மனதோரம் உந்தன் நினைவுகள்_26_ஜான்சி

0
283

Manathoram Unthan NinaivukaL_Epi 26_Jansi

அத்தியாயம் 26

காத்திரு

சூல் கொண்ட மேகத்தின் ஒரு துளி…

விடுபட்டு

தரை தொடுமுன்

இலையொன்றில் படர

காத்திருந்ததுப் போலவும்…

பொன் பொறியாளன்

நுணுக்கமாய்

நகை ஒன்றில்

கல்லொன்றைப் பதிக்க

காத்திருந்ததன் போலவும்…

உந்தன் காதல்

எந்தன் ஊன் உதிரம் மட்டும்

விஷமாய் இறங்கி – நான்

உந்தன் காதலில்

பித்துக் கொள்ளும் மட்டும்

காத்திரு என் அன்பனே.

கார்த்திக்கும் மீராவும் ஓரிரு நாட்கள் கழித்து தாத்தாவை சந்தித்து வந்த பின்னர் தேனிலவுக்காக மாலத்தீவு (Maldives) புறப்பட்டனர். இள வான நிறம் கொண்ட கடற்கரைகளும், அழகழகான தீவுகளுமாக மாலத்தீவு அந்த புதுமணத் தம்பதிகளுக்கு சொர்க்கமாகவே இருந்தது. பனானா ரீஃப்பில் ஸ்கூபா டைவிங்க் அனுபவத்தை இருவரும் மிக இரசித்தனர்.

இது நாள் வரையிலும் ஏறக்குறைய தலைமறைவு வாழ்க்கை போல வாழ்ந்திருந்த கார்த்திக் இப்போதுதான் வாழவே ஆரம்பித்து இருந்தான். அல்லது மீரா அவனது வாழ்க்கையை வண்ணங்களால் நிரப்பி இருந்தாள் எனலாம்.

அவனிடம் இருந்த தனிமை உணர்வு வெகுவாக மறைந்துப் போயிருந்தது.அதென்னமோ ஒருவர் மற்றவர் மனதறிந்து நடக்கும் காதல் இரசவாதம் அவர்களிடையே வெகு இயல்பாக இருந்தது.

அவளை முழுக்க முழுக்க தனக்காகவே உரிமைக் கொள்ளும் உணர்வு அவனிடமும், எல்லா நேரமும் வளைந்துப் போகாமல் அவ்வப்போது தவறை தவறெனச் சொல்லும் இயல்பும் என இப்போதும் இருவருக்குள்ளும் கருத்துக்கள் முட்டிக் கொள்ளும் தான் ஆனால், அன்றன்றைய விவாதங்களை அன்றன்றே முடித்து புன்னகைக்க கற்றிருந்தார்கள். அல்லது அவர்களுக்கிடையேயான அந்த காதல் அதை கற்றுக் கொடுத்திருந்தது.

அவர்கள் வீட்டிற்கு சுத்தம் செய்ய மட்டும் ஆளை நியமித்து இருந்தான் கார்த்திக். மற்றவைகளை இருவரும் பார்த்துக் கொண்டனர்.

கார்த்திக் காலையிலேயே துணிகளை துவைக்கப் போட்டிருந்தான். தனது வேலைகள் முடிந்ததும் வாஷிங்க் மெஷினில் இருந்து எடுத்த துணிகளை உலர வைத்தவள் காய்ந்த துணிகளை எடுத்து வந்து மடிக்கலானாள். கணவனின் அடுக்கில் அவன் துணிகளை வைத்தவள் தனது அடுக்கில் தனது துணிகளை வைத்துக் கொண்டு இருக்கையில் கார்த்திக் பின்னோடு வந்து அணைத்தான்.

திரும்பியவளுக்கு அவனது அவசர இச்சுக்கள் உதட்டிலும் கன்னங்களிலும் கிடைத்தன.அதனோடு கூட தன் கன்னத்தை அவளது கன்னத்தோடு உராய்ந்தான். மழுமழுத்த கன்னங்கள் உராய்ந்ததில் சுகமாய் கண் மூடினாள். கண் திறந்தவள் அவனை ஆராய்ச்சியாகப் பார்த்தாள். அப்போதுதான் முகம் மழித்து வந்திருப்பான் போலும். தரச் சான்றிதழ் கொடுக்கின்றவள் போல அவனது கன்னத்தை இடம் வலமாக வருடிப் பார்த்தவள் “ம்ம்” எனச் சொல்லி திருப்தியானாள்.

சொல் பேச்சு கேட்டதற்கு பரிசுகள் கொடுக்க வேண்டுமல்லவா? உயரம் போதாமல் நுனி காலில் நின்று எக்கி அவனுக்கு முத்தங்கள் கொடுத்தாள். வழக்கம் போல அவன் நாடியை கடித்து வைக்கவும் மறக்கவில்லை.

