மனதோரம் உந்தன் நினைவுகள்_22_ஜான்சி

0
299

Manathoram Unthan NinaivukaL_Epi 22_Jansi

அத்தியாயம் 22

காரணம்

பொன்வானம்

குயிலிசை கானம்

காற்று மென் தழுவல்

இன்றைக்கென்ன புதிதாய்

என்றே நான் வியக்கையில்,

காரணம் அறிந்தேன்.

எந்தன் அருகினில் நீ!

அனைவரையும் வீட்டிலிருந்து புறப்பட வைத்து விமான நிலையத்திற்கு அழைத்து வர ஒரு வழியாகி இருந்தது. சித்ரா ஒவ்வொருவருக்கும் தேவையானதை பார்த்துப் பார்த்துச் செய்ய, ‘சின்னவளுக்கு அதிக சுமையை ஏற்றி விட்டோமோ?’ என கார்த்திக்கிற்கு கவலையானது.

கார்த்திக்கின் முகபாவனைகளை கண்டுக் கொண்டாளோ என்னமோ சுசித்ராவும் தங்கையுடன் சேர்ந்து வேலைகளை பகிர்ந்துக் கொண்டாள். இப்போது நிலைமை பரவாயில்லை என்பது போலாயிற்று.

விமானத்திற்கு காத்துக் கொண்டிருந்த இடைவெளியில் மீராவை உறவினர்கள் ஒவ்வொருவரும் தத்தம் அருகில் அழைத்து அமர வைத்துப் பேசிக் கொண்டிருக்க, கார்த்திக்கின் அருகில் அமர்ந்தாள் சுசித்ரா.

“என் வேலைலாம் உங்க தலையில போட்டுட்டேன் இல்ல?” என கார்த்திக் கேட்க,

“மாமா, ரொம்பவெல்லாம் கவலைப் படக்கூடாது. எல்லாம் நாங்க பார்த்துப்போம். எனி திங்க் ஃபார் எங்க அக்கா அண்ட் மாமா” எனவும் வாஞ்சையாய் சிரித்தான்.

“ஆனால் முன்ன சொன்னதுதான் இப்பவும், எங்க அக்காவை நல்லா பார்த்துக்கணும்.”

“இன்னுமா என்னை நம்பல சின்னி?”

“அதெல்லாம் உங்களை நம்பாமலா? ஆனாலும் நாங்க பொண்ணு வீட்டுக்காரங்க அப்பப்ப வீட்டு மாப்பிள்ளையை மிரட்டி வைப்போம்ல?”

“அது சரி” மறுபடியும் அவனிடம் சிரிப்பே…

“மாமா, எங்க அக்கா ரொம்ப சென்சிடிவ்… திடீர்னு அவ செய்யறது உங்களுக்கு மண்டையை பிச்சுக்கிறது போல ஒன்னும் புரியாமல் இருந்தால் எனக்கு அதாவது எனக்கு மட்டும்…. மெசேஜ் இல்லைனா கால் பண்ணுங்க… புரியுதா?” என்றவளுக்கு ஆமோதித்து அமைதியாக கேட்டிருந்தான்.

தொடர்ந்து “உங்க மொபைல்ல வாட்சப் இல்லியா?” கேட்டவளிடம் இல்லையென அவன் தலையசைக்க… அவனை அலைபேசியில் வாட்சப் செயலியை தரவிறக்கம் செய்ய வைத்து மீரா, கார்த்திக், சித்ரா & சுசித்ரா என இவர்கள் நால்வருக்குமான க்ரூப் ஒன்றை உருவாக்கவும் வைத்தாள்.

“இனி குழுவாக எதுவும் தகவல் அனுப்ப உபயோகமா இருக்கும்ல?” எனக் கேட்டவளுக்கு

‘ம்ம், சரிதான்” என்றான்.

