மனதோரம் உந்தன் நினைவுகள்_25_ஜான்சி

0
279

Manathoram Unthan NinaivukaL_Epi 25_Jansi

அத்தியாயம் 25

காதல் என்பது

உன்னை விட நான் தான் அழகு

என நான் சொல்ல,
“ம்ம்” தலையசைத்து சிரிப்பான்.

உன்னை விட நான் அறிவாளி என்றால்,
தயக்கமேயில்லாமல்

ஒப்புக் கொள்வான்.

உன்னை விட நான் பொறுமை

என்கையில்
“அதில் சந்தேகமென்ன?” என்பான்.

உன்னை விட…

என் காதல் தான் பெரிது

என்றால் மட்டும்…

ரௌத்திரமாய் 

“இல்லையடி

அது என் காதல் தான்” என்பான்.

இது தான் காதலா!

சற்று நேரம் கழித்து மீரா பெற்றோருக்கு அழைப்பு விடுத்தாள். அனைவரும் அப்போதுதான் ஊர் சுற்றி விட்டு திரும்ப வந்திருந்தனர்.

எதிர்தரப்பில் ஒவ்வொருவராக வர கார்த்திக்கும் மீராவும் மாற்றி மாற்றி பேசி முடித்தனர். “என்ன சமைக்கலாம் கார்த்திக்? என்னென்ன பொருள் எங்க இருக்குன்னு தான் எனக்குப் புரியலை” என்றாள்.

“உனக்குதான் உடம்பு சரியில்லைல? நான் செய்றேன். தினம் தினம் விருந்தாகிப் போச்சு…இப்ப சிம்பிளா ஏதாவது செய்வோமா?”

“இல்லை நான் நல்லா தான் இருக்கேன், இரண்டு பேரும் சேர்ந்தே செய்வோம்” இருவரும் அரட்டையடித்துக் கொண்டே வேலை செய்ய நேரம் இனிமையாக கழிந்திருந்தது.

“நான் முன்ன இவ்வளவுல்லாம் பேச மாட்டேன் கார்த்திக்.”

“தெரியுமே” முறுவலித்தான்.

“ஆனால், உங்க கூட இருந்தாலே உற்சாகமா இருக்கா… அதனால ரொம்ப பேசுறேன்னு நினைக்கிறேன்.”

“பேசு பேசு, நல்லா இருக்கு.”

“உங்களை அப்பப்ப அடிச்சு வேற வைக்குறேன், எங்கம்மாக்கு தெரிஞ்சா நான் சட்னிதான்” சிரித்தாள்.

“கடிச்சும் வைக்குற, அதச் சொல்லல நீ”

“ஏன் நீங்க மட்டும் என்னை கடிக்கலியோ?” சொல்லி விட்டு அடுத்த நொடி…

‘அடப்பாவி அநியாயத்துக்கு உளறுற நீ…..அவ்வ்வ்’ நாக்கைக் கடித்தவாறே சமையலறை விட்டு வெளியே வந்திருந்தாள்.

‘தானே தனக்கு சூடிக் கொள்ளும் பல்புகளை அடுக்க ஒரு ரூம் போதாது போலவே?’ முதுகு காட்டி நின்றவளை முறுவலித்தவாறு பார்த்திருந்தவன் அவளை அழைத்தான்,

“மீரா வா இந்த டால் கொதிச்சது போதுமா பாரு” அவளோ அசட்டுக்களையை அடுப்பறை வாயிலில் கொட்டிவிட்டு ஒன்றும் நடவாதது போல குழம்பை சரிபார்த்தாள்.

கார்த்திக்கிற்கு அழைப்பு வரவும் அருகாமையில் இருந்த டேபிளில் இருந்து எடுத்து வந்தான். தன்னை அழைத்தது சித்ரா என்றதால் அழைப்பை ஸ்பீக்கரில் போட்டான். சித்ரா அக்காவுக்கு அழைக்காமல் கார்த்திக்கிற்கு வீடியோ கால் அழைத்திருந்த போதும், அவன் ஏப்ரனோடு நிற்பானென எதிர்பார்த்திருக்கவில்லை.

