோன்றிற்று. அவரவர் எண்ணங்களின் படி தானே சிந்தனைகள் தோன்றும் அதில் ஆச்சரியம் கொள்ள எதுவுமில்லை.

இந்த நேரம் தான் உறவினர்கள் முன்பாக பேசினால், அங்கிருப்பவர்களில் தனக்கு ஆதரவாக சிலராவது பேசுவார்கள். தனக்கு ஆதரவு கூடவும் அங்கு தனது கை ஓங்கி நிற்கும், தனது விருப்பம் போல தாயையும் மகனையும் வலியுறுத்தி பத்திரத்தில் கையெழுத்து வாங்கி விடலாம் என்றெண்ணி தான் எந்த காரணத்திற்காக தெரசாவை அணுக நினைத்தானோ? அந்த காரணமே தலைகீழாக மாறி இப்படி எல்லோர் முன்பாக அவன் அரசுவிடம் அவமானப் பட்டு நிற்க வேண்டி இருக்கும் எனச் சற்றும் நினைத்தும் பார்த்தானில்லை.

அடைந்த அவமானத்தில் சட்டென்று அவனது முகம் கருக்க, அங்கிருந்து புறப்பட்டான். வீட்டிற்கு வெள்ளை வேட்டி சரசரக்க விறுவிறுவென நடந்தே சேர்ந்தன். எதிர்பாராத விஷயம் நடந்ததில் தான் பயணித்து வந்த கார் அங்கே நிற்பதுவும் கூட அவனுக்கு நினைவில் இல்லை எனலாம்.

தனது எதிரில் சற்று முன்னர் நிகழ்ந்தவற்றைக் கண்ட மாறனுக்கும் அந்த நேரத்தில் என்னச் சொல்வதென்றே புரியவில்லை. ஒரு காலத்தில் தனது பரம வைரியாய் இருந்தவனின் தற்போதைய உயர் பதவியின் காரணமாக அவன் பல நேரங்களில் சற்று தழைந்துப் போக வேண்டி இருந்தாலும் கூட எப்போதும் தங்கை தங்கை மகனை விட்டுக் கொடுப்பவனல்ல. அவனால் சூர்யாவின் செயல்கள் அனைத்தையும் எல்லா நேரமும் சரியானவை என ஏற்றுக் கொள்ளத்தான் முடியுமா என்ன?

அந்த சோகமான சூழலை மேலும் இரசாபாசமாக்க அவன் விரும்பாததால் அமைதி காத்தான். மரித்த அமலி அவனது தாயாரும் தானே? இழப்பு அவனுக்கும் தானே? இன்னும் அவரது மறைவின் துயர் மறையாதிருக்க சூர்யாவின் செயல்கள் அவனுக்குச் சற்றும் நியாயமாகப் படவில்லை.

அங்கு நிகழ்ந்த அனைத்தையும் கண்டு மிகவாய் மனம் மகிழ்ந்த ஒரு உயிர் உண்டென்றால் அது மாறனின் மனைவி சுபா தான். ‘மாமியார் கிழவி மண்டையைப் போட்டு விட்டதே? இனி என்ன காரணத்தால் நாத்தனாரையும் அவள் மகனையும் தங்களது பூர்வீக வீட்டை காலி செய்ய வைப்பது?’ எனும் சிந்தனையில் இருந்தவளுக்கு சூர்யா வந்து பேசிச் சென்றதும், அரசு அவனுக்கு பதில் சொன்னதும் நல்ல வாய்ப்பென தோன்றலாயிற்று.

பேச்சு பேச்சாக அனைவர் முன்பாகவும் மிகவும் துடுக்காக பேசலானாள்.

 “அப்படின்னா எப்ப இந்த வீட்டை காலி செய்திட்டு, அங்க போகறதா இருக்கிறீங்க இரண்டு பேரும்? நானும் கூட இந்த வீட்டை மராமத்து செய்யணும்னு ரொம்ப நாளா யோசிச்சுட்டு தான் இருந்தேன்” என்றாள்.

மனைவியின் பேச்சு மிகவும் அதிகம் என்றுணர்ந்த மாறன் அதற்கு பதிலளித்து கவனத்தை ஈர்க்க விரும்பாமல், இந்த விஷயத்தை தங்கள் வீட்டில் போய் பேசிக் கொள்ளலாம் என எண்ணியவனாக அமைதி காத்து கல்லாய் இறுகி நின்றான். துயரமான இந்த நாளிலும் கூட வரிசையாய் எத்தனை பிரச்சனைகளை எதிர்கொள்ளுவது? எனும் மன அழுத்தங்கள் அவனிடம் இருந்தன.

