மனதோரம் உந்தன் நினைவுகள்_20_ஜான்சி

0
477

அத்தியாயம் 20

விளக்கம்

செயல்களுக்கு எல்லாம்
விளக்கம் கேட்கிறாள் அவள்.

அவை
ஆழ்ந்த சிந்தனையில்
எனை நோக்கும்

அவள் விழிகளின்
அர்த்தத்தை
மொழி பெயர்ப்பதுப் போல

கடினமானவை
என்பதை
நான்
அவளிடம்
எப்படிச் சொல்வேன்?

‘தனதறைக்கு வந்த மீரா அடுத்து செய்ய வேண்டியவை என்னென்ன?’ என பார்க்கத் தொடங்கினாள். திருமணத்தின் பின் நினைத்ததும் வந்து போக முடியாத தூரத்தில் புகுந்த வீடு இருக்க ‘எதையும் மறந்து விட்டோமோ?’ எனும் முனைப்பில் தனது கையில் இருந்த லிஸ்டை சரிப் பார்த்துக் கொண்டு இருந்தாளவள்.

“அக்கா கொஞ்சம் ரிலாக்ஸாத்தான் இரேன்… அப்படி ஏதாச்சும் முக்கியமான பொருள் விட்டுப் போயிடுச்சுன்னா மாமாட்டக் கேளு… வாங்கித் தருவாங்க, இல்லன்னா நான் பார்சல் செஞ்சு விடறேன். இல்லைனா நாங்க எல்லாரும் அந்த பேரைச் சொல்லி பொருளோட உன்னை பார்க்க வந்து நிப்போம் அவ்வளவுதானே? எதுக்காக இப்படி மூளையை சூடாக்குற” அதட்டினாள்.

“ம்ம்… அதுவும் சரிதான்” என அமர்ந்தவள் ஏற்கெனவே ஆயத்தமாகி எளிதான சேலையில் இருக்க தங்கையின் கரத்தை பிடித்துக் கொண்டாள். எங்கோ தூரம் செல்லும் உணர்வில் மனம் படபடத்தது.

தமக்கையை அணைத்த சுசி, “உனக்கு பிடிச்சவங்களோட உன்னோட வாழ்க்கை அமையப் போகுது… இப்ப நீ ரொம்ப சந்தோஷமா இருக்கணும். இப்படி பலதும் யோசிக்கக் கூடாது” என்றாள்.

“ஓரு மாதிரி இருக்கிறதால் தான் எதையாவது இழுத்துப் போட்டுக்கிட்டு செய்யணும்னு படபடப்பா …” பேசி முடிக்கும் முன்பாக சுசியின் அலைபேசிக்கு அழைப்பு வர மீரா தனது பேச்சை நிறுத்தினாள்.

அழைப்பை ஏற்ற சுசியின் முகம் பிரகாசமாக மாறியது. சட்டென்று அலைபேசியில் இயர் போனை பொருத்தியவள் அதன் ஒரு பக்கத்தை தனது காதில் பொருத்தியவள் அடுத்த பக்கம் இருந்ததை தமக்கையின் காதில் பொருத்தினாள்.

‘இது கார்த்திக் குரல்தானே?’ மீரா நெற்றிச் சுருங்க பார்த்திருக்க, தங்களது சப்தங்கள் எதிர்முனையில் கேளாதவண்ணம் அந்த அழைப்பை ம்யூட்டில் போட்டாள் சுசித்ரா. அவனது அறையில் இருந்த வாண்டுகளில் யாரோ சுசிக்கு அழைத்து தாங்கள் அங்கே கார்த்திக்கோடு பேசுவதை நேரலையாக்க ஆரம்பித்திருந்தது.

சுற்றி இருந்தவர்கள் கார்த்திக்கிடம் மாற்றி மாற்றிக் கேள்விகள் கேட்டுக் கொண்டு இருக்க அவனும் விளையாட்டாய் ஏதேதோ பதில் சொல்லிக் கொண்டு இருந்தான்.

