மனதோரம் உந்தன் நினைவுகள்_12_ஜான்சி

0
287

Manathoram Unthan NinaivukaL_Epi 12_Jansi

அத்தியாயம் 12

என் காதல்

காதல் புரிதல் ஆண் பெண் 

செயலாம்

காதல் சொல்லுதல் மட்டும் ஏனோ 

ஆணுக்கே அழகாம்!

இம்முட்டாள்கள் சட்டத்தை

ஏதேனும் செய்தாக வேண்டும்…

உடைக்கவோ, அழிக்கவோ செய்து

என் காதல் வென்றாக வேண்டும்.

மீரா கார்த்திக்கை சந்தித்து வந்ததில் இருந்து மனதிற்குள்ளாக ஒரு உற்சாகம். அவனது செயல்களுக்கெல்லாம் அவள் கோபப்பட்டது முன்பு சரியாக தோன்றி இருந்தாலும் கூட அவளது இயல்பிற்கு அவை மனதை உறுத்திய காரணத்தாலேயே கூட எப்போதும் கார்த்திக் குறித்த நினைவுகள் அவளை வட்டமிட்டுக் கொண்டு இருந்தன எனலாம்.

கார்த்திக்கை தான் மறுபடி சந்திக்கப் போவதாக எல்லாம் அவள் ஒருபோதும் எண்ணியிருக்கவில்லை. அதிகமதிகமாக யோசித்து தான் அவனை நேரில் சந்திப்பதான கற்பனைகளில் ஆழ்ந்து விடுகின்றோம் போலும் எனும் பயம் இருந்தது.

எதிர்பாராமல் அவனை நேரடியாக சந்தித்து, அவனுடன் வெளிப்படையாகப் பேசி என அத்தனையையும் தான் சுமூகமாக முடித்து வைத்து விட்டதாக எண்ணியவள் அடுத்த நாள் பெற்றோர் தங்கைகளோடு இரவுணவிற்கு மகிழ்ச்சியாக வெளியே சென்று வந்தாள்.

அடுத்தடுத்த சில நாட்களில் அந்த நிறைவில் மகிழ்ச்சியாக தூங்கியும் எழும்பினாள். அதற்கடுத்த சில நாட்களில் அவளது மனதில் என்னமோ போல புரியாததொரு உணர்வு. நாட்கள் கடந்துக் கொண்டிருக்க பிடிபடாத அந்த உணர்வு அவளது மனதை புற்று நோய் போல தீவிரமாகப் பற்றிக் கொண்டது.

தினமும் அதன் வீரியம் அதிகரித்த விதத்தில் மறுபடி திகைத்துப் போனாள். தனது உணர்வுகளை அடையாளம் காண அவளால் முடியவில்லை. இரவு தூங்காமல் உருண்டுக் கொண்டிருந்த போது சுசி இன்னும் கூட உறங்காமல் டேபிள் லாம்ப் ஒளியில் எதையோ செய்வது கண்டு அவளை தனதருகே வந்து துணைக்கு படுக்கச் சொல்லலாமா? என எண்ணினாள்.

எண்ணியதோடு நில்லாமல் “சுசி” என்றழைக்க திடுக்கிட்டு திரும்பிய சுசித்ராவின் கையில் பெரியதொரு கோப்பு. ஓ… அவசரமாக முடிக்க வேண்டிய ஏதோ ஒரு கல்லூரி ப்ரொஜெக்ட் குறித்து அவர்களுக்குள் பேசிக்கொண்டது நினைவிற்கு வந்தது.

“என்னக்கா?” என்றாளவள்.

அதற்குள்ளாக மனோகரின் குரல் இவர்களை எட்டி விட்டிருந்தது.

“அங்க என்ன சத்தம்? இன்னும் தூங்கலியா? இந்நேரம் லைட் போட்டுட்டு என்ன வேலை? இதெல்லாம் நேரமே செய்ய முடியாதா?”

கண்டிப்பும் கறாருமான குரலில் அப்பா அதட்ட, தனது வேலை பாதி நின்றதில் தொடரவும் முடியாமல் ‘எல்லாம் இந்த அக்கா தன்னை இந்நேரம் அழைத்ததால் தானே?’ என அக்காவை முறைக்கவும் முடியாமல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இழுத்துப் போர்த்திப் படுத்து உறங்கி விட்டாளவள்.

