மனதோரம் உந்தன் நினைவுகள்_15_ஜான்சி

0
291

Manathoram Unthan NinaivukaL_Epi 15_Jansi

அத்தியாயம் 15

அவசரக் குடுக்கை

நெடுநாள் கழித்து
பார்வைக்கு அகப்பட்டவளை

கண்கள் பசி தீர பருகும் முன்

அவசரக் குடுக்கையாய்
முந்திக் கொண்டன இதழ்கள்.

கார்த்திக் அந்த மூன்று நட்சத்திர ஹோட்டலின் அறைக்கு வந்துச் சேர்ந்த போது மணி ஏழாகி இருந்தது. மீராவின் பெற்றோரிடம் தான் வந்து திருமண விஷயமாக மீராவிடம் பேசி சம்மதிக்க வைத்து விட்டு உடனே திரும்பி விடப் போவதாகவும், தான் அன்று அங்கே உண்பதாக இல்லையென்றும் சொல்லித்தான் அன்று சென்று இருந்தான். மீரா தன்னுடைய வருகையை எப்படி எடுத்துக் கொள்வாளோ? எனும் அவனது தயக்கம் உணர்ந்து மனோகரும் அதற்கு ஒத்துக் கொண்டு இருந்தார்.

ஆனால், நடந்தவைகளை எண்ணிய போதோ, தான் அவளை வெகுவாக கஷ்டப்படுத்தி விட்டதாகவே அவனுக்குத் தோன்றியது.

மீரா தனது பணி நிமித்தமாக ஹைதராபாத் வருவதாக இருந்த போது அவளை அவள் மீது வெகு கடுமையான பெண் என்பதான கருத்தைத்தான் வைத்திருந்தான்.ஆனால், அதன் பின்னர் நடந்தவை எல்லாம் அவனது கட்டுப்பாட்டுகளுக்கு அப்பாற்பட்டவைகள்.

முப்பதை கடந்த வயதில் தனக்கென்று துணை ஒன்று வேண்டுமென அவன் ஒரு போதும் சிந்தித்ததில்லை அல்லது சிந்திக்கும் நிலையில் அவனது சூழ்நிலை இல்லை.ஆனால், அவளைக் கண்ட பின்னே அவனது மனம் அவனது கட்டுப்பாட்டில் இல்லை… செயல்களும் தான். மீரா கார்த்திக்கின் செயல்களின் காரணத்தை அறியும் முன்பே பாஸ்கர் கார்த்திக்கை கண்டுக் கொண்டான். பாஸ்கர் கார்த்திக் மேல் மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவன்.

அதனால்தான் கார்த்திக்கிற்காக மீரா மணமானவளா இல்லையா? அவள் யாரையாவது காதலிக்கின்றாளா? இல்லையாவென நாசூக்காக கேட்டு தெரிந்துக் கொண்டு வந்து அவனிடம் சொல்லவும் செய்தான். முதலில் தன்னைக் கண்டுக் கொண்ட பாஸ்கர் குறித்து கார்த்திக்கிற்கு கூச்சமென்றாலும் கூட, மீராவுக்கு மணமாகவில்லை எனத் தெரிந்ததும் கார்த்திக்கின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால், அவளது புத்திசாலித்தனத்தை அவன் குறைவாக மதிப்பிட்டது தவறேதான்.

யார் மூலமாக அவனுக்கு அவள் குறித்த தகவல்கள் வந்தனவோ அதே பாஸ்கர் மூலமாக தான் அவளை அவளது வேலை செய்ய விடாமல் தடுத்துக் கொண்டே இருந்தால் தான் சென்னைக்கு திரும்பச் சென்று விடுவதாக அவள் சொல்லவும் கார்த்திக் பதறிப் போனான்.

அவன் முன்பெப்போதும் இப்படி பெண்களோடு நெருக்கமாக பேசி பழகி அறியாதவன் என்பதால், தான் அவளிடம் நடந்துக் கொண்டது அதீதமாகி விட்டதோ? என அஞ்சி அதன் அடுத்த நாள் வெள்ளிக் கிழமை அன்று அலுவலகத்திற்கு கூடச் செல்லாமல் தவிர்த்திருந்தான்.