சித்ராவின் குரலும் கேட்டது… சமீபகாலத்து சமூக வலைக் காணொளிகளை கண்டதில் அவளுக்கு எழுந்த ஆசை போலும்…

“மாமா நீங்க மேரேஜீக்கு ஹால் போகும் போதே… டான்ஸ் ஆடிட்டே வந்தா எப்படி இருக்கும்?” எனக் கேட்க அடுத்த நொடியே அவன்…

“ரொம்ப ரொம்ப கேவலமா இருக்கும்” என்றான்.

அவன் பதிலை கேட்ட இவர்கள் இருவரும் இங்கு வெடித்து சிரித்துக் கொண்டு இருந்தனர்.

“நம்மூட்டு காமெடி பீஸ் சான்ஸ்லெஸ்கா… மாமாவும் பயங்கரமா கௌண்டர் கொடுக்கிறார்” என சித்ராவை கலாய்த்து அக்காவிடம் ஹைஃபைவ் கொடுத்தாள் சுசித்ரா. அவளால் தனது சிரிப்பை நிறுத்தவே முடியவில்லை.

அடுத்தடுத்து உரையாடிக் கொண்டு இருக்க, ஹைதராபாத் டூரிஸ்டாக அவனை பாவித்து அங்கு இருக்கும் இடங்களை எல்லாம் பிள்ளைகள் கேட்க அவனும் சொல்லிக் கொண்டிருந்தான்.

“ரிசப்ஷனுக்கு அப்புறம் ஹைதராபாதில் மூணு நாள் தங்கி இருந்து ஊர் சுத்திட்டு போகணும்னுதான் ப்ளான் போட்டோம். சித்ராகிட்ட எல்லாரும் விபரம் கொடுத்துட்டீங்க தானே?” எனக் கேட்டான் கார்த்திக்.

மற்றவர்கள் ஆமெனச் சொல்ல, ராஜாவோ… “நாங்க உடனே திரும்ப வந்திடுவோன்னா. இரண்டு மூணு நாள் எல்லாம் இருக்க வசதிப்படாது. அப்பா சம்மதிக்க மாட்டாங்க” என்றான்.

தங்கத்தின் அண்ணன் மகன் அவன் கிராமத்திலிருந்து வந்ததால் கால் நடைகளை முன்னிட்டு உடனே திரும்ப வேண்டும் எனும் திட்டம் இருந்தது.

“நான் உங்க அப்பாட்ட பேசுறேன்… உன் மீரா அண்ணி ஊர் அது… அதை நீ சுத்தி பார்க்க வேண்டாமா? அப்பப்ப வந்துட்டு போகணும்ல?” என்றான் கார்த்திக்.

“அப்ப நீங்களும் எங்க ஊருக்கு வரணும்ணா.” என ராஜா சொல்ல மற்றவர்களும் “எங்க ஊருக்கு?” எனக் கேட்டு வைக்க “எல்லார் ஊருக்கும் வரேன்…” என்றிருந்தான் கார்த்திக்.

முகம் விகசிக்க மகிழ்ச்சியோடு அத்தனை உரையாடல்களையும் கேட்டிருந்தவள் அவர்களது அடுத்தக் கேள்வி கேட்கவும், அவர்களுக்கு கார்த்தில் பதில் சொல்ல வேண்டாமென்றுச் சொல்லி அழைக்க வேண்டி தனது அலைபேசியை தேட சுசித்ரா அதனை கைப்பற்றி இருந்தாள். தான் எழுந்துச் சென்று கார்த்திக் அறைக்குச் சென்றுச் சொல்லவா? எனப் புறப்பட்டவளை சுசித்ரா முறைக்கவும் அமர்ந்தாள்.

“எங்கண்ணிய முதல் தடவை பார்த்தப்ப என்ன நினைச்சீங்கண்ணா?” என கார்த்திக்கிடம் கேட்டிருந்தது ராஜாதான்.

