மனச் சோலையின் மழையவள்_9_ஜான்சி

0
729

அத்தியாயம் 9

ஒரு வாரகாலம் கடந்திருந்தது.

அரசு துரத்தி விரட்டிய பரசுவோடு ஸ்டெஃபினும் காணாமல் போக, பனி அரசி அவர்களது குழுவில் எப்போது நுழைந்தாள் எனத் தெரியாமல் ஐக்கியமாகி இருந்தாள். கல்லூரி முடிந்த பின்னரான நேரத்தில் தன்னை அழைக்க வீட்டிலிருந்து கார் வரும் வரையில் அவர்களோடு கூட அமர்ந்து அரட்டை அடிப்பது அவளது வழக்கமாகி இருந்தது. அவள் பையில் இருக்கும் கனமான டிஃபன்களும் அப்போதுதான் அவர்கள் கைவசம் வரும்.

வழக்கமாக புதியவர்கள் எவருடனும் சட்டென்று சகஜமாக பேசாத அரசு அவளுடன் இப்போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் பேசவும் ஆரம்பித்து இருந்தான். அவளது லேட்டஸ்ட் மொபைல் போனில் சுப்புவும், சுரேஷீம் ஆராய்ச்சி செய்துக் கொண்டிருக்க அரசு, பனி அரசியோடு கூட பேச்சில் கவினும், செழியனும் இணைந்திருந்தனர்.

ஆரம்பத்தில் அரசியை தங்கள் குழுவில் அனுமதித்த அரசுவின் செய்கை அவனது நட்புக்களுக்கு ஆச்சரியமாகத் தோன்றியது. ஆனால், அதன் காரணம் தெரிந்ததும் “ஓ இதுதான் காரணமா?” என்று அமைதி அடைந்தனர்.

அன்றைய தினம் அரசு அரசியை அவளது வகுப்பு வரையிலுமாக கொண்டு விட்டதை அவன் மாமா காதுகளுக்குள்ளாக யாரோ கொண்டுச் செல்ல, வழக்கம் போல மாறன் வீட்டில் வந்து அவனை குற்றவாளியைப் போல விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார். ‘நான் ஒன்றும் செய்யாமலேயே சும்மா சும்மா பழி சுமத்தினால் எப்படி? இவர் என்ன என்னை யாருடனும் பேச, பழக கூடாதென்பது?’ எனும் எண்ணம் அவன் மனதில் முளை விட்டிருந்து இருக்கின்றது.

“பெரிய இவரு மாமாவாம் மாமா… நான் அன்னிக்கு அந்த பொண்ணு கூட பேசவே இல்ல. ஒன்னுமே இல்லாத விஷயத்துக்கு வீட்டுக்கு வந்து வத்தி வைக்குறார். இந்த பொண்ணும் அடுத்த நாளே வந்து நான் உங்க க்ரூப்ல வந்து சேரட்டுமான்னு கேட்டுச்சா? சரின்னு சொல்லிட்டேன்” என்றிருந்தான்.

“இவன் என்னமோ சும்மாதான் இருக்கான், இவன் மாமாதான் இவன சும்மா சும்மா தூண்டி விடுறது…”  தங்களுக்குள்ளாகப் பேசி மண்டையை ஆட்டிக் கொண்டனர்.

அரசி… தன் கையில் இருந்த தாளை சதுர சதுரமாக மடித்து, வெட்டி  நிமிடங்களுக்குள்ளாக ஏதேதோ செய்துக் கொண்டிருந்தாள். வெட்டிப் பயல்கள் வெட்டியாக பேசும் அந்த இடத்தை இப்போது அவளது கைவினைப் பொருட்கள் அலங்கரித்துக் கொண்டிருந்தன.

இது சொளவு, இது பெட்டி, இது பூவு… இது தவளை இதோ இதை இப்படி சுண்டி விட்டா தவளை ஜம்ப் அடிக்கும்… அவள் செய்யவும் அந்த காகித தவளை ஒரு எம்பு எம்பி சற்றுத் தள்ளி விழுந்தது.

குட்டி குட்டியாக பார்க்கவே அத்தனை அழகாக இருந்தவைகளை அவர்கள் ஆர்வமாகப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

“இத்துணூண்டு தாளில் என்னவெல்லாம் செஞ்சிட்ட அரசி, சூப்பர் போ” செழியன்

“எனக்கெல்லாம் எங்க டீச்சர் தாளில் கப்பல் மட்டும் தான் சொல்லித் தந்தாங்க, ஃப்ராடு டீச்சர்” இப்போது கவின் புலம்ப அவள் கிணிகிணியெனச் சிரித்தாள். அரசுவுக்கு அவளைப் பார்க்க வளர்ந்தக் குழந்தை போலவே இருந்தது.