அடுத்த நிமிடம் மனைவியும் சித்ராவும் தனது அருகில் வந்து நிற்பதைக் காணவும்,

“ஒரு வாட்சப் அக்கவுண்ட் தொடங்குறது தப்பா பாப்பா?” என்றான் சுசித்ராவிடம்

“இல்லையே” பச்சைப் பிள்ளைப் போல சுசித்ரா தலையாட்டினாள்.

“இதுக்கெல்லாம் நம்மளைச் சுத்தி எக்ஸிபிசன் போல கூட்டம் கூடுது பார்த்தியா?”

“ஆமாம் எக்ஸிபிசன் தான், உங்க வலப்பக்கம் சேலையில் ஒரு லேடி… அதுதான் ஒரு ஆண்டி நிக்குறதை பார்த்தீங்கல்ல… அது ஒரு எக்ஸிபிசன் தான்” எனப் போட்டுக் கொடுத்தாள்.

மீராவின் மூக்கு சிகப்பாய் மிளகாய் நிறத்திற்கு மாறுவதை இரசனையாய் இருவரும் பார்க்க,

“ஏ சுசு நீ நம்ம அக்காவ ஆண்டின்னா சொன்ன?” சித்ராவின் குரல் சற்று உயர்ந்தது.

“கட்டியாச்சு தாலி, முடிஞ்சது சோலி… இனி நம்ம அக்கா ஆண்டி ஆகிட்டா சித்ரா … நம்ம அக்கா ஆண்டி ஆகிட்டா. நீ நம்பலன்னாலும் இதுதான் நெசம்” அழுவதைப் போல வராத கண்ணீரை சுண்டி விட்டு, மூக்கை உறிஞ்சினாள். உடனேயே தற்காப்பிற்காக…

“மாமா நீங்க தான் இவங்க இரண்டு பேர் கிட்டயும் இருந்து என்னைக் காப்பாத்தணும். ப்ளீஸ் மாமா ப்ளீஸ்.” எனவும் சொல்லி வைத்தாள்.

அவளது நடிப்பில் “போதும் ஓவர் ஆக்டிங்க்.” சொல்லி மீரா சிரித்தாள்.

“அக்கா இவளை இரண்டு அடி போடு” அவள் கையை பிடித்து சுசித்ராவை சும்மாவேணும் அடிக்க வைத்த பின்னர் தான் சித்ரா அமைதியானாள்.

“அம்மாடியோ பயமால்ல இருக்கு” என்றான் கார்த்திக்.

“ஏன்?”

“உன்னை நல்லா பார்த்துக்கணுமாம்…இப்பதான் பெரிய மேடம் மிரட்டுனாங்க. இப்ப உன்னை கிண்டலடிக்கவும் இந்த சின்ன பாப்பா அவளை அடிக்குறா. இதெல்லாம் பார்த்தால் எனக்கு பயமாதானே இருக்கும்.” என்றான்.

தங்கைகளை எண்ணி பெருமிதமாக புன்னகைத்த வண்ணம், கணவன் அருகில் மீரா அமர்ந்தாள்…

“நான் சொன்னப்ப இவங்க சோசியல் மீடியால அக்கவுண்ட்லாம் வேணாம்னு சொன்னாங்க சுசி” தங்கையிடம் அவனைக் குறித்து குறை படித்தாள் அவன் மனைவி.

அதன் பின்னர் கொஞ்ச நேரம் நால்வரும் அரட்டை அடித்துக் கொண்டு இருக்கையில் விமானத்திற்கான அறிவிப்பு வரவும் புறப்பட்டனர். அதிகாலை ஐந்தேகால் மணிக்கான இண்டிகோ விமானம் அது, 06:35 மணிக்கு ஹைதராபாத் போய் சேரும்.