“சூப்பர்… இப்பதான் நல்லா இருக்கு. கல்யாணம் ஆகி ஒரு மாசமாகலை இப்பவே சாமியார் மாதிரி தாடியும் முடியும் வளர்த்தா காட்டுக்கு துரத்தி விட்டுருவேன்” மிரட்டினாள்.

“இரண்டு நாள் தாடிக்காகவா இந்த மிரட்டல்? ரொம்பத்தான்” அவனின் சலிப்பு குரலில் மட்டுமே, அவளை இறுக்கித் தழுவிக் கொண்ட கைகள் வேறு கதைகள் சொன்னது.

“இன்னிக்கு ஏன் சாரி கட்டலை மீரு, சாரிலதான் அசத்தலா இருப்ப.”

“போரடிக்குதுப்பா…”

“இது நல்லா இருக்கே, கல்யாணத்துக்கு முன்னால தினம் சாரி கட்டி போட்டோலாம் அனுப்பி என்னை கிறுக்கு பிடிக்க வச்சே இல்ல… இப்பவும் கட்ட வேண்டியதுதானே? பொறு நானே சேலை எடுத்து தரேன்.”

“அச்சோ இப்பதான் அடுக்கி வச்சேன்… நீங்க கலைச்சுடாதீங்க” பதறியவளை கண்டுக் கொள்ளாமல் ஒரு சேலையை குறி வைத்து இழுக்க அதன் கீழே இருந்த ஒரு டிசர்ட்டும் லுங்கியும் கீழே விழுந்து வைத்தன.

“அச்சோ” பல்லைக் கடித்தவள் அவசரமாக அதை மறைத்தாள்.

“ஏ மீரு… அது என்ன? முன்ன பார்த்தது போலவே இருக்கு …காண்பி…” என்றவனிடம் மறைக்க முயன்றாள். போராடி அவள் கையினின்று அதனை பிடுங்கி இருந்தான்.

“ஓ..” என்றவனுக்கு அந்த உடைகள் குறித்த நினைவுகள் வந்து விட்டிருந்தன.தானும் மீராவும் மழையில் நனைந்து வந்த அன்று அவள் வீட்டில் ஈரமான தனது உடைகளுக்குப் பதிலாக அவள் அப்பாவின் உடைகளணிந்து இருந்தானல்லவா? இவை அவைகள்தான்.

புரிந்ததும் உடைகளை கையில் வைத்தவன் திரும்பி பார்த்தான் அங்கோ அவள் இல்லை.கீழே விழுந்து கிடந்த துணிகளை எடுத்து அடுக்கி வைத்தான். அவன் எடுத்துக் கொடுத்த சேலை அங்கில்லை. அதனை உடுத்தச் சென்றிருப்பாள் என அனுமானித்தவனாக ஹாலில் அமர்ந்திருந்தான்.

அரை மணி நேரம் கழித்து வந்தவள் ஹாலில் எட்டிப் பார்த்தாள்.

“இக்கட ரா”

அமைதியாக வந்தவள், “அது பற்றி ஒன்னும் கேட்கக் கூடாது” என அவன் பேச ஆரம்பிக்கும் முன்பே அந்த உடைகள் குறித்து கேட்கக் கூடாதென தடா விதித்தாள். ஏதோ கேட்க வந்தவனது வாயையும் பொத்தினாள்.

அவள் முகச்சிவப்பே ஏதோ இருக்கின்றதெனச் சொல்ல, அவனால் அதை எப்படி தெரிந்துக் கொள்ளாமல் இருக்க முடியும்?

“வாவ் இந்த சேலையில் அசத்தலா இருக்க” சொன்னவன் தன் கைக்குள் அவளை இழுத்துக் கொண்டான்.

“தாங்க்யூ கார்த்திக்… இது அம்மா செலக்ஷன் நல்லா இருக்கில்ல?”

“ம்ம்… உனக்கு எது உடுத்தினாலும் அழகுதான்.”

“இது ஹஸ்பெண்ட்ஸ் டெம்ப்ளேட் டயலாக்… இதெல்லாம் சொல்லக் கூடாது”

“அப்படின்னா நான் மாத்திச் சொல்லட்டுமா?” எதையோ விஷமமாக சொல்லப் போகின்றான் என அவன் தொனியில் தெரியவரவும் அவன் வாயை அவசரமாக பொத்தினாள்.

“முடியலை சாமி உங்களோட… நீங்க பேட்பாய்… வெரி வெரி பேட் பாய்” கடுப்பானாள்.

