மனதோரம் உந்தன் நினைவுகள்_21_ஜான்சி

0
286

Manathoram Unthan NinaivukaL_Epi 21_Jansi

அத்தியாயம் 21

நானும் அவளும்

நானும் அவளும்

உயிரும் உடம்பும்

நரம்பும் யாழும்

பூவும் மணமும்

அவளும் நானும்

தேனும் இனிப்பும்

அவளும் நானும்

சிரிப்பும் மகிழ்வும்.

(பாரதிதாசன் கவிதையில் இருந்து)

மனோகரும் தங்கமும் தங்கள் மகளின் திருமணத்தை மிகப் பிரமாதமாகவே அசத்தி இருந்தனர். ஹாலில் இருந்து மதிய உணவு நேரம் கழிந்து வீட்டுக்கு அவர்கள் வந்துச் சேர மாலை நான்கரை மணி ஆகிவிட்டிருந்தது.

புதுமண மக்கள் வீட்டிற்கு வந்த பின்னர் செய்ய வேண்டிய பல முறைகள் இருந்தன. பெரும்பான்மையான உறவினர்கள் ஹாலில் இருந்த போதே விடைப் பெற்று சென்று இருக்க, நெருக்கமான உறவுகளும் நட்புக்களும் மட்டுமே வீட்டில் இருந்தனர்.

திருமணம் முடிந்த பின்னர் தம்பதிகளாக பெண்ணின் வீட்டிற்கு வரும் முதலாவது மறுவீடு என அழைக்கப்படும் அன்றைய தினம் மணமக்களை மணமகளின் தங்கை வீட்டுக்குள் வரவிடாமல் தடுத்து நிற்பதுவும் மணமகன் பரிசு கொடுத்த பின்னரே உள்ளே அனுமதிப்பதுமான அந்த சின்ன விளையாட்டு நிகழ்வில் சுசித்ரா கார்த்திக்கின் வழியை மறித்து நின்றாள்.

தமக்கை தன்னை கார்த்திக்கின் தங்கை எனச் சொன்னதில் இருந்து அதை பின்பற்றி அவன் அருகிலேயே மாப்பிள்ளை வீட்டுக்காரியாக நின்ற சித்ராவை கார்த்திக் தன் எதிரில் அழைத்து நிற்கச் சொன்னான். இரட்டையர்கள் அந்த ஒரே மாதிரியான வெவ்வேறு நிற தாவணியில் மிக அழகாக இருந்தனர்.

ஏற்கெனவே ராஜாவிடம் தான் கொடுத்து வைத்திருந்த பைகளை கேட்டு வாங்கி இருவருக்கும் அவரவர் பார்சல்களைக் கொடுத்தான். மனைவியின் தங்கைகளுக்கு பட்டுப் புடவை கொடுக்க வேண்டுமென்பது முறையாம்.

பரிசு கிடைத்ததும் இவர்கள் வழிவிட்டு அனுமதித்தனர்.மணமக்கள் வீட்டினுள்ளேச் சென்றனர். கார்த்திக்கும் மீராவும் வீட்டில் வந்தமர்ந்ததும் உறவினர்களோடு கூட தங்கம் அவர்களுக்கு பாலும், பழமும் கொடுத்தார்.

சித்ரா மற்றும் சுசித்ரா தத்தம் பார்சல் பிரிக்கும் வேலையில் மும்முரமாக இருந்தனர்.அவர்கள் இருவரையும் சுற்றி வாண்டுகள் பலரும் நின்று வேடிக்கைப் பார்த்தனர். அந்த பையினுள் ஆளுக்கொரு நிறத்தில் மிக அழகான பட்டுப்புடவையும் அவரவருக்குப் பிடித்த இனிப்பு வகைகள் மற்றும் பெரிய சாக்லேட்டுகளும் இருந்தன.

“மாமா வாவ்…” என இருவரும் அவனிடம் வந்து நின்றனர். அக்காவிடமும் சேலையை காட்டி மகிழ்ந்தனர்.