வீட்டை காலி செய்வது குறித்து தன் அண்ணி இன்றோ நாளையோ என்றாகிலும் ஒரு நாள் சொல்லத் தான் போகிறாள் என்று உணர்ந்தே இருந்தததால் தெரசாவிற்கு அதைக் குறித்த அதிர்ச்சிகள் எதுவும் இல்லை. ஏற்கெனவே, தனது ஒரே ஆதரவான தாயை இழந்து கடந்த நாட்களில் உயிரற்ற கூடு போலவே தான் அவள் இருந்தாள். பிறருடைய சொற்களும் பாதிக்கும் நிலை அவள் ஏற்கெனவே கடந்து விட்டிருந்தாளே?

உறவினர்கள் சூழ இருக்க, சுபாவின் பேச்சிற்கு அவள் பதில் சொல்லப் போக, அண்ணன் தங்கை உறவில் விரிசல் என யாரும் கதைக் கட்ட வாய்ப்புக் கொடுக்கக் கூடாது எனும் முனைப்பில் தெரசாவும், மாறனும் அமைதி காக்க அரசு தன் அன்னையின் அருகில் வந்து அவரை அணைத்துக் கொண்டான்.

‘உனக்கு நானில்லையா அம்மா?’ என்பதான அணைப்பு அது. ஏதோ அவன் தகப்பன் போலவும் தான் குழந்தை போலவும் தெரசா அப்போது உணர்ந்தாள். ‘உள்ளம் நெக்குருகி கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்து விடுமோ?’ எனும் அச்சத்தில் தெரசா தன் கண்களை சிமிட்டி கண்ணீரைக் கட்டுப் படுத்தினாள்.

“இன்னும் ஒரே ஒரு வருசம் இங்க வீட்டுல இருந்துக்கிறோம் மாமி, என் படிப்பு முடிஞ்சதும் வேலைத் தேடிட்டு அம்மாவை என் கூட அழைச்சுட்டு போயிடுவேன். வேணும்னா அதுவரைக்கும் வீட்டுக்கு மாச வாடகை போட்டுக்கோங்க” இப்போது அரசு சுபாவுக்கு அலட்டாமல் பதிலளித்து இருந்தான்.

“அதான் உங்க தாத்தா அந்த மூணு மாடி பெரீய வீடு எழுதி வச்சிருக்கார்ல, அதை விட்டுட்டு இந்த பழைய வீட்டுல ஏன் இருக்கணும்னு தான் நான் சொன்னேன்…மற்றபடி ஒன்னுமில்ல…” இழுத்தவளுக்கு…

“அந்த வீட்டுக்கு போகறதா? மெதுவா போயிக்கலாம், அப்படியே நான் கேட்டாலும் அவங்க தந்துட்டு தான் வேற வேலை பார்ப்பாங்க…” அரசு இகழ்ச்சியாய் முறுவலித்தான்.

தேவையில்லாத பேச்சை எடுத்து அளவுக்கு அதிகமாக பேசிக் கொண்டிருக்கும் மனைவியின் மீது மாறனின் கோபம் எல்லை மீற காத்திருந்தது. ஏதோ கல்மிஷம் இல்லாது பேசியவளைப் போல இலகுவாய் பேசி நின்றவளை நோக்கி, தன் பற்களைக் கடித்த வண்ணம் மாறன் “சுபா” என அழுத்தமான குரலில் அழைத்தான்.

இனி அவள் அங்கிருந்து பேசினால் அனைவர் முன்பும் கணவனிடம் அடி வாங்குவது உறுதி என அவளுக்கு பயம் எழுந்தது.எனவே, சுபா தனது பேச்சை அங்கேயே நிறுத்தி விறுவிறுவென தங்கள் வீட்டை நோக்கி நடைப் போட்டாள்.

இவர்கள் உரையாடலை கவனித்த நெருங்கிய உறவினர் ஒருவர் வயதானவர் அனுபவசாலியும் கூட அருகில் வந்து,

“என்னதான் அரசுவுக்கு அப்பா வகையில சொத்து வந்தாலும், உங்க அப்பாம்மா சொத்தில தெரசாக்கு பங்கு கொடுக்கணும் தான மாறா? அதுதானே நியாயம்?” என்றார் மிகத் தெளிவாக…

பொதுவில் தன் மூக்கறுத்த மனைவியை என்னச் செய்வது எனப் புரியாமல் திகைத்து நின்றான் மாறன்.

“மாமா, என் பொண்டாட்டிக்கு கூறு காணாது மாமா… அவ சொல்லுறதை வச்சு என்னையும் சேர்த்து எதையும் நினைக்காதீங்க. அப்படில்லாம் என் கூடப் பொறந்தவளை நடுத்தெருவில நிறுத்திற மாட்டேன்… என்னை நம்புங்க மாமா.” பதிலளித்தான்.

