மனதோரம் உந்தன் நினைவுகள்_19_ஜான்சி

0
277

Manathoram Unthan NinaivukaL_Epi 19_Jansi

அத்தியாயம் 19

அதிசயம் நீ

உயிரை வருத்தும்

என் தனிமையும், துயரமும்

கழுத்தை இறுக்கும்

சங்கிலியாய் தான் மாற…

மூச்சுக் காற்றிற்கு

நான் திணறும் வேளையில்

சட்டென்று தளைகள் அறுபடக் கண்டேன்.

சுதந்திர உணர்வும்

சுவாசிக்கக் காற்றுமாய்

இவ்வதிசயம் நிகழ்ந்ததன்

காரணம் நான் தேட…

எந்தன் குறை, நிறையோடு,

ஏற்றுக் கொள்ளும் ஜீவனாய்,

எதிரில் நின்றிருந்தாய் நீ.

சற்று நேரம் கார்த்திக்கின் அணைப்பிற்கு தன்னை ஒப்புக் கொடுத்து நின்றாள் மீரா. அதன் பின்னர் அவனணைப்பிலேயே நின்றவளாக தனது கைகளை விடுவித்துக் கொண்டவளாக அவனது தோளை இடது கரத்தால் பற்றி வலக்கரத்தால் அவனது முகவாயை வருடினாள். அவனது முன்னுச்சி மயிர் பிடித்து தன்னுயரத்திற்கு இழுத்து அவன் தலை முடியை தன் விரல்களால் கோதினாள்.

முடியை நீங்கிய அவள் கை இப்போது இடக்கையோடுச் சேர்த்து, அவன் தோள்களை வருட, “இப்புடு ஓகேனா?” (இப்ப ஓகேவா?) என அவனிடம் கேட்டாள்.

அவளது சீராட்டுதலை வாங்கிக் கொண்டு இறுகி அமைதியாக நின்றிருந்தான்.

“நென்னு மித்தோடு உன்னாநுகதா தரவாத்தா எந்துக்கு ஒண்டரிகா ஃபீல் ஆவாலி?” (அதுதான் நான் உன் கூட இருக்கேன்ல? அப்புறம் எதுக்கு தனிமையா உணரணும்?)

மீரா முயன்று, தட்டுத் தடுமாறி அவன் மொழியில் பேசிக் கொண்டு இருந்தாள். எப்படியாவது அவனை சமாதானப்படுத்தி விடலாமெனும் அவளது முயற்சிகளுள் அவையும் ஒன்றாக இருந்தன.

“மிகவும் தனிமையாக உணர்கிறேன்” எனும் செய்தியை அவன் அனுப்பி இருந்ததை தொடர்ந்துதான் அவளின் அவனுடனான அந்த இரவு சந்திப்பு நிகழ்ந்துக் கொண்டு இருந்தது.

அவன் பல வாரங்கள் கழித்து, திருமணத்திற்கு முன் தினமாகிய அன்று காலைதான் சென்னை வந்திருந்தான். திருமணப் பேச்சு நிகழும் போது கார்த்திக்கின் தாத்தா விரும்பி இருந்தால் ஹைதராபாதிலேயே திருமணம் வைக்கச் சொல்லி இருந்திருக்கலாம்.

பெரியவர் விருப்பம் என்பதால் மனோகரும் தங்கமும் கூட அதை மறுத்திருக்க மாட்டார்கள். ஆனால், அது பெண் வீட்டாருக்கு வசதிப்படாது என உணர்ந்திருந்ததால் அதற்கு தாத்தா முற்படவில்லை.

“சென்னையில கல்யாணம் வைத்தால் நீங்கள் எப்படி வருவீர்கள்?” என கார்த்திக் கேட்ட போது,

“உன் மனைவியை அவள் வீட்டினர் மனத்திருப்தியாக கட்டிக் கொடுப்பதுதான் இப்போது முக்கியம். உன் திருமணத்திற்கு உடல் நிலை சரிப்பட்டு இருந்தால் நிச்சயம் நான் வருவேன். திருமணத்திற்கு பிறகு அவள் உன்னோடு தானே இருக்கப் போகிறாள்? அவர்கள் பெண்ணிற்கு எப்படி எப்படி எல்லாம் திருமணம் செய்ய ஆசைப் பட்டார்களோ அது போல செய்யட்டும்” என்றிருந்தார். திருமண முறைகள் அத்தனையும் தமிழ் முறைப்படியே நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

