மனதோரம் உந்தன் நினைவுகள்_18_ஜான்சி

0
420

அத்தியாயம் 18

நள்ளிரவாயினும்

நிலவுக்கு துணையாய்
நாமும்

நமக்கு துணையாய்
நம் காதலும் இருக்க,

நமக்கு
அச்சம் துச்சமல்லவா?

தொப்பலாக நனைந்து இருந்தவர்கள் இருவரும் வீட்டை அடையவும் மீரா உடை மாற்றச் செல்ல தான் உடனேயே புறப்படுவதாகச் சொன்ன கார்த்திக்கை மனோகரும் தங்கமும் வலிந்து கொஞ்ச நேரம் இருந்துச் செல்லச் சொல்ல சற்று நேரத்திற்கு தனது உடைகளை காயப் போட்டவன் மாமனாரின் உடைகளை அனைந்து ஆரம்பத்தில் நெளிந்தாலும், அரட்டை களைக் கட்ட அந்த டிஷர்ட் மற்றும் லுங்கியில் இருந்து பேசிக் கொண்டவன் சற்று நேரத்தில் அவர்கள் வீட்டு மனிதனாகவே ஆகி ஒன்றிப் போனான்.

தங்கமும் மனோகரும் அவனை தாங்கிய விதத்தில் அவனுக்கு வெகு நாட்களுக்குப் பின்னர் ஒரு விதமான நெகிழ்ச்சி.

உடை மாற்றி வந்த மீரா இப்போது அழகானதொரு சல்வாரில் இருந்தாள். இரவு உணவும் அனைவரும் அமர்ந்து உண்ண இம்முறை தாய் சொல்லாமலேயே மீரா அவனுக்கு பார்த்துப் பார்த்து பரிமாறினாள். காலை முதல் இருந்த குழப்பத்தின் சுவடுகள் இன்றி மகளின் முகம் பிரகாசிப்பதை பெற்றோர்கள் கண்டு மகிழ்ச்சியுற்றனர்.

“நீயும் உட்காரு”, கார்த்திக் அவளை அமர வைத்து பறிமாற முயல, தடுத்து அவளே தனக்கு உணவை பறிமாறிக் கொண்டாள். சின்னவர்கள் அமைதியாகவே இருந்தனர். அது ஏனோ அவர்கள் இருவருக்கும் இடையில் புக யாரும் விரும்பவில்லை.

பல நாட்கள் அறியாத பசி அறிந்தவளைப் போல அந்த நேரம் ரசித்து, ருசித்து உண்டுக் கொண்டிருந்தாள் மீரா. மற்றவர்கள் உண்டு எழுந்திருக்க இன்னும் இவர்கள் இருவரும் எழக் காணோம்.

மதியம் கார்த்திக் வாங்கி வந்திருந்த இரசகுல்லாவை சித்ரா எடுத்து வந்து கண்ணாடிக்  கின்னங்களில் பறிமாற எடுத்து வைக்க சுசித்ராவும் இணைந்துக் கொண்டாள். உணவு டேபிளில் இவர்களை விட்டுவிட்டு அனைவரும் அங்கங்கே அமர்ந்து இனிப்பு உண்பதில்  சன்னமான அரட்டையும் சிரிப்புமாக இருந்தனர். மீரா கண்களை உயர்த்தி தங்கைகளிடம் என்னவென்றுக் கேட்க ஒன்றுமில்லை என தலையசைத்தனர்.

இரவாகி இருந்தது, உடையை மாற்றிக் கொண்டவன் தான் நாளை காலை வருவதாகவும் தாத்தாவிடம் பேச காலை11 மணி அளவில் நேரம் சரியாக இருக்கும் எனவும் கார்த்திக் மனோகரிடம் பேசிக் கொண்டு இருந்தான்.

அத்தைய்யா உணவை புகழ்ந்து சின்னவர்களிடம் விடைப் பெற்று மீராவின் கைப் பற்றி அழுந்தி விடுவித்து மாமனாரிடமும் விடைப்பெற்றுச் செல்கையில் மனதளவில் அவ்வீட்டின் உறுப்பினராகவே அவன் மாறி இருந்தான்.

அவன் உடுத்தி இருந்த உடைகள் இப்போது மீராவால் கைப்பற்றப்பட்டு இருந்தன. அத்தனையையும் கண்டும் காணாமல் இருந்த தங்கைகள் வழக்கம் போல அக்காவை இரவு நேரம் வலமும் இடமுமாக சுற்றி வளைத்து இருக்க,

“அக்கா உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்” அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் சித்ரா.

