மனதோரம் உந்தன் நினைவுகள்_1_ஜான்சி

0
603

ஆசிரியர் உரை:

“மனதோரம் உந்தன் நினைவுகள்” எனும் எனது இந்த நாவலுக்கு பெரும் வரவேற்பு கொடுத்த, அனைத்து வாசக நட்புக்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாவல் மற்றும் எனது “தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!” எனும் நாவலுக்கும் தனது தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் புலமையால் உதவிய தங்கை திவ்யா அவர்களுக்கும் எனது அன்பையும் நன்றிகளையும் உரித்தாக்குகின்றேன்.

அன்புடன்,

ஜான்சி

 ManathOram Unthan NinaivukaL_Epi 1_Jansi

அத்தியாயம் 1

கனவுகள்

உன் நினைவுகளிடமிருந்து

தப்பிக்கும் மார்க்கம் அறியாது

உறக்கத்தை நாடினால்

அங்கேயும் வந்து

கனவுகளை திருடிவிடுகிறாயே?

அடித்துப் போட்டார் போல தூங்கிக் கொண்டிருந்த மகளை கவலையாக பார்த்து விட்டு நகர்ந்தார் தங்கம்.

“மீரா மீரா இன்னுமா எழுந்துக்கலை அவ?” மகளுக்கு குரல் கொடுத்த மனோகர் மனைவியிடம் கேள்வியை நிறுத்தினார்.

“இந்தப் பொண்ணு என்னிக்கு வேலை விசயமா வெளியூர் போயிட்டு வந்ததோ அன்னிலருந்து இப்படித்தான் ஒரே தூக்கம். அப்படி என்ன தூக்கமோ?”தங்கம் பதிலளிக்க,

அரைத் தூக்கத்தில் இருந்தவள் பெற்றோர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு தன்னை சுதாரித்துக் கொண்டு, அவசரமாய் எழுந்து அரை மணி நேரத்தில் அலுவலகம் செல்ல புறப்பட்டு நின்றாள்.

“அடடே என் பொண்ணை நீ குறை சொன்னே இல்லையா? இப்ப பாரு எப்படி டான்னு வந்து நிக்கிறா? அவ என்னை மாதிரி சுறு சுறுப்பாக்கும்”

“ஓ உங்களை மாதிரியா?” தங்கம் எடுத்துக் கொடுக்க, அவர் சிரித்தார் மீராவின் முகமும் சற்று சிரிப்பை அணிந்ததோ?

அவசரமாக அம்மா செய்து வைத்த டிஃபனை எடுத்து தனது பைக்குள் வைத்தவள் காலை உணவை உண்ணாமலே புறப்பட, இட்லியும், பொடியுமாய் காலை உணவும் அம்மாவால் அவளது உணவு பையினுள் திணிக்கப் பட்டது.

“வரேன் மா, வரேன் பா”

அமைதியாய் அங்கிருந்து புறப்பட்டாள் மீரா. ஆம் அவள் எப்போதுமே அப்படி ஒரு அமைதிதான். யாரையும் புண்படுத்த தெரியாத குணம், தேவைக்கு அதிகமாக பேசுவதில்லை. காரணம் என்னவென்று யாராகிலும் கேட்டால் “அமைதியாக இருந்து என் எனர்ஜியை சேமிக்கிறேன்” என அவள் புன்னகைத்துச் சொல்லும் விதத்தில் அது அவளது இயல்பு அதை தவறாக எடுத்துக் கொள்வானேன்? என்றுதான் பிறருக்கும் தோன்றும்.

பல நேரங்களில் இவளது அமைதி குணத்தின் காரணமாகவே பிறர் அவள் தலையில் அதிகமாக வேலையை கட்டுகிறார்களோ? எனத் தோன்றும் படி இருக்கும். ஆனால், அவளது திறமையினால் இந்த 25 வயதிற்குள்ளாக நல்லதொரு பதவியில் இருந்தாள். அடுத்து மேனேஜர் பதவிதான் அவளது இலக்காக இருந்தது.