“சேலை அழகா இருக்கு யார் சாய்ஸ் மாமா?” சித்ரா கேட்க,

“சாக்லேட்லாம் பார்த்தும் தெரியலையா? அக்கா தான்” என்றாள் சுசி…

“எப்படி?” எனக் கேட்க

“போன் பேசுறப்ப தான்” என மீராவிடமிருந்து பதில் வந்தது.

“பரவால்ல நீங்க பேசும் போது எங்களை பற்றியும் பேசுவீங்களா? ஆச்சரியமா இருக்கே.” என்ற சுசியின் கன்னத்தை மீரா திருகினாள்.

“ம்ம்ம்… பேசாம மீராண்ணிக்கு தங்கச்சியா பொறந்திருக்கலாம் போல” ராஜா பெருமூச்செறிந்தான். அவன் புலம்பியதை கேட்ட கார்த்திக்,

“இங்க யாரோ மீராவை கல்யாணம் செஞ்சுக்கிற ஐடியால இருந்தாங்களாமே?” என யோசிப்பது போல பாவனை செய்தான்.

“என்ன இருந்தாலும் நான் தான் மீராண்ணிக்கு முறைப்பையன் ஆனாலும், உங்களுக்கு என் முறைப்பொண்ண விட்டுக் கொடுத்ததுக்கு இப்படி ஒரு பாக்கெட் சாக்லேட் இல்லைன்னாலும் கூட கொஞ்சமே கொஞ்சம் கொடுத்திருக்கலாம்” மறுபடியும் புலம்பினான்.

“டே கண்ணு வைக்காத, ஆளுக்கொரு சாக்லேட் தரோம் வாங்கிட்டு ஓடிரு” சுசித்ரா சித்ராவின் பையில் இருந்து ஒரு சாக்லேட் எடுத்து தன்னிடம் இருந்ததில் ஒன்றோடு அவனுக்கு சேர்த்துக் கொடுத்தாள். சித்ரா கலவரமாகி “அது என் சாக்லேட்” என்று அலறிய நேரத்தில், ராஜா அங்கிருந்து மாயமாகி இருந்தான். தனது சாக்லேட்டை ராஜாவுக்கு எடுத்துக் கொடுத்த சுசியை அவள் முறைத்ததில் அங்கே அனல் பறந்தது.

சற்று நேரம் கழித்து, சித்ரா வீட்டில் இருந்த அனைவருக்கும் சாக்லேட் வாங்கி கொடுத்துக் கொண்டு இருந்தாள். கார்த்திக்கிடம் வந்தவள் அவனது வங்கி அட்டையை திருப்பிக் கொடுத்தாள். அதனை சித்ராவிடம் வாங்க மறுத்தவன் மனோகரை அழைத்து எதையோ விளக்கினான். அந்த அட்டையை சித்ராவிடமே வைத்துக் கொள்ளச் சொன்னான்.

அந்த நேரம் உள்ளறைக்குச் சென்று வந்திருந்த மீரா அவனிடம் என்னவென்றுக் கேட்டாள்.

“சித்ராவிடம் சில வேலைகள் சொன்னேன்” என்றான்.

‘மேடம் முழுவதுமே மாப்பிள்ள வீடா ஆயாச்சு அக்கா, பயங்கர பொறுப்பு” சித்ரா குறித்து சுசி சொன்னாள். சித்ரா சுசித்ரா இருவருக்குள்ளும் வேறுபாடுகள் தோன்றி விடக் கூடாதென நினைத்தானோ என்னமோ “நீங்க இரண்டு பேரும் எனக்கு ஒன்னுதான் பாப்பா” என்றான் கார்த்திக்.

“சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் மாமா…” என புன்னகைத்தவள், “நாங்க என்ன வேலைச் சொன்னாலும் தப்பிச்சுருவா… இப்ப நீங்கச் சொன்னதும் பொறுப்பா செய்றா இல்லையா, அதைச் சொன்னேன்.” என்றாள்.

