மனதோரம் உந்தன் நினைவுகள்_24_ஜான்சி

0
305

Manathoram Unthan NinaivukaL_Epi 24_Jansi

அத்தியாயம் 24

காதல் ம(ன)ணம்


நம் அன்பின் வரம்பை
நீயும் நானும்
பயணிக்கும் பிரிவின் எதிர் எதிர்
திசைகள் நிர்மாணிப்பதில்லை.

நம் காதலின் அளவை
நீயும் நானும்
தனித்தனி ஆளுமைகளாய்
சாதிக்கும் சாதனைகள் தீர்மானிப்பதில்லை.

நம் உயிரின் நெருக்கத்தை
நீயும் நானுமாய்
பகிர்ந்துக் கொள்ளும்
செய்திகள் உறுதி செய்வதில்லை.

எத்தனையோ பொழுதுகள் முன்பு
நம் இரு கைகள் கோர்த்த

ஓர் தருணம்.

எத்தனையோ பொழுதுகள் முன்பு
நம் உடலின் வெறுமை போக்கிய

அந்த ஒற்றை அணைப்பு.

எத்தனையோ பொழுதுகள் முன்பு
நாம் பகிர்ந்துக் கொண்ட

அந்த ஒற்றைக் குளம்பியின்

சூடும் , மணமும்,

உள்ளூர மணம் பரப்பி
உயிர் வரையில்

உன் நினைவை பரப்பி…நம் காதலை

வாழ்வாங்கு வாழ

உயிரூட்டிச் செல்கின்றது.

அடுத்த நாள் காலை கார்த்திக் தன்னருகே உறக்கத்தில் இருக்கின்றவளது கையை எடுத்து முத்தமிட்டான். முன்னிரவின் இனிமை சொட்டுச் சொட்டாய் மனதில் இறங்க, குனிந்து அவள் நெற்றி முட்டி அழுந்த முத்தம் பதித்தான். அவளை ரொம்பதான் படுத்தி விட்டோமோ? எனும் சந்தேகம் எழுந்தது.

“மீரு”

“ம்ம்”

“மீரு”

“தூக்கம் வருது”

‘சரி தூங்குறி” தன்னோடு இழுத்தணைக்க…

“யோவ்” முனகினாள்…கண்கள் சொக்க, தூங்கிப் போனாள்.

பத்து மணிக்கு மறுபடி எழுப்பவும் அதே கதைதான்.

“பசிக்குது மீரு, வா சாப்பிட்டுட்டு தூங்குவியாம்.”

“ம்ம்” வரேன் தடுமாறி எழுந்தாள், அவள் கண்கள் எரிந்தன. முகம் கழுவி பற்கள் துலக்கி வந்தவள் கண்களை திறக்கவே முடியாமல் கணவனைப் பார்த்து புன்னகைத்தாள்.அவளை இழுத்து தோளோடு அணைத்து உச்சி முகர்ந்தவன் தோளில் சாய்ந்து கொட்டாவி விட்டாள்.

அரைகுறையாக எதையோ உண்டு மறுபடியும் தூக்கம். அன்றிரவு வீட்டிற்கு உறவினர்களை உணவிற்கு இவர்கள் அழைத்திருக்க, இன்று அந்த நிகழ்வு சரிப்படாது என நினைத்தவன் சுசிக்கு தகவல் அனுப்பினான். அவள் தான் பார்த்துக் கொள்வதாக சொல்லி பதிலளித்தாள்.

இவர்கள் குடும்பத்தினர் அன்று ராமோஜி பிலிம் சிட்டியை முற்றுகை இட்டிருந்தனர். அங்கிருந்து புகைப்படங்கள் இவர்களது வாட்சப் குழுவில் அனுப்பிக் கொண்டிருக்க அது எழுப்பிய மெசேஜ் டோன் சப்தத்தில் தூக்கம் முற்றிலும் கலைந்து மீரா எழுந்தமர்ந்தாள். மணி பணிரெண்டரை தாண்டி இருந்தது தன்னை சுத்தம் செய்து அவள் கட்டிலில் சாய்ந்தமர புகைப்படங்கள் பார்த்துக் கொண்டிருந்தவள் மடியில் கார்த்திக் நகர்ந்து படுத்தான்.