“மாமா என்ன இது ஸ்டார் ஹோட்டல் செஃப் மாதிரி நிக்குறீங்க?” ஆவென வாயை பிளந்தாள். சுசிக்கும் அவனைப் பார்த்து சிரிப்பே…

“வீடு அசத்தலா இருக்கு மாமா” சுசி சொன்னாள்.

“வாங்க, வாங்க நாளைக்கு நேரமே ஊர் சுத்திட்டு வீட்டுக்கு வந்துடுங்க.”

சப்தம் கேட்டு வந்தவள் கணவனை இடித்த வண்ணம் அலைபேசியை எட்டிப் பார்க்க,

“அக்கா, நீ ரொம்ப ஸ்மார்ட்தான் இந்த பூனையும் மில்க் குடிக்குமான்னு இருந்துட்டு என்னவெல்லாம் செய்ற?” சித்ரா போட்டுத் தாக்கினாள்.

“நான் என்னடி செய்தேன்?” கலவரமானாள் மீரா. சுசி வயிற்றைப் பிடித்து சிரித்துக் கொண்டு இருந்தாள்.

“மாமாவை வேலை வாங்கிட்டு ஜாலியா இருக்கேல்ல?”

“ஏன்டி? இவ்வளவு நேரம் சேர்ந்து தான் வேலை பார்த்தோம். இது நல்லா இருக்கே? உங்க மாமா வேலை பார்த்தா அது கஷ்டம், நான் பார்த்தா அது இஷ்டமா போடி.”

“அதெல்லாம் தெரியாது நாங்க எங்க வீட்டு பையனை எவ்வளவு பாசமா வளர்த்து உங்க கையில கொடுத்தோம். பூனை கையில கொடுத்த கிளி மாதிரி ஆகிருச்சே எங்க நிலைமை… ம்ப்ச்ச்”

‘டே ரொம்ப ஓவரா பேசுர பார்த்துக்க” கடுப்பானாள்.

“ஷப்பா எத்தனை சீரியல் பார்த்திருப்பேன். எங்கக்காக்கு மாமியார் கொடுமை டேஸ்ட்லாம் காட்ட வேணாமா? இப்பதான் சான்ஸ் கிடைச்சது” சித்ரா பெருமையாக சொல்ல,

“ஒரு நாள் ஆகலை, உங்க மாமாக்கு போன் போட்ருக்க எனக்குப் போடலை. பேசுறதும் அவங்களுக்கு சப்போர்ட்டா?”

“நாங்க மாப்பிள்ள வீடு தெரியுமில்ல” கெத்துக் காட்ட

“அக்கா உடம்புக்கு சரியில்லையா?” இடைமறித்து சுசி கேட்டாள்…

“எப்படித்தான் கண்டு பிடிப்பாளோ?” கார்த்திக் அதிசயமாக பார்த்திருந்தான்.

“கொஞ்சம் அலுப்புடாமா… அதுவும் கூட சரியாகிருச்சு” என்றாள் மீரா.

“அக்கா சுகமில்லையா? இப்ப ஓகேவா?” தான் அக்காவை சீண்டியது தவறோவென சித்ரா பார்க்க,

“நல்லா இருக்கேன்மா, அதுக்கு ஏன் உன் மூஞ்சு அப்படிப் போகுது?”

“சாரிக்கா, நாளைக்கு உனக்கு போன் போடறேன் சரியா?”

“அதெல்லாம் ஒன்னுமில்ல சித்துமா… ஏ என்னதிது?”

“மிஸ் யூக்கா” சின்னவள் கண்கள் கலங்கி இருந்தன.

“த்ச்சு…” அதட்டினாள்.

“விளையாட்டுக்கு சொன்னேன்டா எனக்கோ, அவங்களுக்கோ யாருக்கு போன் போட்டாலும் ஒன்னுதானே?.. மிஸ் யு டூ மா” தானாகவே இவள் கண்களும் கலங்கி இருந்தன.