அவனது மனம் மறுபடி வழக்கமான தனது இருள் சூழ்ந்த தனிமையில் ஆழ்ந்து விட்டதாக பரிதவித்தது, அவனது தாழ்வு மனப்பான்மை அவனை மறுபடி கொன்று தின்ன ஆரம்பித்து விட்டிருந்தது. தாத்தா சனிக்கிழமை காலையில் அழைத்து தன்னிடம் முன் தினம் ஏன் பேசவில்லை? எனக் கேட்கவும் எதை எதையோ சொல்லி சமாளித்தான். சனிக்கிழமையும் உயிர்ப்பின்றிக் கழிய, ஞாயிறன்று மீராவின் அலைபேசி தகவல் கண்டதும் துடித்துப் போய் விட்டான்.

மிக்ஸியில் அகப்பட்டு விரல்களில் காயமாமே? நாளை வர முடியாதென உயர் அதிகாரியிடம் லீவு கேட்கும் தோரணையில் எத்தனை இலகுவாக தனக்கு தகவல் அனுப்பி இருக்கிறாள்? துணைக்கு தனது குடும்பத்தினர் இல்லாத ஒரு சூழலில் ஒரு ஆபத்தில் அவள்.அதைக் கண்டதும் படபடத்துக் கொண்டு வர, இவனால் வீட்டில் இருக்கவே முடியவில்லை.

அவசரமாகப் போய் அவளது கெஸ்ட் ஹவுஸில் விசாரித்து அக்கம் பக்கம் இருந்த நான்கு மருத்துவமனைகளில் தேடினான். அவள் சென்று இருந்த மருத்துவமனையை கண்டு பிடித்து ரிசப்ஷனில் அமர்ந்தால் அவளது வலியின் குரலும் டாக்டர் அவளை அதட்டும் குரலும் கேட்டு அங்கே இருக்கவும் முடியாமல் இருந்தவன் அருகில் இருந்த உணவகத்தில் அவளுக்கு உண்ணத் தேவையானவைகளை எளிதாக சாப்பிடும் வசதிக்கேற்ப வாங்கிக் கொண்டு வந்து அமர்ந்தான். அவள் முகம் கசங்கியவளாக வெளியில் வந்தாள் அவளது கரத்தில் இருந்த அந்த துணியில் தான் எத்தனை இரத்தம்?

அன்று அவனது மனதின் பரிதவிப்பில் அது எதுவானாலும் ஏன் அவளே தடுத்தாலும் தன்னால் அவளை விரும்பாமல் இருக்க முடியாதென கார்த்திக் தனது மனதை உணர்ந்துக் கொண்டான்.

இவன் பதறிப் போய் அவளை விசாரித்து வேண்டிய மாத்திரைகளை வாங்கி வந்து அவளை வீடு வரை விடச் சென்றால் இவனது கரத்தில் பணத்தை திணித்து வைத்துக் கொள் என்றாள் அந்த ராட்சசி.

அவளது குணம் தெரிந்தும் அவள் தன்னிடம் இலகுவாய், இனிமையாய் பழகுவாளென தான் எதிர்பார்ப்புகள் வைத்துக் கொள்வது வீணென புரிந்துக் கொண்டான். தனது செயல்கள் எண்ணங்கள் தனது கட்டுப்பாட்டை மீறிக் கொண்டுச் செல்வதை உணர்ந்தே இருந்தான்.

அன்று வீடு திரும்பிய பின்னர் யோசனையில் ஆழ்ந்தவனுக்கு தாங்கள் இருவரும் இருவேறு துருவங்கள் என வெகுவாய் புரிந்தது. ஆனால், அவன் அவள்பால் தானே ஈர்க்கப் படுகின்றான்?

அடுத்த இரண்டு நாட்கள் அவள் விடுப்பில் இருக்க தனது மனதை கட்டுப் படுத்திக் கொண்டு தனது வழக்கமான வேலைகளில் ஈடுபட்டான். ஆனால், அவளாவது புயலை கிளப்பாமல் இருப்பதாவது? அடுத்த இரண்டாவது நாளே வேலைக்கு வருவதாக அவள் தகவல் அனுப்பவும் இவனுக்கு ஆதங்கமும் கோபமுமாக இருந்தது.