ஹைதராபாத் இறங்கியதும் கார்த்திக் மற்றும் மீரா தனியே தங்கள் வீட்டிற்குச் செல்வதாகவும் மற்றவர்கள் ஹோட்டல் அறைகளுக்குச் செல்வதாகவும் ஏற்கெனவே முடிவாகி இருந்தது. எப்படியும் ஒன்றரை முதல் இரண்டு மணி நேர பயணம். அனைவரும் கார்த்திக் வீட்டுக்குச் சென்று மறுபடி தத்தம் ஹோட்டல் அறைகளுக்குச் செல்ல வேண்டுமானால் களைப்பாகி விடும். எனவே, அனைவரும் சாயங்காலம் ரிசப்ஷனில் சந்திக்கலாமெனவும், அடுத்த நாள் சாயங்காலம் வீட்டிற்குச் செல்லலாமெனவும் முடிவு செய்து இருந்தனர். மணமக்களுக்கும் தனிமை கொடுக்க வேண்டுமல்லவா?

விமானம் தமிழகத்தினின்று தெலுங்கானாவிற்கு பறந்துக் கொண்டு இருந்தது. அருகில் தூங்கிக் கொண்டிருந்தவளை கார்த்திக் ஆழ்ந்து கவனித்திருந்தான். இப்போது அவள் முகம் நிச்சலமாக, இத்தனை நேரம் இருந்த சஞ்சலங்கள் களைந்த முகமாக இருந்தது.

அதுவரையிலும் எப்படியோ? இப்போதோ தனது மனம் கவர்ந்தவளை தனது உறவாக்கி தனது ஊருக்கே அழைத்துச் செல்லும் அந்த நேரம் அவனுக்கு தன் மகிழ்ச்சியை உலகத்திற்கு உரக்க கத்திச் சொல்ல வேண்டும் போலத் தோன்றியது.

வாழ்க்கையை விபரம் புரியாத வயதிலும் அதன் போக்கில் ஏற்றுக் கொண்டவன்தான். இத்தனைக் காலத்தில் அவன் எதற்காகவும் இத்தனை ஆசைப்பட்டதில்லை. தான் முதல்முறை விரும்பிய உறவை தேடி அடைந்துக் கொண்டது இது ஒரு அலாதி அனுபவம்.

அவன் என்னதான் மீராவின் தந்தை மூலமாக பேசி அத்தனையாக பெண் பார்க்கும் ஏற்பாடுகள் செய்து சென்றிருந்தாலும், அவளது வாய்மொழியாக சம்மதம் என பதில் கிடைக்கும் வரையிலும் அவன் மனதிற்குள்ளாக அத்தனை போராட்டங்கள் இருந்தன.

மீரா தனக்காக, தன் மீதான காதலுக்காக தனக்குள்ளே போராடிக் கொண்டு இருந்ததை அறிந்ததும் எப்படி உணர்ந்தான் எனச் சொல்லவே முடியாது. உலகின் உச்சியில் ஏறி அமர்ந்ததான மகிழ்ச்சியும் பெருமிதமுமான உணர்வுகள் அவை.

அவள் தன்னை உயிருக்குயிராக நேசித்ததை அறிந்ததும், சில மணித்துளிகள் முன்பாக அவள் தன்னை எண்ணி மருகியதை அவளின் தாய் சொல்லிக் கேட்டதுவும் இவை தந்த ஆனந்தங்கள் ஒரு பக்கமெனில்… கடந்த மாதங்களில் அவன் அவளை பாதுகாத்ததை விடவும், அவள் அவனை பாதுகாத்ததுதான் அதிகம் என்பதையும் உணர்ந்தான்.

அவனை அவனது தனிமை உணர்வுகளை அவள் கேடயமாக நின்று எதிர்த்து நின்றது. அவனை எதற்கும் மருக விடாமல், அவள் பார்த்துக் கொண்டது.  அவள் தனக்கு கிடைத்த திரவியம் என்றே எண்ணினான்.

இந்த திருமணம் நிகழ்ந்த விதம்… தனது சொந்தங்களை இவன் பக்கம் நிற்க வைத்தது… ஒவ்வொன்றாய் அவள் செய்தவைகளை எண்ண, எண்ண அவையெல்லாம் நிகழ்த்தி விட்டு இப்போது ஒன்றுமறியாதவள் போல உறங்கிக் கொண்டு இருப்பவளைப் பார்க்கப் பார்க்க அவனது உடலில் புதிதாக உதிரம் ஊற்றெடுப்பதைப் போலொரு பரவசம்.