“என்ன சமையல் மாமா?” சுசி பேச்சை மாற்றினாள்.

“ஜீரா ரைஸ், டால் தட்கா, அப்பளம், சாலட் அப்புறம் இன்ஸ்டண்ட் பாயாசம்”

“ஆஹா கலக்கல்”

“நாளைக்கு என்ன மெனு வேணும் சொல்லுங்க, அசத்திரலாம்.”

“எனக்கு ஐஸ்கிரீம் மாமா” சித்ரா முந்திக் கொண்டு சொன்னாள். ஆளுக்கொரு உணவு வகைகளைச் சொல்ல அவன் அவைகளை எல்லாம் அங்கிருந்த குறிப்பேட்டில் குறித்துக் கொண்டு இருந்தான். சகோதரிகள் பேசிப் பேசி அழைப்பை துண்டிக்கவே மனமில்லாமல் துண்டித்தனர்.

உணவு நேரம் கார்த்திக்கும் மீராவும் ஒருவருக்கொருவர் பரிமாறி, பேசி சிரித்தென சுவையாய் கழிந்தது. தங்கைகளிடம் பேசிய போது மீராவிடம் கண்ட மனவருத்தத்தை மாற்றவென எண்ணியவனாக,

“வா கொஞ்சம் வாக்கிங்க் போகலாம்” கார்த்திக் மீராவை அழைத்தான்.

இருவரும் அருகில் இருந்த அந்த குட்டிப் பார்க்கில் இயற்கை காற்றில் உலவிய நேரம் மிகவும் இனிமையாக இருந்தது.பேச்சு வாக்கில் அவனுடைய பங்கு வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகள் சார்ந்த விபரங்கள் அவ்வளவாக புரியாதபோதும் எல்லாம் கேட்டு அறிந்துக் கொண்டாள்.

கார்த்திக் தன்னை வேலைக்குச் செல்லவெல்லாம் அனுமதிக்க மாட்டான் என உறுதி ஆகி விட்டதால் அடுத்து என்ன? என யோசிக்க மீராவிற்கு சோம்பலாக இருந்தது. முதலில் புகுந்த நகரத்தை புரிந்துக் கொள்ளலாம் என முடிவெடுத்துக் கொண்டாள்.

கார்த்திக் படுக்கைக்கு வந்த போது பார்த்ததென்னமோ எதிர் புறமாக திரும்பி படுத்த வண்ணம் எதையோ யோசித்துக் கொண்டு இருந்த மீராவைத்தான். இவன் பக்கம் அவளது சடைப்பின்னல் நீளமாய் கிடக்க அதை லேசாக சுண்டி இழுத்தான். திரும்பிப் பார்த்தவளை,

“பொண்டாட்டி மேடம், இங்கே ஒருத்தன் இருக்கிறேன்”

என்றவனின் கையில் எதையோ பார்த்தவள் நகர்ந்து அருகில் வந்தாள். அவன் அலைபேசியில் என்ன பார்த்துக் கொண்டு இருக்கின்றான் எனப் பார்க்க விழைந்தாள். இப்போது அவள் முகமானது அவன் தலைமீது இருந்தது.

“இதெல்லாம் நம்மளோட நேற்றைய புகைப்படங்கள் இல்ல கார்த்திக், வாவ் அருமையா இருக்கு…. ஹே மை ஹேண்ட்சம்” புகைப்படத்தில் இருந்த அவனைத் தொட்டு முத்தமிட்டாள்.

“பக்கத்திலதான் இருக்கேன்” என அவன் சுட்டிக் காட்டவும் இப்போது அவள் முத்தங்கள் மெய் நிகரிலிருந்து மெய்க்கு இடம் மாறின.

“எந்த புகைப்படத்தை ப்ரேம் போட கொடுக்கலாம்?” அவன் பார்த்துக் கொண்டு இருந்தான். புகைப்படத்தில் முகம் மலர அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும் மீராவை இவன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனைப் போலவே அவளும் “நானும் பக்கத்திலதான் இருக்கேன்” என்றாள்.