தங்கைக்கு திட்டு வாங்கி கொடுத்து விட்டதை எண்ணி மீராவிற்கு ஒரு பக்கம் பாவமாக இருந்த போதிலும் இரண்டு தங்கைகளையும் மாறி மாறி எட்டிப் பார்த்தாள். சின்னவள் அருகில் சென்று படுக்கலாமென்றால் பயமெழுந்தது. அவள் அருகில் படுக்கின்றவர்கள் கதி அதோ கதியாகி விடும் நிலை அல்லவா? இரவு முழுக்க படுக்கையில் அவள் கடிகார முள் போல சுற்றிச் சுற்றி வரும் அபாயம் உண்டே.

இங்கு சுசித்ராவிடமும் செல்ல முடியாது தன்னால் அப்பாவிடம் ஏச்சு வாங்கியதற்காக சுசித்ரா தன்னிடம் இரண்டு நாட்களாவது முகத்தை தூக்கிக் கொண்டு திரியப் போகிறாள்.


‘ஆண்டவா இப்ப நான் தூங்குறது எப்படி?’ புலம்பியவாறு உருண்டுக் கொண்டிருந்த மீரா உறங்குகையில் நேரமோ நள்ளிரவை கடந்திருந்தது.

ஒரு வாரம் பத்து நாட்கள் கழிந்திருக்க வேண்டும். அன்று சனிக்கிழமை முக்கியமானதொரு வேலைக்காக மீரா தம் அலுவலகம் வந்திருந்தாள். அவர்களது குழுவினருக்கு ஒதுக்கப்பட்டு இருந்த அந்தப் பகுதியில் அவள் மட்டுமே தனித்து அமர்ந்திருந்தாள். தனியே பணிபுரிவது அவளது வழக்கமே என்பதால் தடையில்லாமல் தன் போல அவளது வேலைகள் நடந்துக் கொண்டு இருந்தன.அங்கங்கே அவளைப் போல சனிக்கிழமை பணிபுரிய வந்திருந்த சொற்பமான நபர்களை கண்ணாடிச் சுவர்களுக்கூடாக தூரமாய் காண முடிந்தது.

அப்படி தீவிரமாக அவள் வேலையில் ஆழ்ந்திருந்த அந்த குறிப்பிட்ட ஒரு நொடியில் அவளது மனதில் அந்தக் குரல் ஒலித்தது.

“நேனு நின்னு ஆத்மார்த்தமாக ப்ரேமிஸ்துனானு”

அது அவளது காதருகே ஒலிக்கவில்லை அது அவளது மனதின் ஓசையாக இருந்தது. எதை நினைத்து மீரா ஓடிக் கொண்டு இருந்தாளோ? அதுவே அவளை மறித்து நின்றதான உணர்வில் மீரா அலமலந்து போனாள்.

மிகச் சிறந்ததாக வடிவமைக்கப் பட்ட ஒலிக்கடத்தப் படாத அறை ஒன்றில் ஆராய்ச்சியாளரான ஒரு பெண் அனுமதிக்கப் பட்டிருந்தாராம். சில நிமிடங்கள் கடந்து அவர் வெளியே வந்த போதோ வேர்த்து விறுவிறுத்து மிரண்டுப் போய் இருந்திருக்கிறார்.

அவரது பதற்றத்தின் காரணமென்ன என அனைவரும் கேட்டபோது,

“அந்த அறையினுள் சென்றதும் வெளி உலக சப்தங்கள் கேட்கவில்லைதான். ஆனால், எனது உடலின் இயக்கங்கள் அவற்றின் சப்தங்களை என்னால் நன்றாகக் கேட்க முடிந்தது. அந்த உள்ளுறுப்புக்கள் இடையறாது இயங்கிக் கொண்டிருந்த சப்தத்தை கேட்டபோது உடலின் இயக்கத்தின் பிரம்மாண்டம் உணர்ந்து மிரண்டு விட்டேன்” என்றாராம்.