சமீபத்தில் புதிய ப்ரோஜெக்ட் ஒன்றிற்காக அவள் ஹைதராபாத் சென்று திரும்பியதில் இருந்து இன்னும் அதிகமான அமைதியில் தன்னை அவள் மூழ்கடித்துக் கொண்டாள்.

மீராவின் தங்கைகள் சித்ரா, சுசித்ரா இருவரும் கல்லூரியில் படித்துக் கொண்டு இருப்பவர்கள். தந்தை மனோகர் மொத்த சந்தையில் இருந்து பொருட்களை வரவழைத்து, சில்லறை வணிகத்தினருக்கு கைமாற்றி விடும் வியாபாரங்கள் சில செய்து வருகின்றார். தாய் வீட்டை கவனித்துக் கொண்டே துணி வியாபாரம் செய்து வருகின்றார். மத்திய வர்க்கம் ஆனால் மகிழ்ச்சியான குடும்பம்.

அலுவலகத்தில் பாதி வேலையில் இருக்கையில் அவளது டைரக்டர் சுஜித்தின் அழைப்பு வர என்னவென்று கேட்க அன்று அவளுக்கு பத்து கேண்டிடேட்களிடம் இண்டர்வ்யூ நடத்த வேண்டியது இருந்தது.

மூன்று முதல் நான்கு சுற்று நேர்முகத் தேர்வுகளில், முதலாவது நேர்முகத் தேர்வில் வடிக்கட்டப்பட்டவர்களுக்கான இரண்டாம் சுற்றில் ஆபரேஷன் லீடராக மீராவை அன்று தெரிவுச் செய்ய அழைத்திருந்தனர். அவள் பணிபுரியும் அலுவலகம் ஜெனரல் இன்சூரன்ஸ் க்ளெயிம்களை தங்கள் க்ளையண்டுகள் சார்பாக அனுப்பும் அலுவலமாகும். அது யூ கே வை மையமாகக் கொண்ட அலுவலகம். அவர்கள் தங்கள் அலுவலகத்தில் பணிபுரிவோருக்கான தகுதி நிர்ணயத்தை எப்போதும் மிக உயர்வானதாகவே வைத்திருப்பர்.

மீராவும் தனது தெரிவுகள் சிறந்ததாக இருக்க வேண்டும் என்பதாக மெனக்கெடுவாள். அந்த நேர்முகத் தேர்வுகளைத் தவிர்த்தும் கூட இன்னுமாக இருந்த தனது தினசரி வேலைகளை அவள் முடிக்க வேண்டியது இருந்தது. எனவே, தனது நேரத்தை வீண் செய்ய விரும்பாதவளாக, தான் நேர்முகத் தேர்வு செய்ய வேண்டியவர்களின் விபரங்கள் அறிய மனித வளத்துறையினர் பகுதியை நாடிச் சென்றாள்.

அன்று அந்த பிங்க் நிறச் சேலையில் அன்று அவளது அழகு கொஞ்சம் தூக்கல் என்றுதான் சொல்ல வேண்டும். ஹெச் ஆரிடமிருந்து விபரங்கள் பெற்றுக் கொண்டவள் நேர்முகத் தேர்வுச் செய்ய வேண்டி ரிசப்ஷனிற்குச் செல்ல, அங்கிருந்த எல்லோரது கவனமும் அவள் மீது வந்து குவிந்தது.

அவள் பொதுவாக அந்நியர்கள் யாருடைய கவனத்தையும் அதிகமாக ஈர்க்க விரும்பாதவள் அதனால் அந்த கவனமீர்த்தலில் கொஞ்சமாக சஞ்சலமுற்றாள். அன்று நேர்முகத் தேர்வு இருக்கும் என்றுத் தெரிந்திருந்தால் வேறு உடையில் வந்திருப்பாளோ என்னமோ?

மற்ற நாட்களில் எப்படியோ? ஆனால், தனது மனம் மிகவும் சஞ்சலத்தில் வருத்தத்தில் இருந்தால் தன் மனதை திடப்படுத்திக் கொள்ள தன்னை தன்னம்பிக்கையாக காட்ட அவள் அணிவது சேலைகளாகத் தான் இருக்கும்.

