மனதோரம் உந்தன் நினைவுகள்_10_ஜான்சி

0
310

Manathoram Unthan NinaivukaL_Epi 10_Jansi

அத்தியாயம் 10

யாசகம்

பிரிவென்றே முடிவாகி விட்டப்பின்னர்

கொஞ்சம் சேமித்துக் கொள்கிறேனே?

செவிகளில் உன் குரலை…

கண்களுள் உன் உருவத்தை…

உணர்வினில் உன் அன்பை…

உறவினில் நீ எனக்கானவனில்லை

யாரோவெனும் கொடும் வலியை…

கொஞ்சம் நானும்

சேமித்துத்தான் கொள்கிறேனே?

மீரா பழையவற்றை அசை போட்டதில் கலக்க உணர்வோடு தாமதமாக தூங்கி வெகு தாமதமாக எழுந்து அவசரமாக சுடிதார் ஒன்றை எடுத்து அணிந்து அலுவலகத்திற்கு புறப்பட்டவள் தங்களது அறையை சுற்றிப் பார்த்தாள். அது சற்று பெரிய அறை, மூன்று கட்டில்களில் இடமும் வலமுமாக அவளது இரண்டு தங்கைகளும் தூங்கிக் கொண்டு இருந்தனர்.

படிப்பது முதல் தூக்கம் வரும் வரைக்கும் ஒரு கட்டிலில் இருவரும் உருண்டு புரண்டு விளையாடிக் கொண்டு, வீடியோ பார்த்த வண்ணம் இருந்தாலும் தூங்குவது தனித்தனியாகத்தான்.

“சேர்ந்து கதை பேசி லேட்டா தூங்குறீங்க… உங்க கட்டில்களை அருகருகே போட்டுக் கொள்ளுங்களேன்”, என மீரா ஆரம்பத்தில் கேட்டுப் பார்த்தாள்தான்.

“அதெப்படி உன்னை ஒரு பக்கம் விட முடியும்? அது ஓரவஞ்சனை ஆகிடாதா? நாங்க நேர்மையா டீல் போட்டுதான் உன்னை நடுவில படுக்க விட்டிருக்கோம். நீ நடுவில இருந்தாதான் அக்கா எங்களுக்கு பாதிப் பாதி கணக்கு வரும். உனக்கு இடதுப்பக்கம் நான், வலதுப்பக்கம் சுசு சாரி சுசி” என சித்ரா சொல்ல,

“டேய் என்னை சுசுன்னா சொல்லுற?” சுசித்ராவுக்கும், சித்ராவுக்கும் குடுமிப்பிடி சண்டை நடந்தது.

அவர்களது பாசத்தைக் கண்டு மீராவிற்கு பெருமைதான். இரண்டு வானரங்களுக்கு ஒரே அக்காவாக இருப்பது ஒன்றும் சுலபமில்லை அன்று அவர்களது சண்டை தீர்த்து வைக்கவே அவளுக்கு அரை மணி நேரம் செலவாகி இருந்தது. தங்கைகளையும் அவர்களது குறும்புகளையும் எண்ணிய வண்ணம் முறுவலித்தவாறு வெளியே வந்தாள்.

பொதுவாக அலுவலகம் விட்டு வந்து சாயங்காலங்களில் அல்லது வார இறுதிகளில் தான் அவள் சமைப்பது, அப்பாவும் அவ்வப்போது சமைப்பதுண்டு. ஆனால், காலை நேர அவசரத்தில் அம்மா அளவிற்கு இவர்களுக்கு வேகம் வராது.

தங்கம் காய்கறிகள் அரிந்து வைக்கும் வேலையெல்லாம் இரவே சின்னவர்களுக்கு கொடுத்து செய்து வாங்கி விடுவார். எல்லாரையும் உழைக்க வைப்பதில் அவர் ஒரு நல்ல நிர்வாகிதான்.

முன்னறையில் சேலைகள் வாங்கவென ஒரு சிலர் வந்திருந்தனர். அம்மா சமையல்கட்டில் இருக்க அப்பா மனோகர் ஒவ்வொரு பைகளாக திறந்து அவற்றை விவரித்து, வியாபாரம் செய்த விதம் அவளது முகத்தை மலரச் செய்தது.

தனது பெற்றோர்கள் அடைந்திருக்கும் அத்தனையும் அவர்களது நேர்மையான உழைப்பால் கிட்டியவை என்பதில் அவளுக்கு வெகு பெருமிதம். திருமணமான புதிதில் தங்கத்தின் வீட்டில் உதவ பெரியவர்கள் என யாரும் இல்லாதிருக்க, மனோகரின் தாய்தான் உறுதுணையாக இருந்தார். உணவிற்கே போராட்டமான நிலையில் இருந்த குடும்பம் இன்று நல்ல வீடு, நல்ல உணவு, பிள்ளைகளுக்கான படிப்பு என இந்த அளவிற்கு உயர்ந்திருப்பதே பெரிய விஷயமல்லவா?