அதன் பின்னர் அலுவலகத்தில் நிகழ்ந்தவைகள் எல்லாம் இருவருக்கும் இடையேயான பனிப்போர்கள் தான். அவள் அவனை கீறுவதாக எண்ணி கோபத்தில் விட்ட வார்த்தைகள் அவனுக்கு வலித்த போதெல்லாம் வலிக்க வலிக்க வாங்கிக் கட்டிக் கொண்டான்.

தனது அதிகாரம் செய்யும் பாங்கு அவளுக்கு பிடிக்கவில்லை என்பதை அவன் உணர்ந்துக் கொள்வதற்கே  அவனுக்கு தாத்தாவின் உபதேசங்கள் தான் தேவைப்பட்டன.

வெகு நாட்களாக தன்னைக் காண வேண்டுமென அழைத்துக் கொண்டு இருந்தவரை தவிர்க்க முடியாமல் சுமார் இரண்டு மணி நேர பயணத்தில் தாத்தா தன்னந்தனிமையாக வசிக்கும் அந்த கிராமத்து பங்களாவை அவன் அடைந்தான். உணவு நேரத்திற்குப் பிறகு அவரது கூர் பார்வையில் தப்பிக்க முடியாமல் நிகழ்ந்தவைகள் எல்லாம் சொன்ன பின்னர் வழக்கம் போல அவரது கால்மாட்டிலேயே அமர்ந்து விட்டிருந்தான்.

அவனது தலையை வருடிக் கொண்டு அமைதியாக இருந்தவரது மனதிலோ வேதனை இருந்தது. பெற்றோரை இழந்து பதின்வயது பேரன் தனது பொறுப்பில் அவன் வந்த போது தனிக்கட்டையான தன்னால் எப்படி அவனை வளர்க்க முடியும்? என எழுந்த தயக்கங்கள் நினைவிற்கு வந்தன.

நல்லதொரு குடும்பச் சூழ்நிலை பார்த்து வளராதவர்களுக்கு தனது வாழ்க்கையை எப்படி எடுத்துச் செல்ல வேண்டுமென புரியாதாம். ஒற்றைப் பெற்றவர்களோடு வளர்கின்ற குழந்தைகளுக்கு கணவன் மனைவியுடன் அல்லது மனைவி கணவனுடன் எப்படி நடந்துக் கொள்ள வேண்டுமென்பது விளங்காத பாடமாக இருக்குமாம்.

ஆம், மனிதன் ஒரு சமூக பிராணி, அவன் தன்னைச் சுழ்ந்த மனிதர்களை பார்க்கிறான் அது போலவே வளர்கின்றான். தனது மூத்த மகனின் வாரிசு இப்படி கதியற்று நிற்க, எப்படி வளர்ப்போம் என அவர் அன்று பயந்தாலும் இரண்டாவது மகனின் வீட்டிற்கு அவனை அனுப்ப அவர் விரும்பவில்லை.

அண்ணனின் மகனை தான் தன்னோடு சேர்த்து வைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டுமானால் அவன் மேஜராகும் வரையிலும் அண்ணனுடைய சொத்துக்களை தான் மேற்பார்வையிட அனுமதிக்க வேண்டும் என தனது இரண்டாவது மகன் கேட்டதைக் கூட அவர் பொருட்படுத்தவில்லை. ஆனால், அது வரையிலும் கார்த்திக்கை பெத்தண்ணாவென அழைத்து விளையாடிப் பேசிக் கொண்டிருந்த சின்ன மகனின் மகனும், மகளும் கார்த்திக்கை பார்த்த விதத்தில் இது சரிவராது என அவருக்குத் தோன்றிற்று.