தனது உடை தரும் கம்பீரம், வீட்டில் மற்றும் வெளியில் தெரிந்தவர்களின் சின்னச் சின்ன பாராட்டுக்கள், மெச்சுதலான பார்வை என இந்த சேலை தெரப்பியில் அவளது தன்னம்பிக்கை பூஜ்யத்தில் இருந்து ஐம்பதாக நூறாக இன்னும் பலவாக பெருகிய அனுபவம் அவளுக்கு உண்டு.

அந்த கண்ணாடி கேபினுள் வந்தமர்ந்தவள் முதலில் வந்த பெண்ணை புன்னகையுடன் ஏறிட்டாள். அவளது சுய விபரங்கள் அடங்கிய பக்கத்தில் இருந்த விபரங்களை கவனித்தாள். வழக்கமாக கேண்டிடேட்களை இலகுப் படுத்தக் கேட்கப் படும் கேள்விகள் கேட்டு உரையாடிய பின்னர் வேலைக்கேற்ற தகுதிகள் இருக்கின்றனவா? என அறிவதற்கான கேள்விகளும் உரையாடல்களும் நிகழ்த்தினாள்.

கேள்விகளை எதிர்கொள்ளுகையில் கேண்டிடேட்டின் மன நிலை, அவர்கள் பதில் சொல்லும் விதம் ஒவ்வொன்றாக மதிப்பெண்கள் இட ஆரம்பித்தாள். ஆயிற்று பத்திற்கு பதிலாக பன்னிரண்டு நபர்களை இண்டர்வியூ செய்ய வேண்டி இருந்தது. அத்தனை வேலையையும் செய்து முடித்தாயிற்று. நடு நடுவே தனது வழக்கமான வேலைகளுக்கான அழைப்புகள் வேறு மாற்றி மாற்றி வந்துக் கொண்டு இருக்க அவைகளுக்கும் அவள் பதிலளிக்க வேண்டி இருந்தது.

சில மணி நேரங்கள் கரைந்திருக்க, மீரா மிகவும் களைப்பாக உணர்ந்தாள். கஃபேடேரியா சென்று தனியே அமர்ந்து காஃபி வாங்கி அருந்துகையில் ஏனோ அவனது ஞாபகம் வந்தது. அந்த திமிரின், ஆணவத்தின் மறு உருவமானவனின் ஞாபகம் மனதிற்குள்ளாக நிரடியது.

ஹைதராபாத் இருந்த வரையிலும் குறிப்பிட்ட நாட்களில் அவளை தன்னுடன் வலுக்கட்டாயமாக கஃபேடேரியா அழைத்துச் செல்வதும், அவளுக்கு எதையாவது வாங்கி உண்ண வைப்பதுவும் என இவளது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு உள்ளாக நுழைந்து அலட்டலும் அதிகாரமுமாக இவளை ஆட்டிப்படைத்த ராட்சதன் அவன். அவனுடன் இருக்கையில் அவள் அவளாகவே இல்லாமல் காற்றுப் போன பலூனாக குட்டியாகச் சுருங்கி விட்டதாகவே எப்போதும் உணர்வாள்.

‘திமிர் எப்போதும் திமிர், எல்லாவற்றிலும் திமிர் அவனுக்கு…’ மனம் முறுமுறுத்தது.

இன்று வழக்கத்தையும் விடவும் ஏனோ அவனது ஞாபகம் அதிகமாக வந்தது. ‘தன்னருகில் இருக்கும் போதும், இப்போது இல்லாத போதும், எப்போதும் அவனால் எப்படி அவனையே நினைக்கும் படி தன்னை கட்டுக்குள்ளாக வைக்க முடிகின்றது?’ இன்னும் கூட அவன் குறித்த எண்ணங்கள் என்னவென்று புரியாத உணர்வில் இருந்தாள் அவள்.

தனது இருக்கைக்கு வந்து சற்று நேரம் அமர்ந்துப் பார்த்தாள். அவளால் தனது வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. தனது போதி மரமான அந்த அலுவலகத்தின் ஆளரவமற்ற மாடிப்படிகளின் பகுதிக்கு தனிமையை நாடியவளாக செல்ல ஆரம்பித்தாள். லிப்டுக்கள் உபயோகம் காரணமாக அவ்விடம் எப்போதும் வெறிச்சென்றுதான் இருக்கும்.