தாயுடன் சென்று சமையலறையை எட்டிப் பார்த்தவள் அங்கு தான் செய்ய வேண்டியவை என எதுவும் இல்லை என்றதும் தனக்கான டிஃபனை எடுத்து நிரப்ப ஆரம்பித்தாள்.

“பாப்பா பொறு”

தங்கம் அவசரமாய் அவள் மூடவிருந்த டிபனுக்குள் பொரித்த முட்டையை திணித்து வைத்தார்.

“என்னேரமும் வேல வேல, சத்தா சாப்பிடுறதில்ல” எனும் முணுமுணுப்பு வேறு…

அதிசயமாய் பாப்பா என்பறவரின் அழைப்பிற்கு முறுவலித்தவள், “எனக்கு இன்னும் நேரமிருக்குமா நான் தோசை சுடறேன். நீங்க சாப்பிடுவீங்களாம்”

“இல்லடா இப்ப சாப்பிட்டா வேலை முடியாது, தண்ணி பிடிக்கணும், மெஷின்ல துணி போடணும் எல்லாம் முடிச்சிட்டு தான் சாப்பிட உட்காருவேன்.காலையிலயே எழும்புனதும் டீ போட்டு குடிப்பேனா… அப்பவே மனசுக்கு திருப்தியாகிடும் இப்ப பசிக்கலை.”

“அம்மா டீ குடிக்கிறதை குறைங்க, பசி மந்திச்சுரும்.”

“நீ முதல்ல ஒழுங்கா சாப்பிடப்பாரு அட்வைஸ் செய்யாத, உங்கப்பா சேலைக்கு என்ன விலை சொல்லறாருன்னு தெரியலை முதல்ல அதை போய் பார்க்கணும். ஒவ்வொரு சேலை விலையும் இரண்டாயிரத்துக்கும் மேல…”

“எப்படிம்மா இவ்வளவு காலையில சேலை வியாபாரம்?”

“அதுவா, பக்கத்து தெருவில் ஒரு பொண்ணு பெரிய பொண்ணாகிட்டாளாம், அதனால் இன்னிக்கு முறையில் இருக்கிறவங்களை அழைச்சு தண்ணி ஊத்துறாங்க. அவசரத்துக்கு நாமதான போத்தீஸ், சென்னை சில்க்ஸ் எல்லாம்” அனாயாசமாக பேசிச் சென்றவரை இரசனையாகப் பார்த்திருந்தாள்.

சற்று நேரத்தில் எல்லாம் அலுவலகம் சென்றிருக்க வேலையின் மும்முரத்தில் அனைத்தையும் மறந்திருந்தாள் கார்த்திக் உட்பட. அவ்வப்போது அலையினூடே கிளிஞ்சல்களாக கார்த்திக்கின் நினைவுகள் வந்துச் செல்லும் தான். ஆனால், அவனுக்கும் அவளுக்கும் ஒரு பொருத்தம் கூட கிடையாதே?

அவன் இலகுவானவனென்றால், அவள் இறுக்கமானவள். அவன் தெலுங்கன் இவள் தமிழச்சி. அவன் பின்புலம் என்னவென்றே தெரியாது சில மாதங்கள் முன்னே வேலையை விட்டவன் தற்போது எங்கு வேலை பார்க்கிறான் எனத் தெரியாது. மணமானவனா? இல்லையா? எனத் தெரியாது ஆனால், அவள் மற்றும் அவளது பின்புலம் எல்லாருக்கும் தெரியும். ஒளிவு மறைவில்லாத பிண்ணனி அவளது.

அது மட்டுமா? ஆண்களுக்கு கண்ட முதலாக எந்த பெண்ணாகினும் வழிவது வழக்கமான வழக்கம் தானே? சில வாரங்கள் பழகிய தன்னிடம் இத்தனை உரிமை எடுத்துக் கொண்டவனது குணத்தையும் பரிசீலிக்க வேண்டுமல்லவா? அதிலும் அவனது அதிகாரமான ஆளுமையான அணுகுமுறை அப்பப்பப்பபா அவளுக்கும் அவனுக்கும் எந்த விதத்திலும் சரிவராது. பொருத்தமே இல்லை.

இவளது குடும்பம் சிறுகச் சிறுக ஒவ்வொரு இழையாய் கட்டப்பட்ட கூடு போன்றது. தனது மனதின் ஆசைகளுக்காகவெல்லாம் அவள் அதனை சிதைய விட்டு விட முடியாது.