அவனுக்கு அந்த முறைகள் எதுவும் தெரியாததால் தான் என்னச் செய்ய வேண்டும்? எவை எல்லாம் வாங்க வேண்டும்? எனக் கேட்டு திருமணத்திற்கான எல்லாவற்றையும் கேட்டுக் கேட்டு செய்து இருந்தான். அவனுக்கு தற்போது தேவையாக இருந்ததெல்லாம் உறவினர்கள் தான். உறவினர்கள் மட்டுமேதான்.

மணமகனுக்கு அண்ணனாக, தம்பியாக, பெற்றோராக, தங்கையாக என திருமணத்தில் செய்ய வேண்டிய செயல்பாடுகளுக்கான உறவுகளின் தேவைகள் நமது திருமண வைபவங்களில் ஏராளமாக உண்டே?

“எப்போது டிக்கெட் எடுத்து தரட்டும்?, சென்னையில் தங்க எந்த ஹோட்டல் பதிவுச் செய்யட்டும்?” என அடிக்கடி சித்தப்பா குடும்பத்தினரை அவன் கேட்டுக் கொண்டுதான் இருந்தான்.

தனது திருமணத்திற்காக அவர்களுக்கு எடுத்த உடைகள் எல்லாவற்றையும் நேரடியாகச் சென்று கொடுத்தும் வந்திருந்தான். அவனது சித்தப்பாவின் குடும்பமோ அவனை கடைசி வரை அலைக்கழித்து விட்டு, “தங்களால் அத்தனை தூரமெல்லாம் திருமணத்திற்கு வர முடியாது” எனச் சொல்லி அவனது முகத்தில் கரியை அள்ளிப் பூசி இருந்தனர்.

‘என்ன இருந்தாலும் நீ அனாதைதானே? இப்போது என் கால் பிடிக்க வேண்டிய நிலை வந்து விட்டது பார்த்தாயா?’ எனும் செருக்கோடு சித்தப்பா அமர்ந்திருந்த பாவம் அவரது மனச்சாக்கடை இன்னும் அழுகி நாற்றமெடுப்பதாகவே அவனுக்குத் தோன்றியது.

அவர் அவனுக்கு மிக நெருங்கிய இரத்த சொந்தம் அவர் தானும் வராமல் தனது மக்களையும் வரவிடாமல் தடுத்திருக்க, மற்ற சொந்தங்களோடு அவன் ஒரு போதும் நெருங்கியதே இல்லையே? யாரிடம் போய் கேட்பான்?

தாத்தாவின் உடல் நிலையை பார்த்த போது அவரை அலைக்கழிப்பது சரிவராது எனப் புரிந்தது. தாத்தாவால் திருமணத்திற்கு வர முடியாதென விபரம் தெரிந்ததும் தாத்தாவிற்கு திருமணத்தை நேரலையாக காண்பிப்பது தனது பொறுப்பென்று சுசித்ரா பொறுப்பேற்றுக் கொண்டாள்.

அடுத்த நாள் காலை திருமணத்திற்கு வருவதாக பாஸ்கர் உட்பட சிலர் சொல்லி இருந்தனர். தனது திருமணத்திற்கு தன்னந்தனியனாக வந்து நின்றவனை தனிமை கொன்று தின்றது. என்னமோ தான் மட்டுமே உலகத்தில் தனிமையாக விடப்பட்டது போலொரு எண்ணம் எழுந்தது. அந்த நேரம் தாங்க முடியாத மனப்புழுக்கத்தில் மீராவுக்கு கார்த்திக் செய்தி அனுப்பி இருந்தான்.

அவன் எங்கே இருக்கிறான் எனக் கேட்டு அவனைத் தேடி அவள் வந்திருந்தாள். அவனது தாழ்வுணர்ச்சி அவளது அரவணைப்புக்கும் வருடலுக்கும் கூட அடங்காமல் திமிறியது.