“இப்படி நிறைய செய்யலாம், என் ஃபிரண்டு தான் இதை எனக்கு கத்துக் கொடுத்தா, அப்புறம் அப்பா ஆஃபீஸிக்கு ஒரு ஜப்பானீஷ் வெண்டர் வர்றதா இருந்தன்னிக்கு ஏதேச்சையா நான் ஆஃபீஸ் போயிருந்தேன். அவர் தன் கையில் இருந்த காகிதப் பூவை என் கையில் கொடுத்துட்டு போயிட்டாரா…”

வழக்கமாக தங்களுக்குள் கதை பேசி பறிமாறிக் கொள்பவர்கள் இப்போது அவளது கதைக்கு ஊம் கொட்டிக் கொண்டு இருந்தனர்.

“அவர் பிசினஸ் பேசிட்டு வரும் முன்ன நான் அதைப் பிரிச்சுப் பார்த்து எப்படி மடிக்கணும்னு கண்டுப் பிடிச்சு அது போலவே ஒரு பூ செஞ்சு அவருக்கு திருப்பிக் கொடுத்திட்டேன்ல…அதைப் பார்த்திட்டு அவர் ஆச்சரியப்பட்டார் தெரியுமா?”

“நீ பெரிய கலை வல்லுணி பாப்பா” இது சுரேஷ்

“ஜப்பான்ல இதுக்கு ஒரிகாமின்னு பேராம்ணா”

“ஓ”

“இதற்கான கோர்ஸ் இருக்கு… இந்த க்ராஃப்ட் செய்யறதுக்குன்னே அதற்கேற்ற விதத்தில் தாள்கள்லாம் கிடைக்குது தெரியுமா?”

அவள் முகத்தில் புன்முறுவல், கைகளில் தாளை வேகவேகமாய் நுணுக்கமாய் மடிக்கும் இலாவகம். தன்னை யாராவது பாராட்ட வேண்டும், முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனும் அவள் குழந்தை மனம் அவர்களுக்கு புரியாமலில்லை.

பேச்சு பேச்சாக அவர்களைக் குறித்து நிறைய விஷயங்களை கேட்டுத் தெரிந்துக் கொண்டாள். அவளும் தன்னைப் பற்றி பகிர்ந்துக் கொண்டாள். சிறுவயதிலேயே தாயின்றி வளர்ந்ததும், தற்போது அப்பாவின் உடல்நிலை காரணமாக மும்பையிலிருந்த சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டு ஓய்வாக இருக்க தாயகம் திரும்பியதையும் அவர்களுக்குத் தெரிவித்திருந்தாள்.

அரசுவின் அம்மா டீச்சர் எனவும் “ உங்க அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்டோ?” எனக் கவலையாக கேட்டுக் கொண்டு இருந்தாள். மற்ற விஷயங்களை யாரும் பகிர்ந்துக் கொண்டிருக்கவில்லை.

அவள் கேட்டதற்கு அவன் பதில் சொல்லாமலிருக்க மற்றவர்கள் தான், “அதெல்லாம் ஸ்ட்ரிக்ட் இல்ல, அவங்க எல்லோருக்கும் ரொம்ப பிடிச்ச டீச்சர் தெரியுமா?” சரி என தலையாட்டிக் கொண்டாள்.

உடன் பிறந்த சகோதரங்கள் தனக்கு இல்லாததாலேயே சுரேஷ் அவளை பாப்பாவென அழைக்கவும் அவனை உடனே தனது அண்ணனாக வரித்துக் கொண்டிருந்தாள். அவனைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் அவனுக்கு நட்புக்களாம்.

“எனக்கு அங்கே ஊர்ல யாருமே பிரண்ட் இல்ல தெரியுமா? வீட்லயும் இல்ல இங்க காலேஜ்லயும் என் கூட யாரும் ஃப்ரெண்ட்லியா இருக்க மாட்டேங்குறாங்க, லல்லிக்கு இங்க ஏற்கெனவே ஏகப்பட்ட ஃப்ரெண்ட்ஸ். அவ எனக்கு டைமே தர மாட்டேங்கிறா… நான் உங்க கூட இங்க இருந்தா உங்க யாருக்கும் டிஸ்டர்ப் ஆகாது தானே?”