அந்தப் பெண்மணியைப் போலவே மீராவும் அலுவலகத்தின் அந்த வெறுமையின் நடுவில் அவளது புத்திக்குள்ளாக ஊடுறுவிப் போன அந்தக் குரல் மாறி மாறி ஒலிப்பதை உணர்ந்து மிரண்டாள்

“நேனு நின்னு ஆத்மார்த்தமாக ப்ரேமிஸ்துனானு”

தடுமாறிய அவன்

தயங்கிய அவன்

புன்னகைத்த அவன்

கோபம் கொண்ட அவன்

முட்டுக்கட்டையாக இருந்த அவன்

ஏறுக்கு மாறாக நடந்துக் கொண்டிருந்த அவன்

விளையாட்டுப் போல பேசுகின்ற அவன்

அவளை கட்டுப்படுத்துகின்ற அவன்

அவளை அதிகாரம் செய்கின்ற அவன்

அவளுக்கு தேவை என்றபோது ஓடி வந்த அவன்

இன்னும் என்னென்னமோவாக எங்கும் எதிலும் அவனாக ஆக்கிரமிக்க…

“இன்னிக்கு இது நம்மளோட கடைசி சந்திப்பா இருக்கட்டுமே?” அவள் சொன்னது நினைவுக்கு வரவும் தன் தலையில் தானே பொட்டென ஒன்றை போட்டுக் கொண்டாள் மீரா.

கண்களில் கண்ணீர் திரண்டு நிற்க, அழுது விடக் கூடாதெனும் முயற்சியோடு வெகு பிரயத்தனப்பட்டு ரெஸ்ட் ரூம் சென்று உள்ளே அடைத்துக் கொண்டு விம்மினாள்.

ஏதோ நெஞ்சடைத்துக் கொண்டு வருவதான உணர்வு. ஏனோ அவளுக்கு அழுகையும் வரவில்லை. கழிவறையில் இருந்து வெளியில் வந்து அங்கிருந்த வாஷ்பேசின்களுள் ஒன்றில் தண்ணீரை முகத்தில் வாரி வாரி இறைத்தாள்.

ஒருவாறாக தன்னைக் கட்டுப் படுத்திய பின்னர் முகத்தை துடைத்து நிமிர்கையில், “மணி என்னாச்சுங்க மேடம்?”

மணி கேட்டு எதிரில் நின்றது ஹவுஸ் கீப்பிங்க் பெண்மணி, முறுவலித்து அவருக்கு நேரம் சொன்னாள்.

அந்தப் பெண்மணிக்கு பேச யாராவது கிடைக்க மாட்டார்களா? எனும் எண்ணம் இருந்திருக்க வேண்டும். வழக்கமான கூட்டம் இல்லாமல் வெறித்திருக்கும் அலுவலகத்தில் வேலைக்கு வந்த சொற்ப பெண்களுள் ஒருவரைக் கண்ட உணர்வில் அவர் மீராவிடம் பேச்சை வளர்த்துக் கொண்டு இருந்தார். மீராவுக்கும் அந்த நேரம் அது தேவையாக இருந்தது. சற்று நேரமே அவரிடம் பேசிக் கொண்டு இருந்தவளிடம் அந்தப் பெண்மணி தனது பிரச்சனைகளை எல்லாம் புலம்பிக் கொட்டி விட்டிருந்தார்.

முறுவலோடு கேட்டுக் கொண்டு இருந்தவள் அந்த நீண்ட பாதை கடந்து தனது இடத்தை அடையும் போது அந்தப் பெண்மணியைக் குறித்து யோசிக்கலானாள்.

‘எவ்வளவு பாசாங்கற்ற மனிதர்கள்? மனதில் இருந்ததை முன்பின் அறியாத என்னிடம் கொட்டியாகிற்று. இப்போது அவரது மனம் இலகுவாகி இருக்கும்.இப்படி புலம்புவதும் நல்லதுதான்… தன்னைப் போல மனதில் வைத்து புழுங்க வேண்டாம்’ என்றிருந்தது.

