மனதோரம் உந்தன் நினைவுகள்_2_ஜான்சி

1
551

அத்தியாயம் 2

கல்லைக் கண்டவர் 

நாயகனை காணவியலவில்லையாம்

நாயகனை கண்டதுமோ 

கல்லை காணவில்லையாம்.

உன்னைத் தேடி

உன் நினைவுகளில் சிக்கிக் கொள்வதும்- உனை

நேரில் கண்டாலும் கானலென திகைப்பதுவும்

கண்கட்டு வித்தையதில் மாட்டித் தவிப்பதிலே

அந்த சிற்பியும் நானும் ஒன்று.

தனக்கு நிகழ்ந்தது கனவு என்று மீராவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவள் ஹைதராபாதில் இருந்து திரும்பி வந்து நான்கு மாதங்களாகிற்று. இத்தனை நாட்கள் வராத கனவா இப்போது வந்து விடப் போகின்றது?

அப்படி என்றால் தாம் இந்த அளவிற்கு அவனை தேடுகின்றோமா? சித்தம் கலங்கிப் போயிற்று. சாத்தியம் இல்லாத, சாத்தியம் இருந்தாலும் அவளுக்கு விருப்பம் இல்லாத அந்த உறவு அந்த மனிதன் குறித்த எண்ணங்கள் அவைகள் இவளைச் சுற்றிச் சுற்றி எதற்கு பறக்க வேண்டும்?

அன்று அவளுக்கு அங்கே யாருமில்லாத அந்த தனிமை நாட்களில் அவன் அவளை தாங்கிக் கொண்டானே?

“ஏந்திரா? சால நொப்பெஸ்துந்தரா?” (என்னடா? ரொம்ப வலிக்குதா?) இதை அவன் கேட்ட போது அவன் குரலில் இருந்த வலி அதுதான் இவள் ஆழ்மனதை அசைத்து இருக்க வேண்டும்.

தனியாக இருக்க விருப்பப் படுகின்றவளை தனியாக விட்டுத்தான் மற்றவர்களுக்கு பழக்கம். இவன் மட்டும் தான் அவளது தனிமைக்குள்ளாக ஊடுருவி உள்ளே வந்தான். அதனால் தான் அவளுக்கு அவனை பிடிக்காது. ஆனால், அவள் உள் மனதிற்கு அவனை பிடித்து விட்டதோ? இல்லையென்றால் கண்கள் திறந்துக் கொண்டு இருக்கும் போதே இப்படி நிஜம் போலொரு கனவு கண்டிருப்பாளா?

மூன்று வருடங்கள் முன்பு மீரா இந்த அலுவலகத்தில் பணிபுரிய ஆரம்பித்த போதில் இருந்து அவள் கார்த்திக் குறித்து அவ்வப்போது கேள்விப் பட்டிருந்தாள். ஒரே அலுவலகத்தின் மும்பை, டெல்லி, சென்னை, ஹைதராபாத் கிளைகளில் பணி புரிவோர் பல நேரங்களில் குழுவாக செயல்படுத்தும் போது சேர்ந்து செயல்பட வேண்டியது இருக்கும்.

அப்படி ஒரு மீட்டிங்கில் தான் அவனோடு போன் கான்பெரன்ஸில் அவர்கள் உரையாடுவதாக இருந்தது. அந்த வேலையில் குறிப்பிட்ட ஒரு பகுதியை அவனுக்கும் அவனது குழுவுக்கும் கற்றுக் கொடுக்க இவளது பாஸ் இவளை வெகுவாக வேண்டி கேட்டுக் கொண்டு இருந்தார். அதனால் தனது ஷிப்ட் முடிந்த பிறகும் கூட குறிப்பிட்டிருந்த 6 மணிக்கு இவள் கான்பெரன்ஸ் அறை தேடி மீட்டிங்கிற்கான தொலைபேசி எண்ணை அழுத்தி அமர்ந்திருக்க கார்த்திக் இணைப்பில் வரவே இல்லை.

எப்போதுமே அலுவலகங்களில் ஒரு சில சொல்லப் படாத நடைமுறைகள் உண்டு. அதாவது யாருக்கு யாரிடம் இருந்து உதவி வேண்டுமோ அவர்தான் கெஞ்சி கூத்தாடி மற்றவரிடம் உதவி பெற்றுக் கொள்ள வேண்டும். உதவி செய்பவர் எதற்கும் மெனக்கெடுவதில்லை.

