மனதோரம் உந்தன் நினைவுகள்_14_ஜான்சி

0
294

Manathoram Unthan NinaivukaL_Epi 14_Jansi

அத்தியாயம் 14

முற்றுப் பெறாத பல

சொல்லாத கதைகளும்,
பகிராத கனவுகளும்,

வெளிப்படுத்தாத நேசமும்,
வாய்க்கப் பெறாத காதலும்,
என…

முற்றுப் பெறாத பலவும்
பலரின் வாழ்வில்.

தன் குடும்பத்திற்கும் நியாயம் செய்வதாக எண்ணி தனக்கும் நியாயம் செய்யாமல் தன் மனதிற்கும் நியாயம் செய்யாமல் தான் உருவாக்கி நிற்கும் இந்த சூழ்நிலையில் குறைந்த பட்சம் தான் எடுத்த தீர்மானங்களுக்காவது நியாயம் செய்தாக வேண்டும் எனும் முனைப்பில் மீரா பல்வேறு சிந்தனைகளில் தடுமாறிய தனது மனதை நிலை நிறுத்தினாள்.

‘தன்னை பெண் பார்க்க வந்தது யாராகினும் அவர்களது மனம் வருந்தும் படி நடந்துக் கொள்ளக் கூடாது. தன்னால் பெற்றோர்கள் மரியாதை குறைய வழி வைக்கக் கூடாது’ தனக்குள்ளாகச் சொல்லிக் கொண்டாள்.

‘அதென்ன எந்த ஆணைக் கண்டாலும் கார்த்திக்கை நினைவு கூறுவது?’ என தனது மனதை கடிந்தாள். தாயுடன் நின்றவண்ணம் வாசலை பார்த்து நிற்க, அங்கோ ஷீக்களை கழற்றியவன் நிமிர்ந்தான்.

‘இப்போது அப்பாவுடன் சிரித்தவண்ணம் உள்ளறைக்கு வருவது கார்த்திக் என எனக்கு ஏன் தோன்ற வேண்டும்? நிச்சயம் எனது மன நிலை பிறழ்ந்து விட்டது போலும். நான் உடனடியாக மன நல மருத்துவரை பார்க்க வேண்டும். அப்பா காட்டிய அந்த நபர் பார்க்க இப்படி இல்லையே, வேறு மாதிரிதானே இருந்தார்’ குழப்பமே உருவாக நின்றாள்.

அப்பாவுடன் வந்த அவன் அவரிடம் எதையோ பேசினார் போல அனுமதி கேட்டார் போல தலையசைத்தான். அவர்களுக்குள்ளாக என்ன மௌன மொழிகளோ?! வில்லில் இருந்து புறப்பட்ட அம்பைப் போல நேரடியாக அவளிடம் தான் வந்து நின்றான்.

எதிரில் நின்ற அவனது முகத்தில் சற்றும் புன்னகை வற்றவில்லை.வலிந்த அவனது கரங்களில் சட்டையின் கைப் பகுதியை இரு புறமும் சுருட்டி விட்டிருந்தான். வழக்கம் போல அவளைப் பார்த்து வசீகரமாக சிரித்தான் அவள் மனதும் அவனை பார்த்ததும் மயங்கட்டுமாவென? கேட்டு நின்றது.

இவள் வீட்டின் நடுவில் இருக்க அம்மா அங்கிருந்து எப்போது நகர்ந்தாரென அவளுக்குத் தெரியவில்லை. தன்னந்தனியளாக அவனை எதிர்கொண்டு நின்றாளவள். காட்சிப்பிழை போலும், கண் சிமிட்டினால் மறைந்து விடுவான் என்பது போல சிறு பிள்ளையாக கண்களை சிமிட்டி சிமிட்டிப் பார்த்தாள். அவனது தோற்றமோ மறையவில்லை. அவளது எதிரில் நின்றது கார்த்திக் போலொருவன் அல்லது கார்த்திக்கேதான்.

உணர்ச்சி மிகுதியில் அவளது கண்கள் கலங்கி உதடுகள் நடுங்கவாரம்பித்து இருந்தன. என்ன செய்து என்ன? இன்னுமாய் அருகில் வந்து நின்றே விட்டானே?

