மனதோரம் உந்தன் நினைவுகள்_11_ஜான்சி

0
311

Manathoram Unthan NinaivukaL_Epi 11_Jansi

அத்தியாயம் 11

மனதோரம் உந்தன் நினைவுகள்

தடையற்ற சுவாசம்,

இடையறாத இதயத் துடிப்பு,

இமைகளின் துடிப்புகள்

போலவே,

உயிர் இருக்கும் வரையிலும்

எனை வருடிச் செல்லும் – எந்தன்

மனதோரம் உந்தன் நினைவுகள்.

சனிக்கிழமை காலை நேரம் வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமே எழுந்து விட்டிருந்தவள் தாய்க்கு ஓய்வைக் கொடுத்து சமையலை தனதாக்கிக் கொண்டாள்.

“லீவு நாளதுவுமா கூட கொஞ்சம் தூங்க வேண்டியதுதானே மீரா? எதுக்கு சீக்கிரம் எழும்புன?” மனோகர் முன்னறையில் இருந்து குரல் கொடுக்க,

“பொண்ணு சீக்கிரம் எழுந்து வேலை செஞ்சா அப்பாமாருக்கு கரிசனை பொத்துக்கிட்டு வருமே? நானும் எங்கப்பாவோட செல்லப் பொண்ணுதான்.” தங்கம் இங்கிருந்து குரல் கொடுத்தார்.

“ரொம்ப புலம்பாத… இப்ப உனக்கு என்ன வேலை செய்யணும்னு சொல்லு, செஞ்சிடுறேன்.” என்றவராக அடுத்த நிமிடம் சமையலறையில் வந்து நின்றார்.

வாஷிங்க் மெஷினை பார்த்த வண்ணம் “துணி துவைக்கவா?” என்றவரிடம்

“வேணா சாமி, போன தடவை வெள்ளைத்துணி கூட மத்த துணி போட்டு எல்லாம் கறையா போச்சு.”

“பார்த்தியாம்மா மீரா, உங்கம்மா என்னை வேலை செய்ய விடறதில்ல.ஆனா, என்னமோ நான் செய்ய மாட்டேன்னு சொன்னது போல நல்லா சலிச்சுக்குவா”

“ஆமா சும்மா தானே சலிச்சுக்குறேன்…. உங்க மகளை கட்டிக் கொடுக்க மாப்பிள்ளை தேடிட்டு இருக்கோம் அது கொஞ்சமாவது நினைவில இருக்கா? கொஞ்சம் கொஞ்சம் அவளும் வீட்டு வேலை செய்யட்டும் அப்ப தானே பழகும்?”

“அதெல்லாம் என் பொண்ணு ரொம்ப பொறுப்பு, எல்லாத்தையும் நல்லா கவனிச்சுப்பா. ஆனாலும், அதுக்காக அவ தலையிலயே எல்லா பொறுப்பையும் போட முடியுமா? இந்த காலத்தில பையனுக்கும் சமைக்க தெரிஞ்சிருந்தா தான் நல்லது. நான் அப்படி மாப்பிள்ளை தான் தேடப்போறேன்” என்றவாறு நகர்ந்தார்.

“இப்படியே மகளை கொஞ்சிக் கொண்டே இருங்க.”

பெற்றோர்களின் உரையாடலை புன்முறுவலுடன் கவனித்தவாறே பூரிக்கு வட்டமாக உருட்டியிருந்தவள் அதனை நான்காக வெட்டி வைத்திருந்தவற்றை சூடான எண்ணையில் போட்டு பொரிக்கலானாள். அதை ஏன் வட்ட வட்டமாய் வெட்டி நேரத்தை வீணாக்க வேண்டும்? முக்கோண பூரி ருசிக்காதா என்ன? இது அவர்கள் வீட்டு நேர மேலாண்மை.

இன்னொரு பக்கம் பூரிக்கான கிழங்கை அடுப்பில் ஏற்றி இருந்தவள் அதன் பதத்தை பரிசோதிக்க தன்னையறியாமல் மனதிற்குள்ளாக ‘கார்த்திக்குக்கு சமைக்கத் தெரியுமா?’ என யோசித்து வைக்க திடுக்கிட்டாள்.