அவள் விரல்கள் பயணமாகி அவன் தலையை, முகத்தை, நாடியை என தன் போக்கில் வருடிக் கொண்டிருக்க,

“நான் இன்னும் ஹைதராபாத் சுத்திப் பார்க்கவே இல்லை தெரியுமா?” தன்னையறியாமல் மறுபடி கொட்டாவி விட்டுக் கொண்டு பேசினாள்.

“போவோம்” என்றான் கார்த்திக்.

“நான் முதல்ல குளிச்சுட்டு வந்திர்றேன், ஒரே கொட்டாவியா வருது” என்றவள் மாற்றுடைகள் எடுத்துச் சென்று குளித்து வந்தாள். அந்த தேன் நிறச் சேலையில் பார்வைக்கு தேனாகத்தான் இருந்தாள்.

“நீங்க குளிக்கலையா?” கேட்க, “நான் காலையிலயே குளிச்சுட்டேன்” என்றான்.

“மீரு வார்ட்ரோப்ல கொஞ்சம் சாரி, ட்ரெஸஸ் வாங்கி வச்சிருக்கேன், அப்பப்ப அதையும் எடுத்து உடுத்துக்கோ” எனவும், உற்சாகம் தொற்றிக் கொள்ள “எங்க இருக்கு? காண்பிங்க?” எனக் கேட்டவளுக்கு சுவரோரமாக இருந்த அந்த வார்ட்ரோபை திறந்து காண்பிக்க அங்கே அழகழகான உடைகள் தென்பட்டன. அவற்றின் மென்மையிலும் அழகிலும் கவரப்பட்டவள்,

“கலர்லாம் அள்ளுது கார்த்திக்”

“பிடிச்சுருக்கா?”

“ம்ம்” தலையாட்டினாள்.

“சாயங்காலம் எல்லாரும் வராங்கல்ல, அப்ப இதிலருந்து ஒன்னு உடுத்துக்கிறேன்.”

‘ஒருவேளை உறவுகளைப் பார்க்க ஆசைப் பட்டிருப்பாளோ, தவறு செய்து விட்டோமோ?’ என எண்ணியவன் “நீ டயர்டா இருக்கவும், நாளைக்கு டின்னரை மாத்திட்டேன்மா” என்றான்.

“நல்லதா போச்சு… எனக்கு பாருங்க கண்ணு இன்னும் முழுசா திறக்கவே இல்லை. ஏதோ போதையில இருந்த மாதிரி இருக்கு” கண்களை விரித்துக் காண்பித்தவளைப் பார்த்து சிரித்தான்.

“எனக்கும் தான் செம்ம போதை” அவளுக்கு மட்டும் கேட்க முனக,

“ம்ம்”

“என்ன ம்ம்?”

“நீங்க குடிப்பீங்களா?”

“போவெ”

“சொல்லுங்க”

“நேத்தைப் பற்றிக் கேட்குறியா? நேற்று மீரு ப்ராண்ட் …”

“த்ச்சு” வெட்கத்தில் அவன் முதுகில் முகம் புதைத்துக் கொண்டாள்.

அவள் கைகளை முன்னே இழுத்து முத்தமிட்டவன்,

“நா பங்காரம்ரா நுவ்வு” (என் தங்கம்டி நீ) கொஞ்சினான். அவள் கைச்சூடு அவனுக்கு எதையோச் சொல்ல, அவன் திரும்பி அவள் தலையை, கழுத்தைத் தொட்டுப் பார்க்க லேசாக சுட்டது.

“காய்ச்சலா?” அவன் முகம் கலவரமாக, மீரா தன்னை தொட்டுப் பார்த்தாள்.

“ஓ இதனாலத்தான் இப்படி களைப்பா இருக்கா? இதெல்லாம் ஒன்னுமில்ல, வலி மாத்திரை போட்டா சரியாகிரும்”

“ம்ப்ச்ச், அதென்ன தானாவே மாத்திரை போடறது?” ஆட்சேபித்தவன் “டாக்டர்ட போகலாம்” என்றான்.