“ஹாய் மீரா, ஐயாம் கார்த்திக் வயசு முப்பத்தி இரண்டு, அன்மேரீட் என்னை கட்டிக்க உனக்கு விருப்பமா?” கேட்டவனை விழி மூடாமல் பார்த்தாள். மனதில் மேகமூட்டமாக இருந்த எண்ணங்கள் மழையாகினவோ என்னமோ? அவளது கண்ணினின்று ஒற்றைத் துளிக் கண்ணீர் சொட்டென விழுந்தது.

சில்லிட்டிருந்த அவளது வலக்கரத்தை பிடித்தவன் அப்படியே அவளை தன் போக்கில் கொண்டுச் சென்றான். மனோகர் முன்பாக சென்று நின்றான்.

“அத்தய்யா” என கார்த்திக் அழைக்கவும் தங்கம் கணவரோடு வந்து நின்றார்.

“மாமய்யா, அத்தய்யா எனக்கு உங்க பொண்ணை கட்டிக்க விருப்பம். கட்டித் தருவீங்களா?” கொஞ்சு தமிழில் அனாயாசமாக கேட்டான்.

மீரா வெடெவெடெவென நடுங்கினாள், அவளால் தனது பெற்றோரை நிமிர்ந்தே பார்க்க முடியவில்லை.

“நிச்சயமா மாப்பிள்ளை” மனோகர் உறுதியான குரலில் கூற தங்கமும் தலையசைத்தார். ஆனால், அவர்களிடம் ஏதோ ஒன்று குறைவுப் பட்டதாக மீராவிற்கு புரிந்தது.

ஏறக்குறைய அரை மயக்கத்தில் இருப்பதான உணர்வில் இருந்தாள் மீரா. ‘இந்த கனவு எப்போது கலையும்?’ என்றிருந்தது. இப்போது அவளது கரத்தை பிடித்து சித்ராவிடம் வந்து நின்றான்.

“சின்ன பாப்பா, நான் உங்க அக்காவை கட்டிக்கலாமா?” சித்ரா மிகவும் மகிழ்ச்சியாய் தலையசைத்தாள்.

“பெத்த பாப்பா…” சுசித்ராவிடம் வந்து நின்றான் அவன் சுசித்ரா அக்காவின் முகத்தையே பார்த்து நின்றவள், அவளது மனப்போராட்டத்தை புரிந்துக் கொண்டாள்.

முன் தினம் கார்த்திக் அவர்கள் வீட்டிற்கு வந்த போது அவளது மனநிலை வேறாக இருந்தது. கார்த்திக் வரும் முன்பாகவே வீட்டினரை அமர வைத்து மனோகர் சில விஷயங்களை விளக்கி இருந்தார்.

முன் தினம் சின்ன பாப்பா என்று அழைத்து சற்று நேரம் பேசிய விதத்திலேயே சித்ரா அவனது அன்பில் மலர்ந்து அவனை தனது அக்காவின் இணையாக ஏற்றுக் கொண்டாலும், சுசித்ராவால் அப்படி ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கார்த்திக்கின் உடல் ஊனம் அவளை வெகுவாக மருட்டி இருந்தது. ஆனால், அந்த மனிதனைக் கண்டதும் கண்கள் நிறைந்த கண்ணீரோடு உணர்ச்சி வசத்தில் உதடுகள் துடிக்க நிற்கின்ற தனது தமக்கையை கண்ட பின்னர் அவளிடம் வேறு பேச்சே இல்லை.

“எங்கக்காவை நல்லா பார்த்துக்கணும்”

“சரி பாப்பா”

“எங்கக்காக்கு ஒன்னுன்னா நான் கேட்பேன்.”

“கேளு சின்னி”

“முன்ன மாதிரி எங்கக்காவை டென்ஷன் செய்யக் கூடாது, செஞ்சா நான் திரும்ப அழைச்சுட்டு வந்திருவேன்.”

என்ற சுசியிடம் சித்ரா “அதெல்லாம் மாமா விளையாட்டா செஞ்சிருப்பாங்க சுசி, அக்கா சட்டுன்னு டென்ஷனாகிருப்பா” என காதில் சொல்வதாக சத்தமாகவே சொல்லி இருக்க சங்கடத்தில் மீரா இருக்க கார்த்திக் பளீரென சிரித்தான்.

தான் மேம்போக்காக சொல்லி இருந்தாலும் மகள்களுக்கு ஏற்கெனவே நிறைய விஷயங்கள் தெரிந்து இருக்கின்றன என மனோகருக்கு புரிந்தது. மனோகரும் தங்கமும் அங்கே பார்வையாளர்களாகவே நின்றிருந்தனர். அவர்களது கண்கள் மீராவின் முகத்திலேயே நிலைத்திருந்தன.