‘இரவு சொன்ன நோ மீன்ஸ் நோ என்னவாகின?’ என அவள் மனமே அவளிடம் கேள்விக் கேட்கவும் தலையை உலுப்பிக் கொண்டாள்.

மதியம் ஒன்றரைக்கே புறப்பட்டு இருந்தவள் நேரமே டூ வீலரில் பயணித்து அந்த மாலில் போய் சேர்ந்து இருந்தாள், அப்போதுதான் இரண்டரை மணி ஆகி இருந்தது. தங்கைகள் இருவரையும் தவிர்த்து வரும் முன்பாக ஒரு வழியாகி இருந்தாள்.

“அது தான் எல்லா நேரமும் ஒட்டுப்பில்லு போல கூடவே சுத்துறீங்கல்ல? இன்னிக்கு ஒரு நாள் அவ தனியா போகணும்னு சொன்னா விட மாட்டீங்களா?” தங்கம் அதட்டிய பின்னரே இருவரும் அமைதி காத்தனர்.

“அம்மா நான் ஒட்டுப்பில்லா?” சித்ரா முகம் விழுந்து விட

“டேய் அம்மா சும்மா சொன்னாங்க, நீ எதுக்கு மூஞ்ச தூக்கி வச்சுக்கிற?” மீரா சமாதானப்படுத்தினாள்.

“எல்லாரும் அவளையே கவனிங்க”, முனகிய சுசித்ராவை மீரா அடுத்த 10 நிமிடங்கள் சமாதானப்படுத்த வேண்டியதாயிற்று. அடுத்த நாள் ஞாயிறன்று அனைவரும் டின்னருக்கு வெளியில் போகலாம் என்றதும் இருவரும் சமாதானமானார்கள்.

‘அடுத்து என்ன? சீக்கிரமாக வந்து விட்டோமே?, அவனுக்கு பொதுவாக சீக்கிரம் வரும் பழக்கம் எல்லாம் கிடையாதே? எப்போது வருவானோ?’ சிந்தனையில் உழன்றவள் ஸ்கூட்டியை பார்க் செய்து வாயிலில் உள்ளே வர அவளை எதிர் நோக்கியவனாக கார்த்திக்  அங்கே நின்றான். தன் மனதின் ஆச்சரியத்தை அவளால் மறைக்க முடியவில்லை.

அதனால் “ஹாய்” என்றவளாக அவனிடம் புன்னகைக்கவும் முடிந்தது.பதிலுக்கு கூறியவன் மகிழ்ச்சியாக அவளது கையை குலுக்கினான்.

இன்று முன்பை விடவும் வசீகரனாய் இருந்தான், அவனது கண்ணாடியின் காரணமாக பழுதான கண் உறுத்தும்படி இல்லை. உடையிலும் கூட நிறைய மாறி இருந்தான். வழக்கமான டப்பா போன் இல்லாமல் ஐஃபோனும், விலை உயர்ந்த பிரான்டில் கைக்கடிகாரமும், ஷீவும் என பார்வைக்கு அமர்க்களம் தான்… இவனுக்கு லாட்டரி அடித்து விட்டதா என்ன?

பொதுவாகவே இருவரும் ஆங்கிலத்தில் உரையாடுவது போலவே அன்றும் பேசிக் கொண்டு இருந்தனர். நலம் விசாரித்துக் கொண்டனர்.என்னமோ அவர்களுக்கிடையில் ஒரு பிரச்சனையும் இல்லாதது போன்றதொரு நாடக பாவனை இருவர்களுக்கிடையேயும் இருந்தது.

இவன் அன்று அலுவலக படிக்கட்டில் வந்திருந்தானா? இல்லையா? தன்னை முத்தமிட்டது அது தன் கற்பனையா? இல்லை நிஜமா? என எண்ணி மீரா அதை கேட்க முடியாத சங்கடத்தில் இருந்தாள்.

