மனதோரம் உந்தன் நினைவுகள்_16_ஜான்சி

0
620

அத்தியாயம் 16

நீ உணர்த்துவதற்கு

முன்பாகவும் கூட
நான் எல்லாம் அறிந்திருந்தேன் தான்.

எனினும்….

அவற்றில் இதுவரை நான் உணராத பொருளும்,

சுவையும், உள்ளொளிரும் அழகும்,

நீ விளக்கும் போது மட்டும் தான்
புலப்படுகின்றன.

அடுத்த நாள் காலை பதினொன்றாகியும் மீரா அறைக்கு வெளியே வராதிருக்க தங்கைகள் அவளுக்கு உணவை எடுத்துக் கொண்டு வந்திருந்தனர். அவளுக்கு தன் வீடே தனக்கு அன்னியமானது போல நெருடலாக இருந்தது. ஒரு போதும் மகள்களின் அறைக்கு சட்டென்று வராத அப்பா அன்று வந்திருந்தார். அவளருகே அமரவும் தலைகுனிந்து அமர்ந்திருந்தாளவள். அம்மாவும் வந்து அருகில் அமர தங்கைகள் தூரத்தில் நின்றனர்.

“ஏன்மா?” என்றவரிடம்,

“என்னமோ போலிருக்குப்பா” முணுமுணுத்தாள்.

“இப்ப என்ன அப்பா ஏற்பாடு செய்த மாப்பிள்ளைனு நினைச்சுக்க, மத்ததெல்லாம் விட்டுரு” மகளின் குற்ற குறுகுறுப்பை மாற்ற தகப்பன் சொல்ல அவர் காட்டிய அந்த மாப்பிள்ளைப் பையன் புகைப்படம் நினைவிற்கு வந்தது.

“வேற போட்டோ கொடுத்தாலாவது மனசை திறந்து ஏதாவது சொல்லுவன்னு பார்த்தால் நீ அப்ப கூட ஒன்னும் சொல்லலைமா… நான் அவ்வளவு பொல்லாத அப்பாவாடா?”

“அப்பா அப்படி இல்லப்பா” அவரது தோளில் சாய்ந்து விசும்பினாள்.

“மாப்பிள்ளைக்கிட்ட என் மகளுக்கு பிடிச்சாதான் சரின்னு சொல்லிருந்தேன். அவரைப் பார்த்ததும் நீ துடிச்சதை பார்த்து என் மனசே ஆறலை. அப்படின்னா நானா தெரிஞ்சுக் கொள்ளா விட்டால் நீ உன் மனசில இருக்கிறதை சொல்லி இருக்க மாட்ட அப்படியா?”

“மறந்திர முடியும்னு நினைச்சேன்பா, ஆனால் என்னால முடியலை. சொல்லவும் முடியலை, ரொம்ப குற்ற உணர்ச்சியா போச்சு”

“இதை சுமந்துட்டு எப்படி வாழ்ந்திருப்ப?”

“என்னால நீங்க யாரும் சிரமப்பட்டுறக் கூடாதுன்னு தோணுச்சுப்பா.”

“பைத்தியக்காரி…  அவரை வேணான்னு மறுக்கிறதை நான் இரண்டு தங்கச்சிக்கு அக்கான்னு காரணம் சொல்லிட்டு வந்திருக்க… எம் புள்ள பொறுப்பை நினைச்சு சந்தோஷப்படுறதா? இல்லை தன்னை வருத்திட்டு இருக்கிறதை நினைச்சு வேதனைப் படுறதா?”

“…”

“ஊர் உலகம் என்னச் சொல்லும் இதெல்லாம் பார்க்குற நிலையில் நான் இல்ல மீராம்மா… யார் என்னச் சொன்னா எனக்கென்ன? என் புள்ள சந்தோஷமா இருக்கணும் அவ்வளவுதான். மாப்பிள்ளைப் பையன் குணம் தங்கம். உன்னோட கல்யாணத்தினால தங்கச்சிங்க வாழ்க்கை எல்லாம் ஒன்னும் கெட்டுப் போகாது. அதான் நான் இருக்கேன்ல, மூத்த புள்ளை மாதிரி மாப்பிள்ளையும் அமைஞ்சுருக்கு எனக்கொன்னும் கவலையில்லை. என்ன புரியுதா?”