மற்றெல்லோரும் ஏதோ ஒரு முன்தயாரிப்பில் இருந்திருக்க மீராவால் அங்கே நிற்கவே முடியவில்லை. தலை குனிந்தவள் “இதோ அஞ்சு நிமிசத்தில் வரேன்” என்பதாக விடுவிடுவென தனது அறைக்குள் சென்று படுக்கையில் அமர்ந்தாள்.

இப்போது அவள் என்னவாக உணர்வதாம்? ஆசுவாசமாக?, கோபமாக?, மகிழ்ச்சியாக?, வருத்தமாக? என்னவாக உணர? ஒன்றும் புரியவில்லை.

ஏதோ மலை முகட்டினின்று உயிர் தப்பி வந்த மனநிலையில் இருந்தாள். மனதில் இருந்த பாரமெல்லாம் குறைந்து இலகுவாகி பறப்பதான ஒரு உணர்வு கூடவே சில பல நெருடல்களும்.

அப்பாவுக்கு கார்த்திக்கை எப்படி தெரியும்?

அப்பா இந்த திருமணத்திற்கு சரி சொல்லி விட்டாரா? அம்மாவுமா? அது எப்படி? இது இத்தனை சுலபமா?

தங்கைகள் முதலாக வீட்டில் எல்லாருக்கும் தெரிந்திருக்க தன்னிடம் இந்த நாடகம் ஏன்?

இவற்றை எல்லாம் கேட்கப் போனால், முதலில் நீ உன் மனதில் உள்ளதை சொன்னாயா? என எதிர் கேள்வி வரும் என்பதால் கேட்கவும் முடியாது. பிடிபட்ட கள்வன் போன்றதொரு நிலைதான்… என்னச் செய்வதாம்?

பல்வேறு விதமாக சிந்தித்துக் கொண்டு இருக்கையிலேயே அவளது உள்ளங்கையை கிள்ளி விட்டது ஒரு கரம், மறுபடி வருடியும் விட்டது.அவள் அருகில் அமர்ந்தான் கார்த்திக். அவனைக் கண்டதும் அவளுக்கு ஏனோ கடித்துக் குதறலாமென்பது போல கோபம் சுறுசுறுவென வந்ததே ஒழிய காதலெல்லாம் பொங்கி வரவில்லை. அவன் சரியில்லையா? இல்லை தான் தானா? யோசித்தவளை முதியவரின் குரல் கலைத்தது.

“தாத்தா கிட்ட பேசறியா?” என்றவனது அலைபேசியில் கம்பீரமான ஒரு முதிய உருவம் தென்பட்டது.அவர் பார்க்கும் வண்ணம் யாரோ அலைபேசியை பிடித்து எதிரில் நின்றிருக்க வேண்டும். உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தவருக்கு முகம் காட்டும் விதமாக நிமிர்ந்து அமர்ந்தாள்.

“மா இல்லு மஹாலஷ்மி” (எங்க வீட்டு மஹாலட்சுமி) எனச் சொன்னவரது கண்களில் இருந்த வாஞ்சையில் மொழி புரிந்தும் புரியாமலும் கூட தட்டுத் தடுமாறி புன்னகைத்தாள்.

“நுவு இக்கட ரா… நேன்னு நின்னு ஜாக்கிரதகா சூஸ்கோதானு. நுவு விடிகி பயப்படோது. விடு நின்னு பதபேடிதே மேம்மு இதரு கலிசி வட்னி கொடாதாமு”(நீ இங்கே வா, நான் உன்னை கவனிச்சுக்கிறேன். இவனுக்கு பயப்படாதே, நான் இருக்கேன். நாம இரண்டு பேரும் சேர்ந்து இவன் உன்னை தொந்தரவு செய்தான்னா அவனுக்கு நாலு அடி கொடுக்கலாம்.) தனது கைத்தடியை அவனை நோக்கி ஆட்டியபடி அவர் சொல்லச் சொல்ல கார்த்திக் அவற்றை அவளுக்கு கடுப்புகளுடன் மொழிப்பெயர்க்க, மீரா சட்டென்று சிரிக்க ஆரம்பித்து இருந்தாள்.