மதிய வெயிலில் வாடி வந்திருந்தவளுக்கு ஜீஸ் ஆர்டர் செய்யும் முன் அனுமதி கேட்டான். ‘இந்த அளவிற்கு நாகரீகம் கற்று விட்டானா?’ அதிசயமாக அவனை பார்த்தாள்.

அவளுக்கு காக்டெயிலும் அவனுக்கு ஆரஞ்சும் சொன்னவன் அவள் பக்கம் திரும்பினான்,

“வேலை எப்படி போகின்றது?” என

“நன்றாக…” என்றவள் தன்னையறியாமல் கேட்டு விட்டிருந்தாள்.

“வேலையை விட்டுவிட்டீர்களாம். இப்போது எங்கே வேலை செய்கிறீர்கள்?” கார்த்திக்கோ தன் முறுவலை அடக்கிக் கொண்டு சாதாரணமாக அமர்ந்திருந்தான்.

“வேலையை விட்டதோடு சரி, அதற்கப்புறம் எங்குமே வேலைக்கு போகவில்லை” என்றான்.

மீரா சக ஊழியையாக, ‘அவன் வேலையில்லாமல் என்ன செய்வான்?’ என்பதாக யோசித்தவள் அவனது தோற்றத்தை பார்க்கையில் ‘இத்தனை மாதங்களில் அவன் வறுமையில் உழன்றதாகவும் தெரியவில்லையே?’ எனப்புரியவும் சற்றுக் குழம்பினாலும் அவள் வாய் தன் போக்கில் பதில் சொல்லிக் கொண்டு இருந்தது.

“அப்ப சென்னையில் வேலை தேடி வந்தீங்களா?”

“லேது, பெல்லி செஸ்செஸீகோவடனிக்கி அம்மாயி வெட்டுக்குந்து வச்சேனு” (இல்லை கட்டிக்க பொண்ணு தேடி வந்தேன்) என்றவன் மொழி புரியாது விழித்தாள்.

“என்ன?” என மீரா ஆங்கிலத்தில் கேட்கவும்,

“ம்ம் ஒன்னுமில்ல” என மழுப்பியவன், “இத்தனை நாள் எங்க ஊர்ல இருந்தல்ல எங்க மொழி கத்துக்கிட்டியா?” என்றான்.

“ஏன் உங்களுக்கு மட்டும் தமிழ் தெரியுமா?”

“அதெல்லாம் நல்லா தெரியும், இப்ப எல்லாம் நான் அடிக்கடி தமிழ் படம் தான் பார்க்கிறேன்” என்றவனை முறைத்தவள்,

“வந்தவளை வேலை செய்ய விடாம பாதி வேலையில் விரட்டிட்டு, இப்ப நான் உங்க ஊர் மொழி வேற கத்துக்கணுமா? நல்லா இருக்கே” எனவும் மௌனமானான்.

“அமேதோ விசிகிபோயானு” (இவளோட…. ஷப்பா முடியலை) தனக்குள் சலித்துக் கொண்டாலும் தான் கேட்க வந்ததை கேட்காமல் பேச்சு தொடரும் விதம் நெருடியது. எத்தனை துளித்துளியாக பருகினாலும் அவளது ஜீஸ் முடிந்து விட்டிருந்தது அவனுடையதும் தான்.

“ஒருவேளை தெலுங்கானா உன்னோட சொந்த ஊராகிடுச்சுன்னா நீ அந்த மொழியை கத்துக்கணும் தானே?” என்றான்.

‘பரவாயில்ல கார்த்திக், நீ கொஞ்சம் நெருங்கி வந்திட்ட’ என தனக்குத்தானே ஷொட்டுக் கொடுத்துக் கொண்டான்.

அவன் நூல் விட்டு கேட்பதை புரிந்தவளாக “எனக்கொன்னும் உங்க ஊர் சொந்த ஊராக வேணாம்” மீரா வெடுக்கென பதிலளித்தாள். கார்த்திக்கோ இசைவில்லாத மொழியில் கவனம் செலுத்தாமல் தவிர்த்தவனாக அவளது முகபாவனைகளில் மட்டுமே கவனம் வைத்திருந்தான்.அவளை கண்ணோடு கண் பார்த்தவனாக

“நேனு நின்னு ஆத்மார்த்தமாக பிரேமிஸ்துனானு” (நான் உன்னை உளமாற காதலிக்கிறேன்) என்றவனது வார்த்தையிலோ முகத்திலோ பொய்மை சிறிதளவும் இல்லை.