“அதெல்லாம் ஒன்னும் டிஸ்டர்பன்ஸ் இல்ல, நீ பாட்டுக்கு வா போ, ஆனா அந்த டிஃபன் பாக்ஸ் கூடுதலா ஒன்னு கொண்டு வந்திடணும் அதுதான் நீ எங்களுக்கு தர்ற மாமூல்… என்னப் புரியுதா?”

நறுக்கிய பழங்கள் அடங்கிய டிஃபன் பாக்ஸை காலி செய்து சப்புக் கொட்டியவாறு திருப்பிக் கொடுக்க, வாங்கி தனது பையில் வைத்துக் கொண்டிருந்தாள்.

“ஹப்பாடா… இப்பதான் நிம்மதியா இருக்கு, டிஃபன் சாப்பிடாம திருப்பிக் கொண்டு போய் தினம் தினம் நான் வீட்ல திட்டு வாங்கிட்டு இருந்தேன். உங்க ஹெல்ப்புக்கு தேங்க்ஸ்”

“ஆஹா இப்படி ஹெல்ப் செய்ய நாங்கள் காத்திருக்கிறோம் தாயே” சுப்பு சிரித்தான்.

அவளது போன் ரிங்க் ஆகவும்,

“போ அரசி உன் டிரைவர் கால் தான்” போனை நீட்டினான் கவின்.

“பாய் (bye)” சொன்னவள் கையை ஆட்டி விட்டு வாயிலை நோக்கி விரைந்துச் சென்றாள்.

அவள் விட்டுச் சென்ற காகித பொம்மைகள் அவர்களோடு அமைதியாக அமர்ந்து இருந்தன.

அரசியின் வரவு அவர்களுக்குள்ளாக பெரிதான மாற்றங்கள் ஏற்படுத்தி இருக்கவில்லை. பெண்பிள்ளை என்பதால் அவளுக்கு பாதுகாப்பு அரண் போல இடைவெளி விட்டே அமர்ந்து அனைவரும் பழகுவர், அதிலும் தன்னை அரசி அண்ணாவென சொன்னதிலிருந்து சுரேஷ் செய்யும் அக்கப் போர்களுக்கு கணக்கில்லை எனலாம்.

“விட்டா நிலா நிலா ஓடி வான்னு நிலா காட்டி சோறூட்டுவான் போலிருக்கு” என மற்றவர்கள் கிண்டலடிக்கும் அளவிற்கு “பாப்பா, பாப்பாவென” அவனது அலப்பறைகள் இருந்தன.

அவளும் அவர்களுக்குத் தெரியாத விதவிதமான விஷயங்களைப் பற்றிப் பேசுவாள். சாப்பிட கூடுதலாய் கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுப்பாள். அவ்வப்போது இவர்கள் கேட்கும் ஹிந்தி வார்த்தைகளுக்கு அர்த்தமும் சொல்லிக் கொடுப்பாள்.

ஆனால், அரசுவைச் சுற்றி எப்போதும் எல்லாமும் நன்றாக இருந்ததாக சரித்திரம் இல்லையே? யாருக்கோ மூக்கு வியர்த்தே விட்டிருந்தது.

வழக்கமான மற்றொரு நாள்…

“சரி உன் பிரண்ட் அன்னிக்கு உன்னை தரதரன்னு இழுத்திட்டு போனப்ப அரசு பற்றி, எங்களைப் பற்றி என்னச் சொன்னா?”

“அதுவா? அதைச் சொன்னா நீங்க என் பிரண்ட தப்பா நினைப்பீங்க”

“அதெல்லாம் நினைக்க மாட்டோம், சொல்லு…”

“அது… அவ மட்டும் இல்ல மத்தவங்களும் என் கிட்ட இது தான் சொன்னாங்க”

“என்னதுன்னு சொன்னாதானே தெரியும்?”

“நீங்கல்லாம் ரொம்ப மோசமானவங்க… காலேஜ் ரவுடிகள்னு சொன்னா, உங்க கூட பேசக் கூடாதுன்னு சொன்னா…”

“ஓ, ஆமா நாங்கலாம் ரவுடிங்கதான், மூஞ்ச பார்த்தா டெரரா இல்ல?” கிண்டலாய் கவின் கேட்க…

“இல்லியே” அவள் பதில் அவர்களை ஆச்சரியப் படுத்தி இருக்க வேண்டும்.