‘அவளை இழுத்து இறுக்கி அணைத்துக் கொள்ளலாமா?’ என அவன் உடலும் உள்ளமும் பரபரத்தது. முதலிரவும் அதுவுமாக மனைவி அருகில் இருந்தும் தூரமாய்… ம்ஹீம் பெருமூச்செழுந்தது. தூக்கத்தில் இருந்தவள் தனது இருக்கையின் மறுபக்கம் சாய, அவளை படுக்க வைக்கும் பாவனையில் அவன் அவளின் தோள்களைச் சுற்றிக் கைகளைப் போட்டு தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.

‘என் மனைவி என் விருப்பம்…யார் என்னை கேட்கப் போகின்றார்கள்?’ என எண்ணியவனின் மனதிற்கு இதமோ இதம்.

அவளைச் சுற்றியே மனம் வட்டமிட சுசித்ரா சொன்னது நினைவில் வந்தது. “அக்கா ரொம்ப சென்சிடிவ்” ஆம் அது என்னமோ நிஜம்தானே? … தான் அவளை வெகுவாக நெருங்க இவனது நடவடிக்கைகள் அவளை பயமுறுத்தி இருக்க வேண்டும். தனது உணர்வுப் போராட்டங்களூடே தனது மனதில் இருப்பதை வெளியில் சொல்லாமல், பிறருக்கு மறைத்து தன்னைத் தானே வெல்லப் போராடுவது என… பார்க்கப் போனால் உணர்வு பூர்வமானவர்கள் எனின் வலிமையற்றவர்கள் அல்லர். அவர்கள் தான் மிகவும் வலிமையானவர்கள் எனச் சொல்ல வேண்டும் போலும்!

விமானத்தின் உள்ளே விளக்குகள் அணைக்கப் பட்டதும், கிடைத்தது வாய்ப்பென்று அவள் கன்னங்களில் அவசரமாய் சில அச்சாரங்கள் கொடுத்தான். முதல் இரவுதான் கை கூடவில்லை… ஒருவேளை அவை இரண்டாம் இரவுக்கான அச்சாரமாக இருக்கக் கூடுமோ?

அவன் முத்தமிட்ட அடுத்த நொடியே, தூக்கத்தில் இருந்தவள் தனது புறங்கையால் கன்னங்களை துடைத்திருந்தாள்.

‘வர வர இவ இப்படித்தான் உன்னை அவமானப்படுத்துரா…, முன் தினம் கூட நீ முத்தமிட்டதும் எச்சிப் படுத்தாதே? என உன்னிடம் சொன்னாள் அல்லவா?’ என அவன் மனம் அவனிடம் அவளை போட்டுக் கொடுத்தது.

கோபப்பட வேண்டியவனோ இருட்டில் எங்கே தெரியப் போகின்றது? எனும் எண்ணத்தில் அவள் கையை எடுத்து தன் முகத்தில் வைத்துக் கொண்டு அவளின் ஒவ்வொரு விரலுக்கும், விரலின் ஒவ்வொரு கணுவுக்கும் ஒவ்வொரு முத்தம் வைத்தான். ‘இதுதான் உன் கோபமா?’ என அவன் மனம் அவனிடம் கோபித்துக் கொண்டு பின் வாங்கியது.

சற்று நேரத்தில் மீரா அவனது கழுத்தோரமாக தலை சாய்த்தாள், அவளது ஒவ்வொரு அசைவுக்கும், ஸ்பரிசத்திற்கும், மூச்சுக் காற்றிற்கும் இவனது அணுக்கள் ஒவ்வொன்றும் சிலிர்த்தெழுந்தன. இவனது உணர்வுகளோ அவளை ஆக்ரோசமாய் ஆலிங்கணம் செய்யச் சொல்லி பேயாட்டம் போட்டன. எல்லா நேரமும் நல்லவனாக இருப்பது வெகு சிரமம் என அவன் அப்போது உணர்ந்துக் கொண்டான்.