கேட்டுக் கொண்டிருந்த மீராவுக்கு தங்கையை கார்த்திக்கிற்கு உதவியாக விட்டது மிக நல்லதாகிற்று எனத் தோன்றியது. திருமணத்திற்கு வருவதாகச் சொல்லி இருந்த அவனது ஓரிரு நட்புக்களும் கூட ஹைதராபாதில் ரிசப்ஷனில் பார்த்துக் கொள்ளலாம் என வராமல் இருந்து விட்டனர்.

அடுத்தடுத்த நாட்களில் வெவ்வேறு இடங்களில் நிகழ்வுகள் நிகழவிருக்க, மிக முக்கியமான உறவுகளின்றி யாராக இருந்தாலும் யோசிப்பார்கள்தானே? அவனுக்கு இங்கே தேவையானவைகள் எல்லாவற்றையும் முடிந்த வரையில் சித்ராவே பார்த்துக் கொண்டாள்.

இங்கே இவர்கள் இருபத்து சொச்சம் நபர்களும் அதிகாலை விமானத்தில் புறப்பட ஆயத்தமாக இருந்தனர். எல்லா செலவையும் தான் பார்த்துக் கொள்வதாக கார்த்திக்கின் தாத்தா சொல்லி இருந்தார். உறவுகளிடம் எல்லாம் கேட்டு இத்தனை நபர்களும் திருமண ரிசப்ஷனுக்கும் அதற்கடுத்து ஊர் சுற்றவும் சம்மதித்து இருந்தனர்.

வீட்டிற்கு வந்ததும் அனைவருக்கும் டீயும் வடையும் பரிமாறப்பட்டு இருந்தது. இரவு உணவும் வெளியே ஆர்டர் செய்து இருந்தனர். நள்ளிரவே விமான நிலையத்திற்கு புறப்பட வேண்டி இருந்ததால் அங்கங்கே ஒவ்வொரு அறையாக கிடைத்த இடத்தில் எல்லாம் உறவினர்கள் ஓய்வெடுக்க ஆரம்பித்தனர். மற்றவர்கள் ஓய்வாக இருந்தாலும் தங்கத்திற்கு மட்டுமே ஓயாத ஒழியாத வேலைகள் இருந்தன.

மணமக்கள் ஓய்வெடுக்க மீராவின் பெற்றோர்களின் அறை வசதிப் படுத்தப்பட்டு இருந்தது. தாயை ஓய்வெடுக்கச் சொல்லச் சென்ற மீராவை தங்கம் கார்த்திக்கை கவனிக்கும் படிச் சொல்லவும், அவள் அவனைப் பார்க்க வந்தாள்.

“வாங்க கார்த்திக்” கணவனை அந்த அறைக்கு அழைத்துச் சென்றவள் அவன் தூய்மைப் படுத்திக் கொண்டு வரும் முன் அறையை ஒதுக்கி வைத்து, அங்கிருந்த ஏசியை தட்டி விட்டாள்.

“எதுவும் ஹெல்ப் செய்யவா மீரா?”

“வேண்டாம்” தலையசைத்தவள் உங்க பை இங்க தான் இருக்கு துணி மாத்திக்கிட்டு ஓய்வு எடுக்கிறீங்களா? எனக் கேட்டாள். அவன் கழற்றி இருந்த சூட் ஜாக்கெட்டை அதன் கவரில் ஹேங்கரில் போட்டு காற்றாட தொங்க விட்டவள் அவன் துணி மாற்ற புறப்படவும் வெளி வாசல் நோக்கிப் போய் திரும்பி நின்றாள். உடை மாற்றியவன் இவள் தோளில் கை வைக்கவும் புன்னகைத்து திரும்பினாள்.

