மனதோரம் உந்தன் நினைவுகள்_13_ஜான்சி

0
276

Manathoram Unthan NinaivukaL_Epi 13_Jansi

அத்தியாயம் 13

வாழ்ந்த காலம்

தவறியும்

நீ என்னை நேசித்த காலத்தை

“இறந்த காலம்”

எனக் குறிப்பிட்டு விடாதே.

ஏனென்றால்,

அதுதானே நான் வாழ்ந்த காலம்.

ஒரு வார காலம் கடந்திருந்தது மனோகர் தனது வெளியூர் பயணத்தினின்று திரும்பி இருந்தார். லீவு முடிந்து விட்டிருந்ததால் சித்ரா மற்றும் சுசித்ரா தங்களது கல்லூரிக்குச் சென்று இருந்தனர்.சனிக்கிழமை என்பதால் அன்று வழக்கம் போல மீரா சமையல்கட்டில் அம்மாவிற்கு துணையாக வேலைகளை செய்துக் கொண்டு இருந்தாள்.

“மீரா இங்க வாம்மா”,அப்பா அழைத்ததும் வேலைகளை விட்டுவிட்டு முன்னறைக்குச் சென்றாள். அருகே அமரச் சொல்லவும் அமர்ந்தாள். அவரது கையில் சில கடித உறைகள் இருந்தன.அவற்றுள் ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டினார்.

“இந்த பையன் விபரம் பார்த்தால் எனக்கு சரிப்பட்டு வரும்னு தோணுது, நீயும் பார்” எனவும் அதனை திறந்துப் பார்த்தாளவள்.அதில் வசீகரமான ஆண்மகன் ஒருவனின் புகைப்படம் இருந்தது. விளம்பரத் துறையில் சீனியர் மேனேஜர் இலட்சத்தில் சம்பளம் கூடுதலாக குடும்பத்தினரின் விபரங்களும் இருந்தன.அந்த நேரம் அவளால் தனது உணர்வுகள் எதையுமே வெளிக்காட்ட முடியவில்லை.

“என்னப்பா?” என்றவளாக அப்பாவை பார்த்தாள்.

“அடுத்த வாரம் பெண்பார்க்க வரச் சொல்லட்டுமா?”

“சரிப்பா” என தலையசைத்தவள் வந்து தனது வேலையை தொடர்ந்தாள். குடும்பத்தின் விருப்பம் போல மணம்கொள்வது என அவள் தானாக எடுத்த முடிவுதான். ஆனால், உடலெல்லாம் மனதெல்லாம் ஏதோ ஒரு தாங்க முடியாத பாரம் போல் இருந்தது.

வீட்டில் அவளிடம் சில வருடங்களாக திருமணம் குறித்து கேட்டிருந்தனர் தான். இந்த வருடம் செய்துக் கொள்கிறேன் என அவள் ஏற்கெனவே பெற்றோரிடம் கூறி இருந்தாள். அப்போது மடியில் கனமில்லாமல் இருந்தது இப்போது மனமெல்லாம் கனமோ கனம்.

“சரி பெண் பார்க்க வரும் முதல் மாப்பிள்ளையையே கட்டிக் கொள்ள வேண்டும்” என்பதான கட்டுப்பெட்டித்தனமெல்லாம் குடும்பத்தில் இல்லை. மனம் இலகுவாகும் வரைக்கும் ஏதாவது செய்து திருமணத்தை தள்ளிப் போட பார்க்க வேண்டும் என எண்ணிக் கொண்டாள்.

‘தான் செய்யவிருப்பது தவறோ?வென மனம் முரண்டினாலும் தன் மனதில் இருப்பதை அப்பாவிடம் எப்படிச் சொல்ல முடியும்?’ சமாதானப் படுத்திக் கொண்டாள்.

அடுத்த வாரம் முழுக்க மீரா பரிதவிப்புடனேயே நாட்களைக் கடத்தினாள்.

‘அப்பாவிடம் தான் கார்த்திக்கை நேசிப்பதை சொல்லலாமா?’

அல்லது ‘இரண்டு நாட்கள் லீவு எடுத்துக் கொண்டு ஹைதராபாத் சென்று கார்த்திக்கிடம் பேசி வருவோமா?’

‘ஆனால், தனக்கு கார்த்திக் எங்கே இருப்பான் எனத் தெரியாதே. அவனது அலைபேசி எண்ணையும் அவன் முன்பே மாற்றி இருந்தானே? அப்படியே போய் பேசினாலும் நான் சொல்வதை ஏற்றுக் கொள்வானா?’ எனத் திடீரென்று அவளுக்கு பலப்பல எண்ணங்கள் தோன்றிக் கொண்டு மனதின் நிம்மதியை கெடுத்துக் கொண்டு இருந்தன. நடக்க வாய்ப்பு இல்லாததையே எண்ணி நோகும் இந்த மனது என மீரா தன்னை நொந்துக் கொண்டாள்.