“சரிப்பா” கண்ணீரை துடைத்துக் கொண்டவள் அம்மாவின் மடியில் சாய்ந்தாள், தங்கைகளும் அருகில் வர தங்கம் மகளிடம்,

“மனசை குழப்பிட்டு இருக்கிறதை எல்லாம் தூக்கி தூரப் போட்டுட்டு தெளிவா இரு மீரா. மாப்பிள்ளை தம்பிக்கு வீட்ல தாத்தா தவிர உறவுன்னு யாருமில்ல. அங்க நீதான் எல்லாம் பொறுப்பா பார்த்துக்கணும். கல்யாணம் முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் வைக்க சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன். எதுனாலும் மனசு விட்டு பேசு அதை விட்டுட்டு மாப்பிள்ளையை அடிக்கிற வேலைலாம் வச்சுக்காத சொல்லிட்டேன்.”

திருதிருவென விழித்தாள் மீரா, தங்கைகள் பக்கென்று சிரித்து வைத்தனர், திரும்பி அவர்களை முறைக்கவும் முடியாத சூழல். “பிசாசுங்களா” மனதில் கருவிக் கொண்டாள்.

“அம்மா அவர் நீங்க நினைக்கிற மாதிரி இல்லை, என்னை ரொம்ப கடுப்பேத்துவாரு” முனகினாள்.

“தாய் தகப்பன் இல்லாம வளர்ந்த பிள்ளை அப்படித்தான் இருப்பார், உங்களையும் நான் தான் வளர்க்குறேன் ஊர் பட்ட வம்பிழுக்காமலா இருக்கீங்க?”

“அம்மா..”

“மதியம் அவரை சாப்பாட்டுக்கு வரச் சொல்லி இருக்கிறேன், நல்ல புள்ளையா இருக்கணும், நல்லா கவனிச்சுக்கணும் என்ன புரியுதா?” அம்மா எழுந்துச் செல்லவும்

“இதெல்லாம் ரொம்ப ஓவர்.” முனகியவள் அருகில் அமர்ந்தனர் இருவரும்.

“அதென்ன அக்கா மாமா இல்லைனா உருகுற, கிட்ட வந்தா பொரியுற… அப்படியே பொண்டாட்டிக் களை வந்துடுச்சு உனக்கு?” சுசித்ரா சொல்லி விட்டு ஓடி விட விழுந்து விழுந்து சிரித்த சித்ரா அடி வாங்கினாள்.

“உன்னை எல்லாம் அமைதின்னு ஊர் உலகம் நம்புதே?, ஷப்பா அடி ஒன்னும் இடி மாதிரி இருக்கு” சித்ரா முதுகைத் தடவி விட்டு ஓட்டமெடுத்தாள். சிரித்துக் கொண்டிருந்த மீராவிற்கு தனது உலகம் மிக அழகாக மாறி விட்டதான உணர்வெழுந்தது.

முன் தினத்தின் அலைப்புறுதல்கள் அனைத்தையும் தூக்கம் ஒருவாறாக குறைத்து விட்டிருக்க பெற்றோரிடம் பேசிய பின்னர் அத்தனையும் துடைத்தெறிந்தாற் போலானது.

இரவு கார்த்திக்கிடம் இருந்து அழைப்பு வந்ததான நினைவும் கூடவே “தாய் தகப்பன் இல்லாத பிள்ளை, நீதான் எல்லாம் பொறுப்பா பார்த்துக்கணும்” என்றதும் நினைவிற்கு வர அவனுக்கு அழைக்க எண்ணினாள்.

