மனச் சோலையின் மழையவள்_8_ஜான்சி

0
612

அத்தியாயம் 8

வளன்:

“என்னல புரியுதா?”

அவனது வாய்ஸை மிமிக்ரி செய்தவள்…

“என்னது நீ அன்னிக்கு அப்படியா சொன்ன அரசு?

மறுக்காச் சொல்லு…

மறுக்கா மறுக்காச் சொல்லு…”

கிணிகிணியென வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தவள் மனதிற்குள் நிழலாட வளன் தனது நினைவலைகளினின்று வெளிவந்தான்.

நினைவுகளுக்கூடாக தன்னிச்சையாக தனது அலுவல்களை முடித்திருக்க, லேப்டாப்பினின்று சார்ஜரை நீக்கினான். அவன் புறப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்ட பியூன் எதையோ சொல்ல தவிப்பதைக் கண்டு,

 “என்னாச்சுண்ணா? ஏதாச்சும் சொல்லணுமா?” கேட்டான்.

“அந்த பசங்க உங்க மேல கோபமா இருக்கானுங்க சார், இன்னும் ஒருவனும் வீட்டுக்கும் போகலை… கொஞ்சம் கவனமா இருங்க சார்”

“ஓ சரிங்கண்ணா நான் பார்த்துக்கிறேன்” முறுவலித்தான். தனக்கு முன்னதாக தனது பையை வாங்க கையை நீட்டியவரிடம் தன் பையையும் கார் சாவியையும் கொடுத்து… “இதை உள்ள வச்சிடுங்கண்ணா நான் இப்ப வரேன்”.

சற்று மடித்து விட்டிருந்த சட்டையின் மடிப்பை சரி பார்த்து நீவி விட்டான். இரண்டு கைகளிலும் கழற்றி விட்டிருந்த கையின் பட்டனை இழுத்து அணிந்தபடி நிதானமாய் வெளியே வந்து நின்றான்.

மாலை நேரம் மயங்கி நிற்க, இயல்பு போல வானத்தை பார்த்தவனாக இருந்தான். ‘இந்த செவ்வானச் சிவப்பு அவளுக்கு மிகவும் பிடித்த ஒன்றாயிற்றே?’ சற்று அதன் அழகில் மயங்கியவன் சற்று நேரத்தில் தனது மயக்கம் தெளிந்தான்.

இப்போது அவனது கவனம் பள்ளியின் திடலில் சற்று தூரத்தில் மதியம் முதலாக தீயாய் தகித்துக் கொண்டிருக்கும் அந்த மாணவனும் அவனைச் சார்ந்தவர்களும் குழுமி இருக்கும் இடம் நோக்கித் திரும்பியது.

அவர்களை நோக்கி நடந்த அவனிடம் நேர்கொண்ட பார்வையும், அப்பார்வையில் வெகுவாக கனிவும் இருந்தது. குழுவாக பேசிக் கொண்டிருந்த மாணவர்கள் தங்கள் எதிரே வருகின்றவனை சற்று மிரண்டு போய் பார்த்திருக்க, அவனோ அவர்களது அருகாமையில் சென்று இயல்பாய் பேசி நின்றான்.

பேச்சின் நடுவில் தன்னால் கண்டிக்கப் பட்டு இருந்தவனின் தோளில் கைப் போட்டு அவன் அணைக்கவும் மற்றவர்கள் அவனை அரண்டவர்களாகத்தான் பார்த்திருந்தனர்.

அவர்கள் தங்களுக்குள்ளாக ‘வைஸியை எப்போது எங்கே வைத்து அடிக்கலாம்? எனப் பேசி திட்டமிட்டிருந்தது அவருக்கு தெரிய வந்திருக்குமோ?’ எனும் எண்ணம் கொடுத்த மிரட்சி அது. ஆனால், அவர்களின் முகபாவங்களை கண்டுக் கொள்ளாமல் மதியம் நிகழ்ந்தவைகள் எதையும் நினைவுக் கூறாதவன் போல வளன் மிக சகஜமாக அவர்களுடன் பேசலானான்.