திக்கென்று அதிர்ந்தாள் மீரா, மொழிப்பெயர்ப்பு தேவை இல்லாமலேயே அவனது வார்த்தைகள் அவளுக்கு புரிந்திருந்தன. அவனது முகத்தின் கனிவும், பேசிய வார்த்தைகளின் அழுத்தமும் இவளது இதயத்தின் ஆழம் வரையிலும் சென்று தாக்கின.

அவள் தடுமாறிய அத்தருணம் அவளது மனம் “நோ மீன்ஸ் நோ” என அவள் பயிற்றுவித்து இருந்ததன்படி அலறியது.சில நொடிகளில் தன்னை வெகுவாக சமாளித்தவளாக முகமாறுதல்களை கையாண்டு அவனுக்கு பதிலளித்தாள்.

“வேணாம், இது சரிப்பட்டு வராது கார்த்திக்.”

அவளது மறுப்பை விடவும் அவன் சொன்னதை அவள் புரிந்துக் கொண்ட விதத்தில் உள்ளூர மகிழ்ந்தவாறு இருந்தான் அவன். அதென்னவோ அவள் என்னச் செய்தாலும், என்ன பேசினாலும் அவனால் கோபப்பட முடிவதில்லை. மனம் முழுக்க பரவசமும், தித்திப்பும் தான். தன்னுடைய இலகுத்தன்மை அவளை வெகுவாக பாதிக்கின்றது என அறிந்தும் வழக்கம் போல அன்றும் இலகுவாக இருந்தான்.

சரிப்பட்டு வராது என பதில் சொல்லும் முன்பாக அவளது முகத்தில் வந்து போன உணர்வுகள் அனைத்தையும் படித்தவாறு அமர்ந்திருந்தவன் கேட்டான்.

“ஏன்?”

“ஏன்னா?”

அவள் யோசித்து பதிலளிக்க காத்திருந்தான்.

“எனக்கு இன்னமுமே ஆச்சரியமா இருக்கு, அது ஏன் உங்களுக்கு என்னை பிடிக்கணும்? நானுண்டு என் வேலை உண்டுன்னு தான் நான் இருப்பேன். மத்தவங்க போல ஒரு வார்த்தை கூட அதிகமா பேசவும் மாட்டேன். எரிச்சல்ல உங்களை திட்டவும் செய்திருக்கேன் அப்படி இருக்கப்ப இத்தனை மாசம் கழிச்சு வந்து இப்படி கேட்குறீங்கன்னா?”

“அப்படின்னா நான் தாமதிக்காம சில மாசங்கள் முன்னமே வந்து கேட்டிருக்கணுமோ?” அவளொன்றுச் சொல்ல அதன் பொருளை வேறொன்றாக அவன் திரிக்க, மீரா திகைத்தாள்.

கார்த்திக் அவளிடம்,“நீ எனக்கு சம்மதம் சொன்னீன்னா எனக்கு ஏன் உன்னை பிடிக்கும் என்பதெல்லாம் அப்புறமாகச் சொல்லுறேன்… சம்மதிக்கிறியா?” எனக் கேட்க,

தானாகவே ஆமென்பதாக அசையவிருந்த தனது தலையை இடவலமாக ஆட்டினாள் மீரா. ‘எமகாதகன் எப்படி போட்டு வாங்குறான் பாரு?’ மனதிற்குள்ளாக முறுமுறுத்தாள்.

பேரரிடம் அந்த ரெஸ்டாரெண்டின் பிரபலமான இனிப்பு வகை எதுவென்று கேட்டு அதனை அவன் வரவழைத்தான்.

“இது சரிப்பட்டு வராது…” மறுபடி முணகினாள்.

“காரணம் சொல்லு”

“அது ஏன் நான் காரணம் சொல்லணும், பிடிக்கலைன்னா பிடிக்கலை அவ்வளவுதான்.”