அவனை இன்னும் அதிகமாக சோதிக்காமல் விமானம் ஹைதராபாதிற்கு வந்துச் சேர்ந்தது. தூங்கிக் கொண்டு இருந்த மனைவியை தட்டி எழுப்பினான். சில நாட்கள் பயணம்தானென்பதால் மற்றவர்களிடம் இருந்த பைகளை பேக்கேஜில் போட தேவை ஏற்படவில்லை.மீராவின் இரண்டு பெரிய பெட்டிகளுக்காக அவர்கள் அங்கே காத்திருக்க நேர்ந்தது.

ஹோட்டலில் இருந்து மற்றவர்கள் எல்லாரையும் அழைத்துச் செல்ல கார்கள் வந்துவிட்டனவா? என அறிந்துக் கொள்ள மனைவியை அங்கே விட்டுச் சென்றவன் தங்கம் மனோகர் மற்றும் சிறியவர்கள் இருவரிடமும் விபரம் தெரிவித்து திரும்ப வந்தான். அங்கே புதிய இடம் வந்த மகிழ்ச்சியில் ராஜாவும் அவன் பெற்றோரும் ஏதோ கதை பேசிய வண்ணம் நின்றிருந்தனர். அவர்களிடம் மட்டுமல்லாது எல்லாரிடமும் விசாரித்தவன் மாலை எத்தனை மணிக்கு புறப்பட்டு ரிசப்சனுக்கு வரவேண்டுமென விபரங்களை தெரிவித்தான்.

“அண்ணே ஃப்ளைட்ல வந்தது சூப்பரா இருந்தது” ராஜா வந்துச் சொல்லவும்… “நல்லா சுத்திப் பாருங்க, எப்பனாலும் என்ன உதவி தேவைனாலும் எனக்கு போன் செய்யணும் சரியா? எல்லாரையும் கவனிச்சுக்க” என்றான்.ஆளாளுக்கு பத்திரம் சொல்லி அனுப்பி வைத்தான்.

வீட்டினர், உறவினர்கள் எல்லாரும் மீராவிடமும் விடைப்பெற்றுச் செல்ல, இப்போது இருவரும் பெட்டிகளை எதிர்பார்த்து நின்றனர். அவைகள் வந்ததும் அவன் அவற்றை எடுத்துக் கொண்டான். தான் பிடித்துக் கொள்வதாகச் சொல்லியும் அவளை பெட்டியை எடுக்க அவன் அனுமதிக்கவில்லை.

அவள் கையில் அந்த பெரிய ஹேண்ட் பேக் வைத்திருந்தாள். பதிவுச் செய்த கார் வந்ததுவும் லக்கேஜை பத்திரமாக ஏற்றி, அவளை  வண்டியில் ஏறி அமர விட்டு அவனும் ஏறி அமர்ந்தான். சற்று தூரத்தில் இருந்த உணவகத்தில் தங்களுக்கான காலை உணவையும் குடி நீரையும் வாங்கி பத்திரப்படுத்தினான்.

வாகனம் வீட்டை நோக்கி வேகமாய் பயணப்பட்டுக் கொண்டு இருந்தது. அப்பப்பா அந்த பொழுது புலர்ந்த வேளையில் அந்த ஆதவன் முகத்தில் ஒளிர்வு அதிகமா இல்லை நம் கார்த்திக் முகத்திலா? எனக் கேட்டால் அன்று ஆதவன் தோற்று விடக் கூடும். கார்த்திக் பெருமிதமும், மகிழ்ச்சியுமாக தகதகத்தான். மீரா அவனது புன்னகையை வெகு ஆசையாக பார்த்திருந்தாள். அவள் பார்வையில் சற்று வெட்கமுற்றவன், “ஏமிரா?” எனக் கேட்டான்.