அவர்களுடன் சேர்ந்து ‘அந்த கல்லூரியை மேம்படுத்த இன்னும் என்னென்னச் செய்யலாம்?’ என தனது பல்வேறுத் திட்டங்களைச் சொல்லி அளவளாவிக் கொண்டிருக்க, இளைஞர்களுடனான பேச்சு பரிமாற்றத்தில் சற்று நேரத்தில் சாதாரணப் பேச்சும் கலகலப்பாக மாறி இருந்தது. சுவாரஸ்யமான உரையாடலில் மயங்கிய மாலை இப்போது இருட்டி விட்டிருக்க, ஒரு மணி நேரம் கடந்துச் சென்றதே அங்கிருந்த யாருக்கும் புரியவில்லை.

அந்த உரையாடல் இருபக்கத்தில் இருந்தவர்களிடையில் இருந்தும் பகை எனும் கசப்பு நிரம்பி வழிவதிலிருந்து தடுத்திருந்தது. ஈகோக்கள் தவிர்க்கப் பட்ட நிலையில் சரிசமானமாக இளையவர்களை அவன் அணுகிய விதத்தில் புதிய புதிய ஆக்கமான கருத்துக்கள் அங்கே விவாதிக்கப்பட்டுக் கொண்டு இருந்தன.

விவாதத்தின் முடிவில் ஒரு சில செயல் திட்டங்கள் முடிவுச் செய்யப் பட்டு அதில் இருந்து சிலப் பொறுப்புக்களை அங்கு குழுமி இருந்தவர்களுக்கு வளன் கொடுத்திருந்தான். அவர்கள் கேட்ட ஒரு சில விஷயங்களை உடனே செய்வதாக அவர்களுக்கு நம்பிக்கை அளித்து வளன் திரும்பி வருகையில் அவன் உட்பட மற்ற அனைவர்கள் முகத்திலும் தவிர்க்கவே முடியாமல் மென்னகை சூழ்ந்து இருந்தது.

பள்ளிக் கல்வியை முடித்து, கல்லூரியில் கற்க வந்தாலும் கூட என்ன? அவர்கள் சற்று வளர்ந்த குழந்தைகள் தானே? எதற்காக அவர்களிடம் பெரியவர்களது அணுகுமுறையில் இத்தனை கண்டிப்புகள் மற்றும் கடுமைகள்? இளைஞர்கள் உளவியல் அறிந்து எத்தனை ஆசிரியர்கள் சரியான முறையில் அவர்களை வழி நடத்துகிறார்கள்? என்பது கேள்விக்குறிதான்.

***

அரசு

மூன்றாம் வருட படிப்பு ஆரம்பித்த சில நாட்கள் கடந்திருந்தன.

யாருமே அவனை கண்டுக் கொள்ளாத போதிலும் கூட “இன்னிக்கு ஃபர்ஸ்ட் இயர் பொண்ணுங்க நம்ம காலேஜீக்கு வருவாங்கல்ல?” கள் குடித்த நரியாய் பரசு ஹி ஹியென சிரித்து வைத்தான்.

கல்லூரியின் அதே ஒதுக்குப் புறமான இடம் அதே அரசுவும் அவனது நண்பர்களும். கல்லூரி ஆரம்பித்து சில நாட்களே ஆனதால் வழக்கமான வேகத்தில் பாடங்கள் நடைபெறாமல் குறைவாகவே இருந்தன என்பதால் வகுப்பிற்குச் செல்ல அவசரப் படாமல், அலட்டிக் கொள்ளாமல் வெகு ஜாலியாக அனைவரும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

அன்றைய உரையாடலில் மிக அதிகமாக சிரிப்புச் சப்தம் கேட்டது எனலாம். எப்போதும் போல பேச்சில் கலந்துக் கொள்ளாமல் இருந்தாலும், தனது நட்புக்கள் உரையாடலின் சுவாரஸ்யத்தில் அரசுவும் கூட மெலிதாய் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.

எப்போதோ நடந்த ஏதோ ஒரு சம்பவத்தை செழியன் அத்தனை விவரணையாய் சொல்லிக் கொண்டிருக்க கவினுக்கும், சுப்புவுக்கும் சிரிப்பு தாளவில்லை.

“பேயாம் பிசாசாம் போங்கடா டேய்” சொன்னவாறு சுரேஷ் அங்கிருந்து எழுந்து நடந்தான்.

“பயந்து உச்சா வந்திருச்சு நம்ம சுரேஷிக்கு அதான் போறாப்ல” ஒருவன் சொல்ல “போடா” என்றுச் சொன்னாலும் அவன் சென்றது அவர்கள் சொன்ன இடத்திற்குத்தான்.