“எல்லோரும் அப்படிச் சொல்லியும் நீ எங்க கிட்ட வந்து பேசுறியே எப்படி?”

பதில் தெரிந்துக் கொள்ள அரசுவும் தலை நிமிர்ந்து பார்த்தானோ…

“ஏன்னா… என் மனசுக்கு நீங்க எல்லோரும் நல்லவங்கன்னு தோணுச்சு அதனாலத்தான் எல்லோரும் என்னென்னவோ சொல்லியும் உங்க எல்லோர் கிட்டேயும் வந்து பேசுறேன்”

“நிஜமாவா?” இது செழியன்

“ஆமா நிஜமாவே தான். ஏன்னா நான் பார்த்த வரையிலும் நீங்க யார் கிட்டயும் வம்பிழுக்கிறது இல்ல. உங்க வேலை உண்டு நீங்க உண்டுன்னு இருக்கிறீங்க, ஒருவேளை யாராச்சும் வந்து வம்பிழுத்ததால, நீங்க சண்டை போட்டிருக்கலாம்னு தோணுச்சு”

தனது கருத்தை அரசி பகிர்ந்துக் கொண்டு இருக்க, மற்றவர்கள் வியந்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். வீட்டினர், உறவினர்கள், கல்லூரி நிர்வாகம் முதலாக அவர்களைக் குறித்து யாரும் யோசிக்காத கோணமல்லவா அது.

“உங்க கூட ப்ரெண்ட் ஆனதால இப்ப எனக்கு ஒரு அண்ணாவும் ஃப்ரீயா கிடைச்சுட்டாங்க…”

“ஆமாமா, இங்க ஒரு பாப்பாக்கு ஒரு அண்ணா ஃப்ரீயா கிடைச்சுட்டார்” ஒருவன் விளையாட

“ஃப்ரீ, ஃப்ரீ ஃப்ரீ” மற்றவன் பதில் கொடுக்க

அங்கே அந்நேரம் வம்பிழுக்கவெனவே வந்திருந்த ஒருவன்….

“என்னது பொண்ணு ஃப்ரீயா? அதானப் பார்த்தேன்…” என்னச் சொல்லி இருப்பானோ அதற்கு மற்றவர்கள் எழுந்து பதில் கொடுக்கும் முன்பாக அரசு அவனை அடித்ததில் அங்கு இரத்தம் தெரித்திருந்தது.

“மத்த வீட்டு பொண்ணுங்க பத்தி பேசும் முன்ன யோசிச்சுப் பேசணும், என்ன புரியுதா?” ஆங்காரமாய் நின்ற அரசு பனி அரசிக்கு புதிதானவன், சட்டென்று விளையாட்டு வினையாய் மாறிய நிலவரம் கண்டு சிறுபிள்ளையாய் மிரண்டுப் போய் நின்றாள்.

அதே நேரம் அலைபேசி இசைக்க, “நீ போம்மா”

அதிர்ந்து நின்றவளின் பையில் அவர்களாகவே டிஃபன்களை வைத்து, கையில் மொபைலை திணிக்க, சுரேஷ் அவளை கார் வரையிலும் சென்று வழியனுப்பி வைத்தான்.

அதன் பின் தான் அரசியின் இலக்காக அரசு ஆகினான். அவனை புத்தனாக்கும் முடிவோடு அவளிருக்க, அவன் என்னவாவான்?

அவளின் படையெடுப்புகளின் முடிவில் கவிதைக்கு ஸ்பெல்லிங்க் என்ன? என அறியாதிருந்தவன் தனது புத்தகத்தின் பின்னட்டையில் கிறுக்க ஆரம்பித்தில் வந்து முடிந்திருந்தது.

மனிதர்கள் வரவிரும்பா

வெற்று வெட்டவெளி நான்.

என்னிடம் ஆர்வமாய் வந்து,

 என் உள்ளம் நிரப்பியவள் நீ.

கால் பதிப்போர் தாம் புதையும்,

 ஆழமிக்க மணல் நான்.

என்னுள் புதைந்த புதையல் நீ

எப்போதும் சுடும் காற்றில்,

 சுழலும் சூறாவளி நான்.

மென்மையாய் வருடிச் செல்லும்.

 தென்றல் நீ.

தாகத்தில் துடிக்கச் செய்யும்,

 ஈரப்பதமற்றக் கானல் நான்.

அன்பு மழை எனில் பொழிந்து,

 என் வாழ்வில்

அழகுமிக்க ரோஜாக்கள் மலரச் செய்தவள் நீ.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here