வழக்கம் போல அவனை சமாதானப் படுத்த அவள் சொல்வது போல,

“கார்த்திக்… அது தான் சொல்லிருக்கேன்ல… இரண்டு மூணு வருசத்துல நாம மூணு புள்ளைங்க பெத்துக்குறோம். அத்தனை புள்ளைக்கும் நீ தான் ஆயி கழுவுற வேலை முதலா எல்லா வேலையும் பார்த்துக்கணும். உன்னை சுத்தி சுத்தி நம்ம புள்ளைங்க ஏ அப்பா ஏ அப்பான்னு கரைஞ்சுட்டே திரிஞ்சா லோன்லியா ஃபீல் செய்யுறேன் அது இதுன்னு உனக்கு எப்பவும் தோணாது… எப்புடி என் ஐடியா?” என்றவளை முறுவலோடு பார்த்தான்.

“மூணு வருசத்தில மூணு புள்ளையா? புள்ள பெக்குற மெஷினா நீ? லூசு…” என்றான்.

“அப்புறம் எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க? ஒன்னும் காட்டலை” பேச்சை மாற்றிப் பார்த்தாள்.

“ஒன்னும் கொண்டு வரலைமா… எது வாங்கினாலும் இங்கே இருந்து மறுபடி அங்கேதானே கொண்டு போகணும்? எதுக்கு அது ஒரு அதிகப்படியான வேலைனு விட்டுட்டேன். உனக்கு என்ன வேணும்னு சொல்லு வாங்கித் தரேன்.”

“எனக்கு என்ன வேணும்? எனக்கு நீங்க சந்தோஷமா சிரிச்சுட்டே இருக்கணும் அவ்வளவுதான்” என்றவளது கனிவில் இலயித்திருந்தான்.

அவனுக்கு வானத்தை எட்டிக் காண்பித்தாள், ‘அத்தை மாமாக்கு ஹாய் சொல்லுங்க” என்றாள். அவள் சொன்னதும் மனதில் எழுந்த எண்ணப் பேரலையில் கண்கள் ததும்பி நின்றான்.

“அத்த… மாமா… எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க. நான் உங்க புள்ளையை நல்லா பார்த்துப்பேன் சரியா? கவலைப் படாதீங்க.”

நிஜமாகவே அவர்களைச் சுற்றியும் அவர்களை உணர்ந்தது போல அவனைப் பற்றிக் கொண்டு அவள் இயற்கையோடு பேசியவாறு நின்றிருந்தாள். இவன் உள்ளும் புறமும் சிலிர்த்த வண்ணம் நின்றிருந்தான்.

இப்பெரிய பிரபஞ்சத்தின் சின்னஞ்சிறு தூசியாய் இருக்கும் மனிதனுடைய உணர்வலைகள் மிக மிக வலிமை வாய்ந்தன. ஒருவனை தாழ்வாகவும், உயர்வாகவும் எப்படியாகவும் உணர வைக்க அந்த நபரைச் சுற்றி இருக்கும் உணர்வலைகள் மட்டுமே போதுமானவை. தனது அன்பின் உணர்வலைகளால் கணவனின் பாதுகாப்பற்ற, தனிமையான உணர்வலைகளை வெற்றிக் கொள்ளும் அந்த மாயத்தைத்தான் அங்கு மீரா அல்லது அவளது அளப்பரிய காதல் அங்கே நிகழ்த்திக் கொண்டு இருந்தது.

நெகிழ்ந்திருந்தவன் மீராவின் கரம் பிடித்து தனது உதட்டில் அழுத்தினான். அவளோ தனது இரண்டுக் கைகளாலும் அவனது முகத்தை ஏந்திக் கொண்டாள். இன்னமும் அவன் ஆசுவாசப்படவில்லை போலும் என எண்ணியவள் தனது வலக்கையை எடுத்து அவனது நெஞ்சப் பகுதியை நீவி விட்டாள். கார்த்திக் மீராவை தனக்கு கிடைத்த பற்றுக்கோலாக இறுக்கப் பற்றிக் கொண்டான். இப்போதோ ஆர்ப்பரித்திருந்த அவனது உணர்வுகள் சற்று மட்டுப்பட துவங்கின.