“உண்மைடா, நம்புங்கடா அந்த பனைமரம் நிறைய இருக்கில்ல அந்த காட்டுலதான், நட்ட நடு மத்தியானம் போனா இப்பக் கூட அந்த பேயை பார்க்கலாமாம்” சொன்னதை அங்கு எவனும் நம்புவதாக இல்லை.

அப்போதுதான் பரசு அங்கு வந்து நின்று இளித்து வைத்தது நடந்தது.

“என்னடா இவன் இன்றைக்கு காட்டு கொரில்லா மாதிரி இளிக்கிறான்?” கவின் கிசுகிசுப்பாக கேட்டு வைக்க,

குபீரென சிரித்து வைத்த சுப்பு “இன்னிக்கு ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடன்ஸ் ஜாயின் செய்றாங்க இல்லையா? இப்ப இவர் செகன்ட் இயருக்கு மாறிட்டதால சீனியராம். அதனால இவ்…வர் ஃபிகருங்களை மடக்கப் போறாராமாம்…”

“அதுக்கு ஏன் பயபுள்ள இங்க இந்த ஓரம் வந்து நிக்குது?”

திரும்ப வந்த சுரேஷ் இவர்கள் பேச்சில் இணைந்துக் கொண்டான்.

ஏற்கெனவே தான் சீனியர்னு அவனுக்கு ஒரு மெதப்பு அதில தர்ட் இயர் ஸ்டூடன்ஸ் நம்ம கூட இருந்தா கெத்துன்னு நம்ம கூடவே இவன் சுத்திட்டு திரியுறான்.” என்றான் சுப்பு.

“ பொண்ணுங்க யாராவது வந்து உங்க க்ரூப்ல இருக்கிற இவன் எங்களை தொல்லை பண்ணுறான்னு இவனைப் பத்தி எதையாவது சொல்லிச்சுன்னு வச்சுக்கோ அரசு இவனை வச்சு அடி வெளுக்க போறாம் டோய்” செழியன் கிசுகிசுத்தான்.

“அதென்னவோ உண்மைதான்… கூட இத்தன நாளு சுத்தியும் இவனுக்கு அரசு பத்தி தெரியலை. அடி வாங்கிட்டு தான் போவான் போலிருக்கு” கண்ணடித்தான் கவின்.

“விடுங்கடா… என்னதான் நடக்கும்னு பார்ப்போம்” அனைவரும் ஆர்வமாய் பரசுவையே கவனித்து இருக்க அங்கு தூரத்தில் அது வரை முதலாமாண்டு படிக்கும் பெண் ஒருத்தியிடம் பேசிக் கொண்டிருந்த ஸ்டெஃபின் இவர்கள் குழுவாக அமர்ந்திருக்க இங்கு வந்து நின்றான்.

“யார்டா அது?” அவனுக்கேயுரிய அலட்டாத தோரணையில் ஸ்டெஃபின் உரையாடிக் கொண்டிருந்த பெண்ணைக் குறித்து கவின் விசாரித்தான்.

“என் தங்கச்சி, சித்தி மக அதான் காலேஜ் பத்தி அவ என் கிட்ட கேட்ட ஒரு சில விபரங்கள் சொல்லிட்டு வந்தேன்”, அவன் சொன்ன விதத்திலேயே ‘யாராவது அவ கிட்ட வச்சுக்கிட்டீங்க மவனே’ எனும் தோரணை இருந்தது.

பரசு அதனைக் கேட்டு சுதாரித்துக் கொண்டான், ஆனாலும் கூட தன்னையறியாமல்…

“வாவ்வ்வ்” என்றுச் சொல்லி வைக்க…

தன் தங்கையையோ எனும் கடுப்பில் “யாரடா வாவ்னு சொன்ன? என எகிறினான்.

“அங்க பாருங்கடா ஒரு ஸ்டைலான பொண்ணை… பொறுங்க இதோ அறிமுகப்படுத்திக் கிட்டு வரேன்.” அவசரமாக கையையே சீப்பாக பாவித்து, தனது முடியை திருத்திக் கொண்டு, முகத்தை கர்ச்சீஃபினால் அழுந்த துடைத்துக் கொண்டு வெகு மிதப்பாக அங்கிருந்து நகர்ந்த அவனை அரசுவின் நண்பர்கள் அசுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

சற்று நேரம் கடந்திருந்தது…அதே பேய்க் கதை மாறி இப்போது சுரேஷ் அவன் வீட்டில் யாரோ சொன்னக் கதையைக் குறித்துப் பேச ஆரம்பித்தான். மற்றவர்கள் ஒவ்வொரு சீனுக்கும் ஒவ்வொரு நையாண்டி செய்ய கலகலத்துக் கொண்டிருந்தனர்.

ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த அரசுவின் அருகில் யாரோ அமருவதை அவன் உள்ளுணர்வில் உணர்ந்தாலும் கூட, முதலில் அது தன் நண்பர்களுள் யாரோவாக இருக்கும் என வாளாவிருந்தான்.

‘இந்த பெர்ஃப்யூம் வாசனை… நல்ல காலத்திலயே குளிக்க மாட்டானுங்க… இது அவனுங்களா இருக்க வாய்ப்பு இல்லையே?’ சட்டென திடுக்கிட்டு திரும்பியவன் பார்த்தது தனது நண்பர்களின் அதிர்ந்த முகங்களைத் தான்.

“இங்கல்லாம் பாய்ஸ் கூட கர்ள்ஸ் பேசக் கூடாதா? பக்கத்தில எல்லாம் உட்காரக் கூடாதா? அப்படியா?” அவனிடமே கேட்டு வைத்தாள் அவள் அவனருகில் அமர்ந்திருந்தவள்.

வட்ட முக வடிவம், துறுதுறுப்பான கபடமில்லாத கண்கள், மாநிறம், விரித்து விடப்பட்டிருக்கும் கூந்தல், நேர்த்தியான அயர்ன் செய்யப்பட்ட சுடிதார், அதன் மேல் பின் செய்யாமல் அலட்சியமாய் ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும் துப்பட்டா பார்த்தவுடன் ஒரு வகை ஈர்ப்பை ஏற்படுத்தும் நேர்த்தி அவளிடம் இருந்தது.

அலட்டாமல் பேசிய விதத்தில், கேட்ட கேள்வியில் ஊருக்கு புதுசு எனும் செய்தி இருந்தது. அலட்டாத, அகம்பாவமில்லாத அந்த பேச்சு அதுதான் அவளை கூர்ந்து கவனிக்கச் செய்தது எனலாம்.

முன் பின் அறியாதவள் அவளிடம் எதையாவதுச் சொல்லி எதற்கு வேண்டாத வம்பு? என்று அரசு தன் அமைதியை தொடர்ந்தான்.

“நான் அரசி, பனி அரசி நீங்க?”

கைக்குலுக்க தனது கரத்தை நீட்டி இருந்தாள். தயக்கமாய் அவளை நோக்கி இவனது வலக்கை நீண்டது, கை குலுக்கியதும் இவனும் தயங்கியவனாக தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான்.

எதைப் பேசினாள் எனத் தெரியாது எனினும் பேசிய சில நிமிடங்களுக்குள்ளாக இனிதாக சுவாரஸ்யமாக, உற்சாகமாக இன்னும் என்னென்னமோவாகப் பேசினாள்.

பத்து நிமிடம் கழிந்திருக்கும் அங்கிருந்து எழுந்தவள் “ஃபர்ஸ்ட் இயர் காமர்ஸ் க்ளாஸ் எங்கன்னு சொல்லுறீங்களா அரசு?” கேட்டு வைக்க, அவன் சாவி கொடுத்த பொம்மைப் போல அவளோடு எழுந்தான். வழிகாட்டுவதோடு நில்லாமல் அவள் கேட்டதற்கு இணங்க அவளோடு கூடவே நடந்தான்.

அவள் வளவளத்துக் கொண்டே அங்கிருந்து அவனோடு தனது வகுப்பின் பகுதி வரும் மட்டும் கடந்திருக்க, பதில் பேசத் தெரியாமல் அவளுடன் அரசு நடை பயின்றான்.

ஒரு நாளும் இல்லாத திருநாளாக இது என்ன? என கல்லூரியே அவர்களை வினோதமாக பார்த்து வைத்தது.

பொதுவாகவே ஆண்களும் பெண்களும் சகஜமாக பேசும் சூழல் அங்கு இல்லை. அது ஒரு விஷயம் என்றாலும் கூட யாருடனும் சகஜமாக பேசி பார்த்திராத அரசு ஒரு பெண்ணுக்கு தலையசைத்து பேசிச் செல்வது அதிர்ச்சியையே ஏற்ப்படுத்தி இருந்தது.