“கார்த்திக், இப்ப ஒரு மாத்திரை போட்டுக்கிறேன், அதுக்கு கேட்கலின்னா சாயங்காலம் போகலாம் சரியா?” அவனை ஒருவாறாக ஏற்றுக் கொள்ள வைத்தாள்.

ஆர்டர் செய்த உணவு வந்திருக்க, உண்டதும் மாத்திரை போட்டுக் கொண்டாள்.

ஏதோ பெரிய நோயாளியைப் போல அவளை அவன் கவனிக்கவும் கடுப்பாகி, “யோவ் கார்த்திக் கொஞ்சம் சும்மா இருய்யா” மிரட்டினாள்.

ஏதோ தவறு செய்தவன் போல அவன் உலா வரவும், “இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லையா கார்த்திக்? மூணு நாளா ஓய்வில்லாமல் மாத்தி மாத்தி விழாக்கள், பயணம் செய்ததுன்னு அந்த அலுப்பில காய்ச்சல் வந்திருக்கும், சரியா போகும்” இவள்தான் அவனை சமாதானப்படுத்த வேண்டியதாயிற்று.

மாத்திரை தன் வேலையை காட்டவும் சற்று சுறுசுறுப்பாகி இருந்தாள். முன் தினம் அவர்கள் அறையில் அலங்கரிக்கப் பட்ட பூக்கள் எல்லாம் வாடி இருந்தன. அவைகளை அப்புறப்படுத்த முனைகையில், “சுத்தம் செய்ய ஆள் அழைக்கவா?” என அவன் கேட்டு வைக்க அவள் முறைத்தாள்.

“மரியாதையா கூட சேர்ந்து சுத்தம் செய்றீங்க… என்ன புரியுதா?” அதட்டி அவனை வேலை வாங்கினாள்.

“அறிவுக்கெட்ட முண்டம் ஃபர்ஸ்ட் நைட் ரூம் க்ளீன் செய்ய ஆள் கூப்பிடுதாம்” முனகினாள்.

“என்னச் சொன்ன மீரு?” அவள் அருகே வந்து அவன் கேட்கவும், வெட்கமும் சிரிப்புமாய் அடிக்க, அவன் வாங்கிக் கொண்டான். அவள் பொங்கிப் பொங்கிச் சிரிக்க அவனுக்கும் சிரிப்பே… அணைத்துக் கொண்டான்.

“ஆள்தான் வளர்ந்திருக்கு, புத்தியே இல்ல போ” நறுக்கென அவன் தாடையை கடித்து வைத்தாள்.

ஒருவாறாக அழுக்குத் துணிகளை அதன் இடத்தில் போட்டு பூக்களை அள்ளி குப்பைப் பைகளில் போட்டு, படுக்கை கவரை புதிதாக மாற்றி என அந்த அறை சுத்தமாவதற்கு இருவரின் அரை மணி நேரம் உழைப்பும், கால் மணி நேரம் கொஞ்சல்களும் செலவாகின. சற்று நேரத்தில் அவளின் காய்ச்சல் முழுவதும் விட்டதும் முழுக்க வேர்த்து இருந்தாள். துடைத்து விட்டவனது மடியில் சாய்த்துக் கொண்டாள்.

“பொருட்கள்லாம் இருக்கா, காஃபி போடலாமா?” கேட்டவளிடம்,

“காஃபிதானே, நான் போட்டுட்டு வரேன்” எனப் புறப்பட்டான்.

“நம்ம சமையலறையில் முதல் சமையல்… முதல் முறை பால் காய்க்கணும்ல கார்த்திக்?’

“பால் பவுடர்தான்மா இருக்கும்” என்றவனிடம்,

“சரி அதையும் தான் என்னன்னு பார்ப்போமே?” துறுதுறுவென சேலை முந்தானையை இழுத்துக் கட்டிக் கொண்டு, சமையலறையில் பாத்திரங்களை உருட்டியவளை இரசனையாய் பார்த்தான்.

“எனக்கெல்லாம் காய்ச்சல் வந்தா ஒரு வாரத்துக்கு எழும்ப மாட்டேன். நீ பாரு எவ்வளவு சுறுசுறுப்பா நிற்கிற?”

