மனதோரம் உந்தன் நினைவுகள்_23_ஜான்சி

0
491

அத்தியாயம் 23

கொஞ்சம் பொறு

உன் முன்பாக நிராயுதபாணியாக நானிருக்க

யுத்தக் களத்தின் போராளியைப் போல,

மலர் விழி அம்புகளால்,

மேகப்பொதி போன்ற

மென் கரங்களின் ஸ்பரிசங்களால்

எனை தாக்கிய வண்ணம்- என்

எதிரில் நிற்கின்றாய் நீ!

நம் மணமாலைகளின் நறுமணங்களை விடவும்,

உந்தன் நெருக்கமும், ஸ்பரிசங்களும் உணர்த்தும்

உந்தன் நறுமணங்கள் வெகுவாய் மயக்குகின்றன.

ஓ இவையும் கூட- உந்தன்

மற்றொரு தாக்குதல் முறையாமோ?

எனது கைகளை கட்டிப் போட்ட மனதின் கட்டுப்பாடுகளை

பரிகசித்த வண்ணம் – வெகு

உரிமையாய் உந்தன் கைகள் என்னை

தழுவிக் கொண்டிருக்கின்றன.

என்னை உன்மத்தம் கொண்டவனாக

மாற்றிக் கொண்டிருப்பது அறியாமலேயே- உந்தன்

இதழ் பிரித்து புன்னகை அம்புகள் எய்தி- எனை

கொஞ்சம் கொஞ்சமாய்

கொய்து கொண்டிருக்கின்றாய் நீ!

உந்தன் ஸ்பரிசங்களுக்கான

எந்தன் பதில்கள் காத்திருக்கின்றன…

கொஞ்சம் பொறு.

உந்தன் அத்துமீறல்கள் அனைத்திற்கும்

தண்டனைகள் காத்திருக்கின்றன…

கொஞ்சம் பொறு.

உந்தன் குளிர் வதனத்தால் எனைத் தீண்டித் தீண்டி

நெருப்பாய் மாற்றியதால் உண்டான சூறாவளி

உனை தாக்க காத்துக் கொண்டிருக்கின்றது.

கொஞ்சம் பொறு.

தனிமை கிட்டட்டும்.

முத்த யுத்தத்திற்கான

ஆயத்தங்கள் காத்திருக்கின்றன…

கொஞ்சம் பொறு.

நீ…

கொஞ்சம் பொறு.

கார்த்திக் அலைபேசியில் பேசி முடித்து, “எல்லாருமே பத்திரமா ஹோட்டல் போய் சேர்ந்திட்டாங்களாம் மீரு” எனச் சொல்லி திரும்ப, அவனது மனைவியின் கண்கள் முழுதாய் அவனைக் கவ்விக் கொண்டிருந்தன. பயணித்துக் கொண்டிருந்த அந்த வாடகைக் காரில் அவளுக்கு, அவளது பார்வைக்கு என்ன பதில் கொடுப்பானவன்? அவள் கரத்தைப் பற்றியவன் தன் கையோடு இணைத்து நெரித்துப் பிடித்தான். அவளது பார்வைகள் அவனை நொடிக்கொருதரம் தூண்டி விட்டுக் கொண்டிருந்தன. கார்த்திக் ‘வீடு எப்போது வரும்?’ என தவிக்க ஆரம்பித்திருந்தான்.

இதோ வீட்டருகே இவர்கள் வந்து விட்டனரே? கார் குறிப்பிட்ட வீட்டின் கேட்டருகே அவளை இறங்கச் சொல்லியவன் வீட்டின் சாவியை கேட்டான். ஏற்கெனவே ஆன்லைனில் பணப்பரிவர்த்தனை நடந்து முடிந்திருக்க இவன் வீட்டு கேட்டை திறக்கவும், டிரைவரிடம் உதவி கேட்க கார்த்திக்கும் அவருமாய் கேட்டினுள்ளே லக்கேஜ்களை இறக்கி வைத்தனர். வண்டி அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டது. மீரா வீட்டை நின்று நிதானமாகப் பார்த்தாள்.

கார்கள் நிற்க இடம் விட்டு கட்டப்பட்ட இரண்டடுக்கு வில்லா வகை வீடு அது. வெகு கம்பீரமாகவும், பணக்காரக் களையுடனும் இருந்தது அது. முதல் மாடியில் இருந்த அந்த பால்கனி அத்தனை அழகு. அங்கே சுற்றும் முற்றும் இருந்த வீடுகள் எல்லாமே வில்லாக்கள்தான், அத்தனை விதவிதமான பெரிய அழகான வீடுகள். மீரா இத்தனை பிரம்மாண்டமான வீட்டை எதிர்பார்த்து இருக்கவில்லை என்பதால் மிரண்டு போய்தான் நின்றாள்.