“எதுக்கு வம்பு? முத்தம் கொடுத்தா எச்சிப் பண்றன்னு சொல்வ?” அவன் சொல்லவும் அவன் கன்னத்தை திருகினாள்.

“இந்த புகைப்படம் நல்லாதான் இருக்கு, ஆனால் யார் கண்ணும் பட்டுரும் சோ பர்சனல் கலெக்சனுக்கு மட்டும் வைக்கப் போறேன்” என்றவனிடம்

“ஆமா போங்கப்பா போட்டோக்கெல்லாமா கண்ணு வைக்கிறாங்க? சரி நீங்க மாமா மாமி புகைப்படம் வச்சிருந்தீங்கல்ல…காட்டுங்க” அவனிடம் இருந்த அவன் பெற்றொர்களின் புகைப்படங்களை கேட்டு பார்த்திருந்தாள். இப்போது அவனது மார்பில் அவள் தலை இருந்தது.

அவன் பெற்றோர்களின் புகைப்படம் அவனும் அவன் பெற்றோரும், அவனும் உறவினர்களும் விழாக்களில் மற்றவர்களுடனான புகைப்படங்கள். தாத்தா பாட்டியுடன், உறவினர்களுடனான புகைப்படங்கள் என அவற்றுள் அவனின் அவன் பெற்றோரின் பல புகைப்படங்கள் இருந்தன.

கார்த்திக்கின் வயது வயது பத்து அல்லது பன்னிரண்டு இருந்திருக்க வேண்டும் அந்த வயதின் புகைப்படத்தோடு அந்த தொகுப்பு முடிந்திருந்தது. அவனுடைய எந்த புகைப்படத்தையுமே அவள் காணவில்லை.அதன் காரணம் எளிதில் யூகிக்கக் கூடியதுதானே? குடும்பமாக மூவருமாக புன்னகைத்து நிற்கும் அந்த புகைப்படத்தை எடுத்தவள்,

“இதையும் ஃப்ரேம் செய்வோமா? அந்த சுவர்ல வைக்க நல்லா இருக்கும்” என்றாள்.

“ம்ம்… செய்வோம்”

பேசிக் கொண்டே இருந்தவள் எப்போது தூங்கினாளென அறியாள். ஏடாகூடமாக குறுக்குவாட்டில் படுத்திருந்தவளை நிமிர்த்தி படுக்க வைத்து அணைத்து தூங்கினான்.

அடுத்த நாள் மாலை மீரா தங்கள் உறவினர்களை எதிர்பார்த்து சீக்கிரமே புறப்பட்டு நின்றாள். மணிக்கணக்காக தன் வீட்டு வாசலையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள்.உறவுகள் எல்லாம் வர ஓடி ஓடி உபசரித்து தங்களது வீட்டிற்கு வரவேற்றுக் கொண்டிருந்தவள் கணவன் வாங்கித் தந்திருந்த அந்த ஃபேன்சி சேலையில் மிக மிக அழகாக,நளினமாக கம்பீரமாக இருந்தாள்.

மற்ற எல்லாரும் வீட்டினுள் வந்து விட்டிருக்க மகளைப் பார்த்த தங்கம் வாசலில் நின்று விட்டிருந்தார்.

“அம்மா, என்னம்மா வாங்க” என்றவளிடம் பொறு என்றவர் தரையில் இருந்து மண்ணை எடுக்கவும்,

“என்னம்மா?”

“ம்ம்… எல்லார் பார்வையும் ஒன்னு போல இருக்காதில்ல?” உள்ளே சென்றவர் மகளுக்கும் மருமகனுக்குமாக உப்பும் மிளகாய் வற்றல் சுற்றி பின் வாசலில் எரித்து விட்டு வந்தார்.

அனிதாவும் தன் குடும்பத்தோடு ஹைதராபாத் வந்திருக்க, மீராவிற்கு கிடைத்த வாழ்க்கையைப் பார்த்து அவளுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது. அவளும் என்னதான் செய்வாள்?