அவன் இப்போது இலகுவான டிஷர்ட் மற்றும் ட்ராக்கில் இருந்தான். வேர்த்து விறுவிறுத்து நின்றவனை ஏசி குளிர்வித்துக் கொண்டு இருந்தது. அவன் ஏற்கெனவே தான் கழற்றிய மற்ற துணிகளையும் ஹேங்கரில் மாட்டி தொங்கவிட்டிருந்தான்.

எல்லாவற்றையும் சரி பார்த்தவள் “இரவு தூங்கக் கிடைக்காது, கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க கார்த்திக்” என்றாள். அறையின் கதவை சாற்றி வைத்துக் கொண்டே அத்தனையும் நடைபெற்றிருந்தது.

கார்த்திக் அவளிடம், “அப்படின்னா உனக்கும் களைப்பா இருக்கும் இல்ல? நீயும் வா” என துணைக்கு அழைத்தான்.

“அச்சோ அது சரிப்பட்டு வராது கார்த்திக், இந்நேரம் நாம தனி அறையில் இருந்தால் யாரும் தப்பா நினைப்பாங்க” என்றாள்.

இதுவே அவன் சொந்தங்கள் இருந்தால் அவள் அவனை அவர்களோடு அறையில் விட்டுவிட்டதோடு அவளது வேலைகள் முடிந்து விட்டிருக்கும். மீராவின் வீட்டில் வேறு ஆண்பிள்ளைகள் இருந்தாலும் கூட பொறுப்பை ஒப்படைத்து விட்டிருக்கலாம். இங்கோ எல்லாம் ஏறுக்கு மாறாக இருக்க, கார்த்திக்கிற்கு உதவ வேண்டி மீராவையே தங்கம் அனுப்ப வேண்டியதாயிற்று.

வாசலுக்கு வெளியே ஒரு பார்வை வைத்தவளாக நின்றவளை அவன் கதவிற்கு பின் சுவரில் சரித்து அவள் மேல் படர்ந்தான்.

“அதுதான் தாலிக் கட்டிட்டேனில்ல… இன்னுமா தப்பா நினைப்பாங்க?” கேட்டவனுக்கு பதில் சொல்ல இவளால் இயலவில்லை. அவள் பதட்டம் புரிந்து “என்னமா?” என்றான்.

என்னமோ தோன்ற அவள் அவனை இறுக்க அணைத்துக் கொண்டாள்.

“நான்… நாங்க உங்களை நல்லா கவனிச்சுக்கிறோம் தானே? எதையும் குறை வைக்கலைதானே?”

“என்னதிது?”

“வீடு வசதியா இல்லை, இடம் போதலையோன்னு ஒரு மாதிரி தோணுது. உங்களுக்கு ஒரு மாதிரி கசகசன்னு இருக்கா?” எனக் கேட்டாள்.

“ச்சே… இல்லடா”

“ம்ம்… அப்ப சரி” நிதானமானாள்.

“ஏன் இவ்வளவு பதட்டமா இருக்க?” கேட்டவனுக்கு பதிலாக புன்னகைக்க முயன்றாள்.

“ஏ மீரும்மா இது நம்ம வீடு, எத்தனை முறை வந்து போயிருக்கேன். இன்னிக்கு ஏன் வித்தியாசமா நடந்துக்கிற? மாப்பிள்ளை ஆனதும் எனக்கு கொம்பு முளைச்சுருச்சா?” என்றான். பதில் பேசாமல் நின்றவளை இறுக்க அணைத்துக் கொண்டான்.

“என்னாச்சு மீரு?”

“…”

“சொல்லு… சொல்லுங்கிறேன்ல?”

“…”

“உனக்கு அங்க வர விருப்பமில்லையா? வேணும்னா நான் சென்னைக்கு ஷிப்ட் ஆகிக்கவா?’ கேட்டவனை அணைத்து விசும்பினாள்.