வெகு நாளாக இறுகிப் போய் இருந்தவள் இன்று மனம் விட்டுச் சிரித்து இருக்க, அவளது சிரிப்பு சப்தம் வெளியே வரை கேட்க அனைவர் மனதிலும் இதம்.

‘இந்த கூட்டணி சரியில்லையே?’ என்பதைப் போல கார்த்திக் மீராவை உன்னிப்பாக பார்க்க,

“எந்துகுரா நா கொடாலுனு ஆல குரைஸ்துனாவு?”( என்னடா? என் மருமவளை முறைக்கிறியா?) அதட்டினார் தாத்தா.

“இல்லை தாத்தா, இப்பதான் அவளை பார்க்க வந்தேன். உங்களை அறிமுகம் செய்யலில்ல அதனால் தான் பார்த்தேன்” மழுப்பினான்.

“மீரா இது என் பேமிலி”, தாத்தாவை காட்டினான்.மற்றவர்கள் எங்கே? என புரியாத போதிலும் அவள் தலையாட்டினாள். “இனி நீங்களும்” தவறாமல் குறிப்பிட்டான்.

“தாத்தா இதி நா பார்யா” (என் மனைவி) என்றான். அவன் சொன்னதும் அவளது தோளில் கைப் போட்டதும் என அவனது செய்கைகள் எல்லாம் இவளுக்கு வினோதமாக இருக்க நெளிந்தாள். அலைபேசியில் கண்கள் கலங்க இரு கைகள் தூக்கி ஆசீர்வதித்த பெரியவர் முன்பாக மீரா எதையும் சொல்லாவிடினும் அதன் பின்னர் அவனை சற்று முறைத்து வைத்தாள்.

சற்று நேரத்தில் சித்ரா அவசரக்குடுக்கையாக சிறுபிள்ளைத் தனமாக தங்களது அறைக்குள்ளாக எட்டிப் பார்க்க, அங்கே மீராவிடம் கார்த்திக் மொத்துக்களை வாங்கிக் கொண்டு இருந்தான். வெளியே சென்ற சித்ரா உள்ளே நிகழ்ந்தவற்றை சிரித்த வண்ணம் மற்றவர்களுக்கு கடைப் பரப்ப, பெரியவர்கள் அவளை முறைத்தனர்.

சுசித்ரா அந்த அறைக் கதவை வெளியே இழுத்து சாற்றினாள். கார்த்திக்கின் மொபைலுக்கு உடனே அவளது தகவல் பறந்தது. “மாமா ,இன்னும் அஞ்சு நிமிசம் தான் உங்களுக்கு டைம் and the countdown starts now!” அலைபேசியின் மேலே வந்து குதித்த தன் பெத்த பாப்பாவின் தகவலைப் பார்த்தவனது முகம் விகசித்தது. இங்கோ மீராவின் அடிகள் இன்னும் ஓயவில்லை.

“எப்பவும் என்னை டென்ஷன் செய்யறதுதான உன் வேலை” மீராவின் கோபம் எப்போதோ அழுகையாக மாறி இருந்தது.

தனது கால்களுக்குள்ளாக முகம் புதைத்து அழுகின்றவளது கைகளை இழுத்துப் பார்த்தான், வரவில்லை வருவதென்ன? அவள் அசைந்தே கொடுக்கவில்லை.

“உடுத்திருக்கிறது அழகான பட்டுச் சேலைடி, உப்புத்தண்ணிப் பட்டா கெட்டுப் போகும்” சொன்னவனை முறைக்க நிமிர்ந்தவளை தன் மார்பில் இழுத்துப் போட்டுக் கொண்டான். மல்லிகை மணத்தோடு தன் மேல் பஞ்சுப் பொதியாய் கிடக்கின்றவளை, தான் எதிர்கொள்ளும் இந்த தருணத்தை நிஜம்தானா? என அவனுக்கு சரிபார்க்கத் தோன்றிற்று.

“அப்ப உனக்கு நான் அழுறது பிரச்சனை இல்லை. பட்டுச் சேலை வம்பா போயிடும்கிறதுதான் பிரச்சனையா?” மறுபடி சண்டையிழுக்கின்றவளை கண்டுக் கொள்ளாமல் “என்னை கிள்ளுடி” என்றான்.

“டி சொல்லக் கூடாது பேட் மேனர்ஸ்” என்றாளிவள்.