“டெம்ப்ளேட் டயலாக் சொல்லக் கூடாது… சொந்த டயலாக் சொல்லக் கூடாது. நான் ரொம்ப ரொம்ப பாவம்.”

“தெரியும் தெரியும் ரொம்ப பாவம் தான்” என்றவள் அப்படியே தங்கள் இருவரின் சுயமிக்களை எடுத்தவள். அவனிடம் கொடுத்து தனது சில புகைப்படங்களை எடுத்தாள்.

“வாவ் நான் இப்ப ரொம்ப அழகாகிட்டேன்ல?”

“எல்லாம் ஐயாவோட மகிமை” என்றவனுக்கு எதிர்பாராத விதமாக சில முத்தங்கள் கிடைத்தன.

“ஆமாம் கார்த்திக் உங்களோட இருக்கிறதே எனக்குப் போதும்… நான் அவ்வளவு ஹாப்பி” என்றவள் இருந்ததிலேயே டீசண்டான சில புகைப்படங்களை தங்கள் வாட்சப் க்ரூப்பிற்கு அனுப்பி வைத்தாள்.

தங்கைகளிடம் வாட்சப்பில் அவள் உரையாடிக் கொண்டு இருக்கையில் அருகிருந்தவன் “சரி அந்த ட்ரெஸ், நான் உடுத்திருந்த ட்ரெஸ் வீட்ல எங்க பத்திரமா வச்சிருந்த?” என அவளிடம் கேட்டான். அவளிடம் எப்போது எந்த விஷயத்தை எப்படி போட்டு வாங்க வேண்டும் அவனுக்குத்தான் தெரியுமே?

“அது… அதை நான் மெத்தை கீழே ஒளிச்சு வச்சிருந்தேன்ல… உங்க நினைவு ரொம்ப வந்தால்…இல்லை உங்களை உடனே பார்க்கணும்னு ஆசையா இருந்ததுன்னா…இல்லை என்னிக்காவது தூக்கமே வரலைனா… அதை எடுத்து பக்கத்தில வச்சுக்குவேன்” தன்னை அறியாமல் சொல்லி விட்டிருந்தவள் தான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறோம் என உணர்ந்ததும் அலைபேசியை தள்ளி வைத்து விட்டு திரும்பி அவனோடு கட்டிப் புரண்டாள்.

இப்போது அவனது முடி அவள் கையில் இருந்தது.

“அதெப்படி நான் சொல்லியும் நீங்க என் கிட்ட என் இரகசியம் கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்? ஹஸ் & வைஃப்னா எல்லாம் சொல்லிடணுமா? நீங்களும் தான் நான் தந்த இரண்டாயிரம் ரூபாயை இன்னும் செலவழிக்காம பர்ஸ்ல வச்சிருக்கீங்க. முன்ன எப்படியோ இப்ப நம்ம மேரேஜீக்கு அப்புறமும் அப்பப்ப எடுத்துப் பார்க்குறீங்க. நான் என்னிக்காவது என்னன்னு உங்க கிட்ட கேட்டிருக்கேனா?”

கையில் சூலம் மட்டும் தான் இல்லை காளி போல அவன் மேல் அமர்ந்து இருந்தாள் அவன் மனைவி.

“ஷப்பா முடியலை” அவளை தன்னோடு கார்ப்பெட்டில் சரித்தவன் மூச்சு வாங்கினான்.

“அந்த இரண்டாயிரம் ரூபா நோட்டா? அதிலென்ன இரகசியம் இருக்கு. அப்பப்ப நீ என்னை கடுப்பேத்தும் போதெல்லாம் இவ இந்த இரண்டாயிரம் ரூபா தரும் போதே அவ எவ்வளவு பெரிய இராட்சசின்னு தெரிஞ்சுதில்ல. அத்தோட எஸ்கேப்பாகாமல் இப்படி தாலிக் கட்டி மாட்டிக்கிட்டியேன்னு அந்த ரூபா நோட்டைப் பார்த்து என்னை நானே திட்டிக்குவேன்” என்றான்.

‘போங்க போங்க நான் இராட்சசியா உங்களுக்கு?” எழுந்தவள் தரையில் கால்களை உதைத்து முன்னேச் செல்ல, அவளை சமாதானப் படுத்த பின் தொடர்ந்தானவன்.

ஊடலில்லாமல் என்ன காதல்? அவளை சீண்டுவதில் கார்த்திக்கிற்கு பேரின்பம். சின்னச் சின்ன விஷயத்திற்கும் கோபப்படுகின்றவளை சீண்டி சீண்டி பின்னர் சமாதானப் படுத்தும் அவன் விளையாட்டுக்கள் அவளுக்கும் இப்போதெல்லாம் மிகவும் பிடித்திருந்தன.