தனது தங்கைகளுக்கான எதிர்கால வாழ்வையும் தனது சுயநலத்தால் சிதைக்க முடியாது. “நோ மீன்ஸ் நோ” மனதிற்குள் சொல்லிக் கொண்டவள் திரைப்படத்தில் அந்த வசனத்தின் அர்த்தம் என்ன என்பதையும் தற்போது தான் அதனை உபயோகித்த விதத்தையும் குறித்து சிரித்துக் கொண்டாள்.

எத்தனையோ முறை உறுதிப்படுத்திக் கொண்டது போல மறுபடியும் கார்த்திக்கை மறக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டாள். ஏற்கெனவே, அவளது மனதின் ஓரம் கரையானாய் அரிக்க ஆரம்பித்திருந்த அவனது நினைவுகளோ அவளிடமே அதெல்லாம் மறக்க முடியாது “நோ மீன்ஸ் நோ” என அலறியதை அவள் கேளாதது போல கடந்தாள்.

பிரசவ வைராக்கியம் போல,  நாளை முதல் குடிக்க மாட்டேன் என குடிகாரன் தினம் தினம் சொல்லும் குடிகார வைராக்கியம் போல இவளது வைராக்கியமும் சிதையுமோ இல்லை இன்னும் வளருமோ காலம் தான் பதில் சொல்லும்.

ஒரு வாரம் கடந்திருந்தது அன்று வார இறுதி நாள் அவர்களது டீமின் சவிதாவின் பிறந்த நாள் பார்ட்டி அது. ஷிப்ட் முடிந்ததும் அனைவரும் பீட்சா ஹட்டில் சேர்ந்து இருந்தனர். அரட்டையும் கேலிப் பேச்சும் களைக்கட்டியது.

சுஜித் இன்னும் வராதிருக்க அவர்களின் டீம் மெம்பர் அசோக் அவரை நகலெடுத்து பேசி சிரிப்பு மூட்டிக் கொண்டு இருந்தான். இவளது சீட்டின் பின்னே அமர்ந்த யாரோ இவளது சீட்டை ஒட்டி அமர மீரா தன்னை ஒடுக்கிக் கொண்டு சற்று உள்ளே நகர்ந்தாள்.

விதவிதமான பீட்சாக்கள் ஆர்டருக்கேற்ப இவர்களது டேபிளை அலங்கரித்தன.அத்தனையிலும் ஆளுக்கு சில துண்டுகளாக எடுத்து அவர்கள் சுவைத்துக் கொண்டிருந்தனர்.

கூட்டம் நெருக்கி அடித்துக் கொண்டிருந்த நேரம் தான் அது. அந்த ஜனசந்தடியிலும் அவர்களது குழுவின் பதினைந்து பேரும் சிரித்துக் கொண்டே இருந்தனர். பாஸை கலாய்ப்பதென்றால் கசக்குமா? அசோக் ஆரம்பித்தை வேல் தொடர, மற்றவர்களும் ஒவ்வொன்றாய் கோர்க்க, சுஜித் தூரமாக வரும் பொழுதே கண்டுக் கொண்ட சவிதா அனைவருக்கும் சுஜித் வருவதாக குரல் கொடுத்தாள்.

அது அவள் தனது டீமிற்கு கொடுக்கும் பார்ட்டி. பதிலுக்கு கேக்கும் கிஃப்டும் இவர்கள் வாங்கி வந்திருந்தனர்.கிஃப்ட் பிரியாவின் கைப்பையில் மறைத்து வைக்கப் பட்டு இருந்தது.

சுஜித் வந்ததும் விழா ஆரம்பமாக அனைவரும் எழுந்து நின்று கேக் வெட்டியவளை வாழ்த்திப் பாட மீராவால் எழும்ப முடியவில்லை. பின் சீட்டில் இருந்த நபர் அசைந்துக் கொடுத்தால் தானே? எதற்கு வம்பென இருந்த வண்ணம் கைத்தட்டி வாழ்த்தினாள். அடுத்தடுத்து கேக் கட்டிங்க் முடிந்து அனைவரின் சார்பாக வாங்கப்பட்டு இருந்த அந்த கிஃப்டை கொடுக்கவும் சவிதாவிற்கு மீண்டும் மீண்டுமாக அழைப்பு வர அவள் உடனே சென்றாக வேண்டும் எனச் சொல்லி விடைப்பெற்றுச் சென்றாள்.