நாட்கள் அதன் போக்கில் கடந்திருந்தன. தனது மனதின் வெறுமைக்கு தனது தனிமையுணர்வுதான் காரணம் என்று உணர்ந்துக் கொண்டாள். இரவு துணைக்கு தங்கைகளை அருகில் அழைத்துக் கொள்ளலாமா? என எண்ணும் போதெல்லாம் அவர்கள் படிப்பில் மும்முரமாக இருக்க, முயன்று தனியே தூங்கினாள்.

கடந்த ஒரு வார காலமாக வெளியூர் சென்றிருந்த அப்பா இன்னும் திரும்பி இருக்கவில்லை. அப்பா வீட்டில் இல்லாத நேரம் வீட்டின் கதவுகளை அடைப்பது மீராவின் வேலையாகவே இருந்தது.

நாள் முழுவதும் வேலையில் களைத்த அம்மா தனது அறையில் தூங்கிக் கொண்டிருப்பதை எட்டிப் பார்த்து விட்டு தன் அறைக்குள் அவள் வந்த போது இவர்கள் மூவரின் கட்டில்களும் ஒன்றாக இணைத்து போடப்பட்டிருந்தது.

“வாருங்கள் வாருங்கள் அக்கா அவர்களே” என சுசித்ரா அழைக்க மீரா புன்னகையோடு சிரித்து விட்டிருந்தாள்.

“என்ன இன்னிக்கு திடீர்னு?” எனக் கேட்டாள். தங்கைகள் தனக்காக நேரம் செலவழிக்க இருப்பது மனதிற்கு இதமாக இருந்தது.

“ம்ம் க்கும்” செருமிக் கொண்டாள் சித்ரா

“கேள்வியை நீ கேட்கிறாயா இல்லை நான் கேட்கட்டுமா?” சுசித்ரா கேட்க அதற்குள்ளாக மீரா கட்டில் மேலேறி எப்படியோ பேலன்ஸ் செய்து நடுவில் சென்று படுத்திருந்தாள்.

“அப்பா இல்லன்னு தைரியம் அதனாலத்தான் இவ்வளவு வாய்?” இரண்டு பேரையும் கன்னங்களை பிடித்து இழுத்து விட்டாள்.

“இந்த வாரம் முழுக்க லீவு வேற, ஜாலியோ ஜாலி. மிஸ்டர் மனோகர் நீங்க இன்னும் இரண்டு நாள் கழிச்சே வாங்க” அலட்டலாய் சொன்ன சித்ராவிடம்.

“ஏ லூசு, மிஸ்டர் மனோகர் தான் ஊருக்கு போயிருக்கார், ஆனால், இங்க மிஸ்ஸ் மனோகரை காவலுக்கு விட்டுட்டு போயிருக்கார். அதனால கொஞ்சம்…” என சைகையில் அவள் வாயைப் பொத்தச் சொல்லி சைகை காட்ட மற்றவர்கள் சப்தமில்லாமல் சிரித்துக் கொண்டிருந்தனர்.

“இரண்டு பேருக்கும் என்ன கேள்வியாம்?” அவர்கள் விட்ட இடத்திலிருந்து மீரா கேட்க,

“ம்ம்… நினைவு வந்திருச்சு… இங்க பாரு அக்கா… எனக்கு தொப்ப விழுந்திருச்சு இதை எப்படி சரி செய்ய?” சித்ரா கேட்க,

“என்னடா நடு ராத்திரி அதுவுமா என் கிட்ட கிண்டலா? ம்ம்” என்றாள் மீரா

“என்ன டயட் ஃபாலோ செய்ற அக்கா?” என்றாள் சுசித்ரா.

“நானா? டயட்? நான் எங்க டயட் வச்சிருக்கேன்? மூச்சு முட்ட நாலு நேரம் சாப்பிட்டுட்டு திரியுறேன். என் கிட்ட கேட்க வந்திருக்கீங்க இரண்டு பேரும்…”

“நிஜமாவே நீ டயட்ல இல்லையா?”

“இல்லைடா”

“அப்ப ஏன் மெலிஞ்சிருக்க?”

“நான் எங்க மெலிஞ்சிருக்கேன்?”