கடந்த சில வாரங்களாக, வாரத்தில் இரண்டு நாட்களாவது தாத்தாவின் வீட்டில் சென்று இருக்கும் படியாக மீரா பார்த்துக் கொண்டாள். இங்கும் அங்குமாக அலைந்ததில் கார்த்திக் அவள் மீது மிக மிக கோபமாக இருந்தான்.

அதற்காக அவனுக்கு தாத்தா மீது பாசமில்லை என்பதெல்லாம் இல்லை. அவன் தாத்தாவை சந்திக்கச் செல்லும் போதெல்லாம் சென்ற அன்றே வீடு திரும்புவதை வழக்கமாக வைத்திருக்க, மீராவோ அங்கேயே தொடர்ந்து இரண்டு நாட்களாக தங்குவது அவனுக்கு அவ்வளவாக விருப்பமில்லை.

சும்மா இருப்பதால் தான் இவள் மூளை அதிகமாக யோசிக்கின்றதென அவன் எண்ணி அவளுக்காக தான் யோசித்து வைத்திருந்த சாத்தியப்படும் தொழில் விபரங்களை எல்லாம் சொல்லி அதில் எதையாவது செயல்படுத்தச் சொல்லி அவன் கேட்க காதிலேயே போட்டுக்கொள்ளாமல் மறுத்திருந்தாள் இராட்சசி.

இப்படியாக ஒருவர் மற்றவரை கடுப்பேத்தும் பணிகளை செவ்வெனே செய்து வந்தனர்.

“நீ திருந்தவே மாட்டியாடி?” தன் தலையை கோதிக் கொண்டு இருந்தவளை கடுப்படித்தான்.

“ஏன் நீங்க திருத்த வேண்டியதுதானே?”

“முடியாமத்தானே புலம்புறேன்.”

எத்தனையோ முறை போல அவனது தலையில் முடிகளை விலக்கி, அங்கு இருந்த அந்த தையல் காயங்களை அன்றும் பார்வையிட்டுக் கொண்டு இருந்தவள் அவனை கண்டுக் கொள்ளவில்லை. கார்த்திக் சொல்லாவிட்டாலும் அவனது கண்பார்வை பறிபோன விபத்தைக் குறித்து தாத்தா சொல்லி அறிந்திருந்தாள்.

பிசினஸ் பிசினஸ் என எப்போதும் மும்முரமாக இருந்த கார்த்திக்கின் தந்தை மனைவியின் நச்சரிப்பை தாங்காமல் அந்த முறை மனைவியையும், மகனையும் தான் தொழில் நிமித்தமாக சென்றிருந்த தில்லி பயணத்தில் இணைத்துக் கொள்ள அவர்கள் மூவரும் ஆக்ரா சென்று திரும்பிய போது அந்த கொடிய விபத்து நிகழ்ந்ததாம்.

கார்த்திக் பெற்றோர்கள் இறப்பை அந்த கணமே உணர, அவனது தலையிலும் கண்ணிலும் காயங்களோடு யாருமற்ற அந்த நிலையில் பெரும் பயத்தோடும் அனாதரவான நிலையோடும் உணர்விழந்து மருத்துவமனையில் உயிருக்குப் போராடி இரண்டு நாட்கள் தவித்த பின்னரே தாத்தா வந்து அவனை தேடி வந்துப் பார்த்து இருந்திருக்கிறார். அதன் பின்னரும் என்ன? பல மாத சிகிச்சைகளில் நலமானவனை உற்றோரும் சுற்றமும் விலகி நிறுத்தி வேடிக்கை பார்க்க அவனும் முழுமையாக தனிமைப்பட்டு விட்டிருந்தானல்லவா? என்ன பணம் இருந்தும் என்ன? தாய் தந்தை அற்றவருக்கான வாழ்க்கை எல்லாம் வாழ்க்கை தானா?

அந்த பதிமூன்று வயதில் உடலிலும் மனதிலும் அவன் என்னென்ன கொடுமைகளை அனுபவித்தானோ? எண்ணியவளால் அன்றும் அடுத்த நாட்களிலும் அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை. தாத்தா வீட்டிற்கு பயணமான இரண்டாவது முறை இது நடந்திருக்க தனக்கு நேர்ந்ததை எண்ணி அவள் அழுவதனாலும் அவனுக்கு அங்கே அடிக்கடி அழைத்துச் செல்ல விருப்பமில்லை.

அன்றிலிருந்து அவன் தலையின் காயங்களை தினம் ஒரு முறையாவது வருடிக் கொடுப்பது அவளுடைய வழக்கம்.

“விடு அதெல்லாம் சரியாகிடுச்சு”

“அப்ப நான் உங்க கூட இருந்திருக்கணும்..”