அரசு அடிதடியில் இறங்கும் போதெல்லாம் ஆடிப் போகாதவர்கள் அவனது நிமிர்வானப் பேச்சில் வெகுவாக கலங்கி நின்றனர் எனலாம். இங்கு மாறன் என்றால் அங்கு சூர்யா… அங்கே சூர்யாவின் வீட்டில்…

“என்னை எலேன்னு மட்டு மருவாதி இல்லாம பேசிட்டான் அவன்”

வீட்டிற்கு வந்து உண்டு, உறங்க வந்த பின்னும் மனம் சரியாகாமல் படுக்கையறையில் நிலையில்லாமல் நடை பயின்றுக் கொண்டிருந்த சூர்யாவிற்கு இணையாக கீதாவும் கொந்தளித்துக் கொண்டிருந்தாள். மாறி மாறி கணவனும், மனைவியும் பேசிக் கொண்டிருக்க… பேச்சின் நடுவே,

‘ஏங்க, அந்த பையனை வேணும்னா ஆள் வச்சு தூக்கிரலாமா?” கேட்டவளை விழிகள் தெரிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யா.

அரசுவின் பதிலடிக்குப் பின்னர் கீதாவின் ஆத்திரம் பலவிதமாக அவர்களை தாக்க தொடங்கியது.அது நாள் வரையில் மறைமுகமாக அரசுவை சீண்டிக் கொண்டிருந்த சுரேந்தர் அதனைத் தொடர்ந்து கால்பந்து விளையாட்டினின்று அவனை நீக்கி தான் உட்புகுந்ததும்…

தோல்வியுற்ற அன்று அரசுவிடம் நேரடியாக வம்பு இழுத்ததும் அந்த சண்டையும் அதன் பின்னர் ஏற்பட்ட பிரச்சனைகளால் அரசு தனது ஆத்திரத்தைக் காட்ட வகையில்லாமல் முருங்கை மரத்தை வெட்டி வீசியதும், மாறன் அரசுவை அடித்து வைத்ததுவும் ஆத்திர மிகுதியில் அன்று அமலியின் புகைப்படத்தை நொறுக்க இயலாமல் கோபத்தில் வெளியே சென்றதும் என தொடர்ந்து பல பாதிப்புக்களை ஏற்படுத்திச் சென்றது.

அது வரையிலும் சூர்யாவால் எத்தனை துன்பம் அடைந்திருந்த போதிலும் எதிரொலியே காட்டாமல், ஒன்றும் நிகழாதது போல கடந்துச் சென்ற தெரசா, அரசுவின் நடவடிக்கைகள் அவர்களுக்கு ஒரு வித அலட்சியத்தை உண்டாக்கி இருந்தன எனலாம். அமைதியாகத் தானே இருக்கிறார்கள், என்னச் செய்து விடுவார்கள்? எனும் அந்த துணிவில் தான் கீதா அவர்கள் வீட்டிற்கே வந்து சண்டையிட்டுச் சென்றது. ஆனால், இப்போது அரசு துணிவாக பதில் கொடுத்திருக்க சூர்யா குடும்பத்தினருக்கு அது மிகுந்த பயத்தை கொடுத்து விட்டிருந்தது.

தான் கூறியதைப் போலவே அரசு ஒருவேளை ‘தங்களை விரட்டி விட்டு அந்த வீட்டை கைப்பற்றிக் கொள்வானோ?’ அவர்கள் குடும்பமே கதிகலங்கி போய் இருந்தனர். சட்டரீதியாக அந்த உயிலை சிறிது காலத்திற்கு நிறுத்தி வைக்கும் வண்ணம் சில முன்னேற்பாடுகள் செய்த பின்னரே அவர்களுக்கு சற்றேனும் ஆசுவாசம் உண்டானது.

தொடர்ந்து பல இன்னல்களுக்கு இலக்கான அரசுவும், திண்டாடித் தவித்த தெரசாவுமாக நாட்கள் கழிந்திருந்தன. ஒருவழியாக  தனது இரண்டாம் வருட படிப்பில் தேர்ச்சி பெற்று, அரசு படிப்பின் மூன்றாம் வருடத்தில் கால் பதித்து இருந்தான்.

அதே நாட்களில்…

“ஏன்டி? இங்க பஸ் சீட் காலியாவே இருந்தாலும் கூட லேடீஸ் பக்கத்தில ஜெண்ட்ஸ் உட்காரக் கூடாதாமா? இது என்ன இந்த ஊரு ரூல் புதுசா இருக்கே” என கேள்விகள் கேட்டபடி துறுதுறுவென அந்த கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்தாள் அரசி, பனி அரசி”.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here