“உங்களை ஆஃபீஸ்ல இரண்டாம் நாள் பார்த்தேன்ல… அனு கேபின்ல… அப்ப இவ்வளவு அழகா சிரிச்சிருந்தீங்க… உங்க புன்னகைப் பார்த்து நான் அன்னிக்கு அப்படியே ஸ்டன் ஆகிருந்தேன்… அவ்வளவு அழகா இருக்கு” மனதை மறையாமல் சொன்னாள்.

“இதை இப்பதான் சொல்லணுமா?” பற்களைக் கடித்தான்.

“கேட்டீங்க சொன்னேன்… அதுக்கென்ன?” என்றாள். உடனேயே, அவன் முகபாவனைகளில் அவனது மனவேட்கையை அறிந்துக் கொள்ளவும், “ஏன் கோபம் வருது? எச்சிப் பண்ணனுமா?” கேட்டதோடு நில்லாமல் தனது வாயில் கை வைத்து கிளுக்கெனச் சிரிக்கவும் செய்தாள்.

“பொறுடி பொறு உன்ன எச்சிப் பண்ணுறேன்?” அவள் கேட்கும் வண்ணம் அடங்காத தாபத்தில் புலம்பினான். அந்நேரம் வேறு ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அவளது இடக்கையைப் பற்றியவன் உள்ளங்கையின் சதைப்பற்றான பெருவிரல் பகுதியை வருடிப் பார்த்ததோடு நில்லாமல், சற்றுக் குனிந்து கடித்து வைத்தான்… அந்நொடியில் அந்த வருடலிலும் பற்கடியிலும் அவள் சிலிர்த்தடங்கினாள்.

பிடித்த கையை விடாமல் வருடிக் கொண்டு இருக்க, இவள் பேச்சற்றவளாகி இருந்தாள்.அப்போது அவன் தன் அலைபேசியின் அழைப்பு ஒலியில் கவனம் சிதறிய நேரம் அவள் தன் கரத்தை மீட்டுக் கொண்டாள்.

கழுத்தை திருப்பி கணவனைப் பார்க்கவே அவ்வளவுக் கூச்சம். அவள் மனம் திதிம் திதிம் என இன்னும் மத்தளம் வாசித்துக் கொண்டு இருந்தது. எனினும், அவனை திரும்பிப் பார்த்தாள். ஏற்கெனவே, கம்பீரமானவன் தான் ஆனால், இன்று எப்போதும் இல்லாத அழகோடு, மிகுந்த பொலிவோடு இருந்தான். அலைபேசியில் தன் தங்கைகளோடு பேசுகிறான் போலும், அவனது ஒவ்வொரு அசைவிலும் பேச்சிலும் அத்தனை வாஞ்சை தெரித்தது. அவன் உறவுகளோடு சேர்ந்து வளர்ந்திராதவன் என சத்தியம் செய்தாலும் நம்பத்தான் முடியாது.

அலுவலகத்தின் அத்தனை பெண்களுக்கும் அண்ணகாருவாக இருந்தவனை நினைவு கூர்ந்தாள். இப்போதே இந்நேரமே அவனை இறுக்க அணைத்து மூச்சு முட்ட முத்தமிட்டு தன் காதலை அவனுக்குச் சொல்ல வேண்டும் போல அவளுக்குத் தோன்றியது.

அவன் பேசி முடித்து, “எல்லாருமே பத்திரமா ஹோட்டல் போய் சேர்ந்திட்டாங்களாம் மீரு” எனச் சொல்லி திரும்ப, அவனை அவனது மனைவியின் கண்கள் முழுதாய் கவ்விக் கொண்டன.

மாயங்கள்

என்னென்ன மாயங்கள்

செய்கின்றாய் அன்பே?!

உன் பார்வையால்

உன் சிரிப்பால்

என்னென்ன மாயங்கள் செய்கின்றாய்?

துடிக்கும் இதயம் தனையே

துடிக்கத் துடிக்க எடுத்து,

உன் பாதத்திற்கு சமர்ப்பிக்க

நினைக்க வைக்கின்றாய்…

என்னென்ன மாயங்கள்

செய்கின்றாய் என் அன்பே?!

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here