“எனக்கு எப்பவுமே சும்மா படுத்துக் கிடக்கவே பிடிக்காது. நீங்க ஒத்தைக்கோர் பிள்ளைல்ல… செல்லம் வெல்லமா தான் இருக்கும், எல்லாம் என் மாமியாரச் சொல்லணும்.”

“ஆமாம், அம்மாக்கு நான் ரொம்பச் செல்லம் தான்” முறுவலித்தான்.

வெந்நீரை காய்த்து அதில் பால் பவுடரை கலந்தவள் அதை கொதிக்க விட்டாள். கொதிக்குமா? கொதிக்காதா? அது அவளது இரத்த அழுத்தத்தை சோதித்தது.

“கார்த்திக்” அவன் கைகளைப் பற்றிக் கொண்டு அடுப்பை தீவிரமாகப் பார்த்திருந்தாள். அது ஒரு வழியாக பொங்கியது அவளே அரைக்குறையாக குலவை இட்டாள்.

“ஹே …” மகிழ்ச்சியில் அவன் கையை பற்றிக் கொண்டுத் துள்ள “போதும் போதும்” அவளை அடக்கினான் அவன்.

‘மிஷன் பால் காய்ப்பு சக்சஸ், இப்ப நீங்க என்ன செய்றீங்கன்னா…?” அவளது அதிகார தோரணையில்

“சொல்லுங்க மஹராணி”

“சூப்பரா ஒரு காஃபி போட்டுக் கொண்டு வரீங்க ஓகே”, மிடுக்காய் செல்லவும்

இடுப்பு வரை குனிந்து “சரிங்க மஹராணி” என்றான்.

டிவி இருந்த அந்த பெரிய லிவிங்க் ரூமில் சென்று அவள் அமர்ந்தாள். முன் தினம் கவனித்த வரையில் பேரன் தாத்தாவைச் சார்ந்து இருந்ததாக அவளுக்கு படவில்லை. எதற்கு பலதும் யோசித்துக் கொண்டு? இன்று அவனிடம் விபரம் கேட்க வேண்டும் என எண்ணினாள்.

டிவியை முடுக்கி விட்டவள் அதில் தேடித் தேடி தமிழ் பாடல்களை ஒலிக்க விட, காஃபி வாசனையில் திரும்பிப் பார்த்தாள்.

ட்ரேயை டேபிளில் வைத்தவன் அவளுக்கு கப்பை எடுத்துக் கொடுத்து அமர, அவனுக்கு கப்பை எடுத்து அவள் நீட்டினாள்.

“சூப்பர் கார்த்திக், இனி உங்களுக்கு நம்ம வீட்டு காஃபி டிபார்ட்மெண்ட் ஒதுக்கப்படுகின்றது.”

“நன்றிங்க மஹராணி” அவள் கன்னத்தை நிமிண்டியவன் காஃபியில் கவனமானான்.

“சமையலுக்கு ஆள் வைக்கவான்னு நினைச்சேன்” என்றான்.

“நான் ஓரளவு சமைப்பேன் கார்த்திக், நம்ம இரண்டு பேருக்கெதுக்கு ஆளெல்லாம்?”

“ஓரளவா, ரொம்ப நல்லாவே சமைப்ப. எனக்கு உன் சமையல் பிடிக்கும். நானும் கொஞ்சம் கொஞ்சம் சமைப்பேன் அது பிரச்சனையில்லை. ஆனால், உதவிக்கு தேவைப்படுவாங்க தானே?”

“ம்ம், நான் வேலைக்குப் போனா… என்னிக்காச்சும் லேட்டானா…” என ஆரம்பிக்க,

“என்ன? வேலைக்கு போறியா?” அதிர்ந்தான்.

“எதுக்கு இப்ப ஷாக்?”

“நான் உன்னை வேலை விடச் சொல்லி இருந்தேன்ல”

“நான் அப்ப வேலையை விடலை கார்த்திக், நான் கேட்டப்ப நீங்க வேலையை விட்டுட்டேன் வேற எங்கேயும் வேலைக்கு போகலைனு சொன்னீங்கல்ல? வீட்ல ஒருத்தருக்காச்சும் வேலை இருக்கணும்னு நினைச்சேனா அதனால லீவ் மட்டும் தான் போட்டிருந்தேன்.”