அந்த கேள்விக்காகத்தான் மீரா பதறியதும்…. தங்கையின் முறைப்பில் அமர்ந்தவளோ ‘அவனது தனிமை போக்கத்தானே மற்றவர்களை அங்கே அனுப்பியது… இப்போது போய் இதைப் பேசாதே அதைப் பேசாதே என இவள் சொல்லிக் கொடுத்து கார்த்திக் பேச அவனென்ன சிறுகுழந்தையா?’ எனத் தோன்ற மற்றவர்கள் போலவே அவளது காதுகளும் அவனது பதிலைக் கேட்க காத்திருக்க தயங்கியவன் சொன்னான்,

“உங்கண்ணியை முதல் நாள் பார்த்ததும் ஐயோ இத்தனை நாள் வேஸ்ட் செஞ்சுட்டோமே?”னு இருந்தது என்றிருந்தான்.

அந்த குறும்புப் பட்டாளம் அவனது பதிலுக்கு “வாவ்வ்வ்” சொல்லி ஓய்ந்தது.

“அக்காக்கிட்ட இதே கேள்வியை கேட்டுட்டு வருவோமா?” ஒரு வாண்டு கேட்க,

“எதுக்கு உங்க அக்கா என்னை கழுவி ஊத்தவா?” என்றான் கார்த்திக்… சிரித்து ஓய்ந்தனர். இங்கே கேட்டுக் கொண்டு இருந்த இருவர் முகத்திலும் முறுவல்…

காதுகளை சம்பாசணைக்கு கொடுக்க மீராவின் கையை யாரோ பிடித்து தூக்கியதெல்லாம் சட்டென்று மீராவிற்கே புரியவில்லை.ஆனால், அந்த அதிகாலை நேரத்தில், தங்கள் அருகில் கேட்ட அந்த நாராசமான சப்தத்தில் இருவரும் அலைபேசியின் இயர் போன் கணைப்பை துண்டித்து விட்டு என்னவென்று பார்த்தனர்.

மீராவின் மோதிர விரலைப் பற்றிக் கொண்டுதான் அலறிக் கொண்டு இருந்தாள் அனிதா.

அனிதா மீராவின் மாமன் மகள், ராஜா ஒரு மாமன் மகன் என்றால் இவள் மற்றொரு மாமன் மகள். திருமணமாகி இரு குழந்தைகளின் தாய்தான் அனிதா. ஊரின் பிரசிடெண்ட் வீட்டு மருமகள், வசதியான குடும்பத்தில் வாக்கப் பட்டவள் என்பதில் அவளுக்கு மிகுந்த பெருமிதம்.

மீராவின் திருமண விபரங்கள் சொன்னதும் அவர்கள் குடும்பத்தினர் மீரா மற்றும் அவளது குடும்பத்தினரிடம் அதெப்படி வேற்று இன மணமகனுக்கு பெண்ணைக் கட்டிக் கொடுக்கலாம்? என அதிகமாய் கரித்துக் கொட்டி இருந்தாலும், ‘அப்படி எந்த ஊர் ராஜாவை கட்டப் போகிறாளென பார்ப்போமே?’ என அத்தை மகளின் பவிசைப் பார்க்கவெனவே அவள் வந்திருந்தாள்.

பொதுவாக தங்கம் உறவினர்கள் எல்லாரிடமும் பொறுத்துப் போகின்றவர். ‘என்றோ ஒரு நாள் வந்துச் செல்லுகின்றவர்களிடம் எதற்குப் பிரச்சனை?’ என்று அமைதியாக இருப்பார்.

தனது வயதில் இருப்பவள் தான் சிறுவயதில் திருமணம் செய்து குழந்தைக் குட்டி என இருக்கையில் தான் திருமணம் செய்யாமல் வேலை வேலை என்று சுதந்திரமாக இருந்தது ஒரு பக்கம் என்றால்… இப்போதோ காதல் திருமணம் என்றாக, அனிதா தான் வந்த நாள் முதலாக அத்தை வீட்டினரிடம் மனக்கசடெல்லாம் கொட்டியவண்ணம் திரிந்தாள். நலம் விசாரித்த மீராவிடம் அவளது புகுந்த வீட்டைக் குறித்து விசாரித்த போது தனது பேச்சினூடே,

“நல்ல வேளை உனக்கு மாமனார் மாமியார் தொல்லைங்க இல்லை, நாத்தனார் கொழுந்தனில்லை” எனவும் பெரியவர்கள் இறந்தது கூட நல்லதற்குத்தான் எனச் சொன்னவள் மீது மீராவிற்கு கோபம் வந்திருந்தாலும் அமைதியாக கடந்திருந்தாள். அவளுக்கு இருந்த ஏகப்பட்ட சிந்தனைகளில் என்ன நடக்கின்றதென்றே முதலில் அவளுக்குப் புரிந்து இருக்கவில்லை.