அன்று வெள்ளிக் கிழமை மாலை அலுவலகத்தில் இருந்து வந்தவள் வீட்டில் ஒவ்வொருவரது முகமும் ஒவ்வொரு விதமாக இருப்பதை கவனித்துப் பார்த்தாள். அந்த நேரம் அதிசயமாக அப்பாவும் வீட்டில் இருந்தார். மீரா தன்னை சுத்தம் செய்து இலகுவான உடை மாற்றி சமையலறை சென்று மாலை சிற்றுண்டியை எடுத்துக் கொண்டு இருக்கையில் அங்கு சில இனிப்பு வகைகள் அழகழகான பெட்டிகளில் இருந்தன. குளிர்சாதனப் பெட்டியில் சில பைகளில் உயர்தர வகைப் பழங்களும் இருந்தன.

வீட்டிற்கு யாரோ விருந்தினர் வந்துச் சென்றிருப்பதாக அவள் புரிந்துக் கொண்டாள். வழக்கத்திற்கு மாறாக இவள் தான் பேசிக் கொண்டு இருந்தாளே தவிர மற்றவர்கள் அதிகமாக பேசவில்லை. 

அந்த நேரம் “தங்கக்கா தங்கக்கா” என அழைத்த வண்ணம் ஆடைகள் வாங்க வாசலில் ஆட்கள் வந்துச் சேர, தங்கம் வந்தவர்களை வரவேற்று உடைகளை காண்பிக்க ஆரம்பித்தார். மனோகரும் உதவினார்.

உண்ட பாத்திரங்களை எடுத்து சமையலறையில் வைக்க சென்றவளைத் தொடர்ந்து வந்த தங்கைகளும் வந்து பாத்திரம் கழுவி அடுக்க உதவத் தொடங்கினர்.

இரவு உணவை முடித்து குளிர்சாதனப் பெட்டியில் இருந்து ஆரஞ்சுப் பழம் ஒன்றை எடுத்து கை போன போக்கில் அதன் தோலை நீக்கி, நரம்புகள் நீக்கி ஒவ்வொரு சுளைகளாக விழுங்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

வீட்டிற்கு வந்தது யாரென அதுவரைக்கும் அவளிடம் யாரும் சொல்லி இருக்கவில்லை. எப்படியும் தெரியத்தான் போகின்றது எனும் எண்ணத்தில் மீரா அமர்ந்திருக்க அந்த நேரம்,

“அக்கா இன்னிக்கு நம்ம வீட்டுக்கு உன்னோட பியான்ஸி வந்திருந்தாங்க” என சித்ரா மீராவின் காதில் சொல்லவும், ஆரஞ்சு சுளையின் சாறை விழுங்கிக் கொண்டு இருந்தவளுக்கு புரையேறிற்று.

அடுத்த ஐந்து நிமிடங்கள் கண்களில், மூக்கில் என நீர் வடிய இருமித் திணறிச் சோர்ந்து அமர்ந்த மீராவை அம்மா அணைத்து முதுகை தடவி விட்டுக் கொண்டு இருந்தார். சித்ராவை சுசித்ரா ஏதோ திட்டி இருக்க வேண்டும். அவள் முகத்தை தூக்கிக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.

தங்கைகளின் லீவு முடிந்ததும் கட்டில்கள் பிரிந்து இருந்தாலும் அன்று மறுபடி இணைத்து போடப்பட்டு இருந்தன.

சித்ரா திட்டு வாங்கிய வருத்தத்தில் சீக்கிரம் தூங்கி விட்டிருக்க சுசித்ரா விழித்து இருந்தாள். அவளாவது எதையாவது சொல்வாள் என மீரா பார்த்திருக்க அவளும் ஏதோ சிந்தனையில் இருந்தாள். திடீரென மீராவின் அருகில் வந்தவள்,

“என் அக்காக்கு எல்லாமே பெஸ்டா (சிறந்தது மட்டுமே) கிடைக்கணும்” என அக்காவை முத்தமிட்டவள் அமைதியாக படுத்து விட்டாள்.

அவர்களது அமைதி அவளை உறுத்தியது. தங்கை சொன்ன ஃபியான்ஸி எனும் வார்த்தையில் அப்பா தந்த புகைப்படத்தில் இருந்த நபரை மனதில் நினைவுக் கூர முயன்றாள். நினைவுக்கு வரவில்லை, அந்த நபர் எதற்கு இன்று வீட்டுக்கு வர வேண்டும்? வந்தது சரி ஆனால் அந்த நபரை தன் தங்கை தனது ஃபியான்ஸி எனச் சொன்னது வெகுவாக உறுத்தியது.சுசித்ரா சின்னவளை அதட்டியதும் கூடத்தான் உறுத்தியது.

வழக்கமான வழக்கமாக குழப்பத்திலேயே தூக்கத்தில் ஆழ்ந்தாள். அடுத்த நாள் எழும்பி வழக்கம் போல வேலை செய்துக் கொண்டிருக்க மனோகர், “மீராம்மா இன்னிக்கு சாயந்தரம் மாப்பிள்ளை வீட்லருந்து வராங்கம்மா” என்றார்.