“இவ்வளவு பெரிய வீடா கார்த்திக்? என்ன விலை இருக்கும்?”

“இரண்டு சி (கோடி)” என்றான்.

“கையில இந்த மோதிரம் 2 எல் (லட்சம்) இதை வச்சுட்டு சுத்தவே பயந்திட்டு இருந்தேன். இப்ப பார்த்தால் நேற்றில இருந்து, இன்னிக்கு வரை இடுப்பில 2 சி யை தூக்கிட்டு அலைஞ்சிருக்கேன்… அம்மாடியோ?” மிரண்டவளைப் பார்த்து சிரித்தான்.

“ஓனரம்மா இப்படி பயப்பட்டா எப்படி? முதலில் கதவை திறக்கிறேன்” என அவன் முன்னேச் செல்ல,

“கதவை திறங்க ஆனால், உள்ளே போக வேணாம் ஒரே ஒரு நிமிசம் பொறுங்க சரியா?” என்றதும் அவள் சொன்னபடி கதவை திறந்து வாயிலில் நிற்க அவளது பையில் இருந்து முதலில் தட்டு அதற்கப்புறம் சில பொட்டலங்கள் எடுத்து அவள் வைத்தாள்.

‘இதென்னடா அலிபாபா குகை போல இவள் பைக்குள்ள நிறைய பொருளை வச்சு இருந்திருக்கிறளே?’ வியப்பாக கவனித்து நின்றான் கார்த்திக்.

அந்த தாம்பாளத் தட்டில் தண்ணீர் சேர்த்து மஞ்சளும், சுண்ணாம்பும் கலந்தாள், வெத்தலை ஒன்றை எடுத்து வைத்தவள் அதில் சூடம் ஏற்றிக் கொளுத்த, அது பற்றிக் கொண்டது. புது வீடு புகுமுன் ஆரத்தி எடுக்க முன்பே எல்லாவற்றையும் ஏற்பாட்டோடு செய்திருக்கிறாள் எனப் புரிந்ததும் புன்னகைத்தவன்.

“இங்கே தா” என்று தட்டை அவள் கையினின்று வாங்கி அவளிடம் விபரம் கேட்டு, அவளுக்கு முதலில் ஆரத்தி சுற்றினான்… அந்த ஒளியில் அவள் சிரிப்பில் தேவதையாய் மிளிர்ந்தாள். “இதோ இப்ப நான்” என்றவள் கணவனை வாசல் பார்க்க நிற்க வைத்து அவனுக்கு ஆரத்தி சுற்றினாள். அவனிடமே திசைக் கேட்டு வடக்குப் பக்கம் தண்ணீரை ஊற்றி வந்தாள்.

லக்கேஜ் அப்புறம் எடுத்துக்கலாம், நீ முதலில் என் கூட வா” அவள் கை பிடித்து இருவரும் வீட்டிற்குள் ஒன்று போலவே நுழைந்தனர்.

வீட்டின் பிரம்மாண்டம் அவளை மிரட்ட அவனை சட்டென கட்டிக் கொண்டாளவள்.

‘கொஞ்சம் சின்னதா வாங்கிருக்கலாம்ல?”

நீதானே மூணு பிள்ளைங்க பெத்துக்கப் போறேன்னு சொன்ன? அப்ப பெரிசாதானே வாங்கணும்.” சொன்னவன் அணைத்துக் கொண்டு நின்றவளை மனதில்லாமல் விலக்கி விட்டு வாசலுக்குச் சென்றான். வீட்டின் கேட்டை பூட்டி, பெட்டிகளை உள்ளேக் கொண்டு வைத்து விட்டு வீட்டின் உள்கதவையும் பூட்டினான்.

அத்தனை பெரிய வீட்டில் அவளும், கார்த்திக்கும் மட்டும் தனியாக… நினைக்கவே ஏதோ போலிருக்க சட்டென்று எண்ணங்கள் மாறி தவித்து நின்றவளை,

“வா, வா உள்ளே வா” என கார்த்திக் அழைத்தான்.

தயங்கியே நுழைந்தாள், அந்த பெரிய அறையும், கிங்க் சைஸ் படுக்கையும் பிரம்மாண்டமாக இருந்தது.

“குளிச்சுட்டு வா, சாப்பிடலாம்.” சொன்னவன் அவளைக் கேட்டு பெட்டிகளுள் ஒன்றை திறந்து வைத்தான்.

தேவையான இலகு உடையை எடுத்தவள் குளியலறைக்குச் செல்ல, வீட்டின் ஒவ்வொரு இடமும் பிரமிக்க வைக்கும் அழகான அலங்காரமாக இருந்தது. ‘இதெல்லாம் பழக தனக்கு நாளாகும்” மனதிற்குள்ளாகச் சொல்லிக் கொண்டாள்.