‘இப்போது தன் கையை பிடித்துக் கொண்டு அவள் கத்துவானேன்?’ மகளின் அலறல் கேட்டு அனிதாவின் அம்மா வரவும் அனிதா மீராவின் கையை… விரலில் இருந்த மோதிரத்தை காண்பித்து…

“வைரம் மா, சுத்த வைரம் எப்படியும் இரண்டு இலட்ச ரூபா இருக்கும்” என்றாளவள். மீராவுக்கோ இந்த மோதிரத்துக்கா இந்த கூப்பாடு?’ என்றிருந்தது.

கார்த்திக்கை சென்று சந்தித்து வந்த பின்னர் அவனது மனநிலை உணர்ந்து அவனை ஓய்வெடுக்கச் சொல்லி அவள் வந்திருந்தாலும் அவளோ ஒய்வெடுக்காமல் குடும்பத்தில்… மற்றும் சின்னவர்களுடன் பேசி கார்த்திக்குக்கு துணையாக அத்தனை பேரையும் ஒன்று சேர்த்த வேலைகளில் தன் தங்கைகளிடம் ஏன் அம்மாவிடம் கூட அவள் அந்த மோதிரத்தை காண்பிக்க நினைவு இருக்கவில்லையே?

இது என்னவெனக் கேள்விப் பார்வையோடு தன்னைப் பார்த்து நின்ற தங்கையிடம் “கார்த்திக் போட்டு விட்டாங்கடா” என்றாள் இவள். இன்னும் மீராவின் கையை விடாமல் தாயும் மகளும் விவாதிக்க விதியே என மீரா அமர்ந்திருந்தாள்.

‘என்னமோ நகைக் கடையில் திருடிட்டு இருந்தவளை பிடிச்சது மாதிரி அம்மாவும் பொண்ணும்’ என எரிச்சல் மீதூர சுசித்ரா அக்காவின் கையை அனிதாவிடமிருந்து மீட்டாள்.

“அதுக்கு ஏன் அண்ணி இப்படி கத்துறீங்க? சட்டுன்னு கத்தவும் நாங்க பயந்திட்டோம்” என்றாள்.

“மோதிரம் ரொம்ப அழகா இருந்ததா? அதான் ஆசையில்..ஹி ஹி” என சமாளித்தாள் அனிதா.

“ஆமா, ரொம்ப அழகா இருக்கும்மா… கொஞ்சம் கழட்டிக் காட்டேன்” என்றது அனிதாவின் அம்மாவே தான். சும்மாவே வீட்டில் வந்து திரும்பிப் போகும் போது பல பொருட்களை தன் பையில் போட்டுக் கொண்டு எடுத்துக் கிட்டேன் தங்கம் என தகவல் தெரிவிப்பவரல்லவா?

“அது டைட்டா இருக்குங்க மாமி கழட்ட வரலை” என்றாள் சுசித்ரா.

எத்தனையோ பிரயத்தனங்கள் செய்தும் மோதிரத்தை தொட்டுத் தடவிப் பார்க்கும் அல்ப ஆசை நிறைவேற்ற முடியாமல் அறையை விட்டு இருவரும் வேளியேற அனிதாவிற்கு ஆயாசமாக இருந்தது.