ஒருவர் ஒருவராக அனைவரும் புறப்பட தனக்கு பின்னால் இருக்கின்றவனை எழச் சொல்வதை விடவும் எதிரில் இருக்கின்றவர்கள் எழுந்ததும் டேபிளை சற்று முன்னே நகர்த்தி புறப்படலாம் என மீரா எண்ணினாள். அங்கிருந்த கூட்டத்தில் அனைவரும் செல்லும் வரை நின்று வழிவிட்டவள் தான் எழும்ப எண்ணி தனது இருக்கையை நகர்த்த முயலவும் அவளுக்கு பின்னிருந்த இருக்கை அசைந்தது.

திரும்பிப் பார்த்தவள் உறைந்தாள், ‘அது கார்த்திக் தானா? இல்லை வேறு யாரோவா?’ தனது சிந்தனைக்குள்ளாக பட்டிமன்றம் நடத்த தனது கண்ணாடியை இறக்கியவன் அவளை கூர்மையாகப் பார்த்தான்.

தான் அவனை முதன்முதலில் சந்தித்த போது எவ்வாறு தாடி மழிக்காதவனாக இருந்தானோ அப்படித்தான் அன்று அலுவலக படிக்கட்டில் அவனைப் பார்த்த போதும் அவன் இருந்தான். இன்றோ அதற்கடுத்த நாளில் அலுவலகத்தில் அவளை சந்தித்த போது எப்படி இருந்தானோ அப்படி தன்னைக் கவனமெடுத்து நல்ல உடைகள் அணிந்தவனாக வந்திருந்தான். அந்த முரட்டு மீசை தவிர முகவாயில் சற்றும் முடியில்லை.

அவளுக்கு உள்ளுக்குள்ளாக குளிரடித்தது தினம் தினம் அவனைக் குறித்து யோசித்ததில் தனக்கு ஏதோ மன நோய் என்றும் அவனை நேரில் பார்ப்பதாக தான் கற்பனை செய்துக் கொள்வதாகவும் அவள் நினைத்தாள். திரும்பிப் பார்த்தாள் இவளோடு வந்தவர்கள் எல்லோரும் பீட்சா ஹட்டின் வாசலில் நின்று அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். பேச்சு மும்முரத்தில் இவளை யாரும் கண்டுக் கொள்ளவில்லை. கூட்டம் வருவதும் போவதுமாக இருக்க முயன்று தேடினால் ஒழிய உள்ளிருப்பவர்களை வெளியில் உள்ளவர்கள் கவனிக்கவும் இயலாது.

மறுபடி அவனைப் பார்த்தாள் தன்னைக் கிள்ளிக் கொள்ள வேண்டும் என அவள் நினைத்த தருணம் சீட்டில் பதிந்திருந்த அவளது புறங்கையில் அவன் மெதுவாக கிள்ளினான். உடனேயே வெகு சிரத்தையாக தடவியும் விட்டான். தன் கையை வெடுக்கென எடுத்தவள் திகைத்துப் பார்த்து இருக்க,

“மீரா எனக்கு உன் கிட்ட பேசணும்” என்றான்.

“எதற்காக?” எனும் கேள்வி இவளது மனதில் தொக்கி நிற்க

“கொஞ்ச நேரம் தான், நாளை மதியம் 3 மணிக்கு மால் வர்றியா?”  அழைத்தான். மீராவிற்கும் இதற்கொரு ஒரு முடிவு காண வேண்டும் எனத் தோன்றி விட்டிருந்தது.

‘நல்லவேளை இப்போது உடனே பேச வேண்டும் எனச் சொல்லவில்லை’ மனதிற்குள்ளாக ஆசுவாசம் கொண்டாள். ‘நாளைக்குத்தானே முன் தயாரிப்போடு வரலாம்’ எனும் எண்ணத்தோடு இருந்தவளது கரம் வெம்மையுற்றது. அவன் தான் அவளது விரலின் காயங்களை ஆராய்ந்துக் கொண்டிருந்தான்.

அழகான அந்த விரல்களில் காயங்களால் சில தளும்புகள் இருந்தன. “ம்ம் பரவாயில்லை, ஆறிடுச்சு. நாளைக்கு பார்க்கலாமா?” கண்ணாடியை அணிந்தவன் இலகுவாக எழுந்துக் கடந்துச் சென்றான்.

வீட்டிற்கு வந்தவளுக்கு படபடப்பாக இருந்தது. வழக்கம் போல சுத்தம் செய்து வந்தவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. அவன் என்னச் சொல்லப் போகிறான்? அதற்கு மறுத்து இவள் என்னச் சொல்லப் போகிறாள்? என மனதிற்குள்ளாக கூட்டிக் கழித்துக் கொண்டே இருந்தவளால் வெகு நேரம் கழித்தே தூங்க முடிந்தது.

“நோ மீன்ஸ் நோ” முனகினாள், அவளோடு அவளது உணர்வுகளும், நினைவுகளும் கூடத்தான் முனகின… “நோ மீன்ஸ் நோ”.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here