குளித்து புத்துணர்ச்சியோடு ஸ்கர்ட் டாப்பில் வந்தவளை அவனது பார்வை இரசனையாக வருடியது. வழக்கம் போல டிஷர்ட் ட்ராக்கில் இருந்தான் அவன்.

“இராத்திரி முழுக்க முழிச்சு இருந்ததால செம்ம பசி எனக்கு” என சொல்லிக் கொண்டு டைனிங்க் டேபிளில் தனக்கு எடுத்து வைத்துக் கொண்டு இருந்தவன் அவளை இழுத்து அமர வைத்தான்.

இருவரும் அமைதியாக உண்டு முடிக்க வாட்சப்பில் சித்ரா மற்றும் சுசித்ரா இருவரும் தாங்கள் உண்ட உணவு வகைகளை எல்லாம் புகைப்படமாக அனுப்பி இருந்தனர். “இராத்திரி தூக்கம் இல்லை, நல்லா தூங்கி எழுந்து ரிசப்சன் வரணும், நாங்க ரொம்ப பிசி மதியம் வரைக்கும் யாரும் போன் செய்ய வேண்டாம்” என DO NOT DISTURB அட்டை ஒன்றை புகைப்படமாக அனுப்பி வைக்க, “சேட்டையை பார்த்தீங்களா?” எனச் சிரிக்க அவனும் அதைப் பார்த்துதான் சிரித்துக் கொண்டு இருந்தான்.

உண்டதும் வீட்டை சுற்றிப் பார்த்தவர்கள் கடைசியாக வந்தது படுக்கை அறைக்குத்தான். சற்று முன் அவள் அவனைப் பார்த்த காதல் பார்வைகள் காணாமல் போய் அவனுடனான தனிமையில் சற்று பயத்துடன் மீரா தடுமாற ஆரம்பித்து இருந்தாள். அருகில் நின்றவனுக்கு அது புரியாமல் இல்லை.

“வா, நல்லா தூங்கி எழுந்தா தான் ரிசப்சனுக்கு ஃப்ரெஷ்ஷா போய் நிக்க முடியும்” என்றபோது அவள் மனதில் ஒரு மலர்வென்றால், தாத்தா நம்ம வீட்டுக்கு வந்திட்டுதான் நம்ம கூடவே ஹாலுக்கு வருவாங்க என்றதும் இன்னொரு மலர்வு. கண்ணாடியாக அவள் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகத்தை கவனமாய் பார்த்து நின்றான் கார்த்திக்.

“அப்பப்ப பார்த்துப் பேசி சும்மா இருக்கிறவனை சீண்டி விட்டுட்டு, இப்ப என் கூட தனியா இருக்க மிரளுறியா? பொறு உன்னை என்னன்னு பார்க்குறேன்.” மனதில் எண்ணிக் கொண்டான்.

படுக்கையில் பட்டும் படாமல் பதவிசாய் அமர்ந்தவளை தூக்கி உள்ளே அமர்த்தியவன் அமர்ந்து தனது செருப்பை கழற்றி விட்டு படுக்கையில் சரிந்தான். அவளையும் இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டான்.

“ரொம்ப யோசிக்காம படுத்து தூங்கு ஒரு மணிக்கெல்லாம் பார்லர்லருந்து வந்திருவாங்க” என்றான்.

“அவ்வளவு சீக்கிரமாவா?”

“ம்ம்”

அவள் தலையை அவனது கரம் வருடிக் கொண்டு இருக்க சற்று நேரம் இருவரும் ஆழ்ந்து தூங்கிவிட்டிருந்தனர்.

பதினோரு மணி அளவில் முதலில் உறக்கம் களைந்து எழுந்தது என்னமோ மீராதான். தாகம் எடுக்க தட்டுத்தடுமாறி டைனிங்க் டேபிள் சென்றவள் அங்கிருந்த தண்ணீர் போத்தல்களுள் ஒன்றை எடுத்து குடித்தாள். சமையலறை சென்று பார்த்தால் அங்கு சுத்தமாக ஒன்றுமில்லை. அட்டை கூட பிரிக்கப் படாமல் வாசிங்க் மெஷின், டிஸ் வாசர், ஓவன் என பலதும் இருந்தது. அவற்றுள் பலவற்றை அவள் முன்பு பயன்படுத்தியதே இல்லை.

“கண்ல பட்டதெல்லாம் வாங்கி குவிச்சிருக்கு பக்கி” கணவனை புகழ்ந்தாள் (?) மீரா.

இன்னும் கூட அவனது பெரிய பெரிய செலவுகளுக்கான பணவரவு குறித்து அவளுக்கு அனுமானமில்லை. அதைக் கேட்டால் அவன் கோபம் கொள்வானோ? எனும் ஒரு தயக்கமும் கூட.