“நான் எங்க போகப் போறேன்?” தலையை வருட அங்கோ இவளை இடுப்பில் கட்டிக் கொண்டாள் சுசி. “ஐயாம் ஹாப்பி ஃபார் யூ க்கா”

கேட்டவள் புன்னகைக்க, “இன்னிக்குத்தான் நீ முன்ன மாதிரி சிரிக்கிற”

“ம்ம்…”

“எப்பவும் சந்தோசமா இருக்கணும்.”

இரு கைகளும் இருவரது சிகைகளையும் வருட இன்பமாய் உறங்கிப் போனர் மூவரும்.

காலையில் கார்த்திக் பத்தரைக்கே வந்திருக்க, காலை உணவை சேர்ந்து முடித்தனர்.தான் அன்று திரும்பச் செல்வதாகக் கூறினான்.

உடல் நலக் குறைவுகளுக்கான மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் தாத்தா நிதானமாக எழும்பவே பத்து மணி தாண்டி விடும். அவரை கவனிக்க மூன்று வேலையாட்கள் வீட்டில் உண்டு என விபரங்கள் பலவும் பகிர்ந்துக் கொண்டு இருந்தான்.

தாத்தாவை அலைபேசியில் அழைத்துப் பேசி அவர் பேச ஸ்பீக்கரில் போட்டு விட்டான். ஒவ்வொருவரையாக விசாரித்தவர் மீராவிடம் பேச அவன் சொன்னது போலவே அவளும் பதில் கொடுக்க என அவர் ஆயிரம் முறை தன் பேரனை பார்த்துக் கொள்ளச் சொல்ல “சரி தாத்தா” “சரி தாத்தா” சொல்வதே இவளது வேலையாகிற்று.

மனோகர் பல்வேறு நபர்களோடு பழகுவதால் அவர் ஓரளவிற்கு அவரோடு பேசிக் கொண்டு இருந்தார். முதுமையின் காரணமாக அவர் பேச்சு புரிந்தும் புரியாமலும் இருக்க, கார்த்திக் அவ்வப்போது மொழிப் பெயர்த்தான்.

திருமண நாள் குறித்து, ஏற்பாடுகள் குறித்தெல்லாம் பேச பெண் வீட்டு முறைப்படி திருமணமும் ரிசப்ஷனும் முடித்து அடுத்து ஹைதராபாதில் ரிசப்சன் வைத்துக் கொள்ளச் சொல்லவும் இரு தரப்பினரும் அதற்கு சம்மதித்தனர்.

ஹால் கிடைப்பதை பொறுத்தல்லவா திருமண தேதி முடிவு செய்ய வேண்டும்? சென்னை வேலைகளை மனோகர் பார்த்துக் கொள்ள, ஹைதராபாத் வேலைகளை கார்த்திக் பார்ப்பதாக முடிவானது. செலவுகளும் அப்படியே இங்குள்ளவைகளை தான் செய்துக் கொள்வதாக மனோகர் சொல்லி விட்டிருந்தார்.

அடுத்தடுத்த நாட்களில் மணமக்களை விட அதிகமாக இவர்களுக்குள்ளாகத்தான் உரையாடல்கள் நிகழப் போகின்றன என்பதை வீட்டினர் புரிந்துக் கொண்டனர். வீடே பரபரப்பாக மாறி விட்டதான உணர்வு எழுந்தது.

இரவு எட்டரைக்கு ஃப்ளைட் என்பதால் மதியம் உண்டு முடித்ததும் கார்த்திக் புறப்பட்டான். அனைவரும் வழியனுப்பி வைக்க அவனது பயணம் நிஜமாகவே மிக அழகான வெற்றிப் பயணம் தான்.

அலைபேசியில் மீராவும், கார்த்திக்கும் பேசிக் கொள்ள அங்கு இருவரின் உணர்வுகளும் பறிமாறப்பட்டன. வேலையை விட்டு விடுமாறு அப்போது சொல்ல இடம் மாறிப் போனால் வேலையில் தொடர முடியாதென்பதற்காகச் சொல்கிறான் போலும் என எண்ணியவள் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளாவிடினும் தன் போக்கில் சில முடிவுகளை எடுத்தாள். அதுதானே அவளது வழக்கமும் கூட?