“படத்தில அப்படித்தான் சொன்னான்” என்றான் பதிலாக,

‘ஹய்யோ கோலிவுட் தமிழ் கோச்சிங்கா, சாமி தமிழ் படங்கள் எல்லாம் பார்த்து இன்னும் என்னென்னவெல்லாம் தமிழ் கத்துக்கிட்டானோ தெரியலியே?’ மனதிற்குள் புலம்பினாள்.

தன்னிடம் கையை நீட்டுகின்றவனை கிள்ளி வைத்தாள்.

“சொரணையே இல்லையே இன்னும் கொஞ்சம்” என்றவனை முறைத்தாள்.

தனக்குள் சுருண்டுக் கொள்ளாமல், கடைசி முறை சந்தித்த போது முன் தயாரிப்போடு தன்னிடம் நடித்தது என இல்லாமல், எதிர்பாராத நேரம் தன்னைப் பார்த்ததும் உணர்ச்சி வயப்பட்டு அழுததும், கோபப்பட்டதுமாக அவள் அவனிடம் காட்டிய உரிமைப் போராட்டங்கள் அவனுக்கு இதம் தந்தன. தனக்குள்ளேயே தடுமாறிக் கொண்டிருக்கின்றவளுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுக்க வேண்டுமென அவனுக்குத் தோன்றியது.

அந்த நேரம் கதவின் வெளியே நின்று கதவை தட்டியது வேறு யாராக இருக்க முடியும்?

 “இன்னும் அஞ்சு நிமிசம் ப்ளீஸ்மா” என்றான். உடனே கதவு தட்டப்பட்ட சப்தம் நின்றது.

அவளது தலையை வருடியவன் எழுந்து நின்றான். “வரட்டுமா?” என்று விடைபெற நின்றவனை பரிதவிப்போடு, ‘திடீரென வந்ததைப் போல, திடீரெனச் சென்று விடுவானோ? மறுபடி பார்க்க முடியாதோ?’ என்பதைப் போல பார்த்தாள்.

அவளின் அந்தப் பார்வையில் கார்த்திக்கின் சகலமும் அசைந்தது. அவளது காதலை அவளது மனத்திரை அகன்று, முகத்திரையின்றி முதன் முறையாக நேரடியாக தரிசிக்கின்றானல்லவா? பின்னர் அவன் அசையாமல் எப்படியாம்? அவனது மனதிற்குள்ளோ ஹோவென்றிருந்தது. அவனது உடம்பின் ஒவ்வொரு அணுவும் அவளை அள்ளிக் கொண்டு பறந்து விடவா?வென துடித்தது.

“ஹே பட்டு, என்னாச்சுடி?”

மீராவோ அவனை பார்த்த வண்ணம் மயக்கத்தில் இருப்பவள் போல இல்லையென தலையசைத்தாள்.

“மீரு…” ஏனோ அவன் அழைப்பில் அவள் மனம் கசிந்தது.

அது அவர்கள் தங்களது உணர்வுகளை ஒருவருக்கொருவர் வெளிப்படையாக பகிர்ந்துக் கொள்ளும் முதல் சந்திப்பை போல இருக்கவில்லை. ஒருவரை மற்றவர் காலம் காலமாக அறிந்து இருந்ததைப் போல இருந்தது. அவளை எழுப்பி நிற்க வைத்தவன் அவளது கரங்களை பற்றிக் கொண்டான்.

“மீரு, நான் இங்கே ரொம்ப நேரம் இருக்க கூடாது. என் அறைக்குப் போனதும் அழைக்கிறேன், பேசுவோம் சரியா?”

“என் கிட்ட உன் நம்பர் இல்லையே?”

“என் கிட்ட உன் நம்பர் இருக்கே?” சொன்னவனிடம் சிறுபிள்ளைப் போல…

“அப்படின்னா நீ ஏன் என் கிட்ட பேசலை?” என்றாள்.

நீதானே என்னை வேண்டாமென்றாய்?, நீதானே இது கடைசி சந்திப்பாக இருக்கட்டும் எனச் சொன்னாய்? என அவன் என்னச் சொன்னாலும் அவள்தான் நொந்துப் போவாள் என உணர்ந்ததால் அமைதி காத்தான்.

“That’s my bad, நான் பேட் கர்ள் இல்ல?” அவளே உணர்ந்து பேசினாள்.

“இல்லை”

“ஏன்?”

“ஏன்னா நான் பேட்பாய்”

“ஓ, ஏன்?”