அவனது முதுகை வருடிய அவளது கைகள் இன்னும் நிற்கவில்லை. அணைத்துக் கொண்டே அவளது கரங்கள் அவனது தோள்களை வருடின. அவன் கழுத்தை நீவி விட்டன… அவன் பின்னந்தலை முடியை கோதி வருடி விட்டவளாக அவள் நின்றாள்.

கார்த்திக் தனது இயல்புக்கு திரும்பிக் கொண்டு இருந்தான் போலும். இப்போது இவனது கரங்கள் அவளது தோள்களை வருடலாகின.

“ரொம்ப வாசமா இருக்க…” என்றான்.

“ம்ம்… மஞ்சள்… சந்தனம், கையில மருதாணி, தலையில பூவு… அதனாலத்தான் வாசம்லாம். இதனாலேயே புதுசா கல்யாணம் ஆகுறவங்களுக்கு பேய் பிடிச்சுரும்னு எங்கே போனாலும் கையில இரும்பை வச்சுக்கிட்டே திரியணும்னு சொல்வாங்களாம்.”

“சரி, நீ என்ன இரும்பு வச்சிருக்க?”

‘இதோ இந்த நெயில் கட்டர்” எடுத்து அவனுக்கு காண்பித்தாள்.

“நீங்க?”

“நான் வச்சிருக்கேன்டா … சரி அதை தா நான் உனக்கு ஒன்னு தரேன்.” நெயில் கட்டரை அவள் கொடுக்க அவளது கையில் அந்த நவீன வகை வீட்டுச் சாவிக் கொத்தை கொடுத்தான்.

“இது என்னது கார்த்திக்?”

“உன் வீட்டுச் சாவி”

“புது வீட்டுச் சாவியா?”

“ஐயோ இந்த நேரம் தர்றீங்க, கல்யாண மும்முரத்தில நான் எங்கயாவது தொலைச்சுட்டேன்னா?”

“அதெல்லாம் தொலைக்க மாட்ட, இடுப்பில செருகிக்கோ” என்றான். அந்த சாவிக் கொத்தும் கூட இடுப்பில் செருகிக் கொள்ளும் படியாக அழகான கொக்கியுடனான அமைப்பில் தான் இருந்தது.

‘இதை இடுப்பில் செருகிக் கொண்டால், தான் நடக்கும் போது தனது காலின் கொலுசுகளுக்கு போட்டியாக இவையும் இசை எழுப்பும் போலும்?’ என அவைகளைப் பார்த்திருந்தாள்.

“தாங்கள் திருமணத்திற்குப் பிறகு ஹைதாராபாத் செல்கையில் முதலில் புது வீட்டிற்குச் செல்கிறோம்” என அவன் சொல்லி இருந்தான். ஆனால், அது அவனது சம்பாத்தியத்தில் வாங்கியது என்றெல்லாம் இவளுக்குப் புரியவில்லை.

அவளது சிந்தனைகள் அவன் மாதச் சம்பளக்காரன் அவனது தாத்தா பணக்காரர் போன்றதாகத்தான் இருந்தன. தங்களுக்குள்ளாக உரையாடும் போதும் மீரா கார்த்திக்கிடம் பொருளாதார பிண்ணனி குறித்து அத்தனையாக தூண்டித் துருவி எதையும் கேட்டதில்லை என்பதால் அவளுக்கு அவனைக் குறித்து பலதும் அனுமானங்களே.

“நம்ம வீட்டுக்கு போறப்ப தரணும்னு இருந்தேன்….இப்பவே தந்திட்டா நல்லதுன்னு தோணுச்சு. அழகா சப்தம் வருதில்ல?” எனக் கேட்டவனிடம் அதன் சப்தத்தை பரிசோதித்துப் பார்த்தவள் ஆமென தலையசைத்து திரும்பிப் பார்த்து புன்னகைத்தாள்.

அவள் புன்னகைப் பார்த்தவன் “ஷப்பா நூறு வாட்ஸ்” என்றான். அவளுக்கு அவன் பேசியதில் கவனமில்லை.

“வேணும்னா நான் இடுப்பில் மாட்டி விடட்டுமா?” என அவளதுச் சேலையின் மடிப்பில் ஊர்ந்த அவன் பார்வையையும் அவள் தவற விட்டாள்.