மறுபடி சென்று படுத்தவள் உறங்கிப் போனாள், இரண்டாவது முறை எழுகையில் கார்த்திக் தனது டிஷர்ட்டை கழற்றி எறிந்து இருந்ததை பார்த்தாள். முதல்முறை அவனை அப்படி பார்த்தாலும், அவளால் அவன் மீதிருந்து தனது கண்களை அகற்ற இயலவில்லை, தூங்கிக் கொண்டு தானே இருக்கின்றான் எனும் தைரியத்தில் அவனை தயக்கமின்றி பார்க்க ஆரம்பித்தவள் கண்களில் பட்டது அந்த டாட்டூ.

அவனது இடது மார்பில் இருந்தது அந்த டாட்டூ… Meeru என மிக அழகான நளினமான ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு எழுதி இருக்க அதன் கீழே குட்டியாக ஒரு இதயமும் my life எனும் வார்த்தைகளும் இருந்தன.எப்போது எழுதியதோ ஆனால் அது சமீபத்தியது அல்ல எனப் புரிந்தது,

தன்னை அறியாமல் அதை பார்க்க அவன் மார்பை வருடிப் பார்த்தவள் கையை பிடித்துக் கொண்டானவன். “என்னை சும்மா சும்மா தொடாதன்னு சொன்னேனில்ல” தூக்கத்தில் உளறிய வண்ணம் புரண்டுப் படுத்தான். எதையோ முனகினான் அவனருகே காது வைத்துக் கேட்டுப் பார்த்தாள்.

“கிட்ட வருவ, அப்புறம் தள்ளிப் போவ… உனக்கு வேற வேலை கிடையாது போடி” தூங்கி விட்டிருந்தான். தனது ஒவ்வொரு அசைவையும் அறிகின்றவனை எண்ணி முறுவலோடு எழுந்து புறப்பட்டாள். தாத்தா வரும் முன்பாக சேலைக்கு மாறி இருந்தாள்.

திடீரென பின்னால் இருந்து ஒரு கை நீண்டு அவளை அணைத்து பின்னந்தலையில் முத்தமிட்டு விலகியது. கடந்துச் சென்றவனை பார்த்து நின்றாள். கொட்டாவி விட்டுக் கொண்டே கதவை திறந்தவன் கேட்டின் வெளியே நின்ற நபரிடம் இருந்து பார்சலை வாங்கிக் கொண்டு உள்ளே வந்தான்.

“பசிக்கலையா? வா வா முதல்ல சாப்பிடலாம்.”

பார்சலை வைத்தவன் முகம் கழுவி வருகையில் இரு கைகளையும் மேலே உயர்த்தி நெறித்தான். வைத்த கண் வாங்காமல் தன்னைப் பார்த்தவளை முகம் சுருங்கப் பார்த்தான். மறுபடியும் ஏதோ முணுமுணுப்பு…

உண்டு முடிக்கவும், “தாத்தாக்கு எதுவும் சாப்பிடறதுக்கு வாங்கலியா கார்த்திக்? எதுவும் சமைக்கணுமா?” எனக் கேட்டாள்.

“இல்ல, அவருக்கு சாப்பாட்டுக் கட்டுப்பாடு நிறைய, அவங்க உதவியாளர் அதெல்லாம் பார்த்துப்பாங்க” என்றான்.

“ஓ, தாத்தா எப்ப வருவாங்க?”

“இப்ப வருவாங்க, புறப்பட்டுட்டதா சொன்னாங்க”, என்றான்.

“பார்லர்லருந்து இன்னும் வரலியே?”, மணி இரண்டைத் தொடவிருந்தது.

“வருவாங்க” கேட்டதற்கெல்லாம் ஒவ்வொரு வார்த்தையில் அவன் பதில் சொல்வதை அவள் முதலில் கவனிக்கவில்லை.

வாசலில் சப்தம் கேட்கவும் வாசல் நோக்கி விரைந்தவள் தாழ்ப்பாள் அவளை விட உயரமாக இருக்க, கதவு திறக்க முடியாமல் நிற்கவும் பின்னிருந்து அவளை கார்த்திக் தூக்கிக் கொண்டான். மீரா தான் நின்ற இடத்தினின்று உயர இப்போது கதவின் தாழ்ப்பாள் அவளுக்கு எட்டியது. அவளது  வயிற்றில் அவன் கை படவும் எழுந்த கூச்சத்தில் கிளுக்கிச் சிரித்தவள் அந்த கதவின் தாள் நீக்கினாள். மெதுவாக அவளை இறக்கி விட்டவன் கதவை திறக்க அடுத்து வீட்டின் கேட்டை திறந்து இருவரும் பெரியவரை வரவேற்க நின்றனர்.