அவளை அவன் ஆச்சரியமாக பார்த்திருந்தான்.

“என்னாச்சு? காஃபி குடிக்கலை?” கேட்கவும் அவசரமாக வாயில் சரித்தவன் அவளை தன்னருகே இழுத்துக் கொண்டான்.

“உங்கப்பா உன் கிட்ட என்னைப் பற்றி எதுவும் சொல்லலையா?”

“எதுவும்னா?”

“என் வேலை வருமானம்லாம்…”

“இல்லையே… எனக்கு எல்லாம் தெரியும்னு நினைச்சுருப்பாங்க போல, அப்படியும் அப்பாகூட நாங்க அதிகமா பேசுறதில்லை. அவங்களா சொன்னா கேட்டுக்கிறதோட சரி.”

“…ம்ம்ம்”

“நம்ம ஆஃபீஸ் ஷேர் ஹோல்டர்னு தாத்தாவைக் குறித்து அப்பா சிலது சொன்னாங்க.”

“எனக்குத்தான் வேலை இல்லையே? எப்படி சமாளிக்கணும்னு நினைச்ச?”

“நான் வேலைக்குப் போயிட்டு தானே இருந்தேன். உங்களுக்கு எப்படியும் வேலை கிடைச்சிரும்னு எனக்குத் தெரியும்.”

“நான் வேலைப் பார்க்கலைனு அப்பாக்கிட்ட சொல்லலியா?”

“அதெப்படிச் சொல்வேன் கார்த்திக்? தெரிஞ்சதுன்னா கல்யாணத்தை நிறுத்திட்டாங்கன்னா…?” பெரிய இரகசியம் காத்தவளைப் போல பெருமிதமாகச் சிரித்தவளின் அன்பும் காதலும் எண்ணி கார்த்திக்கிற்கு மூச்சு முட்டிக் கொண்டு வந்தது.

தன்னிடமிருந்து உதடுகளை பிய்த்தெடுத்து, “யோவ்” என்றவளாக மூச்சு வாங்கிக் கொண்டு இருந்தவளிடம் புன்னகைத்தான்.

“அந்த ஆஃபீஸ் வேண்டாம் மீரு, உனக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு தான் எனக்கு தந்தானுங்க, ஃப்ராடுங்க.”

“நீங்கதான் ஃப்ராடுத்தனம் செஞ்சு பதவி உயர்வு வாங்குனதா முதலில் நான் நினைச்சேன். அப்புறமா உங்களை நேரில் பார்த்ததும்… இது மாதிரிலாம் நம்மால டீம் ஹேண்டில் செய்ய் வராது, உங்களுக்கு பொறுப்பு கொடுத்தது தப்பில்லைன்னு தோணுச்சு.”

“என்னைப் பற்றி நல்லாவெல்லாம் யோசிச்சு இருக்கியே? பரவாயில்லை. உன்னை எனக்கு முதலில் பிடிக்காது மீரு, ரொம்ப கண்டிப்பா பேசுவியா… இவ பெரிய இவ…ன்னு நினைப்பேன்.”

“எனக்கும் உங்களை சுத்தமா பிடிக்காது… நீங்க நடந்துக்கிறது ரொம்ப அலட்சியமா தோணும்” எனவும் சிரித்தான்.

“நீ ஹைதராபாத் வர்றன்னதுமே எனக்கு என்னமோ போல இருந்தது. அதுவும் எனக்கு கீழே ரிப்போர்ட் செய்யணும்னு சொன்னதும் உன் பதவியை நானே பிடுங்கினது போல ஒரு கொஞ்சம் குற்ற உணர்ச்சி… தன் கண்ணைக் காட்டியவன் கொஞ்சம் தாழ்வுணர்ச்சி இதெல்லாம் சேர்ந்து அன்னிக்கு ஆஃபீஸ் வரவே மனசில்ல. கண்ணாடி போடக்கூடாதுங்கிறது தாத்தா ஆர்டர். உனக்காக போட ஆரம்பிச்சேன்னா எப்படியும் அவர் கண்டுக்குவார். மத்தவங்களும் வித்தியாசமா பார்ப்பாங்கன்னு… ரொம்ப யோசிச்சு கஷ்டப்பட்டு ஆஃபீஸ் வந்து நின்னா…”

தன்னைப் பார்த்த தருணத்தை சொல்லப் போகிறானென அவள் ஆர்வமுடன் கேட்டுக் கொண்டு இருந்தாள்.