மீராவும், கார்த்திக்கும் அவள் அம்மா அப்பா சொந்தங்கள் என ஒருவரை விடாமல் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். சற்று நேரத்தில் பெண்கள், ஆண்கள், குழந்தைகளென தானாகவே அரட்டைக் குழுக்கள் உருவாகி இருந்தன. தங்கைகள், பிள்ளைகளை வைத்தே ஸ்னாக்ஸ்களை பரிமாற உணவும் அரட்டையும் களைக் கட்டியது. “அக்கா, பயங்கரமா மின்னுற நீ” தங்கைகள் முகம் வருட புன்னகைத்தாள்.

“500 வாட்ஸ்”

“என்னதுமா?”

“உன்னோட பளீர் சிரிப்புதான், எங்களுக்கு கண் கூசுதில்ல.”

“த்சு” சிரித்தாள்.

இரவு வரை அவ்வீடு கலகலவென இருந்தது. வந்த நேரம் முதலாக வாண்டுகள் எல்லாம் அந்த ஹாலைச் சுற்றி சுற்றி புகைப் படங்களாக எடுத்திருந்தனர். இரவுணவு சித்ரா, சுசித்ரா கேட்ட வகைகள் எல்லாம் இருந்தன. இதுவரை சுற்றிய இடங்களில் எல்லாம் தமக்கைக்கு வாங்கிய பொருட்களை அவர்கள் கொடுத்தனர்.அவற்றுள் முத்து நெக்லஸ் ஒன்றும் இருந்தது.அதனை தனது கழுத்தணிகளுக்கு மேலேயே அணிந்து அழகுப் பார்க்க செல்ஃபீக்கள் க்ளிக்கப் பட்டன.

“இதெல்லாம் நான் உங்களுக்கு வாங்கிட்டு வர லிஸ்ட் போட்டது” என்றாள்.

“அதுக்கென்னக்கா அந்த லிஸ்ட் மறக்காம அப்புறம் வாங்கிக் கொடு” சுசித்ரா சொல்ல, அதானே சித்ரா ஹைஃபைவ் கொடுத்துக் கொண்டாள்.

திரும்பச் செல்லும் முன் வீட்டை சுத்தம் செய்ய தங்கம் முனைய, “அம்மா நான் பார்த்துக்குவேன்” என அம்மாவை அவள் வேலை செய்ய விடவில்லை. அனைவரும் வீட்டை சுற்றிப் பார்த்தபோது ஏனோ படுக்கையறையை பூட்டியே வைத்திருந்தான். உபயோகத்திற்கு வைத்திருந்த ஓரிரு அறைகளை தவிர்த்து மற்றவைகளை சுற்றிக் காண்பித்த பின்னர் பூட்டியிருந்தான். இன்னும் வேலைக்கு ஆட்கள் வைக்காமலிருக்க வேலைகளை கூட்ட வேண்டாமென எண்ணியிருக்கலாம்.சுத்தம் செய்ய வந்த அம்மாவை தடுத்த அவளால் தங்கைகளை தடுக்க முடியவில்லை “நீ தனியா செய்ய கஷ்டம்ல?” எனச் சொல்லி திரும்பச் செல்லும் முன் சமையலறையை வீட்டை இயன்றவரை சுத்தம் செய்தே கொடுத்தனர்.

அனைவரும் ஒன்பது மணிக்கெல்லாம் விடைபெற்றிருந்தனர். வீடே வெறிச்சென்றானது. இருவரும் விருந்தினர்களை வழியனுப்பி கதவுகளைப் பூட்டி உள்ளே வரவும் மீரா மகிழ்வாக கணவனைக் கட்டிக் கொண்டாள்.

“ஏற்பாடுகள் எல்லாம் சூப்பரா இருந்துச்சுங்க.”

“ம்ம்”

இன்னும் ஏதேதோ பேசிக் கொண்டு இருந்தவள், “இந்த சாரி எனக்கு நல்லா இருக்கா? நீங்க சொல்லவே இல்ல?”