மாப்பிள்ளை எப்படி இருக்கிறாரென பார்க்க காலையில் இருந்து அவள் காத்திருந்த போது பெரியவர்களோடு பேசிக் கொண்டு திடகாத்திரமாய் ஆண்மையாய் நின்று இருந்த கார்த்திக்கை பார்த்த போதே இவளுக்குள்ளாக உள்ளுக்குள் பொசுங்க ஆரம்பித்து இருந்தது. இப்போது இந்த மோதிரம் வேறு?… கொடுத்து வைத்த மகராசி… பொருமிக் கொண்டே சென்றாளவள்.

அடுத்து அம்மா வந்தார் “என்ன மோதிரம்?” மகளிடம் கேட்டுப் பார்த்துச் சென்றார். ஒவ்வொருவராக வந்து பார்த்துச் செல்ல தலையில் கை வைக்காத குறையாக அமர்ந்திருந்தவளை வாசலில் நின்று பார்த்தான் கார்த்திக்…. கூடவே சித்ராவும்.

“இரண்டு பேரும் திருட்டுத்தனம்… எங்களுக்குத் தெரியாமல் மோதிரம்லாம் மாத்திட்டு…” பொருமினாள் சித்ரா.

“வாங்க மேடம்… மாப்பிள்ளை வீட்டுக்கு பதில் சொல்ல நாங்க கடமைப் பட்டிருக்கிறோம்” என சித்ராவை அழைத்து வந்த சுசி.

“உங்க வீட்டு மாப்பிள்ளை எங்க வீட்டு பொண்ணுக்கு நடு ராத்திரில இந்த மோதிரம் போட்டு இப்படி ஊரே எங்கக்காவை எக்ஸிபிஷன் மாதிரி பார்க்க வச்சுட்டார்… கொஞ்சம் தட்டிக் கேளுங்க…” எனவும் சித்ரா கார்த்திக்கை திரும்பி பார்த்தாள். நால்வரும் ஒருவரை மற்றவர் பார்க்க பக்கென சிரித்து விட்டிருந்தனர்.

கதவை அடைத்து நின்ற கார்த்திக்கை இடித்துக் கொண்டு வந்தது ஒரு உருவம், “ஏப்பா தம்பி கொஞ்சம் தள்ளி நிக்கக் கூடாது?”

இவர்களது தூரத்து சொந்தம் தான் அவர்.

“புதுப்பொண்ணு அழகான ஒரு மோதிரம் போட்டிருக்காமே… எங்க அந்த டிசைன் எப்படி இருக்குன்னு பார்ப்போம்?” என்றதும் ஒருவரை மற்றவர் பார்க்க சிரிப்போடே தன் கையை அவருக்கு நீட்டினாள் மீரா.

“ஒரே நாளில உலக பேமஸ் எங்க மாமா… சூப்பர் மாமா சூப்பர்”

சித்ரா புகழ்ந்துக் கொண்டே “வாங்க மாமா இவங்களுக்குத்தான் மேக்கப் செய்யத் தெரியுமா? நான் உங்களுக்குச் செய்யறேன் பாருங்க மேக்கப்…ம்ம்” என அழைத்துச் செல்ல…

“மாமா கையை வச்சா அது ராங்கா போனதில்ல” காரிடாரில் அவளது பாடல் ஒலித்தது.

“ஏ அது ராஜா கையை வச்சா…” யாரோ திருத்தம் சொல்ல… “எங்கூர்ல நாங்க இப்படித்தான் பாடுவோம்.. என்ன புரியுதா?” அலட்டல் குறையாமல் நடைபெற மணப்பெண்ணும் மணமகனும் குறிப்பிட்ட நேரத்தில் மணமேடையில் வந்தமர்ந்தனர்.

முகமெல்லாம் புன்னகை, அகமெல்லாம் மலர்வு அவர்களது அன்பு பந்தத்திற்கு ஒரு அங்கீகாரம். குழுமி இருந்தவர்கள் முன்பாக அவர்கள் ஆசிகளோடு மாங்கல்யம் அணிவித்து மனைவியாக்கிக் கொண்டான். அதனை ஏற்று அவள் அவனை கணவனாக்கிக் கொண்டாள்… என்னே மகிழ்வு!