“உன்னைப் பார்த்ததும் அப்படியே சுருட்டி என் கைக்குள்ள வச்சு பத்திரமா பார்த்துக்கணும் போல, அப்படி மனசுக்குள்ள ஒரு துடிப்பும் தவிப்பும்.”

“எப்படி இப்படித்தானே?” தான் அவன் மடியில் சுருண்டுக் கிடப்பதை குறிப்பிட்டதும் இன்னுமாய் அவளை அணைத்துக் கொண்டவன் கொண்டாடித் தீர்த்தான்.

“எனக்கு முதலில் உங்களை புரியலை, என்னடா இந்த ஃப்ராடு மாத்தி மாத்தி ஒரே ஃபைல்ல திருத்தம் சொல்லுதுன்னு… அப்புறம் இந்தாளுக்கு நம்ம மேல ஏதோ ஆர்வம்னு புரிஞ்சதும் பயந்துட்டேன். முன்ன பின்ன தெரியாத ஊர்… யார்டா இது? ஏன் இப்படி நடந்துக்கிறார்னு… முதல்ல உங்களை தப்பாதான் நினைச்சேன்.”

“ம்ம்ம்… உன்னை இப்படி பயமுறுத்தி இருக்கேன்னு அப்ப புரியலை… நீ பாஸ்கர் கிட்ட சென்னை திரும்பி போறேன்னு சொல்லவும் பயங்கரமா ஹர்ட் ஆகிட்டேன்…”

“எனக்கு அடிப்பட்டதும் ஓடி வந்தீங்கல்ல? அதுதான் அங்கருந்துதான் நான் தொலைஞ்சு போயிருக்கணும்… மீரா  நீ செய்யறது தப்புன்னு மனசு சொல்லவும் என்னை கட்டுப்படுத்தினேன்… அப்புறம் என்னவெல்லாமோ?”

அவளது அந்த இரண்டு விரல்களை தேடி வருடினான்.

“அன்னிக்கு உனக்கு அடிப்பட்டுருக்குன்னதும் எனக்கு பதறிடுச்சு… சொந்த பந்தம் யாரும் இல்லாம இருக்கிற இடத்தில அடிபட்டு கிடக்குறது எப்படி இருக்கும் தெரியுமா?” எதையோ சொல்ல முடியாமல் விழுங்கியவன்.

“சரி அதை விடு பொறு” எனச் சொல்லி அவளை எழுந்து அமர வைத்து விட்டு, தனது டேபை (tab) தூக்கிக் கொண்டு வந்தான்.

அதில் தனது வங்கிகளின் பணப்பரிவர்த்தனைகளைக் காட்டினான். அவற்றில் கோடிகளில் பணம் இருக்க, இவள் ஆவென அவனைப் பார்த்திருந்தாள்.

“படிப்பு முடிஞ்சதும் லண்டன் பிசினஸ் ஸ்கூல்ல MBA முடிச்சேன். எல்லாம் தாத்தா சொன்னதாலத்தான்… தாத்தாக்காக மட்டும் தான். ஆளண்டாம வளர்ந்திட்டேன். எப்படியாவது எல்லாரோட நான் பேசிப் பழகணும்னு தாத்தா என்னென்னவோ செய்தாங்க… எனக்குன்னு இருக்கிறது அவங்க மட்டும் தானே? அதாவது அப்ப அவங்க மட்டும்…. இப்ப நீ நம்ம வீட்ல எல்லாரும் இருக்கீங்க… திருத்திக் கொண்டவன். அதனால தாத்தா என்னச் சொன்னாலும் கேட்பேன். லண்டன்ல என்னால எல்லாரோடயும் அவ்வளவா இலகுவாக பழக முடியவில்லை… சில வருடங்களா நம்ம ஆஃபீஸ்லதான் எல்லாரும் அவ்வளவு பாசமா இருப்பாங்க.”