அந்த பெரிய காரில் இருந்து பெரியவரது வீல் சேர் முதலில் இறக்கப் பட்டது. அடுத்து ஆஜானுபாகுவான நபர் தாத்தாவை தூக்கி சேரில் வைக்கவும் அந்த நவீன வகை சேர் படிகளில் ஏற இறங்க எல்லாம் வசதியாக இருந்தது. தாத்தா வீட்டிற்குள் வந்திருந்தார்.

தனக்கு இருக்கும் ஒரே ஒரு கணவன் வழிச் சொந்தம் என்பதால் அவரைப் பார்க்க மீரா வெகுவாக காத்திருந்தாள்.

தாத்தாவுடன் இன்னும் இருவரும் இருந்தனர், கார்த்திக் தாத்தாவின் வீல் சேரோடு வீட்டினுள் வர தாத்தாவின் உதவியாளர்கள் ஹாலில் இருந்துக் கொண்டனர். அவர்களை உபசரிக்க வேண்டாமா? என மீரா கேட்க, தேவையில்லை என்பது போல தலையசைத்துக் கொண்டே தாத்தாவுடன் ஏதோ உரையாடிக் கொண்டு இருந்தான். தாத்தாவும் பேரனும் உரையாடியதில் பலதும் இவளுக்கு புரியவில்லை.

“வீட்டைப் பத்தி விபரம் கேட்குறாங்க” அவள் கேளாமலேயே பதில் கொடுத்தான்.. தொடர்ந்து,”தாத்தாவும் வீட்டை இப்பதான் பார்க்குறாங்க, முன்ன வரலை அதனாலத்தான் விபரம் கேட்டாகுது” என்றான்.

கணவன் முகம் சற்று சுருங்கி இருந்ததோ? காலை பார்த்த மலர்ச்சி இல்லையோவென அவள் அப்போதுதான் கவனித்துப் பார்த்து நிற்க அவனது நறுக் சுருக் பதில்கள் அவளை உறுத்தியது. அவனுக்கு தன் மேல் கோபம் என அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது, காரணம் புரியாமல் எல்லாமில்லை.

தாத்தா பேத்தியின் புறம் திரும்பவும், அவரது நலனை விசாரித்து அவரிடம் பேசிக் கொண்டு இருந்தாளவள். சட்டென அவர் கால்மாட்டில் அமர்ந்து பேச ஆரம்பித்து விட்டிருந்தாள். தாத்தா பேரனைப் பார்த்த பார்வை அவனிடம் ஏதோ சொன்னது அவன் முறுவலித்தான்.

“என்னாச்சு?” கேட்டவளுக்கு பதில் சொல்லாமல் அவனும் மறுபுறம் அமர்ந்துக் கொள்ள, அவளது தலையில் தாத்தா கை வைத்து ஆசி கொடுத்தவாறு பேசிக் கொண்டு இருந்தார். தாத்தாவுக்கும் பேத்திக்குமான உரையாடல் நேரம் கார்த்திக் என்ன செய்வதாம்? தன் முன் நீட்டிக் கொண்டிருந்த அவள் கால் பாதங்கள் அவனை ஈர்க்க அதைப் பற்றிக் கொண்டு அவள் மெட்டியோடு விளையாட ஆரம்பித்து இருந்தான்.

முதலில் புரியாமல் என்னமோ? ஏதோவென பயந்து காலை இழுக்கப் பார்க்க அவன் பார்த்த பார்வையில் அடங்கினாள். “இவர் செம டெரர் பீஸால்ல இருக்கார்” கணவனை எண்ணி மிரண்டாள். அவன் முன் போல இயல்பாக பேசாமல் இருந்தது அவளை மிகவும் பாதித்தது.

சற்று நேரம் கழித்து தாத்தா ஓய்வெடுக்க விரும்ப, அவருக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் கார்த்திக் அவரை அழைத்துச் செல்ல அவரது உதவியாளர்கள் அவர் படுக்க உதவி செய்ய வந்திருந்தனர்.

கணவன் பின்னோடு வந்தவள், “கார்த்திக்” தயங்கி அழைக்க, அதே நேரம் அலைபேசி இசைக்க “ம்ம் ம்ம் கமிங்க்” என்றானவன். அவளருகே வந்து அவள் எலும்புகள் நொறுங்கி விடுமோவெனும் போல இறுக்கி அணைத்தவன், “மேக்கப், ரிசப்ஷன் ட்ரஸ் எல்லாம் வந்திருச்சு” என்றான்.