“என் லவ்வருக்கு முதல் தடவை முத்தம் கொடுத்தேன், ஆனால், அவளுக்கு அது ஞாபகமே இல்லை.அவ நினைவு வைத்துக் கொள்ளும் அளவிற்கு சரியாக முத்தம் கொடுக்காத நான் பேட்பாய் தானே?”

“லவ்வரா? கிஸ்ஸா?” புரிந்தும் புரியாமலும் அவனிடம் அவள் மறுபடி சண்டையிட எண்ணி முறைக்கும் முன் அவளது இடையை அவன் வளைத்து தன்னோடு இறுக்கி இருந்தான்.

“அநியாயத்துக்கு அழகா இருக்க, சின்ன பிள்ளைங்க முன்ன டீசண்டா இருக்கலாம்னா முடியுதா? ஆமாம் என் லவ்வர்தான், அது யார்னு கண்டுபிடியேன்…” என்றவன் அவளது முகவாயை உயர்த்தி தனது உதடுகளை அவளதில் பொருத்திக் கொண்டான்.

அவனது விரல்கள் அவளது கன்னத்தின் மென்மையை பரிசோதித்தன. நொடிகளில் அவளது உதடுகளினின்று விலகியவன் தாபம் தாளாமல் மறுபடியும் அவற்றைப் பற்றிக் கொண்டான். அவனது மூச்சுக் காற்றின் வெம்மையிலும், கரங்களின் வேகத்திலும் மீரா தடுமாறினாள். பற்றிக் கொள்ள காற்றில் தேடியவள் தட்டுத் தடுமாறித் துழாவி அவனது கரத்தைப் பற்றி இப்போது அவனது முதுகினில் கை கோர்த்துக் கொண்டாள்.

கண நேரங்கள் பின்னர் இப்போதோ அவனது மார்பில் தஞ்சமாகி இருந்தாள்.இருவருக்குமே அப்படியே இருந்து விடலாமெனும் ஆசைதான் எனினும் அவன் தன்னினின்று அவளை விலக்கினான்.

“பாய் டா” மீராவின் கன்னத்தில் சன்னமாய் தனது உதடுகளை ஒற்றினான். விருட்டென்று புறப்பட்டவன் வெளியே செல்லும் முன் அங்கிருந்த கண்ணாடியில் தனது பிம்பத்தை பார்த்து சரிசெய்துக் கொண்டான்.

அவன் விடைப்பெற்றுச் செல்ல, அவள் தனது கட்டிலில் முடங்கினாள். ஏழு கடல் ஏழு மலை தாண்டிய களைப்பு அவளிடம் இருந்தது. சோர்ந்து கிடந்தவளை பெற்றோர் எட்டிப் பார்த்துச் சென்றனர். உண்ணவோ குடிக்கவோ கூட அவள் படுக்கையினின்று எழவில்லை. அம்மா வந்து எழுப்பி ஒரு கிளாஸ் பால் கொடுத்து அவளை படுக்க வைத்தார்.

“அம்மா…” என்றவளை கன்னம் வருடியவர் நகர்ந்தார்.

தங்கைகள் இரவு அவளருகில் படுத்திருந்தனர். வழக்கத்திற்கு மாறாக அந்த அறை அமைதியாக இருந்தது. அப்போது மீராவின் அலைபேசி இசைக்க அரை தூக்கத்தில் எடுத்து அதை காதில் வைத்தாள்.

“மீருமா சாப்பிட்டியா?” என்றான். அவனது குரல் ஏனோ கரகரத்திருந்தது.

“ம்ம் கார்த்திக்… நான் அந்த ட்ரெயினை… நீ போனல்ல அந்த ட்ரெயினை…இன்னிக்கு ஓடி ஓடிப் போய் பிடிச்சிட்டேன்… உனக்குத் தெரியுமா?” பொருளற்று பிதற்றியவளது காதில் அலைபேசி வைத்த வண்ணம் இருக்க, தூக்கத்தில் கை தளர்ந்து அலைபேசி அவளது கரத்திற்கும் இதயத்திற்கும் நடுவில் வந்துச் சேர்ந்தது.நெடு நாளைக்குப் பிறகு அவள் அன்று ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள்.கார்த்திக்கிற்கு அவளது லப்டப் லப்டப் லப்டப் சப்தம் கேட்டிருக்குமா?

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here