“ச்சு பைத்தியம்… திருமணம் ஆச்சுன்னா அம்மா வீட்டை அப்படியே விட்டுட்டு போகணும்னு இல்லை.வேணும்னா சொல்லு, நான் இங்கே எல்லாம் ஷிப்ட் செஞ்சுக்கிறேன்.”

“இல்லை, நான் மேனேஜ் செஞ்சுப்பேன்…என்னமோ ஒரு மாதிரி இருந்துச்சா… அழுததும் சரியாப் போச்சு” என்றவளின் தலையை பிடித்து ஆட்டியவன்,

“உனக்கு அழறது ஒரு வேலை” என்றான்.

“…”

“சரிம்மா உனக்கு என்னச் செய்யணும்னு தோணுதோ அதை செய்.நான் எதுவும் செய்யணும்னு இருந்தால் சொல்லு செய்றேன்.. ஆனால், உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காத”, என்றான்.

“நீங்க ரெஸ்ட் எடுங்க, நான் அம்மாக்கு ஏதாச்சும் உதவி வேணுமான்னு பார்க்குறேன்”

“அப்படியா? சரி” என்றவன் அவளை இறுக்கி அணைத்து முத்தமிட்டு விலகினான்.

“இப்ப போ” என அனுமதித்தான். கார்த்திக்கிற்கு படுத்ததும் கண் சொக்கியது.

மீராவை பொருத்த வரையில் மணப்பெண் என்பதெல்லாம் பெயரளவுக்குத்தான், அங்கே அவள்  பார்த்துப் பார்த்துச் செய்ய ஏராளமான வேலைகள் இருந்தன. இரவு எட்டு மணியளவில் வீடு மீண்டும் சுறுசுறுப்பானது. கார்த்திக் மறுபடி உடைமாற்றி வந்து மனைவியோடு அமர்ந்துக் கொண்டான்.

இரவு உணவு முடிந்ததும் மற்றவர்கள் பயணத்திற்காக ஆயத்தமாக தூங்கி எழுந்திருந்ததால் ஹாலில் அரட்டைக் கச்சேரி ஓடிக் கொண்டு இருந்தது. களைப்பின் மிகுதியில் மனோகரும் தங்கமும் மகள்களின் அறையில் இருந்த படுக்கைகளில் தலைசாய்ந்துக் கொண்டனர். சித்ராவும், சுசித்ராவும் கூட அங்கங்கே ஹாலில் படுத்து தூங்கினர்.

அந்த அறையில் கார்த்திக் மீராவின் மடியில் படுத்திருந்தான். “கொஞ்சமாவது தூங்கி எழும்பு மீரா” என்றவனிடம்,

“யாருக்கும் எதுவும் தேவைன்னா?”

“நான் பார்த்துக்கிறேன், நீ படு”

வலியுறுத்தி மீராவை அவன் படுக்க வைத்ததில் சில மணி நேர தூக்கம் முடிந்து எழும்பியவள் உடை மாற்றினாள். அவனும் உடை மாற்றி வந்தான், அவர்கள் அடுத்த பயணத்திற்கு ஆயத்தமானார்கள்.

“மீரா”

அறையின் கதவின் வெளியே தங்கத்தின் குரல் கேட்க, “வாங்கம்மா” என இவள் பதில் கொடுக்கவும் தாய் தந்தை தங்கைகள் என அனைவரும் உள்ளே வந்து நின்றனர். அறைக் கதவை ஒருக்களித்து வைத்தவர் மகளை அணைத்து உச்சி முகர்ந்தார்.

“மாப்பிள்ளை எங்க பொண்ணை நீங்கதான் கண்கலங்காம பார்த்துக்கணும்” சொன்னவர் என்ன முயன்றும் விம்மி விட்டிருந்தார்.

“அத்தய்யா…” அவரது கையை பற்றியவன் “அவளை நல்லா பார்த்துக்குவேன்” என்றான்.