“எது அப்ப நீ அஞ்சாறு வயசு பாப்பா…அப்ப என் கூட இருந்திருப்பியா?” முறுவலித்தான்.

“எனக்கு அடிப்பட்டதும் உங்களுக்கு ஏன் அவ்வளவு வருத்தமா இருந்ததுன்னு முன்ன அடிக்கடி யோசிப்பேன். இப்ப புரியுது.”

“ஓ புரிஞ்சிருச்சா…” முறுவலித்து தொடர்ந்தான்

“வலி வேதனைனு இருக்கிறப்ப யாருமில்லாம தனியா இருப்பது ரொம்ப கொடுமை… அதெல்லாம் பழகி மரத்துப் போச்சு.” என்றவனிடம்

‘இப்போது அதே தனிமையை தாத்தாவிற்கு நீ கொடுத்தது ஏன்?’ எனக் கேட்க அவளுக்கும் ஆசைதான். ஆனால், அவனது மனதை வருத்தும் எந்தக் கேள்வியையும் அவளால் கேட்கவியலாது. தான் அவனைக் குறித்து அறிந்தவைகளை விடவும் அறியாதவைகள் அதிகம் என்பது அவளது அனுமானம்.

அவள் கையை பிடித்து தன் மேல் சரித்துக் கொண்டவன் கேட்டான்.

“உனக்கோ சும்மா இருந்து உனக்கு பழக்கமில்லைனு தெரியும்.எதுக்கு எந்த பிசினஸீக்கும் சரிங்க மாட்டேங்கிற?”

“ம்ம்ம்…”

“மரியாதையா சொல்லு…”

“எனக்கு இன்னும் இந்த நகரம் பழகலை”

“அது தான் நாம அப்பப்ப சுத்துரோமே? தெலுங்கும் ஓரளவு பழகியாச்சு. அப்படியே இல்லைனாலும் இங்கிலிஷ்ல பேசலாம். உண்மையான காரணம் சொல்லு இப்ப” தயங்கியவள்

“நம்ம பாப்பா வந்தா முதல்ல எனக்கு கவனிக்க முடியணும்ல? எதையாவது தொழில் ஆரம்பிச்சுட்டு, அதை கவனிக்காம விட்டா அது வேற மன அழுத்தமா ஆகிடும். காசும் வீணாகிரும்… எதுக்கு வம்பு? நான் முதலில் திடமா நின்னுக்கிறேனே?” சொன்னவளுக்கு எப்படியோ கேட்டவனுக்கு கற்பனையே மிக சுகமாக இருந்தது.

“நான் இதெல்லாம் யோசிக்கலைமா… சரி விட்ரு உனக்கென்ன விருப்பமோ அதைச் செய்.” தனக்கு வேண்டிய பதிலை அவனிடமிருந்து அவள் வாங்கி விட்டாள்.

வாரம் இரு நாட்கள் தாத்தா வீடு சென்று தங்குவதை மட்டும் அவள் விடவில்லை. “இங்கென்றால் அடிக்கடி மின்சாரம் தடைப்படும், வேலை கெடும் நம் வீட்டில் ஜெனரேட்டர் வசதி இருக்கின்றது” எனக் கார்த்திக் காரணம் சொல்ல… அங்கு பழுதாகி இருந்த ஜெனரேட்டரை மாற்றி புதிதாக ஜெனரேட்டர் ஒன்றை அவனை வாங்க வைத்தாள். வைஃபை(Wifi) புதிய இணைப்பை பொருத்த வைத்தாள். வீட்டின் உள்ளே மற்றும் சுற்று புறங்களை சீரமைக்க ஆட்களை அமர்த்தி வேலை வாங்கினாள். வீட்டை சீரமைக்க தேவையான பொருட்களை எல்லாம் வாங்கினாள். மொத்தத்தில் கார்த்திக்கின் வங்கிக்கணக்கில் இருந்து பல இலட்சங்களை குறைய வைத்தாள்.

“ரொம்ப அநியாயம் செய்றடி… பார்த்துப் பார்த்து புருசன் வீடு வாங்கி வச்சா அதை ஒரு வார்த்தை இன்னும் நீ பாராட்டலை. இங்க வந்தால் மட்டும் அந்த மரம் நல்லா இருக்கு, அந்த செடி நல்லா இருக்கு, இந்த குருவி நல்லா இருக்குன்னு கடுப்பேத்துர நீ?” பொறுக்கவே முடியாமல் எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்றவனை அணைத்தே கோபத்தீயை அணைத்தாள். சில முத்தங்கள் இடம் மாறிய பின்னர் அவன் கோபமும் அணைந்ததோ?