“நோ மீன்ஸ் நோ அப்படியா?” என அவன் கேட்க இவளுக்கு இவளது மனதின் குரலை அவன் கேட்டதைப் போலொரு பயமெழுந்தது. அந்த ஏசியின் குளிரிலும் வியர்த்தது. மீரா எழுந்து ரெஸ்ட்ரூம் சென்று முகம் கழுவி வந்தாள். பதட்டம் தீர்ந்தாலும் அவள் மனமும் முகமும் கலங்கிப் போயிருந்தது.

அவளை இலகுவாக்க எண்ணியவன் சற்று நேரம் பேச்சை மாற்றினான். அவள் இலகுவானாள், தானாகவே அவனுக்கு பதில் கொடுத்தாள்.

“உங்களை சில முறைகள் அனாவசியமா பேசி இருக்கேன் அது தப்புன்னு எப்பவும் மனம் நெருடும். எனக்கு நிறைய நீங்க உதவி செய்து இருக்கீங்க அதனாலத்தான் நீங்க அழைச்சதும் வந்தேன். மற்ற படி நீங்க நினைக்கிறதெல்லாம் நடக்காது. அது சரிவராது … இன்னிக்கு இது நம்மளோட கடைசி சந்திப்பா இருக்கட்டுமே?”

“நான் தான் உன்னை சரின்னு சொல்லச் சொல்லலையே மீரா” என்றவனை கலவரமாகப் பார்த்தாள்.

“ஏன் சரிவராதுன்னு சொன்னா போதும்.அப்புறமா நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்” அவன் பார்வையில் இருந்த கவனத்தை அவள் கவனிக்க மறந்தாள். கண்ணாடியின் பின்னே இருந்த அவன் கண்ணை பார்ப்பதும் புரிந்துக் கொள்வதும் இலகு அல்லவே?

“ம்ம்… காரணம் சொன்னா தொந்தரவு செய்ய மாட்டீங்களா?”

“நிச்சயமா உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்” உன்னை என்பதில் அழுத்தம் செலுத்திச் சொன்னான்.

“உங்களுக்கும் எனக்கும் ஆரம்பம் முதலே ஒரு விதமான அசௌகரியமான உணர்வுதான். நான் கொஞ்சம் சீரியஸ் டைப், எனக்கு காஷீவலான ஆட்களைப் பார்த்தா கொஞ்சம் கடுப்பாகும் அது என்னோட குணம்.”

காரணம் கேட்டால் தன்னையே குறை சொல்கின்றவளை ஆழ்ந்து பார்த்திருந்தான் அவளை பேச விட்டு கேட்டுக் கொண்டிருந்தான்.

“இன்னொரு விஷயம் என்னன்னா நீங்க ரொம்ப டாமினேடிங்க், எனக்கு யாரும் என்னை அதிகாரம் செஞ்சா பிடிக்காது.”

‘போட்டாளே ஒரு போடு’ எண்ணிய கார்த்திக்கின் முறுவல் தீரவே இல்லை.

“அடுத்து நாம இரண்டு பேரும் வேற வேற இனம்…”

மற்ற நேரம் இருந்தது போல அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை. “அதனாலென்ன வேற வேற ஸ்டேட்காரங்க காதலிக்கக் கூடாதா? இல்லை கல்யாணம் செஞ்சுக்க கூடாதா?” கேட்டே விட்டான்.

“அது நிறைய பேர் செய்வாங்களா இருக்கும், அதுக்கென்ன?…. ஆனா நான் செஞ்சுக்க முடியாது. நான் இரண்டு தங்கச்சிக்கு அக்கா” என்றாள் சொன்ன விதம் என்னமோ “நான் இரண்டு குழந்தைகளுக்கு தாய்” என்பது போல இருக்க…. கார்த்திக்கின் முறுவல் பெரிதாக விரிந்தது.