கேட்டதும் மீராவிற்கு திடுக்கென்று இருந்தது அந்த திடுக்கிடல் நொடிக்கொருதரம் கூடிக் கொண்டு இருந்ததே அன்றி குறையவில்லை.

மதியம் தங்கைகளும் கல்லூரியில் இருந்து வந்துவிட்டிருக்க, மீராவை பார்த்துப் பார்த்து அலங்கரிக்கத் தொடங்கினர். பிங்க் நிற பார்டரில் நீல நிற பட்டுச் சேலை மீராவின் உடலை மிக பாந்தமாக அலங்கரித்து இருந்தது. “அக்கா பூ வச்சுக்கோ” இன்னும் இன்னும் என தங்கைகள் இருவரும் வைத்து இட்டதில் தோள்கள் இரண்டிலும் மல்லிகைச் சரங்கள் அவள் அசையும் போதெல்லாம் அசைவாடின.

என்னமோ நாடக ஒத்திகைக்கு ஆயத்தமானது போல அவளது மனம் முழுக்க புழுக்கமாக இருந்தது. தான் செய்வது தவறென அவளது மனது இடித்துரைத்தது. அதெப்படி நான் இந்த கோலத்தில் இன்னொரு ஆண் முன் நிற்பேன். அது அந்த ஆணுக்கு நான் அநியாயம் இழைத்தது போல் ஆகாதா? குமைந்தாள்.

‘எதுதான் நியாயம்?’ தன் மனதை எதிர்த்துப் போராட ஆரம்பித்தாள் அவள்.

‘அது தவறு, இது தவறு எல்லாம் தவறு என்றால் எதுதான் நியாயம்? எதுதான் சரி? எது தான் நேர்மை?’

‘ஏன் என்னை கொஞ்சம் கொஞ்சமாக கொல்கின்றாய் மனதே? உன் நியாயமும் நீதியும் வேண்டாமெனக்கு… வேண்டவே வேண்டாமெனக்கு.’

இதயத்தை தூக்கிப் போட முடியும் ஏனென்றால் அது ஒரு உறுப்புதானே? வெட்டி எறிந்து விடலாம். ஆனால், இந்த மனம் எனும் மாயாவியை நான் எங்கனம் தூக்கிப் போட? எங்குதான் போட?

மீராவின் முகம் வழக்கம் போல சாந்தத்தை அணிந்து இருந்தாலும் கூட மனம் பேரலையாக பொங்கி எழுந்து மனக்கரையை ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டு இருந்தது.இதோ இந்த தருணத்தில், இந்த சூழலினின்று தப்பித்து, இதனின்று மீண்டு எங்காவது ஓடி விட முடியுமானால் எவ்வளவு நல்லதாக இருக்கும்?

உள்ளறையில் அவள் அமர்ந்து இருக்க, வெளியறையில் ஏதோ சப்தம் கேட்டது. தான் எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. மனதை மரத்துப் போக வைத்தவளாக தன்னை அன்னை அழைக்கும் நேரத்திற்காக காத்திருந்தாள்.

தங்கைகள் ஏற்கெனவே வரவேற்பரையில் தான் இருந்தனர்.ஆளுக்கொரு அழகிய சுடிதார் அணிந்து அவர்களும் ஜொலித்தனர். சுசித்ராவிடம் மட்டும் ஏதோ ஒரு சுணக்கம். அம்மாவும் அப்பாவும் கூட ஏதோ ஒரு இறுக்கத்தில் இருந்ததாக தோன்றிற்று. வீட்டின் முதல் திருமணம் எனும் பதட்டம் இருக்கக் கூடும் என மீரா கணித்தாள்.

“மாப்பிள்ளை வந்துட்டார் வாம்மா மீரா” அம்மா அழைக்கவும் அவள் அடி மேல் அடி வைத்து அறைக்கு வெளியே வந்தாள். வீடு முழுக்க ஆட்கள் இருப்பர் என எண்ணி வந்தால் அங்கோ வேறு யாருமில்லை. வாசலில் ஒரு ஆண் மகன் தனது ஷீவை கழற்றி வைத்துக் கொண்டு இருந்தான்.

அவனது தலையை பார்க்க இவளால் முடியவில்லை. உடல் வாகை பார்க்கும் போது என்னமோ அவன் கார்த்திக்கை போலவே இருப்பதாக தோன்றியதும் அவள் முறுவலித்தாள். கனவில் நனவில் என எல்லாவிடமும் அவனையே கண்டுணரும் பைத்தியக்கார நிலைக்கு தான் வந்து விட்டதாக அவளுக்கு ஒரு நொடி தோன்றிற்று.

இதற்கெல்லாம் காரணம் மீரா என தனக்கு பெற்றோர் வைத்த பெயராகத்தான் இருக்க வேண்டும் எனும் முடிவிற்கு வந்தாள். உள்ளம் உருகி உருகி, நினைத்து நினைத்து, தவித்து மடிவதுதான் மீராக்களின் நிலையோ? விதியோ?

காக்கை சிறகினிலே நந்தலாலா – நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா


பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா – நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா


கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா – நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா


தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

-பாரதியார்

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here