அவள் கழுத்தெலும்பை வருடினாள் சின்னவள் இவளுக்கு சிலிர்த்தது. “டேய்”

“அக்கா இந்த எலும்பு முன்ன எல்லாம் உனக்கு இப்படித் தெரியாது, இப்ப பாரு?”

“கண்ணுலயும் கருவளையம்” அடுத்து இருந்தவள் அக்காவை ஆராய்ந்தாள்.

“பரீட்சை முடிஞ்சதும் என்னை வச்சு ஆராய்ச்சியா செய்யறீங்க?” தங்கை மூக்கை நிமிண்டினாள்.

“அக்கா நீ முதல் முதல்ல எங்களை எப்ப பார்த்த அந்த கதை சொல்லு?” மீராவின் இடது புறம் தலை வைத்து படுத்துக் கொண்ட சித்ராவைப் பார்த்து சுசித்ரா மண்டையை முட்டிக் கொள்வதான சைகை காட்ட மீரா சிரித்தாலும்..

“ நான் அப்ப ப்ரீ கேஜி,  நம்ம ஆச்சி என்னை ஸ்கூலுக்கு அழைச்சுட்டு போக வந்திருந்தாங்க. ரிக்ஷா பிடிச்சு நாங்க ஹாஸ்பிடலுக்கு போனாமா?”

“ம்ம்”

“அங்க லைட் வெளிச்சத்தில இரண்டு குட்டிப் பாப்பாவை துணியில பொதிஞ்சு வச்சிருந்தாங்க.இரண்டு பாப்பாவும் நான் எங்க வந்திட்டேன்னு தெரியலையேன்னு திருதிருன்னு முழிச்சிட்டு இருந்தாங்களாம்”

அதற்குள்ளாக சுசித்ரா உறங்கி விட்டிருந்தாள்.

“அதில நான் தானக்கா சுறுசுறுப்பா இரண்டு கையும் வெளிய எடுத்து ஆட்டிட்டு இருந்தேன்?”

“ஆமாடா”

ம்ம்… அக்கா இன்னுமின்னுமாய் ஏதேதோ கேட்க அவள் சொல்லவென தங்கைகள் சூழ அன்றிரவு நிம்மதியாய் உறங்கினாள் மீரா.

கனவில் வசீகரமாய் சிரித்த வண்ணம்

“நேனு நின்னு ஆத்மார்த்தமாக ப்ரேமிஸ்துனானு” கார்த்திக் சொன்னான்.

“நானும், நானும் ரொம்ப ரொம்ப ப்ரேமிஸ்துனானு” பிதற்றினாள் மீரா.

எங்கோ ஒரு இரயில் நிலையம் அங்கு அவள் கார்த்திக்கை தேடிக் கொண்டிருக்கிறாள். முன்பின் தெரியாத மக்கள் கூட்டம், அவனை காணவில்லை. எங்கெங்கு தேடியும் காணவில்லை.

“இன்னிக்கு இது நம்மளோட கடைசி சந்திப்பா இருக்கட்டுமே?” தான் சொன்னது நினைவில் வர…

“அனாவசியமா பேசக் கூடாதுன்னு அம்மா எப்பவும் சொல்வாங்க… நான் அன்னிக்கு பேசினது தப்புத்தான்… நான் அப்படிச் சொன்னது தப்புத்தான்”, முனகினாள்.

ஒரு இரயில் மெதுவாக நகர்ந்து அவளைக் கடந்துச் சென்றது. அதில் அந்த இரயில் பெட்டியின் வாயிலில் நின்று புன்னகைப்பது… யாரையோ பார்த்து கையசைப்பது அது யார் கார்த்திக்கா? ஐயோ கார்த்திக்… நான் உன்னைப் பார்த்து விட்டேன்.

வேகமெடுக்கும் இரயிலை மீரா மூச்சிரைக்க துரத்தி ஏற முயலுகின்றாள்… நான் தவற விடக் கூடாது… இரயிலை தவற விடவேக் கூடாது….. இரயிலை துரத்துகின்றாள்.

“நானும், நானும் ரொம்ப ரொம்ப ப்ரேமிஸ்துனானு கார்த்திக்” அவள் குரல் அந்த இரயில் நிலையத்தில் அதிர்ந்து ஒலிக்கின்றது.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here