தனது அலைபேசியின் அந்த கடைசி அழைப்பின் எண்ணை சந்தேகத்துடனே எடுத்து அழைத்தாள். எதிர்தரப்பில் மீராவின் வீட்டிற்கு புறப்பட்டுக் கொண்டு இருந்த கார்த்திக் தனது அலைபேசியை எடுத்து பார்க்க அவளது பெயரை அது காண்பிக்க முகம் மலர அழைப்பை அனுமதித்து அலைபேசியை காதிற்கு கொடுத்தான்.

“மீரும்மா குட் மார்னிங்க்”

“குட்மார்னிங்க் கார்த்திக்”

“அங்க வரதுக்குதான் புறப்பட்டுட்டு இருக்கிறேன்.”

“ஆமா அம்மா சொன்னாங்க, வாங்க வாங்க.”

“ம்ம்…”

“வைக்குறேன்” அடுத்து என்ன பேச வேண்டுமென தெரியாமல் வைத்திருந்தாள். அவன் வருவதற்குள்ளாக புறப்படச் சென்றவளுக்கு அந்த இலைப்பச்சை நிறச் சேலை அணிய தோன்றியது. அணிந்துக் கொண்டவள் அதற்கு உரிய அணிகலன்களை அணிந்து இருந்தாள். முன் தினம் வேறு வகை பதட்டமெனின் இம்முறை வேறு விதமான பதட்டம். வழக்கம் போல தனது பதட்டங்களை, குழப்பங்களை தானே சமாளித்துக் கொள்ளலாம் எனும் அசட்டுத் தீர்மானங்களும்.

அவன் அவர்கள் வீட்டிற்கு வந்த போது அந்த பதட்டத்தில் அவனது புன்னகையில் இவள் இலயித்து பேசாதிருக்க அருகில் இருந்த அம்மா சற்று இடித்து இவளை முறைக்க, குடும்பத்தினரோடு இணைந்து அவளும் “வாங்க கார்த்திக்” என்றாள்.

அனைவர் முன்பாக அவளை ஆசை தீர பார்க்க முடியாமல் இருக்க ஓரக்கண்ணில் பார்த்துப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தான். சற்று நேரம் பேசிய பின்னர் உணவுண்ண உணவு மேடை இருக்கைகளில் அமரவும் அவனுக்கு இடப்பக்கம் மீராவிற்கு இடம் விட்டு மற்றவர்கள் அமர்ந்தனர். தங்கம் மகளை கார்த்திக்கிற்கு பரிமாறச் சொல்லி இருந்தாலும் மகளது தடுமாற்றம் கண்டு வீட்டுச் சாப்பாட்டை ஆசை ஆசையாக உண்டவனுக்கு அருகில் நின்று பரிமாறினார். சித்ராவும், சுசித்ராவும் கூட ஒவ்வொன்றாக உண்ணச் சொல்லி உபசரிக்க, தான் என்னச் செய்வதென்ன தெரியாமல் தனித்து இருந்தாள் மீரா.

“நீங்க உக்காருங்க அத்தையா, நாம சேர்ந்து சாப்பிடுவோம், எதுவும் வேணும் என்றால் நானே எடுத்துக் கொள்வேன்” என அவன் சொல்லி விட அவரும் தனக்கு பரிமாறி உண்ண ஆரம்பித்தார். அனைவரும் உணவில் கவனமாக இருக்க தனக்கு அடுத்து அமர்ந்து இருப்பவள் உணவை அளைந்துக் கொண்டிருந்ததை கண்டவன் அவளது கரத்தை பிறரறியாமல் தட்டினான்,

“சாப்பிடு” என்பதான அவனது மெல்லிய குரலுக்கு தலையசைத்து அவளும் உண்ணவாரம்பித்தாள். எதையாவது எடுத்து வைத்து சாப்பிடச் சொன்னால் கோபப்பட்டு விடுவாளோ? எனும் முன்னெச்சரிக்கையில் வாய் வார்த்தைகளை கட்டுப் படுத்தினான். அவனுக்கும் தான் அவளிடம் நிறைய பேச வேண்டி இருக்கின்றதே?