அவர்கள் இவனது கண்ணின் கோரக்காயத்தை விகாரமாய் பார்க்கவும் ஒதுங்கிப் போவதுமாக இருக்க, கார்த்திக்கை அங்கே வளர விட்டால் முற்றிலுமாக தன்னம்பிக்கை இழந்துப் போவானென அவருக்கு புரிந்ததால் அவனை தானே வளர்த்துக் கொள்வதாக உறுதியாக கூறி விட்டிருந்தார்.

சரியாகி விடும் என இருந்தால், கண் தானம் வாங்கி பொருத்தி விடலாமெனும் வாய்ப்புகள் இருந்தால் எத்தனைக் கோடிகள் செலவழித்தும் அவனை நலமாக்கி இருப்பார். முற்றிலும் வாய்ப்பே இல்லை என்கின்ற சூழலில் அவரும் என்னதான் செய்வார்?

“கிழம் உடம்பில ஆயிரம் பிரச்சனை. இப்பவோ எப்பவோன்னு இருக்கிற போதும் பேரனை தானே பார்த்துக்குறேன் என்கிறதே? வயதானாலும் திமிருக்கு குறைச்சலில்லை. சின்ன மகன் அண்ணனோட சொத்து பொறுப்புக் கேட்டதும் கொடுத்தாலென்ன? அண்ணன் சொத்தை தம்பி தின்னக் கூடாதா? என்ன இருந்தாலும் இது இன்னும் கொஞ்ச வருசத்தில மண்டையைப் போட்டா நாங்க தானே அவனை பார்த்துக்கணும்” என இறுமாந்துச் சொன்ன சின்ன மருமகளின் பேச்சு அவரது காதுகளை வந்து அடையாமலில்லை.

அத்தனை நோய்களைத் தாண்டியும் பேரனை வளர்த்து, கம்பீரமான மனிதனாக்கி உலவ விட்டு சமீபத்தில் அவர் தனது தொண்ணூறு வயதை எட்டி இருந்தார். இவரிடம் முணுமுணுத்த இவரது மருமகள் சமீபத்தில் உலகை விட்டு மறைந்திருந்தார். அதைத்தான் விதி என்பார்கள் போலும்?! யார் ஆயுளை யாரால்தான் கணிக்க முடியும்?

சின்ன மகனது இரண்டு பிள்ளைகளும் திருமணமாகி அவர்களது வாரிசுகளும் தற்போது பள்ளிச் செல்லும் வயதுதான்.ஆனால் கார்த்திக்?

என்னதான் தான் கார்த்திக்கை பார்த்துப் பார்த்து வளர்த்திருந்தாலும் அவனுக்குள்ளாக தொழிலில் இருந்த தன்னம்பிக்கை தனிப்பட்ட வாழ்க்கையை எதிர்கொள்வதில் இல்லை என்பதை அவர் புரிந்தே இருந்தார். தனிமையான உலகத்தில் தன்னை புகுத்திக் கொண்டு, தான் எந்த வித சமூக வலைத்தளத்திலும் இல்லாமல், யாரிடமும் நெருக்கமான நட்பு பாராட்டாமல் உலகத்தை விட்டே தன்னை துண்டித்துக் கொண்டு இருந்தான் அவன்.

அவனை நான்கு மனிதர்களுடன் பழக வைத்தே ஆக வேண்டுமென்றே தாத்தா தனது பெரும்பாலான ஷேர்கள் இருக்கும் அந்த அலுவலகத்தில் அவனுக்கென ஒரு பொறுப்பைக் கேட்டு, அதை செய்யும் படி பணித்து அவனை வேலைக்கு அனுப்பினார்.

சில காலம் வெளிநாட்டில் படித்து திரும்பிய போதும் தாய் நாட்டிற்கு திரும்பியதும் அவனுக்கு மறுபடி தாழ்வுணர்ச்சி ஒட்டிக் கொண்டிருந்தது. கண்ணாடி அணியாமல் கண்களை மறைக்காமல் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும் என்பதுதான் தாத்தா கார்த்திக்கிற்கு இட்ட கட்டளை. அவனது உடலை, அதனது குறைபாட்டை அவனே ஏற்கா விட்டால் வேறு யார் ஏற்று என்ன? ஏற்காமல் என்ன?