“இல்லை நான் மாட்டிக்கிறேன்” என்றவாறு அவனுக்கு முதுகு காட்டி நின்று சேலையை விலக்கி, தன் இடுப்பில் சாவிக் கொத்தை வசமாய் பொருத்தினாள்.

அவள் குனிந்து அதனை சரிபார்த்த நேரம் இடுப்பு வரையான அவளது கூந்தல் முதுகில் இருந்து விலகி தோளோடு முன்பக்கம் சரிந்தது. அவளுக்கு சாவிக் கொத்து கழன்று கீழே விழுந்து விடக் கூடாதெனும் கவலை.

பூச்சரங்கள் மட்டும் தனியே அசைவாடிய அவளது முதுகு, அவள் அணிந்திருந்த ப்ளவுஸ் டிசைன் தவிர்த்த வெற்றிடம் அதில் இருந்த அந்த குட்டி மச்சம் அனைத்தும் அவனது பார்வைக்கு வந்தது. அவளை பின்னோடு நின்று கண்ணேடுக்காமல் வஞ்சமில்லாமல் பார்த்தான். திருமணத்திற்கு சில மணி நேரங்கள் மிச்சமிருந்த பொழுதின் தனிமையில், கணவனுக்குரிய ஆசைகள் தோன்றியதில் தவறில்லையோ?

அவன் அருகில் நிற்பதை மறந்தவள் போல மீரா அந்த சாவிக் கொத்தை தனது இடுப்பில் பொருத்தியதும் சில எட்டுகள் நடந்து பார்த்தாள். சல் சல்லென சப்தமெழுந்தது. அந்த சாவிக்கொத்து கழன்று விடுமோவென சோதித்துப் பார்க்க சற்று குதிக்கவும் செய்தாள். இவனுக்கோ அவளைப் பார்க்கப் பார்க்க இரசனையாகவும் மிக ஆசையாகவும் இருந்தது.

“வேணும்னா ஸ்கிப்பிங்க் விளையாடி பார்க்கிறியா?” என்றவன் கிண்டல் புரிந்து பெரிதாய் புன்னகைத்தாள்.

இப்போது “ஷப்பப்பா முன்னூறு வாட்ஸ்” என்றான் அவன்.

“என்னது கார்த்திக்?” அவனருகில் வந்தாள்.

“அங்க எரியுது பார் அந்த லைட் பத்தி சொன்னேன்” என அந்த மொட்டை மாடியினின்று கீழே காட்டினான். “மீரா வெட்ஸ் கார்த்திக்” எனும் இவர்கள் புகைப்படம் தாங்கிய அந்த பெரிய பேனர் பார்க்கவே அத்தனை அழகாக இருந்தது. அதை இவர்கள் அருகிருந்து பார்த்த விதம் இன்னும் அழகாய் இருந்தது. இதனை புகைப்படம் எடுப்பார் தான் யாருமிலர்.

“அத்தய்யாட்ட கேட்டுட்டுத்தானே என்னை பார்க்க வந்த?”

“ஆமாம்” தலையசைத்தாள்.

ஏன் கேட்கிறாய்? எனும் கேள்வியோடு அவள் அவனை பார்த்திருக்க…

“நாளைக்கு நாம இந்த நேரம் பேக்கிங்க் செய்துக் கொண்டு இருப்போம்” என்றான்.

அடுத்த நாள் அதிகாலை விமானத்தில் ஹைதராபாத் செல்வதாக ஏற்பாடு. அப்போதுதான் அங்கேச் சென்று சற்று ஓய்வெடுத்து ரிசப்ஷனுக்கு புறப்பட சரியாக இருக்கும்.

ஏற்கெனவே, மீராவின் குடும்பம் மற்றும் உறவினர்களுக்கெல்லாம் கார்த்திக் ஹோட்டல் அறைகளை ஏற்பாடு செய்து விட்டிருந்தான். கார்த்திக்கின் தாத்தா வீடு பெரியதுதான் ஆனால், கவனிக்க ஆட்கள் வேண்டுமே? அதனால் ஹோட்டல் அறைகள் அவனுக்கு வசதியாக தோன்றிற்று.