அவன் முகத்தை பட்டும் படாமல் அவனது கண்களை எதிர்கொண்டும் எதிர்கொண்டும் கொள்ளாமல் அவள் தட்டுத்தடுமாறி பேசிக் கொண்டிருக்க “நான் இரண்டு தங்கச்சிக்கு அக்கா” என அவள் சொன்ன அடுத்த நொடி இவனோ “அய்த்தே நென்னு அக்கா மொகுடு” (அப்ப நான் அக்கா புருசன்) என்றிருந்தான்.

“என்ன?” என அவன் சொன்னது புரியாமல் அவள் தடுமாற, “ஒன்னுமில்ல” எனச் சொல்லி அவளை மேலும் பேச ஊக்கினான்.

“அது தான் நான் சொல்லிட்டேனே, இனி என்னச் சொல்ல?” விடைத் தெரியாத கேள்விக்கு பதில் சொல்லத் திணறும் மாணவியாக அவள் திணற,

“இதெல்லாம் தான் காரணமா?”

“ஆமா?”

தனது கண்ணாடியை கழற்றியவன் ஊனமுற்ற கண்ணை சுட்டிக் காட்டியவன், “அப்ப இது காரணமில்லையா?” எனக் கேட்டதும் மீரா பதறினாள்.

“ச்சே ச்சே இல்லை” என்றாள்.

அவன் கண்ணாடியை மறுபடி அணிந்துக் கொள்ளவும் அவள் அவனிடம், “ஏன் அப்படி கேட்டீங்க?” என்றாள். அவனது ஊனத்தை ஒருபோதும் குறையாக எண்ணி இராதவள் அல்லவா? அவளுக்கு அவன் கேட்ட விதம் சுருக்கென்று குத்திற்று.

“தெரிஞ்சுக்கத்தான்” என்றான் அமர்த்தலாக,

“ம்ம்” தனது கேள்வியால் வெளிறிய அவளது முகத்தை கண்ணாடிக்குள்ளாக ஆர்வமாக பருகினான் அவன்.

“சாப்பிடு” எனவும் தான் தன் முன்னாக வைத்திருந்த அந்த பழ சாலட்டை அவள் உண்ண ஆரம்பித்தாள்.அந்த இனிப்பு அவள் மூளையை சாந்தப்படுத்தியது.

‘நம்மால இவனை புரிஞ்சுக்க முடியாது, காதலுக்கு எண்ட் கார்ட் போடற சந்திப்பில கூட இனிப்பு சாப்பிட வைக்கிறான்”, என எண்ணியவளின் மன உணர்வுகளை அளவிட்டுக் கொண்டு இருந்தான் கார்த்திக்.

“இன்னும் ஏதாவது சாப்பிடலாமா?” என அவன் சாட் ஐட்டங்களை வரவழைக்க கேட்க முடியவே முடியாதென அவள் மறுத்து விட்டிருந்தாள். கடைசி சந்திப்பு என்றதும் அவள்தான் தவித்து நிற்பதும் அவள்தான். இவளது குழப்பத்தினூடாக அவன் பில்லிற்கு பேரர் கொண்டு வந்த பில்லிற்கு அமெரிக்கன் எக்ஸ்ப்ரெஸ் கார்டை கொடுத்ததை கவனிக்காமல் விட்டாள்.

“பில் பாதி நான் பே செய்றேன்”, என்றவளிடம் “நான் கொடுத்துட்டேன்…நீ கொடுத்த ரூபாயில் இன்னும் மிச்சமிருக்கு அதை அட்ஜஸ்ட் செய்துக்கிறேன்”, என்றான்.

இவளுக்கு கோபமே வந்து விட்டிருந்தது… “எது நான் கொடுத்த அந்த இரண்டாயிரம் ரூபாவிலயா?” காளியாக அவதாரமெடுக்க அந்த நீள லானில் நடந்துக் கொண்டிருந்தவன் அவளைப் பார்த்து மனம் விட்டுச் சிரித்ததில் அவன் முகத்தினின்று கண்களை அகற்ற முடியாத வண்ணம் அவள் கட்டுண்டாள்.

அந்த மாயக்காரனின் சிரிப்பில் இரவின் கனவுகளிலும் அவள் புன்னகைத்துக் கொண்டு இருந்தாள்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here