பொதுவாக ஊனமுற்றவர்களுக்கு தங்களது ஊனம் பிறர் சுட்டிக் காட்டினாலொழிய நினைவிற்கு வராது. அவர்களது வாழ்க்கை அந்த குறைபாடுகளோடே கூட பழகி இருக்கும் போது யாரோ வந்து உச்சுக் கொட்டி, உனக்கு ஏன் இப்படி ஆனது? என பாதிக்கப் பட்டவருக்கே தெரியாத கேள்வியை அவரிடம் கேட்டு, அவரே மறந்துப் போன அத்தனையும் அவருக்கு நினைவுப் படுத்தி, மறுபடி மறுபடி துன்பப் படுத்துவது கொலை பாதகத்திற்கு சமமானது. ஆனால், அத்தனைக் கொலையையும் அனாயாசமாகச் செய்து நான் அன்பினால் பரிவினால் கேட்டேன் எனச் சொல்லி கடந்துச் சென்று விடுவர்.

அன்பினால் உன்னைக் கொல்கிறேன் என்பதான கொடூர வன்முறைதான் அது. அந்த அன்பை, பரிவை யாரும் விரும்புவதில்லை தங்களது வேதனைகளைத் தாண்டி வாழ்கின்றவர்களை வாழ அனுமதிப்பது மட்டும் தான் தேவையானது.

பேரனை கவனித்துக் கொண்டே இருக்கும் தாத்தாவிற்கு அங்கே அவன் அலுவலகத்தில் சிரிப்பும் கம்பீரமுமாக வலம் வருவதாக கிடைத்த தகவல்கள் எல்லாமே நேர்மறையானவைகள் தான். எப்போதுமே தனக்கு கொடுக்கப் பட்ட எந்த வேலையையும் ரொம்பவெல்லாம் சிரமப் படாமல் பிறரையும் சிரமப்படுத்தாமல் செயல்படும் இயல்பு அவனது.

தாத்தா சொன்னதற்கு இணங்கி அலுவலகம் சென்றாலும் தனது வழக்கமான வேலைகளையும் அவன் விட்டிருக்கவில்லை. இணையம் மூலமாக ஷேர்களில் அவன் முதலீடு செய்வதை இருபதுகளில் ஆரம்பித்து இருக்க அதன் மூலம் அவன் ஈட்டிய பணம் கவனிப்பாரின்றி வங்கியில் சேர்ந்துக் கொண்டு இருப்பதுதான் மிச்சம். முன்பு போலவே எந்த மாற்றமும் இன்றி இன்று வரையிலும் தனியாக தனக்கென்று சில வீடியோ கேம்கள் தவிர்த்து எந்த பொழுது போக்கும் இல்லாமல் அலுவலகம் சென்று வந்ததும் தனது அந்த ஒற்றை ஃப்ளாட்டில் அடங்கிக் கொள்வதுமாகவே வாழ்க்கையை தொடர்ந்துக் கொண்டு இருந்தான்.

அந்த பேரன் தன்னிடம் முதல் முறையாக ஒரு பெண்ணைப் பற்றிச் சொல்லவும் தனக்கு பிறகு அவனைப் பார்த்துக் கொள்ள ஒரு மகராசி வரப் போகின்றாளா? தான் அவனது கவலையின்றி நிம்மதியாக இந்த உயிரை விட்டு விடலாம் போலவே? என ஆசுவாசம் அடைந்தார் என்றால் அவன் செய்து வைத்தவைகளைக் கேட்டு கோபமடைந்தார்.

“போடா தத்தி” என்றவரது மடியில் கார்த்திக் முகம் புதைத்துக் கொண்டான். அவனது தாய், தந்தை குரு எல்லாம் அவர்தானே? பேரனின் மனம் அவருக்குப் புரிந்தது. இத்தனை நாட்கள் இந்த தயக்கத்தில் தான் அவன் தன்னிடம் சரியாக பேசவில்லை என்பதுவும் கூட.

“புள்ள அழகா இருப்பாளா?”