“…”

“இவ்வளவுக்கும் அவங்களுக்கெல்லாம் என்னைப் பற்றி எதுவுமே தெரியாது ஆனால் ரொம்ப பாசமா இருப்பாங்க. பாஸ்கருக்கு என்னைப் பற்றி கொஞ்சம் தெரியும். ஆர்வக் கோளாறுல அவன் உன் கிட்ட விபரம் சேகரிக்கவும் நானும் மாட்டிக்கிட்டேன்” சிரித்தான்.

என்னதான் ஆஃபீஸ் போனாலும் வீட்டுக்கு வந்ததும் நானும் என் லேப்டாப்பும்னு தனியா இருப்பதில் ஒரு ஆசுவாசம். யாருமே இல்லாம கூட இப்படியே தனியா வாழ்ந்துட்டு போயிடணும்னுதான் நினைச்சிருந்தேன். ஆனால், எனக்கு நீ கிடைச்ச…”

“…”

“எங்கம்மா, அப்பா தாத்தா இவங்கல்லாம் எனக்காக ரொம்ப வேண்டிருப்பாங்க போல…. அதனாலத்தான் நீ எனக்கு கிடைச்சிருக்க…” முறுவலித்தான்.

“உங்களைத் தொடவா?” எனக் கேட்டவளை, ‘இதென்ன கேள்வி?’ என்பதாக அவன் பார்த்து நிற்க,

“உங்களைத் தொட்டால் திட்டுவீங்கல்ல?”

“ம்ப்ச்ச்… அது வேற… அதுதான் ராத்திரியே சரியாகிடுச்சே…” விஷமமாய் சிரித்தவன், அவள் என்ன செய்கிறாளெனப் பார்த்தான். அவள் அவன் உடையை விலக்கி, அவன் நெஞ்சைத் தொட்டு… அந்த டாட்டு குறித்துக் கேட்டாள்.

“உன்னை சந்திக்க இரண்டாவது தடவை சென்னை வந்தேன்ல, நாம சந்திச்சுக்கிட்டமே அதுக்கு முன்ன போட்டுக் கிட்டது இது”

“ஏன்?”

“நீ எப்படியும் எனக்கு மாட்டேன்னு தான் சொல்லுவன்னு தெரியும், அது தான் வலிக்க வலிக்க போட்டுக்கிட்டேன். ஒரு வலி முன்ன இன்னொரு வலி பெரிசா தெரியாதில்ல”

‘ம்ப்ச்ச்…” என்றவள் கண்களில் நீர் கோர்த்திருந்தது.

“ஏன்?” கண்ணீரை சுண்டி விட்டான்.

“நேற்று கூட குத்திக் காட்டினீங்க”

“என்ன? எப்ப?”

“கார்ல நான் சும்மாதான் உங்களைப் பார்த்தேன்… லைசென்ஸ் இருக்கு பயப்படாத, நல்லா வண்டி ஓட்டுவேன்னு சொன்னீங்க… அப்புறம் என்னைக் கட்டிக்கணும்னு பிடிவாதம் பிடிச்சல்லன்னு குத்திக் காட்டுனீங்க.”

முறுவலித்தவன், “இதுக்கெல்லாம் ஹர்ட் ஆகக் கூடாது பேபி, கொடும் பசியில இருக்கிறவன் எதையாவது உளறத்தான் செய்வான். கண்டுக்கக் கூடாது விட்ரணும்.”

கொடும்பசி என்றதும் “நாமதான் ரிசப்சன்ல சாப்டமே?” என உளறி வைத்தவள் அவன் சொன்னது என்னவென புரியவும், சப்தமே காட்டாமல் காஃபி கப்களை எடுத்துக் கொண்டு கிச்சன் சென்று கழுவி அடுக்கி வைத்துக் கொண்டு இருந்தாள். கார்த்திக்கின் முறுவல் மறையவே இல்லை.

மீரா அடுத்த நாள் தன் குடும்பத்தினர் வரும் போது என்னென்ன தயாரிப்புகள் செய்திருக்க வேண்டுமென திட்டமிட ஆரம்பித்தாள்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here