அடுத்தடுத்து நிகழ்ந்தவை அவள் முன்னெப்போதும் கனவில் எண்ணியிராதவை. ஒரு குழுவே அங்கு குழுமி இருந்தது. பிரபல டிசைனர்ஸ் வடிவமைத்த அந்த இளஞ்சிவப்பு நிற லெஹங்கா சோளி அதை அவளுக்கு ஓரிருவர் அணிவிக்க இருபது கிலோவிற்கும் மேலான அந்த லெஹங்காவை சுமக்க அவளுக்கு முதலில் திணறியது.

கையில் இருபக்கமும் தொங்க விடாமல் தாவணி போல அவளது உடையை அணிவித்து இருக்க பொருத்தமான அலங்காரம் காதணிகள், கழுத்தணிகள், கை, கால்கள் என பிரபல நட்சத்திரமெனும் படி அவள் மின்னினாள்.

அத்தனையையும் தூர நின்று இரசித்துக் கொண்டிருந்தவன் ஆஃப் வைட் ஷேர்வானியில் அசத்தலாக இருந்தான். வந்தவர்கள் வேலை முடிந்து புறப்பட கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் எதிர்கொண்டனர்.

கணவனை கண்ணெடுக்காமல் பார்த்தவள் பாராட்டுதலாக கைவிரல்களை குவிக்க புன்னகைத்தான். ஆண்களை அவர்கள் அழகை புகழ்வது தாய் இல்லையெனில் தாரம் தானே? தாயின் பாராட்டுக்கள் எதுவும் நினைவில் இல்லாதிருக்க, மனைவியின் மெச்சுதலை இரசித்துப் பார்த்து நின்றான் கார்த்திக்.

தாத்தா சற்று ஓய்வெடுத்துப் எழும்பி வரவும், தம்பதிகள் வேறு காரில் வர, தாத்தா தன்னுடைய காரில் புறப்பட்டார். அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் ரிசப்சன் வாயிலில் வந்து நின்றது கார். முதலில் காரில் இருந்து இறங்கி கார்த்திக் மனைவிக்கு இறங்க உதவி செய்தான். இவர்களைச் சுற்றி கேமராக்கள் பளிச்சிட்டுக் கொண்டு இருந்தன.

தாய், தந்தை தங்கைகள் உறவினர்கள் அனைவருமே மிக அழகான உடைகளில் மேக்கப்பில் இருக்க, மீரா புன்னகையோடு பார்த்து நகர்ந்தாள். அவ்வப்போது அவளுக்கும் அவனுக்கும் சில மேக்கப் டச்சிங்குகள் செய்யப்பட போட்டோ ஷீட் அமர்க்களப்பட்டது.மெல்லிய இசையும் அலங்காரங்களும் அவ்விடத்தை தேவலோகம் போல உணர வைத்தன என்றால் மிகையில்லை.

அந்த பெரிய கேக் வெட்டி விழாவை மணமக்கள் ஆரம்பிக்க நிக்ழ்வுகள் பலவும் அமர்க்களப்பட ஆரம்பித்தன.

கார்த்திக் கண்ணாடி அணியாமல் அங்கு வெகு இயல்பாக இருந்தான். மீராவின் வீட்டினருக்கு அந்த பெரிய ஹாலும், அதன் அலங்காரங்களும் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிகழ்வுகளும் மிக வியப்பே. அவர்களும் உறவினர்களும் காலையில் ஹோட்டலுக்கு வந்த நேரம் முதலாக மீராவின் புகுந்த வீட்டைக் குறித்து சிலாகிக்க ஆரம்பித்தவர்கள் தான். இன்னும் அவர்கள் வாய்கள் மூடி இருக்கவில்லை.

கார்த்திக்கின் தாத்தாவின் வளமை குறித்து மனோகர் அனுமானித்து இருந்தாலும் இவ்வளவு பிரம்மாண்டமாக தனது பேரனின் திருமண ரிசப்ஷனை அவர் நடத்துவாரென கற்பனை செய்து இருக்கவில்லை.

கார்த்திக்கின் உறவு முறைச் சொந்தங்கள் பலர் வந்து வந்து ரிசப்சனில் மணமக்களுக்கு பரிசு அளித்து விட்டு முன் வரிசையில் இருந்த தாத்தாவிடம் பேசி நகர்ந்தனர். சித்ராவும், சுசித்ராவும் அருகிருக்க பெருமையோடு அவர்களைக் குறித்து மனோகரிடம் தாத்தா பேசினார். மீராவின் குடும்பத்தினர் தன்னருகே இருக்கும் படி பார்த்துக் கொண்டார். தன்னை சந்திக்க வந்தவர்கள் அனைவரையும் அவர்களோடும் அறிமுகப் படுத்தினார்.

