மனதோரம் உந்தன் நினைவுகள்_17_ஜான்சி

0
573

அத்தியாயம் 17

இன்று
இரண்டு பெரும் மழைகளை
எதிர் கொண்டேன்

வானம் பிளந்துச் சொரியும்
மழைக் கடந்துச் செல்ல
குடை கொணர மறந்திருந்தேன்.

வானினும் பெரிதாய் சொரியும்
அவள் காதல் தித்திப்பு மழையில்
முழுவதும் நனைதலே – எந்தன்

பிறவிப் பயன் என்பேன்.

இயற்கையான இனிமையான சூழல், இவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் அதிகமான நபர்களும் இல்லை. அமர்ந்ததும் தன்னிடம், “என்ன?” எனக் கேட்டவனிடம்

“ஒன்னுமில்ல” எனத் தடுமாறினாள்.

“என் கிட்ட பேச உனக்கு இப்பவும் தயக்கமா?” என்றான்.

“எல்லாமும் நடக்கிறதை பார்க்கும் போது எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு.”

“ஏன்?”

“நான் தான் சரியில்லையோன்னு….அப்பா சொன்னவங்களை கட்டிருப்பேனோன்னு… உங்களை எல்லாத்தையும் ஏமாத்தினது போல… எல்லாமே தப்பு தப்பா…” மனதில் இருப்பதை சொல்ல வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறியவளை ஆசுவாசப்படுத்த கரம் பற்றியவன்,

“நீ என்னை கட்டிக்கிறதா வாக்கு கொடுத்து ஏமாத்தினியா?”

மறுப்பாக தலையசைத்தாள்.

“பின்ன எதுக்கு இந்த குற்ற உணர்ச்சிலாம்? இப்ப நான் வந்து விஷயங்கள் மாறினதால நீ தப்பாகிருவியா?”

“….”

“நான் பொண்ணுங்களோட வளரலை மீரு, எனக்கு எப்படி பழகணும்னு தெரியாது. நான் உன் கிட்ட நடந்துக்கிட்ட விதம் சொன்னப்ப தாத்தா கூட நீ செஞ்சது சரின்னுதான் சொன்னார். புரியுதா?”

“நானா ஒரு முயற்சியும் செய்யாம நீங்களே அப்பா பார்த்து பேசி என்னை பார்க்க வரவும், அதை நான் ஏத்துக்கிறது ரொம்ப சுயநலமா?”

“Pitchi” (கிறுக்கி) என்றவன் அவளது தலையை பிடித்து ஆட்டினான்.

“க்ஷமிசண்டி” (மன்னிச்சுக்கோ) என்றவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“உன்னை நிறைய படுத்திட்டேன்னு புரிஞ்சது, நான் அப்படி நடந்திருக்கக் கூடாது. நீ நேத்து emotionally burstout ஆனதும் குறிப்பா போன் செஞ்சப்ப பேசினது பார்த்தும் கஷ்டமா போச்சு. உங்கப்பா காலையில பேசினாங்க… அவங்க சொல்லுறதைதான் நானும் சொல்றேன். நாம மத்ததெல்லாம் இப்போதைக்கு விட்டிரலாம். என்னை உங்கப்பா உனக்கு பார்த்த மாப்பிள்ளையா நினைச்சுக்கோ. இன்னும் கொஞ்ச நாள் போனா நாம இந்த விஷயங்களை எல்லாம் இலகுவா பேசுற சூழல் வரும் அப்ப பேசுவமா?”

“…”

“மீரா எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும், உனக்கும் என்னை பிடிக்கும்னு என்னோட உள்மனசு அடிக்கடி சொல்லிட்டே இருக்கும். நேத்து நீ நடந்துக்கிட்டது கூட அதுக்கு சாட்சி. ஆனால், வாய் திறந்து சொன்னால் இந்த ஹார்ட் பீட் கொஞ்சம் நிதானமா துடிக்கும்.”

“ம்ம்ம்”

“என்ன ம்ம்?” கடுப்பானான்.

அவனது தோளில் முகம் சாய்த்தவள், “முன்ன நீ மட்டும் தான் என்னை டார்ச்சர் பண்ணுவ, இப்ப உன் கட்சில உன் மாமனார், மாமியார், இரண்டு பாப்பா இவங்கல்லாம் இருக்கப்ப நீ கெத்துதான் காட்டுவ?”

“அடீ, நான் என்ன கெத்து காட்டுனேன்?”

“அவளுங்க என்னை பெட்ரோமாக்ஸ் சொல்றாளுக, நீ அதுக்கு ஹி ஹின்னு சொல்லுற. உன் பல்லை உடைக்கவான்னு இருந்தது.”