தாத்தா தானாகவே ரிசப்சனுக்கு வந்து விடுவதாக கூறி இருந்தார். தன்னை வளர்த்தவர் தன்னோடு எல்லாவற்றிலும் அருகில் இருக்க அவனுக்கு ஆசை இருந்தாலும் வாய்ப்பில்லையே?

தன் மனைவி தனது வருமானத்தில் வாங்கிய வீட்டில்தான் முதன்முறை வரவேண்டும் எனும் ஆசை அவனுக்கு இருந்தது. தாத்தா அவனது விருப்பம் போலவே அத்தனையும் செய்ய பணித்தார். அவருக்கு தேவை அவனது மகிழ்ச்சி மட்டும் தானே?

திருமண அலைச்சல்கள் ஓய்ந்த பின்னே தனது பூர்வீக வீட்டிற்கு சில நாட்கள் சென்று வர வேண்டும் என்பது கார்த்திக்கின் திட்டம். மீரா கிராமத்து வீட்டை விரும்புவாளோ என்னமோ? என அவன் எண்ணி இருக்க, மீரா என்ன முடிவெடுப்பாள் என்பது அவளே அறிவாள்.

“நாளைக்கு நாம இந்த நேரம் பேக்கிங்க் செய்துக் கொண்டு இருப்போம்” என்றவனை ‘எதற்காக இதைச் சொல்கிறான்?’ எனப் புரியாமல் அவள் பார்த்திருக்க,

“நாளைக்கு நம்ம ஃபர்ஸ்ட் நைட்” அவன் சொன்ன விதத்தில் நடிகர் வடிவேலு அவ்வ்வ்வ் எனச் சொல்லும் பாவனை இருந்தது.

தன் வாயில் இருந்து குச்சி மிட்டாயை பிடுங்கிக் கொண்ட குழந்தை போல பரிதாப பாவனையில் கார்த்திக் “நாளைக்கு நம்ம ஃபர்ஸ்ட் நைட்” எனவும் மீரா பொங்கிச் சிரித்தாள். மீராவை இழுத்தணைத்தவன் அவள் உதட்டோடு அவளது சிரிப்பையும் மென்றுத் தின்றிருந்தான். அத்தோடு விடாமல் நெற்றி, கண்கள், கன்னங்கள், நாடி என முத்த மழைப் பொழிந்து நிமிர்ந்தவனிடம்..

“உனக்கு வேற வேலையே கிடையாதா கார்த்திக்? எப்பப் பாரு எச்சிப் படுத்திட்டு…” என இவள் செல்லமாய் முறைத்தாள். அவனோ கள்ளுண்ட மந்தியாக அவளிடம்,

“Shall we prepone our first night Meeru?” (நம் முதலிரவை இன்றுக் கொண்டாடலாமா மீரு?) என்றான்.

“ஆத்தி, பயபுள்ள வேற நினைப்போடு நிக்குதே? தப்பிச்சுரு மீரா” என அங்கிருந்து ஓட்டமெடுத்தாள்.

படிகளில் சடசடவென இறங்கியவளை கார்த்திக் இடைமறித்து நின்றான்.

“பயந்துட்டியா லூசு… நீ கிஃப்ட் கேட்ட ஒன்னுமே தரலை நான்… மனசுக்கு நல்லா இல்லை.. எங்க உன் கையை நீட்டு” என்றான்.

அவளது பெரும்பாலான விரல்களில் மோதிரங்கள் மினுக்க… மோதிர விரலை காட்டி,

“இந்த விரல் எனக்கு ஃப்ரீ செய்து கொடுறா.” என்றான். அதில் இருந்த மோதிரத்தை அவள் மற்றதற்கு மாற்ற அந்த விரல் அவனுக்கே அவனுக்கு என்று கிடைத்தது. தன் காற்சட்டைப் பையில் இருந்து அந்த குட்டி பெட்டியை எடுத்தான்.

அதை திறந்ததும் அந்தக் கல் மோதிரம் பளீரிட்டது. அதனை அவளுக்கு நிதானமாக இரசித்து அணிவித்தவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

“ரொம்ப அழகா இருக்கு” அவனே சொல்லிக் கொண்டான்.

“அப்ப ஏன் முன்னயே தரலை?”