இங்கோ அதற்கு நேர்மாறாக உதவி செய்கின்றவள் காத்திருக்க, உதவி வேண்டியவன் தனது குழுவோடு இணைப்பில் வந்த போதோ குறிப்பிட்ட நேரத்தை விடவும் பத்திருபது நிமிடங்கள் தாமதமாகி விட்டிருந்தது.

நேரம் தவறாமை மீராவுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. எந்த வேலையானாலும் திருத்தமாக செய்வது அவளது பாணி, தனது வேலையில் அவள் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர் தான். அவளுக்கு சோம்பேறிகள், சாக்கு போக்கு சொல்கின்றவர்களை சுத்தமாகவே பிடிக்காது எனலாம். அதனால் கார்த்திக் அன்று மீட்டிங்கிற்கு தாமதமாக வந்தது அவளுக்கு ஆரம்பத்திலேயே அவன் மீது ஒரு வகையான ஒவ்வாமை உணர்வை ஏற்படுத்தி இருந்தது.

தனது தாமதத்தால் பிறரது நேரத்தை வீணடிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. சொன்னால் சொன்ன நேரத்தில் வர முடியாதா? இந்நேரம் நான் வீட்டில் இருக்க வேண்டியது? என சிடுசிடுப்பாக அவள் மனதில் தோன்றினாலும் தான் ஒப்புக் கொண்ட பொறுப்பிற்காக அவர்கள் கேள்விகள் கேட்க கேட்க இவள் விவரிக்க ஆரம்பித்தாள்.

ஒரு கட்டத்தில் இவள் கற்றுக் கொடுத்ததை அவன் கற்றுக் கொண்டது போல அவளுக்கு தோன்றவில்லை. விருப்பமே இல்லாமல் கூட சும்மா மீட்டிங்கில் அமர்ந்திருக்கின்றனர் என்பதாக தோன்றினது. ஏதோ தான் தனியாக பேசுவதான ஒரு உணர்வு எழவும், தான் கூறியதை எதிர்தரப்பினர் புரிந்துக் கொண்டார்களா? என்றறிய ஒரு சில கேள்விகள் கேட்க ஆரம்பித்தாள்.

பொதுவாக வெறுமனே எதையாவது கற்றுக் கொடுப்பதற்கு, கேள்விகள் கேட்டு யோசிக்க வைத்து கற்றுக் கொடுப்பது எதிரில் இருப்பவர்களது சிந்திக்கும் திறனை தூண்டி விடும் இது ஒரு வகையான வழிமுறை அதைத்தான் அவளும் பின்பற்றினாள்.

அதிலும் அவள் கேட்ட கேள்விகள் எல்லாம் மிக சாதாரணமானவைகள். கார்த்திக்கிற்கு விடை தெரியவில்லையோ அல்லது விடை தெரியாமல் பெண் ஒருத்தி முன்பு அவமானப்படுவதா? எனும் ஈகோவோ என்னமோ? சட்டென்று “நன்றி மீரா, நாங்கள் உன்னை மறுபடி தொடர்பு கொள்கிறோம்” என்றுச் சொல்லி தொலைபேசியை துண்டித்து இருந்தான்.

மீராவிற்கு அவனது செயல் மூஞ்சில் அறைந்தார் போல இருந்தது. இப்படிப்பட்ட ஒருவனுக்காகவா மணி நேரங்கள் வீணடித்தோம்? எனும் சிந்தனை காரணமாக கார்த்திக் குறித்த ஒரு சின்ன கரும் புள்ளி அவள் மனதில் பதிந்து விட்டது. அதன் பின்னர் அவள் அவனிடம் நேரிலோ, போனிலோ பேச தேவை எப்போதும் ஏற்பட்டிருக்கவில்லை.

தான் இந்த நபர் இப்படித்தான் என கார்த்திக் குறித்த ஒரு முடிவில் இருக்க அவனை அவள் நேரில் சந்தித்த போது நிகழ்ந்தவைகள் எல்லாம் நம்பவே முடியாத அதிசயங்கள் தாம்.

தனது வேலை முடிந்து விட்டிருக்க, அலுவலக கண்ணாடிச் சுவர் வழியே வெளியே மீரா எட்டிப் பார்த்தாள். இருட்ட ஆரம்பித்து இருந்தது. இனி வீட்டிற்கு புறப்பட வேண்டியதுதான். காலை நேர அவசரத்தில் அன்று டூ வீலரை அவள் எடுத்து வந்திருக்கவில்லை.