“ஏ அது அப்படியில்ல பெட்ரோமாக்ஸ் பளிச்ச்சுன்னு எரியும், இப்ப நீ வந்ததுக்கு அப்புறம் எப்படி லைஃப் பளிச்சுன்னு ஆகிடுச்சு பார் அப்படி”

“ஓஹோ?”

“ஏ மீரு, நான் சரண்டர்… சத்தியமா சொல்றேன் உன் கிட்ட எப்படி பேசினா உனக்கு பிடிக்கும்னு எனக்கு தெரியலை. நீயே சொல்லிரு” எனச் சொல்ல அவள் தோளில் சாய்ந்து இருந்தவள் அவன் இடுப்போடு கை சேர்த்து சிரிக்கவாரம்பித்தாள்.

“ஏ மீரு”

“போய்யா” சிரிப்பு நிற்கவில்லை…அவனுக்கு அவள் சிரிப்பு தெவிட்டவும் இல்லை.

“சொல்லிட்டு சிரிக்கலாம்ல?”

“உனக்கு நிஜமாவே இந்த பெட்ரோமாக்ஸ் லைட்தான் வேணுமா?” அவள் சிரித்துக் கேட்டாலும் அவளது இடது கைப் பற்றி ஆழ்ந்த முத்தமிட்டான்.

“சத்தியமா நீதான் வேணும்”

“உனக்கு பிடிச்ச மாதிரிலாம் நடந்துக்க மாட்டேன், ஏறுக்கு மாறாதான் பண்ணுவேன். உன் பேச்சு கேட்கவே மாட்டேன். அடிக்கடி சண்டை போடுவேன்… யோசிச்சுக்கோ…”

“யோசிக்கவெல்லாம் முடியாது, நீ மட்டும் தான்டி எனக்கு”

“இப்படில்லாம் பேசுரேனே கோபம் வரலையா?”

“அது எனக்கு பழக்கம் தானே?”

“யோவ் அப்ப நான் உன் கூட வேலை பார்த்தேன் எனக்கு இந்தாள் போகிற போக்கு சரியில்லையேன்னு பயந்து ஏதோ ஜொள்ளு கேஸ்னு யோசிச்சு யோசிச்சு நீ படுத்தின பாட்டில என்னிக்காச்சும் தான் திட்டுனேன், தாலி கட்டினன்னா தினம் நாலு தடவையாச்சும் இஷ்டத்துக்கு திட்டுவேன் யோசிச்சுக்கோ”

“உன்னை ஆஃப் செய்ய எனக்கு தெரியுன்டி” என வாய்க்குள்ளாகச் சொல்ல,

“என்ன சொன்ன கார்த்திக்?” என அவனை இன்னுமாய் நெருங்கி வர அவளது நெருக்கத்தில் இவனது இரத்த அழுத்தம் எகிறியது.

“நீ என்ன மிரட்டுனாலும் உனக்கு என்னை பிடிக்கும்னு எனக்கு நல்லா தெரியும் உன் வாயால என்னிக்குச் சொல்லுறியோ அன்னிக்கு சொல்லிக்கோ… ரொம்ப அலட்டாதே புரியுதா?” என்றவன் தன்னிடமிருந்து அவளது கரங்களை விலக்கினான். தான் அவனிடம் பொதுவிடத்தில் இத்தனை நெருக்கமாய் அமர்ந்திருக்கக் கூடாது என அவளுக்கும் தோன்ற இயல்பாய் விலகி அமர்ந்தாள். அவனோடு பேச அவளுக்கு அவ்வளவாக பிடித்திருந்தது.

ஏனோ அவனது முகத்தை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல, அவனோடு பேசிக் கொண்டே இருக்க வேண்டும் போல… ஒரு காலத்தில் அவனை கண்ட போதெல்லாம் எரிந்து விழுந்தது நினைவிற்கு வந்தது.

“நீங்க ரொம்ப ரொம்ப ஸ்வீட் … நேனு… நின்னு… ஆத்மார்த்தமாக ப்ரேமிஸ்துனானு… ரொம்ப ரொம்ப… எவ்வளவுன்னு தெரியலை சிறு பிள்ளை போல கை விரித்தாள்…. இவ்வளவு இல்ல அவ்வளவு ப்ரேமிஸ்துனானு.… உங்களையே நினைச்சு நினைச்சு நெஞ்சு வெடிச்சுருமோன்னு எல்லாம் சில நேரம் நினைச்சு இருக்கேன். அவ்வளவு ப்ரேமிஸ்துனானு.”

அவன் கண்கள் கலங்க அமர்ந்திருந்தான்.