அவள் இன்னும் எதையோ மனதிற்குள்ளாக போட்டு மறுகுவதாக அவனுக்குத் தோன்றிற்று. வாய்ப்பு கிடைத்ததும் அவளை தனியாக வெளியே அழைத்துச் சென்று பேச வேண்டுமென்று எண்ணிக் கொண்டான். முன் தினம் வீட்டில் தனியாக இருவரும் பேச நேர்ந்தது போலவெல்லாம் திருமணத்திற்கு முன்பாக இன்னும் இரண்டு வாலிப பிள்ளைகள் இருக்கும் வீட்டில் பேசுவது சரியில்லைதானே?

ஆனால், தான் அடிக்கடி அவள் முன்பாக நிலையிழந்து போவது குறித்து அவனுக்கு அச்சமாக இருந்தது. முன் தினம் தாளிடப்படாத கதவின் உள்ளே அவளை அணைத்து முத்தமிட்டு இருந்தானே? அதன் முன்பு அந்த அலுவலக படிக்கட்டில்… தனது கட்டுப்பாடின்மை குறித்தே அவனது பதற்றங்கள் எல்லாம்.

மனதின் யோசனைகள் நடுவே கையும் வாயும் மும்முரமாக வேலையில் இருக்க உணவை முடித்து இனிப்பில் பாயாசம் இருக்க கூடுதலாக ஒரு கப் வாங்கி உண்டான்.

“அத்தம்மா வயிறு நிரம்பிருச்சு, அசையவே முடியலை.” தட்டுத் தடுமாறி தமிழ் பேசும் அவனை மற்றவர்கள் வாஞ்சையாக பார்த்திருந்தனர்.

அடுத்து பெரியவர்கள் ஓய்வெடுக்கச் சென்றனர். கார்த்திக் இவர்கள் மூவருடனும் பேசிக் கொண்டு இருக்க ஆரம்பித்தது அரட்டைக் கச்சேரி. கார்த்திக் அந்த சோஃபாவில் மீராவின் அருகில் அமர்ந்து இருந்தாலும் வாய் மூடாமல் பேசும் அவள் தங்கைகளிடம் இவன் கதை பேசிக் கொண்டிருக்க அவள் தனிமையாக உணர்ந்து விடக் கூடாதென அவளது இடதுக் கையை எடுத்து தனது கைகளுக்குள் பொதிந்துக் கொண்டான்.

அரட்டையில் ஆந்திர நிலவரம், தமிழ் நாட்டு நிலவரம் எல்லாம் முடிந்து இப்போது தமிழ் பட காமெடிகள் ஆரம்பித்து இருந்தன,

“ஒரு ரூபாக்கு எத்தனப் பழம்?” என சித்ரா ஆரம்பிக்க

“இரண்டு பழம்” கார்த்திக் தொடர

“ஒன்னு இங்க இருக்கு, இன்னொன்னு எங்க?” சுசி கேட்க

“அதான் இது?” சொல்லி விட்டு சித்ரா விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

“இது ஒரு காமெடி பீஸ் மாமா, இவளே ஜோக் சொல்லுவா? அப்புறம் இவளே சிரிப்பா” சுசியும் சிரித்துக் கொண்டு இருந்தாள். இவர்கள் அலப்பறையில் மற்ற இருவருக்கும் சிரிப்பு வராமல் இருந்தால் தான் அதிசயம்.

மாற்றி மாற்றி சினிமா கதைகள் பேச ஒரு கட்டத்தில்,

“உங்களுக்கு இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?” என வசனம் பேசியவள் கரம் கார்த்திக் & மீராவிடம் இருக்க… சுசி வெடித்துச் சிரித்தாள்.

“ஆமா இதே பெட்ரோமாக்ஸ் லைட்தான் வேண்டும்” என்றானவன்.

“அதெல்லாம் கூடை வச்சுட்டு வர்றவங்களுக்கு கொடுக்கறதில்லைங்க.” என சுசி சொல்ல, “அதெல்லாம் ஃப்ளைட் ஏறி வர்றவங்களுக்கு கொடுக்கிறதில்லிங்க” என்றாள் சித்ரா.

“பொறுங்க சீக்கிரம் என் பெட்ரோமாக்ஸை ஃப்ளைட்ல கடத்திட்டு போகப் போறேன்.”