“ரொம்ப”

“ஏன்டா இப்படி அவளை வெறுப்பேத்திட்டு வந்திருக்க?, அவ ஊருக்கும் பிடிவாதமா அனுப்பி வச்சுட்ட அவளுக்கு உன்னை பிடிக்க வேணாமா?”

“அவளுக்கு என்னை பிடிக்கும் தாத்தூ.”

“அவ உன்னை இத்தனை கழுவி ஊத்தினாலும் உனக்கு தைரியம் தான்.”

“நான் அவளுக்கு நல்லதுதான் செஞ்சேன்.”

“போடா கிறுக்கா, உன் நானாம்மா கிட்ட இதை நீ செய்யணும்னு சொன்னா அவ வேணும்னே செய்யாம விட்டுருவா. அப்புறமா எதையும் சொல்லாம இருந்தா தானே செய்வா… பொண்ணுங்களுக்கு யாரும் வந்து அதிகாரம் செஞ்சா பிடிக்காது” எனச் சொல்ல சுவற்றில் சித்திரமாய் தொங்கிக் கொண்டிருந்த நானாம்மாவைக் குறித்த பேச்சு திரும்பியது.

மலர்ந்த நினைவுகளில் நானாம்மா மற்றும் தனது பெற்றோரின் நினைவுகளில் திளைத்தான் கார்த்திக். மனித வாழ்க்கை என்பது நினைவுகள் தான் நிகழ்வுகள் தான். நினைவுகள் அழியும் போது மனிதனும் அவனது வாழ்க்கையும் அழிந்துப் போகின்றன. தனது இளம் வாழ்வின் ஆழ் ருசியை நினைவாக பேரனுக்கு ஊட்டிக் கொண்டிருக்கும் கார்த்திக்கின் தாத்தாவைப் போலத்தான் ஒவ்வொரு முதியவர்களும்.

இவர்கள் காலத்தின் பின்னே சென்று ஒவ்வொரு நிகழ்வையும் ஊசிகளில் கோர்த்தெடுத்து இளம் மனதுகளில் விதைப்பவர்கள். இந்த நினைவுகளின் எச்ச சொச்சங்கள் அவர்களின் வாரிசுகளுக்கும் வாரிசுகளின் வாரிசுகளுக்கும் கடத்தப் படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் என ஒவ்வொரு நிகழ்வுகள் உண்டு. இணையம் போல அனைத்தையும் ஒரே தராசில் நெறுக்க முடியாது.

ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனும் மற்றவருடன் உரையாடும் போதுதான் ஏராளமாக தெரிந்துக் கொள்கிறான். குறிப்பாக வயது முதிர்ந்தவர்களோடு உரையாடும் போது. ஆனால், இப்போதோ முதியவர்கள் எனும் வைரக் கற்கள் கூழாங்கற்களாக பாவிக்கப் படும் நிலையும், இணையம் எனும் குப்பை வைரமாக மதிக்கப் படும் நிலையும் அல்லவா?

தாத்தாவின் அறிவுரைப் படி அவன் தன்னை மீராவிடம் வெளிப்படுத்த சில மாதங்களை எடுத்துக் கொண்டான். தாத்தா சொன்னதைப் பார்த்தால் அவன் அவளைக் கண்ட போதெல்லாம் நிதானம் இழந்து போயிருக்கிறான் எனும் புரிதலுக்கு வந்தான். அடுத்த முறை அவளை போய் சந்திக்கும் போது அவளுக்கு பிடிக்கும் விதமாக நடந்துக் கொள்ள வேண்டுமென்பதை நினைவில் நிறுத்தினான்.

அவளில்லாத அலுவலகம் செல்ல விருப்பமில்லை என்றதும் தாத்தாவிடம் அனுமதி கேட்டு வேலையை விட்டிருந்தான். தனது வேலை நேரம் போக தமிழ் திரைப்படங்கள் பார்ப்பதுவும் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவுக் கூறுவதுமாக இருந்தான். ஒருக் கட்டத்தில் இனியும் அவளை சந்திக்கப் போகாமல் இருந்தால் அவள் தன்னை மறந்து விடுவாள் எனும் அச்சம் மிக அவரிடம் மீராவை சந்தித்து வர அனுமதி கேட்டு நின்றான்.