ரிசப்ஷனை விட்டு வெளியே வந்தவளுக்கு வழக்கமாக படிகள் இறங்கிச் செல்ல கூசியது. அங்கே தானே அந்த முத்தம்…அல்ல முத்தங்கள்… இப்போதும் கூட அவை நிஜம் போலவே இருந்தன. லிஃப்டை உபயோகித்தவள் அதன் பின்னர் ரோட்டை நோக்கி நடக்கலானாள்.

கம்பெனி கேம்பஸை கடந்துச் சென்றால் ஆட்டோ பிடித்து விடலாம், இல்லையெனில் ஓலா புக்கிங்க் செய்யலாமா? என நடந்தவண்ணமே குனிந்து மொபைலில் ஓலாவில் ரிக்ஷாவை தேடினாள். அப்போது அவளை யாரோ உரசிச் சென்ற உணர்வு. கூடவே “ஏல உனாவே?”( எப்படி இருக்கடி?) எனும் மிக மெல்லிய குரலும் கேட்டிருந்தது.

‘யாரது?’ திடுக்கிட்டு சுற்றும் முற்றும் பார்த்தால் அருகாமையில் யாரையும் காணவில்லை. பெப்பரப்பே என்று விரிந்த வளாகம், அதில் தன்னை உரசிச் செல்லும் தேவையே யாருக்கும் இல்லையே? அந்த வார்த்தைகள், அவளது காதுக்குள் கேட்ட வார்த்தைகள் அவை தெலுங்கு தானே? உடனே மொபைலில் அதன் அர்த்தம் தேடி அறிந்தாள். ‘நிஜமாகவே இது அவன் தானா? அதெப்படி அவனாக இருக்க முடியும்?’ அவனை யோசித்து யோசித்து, கடைசியில் தான் கிறுக்காகி விட்டோமோ?’ மனதிற்குள்ளாக கலங்கினாள்.

வீடு வந்த போது ஒரு ஆசுவாசம், மனம் களைத்திருந்ததால் சீக்கிரம் உண்டு விட்டு உறங்கச் செல்ல வேண்டும், தீர்மானித்திருந்தாள்.

வீட்டிற்கு உள்ளே வந்த போது அங்கே டிவி கவனிக்கப் படாமல் ஒரு பக்கம் ஓடிக் கொண்டு இருக்க, சோபாவில் ஒன்று போலவே தோற்றமளித்த அந்த இருபது வயது இரட்டையர்கள் சாவகாசமாய் யாரோ ஒரு செலிபிரிட்டியை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து சல்லி சல்லியாக நொறுக்கிக் கொண்டு இருந்தனர்.

மீரா ஐந்தேகால் அடி உயரம் தன் அப்பாவை போல வட்ட முகம் ஒல்லி, குண்டு என வரையறுக்கப் படாத தோற்றம் கொண்டவள் எனில், அவள் தங்கைகள் அம்மா அப்பா இருவரது முக இலாவண்யங்கள் கொண்டு அவளை விடவும் சற்று வளர்த்தியாக ஒல்லியாக இருந்தனர்.

வெகு சுவாரஸ்யமாக அவர்கள் அரட்டை போய் கொண்டு இருந்தது. அம்மா அவர்கள் அருகாமையில் இருந்து எதையோ செய்துக் கொண்டு இருந்தார்.

“அக்கா தேங்க்ஸ்கா” இவளைக் கண்டதும் ஓடி வந்து இருவரும் அவள் கன்னங்களில் ஆளுக்கொரு பக்கம் முத்தங்கள் வைக்க ஏற்கெனவே வாங்கிய முத்தங்களின் அதிர்வுகளில் இருந்து மீளாமல் இருந்தவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.

“என்னக்கா இப்படி பேந்த பேந்த முழிக்குற?”மை ஸ்வீட் அக்கா” மறுபடி அவளை ஆளுக்கொரு கன்னமாய் கடித்து வைக்க…

“டேய் போங்கடி”இருவரையும் விரட்டி விட்டு மூத்த மகளை காப்பாற்றினார் தங்கம்.

“இதுங்க இரண்டும் சேர்ந்து மூத்தவளை ஒரு வழியாக்கிடும்”மூத்தவளுக்கு சார்பாக பேச,

“அக்கா  ஃப்ரிட்ஜ்ல ஐஸ் க்ரீம் ஃபேமிலி பேக் வாங்கி வச்சிருக்கா, அப்ப நாங்க தேங்க்ஸ் சொல்ல வேண்டாமா?”தாய்க்கு எதிர்ப்புக் குரல் எழுப்பினாள் சித்ரா.