“மாமா நாங்க எங்கக்காவை விட்டு பிரிஞ்சதெல்லாம் இல்லை, அதனால…” என சித்ரா இழுக்க…

“அதனால, நான் சென்னைக்கு வரணுமா?” கேட்டவனிடம்,

“ச்சே, ச்சே அதெல்லாம் தப்பு, தப்பு அப்படிச் சொல்ல மாட்டேன்.”

“பின்ன?”

“அங்கவே எங்களுக்கும் ஒரு விஜய தேவரகொண்டா மாதிரியோ, மகேஷ் பாபு மாதிரியோ மாப்பிள்ளை பார்த்துட்டீங்கன்னா….” என

அப்பாவிற்கு கேட்டு விடப் போகின்றது என பதறிய சுசி “ஏ சும்மா இருடி” என அவள் எங்கே நின்றாள்.

“அந்த அளவுக்கு இல்லின்னாலும் உங்கள மாதிரி கொஞ்சமே கொஞ்சம் ஸ்மார்ட்டா..” என்றவளை “அடியே” என முதன் முறையாக குரலெழுப்பினாள் மீரா.

“இல்ல மாமா கொஞ்சம் இல்ல நிறைய ஸ்மார்ட்தான் ஓகேவா அக்கா.” என்று பேச்சை மாற்ற “போடி” என்று தணிந்தாளவள்.

சிரிப்பும், களிப்புமாக நேரம் கழிய கார்த்திக்கை ஓய்வெடுக்க மீரா சொல்ல, மதியம் ஓய்வெடுக்கும் பழக்கமில்லை என அவன் மறுத்தான்.

மாலை நேரம் தங்கம் ஓய்வெடுத்து திரும்பி வருகையில் அவர்களது அரட்டை முடிவுற்று இருந்தது. அனைவரும் சேர்ந்து சிற்றுண்டி முடித்து அமர தான் விடைபெறுவதாகச் சொன்னவன் மீராவை தன்னுடன் அழைத்துச் செல்ல அனுமதி கேட்க மனோகர் அனுமதித்தார்.

மீரா சென்று தன்னை சரிப்படுத்தி வர, கார்த்திக்கும் தன்னை சுத்தம் செய்து வந்தான். தங்களது பயணத்திற்காக ஓலா கார் புக் செய்தவன் கார் வந்து விட்டதாக மெசேஜ் கிடைக்க இருவரும் வெளியே சென்றனர். தனது டைரியை எடுத்து முக்கியமான உறவினர்களுக்கெல்லாம் தகவல் சொல்ல ஆரம்பித்தார்.

“நீயும் உன் குடும்பத்துக்கு சொல்லிரு தங்கம்” என்றார்.

“இப்பவேவா?” தயங்கியவரிடம்

“இப்பவேதான்மா சொல்லணும், புள்ளைங்க வெளியே போயிருக்காங்க. யாராவது பார்த்து தப்பும் தவறுமா கதை கட்டும் முன்ன நாமதான சொல்லணும்.”

“சரிங்க” என்றவர் ஒவ்வொருவரையாக அழைத்து விபரம் சொல்ல…

“அதென்ன பொண்ணு கேட்டு வந்தா ஜாதி ஜனம் இனம் பார்க்காம யாருக்கும் கட்டிக் கொடுத்திருவியாக்கும். நம்ம ஊர்ல இல்லாத பையனா? இதெல்லாம் நல்லதுக்கில்ல. இன்னும் இரண்டு பொண்ணுங்க வச்சிருக்க அதையும் ஞாபகம் வச்சுக்கோ” என விதவிதமான மிரட்டல்களில் அன்புகளை, அழுகைகளை அந்த பெற்றோர்கள் மகளின் காதலுக்காக எதிர்கொள்ள நேர்ந்தது.

அதே நேரம் அந்த பார்க்கின் உள்ளே நுழைந்தவர்கள் இடம் பார்த்து அமர,

“என்ன?” வென்று கேட்டானவன்.   

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here