அந்த பகுதியில் சில நிமிடங்கள் சிந்தனையில் எங்கேயோ வெறித்துக் கொண்டு நின்றவள் சட்டென்று அந்த ஆளுமையான கைகளுக்குள் சிறைப்பட்டிருந்தாள்.

“என்னடி இப்படி மெலிஞ்சிட்ட? உண்மையைச் சொல்லு… என் நினப்பு தானே? எனக்குத் தெரியும்… அதனாலத்தான் ஒரு நாள் என்றாலும் பரவாயில்லன்னு உனக்காகவே சென்னை ஆஃபீஸ் வந்தேன்.”

ஒரு கை இடுப்பை வளைத்திருக்க மற்றொரு கை அவள் பின்னங்கழுத்தை பற்றி இருக்க அவன் அவள் முகத்தில் நெற்றி, கண்கள், மூக்கு என சராமரியாக அவன் முத்தமிட்டுக் கொண்டு இருந்தான்.

“இந்த சாரில ரொம்ப அழகு நீ” தெலுங்கும் தமிழும் கலந்து இழுவையான தொனி அவனது அதில் அவனது குரலில் பெரும்பாலும் தொனிக்கும் கம்பீரத்தில் இவள் மனம் இப்போது கட்டுண்டது.

‘இத்தனை தூரம் வந்தும் என்னை துரத்திக் கொண்டு வந்து விட்டானா?’ உதற முயன்றாள்.

“ஏய்… தள்ளி விடாத… விழுந்துடுவேன்”, கிறக்கமான குரல் இப்போது அவளது உதடுகளுக்குள் தேய்ந்தது. அவனது மீசை மற்றும் தாடியின் சொரசொரப்பு இவள் முகத்தில் ஆங்காங்கே குறுகுறுத்தன.

அவள் கண்கள் திறந்த போதோ அங்கே தனது அக்கம் பக்கத்தில் அவள் யாரையும் காணவில்லை. அவசரமாக வாஷ்ரூம் சென்று முதலிரவு கடந்த பெண் போல தனது முகத்தை கண்ணாடியில் அங்குலம் அங்குலமாய் தன்னை ஆராய்ந்துப் பார்க்க அருகில் இருந்தவளோ,

“வாவ், யூ ஆர் லுக்கிங்க் கார்ஜியஸ், யூ ஆர் ப்ளஷிங்க் மீரு டார்லிங்க்” என்று வாயைப் பிளந்தாள்.

அவளிடம் தட்டுத் தடுமாறி புன்னகைத்து என்ன நடந்ததெனப் புரியாதவளாக தடுமாறியவளுக்கு ஏதோ யோசனை வர அட்மினுக்கு இண்டர்காமில் அழைத்தாள்.

“ஹைதராபாத் அலுவலகத்தில் இருந்து இன்று யாரெல்லாம் வந்திருக்கிறார்கள்?”

“யாரும் வரவில்லையே மீரா”

“ஓ” ஒன்றும் புரியாமல் ரிசீவரை வைத்தாள்.

அடுத்த யோசனை வர ஹைதராபாத் ஆஃபீசில் தனக்கு பரிச்சயமாகி இருந்த ரிசப்சனிஸ்டிடம் விபரம் கேட்க அழைத்தாள்.

“மீரா மேடம் நீங்க நலமா?” தொடர்ந்து ஆயிரம் கேள்வி பதிலை முடித்த பின்னரே அவளால் தான் பணிபுரிந்த குழு குறித்து பேச்சு பேச்சாக விபரம் கேட்க முடிந்தது. மற்றவர்களின் விபரங்கள் கேட்ட பின்னர் அவன் பெயர் வந்த போதோ…

“அண்ணகாரு அப்பவே வேலை விட்டு போய்ட்டாரேமா…”எனவும் இவளுக்கு தலைச் சுற்றியது. அப்படியென்றால் இன்று வந்தது, தன்னை முத்தமிட்டது அவனில்லையா?

“கார்த்திக் எங்கேடா இருக்க நீ?”

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here