“வாங்கி வச்சது நானு, யாருக்கும் மிச்சம் வைக்காம வழிச்சு தின்னுட்டு வேலையிலருந்து களைச்சு வந்தவளை போய் கடிச்சு வைக்கிறீங்கடி?” இது தங்கம்.

“அம்மாவாம்டி” சுசித்ரா சித்ராவை பார்க்க இப்போது அம்மாவை துரத்தினர் இருவரும்.

மீரா சிரித்துக் கொண்டே தன் அறைக்குச் சென்றாள். பொதுவாக அவள் அதிகம் பேசாவிட்டாலும் தங்கைகள் தங்கள் பேச்சுக்குள்ளாக அவளை இழுத்து விடுவார்கள். அவர்கள் பேச, இவர்கள் கேட்க என இருவரும் வீட்டில் இருந்தால் வீடு கலகலப்பாக இருக்கும்.

தனக்குள்ளேயே சுருண்டுக் கொள்ளும் introvert  எனப்படும் தனிமை விரும்பி மீரா. அவள் தங்கைகளோ உள்ளூர் கிசுகிசுக்களில் இருந்து கொரியன் ட்ராமாவில், பாலிவுட், ஹாலிவுட் நடிகர்களில் வரைக்கும் விவாதிப்பவர்கள். அவர்களோடு இருப்பதால் மீரா தான் படிப்பு, வேலையை தவிர வேறு சில விஷயங்களையும் தெரிந்துக் கொண்டு இருக்கிறாள் எனலாம். வெளி நண்பர்களோடு சுற்றுவது அந்த வீட்டு பெண்களுக்கு மறுக்கப் பட்டு இருந்தது என்பதால் சகோதரிகள் மூவரும் தான் ஒருவருக்கொருவர் தோழிகள்.

தனக்கு அவர்களைப் போல படபடவென பேச வராது என்பதால் தங்கைகளிடம் இருந்து மீரா ஒதுங்கி எல்லாம் இருக்க மாட்டாள். தங்கைகள் பேச, அவள் கேட்கவென இருப்பாள். படம், மால் என அவர்கள் இழுப்பிற்கு இழுபடுவாள். வேலை பார்க்கும் அக்கா டெபிட், க்ரெடிட் கார்டுடன் இருக்க இவர்களுக்கு என்ன சிரமம்? வாரமொரு முறை அவளை இழுத்துக் கொண்டு ஊர் சுற்ற சென்று விடுவார்கள். அவ்வப்போது அதில் அவர்கள் அன்னையும் சேர்ந்து விடுவார்.

அப்பா கலகலப்பானவர் தான் ஆனால், அவர் இருக்கையில் அடக்கி வாசிக்கும் இவர்கள் அவர் வீட்டில் இல்லாத போது அடிக்கின்ற கொட்டங்கள் அதிகம்.

ஒருவழியாக அம்மாவை வீட்டைச் சுற்றி ஓட விட்டு, பிடித்து, முத்த மழையில் நனைய வைத்து இரட்டையர்கள் வீட்டில் கொண்டு விட அதற்குள் முகம் கழுவி துணி மாற்றி வந்திருந்த மீரா இருந்த டீயை நால்வருக்கும் ஊற்றி வந்தாள். ஸ்னாக்ஸையும் கொறிக்க கொண்டு வந்து டீப்பாயில் வைத்தாள்.

சாயங்கால டீ நேரத்தில் இவள் வரும் வரைக்கும் காத்திருப்பதுவும் அவர்களது வழக்கம் தான். அதனால் மற்றொரு அரட்டையுடன் டீ நேரம் மிகச் சிறப்பாக முடிவடைந்தது.

இரவில் தூங்கும் முன்பாக பல்துலக்கி, முகம் கழுவிக் கொண்டு இருக்கையில் மறுபடி முத்த ஞாபகம் வர இவனை என்னால் மறக்கவே முடியாதா? மீராவின் மனம் மிகச் சோர்ந்தது.

விவரிக்க இயலாத

நெல்லிச் சுவைப் போல,

முதல் மழையின்

மண் மணத்தைப் போல, 

உனக்கும் எனக்கும் இடையிலான 

காதல் உணர்வு 

மிக நூதனமானது.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here