“உனக்கு அப்புறம் காய்ச்சல் வரலில்ல?”

“இல்லியே?”

“உடம்புக்கு நல்லா இருக்கு தானே?”

“சூப்பரா இருக்கேன்” வழக்கம் போல அவனிடம் இல்லாத தனது புஜத்தை காட்டினாள்.

கார்த்திக் தன் டிஷர்ட் கையை விலக்கி, தன் கையை மடக்கி முறுக்கி தன் புஜத்தைக் காட்டினான்.

மீரா “வாவ்…” என்ற அடுத்த நிமிடம் அவளை அவன் தூக்கி இருந்தான்.

“ஹம்மாடியோ, இப்ப எதுக்கு என்னை சட்டுன்னு தூக்கணும்? பயந்துட்டேன்ல”

“இந்த சாரி உனக்கு நல்லா இருக்கா? எப்படி நல்லா இருக்குன்னு கொஞ்சம் விலாவரியா சொல்லறதுக்குத்தான் தூக்குனேன்.”

அங்கே சில நிமிடங்கள் கழித்து அவளின் “யோவ்” மற்றும் இன்னபிற பேச்சு சப்தங்கள் தேய்ந்தன.

அடுத்த இரண்டாவது நாள் மீராவின் சொந்தங்கள் தமிழ் நாட்டுக்கு திரும்ப ஹோட்டலின் லாபியில் அவர்களோடு அமர்ந்து கார்த்திக் பேசிக் கொண்டு இருந்தான். மீராவிற்கு அவள் அம்மாவும், உறவினர்களும் அறிவுரைகள் பலவும் சொல்லிக் கொண்டு இருந்தனர். எல்லாவற்றையும் கவனத்துடன் கேட்டுக் கொண்டாள் அவள்.

“மாமா, இதோ கார்ட் வச்சுக்கோங்க” என்ற சித்ரா

“நான் விபரம் மெயில்ல அனுப்பிருக்கேன்” என்றாள்.

“த்சு.. அதெல்லாம் தேவையில்லாம எதுக்கு?” கடிந்துக் கொண்டான். ஹோட்டலில் காலை உணவு தங்குமிடமோடு இலவசம் என்ற போதும் மற்ற செலவினங்களுக்கு அவர்கள் உபயோகித்துக் கொள்ள, அவனது கார்டை கொடுத்திருந்தான். விருப்பம் போல செலவழிக்கச் சொல்லி மாமனாரிடமும் சொல்லி இருந்தான். தான் அருகே இருந்து கவனிக்க முடியாத தருணத்தில் அவனால் அவைகளைத்தான் செய்ய முடிந்தது.

ஊர் சுற்ற அனைத்திலும் அவர்களுக்கு உதவியாக அமர்த்தி இருந்த இரண்டு நபர்கள் வரவும் அவர்களுக்கு பணம் செட்டில் செய்தான்.

“அடுத்த முறை நாம குடும்பமா எங்கேயாவது ஊர் சுற்றப் போவோம், சரியா? உங்களுக்குள்ள பேசி, திட்டம் போட்டு சொல்லுங்க” மனைவியின் தங்கைகளிடம் சொல்லி வைத்தான்.

மீரா விமான நிலையத்தில் கண்கள் கலங்க குடும்பத்திற்கு விடைக் கொடுத்தாள். இருவரும் தம் வீட்டிற்கு திரும்ப வந்தனர். அந்த ஹாலில் அழகான புகைப்படங்கள் வரிசையாக அழகுற அமைந்து இருந்தன. முதலில் கார்த்திக்கின் பெற்றோர் அதன் பின் அவர்களுடன் கார்த்திக் நிற்கும் புகைப்படம், தாத்தாவுடன் கார்த்திக் அடுத்து மீராவின் குடும்பம் அடுத்து தம்பதிகளாக கார்த்திக் மற்றும் மீராவின் புகைப்படம்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here