தனது சேமிப்பை எடுத்து தந்தைக்கு கொடுக்க மனோகர் வாங்க மறுத்தார். “வரதட்சணைன்னு ஒத்த ரூபா வாங்க அவங்க தயாரில்லமா, அப்பா உனக்கு போடுற நகையும் திருமணச் செலவும் மட்டும் தான் என்னுது. அதை என் திருப்திக்காக என்னை செய்ய விடு” என்று கூறிவிட்டார்.

தந்தை சொன்னால் எல்லாம் அமைதியாக இருந்து விட முடியுமா என்ன? திருமணத்திற்கான உடைச் செலவை எல்லாம் அவளது பணத்தினின்று பார்த்துக் கொள்ள, கார்த்திக் மற்றும் தாத்தாவுக்கான உடைகள் தாத்தாவின் இல்லம் பார்சலாகிப் போய் சேர்ந்திருந்தது.

தாத்தாவுக்கு மிகவும் பெருமிதம். அவர் காசு பணம் பார்த்தறியாதவரல்ல ஆனால், அந்த உரிமை உணர்வோடு கொடுக்கப் பட்ட பரிசு அது மிகவும் நெகிழ்ந்திருந்தார். கார்த்திக்கோடு தாத்தாவும் அன்று வீடியோகாலில் இருக்க தத்தி தத்தி தாத்தாவோடு மழலை தெலுங்கில் உரையாடிக் கொண்டு இருந்தாளவள். அங்கு மட்டும் என்ன எல்லாம் டோலிவுட் உபயம் தான். சினிமாக்காரங்களே உங்கள் சேவை எங்களுக்கு மொழி வளர மிக மிகத் தேவை.

சித்ரா சுசிதராவும் இப்போது அடிக்கடி தாத்தாவுடன் பேசிக் கொள்வர். வீடியோ காலிலும் பத்திருபது நிமிடங்கள் இரு தரப்பிலும் குசலம் விசாரித்து அரட்டை அடித்து முடிக்க இப்போது அங்கு கார்த்திக் மட்டும் என்றால் இங்கே மீரா மட்டும். வழக்கமான பின்வாசலை தஞ்சமடைந்தாள்.

“சாப்பிட்டாச்சா கார்த்திக்”

“ம்ம், நீ?”

“நானும்”

“துணி பிடிச்சிருக்கா உங்களுக்கு? நான் யாருக்கும் இதுவரை வாங்கினதில்லையா? சர்ப்ரைஸா அனுப்புற ஐடியா வேறயா? அதான் கொஞ்சம் டென்ஷன்” என்றாள்.

தன்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனிடம் “என்ன?” என,

“நேர்ல இருந்திருந்தா பதில் சொல்லி இருப்பேன், இப்ப என்னச் சொல்ல?” என்றான். அவன் பார்த்த விதம் மற்றும் பேசிய தோரணையில் இவளுக்கு புரிய அவனை நேராக பார்க்காமல், “அப்ப நான் கட் பண்ணிட்டு காலிங்க் மட்டும் போடவா?” என

“த்ச்சு சும்மா இரேன், வேலையில வரத்தான் முடியலை. பார்க்கவாவது விடு” என்றவனின் பார்வையில் நெளிந்தவள் சாதாரணம் போல காட்டிக் கொண்டு பேச முயல அவன் அதே ஊடுருவும் பார்வையோடு இருக்க சாதாரணமாக ஆனானில்லை.

திருமண ஹால் கிடைக்க பெரும்பாடாக இருந்தது. முதலில் சென்னை அடுத்து ஹைதராபாத் என திட்டமிட்டு இருந்த நிகழ்வுகளுக்கு வசதியாக நடுவில் ஓரிரு நாட்களாவது அல்லது ஒரு வாரமாவது இடைவெளி இருந்தால் நல்லதென தேட வசதியாக ஒன்றும் அமையவில்லை.

இங்கு மனோகருக்கு உதவியாக மகள்கள் இருந்தனர். மற்றபடி உறவினர்கள் பட்டும் படாமல் இருந்துக் கொண்டனர். அதிகமாக ஒன்றச் சென்றாலும் மகளின் வாழ்க்கைக்குள் மூக்கை நுழைப்பர் என்பதால் அவரும் முடிந்த வரையில் தானாகவே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார்.