அவரது தொழில் ரீதியான பல நட்புக்களும் வந்திருந்து விழாவை சிறப்பித்தனர். தனது பேரனின் திருமணத்தை பெரிய விதத்தில் விளம்பரப் படுத்தி இருந்தார் அவர்.

அப்போது ஏதோ வரவேண்டும் என்பதற்காக வந்தது போல வந்த ஒருவர் ரிசப்சனில் மேடையில் “நீ எல்லாம் எங்களுக்கு ஈடா?” என்பதைப் போல மீராவை முறைத்தபடி வரவும் கார்த்திக் அறிமுகப் படுத்தும் முன்பாகவே வந்தவரது முகச் சாயலில் அவர்தான் கார்த்திக்கின் சித்தப்பாவாக இருக்க வேண்டுமென மீரா புரிந்துக் கொண்டாள். மற்றவர்களிடம் போலவே மணமக்கள் அவரையும் கைக்கூப்பி வரவேற்றனர்.  பூங்கொத்தை அண்ணன் மகனின் கைகளில் கொடுத்தவர் ஒரு சின்ன வாழ்த்தும் சொல்லாமல் நகர்ந்து விட்டார். தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த தகப்பனை அவர் கண்டுக் கொள்ளவும் இல்லை. விறுவிறுவென வந்த வேகத்தில் ஹோட்டலினின்றும் வெளியேறினார்.

“அண்ணகாரு, வதின” அழைத்தவாறு அடுத்து குடும்பத்தோடு வந்து நின்றவன் வேறு யார்? பாஸ்கர்தான்.அவனோடு கூட அலுவலக நட்புக்கள் பலரும் வந்து நிற்க இருவரையும் இணையராகப் பார்த்ததில் அவர்கள் மகிழ்ந்த விதத்தில் தன் சின்ன மாமனாரின் முறைப்பு மீராவின் மனதை விட்டு அகன்று விட்டிருந்தது.

பரிசுகள் ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது என அழைப்பில் குறிப்பிடப்பட்டு இருந்ததால் விதவிதமாய் அழகழகாய் பூங்கொத்துக்கள் வந்துக் கொண்டே இருந்தன. பாஸ்கர் கார்த்திக் கையில் ஏதோ கொடுக்க, கார்த்திக் அவனுக்கு நன்றிச் சொல்லி சில விபரங்கள் கேட்டுக் கொண்டான். ஒவ்வொருவரிடமும் அன்பாய் பேசி ஏராளமான புகைப்படங்கள் எடுத்து அந்த மாலை இனிதாக நகர்ந்திருந்தது.

குடும்பத்தோடு சாப்பாட்டு மேடையில் மணமக்கள் அமர்ந்திருந்து உண்ண ஆரம்பித்து இருந்தனர். விளையாட்டும் சிரிப்புமாக நேரம் கழிந்தது. அடுத்த நாள் தாங்கள் செல்லவிருந்த பிலிம் சிட்டி குறித்து பேசிக் கொண்டு இருந்தனர்.

அனைவரும் விடைபெற தாத்தாவும் களைத்துப் போயிருந்தார் இருவரையும் முகம் வருடி அன்பாகப் பேசி விடைப் பெற்றார். தங்கள் வீட்டிற்கு அடுத்த நாள் வரும்படி உறவினர்கள் அனைவரையும் இவர்கள் அழைத்தனர். அவரவர் இடம் நோக்கி அவர்கள் திரும்பச் செல்ல மணமக்கள் தங்கள் வீட்டை நோக்கி புறப்பட்டனர்.

ஹோட்டல் உதவியாளர்கள் வழிகாட்ட பார்க்கிங்கிற்குச் சென்றவன் அந்த Hyundai Alcazar ரை உற்ற நண்பனைப் போல வருடிக் கொடுத்தான். வா என அழைத்தவன் டிரைவர் சீட்டிற்கு அடுத்த பக்கம் அவளை அமர வைத்து திரும்ப டிரைவர் சீட்டில் அமர்ந்து வாகனத்தை இயக்கினான்.

அவனை இவ்வாறு முன்பொரு முறை கண்டது அவளுக்கு நினைவிற்கு வந்தது. அப்படியானால் அன்று தான் கண்டது கனவில்லை நிஜமென அறிந்தவள் வியப்பாக கணவனை நோக்க, “அதெல்லாம் நல்லா வண்டி ஓட்டுவேன். என் கிட்ட லைசென்ஸ் இருக்கு நீ பயப்பட வேணாம்” என்றான் கார்த்திக்.

குதர்க்கமாகப் பேசியவனின் கரத்தில் ஒரு அடிப் போட்டவள் தான் அவனை அன்று சிக்னலில் கண்டதைக் குறித்துச் சொன்னாள்.