“தேங்க்யூ…” அவன் கைகளை பற்றிக் கொண்டாள்.

“என்னை தேடி வந்ததுக்கு, அப்பாட்ட பேசினதுக்கு எல்லாத்துக்கும் …. எல்லாத்துக்கும் தேங்க்யூ” பற்றிய கைகளை முத்தமிட்டாள்.

“ஏய்..” வார்த்தை எழாமல் அவள் தலையை வருடினான்.

“எனக்கு ஒரு மாதிரி இருக்கு…. எனக்கு இதுவெல்லாம் கனவு போல இருக்கு…”

“ம்ம்”

“எனக்கு நான் செய்யறதெல்லாம் சரின்னு ஒரு கர்வம், நான் நினைக்கிறதெல்லாம் செய்ய முடியும்னு ஒரு நினைப்பு. அப்படித்தான் இதையும் கடந்திருவேன்னு நினைச்சேன்… என்னால முடியலை தெரியுமா?” பரிதவித்தவளை இழுத்து மாரோடு சாய்த்துக் கொண்டான்.

“விட்றி, அப்புறம் பேசலாம்.”

அவள் முதுகு குலுங்கியது, விசும்பினாள்.

“வேணான்டா… அழாதே.”

“நீ எவ்வளவு தைரியமா இருப்ப, இப்ப பாரு உன்னை இப்படி பார்க்கவே எனக்கு ஒரு மாதிரி இருக்குமா.”

“எல்லாத்துக்கும் நீதான் காரணம், நீ தான் என் மனச கெடுத்திட்ட?” புலம்பியவளிடம் இனியும் கனிவாக பேசுவது உதவாதென

“அதுக்கு முன்ன நீ என் மனசை கெடுத்த அது என்ன கணக்கு?” பதிலுக்கு சீண்டினான்.

“ஆமா இவங்க மனசை கெடுக்குறாங்க? நானா உங்க கிட்ட வந்து பேசுனேன். நானுண்டு என் வேலையுண்டுன்னு இருந்தேன்.”

“நீ உண்டு உன் வேலையுண்டுன்னு இருந்தா நான் எப்ப கல்யாணம் கட்டுறது? எப்ப புள்ளக்குட்டி பெத்துக்குறது?”

“ச்சு.. போய்யா” அவனை தள்ளி விட்டவள் கைப்பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கர்ச்சீப்பில் நனைத்து முகத்தை துடைத்தாள்.

“போச்சா, ஒன்றரை கிலோ மேக்கப் கலைஞ்சுருச்சா? ம்ப்ச்ச்”

“கார்த்திக்”

“மேக்கப் கலைஞ்ச பின்ன கொஞ்சம் உன்னோட நிஜ முகத்தை பார்த்துக்கிறேன், இப்படி தருணத்தில் பார்த்தா தான் உண்டு.”

“கார்த்திக்”

“நான்லாம் இருட்டுக்கு பேய்க்கு எல்லாம் பயப்பட மாட்டேன், அதனால நல்லதா போச்சு, இல்லைன்னா இந்நேரம் என்ன ஆகிருக்குமோ?”

“யோவ் கார்த்திக்” அவள் துரத்த அவன் ஓடவென சட்டென்று மழை சோவென ஊற்ற ஆரம்பிக்க நின்ற இடத்திலேயே இருவரும் நின்றனர்.

மழை ஓரு மாமருந்து மீராவின் மனதில் அவள் தனக்குத் தானே கீறி விட்டுக் கொண்ட காயங்களை தாய்மையோடு மழை வருடிவிட, கூடுதலாக தன்னவனின் அருகில் இருந்த இதம் வேறு. அத்தோடு கூட அவன் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் அவளுக்காக வெளிப்பட்ட அன்பும் காதலும் என அந்த நொடியில் தனது மனதின் அத்தனை காயங்களினின்றும் அவள் விடுதலை அடைந்தாள்.

மனதின் மலர்வில் எதிரில் இருந்தவனை புன்னகையோடு பார்க்க அவன் தடுமாறினான்.

“பொறு மரத்துக்கு கீழே நிற்போம், அப்புறமா மழை விட்டதும் போகலாம்.”

“இவ்வளவு மழை பெய்யுது, இப்பவும் என்னத்துக்கு கண்ணாடி?” அதை கழற்றச் சொல்ல வேண்டி அவள் கையை நீட்ட…

“இருக்கட்டும்” என்றான்.

“வீட்ல சும்மாதானே இருந்தீங்க, வெளியே வரவும் கண்ணாடி, அன்னிக்கு ரெஸ்டரெண்ட்லயும் இதேதான் கண்ணாடியோட இருந்தீங்க..” அவள் நினைவு கூர்ந்து சொல்ல அவனது கவனம் அங்கில்லை அவளை அங்குல அங்குலமாக இரசித்துக் கொண்டிருந்தான்.