அவர்களுக்கிடையேடான கோபங்கள் எல்லாம் குறை ஆயுள் கொண்டவைகள் தானே? அவனுக்கு பிடிக்காதவற்றை அவள் செய்தாலும் சிலதை அவன் கண்டுக் கொள்ளாமல் விட்டு விடுவான்.அவள் மட்டும் அப்படியல்ல பெரிய விஷயங்கள் என அவன் நினைப்பவற்றை இலகுவாய் கடந்துச் செல்கின்றவள் சின்னச் சின்ன பிரச்சனைகளை பெரிதாக்குவாள்.

தாத்தாவின் வீட்டிற்கு வந்துச் செல்வதிலும் அவளது ஆதிக்கமே நீடிக்க, அவன் விட்டுக் கொடுத்து விட்டான். தாத்தாவிற்கு பேரனும், பேரன் மனைவியும் அடிக்கடி வந்து அவரோடு தங்கி இருப்பதில் அத்தனை உற்சாகம்.

“நா கொடாலு” (என் மருமகள்) என வருவோர் போவோரிடம் எல்லாம் அறிமுகப்படுத்துவார். மீராவை அவருக்கு அவ்வளவாக பிடித்திருந்தது. மீராவும் அக்கம் பக்கம் வீட்டினரிடம் நட்பை வளர்த்துக் கொண்டாள். தனது மனைவியும், மூத்த மருமகளும் இல்லாமல் போன பின்னர் அந்த வீடு இத்தனை அழகாக அலங்கரிக்கப் படாமல் பெயரளவிற்குத்தான் சுத்தப் படுத்தப்பட்டுக் கொண்டு இருந்தது.

மீரா அந்த வீட்டிற்கே உயிர்ப்பைக் கொண்டு வந்திருந்தாள். முக்கால்வாசி நேரம் அரைகுறை தெலுங்கு மொழியில் தாத்தாவும் பேத்தியும் அரட்டை அடித்ததில் கார்த்திக்கிற்குதான் மிகவும் கடுப்பானது. புரியாததற்கெல்லாம் அவனிடம் வந்துதானே அவள் விளக்கம் கேட்பாள்.

கார்த்திக்கின் பெற்றோரின் அறையில் தான் அவர்கள் தங்கி இருந்தனர். வெட்டி முறித்து விட்டு வரும் மனைவியின் கொலுசொலி சப்தத்தில் மடிக்கணிணியில் இருந்து நிமிர்ந்தவன் வைத்தக் கண் வாங்காமல் அவளை பார்க்க,

“என்ன பார்க்கிறீங்க? நான் ரொம்ப அழகா இருக்கேனா கார்த்திக்?” மாடலைப் போல அவள் நடைப் பழக,

“என்ன அரட்டை முடிஞ்சிருச்சா?” என்றான்.

“ம்ம்…“பொறாமை, பொறாமை” என அவனைக் கண்டுக் கொண்டவளாய் சீண்டினாள்.

“அப்படி இரண்டு பேரும் என்னதான் பேசுவீங்க?”

 “உங்களைப் பற்றி, நம்ம சொந்தங்களைப் பற்றி பக்கம் பக்கமா பேசுவோம். இன்னிக்கு உங்க சின்ன வயசு புகைப்படங்கள் எல்லாம் கூட நான் பார்த்தேனே?” அவனருகில் அமர்ந்தாள்.

“ஓ”

“உங்க தங்கச்சி வந்திருந்தாங்க” என்றதும் மடிக்கணிணியை அப்புறப்படுத்தி விட்டு அவளை கவலையாய் பார்த்திருந்தான்.

“நல்லா பேசினாங்க, ரொம்ப அழகா இருக்காங்க”

“போச்சு, வம்பு வரப் போகுது நீ தாங்கிக்க மாட்டமா. வா நம்ம வீட்டுக்கு போகலாம்.”

“என்ன பிரச்சனை?”

“ம்ப்ச்ச்… அவங்களுக்கு நான் இந்த வீட்ல இருக்கிறது அவ்வளவா பிடிக்காது. அப்பா அம்மா இல்லைன்னதும் வீடு முழுசுமே அவங்களுக்குத்தான் என்பது போல நடந்துக்குவாங்க. அதனால நான் இங்க உரிமை எடுத்து எதையும் செய்யறதில்ல மீரு. பிரச்சனைன்னு வந்தா தாத்தா மனம் நோகும். எதுக்கு வம்புன்னு விலகியே போயிருவேன். முன்னயும் ஆஃபீஸ்லருந்து அங்க அபார்ட்மெண்ட்லயே இருந்துக்குவேன். எப்பவாவதுதான் தாத்தாவை பார்க்க வருவேன். அதிக நாள் வந்து தங்கினா சித்தப்பா மக மாதுரி வந்து விபரம்லாம் பார்த்துட்டு போவா… அப்புறம் சித்தி இல்லைன்னா சித்தப்பா வந்து தாத்தா கவனிக்காத நேரம் என்னை எதையாச்சும் சொல்லுவாங்க. ஒன்னு இரண்டு முறை இப்படியே நடக்குறதை பார்த்துட்டு நான் பிரச்சனையே வேணான்னு விலகியே இருந்தேன்.”