அன்றைய தினம் சில மாதங்களுக்குப் பிறகு மீராவை காணச் சென்ற தினம். சென்னையில் அந்த மீரா அலுவலகத்தில் இருக்கின்றாளா இல்லையா?” என்பதை ரிசப்ஷனில் கேட்டு தெரிந்துக் கொண்டவன் அவள் நேர்முகத் தேர்வு நடத்துகையில் இருந்தே வெளியில் நின்று அவளை கவனித்துக் கொண்டே நின்றிருந்தான். அவன் அவளைக் காண அந்த அலுவலகத்தின் கண்ணாடிச் சுவர்கள் வஞ்சனையில்லாமல் உதவின.

வழக்கம் போல அமைதியாக தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தவளின் இயல்பை அவன் இரசித்தான். எண்ணையிட்ட இயந்திரம் போல செவ்வேனே பணி புரியும் நேர்த்தி அவளுடையது. பிறரை காயப்படுத்தி விடக் கூடாதெனும் அவளது முனைப்புகள் அத்தனையும் அறிவான். அத்தனை முனைப்புகளையும் தாண்டி கடுப்பாகி அவனை அவள் கோபித்தவைகள், திட்டியவைகளை எல்லாம் நினைவுக் கூர்ந்து அதை இரசிப்பதுவும் அவனது சமீபத்திய வாடிக்கைதான்.

அவள் சற்று நேரம் கழித்து அலுவலக ரிசப்ஷன் கடந்து வெளியே வரவும் அவளை சட்டென எதிர்கொள்ளத் திணறியவன் படிக்கட்டுகளுக்கான வாயிலை திறந்து பதுங்க, அவளும் சற்று நேரத்தில் கால் போன போக்கில் அங்கே தான் வந்துச் சேர்ந்திருந்தாள்.

அந்த நேரம் தன் வயமிழந்து சட்டென்று அவளை பற்றி இழுத்து முத்தமிட்டு இருந்தான் அவன். நொடிகளில் தன் சுயம் உணர்ந்ததும் அங்கிருந்து நீங்கியும் விட்டிருந்தான். தான் மறுபடியும் சொதப்பி விட்டோம் என்பதை கார்த்திக் அக்கணத்தில் உணர்ந்துக் கொண்டான்.

தனது செயல்களால் அவளை குழப்பத்தில் ஆழ்த்துகிறோம் எனும் உணர்வு அவனுக்கில்லாமல் போனது அவன் தவறே. ஏற்கெனவே, தனது மனக்குழப்பத்தில் இருந்தவள் தன்னந்தனியளாக நடந்து பாதையை கடக்கும் போது தான் அவளது அருகில் சென்று அழைப்பதான் பிரம்மைக்கு ஆட்பட்டது அதன் தொடர்பான நிகழ்வுதான்.

அடுத்து என்ன? மறுபடியும் தாத்தா கழுவி ஊற்ற, இவன் வாங்கிக் கட்டவென அடுத்த முறை அவளை நேரில் பார்த்து பேசிவிட்டே வந்து விடலாமென முடிவெடுத்தான். இம்முறை அவளை எந்த விதத்திலும் சிரமப்படுத்தக் கூடாதெனும் தீர்மானத்தில் சற்றுத் தெளிவாகவே வந்திருந்தான். அவள் அவனை மறுத்தாலும் அவளை அதன் பின்னர் துன்புறுத்தாமல், பின் தொடராமல் தனது தனிமை வாழ்விற்கு திரும்ப வேண்டுமெனும் முடிவு அது.

அன்றைய மதிய சந்திப்பை அவனால் மறக்கவே முடியாது எனலாம். மீரா அவனிடம் நிதானமாக பேசிய விதத்திலேயே இதமாய் மறுப்பைச் சொல்லப் போகின்றாள் எனும் அனுமானத்திற்கு அவன் வந்து விட்டிருந்தான். ஆனாலும், அவளுடனான தருணங்களை இழக்க அவன் விரும்பவில்லை.