அடுத்தடுத்து செய்ய வேண்டியவைகளை பெரியவர்கள் சொல்ல, இவர்கள் செய்யவென இருக்க அந்த பரபரப்பில் இவனது உள்ளங்கையை பற்றி அழைத்தாளவள்.

“என்னடா?” என்னமோவென அவன் எண்ணி இருக்க,

“இந்த மோதிரம் வைரமா?” எனக் கேட்டாள்…ஆமென தலையசைத்தவனிடம் “எதற்கு?” என இவள் பார்க்க அவள் காதோரம் குனிந்து…

“வைரத்துக்கு வைரம்தானே அழகா இருக்கும்?!” எனச் சொன்னான்… புரிந்தும் புரியாமலும் இவள் விழிக்க அவளை கேமராமேன் பக்கமாக அவன் திருப்பினான்.

இவர்களது பாவனைகள் அங்கு புகைப்படங்களாக பதிவாகிக் கொண்டு இருந்தன… இருவரது அன்னியோன்யத்தைக் கண்ட அனிதா போன்ற மற்றும் அனிதா உட்பட பலருக்கும் நெஞ்செரிச்சல் மிகுந்தது என்னவோ உண்மை.

கார்த்திக் முழு நேரமும் கண்ணாடி அணிந்தவண்ணமே இருந்தான்… காலை மற்றும் மதிய நேர உணவு நேரங்கள் முடிந்து பெரும்பாலானோர் அது வரையிலும் வந்து மணமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களையும் பரிசுக்களையும் கொடுத்துச் சென்று இருந்தனர். தனது கோரிக்கைக்கு கணவன் செவி சாய்க்கவில்லை என்றதும் அப்பாவிற்கு தூது விட்டாள் மகள்.

“என்னமா மீரா?” என்றவராக மனோகர் வரவும் மகளின் கோரிக்கைக்கு இணங்கி வசதியான இடம் பார்க்கச் சென்றார். “இப்ப எதுக்கு மாமாவை சிரமப் படுத்துற?” என்றான் கார்த்திக்.

“அதெல்லாம் சிரமமில்லை எங்கப்பா பார்த்துக்குவாங்க” என கெத்துக் காட்டியவளை புன்னகைத்து பார்த்திருந்தான். அவள் கூறியது போலவே அவள் அப்பா அடுத்த பத்து நிமிடத்தில் மகளின் கோரிக்கையை உடனடியாக செயல்படுத்தி இருந்தார் . அப்பாக்கள் அப்பாக்கள் தான் அல்லவோ?

எல்லா புகைப்படங்களிலும் கார்த்திக் கண்ணாடியோடு இருக்க அனைவர் முன்பும் அவன் கண்ணாடியை கழற்றப் போவதில்லை என்றறிந்தவளுக்கு அன்றைய தினம் அவனோடு தனியாக கண்ணாடி அணியாதவண்ணம் திருமணப் புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்பது அவளது விருப்பம். அதற்கு இசையாமல் தவிர்த்துக் கொண்டு இருந்தானவன்…ஆனால் அவள் விட்டால் தானே?

அதே ஹாலின் பின் பக்கம் குட்டியாக ஒரு பூங்கா இருக்க அங்கு மணமக்களும் புகைப்படக் குழுவும் இடம் பெயர்ந்தனர்.

தனது ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் அத்தனைக் காதலைத் தேக்கி அவள் அவனைப் பார்க்க அவனது பதில் புன்முறுவலை புகைப்படக்கருவி உள்வாங்கிக் கொண்டன.

அவனது தோளில் சாய்ந்து, அவனோடு கைகள் கோர்த்து என அவள் அத்தனை விதமாய் கணவனோடு புகைப்படங்கள் எடுக்க… அங்கே கார்த்திக்கோ மீரா எதிர்பாராத நேரம் சட்டென அவள் கன்னத்தில் முத்தமிட்டு, அவளை அலேக்காக தூக்கி என அந்த புகைப்படங்களை இன்னுமாய் சுவாரஸ்யப் படுத்தினான்.

அவர்களது இனிய நினைவுகள் புகைப்படங்களாய் அமைய …க்ளிக் க்ளிக் க்ளிக்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here