முன் நெற்றிச் சுருங்கப் பார்த்திருந்தவள் நெற்றிச் சுருக்கத்தை நீவி விட்டான்.

“வயசான காலத்தில தாத்தா நிம்மதியா இருகட்டும்மா… நம்மளால எதுக்கு வம்பு? தாத்தா தந்த அப்பாவோட பணம்லாம் சேர்த்து ஆரம்பிச்சதுதான் என்னோட பங்கு வர்த்தகம் ரொம்ப ரிஸ்க்லாம் எடுக்காமல், பதட்டப்படாமல் சேர்த்ததுதான் என்னோட பணம்லாம். நமக்கு அது போதும்…எதுக்காக பூர்வீகச் சொத்துக்காகவெல்லாம் பிரச்சனை சொல்லு?”

“…”

“என்ன என் மேல கோபமா?”

“பூர்வீகச் சொத்து வேண்டாம்னா, வேண்டாம் என்று நீங்க எழுதிக் கொடுத்துட்டு தாத்தா கூடவே இருந்து கவனிச்சிருக்கணும். உங்களுக்காகவே அவங்க இத்தனை வருசம் உயிரை கையில பிடிச்சுட்டு இருக்கிறப்ப, பிரச்சனை வேண்டாம்னு விலகி இருந்தேன்னு சொல்லறதை என்னால ஏத்துக்கவே முடியலை கார்த்திக்.”

“ஏ மீரு அப்படி இல்லடா, தாத்தாக்கு துணையா இருக்கிறவங்க எல்லாருமே சித்தப்பா ஆட்கள்.நான் அடிக்கடி வந்து போனாலே ஒவ்வொன்னும் விபரம் அங்க போயிடும். என்னால முடிஞ்சது தாத்தா நிம்மதியா இருக்க நான் விலகி இருக்கிறதுதான். நீ நினைக்கிறது போல அவங்க நல்லவங்க இல்லைமா.”

“தாத்தாக்கு சொந்த பந்தமில்லாம தனியா இருக்கிற வயசா இது? இப்பதான் அவங்களுக்கு துணைக்கு ஆள் வேணும். உங்க சித்தப்பா குடும்பம் வந்து இருந்து கவனிச்சிருந்தால் கூட நாம கவனிக்காம தனியா போய் இருக்கிறதில அர்த்தம் இருக்கு. இப்படி நாலஞ்சு பேரை வேலைக்கு வச்சுட்டு வேவு பார்த்திட்டு அவங்களை வயசான காலத்தில தனியா விட்டுருக்காங்க, உங்களையும் அண்ட விடலை. அதெல்லாம் நான் இவங்க இஷ்டத்துக்கு நடந்துக்க விட மாட்டேன்.அப்பப்ப நாம நம்ம வீட்டுக்கு போயிட்டு வரலாம். மத்தபடி இங்கேயே இருந்துக்குவோம்.” பிடிவாதமாகச் சொல்லி விட ‘என்ன என்ன பிரச்சனை எல்லாம் வரப் போகின்றதோ?’ என கார்த்திக் விழி பிதுங்கினான்.

மாதங்கள் கடந்தன வாரத்தின் சில நாட்கள் தாத்தாவின் வீட்டிலும், சில நாட்கள் தங்கள் வீட்டிலும் என இரண்டு வீட்டையுமே தனது கவனிப்பிற்கு உள்ளாக மீரா கொண்டு வந்திருந்தாள்.

தங்களது வீட்டிற்கு வந்தாலும் கூட தாத்தாவின் உணவு நேரங்களில் அவரது சமையலுக்காக வைத்திருக்கும் அம்மாவிற்கு அழைத்து விசாரித்துக் கொள்வாள்.

தாத்தாவிடம் நான்கு முறையாவது பேசாமல் இவளுக்கு முடியாது. அதில் பெரும்பாலானவைகள் கார்த்திக் குறித்த குற்றச்சாட்டுகளாகத்தான் இருக்கும். தன் பேரனை அவன் மனைவி கவனிக்கின்ற விதத்தை மிக இரசனையோடு பார்க்கின்றவர் அல்லவா? என்னதான் அவள் அவனை எதையாவதுச் சொல்லி வம்பிழுத்தாலும் அவள் மனம் முழுக்க அவனுக்கான அன்பே என்பதை அறிவாரல்லவா? அவன் மட்டும் என்னவாம்? எப்போதும் அவளை சீண்டுவதையே வேலையாக வைத்திருப்பான்.