“ஓ நீ அன்றைக்கு என்னை பார்த்தியா? அன்றைக்கு உன்னை ட்ராப் செய்றேன்னு சொன்னேன் நீ கேட்கலை. பின்ன என்னச் செய்யறது? அதனால ரிக்ஷால ஏத்தி விட்டேன். அன்னிலருந்து இன்னி வரைக்கும் அதே பிடிவாதம்” என்றவனை அவள் முறைத்து வைத்தாள்.

“நான் இப்ப என்ன பிடிவாதம் பிடிச்சேனாம், சொல்லுங்க?”

“என்னைக் கட்டிக்கணும்னு பிடிவாதம் பிடிச்சல்ல?”

“கிண்டல் பண்ணுறீங்கல்ல? பொறுங்க, பொறுங்க உங்களைப் பார்த்துக்கிறேன்” என்றாள்.

மீராவுக்கு தெரியாத ஊர்தான் ஆனாலும் தங்களது வண்டி பலமுறை அதே பாதையில் சென்றுக் கொண்டு இருக்க, கணவனுக்கு என்னாச்சோ? என்பது போல அவள் விசித்திரமாய் பார்க்க மறுபடி அதே வளைவில் திருப்பினான்.

“எங்க போறீங்க?”

“வீட்டுக்கு மட்டும் இல்ல”

“ஏன்?”

“நீதான் என் கூட இருக்க பயப்படுறியே? உன்னை எங்க நான் வீட்டுக்கு அழைச்சுட்டுப் போக?”

மிகுந்த கடுப்பில், “யோவ்” என்றிருந்தாள் மீரா.

ஆளரவமற்ற இடத்தில் வண்டியை நிறுத்தியவன்…

“என்னடி?”

“ஒரு மனுசி முன்ன பின்ன தெரியாத இடத்தில பயப்பட மாட்டாளா?”

“நான் உனக்கு முன்னபின்ன தெரியாதவனா?”

“இருந்தாலும் பயமா இருக்காதா?”

“…”

“ரொம்பத்தான்… ஓவரா போறார்.. முறைக்குறதும்… பார்க்குறதும் போய்யா.” இப்போது புலம்புவது அவள் முறையாக இருந்தது.

வீட்டின் கேட் அருகே புதிதாக செக்யூரிட்டி அமர்த்தப்பட்டு இருக்க கேட்டை திறந்து விட கார் உள்ளே நுழைந்தது. காரை பார்க் செய்தவன். மறுபுறம் வந்து அவளை தூக்கிக் கொண்டான். கதவை ஆக்சஸ் கொடுத்து திறக்க அவளோடு உள்ளே நுழைந்தான். “உள்ள ட்ரெஸ் வச்சுருக்கேன், மாத்திட்டு இப்ப வர நீ” அதிகாரமாக ஆரம்பித்த குரல் குழைந்தது.

“ப்ளீஸ்டி”

அவனும் உடை மாற்றி வர, அந்த அழகான இரவுடையில் வந்து நின்றவளை மறுபடி தன் கைகளில் அள்ளிக் கொண்டான்.

அவர்களது அறையின் உள்ளே சென்ற போது அங்கிருந்த அலங்காரம் கூச, மீரா தன் கண்களை பொத்திக் கொண்டாள்.

“சொன்ன நேரத்தை விட தாமதப்படுத்திட்டானுங்க”

என அலங்காரம் செய்தவர்களைக் குறித்து கார்த்திக் சொல்லிக் கொண்டு வந்தான். அப்படியென்றால் வீட்டிற்கு உடனே வராமல் வண்டியை சுற்ற விட்டது இதற்காகத்தான் அதையே காரணமாக வைத்து இவளை யோசிக்க வைத்து ஒரு பந்திலேயே ஒரு ஃபோர் ஒரு சிக்ஸர் அடித்தவனை,

“நீங்க இருக்கீங்களே, ஃப்ராடு ஃப்ராடு” அவள் அடிக்க அவன் சிரித்தான்.

அவளை படுக்கையில் இட்டவன் அடுத்து பேசவில்லை, பேச விடவும் இல்லை. அந்த காதல் மூர்க்கனை தட்டுத் தடுமாறி அவள் ஏற்க, முத்தமிட்டே அவளை சிவக்க வைத்தான். உனக்குத் தெரியாதவைகளை நான் கற்றுத் தருகிறேன் வா என அங்கமங்கமாய் சிலிர்க்க வைத்தான். அறிந்திராத சுகங்கள் தான் எத்தனை எத்தனை? திக்குத் தெரியாத அந்த இன்பக் காட்டிற்குள் அவன் இழுப்பிற்கெல்லாம் இயைந்து அவனோடு அவள் பயணப்பட்டாள்.

அந்த இரவு முடிவுறவேக் கூடாதென்பது அவர்களது ஆசையாக இருந்தது.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here