பனி அரசியின் துணையாக கல்லூரி வாயில் வரையிலும் வந்திருந்த லல்லி தனது பள்ளித் தோழியைக் கண்டதும் அரசியை மறந்து அங்கிருந்து மாயமாய் மறைந்து விட்டிருந்தாள். இப்போது அந்த லல்லி அவர்கள் எதிரில் திடீரென பிரசன்னமானாள்.

“வாடி” அரசியை கையைப் பிடித்து இழுத்தவாறே நகர, அரசியோ அரசுவிடம் ஏதோ சொல்ல திரும்பினாள்.

லல்லி வந்து இவளை இழுத்த வேகத்திற்கு அவனுக்கு நன்றிதான் சொல்ல முடியவில்லை என்றாலும் விடைப் பெறுவதற்காக குறைந்த பட்சம் வருகின்றேன் என விடை பெறலாம் என அரசி அவனுக்கு “பை” சொல்ல கை நீட்ட லல்லி அதனை இழுத்து மடக்கினாள்.

“லல்லி திஸ் இஸ் டூ மச், அரசுக்கு என்னை தேங்க்ஸ் கூட சொல்ல விடல நீ”

“இப்ப என்னத்துக்கு தேங்க்ஸ் சொல்லணும் நீ, சும்மா வாடி”

“நீ என்னை அம்போன்னு விட்டுட்டு போயிட்ட அங்க ஒருத்தன் ரொம்ப வழிஞ்சான்.அப்ப எனக்கு திடீர்னு பயமா ஆகிடுச்சுன்னு இவங்க க்ரூப் கூட போய் உட்கார்ந்திருந்தேன். சீனியர்ஸா இருந்திருந்தும் கூட எவ்வளவு அடக்கமான நல்ல பசங்க தெரியுமா? இவங்க க்ரூப் மட்டும் யார் கூடவும் வம்பிழுக்காம, அமைதியா உட்கார்ந்திருந்தாங்க. நான் கேட்கவும் க்ளாஸ் வரைக்கும் கூட அரசு துணைக்கு வந்தாங்க… அப்ப நான் அரசுக்கு நன்றி சொல்லணும்ல? நீ என்னடான்னா என்னை பை கூட சொல்ல விடல” கடுப்பாகி லல்லியிடம் அவள் கத்தினாள்.

“யம்மா தாயே உனக்கு உதவிக்கு நல்ல ஆளுங்க கிடைச்சாங்க போ. அவங்க பொண்ணுங்க விஷயத்துலதான் அமைதி மத்த விஷயங்கள்ல… சரி அதை அப்புறம் சொல்லுறேன். மறுபடி அவங்க கிட்ட போய் பேசுனயோ உங்க அப்பாட்ட சொல்லி தோல உரிச்சு உப்புக் கண்டம் போடச் சொல்லுறேன் பொறு”

“ஏ போடீ, ரொம்பத்தான் அதற்கு முன்னால நீ என்னை கேட்லயே விட்டுட்டு உன் ப்ரெண்ட் கூட ஓடிட்டேன்னு உங்கப்பாட்ட சொல்லி உன் எலும்ப எண்ண வைக்கிறேன் பாரு”

“போடீ”

“டேய் போடீ” எனும் போராட்டம் முடிவடைவதற்குள் அவர்களது வகுப்பில் ஆசிரியர் வந்து தன்னை அறிமுகப் படுத்த ஆரம்பித்திருந்தார்.

அரசியின் பேச்சில் நடந்தவைகளை கிரகித்துக் கொண்டவன் திரும்ப வந்ததும் செய்தவையோ வேறு…

“பொண்ணுங்க பின்னாடி சுத்துரவன், பொண்ணுங்களுக்கு டார்ச்சர் கொடுக்கிறவன் இனி இங்க வந்து எங்க கூட உட்காரக் கூடாது, உன்னால எங்க பேரும் கெட்டுப் போகறதுக்கா? இனி உன்னைப் பார்த்தேன் அடிப் பின்னிடுவேன்” முதுகில் ஒன்றிரண்டு அடிகள் போட்டே அந்த ஒருவனை அங்கிருந்து அரசு அங்கிருந்து விரட்டி இருந்தான்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here