அவர்கள் இருவரும் வந்தால் அவரது முழு நாளும் புன்முறுவலோடுதான் கழியும்.மற்றவர்களைப் போலத்தான் தன்னுடனும் ஒட்டாமல் அலைகின்றான் என எண்ணி இருந்தவருக்கு பேரன் அனுபவித்த துயரங்கள் தெரியாது. தெரிய வரும் போது?

அன்று கார்த்திக்கும் மீராவும் தங்களது வீட்டில் இருந்தனர். மாதாமாதம் மாதவிடாய் தவறி வந்தாலே போதும் பரிசோதித்து பார்க்கவென வீட்டில் ஓரிரண்டு ப்ரெக்னென்சி டெஸ்ட் கிட் (pregnancy test kit) வைத்திருந்தாள். அது போல அன்றும் சோதித்து பார்க்க சுபசெய்தி வந்திருந்தது.“ஹையோ” என ஆர்ப்பரித்த மனதை அடக்கினாள்.

கார்த்திக் தன் அலுவலுக்காக ஒதுக்கி இருந்த அந்த அறையில் தனது வழக்கமான வேலையில் ஆழ்ந்திருந்ததை எட்டிப் பார்த்த மீரா உள்ளே வந்தாள். அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவள்.

“கார்த்திக்” எனக் குரல் கொடுக்க ‘ஒரு போதும் அறைக்குள் வந்து தொல்லை செய்யாதவள் அல்லவா? எதற்காக அழைக்கின்றாளோ? என போட்டது போட்டபடி எழுந்து அவள் அருகில் சென்று அமர்ந்தான். இப்போது அவன் மடியில் சட்டமாக அமர்ந்தவள்,

“என்ன ஸ்பெஷல் சொல்லுங்க?” எனவும் புரியாமல் விழித்தான்.

“என்னோட மிஷன் ஒன்னு சக்ஸஸ் ஆகிருச்சு” என்றதும் புரிந்தவனாக தன் போக்கில் அவனது கைகள் அவள் வயிற்றில் ஊர்ந்துக் கொண்டிருக்க அவளை முத்தமிட்டான்.

“இதென்ன இத்தனூண்டு எக்ஸ்பிரஷன்” முகம் சுளித்தவளாக கேட்டாள்.

“இத்தனை சந்தோஷம் முன்ன பின்ன அனுபவிச்சதில்லை.மூச்சு முட்டுதுடி” என்றான். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் இறுக்க அணைத்துக் கொண்டனர். துளி உருவாய் இருந்த அவர்களின் கருவும் அவர்களை இறுக்க அணைத்துக் கொண்டது.

மீரா தான் கருத்தரித்த செய்தியை தனது வீட்டில் பகிர்ந்துக் கொண்டாள்.வீட்டின் புது வரவு குறித்து மீராவின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி என உற்சாகம் களைக் கட்டியது.

தம்பதிகள் இனிப்புகளோடு சென்று தாத்தாவை சந்தித்தனர்.தான் வழக்கமாக டொனேஷன்கள் கொடுக்கும் இல்லங்களுக்கெல்லாம் தாத்தா அன்று மறுபடியும் நன்கொடை அளித்தார்.வீட்டில் அக்கம் பக்கத்தில் இனிப்பு கொடுத்து அன்றைய தினம் அத்தனை குதூகலமாக அவர்கள் கொண்டாடி முடித்திருந்தனர்.

அதற்கடுத்த நாள் அதிகாலை நேரம் வீட்டின் பின்புறம் இருந்த மரத்தின் கீழ் இயற்கையை இரசித்துக் கொண்டு நின்ற மீரா தன்னருகே வந்து நின்றவரை முதலில் கவனித்து இருக்கவில்லை.

அவளிடம் அவர் உறுமினார், “என்ன எங்க இருந்தோ வந்து எங்க வீட்டுக்கு உரிமை கொண்டாடுறியாமே? புருசனும், பொண்டாட்டியும் இனி இந்த பக்கம் தலை வச்சே படுக்கக் கூடாது. இடத்தை காலிப் பண்ணுங்க” என கர்ஜிக்க,

அதுவரையிலும் கூட பூர்வீக வீடு வேண்டாமென எழுதிக் கொடுத்து விடலாமென எண்ணி இருந்தவள் “எம் புருசனுக்கும் சொத்தில் உரிமை இருக்கு. அதெல்லாம் வீட்டை காலி செய்ய முடியாது என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கோங்க” என்றிருந்தாள்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here