மனோகர் மகளை அணைத்து அவளது கையை அவன் கையில் பிடித்துக் கொடுத்தார். அவரோடு தங்கமும் இணைய, மனைவி சொன்னதையே அவரும் சொன்னார். அதுவும் ஒரு சம்பிரதாயம் தான். பொதுவாக மாமியாரிடம் இப்படிச் சொல்லி ஒப்படைப்பது குடும்ப வழக்கம். அவளுக்கோ அங்கே எல்லாம் அவன் மட்டும் தானே?

“நிச்சயமா மாமய்யா…நான் மீராவை நல்லா பார்த்துக்குவேன்” என்றான்.

ஒரு போதும் அதிகமாய் பேசாத தங்கம் “ஒரு மாதிரி பாசக்கிறுக்கி இவ, மனசில இருக்கிறதை வாய் விட்டுச் சொல்ல மாட்டா… நீங்கதான் கவனிச்சுக்கணும்” புலம்பினார்.

“உங்களை மனசுல நினைச்சு உருகிட்டே போயிருந்தா… கொஞ்ச நாள் கவனிக்காம விட்ருந்தா காணாம போயிருந்திருப்பா. உங்க மேல அவளுக்கு உசிரு.இப்ப எங்க எல்லாரையும் விட்டுட்டு போறோம்னு ஒரு வருத்தம். நீங்கதான் அவளை கவனிச்சுக்கணும்” சொன்னவரிடம் தலையசைத்தான் அவன்.

‘வேலை வேலை என அலைந்தாலும் அம்மாவின் கவனம் எல்லாவிடமும் இருக்கும் போலும்’ தலைக் குனிந்தே இருந்தாலும் மீராவின் கவனம் அம்மாவின் வார்த்தைகளில் இருந்தது.

தங்கம் மகளை தோளோடு அணைத்து, தொண்டையை செருமிக் கொண்டவராக “இதுக்கெல்லாம் மனம் கலங்கக் கூடாது… மாப்பிள்ளையை நீ பார்த்துக்கணும், அவரும் உன்னை நல்லா பார்த்துக்குவார். நீ அந்த வீட்டு மருமகள், அவங்க தாத்தாவையும் நீதான் நல்லா கவனிக்கணும் அதை நினைவில் வச்சுக்க… நீ இங்கேயும் மூத்த புள்ள, அங்கயும் ஒத்தைக்கொண்ணா எல்லா பொறுப்பும் உனக்குத்தான். அதெல்லாம் நீ நல்லா செய்வ என்னமா?” மகளின் உச்சி முகர்ந்தார்.

“என் புள்ளைங்க சந்தோஷமா நீடூழி வாழணும்” இருவரையும் நெட்டி முறித்தவர் அமைதியாக வெளியேறினார். மனோகரும் பின்னோடு வெளியேற, சின்னவர்கள் இருவரும் அங்கிருந்தனர்.

இப்போது சித்ரா கார்த்திக்கின் கை பிடித்து தமக்கையிடம் ஒப்படைத்தாள். “எங்க மாமாவை திட்டக் கூடாது, அடிக்கக் கூடாது. சண்டைப் போடாம பாசமா நல்லா பார்த்துக்கணும் அக்கா…” என்றவள் பேச்சில் மற்றவர்களுக்கு புன்னகை வர கார்த்திக் சித்ராவின் தலையை பிடித்து ஆட்டி “வாலு” என்றான்.

“லவ் யூக்கா” என இருவரும் தமக்கையை கட்டியணைத்து முத்தமிட்டனர். அந்த அழகான காட்சியை பார்த்து இரசித்து நின்றான் மீராவின் கார்த்திக்.

அவளும் நானும்

வேரும் மரமும்

ஆளும் நிழலும்

அசைவும் நடிப்பும்

அணியும் பணிவும்

அவளும் நானும்

திங்களும் குளிரும்

அவளும் நானும்

கதிரும் ஒளியும்

(பாரதி தாசன் கவிதையில் இருந்து…).

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here