அவளது குழப்பமான மனநிலை அவனது கருத்தில் படாமல் இல்லை. தன்னை மறுக்க தான் அவனை விரும்பாதது தான் காரணம் எனச் சொல்லாமல் அவள் வேறு பலதையும் சொல்ல குறித்து வைத்துக் கொண்டான். குறிப்பாக அவளது மறுப்பிற்கான காரணம் அவனது ஊனமா? எனக் கேட்க அவள் அது அப்படியல்ல என பரிதவித்த போது மனதிலோ சொல்லொன்னாத இதம்.

உன்னை எனக்கு பிடிக்கவில்லை எனச் சொல்லி இருந்தாலோ அத்தோடு விட்டிருப்பான். ஆனால், விஷயம் அதுவல்லவே? அடுத்து அத்தனையையும் தனது தாத்தா மூலமாகவே செயல்படுத்தினான். மனோகரின் எண்ணிற்கு கார்த்திக்கின் தாத்தா அழைத்தார். அதன் பின்னர் மனோகரின் தெலுங்கானா பயணம். கார்த்திக்கின் குடும்பம், பின்புலம் அத்தனையையும் புரிந்துக் கொண்ட மனோகருக்கு மகளின் குழப்பத்தையும், வாட்டத்தையும் தொடர்புப் படுத்தி பார்க்கவும் முடிந்தது.

என்னதான் தானாக முன் வந்து தனது தகவல்கள் சொத்து விபரங்கள் முதலாக கார்த்திக்கும் தாத்தாவும் தெரிவித்து இருந்தாலும் பையனின் குணம் அறிவது தனது கடமை என்பதால், சில வாரங்களை அவனை துப்பறியும் படி ஆள் அமர்த்தி மனோகர் விபரங்களை தெளிவாக்கிக் கொண்டார். அதன் பின்னரே நிகழ்ந்தது அந்த பெண் பார்க்கும் வைபவம் எல்லாம்.

இப்போது சற்று முன் தான் சந்தித்த மீராவின் “எப்பவும் என்னை டென்ஷன் செய்யறதுதான உன் வேலை” என்ற கோபமும்  தொடர்ந்த அவளது அழுகையும் அவனை உலுக்கியது.

தன்னிடம் ஒவ்வொரு வார்த்தைக்கும் சண்டையிழுத்தவளில் இருந்த உரிமை உணர்வு அவளது ஏமாற்றங்களின் வெளிப்பாடென புரிந்தது. விடைப்பெற முயன்ற போது “என்னை விட்டு விட்டு சென்று விடுவாயா? எனும்படியான ஏக்கப் பார்வை இதயத்தை பிசைந்தது. காதலெனும் விஷயத்தில் அவன் எத்தனை முட்டாளோ? அவளும் அவனுக்கு குறையாமல் அப்படியேதான் என புலனானது.

இவன் கட்டுப்பாடின்றி அள்ளித் தெரிக்க, அவள் கட்டுப்படுத்தி தன்னை உருக்க இரண்டுமே அதீதம் தானே?

கார்த்திக் கடந்த கால எண்ணங்களின் பயணத்தில் நேரம் கடந்திருக்க, இரவுணவு வந்திருந்தது. உண்டு முடித்த கார்த்திக் அலுவலக வேலைக்கு அப்புறம் வெகு மாதங்களாக அழைக்காத அவளது அலைப் பேசி எண்ணை அழைத்தான். அவள் தூக்கத்தில் உளறியதுவும் அடுத்து ஒலித்த அவளது இதயத் துடிப்பும் கேட்டு அவன் வெகுவாக உணர்ச்சிவசப்பட்டு இருந்தான்.

காலையில் தாத்தாவிற்கு அழைத்து எங்களுக்கு சீக்கிரம் திருமண ஏற்பாடுகள் செய்ய சொல்ல வேண்டும் என எண்ணியவனாக படுக்கையில் சரிந்தான். தூக்கம் வராமல் போக்குக் காட்டிக் கொண்டு இருக்க உறக்கத்தில் ஆழ்ந்தவனை இறுக்கப் பற்றிக் கொண்டன இனிய கனவுகள்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here