“யோவ் நீ கண்ணாடிய கழற்று, என்னமோ சரியில்லை. கண்ணாடி போட்டுட்டு எங்க பார்க்குறன்னு கூட புரியலை. யோவ் கார்த்திக் ஃப்ராடு.” அவனை கண்டுக் கொண்டவள் திட்ட பக்கென்று சிரித்து விட்டிருந்தான்.

“நிஜம் தானே?” அதட்டியவள் கிடைத்த இடத்தில் அவன் இடையில் கிள்ளி வைக்க,

“ஏ மீரு…” அவள் கைகளை பிடித்துக் கொண்டான்.

“என்னை தொட்டுல்லாம் பேசாத சரியா… எல்லா நேரமும் ஒரு போல இருக்க மாட்டேன். நிறைய நேரம் உன் கிட்ட வந்தாலே நான் அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான். அதுக்கு நான் உனக்கு கொடுத்த 2 கிஸ்ஸீமே சாட்சி.”

“யோவ் வெட்கமே இல்லாம பேசாத ஓகே” சட்டென அவன் பாய்ந்து முத்தமிடுவானோ என அஞ்சியதைப் போல விலகி நின்றாள்.

“போடீ”

“டீ சொல்லக் கூடாது”

“நீ மட்டும் மரியாதையாவா பேசுற உன்னை விட பெரியவன் நான்.”

“அதெல்லாம் நான் அப்படித்தான் பேசுவேன், ஆனா அம்மா கிட்ட இதெல்லாம் சொல்லக் கூடாது சரியா?”

“அத்தய்யா” தன் அலைபேசி எடுத்து அவள் அம்மாவிற்கு அழைப்பதாக பாவனை காட்ட அவள் முறைத்தாள்.

அலைபேசி எடுத்து எதையோ செய்ய,

“கார்த்திக் ப்ளீஸ்” என்றாள்.

“த்சு” என்றவன் அவளைக் கண்டுக் கொள்ளாமல் தொடர்ந்தான். என்னச் செய்கின்றானென பார்த்தால் மழை நின்று விட்டிருக்க வீட்டிற்கு திரும்பச் செல்ல கார் புக் செய்துக் கொண்டு இருந்தான்.

தனது பையில் கைவிட்டு கர்ச்சீப் எடுத்து முகம் துடைக்கக் கொடுத்தான்.

“உங்களுக்கு?”

“இதோ…” என அவள் முந்தானையை எடுத்து தலை துவட்ட…

“தமிழ் படம் பார்த்து கெட்டுப் போயிருக்கு பக்கி” இவள் புலம்பினாள்.

“நீ மரியாதையா தெலுங்கு கத்துக்கோ” என்றவன் அவள் தனக்கு முரணாய் ஏதாவது பேசுவாளேன நினைத்தால்

“ஆமாம், கத்துக்கணும் அப்பதான் தாத்தா கூட பேச முடியும்” என்றவளைப் பார்த்து புன்னகைத்தான்.

“கூடவே அப்பப்ப எனக்கு நீங்க என்ன கௌண்டர் கொடுக்குறீங்கன்னு புரிஞ்சுக்க முடியும்?” “ஓஹோ”வெனறவன் அவள் முந்தானையில் இப்போது தன் கண்ணாடியை துடைத்துக் கொண்டு இருந்தான்.

“இப்ப இது எதுக்கு? இங்க தாங்க” என அவன் கையிலிருந்து பறிக்கப் பார்க்க மறுபடி அணிந்துக் கொண்டவன் கார் வந்ததாக தகவல் கிடைக்கவும் அவளையும் அணைத்துக் கொண்டு நடக்கலானான்.

“இருக்கட்டும் மீரு, உன் கூட வெளியே வந்திருக்கேன்ல, இல்லைன்னா யாராச்சும் உன்னை ஒரு மாதிரி பார்ப்பாங்க.”

“அதெல்லாம் யாரும் என்னை ஒரு மாதிரியும் பார்க்க மாட்டாங்க, எனக்காகவா இதெல்லாம்? வேணாம் கழற்றுங்க.”

“இருக்கட்டும்டி”

“ம்ப்ச்ச்”

காரில் ஏறி அமரவும் அவள் கரத்தைப் பற்றிக் கொண்டு கரத்தில் குனிந்து முத்தமிட்டான்.

இருவரது மனங்களும் மழைக்காற்றின் இதத்தில் வனப்பூக்களாய் மலர்ந்திருந்தன.

தொடரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here