“தாத்தா எது கொடுத்தாலும் திருமணத்துக்கு அப்புறம் கொடுன்னு சொல்லிருந்தாங்க அதனால் தான்” என்றான். தங்களது படோபம் காட்டி பெண் வீட்டாரை மிரட்டி விடக் கூடாதெனும் முயற்சியில் பேரனுக்கு தாத்தா ஆயிரம் அறிவுரைகளை சொல்லி இருந்தார்.அதில் இதுவும் ஒன்று.

“பிடிச்சிருக்கா?”

“ம்ம்ம்… பிடிச்சிருக்கு… ரொம்ப அழகா இருக்கு…. நான் போகட்டுமா?” எனக் கேட்க அவன் அனுமதித்தான்.

“கரெக்டா நாலு மணிக்கு உங்க ரூமுக்கு வருவேன், தயாரா இருங்க சரியா? இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு தூங்கப் போங்க” என்றாள்.

“ம்ம்… சரி வா உன்னை முதலில் விட்டுடறேன்” என கார்த்திக் அவளது அறை வரைச் சென்று அவளை விட்டுவிட்டு வந்தான். மூன்றரைக்கு அலாரம் வைத்தவன் அதுவரையிலும் சற்று உறங்கி எழும்பினான்.அதன் பின்னர் நிதானமாக குளித்து புறப்பட்டு மீராவுக்காக காத்து இருந்தான். அப்போது, அவனது அறைக்கதவு தட்டப் பட்டது.

கதவை திறந்தவனுக்கு எதிரில் மீரா பேரழகாய் காட்சியளிக்க அவளோடு கூட அவள் தங்கைகளும் இன்னும் சிலரும் நின்று இருந்தனர்.

அனைவரும் அந்த அறையில் நுழைந்து பார்வையிட்டனர். ஒவ்வொருவராக தன்னை அவனிடம் அறிமுகம் செய்துக் கொண்டனர். அவர்கள் அவளது உறவு முறை சொந்தங்கள். அனைவரும் முன் தினம் தான் தங்களது ஊரில் இருந்து இவர்கள் திருமணத்திற்காக வந்திருந்தனர்.

மீரா சித்ராவை அழைத்தவள் “இந்த மேடம்கு இன்னிலருந்து உங்க தங்கச்சியா ப்ரமோஷன் ஓகேவா?” என கணவனோடு அவளை நிறுத்தினாள்.

மீரா என்னச் செய்கிறாளென புரியாமல் கார்த்திக் கண்ணகலப் பார்த்திருந்தான்.

“இவங்க எல்லாருக்கும் இன்னிலருந்து நீங்க அண்ணா… அப்படி உங்களுக்கு பிரமோஷன் ஓகேவா?” மற்றவர்களையும் அவனோடு நிறுத்தினாள்.

“அண்ணா இது போங்கு… நீங்க எங்க மீராவை எப்படி கட்டிக்கலாம்னு சண்டை போடறதுக்காகத்தான் நான் உங்க கல்யாணத்துக்கே வந்தேன். மீராண்ணி என்னடான்னா உங்களுக்கு என்னை தம்பியாக்கி இப்படி பொறுப்பை ஒப்புக் கொடுத்திட்டாளே?” வராத மூக்கை உறிஞ்சி செண்டிமெண்டலாக கார்த்திக்கைப் பார்க்க, மற்றவர்கள் அவனைப் பார்த்து சிரித்து வைத்தனர்.

கெச்சலாய் சின்ன மீசையுடன் இருந்த அந்த வாயாடனை கார்த்திக்கிற்கு சட்டென்று பிடித்துப் போனது.

“நான் ராஜா” அவன் கை குலுக்க…

“நான் லாவண்யா” இன்னொரு வாண்டு கார்த்திக்கிற்கு கை கொடுக்க தோளில் ஒருவன் சாய்ந்து, “அண்ணா உங்க மொபைல்ல கேம் இருக்கா?” கேட்க, அனைவரும் புதுமாப்பிள்ளையை சூழ்ந்துக் கொண்டனர்.

ஆறரைக்கு முகூர்த்தம் இருந்ததால் கார்த்திக்கிடம் மீரா கண்களாலேயே விடைப்பெற்று அங்கிருந்துச் செல்ல, சுசித்ரா தன் அக்காவை பின் தொடர்ந்தாள்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here