கார்த்திக் சித்தப்பா மற்றும் சித்தப்பா மகன் மகள் குடும்பத்தினருக்கு விபரம் சொல்லி வந்தான் அது போக சில உறவினர்களுக்கும் என எல்லாவற்றையும் அவனேதான் பார்க்க வேண்டி இருந்தது. விலகியது விலகியதுதான் என்பது போல அவனது சித்தப்பா குடும்பம் திருமணத்திற்கு வருவதாகச் சொல்லி விட்டதோடுச் சரி அதற்கு மேல் அவனுக்கு எதிலும் உதவ முன் வரவில்லை.

ஆர்கனைசர்களை எல்லாவற்றிற்கும் நாடி பொறுப்பை பிரித்துக் கொடுத்தான். திருமணத்திற்கெனவே அவன் ஹைதராபாதில் வாங்கிய ஃப்ளாட்டும் இவர்கள் குறிப்பிட்ட திருமணத்திற்கான நாட்களுக்கு முன்பாகவே ஒப்படைக்கப் படவிருக்க திருமணம் முடிந்ததும் மனைவியை அங்கே அழைத்துச் செல்ல வேண்டும் என புது சிந்தனை ஒன்றும் மனதில் எழுந்தது.

பல்வேறு திட்டங்கள், செயல்பாடுகள் அந்த ஒரு நாளை சிறப்பிக்க மட்டும்… அத்தனையாக சிறப்பு மிக்க வாழ்வின் ஒரு நாளல்லவா அது?

திருமண ஹால் கடைசியில் காலை வாரி விட நவம்பர் 24 அன்று சென்னையில் அதிகாலை வேளையில் திருமணமும் மதியம் ரிசப்ஷனும் என்றிருக்க, நவம்பர் 25 அன்று ஹைதராபாதில் மாலை ரிசப்ஷன் என்றமைய கார்த்திக்கோ ஆப்பகப்பட்ட குரங்காய் “ஐயோ என் ஃபர்ஸ்ட் நைட் போச்சே…” என அலறவும் முடியாமல் புலம்பவும் முடியாமல் இருந்தான்.

அவனின் அவஸ்தைகள் புரியாத மீராவோ தினம் ஒரு அலங்கரிப்பும் செல்ஃபியுமாக அனுப்பி அவனை சோதனைக்குள்ளாக்கினாள்.அத்தனையும் பார்த்து தவித்து “போடீ” பெருமூச்சோடு புலம்பிக் கொள்வான்.

இப்போதும் கார்த்திக் சமூக வலைத்தளங்களில் கணக்குகள் ஆரம்பிக்க விரும்பவில்லை. “எனக்கு இதுவே சௌகர்யம்” என்றிருக்க அவளும் அவனை வற்புறுத்தவில்லை. இருமுறை ஏதோ வேலையாக வந்துச் செல்லுகையில் எல்லாம் இருவரும் தனித்து வெளியில் செல்ல நேருகையில் மறக்காமல் கண்ணாடி அணிந்திருப்பான்.

எத்தனைச் சொல்லியும் அவனை அவளால் மாற்ற முடியவில்லை என்பதால் அவனது போக்கில் அவனை விட்டு விட்டாள்.

நாட்கள் வேகமாய் கழிய இரண்டு மாத காலத்தை விழுங்கிக் கொண்டு இவர்களது திருமண நாள் அருகில் வந்திருந்தது. அன்று நவம்பர் 23 இரவு விடிந்தால் திருமணம்.

திருமண ஹாலின் அந்த மாடியோரம் நின்றவனைத் தேடி ஜல் ஜல்லென சிறிய பாதங்கள் எடுத்து வந்து நெருங்கினாள் மீரா.

அவன் காதல் தேவதை மீரா

அவனுக்காக உருகித் தவித்த மீரா

அவனை அவனாகவே ஏற்றுக் கொண்ட மீரா

முன்பு காரமும் இப்போது இனிப்புமாய் அவனை திக்குமுக்காடச் செய்யும் அவன் மீரா.

ஆசையுடன் கரம் பற்றினான் கார்த்திக், “வா உனக்கு நிலா காட்டுறேன்” என்றான்.

‘நான் பார்க்காத நிலவா?’ என்பது போல அவள் பக்கென்றுச் சிரிக்க நிலவிற்கு போட்டியாய் ஒளிர்ந்ததவள் தேகம்.

இரவின் குளிர்ப் போர்வையில் இருவரும் தேகம் சிலிர்க்க நிற்க, அவளது கைகளைப் பற்றி தனதோடு இறுக்கிக் கொண்டானவன். மென்மையாக அவனது அணைப்பில் அவளும் அடங்க, நிலவு அவர்களைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டு இருந்தது.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here