மனதோரம் உந்தன் நினைவுகள்_27_ஜான்சி

0
473

அத்தியாயம் 27

உந்தன் கரம்

வார்த்தையில் சொல்லாத

அத்தனை ஆதூரத்தையும்

ஒற்றை வருடலில் சொல்வதால்

உந்தன் கைகள்

எனக்கு மிகப் பிடித்தமானவை,

எந்தன் தலையை வருடும்

உந்தன் உள்ளங்கைகளின் கதகதப்பு

எனக்கு மிகப் பிடித்தமானது.

சிறுக்குழந்தை பாவனையில் எனைப் பார்த்து

மென்மை மாறாமல் தலை தட்டிச் செல்லும்

உன் விரல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.

கடற்கரையோரம் சிப்பிகள் பொறுக்கும்

உலகறியா சிறுமிப் போல் இருந்தவள் வாழ்வினில் வந்து

கை வருடல்களால் அன்புலகம் காட்டி

கடலலையாய் சுருட்டிச் சென்றாய்.

கடலோரக் காற்றில் எந்தன் சிகை கோதும்,

கடல் நீளப் பயணத்தில்

என்னுடன் கோர்க்கும் உந்தன் கரங்கள்

எனக்கு மிகவும் பிடித்தமானவை.

இயற்கை சூழ் அந்த கம்பீரமான பங்களா அன்று வழக்கத்திற்கு மாறாக பரபரப்பாக இருந்தது. கார்த்திக்கின் சித்தப்பா மீராவை மிரட்டிச் சென்று இரு வாரங்களாகி இருந்தன. அந்த வாரம் வழக்கம் போல இருவரும் தங்களது வீட்டிற்குச் செல்ல புறப்பட்ட கார்த்திக்கையும் மீராவையும் செல்ல வேண்டாமென தாத்தா மறுத்திருந்தார். ஒருபோதும் இப்படி சொல்கின்றவர் அல்ல என்பதால் இருவரும் நின்றுக் கொண்டனர். தாத்தாவுக்கான உணவு பத்தியங்களை சமையலாள் செய்வதைப் பார்த்து விபரங்கள் தெரிந்து இருந்தாள். வழக்கம் போல தனக்கும் கார்த்திக்குக்கும் சமைத்து மூவரும் உண்டுக் கொண்டு இருந்தனர்.

உணவு முடிந்ததும் பழங்கள் உண்டுக் கொண்டு இருக்க தாத்தா மீராவிடம் கேட்டார்.

“na china kodukku nee tho maatladatam gurinci nuvvu enthuku naa tho chepaledhu?” (என் சின்ன மகன் உன் கிட்ட வந்து பேசினதை நீ ஏன் என் கிட்ட வந்து சொல்லவில்லை?)

தாத்தா கேட்டதும் கார்த்திக் பதற்றமாக அவளைப் பார்க்க அவள் திருதிருவென முழித்தாள். அன்றைக்கு கார்த்திக்கின் சித்தப்பாவை எதிர்த்து பேசி விட்டாளே தவிர மற்றபடி அந்த விஷயத்தை பெரிதாக்க அவள் முனையவில்லை. அதென்ன எங்களை இவர் வீட்டிலிருந்து விரட்டுவது? எனும் சீற்றத்தில் தான் பதில் பேசி இருந்தாள். கார்த்திக் வருத்தப்படுவானென அறிந்ததால் அவனிடமும் சொல்லி இருக்கவில்லை. தாத்தாவிற்கு எப்படி தெரிந்திருக்கும் என அவளுக்குத் தெரியவில்லை.

கணவனை வளர்த்தவர் என்ற முறையில் அவளுக்கு தாத்தா மீது பெரிய அபிமானம் இருந்தது.அவரவது வயதான காலத்தில் அவரை தனியே விடக்கூடாதெனும் நோக்கத்தில் வாரத்தில் சில நாட்கள் இவ்வீட்டில் தங்கிச்செல்வதே தவிர அவளுக்கோ கார்த்திக்குக்கோ அந்த வீட்டைக் குறித்து பெரிதான எந்த ஆசையும் இல்லை.

“Miridaru visranti tiskoni saringa sayantram 4 gantaki randi” (ஓய்வெடுத்து விட்டு சரியா சாயங்காலம் 4 மணிக்கு இரண்டு பேரும் வாங்க) விடைக் கொடுத்தார்.

அறைக்குள் வந்தவன் மனைவியை குடைந்துக் குடைந்து விபரம் கேட்க அவள் சொல்லவும் அவன் முகத்தில் வேதனையின் சாயல்.

“க்ஷமிச்சுமா” என்னமோ அவனே நோகடித்தது போல மன்னிப்புக் கேட்டான்.

“இப்ப நீங்க எதுக்கு மன்னிப்பு கேட்கணும்?”

“உன்னை இப்படி பேச்சுக் கேட்க விட்டுட்டேன்ல?”

‘இத்தனை வருசம் இவங்க இப்படி உங்களை படுத்தி வச்சுருக்காங்கன்னு நினைச்சு நானே கொதிச்சுப் போய் இருக்கேன். இதில நீங்க மன்னிப்பு கேட்கிறீங்க? சும்மா இருங்க.”

“கோபப்படாத, நம்ம பாப்புக்கு நல்லதில்ல.” வயிற்றுப்பிள்ளைக் குறித்து பேச,

“ம்ம்ம்… சரி…. கோபம்லாம் படலை… சும்மா சொன்னேன். உங்களை கஷ்டப்படுத்துனவங்களை பிடிச்சு குத்தணும் போல இருக்கு.” முஷ்டியை தன் கண்முன் நீட்டியவளைப் பார்த்து சிரித்தான்.

“கோபப்படாதப்பவே இந்த டெரரா இருக்க, கோபப்பட்டா அப்பப்பா.”

“கிண்டல் செய்யாதீங்க…”

“சரி படுத்துக்கோ.” தானும் படுத்து, அவளை தன் தோளில் சாய்த்து தலை வருடி விட சொக்கி தூங்கிப் போனாள். தாத்தா நான்கு மணிக்கு அழைத்ததன் காரணம் என்னவாக இருக்கும்? கார்த்திக் சிந்தித்துக் கொண்டு இருந்தான்.

இருவரும் உடை மாற்றி தங்கள் அறையினின்று வெளியே வர ஒவ்வொருவராக வந்து அமர ஆரம்பித்தனர். ஊர் பெரியவர்கள் சிலர், வக்கீல்கள் இருவர், போலீஸ் நண்பர் ஒருவர் சற்று நேரம் கழித்து கார்த்திக்கின் சித்தப்பா அவரது மகளும் மருமகனும் மற்றும் மகனும் என அந்த பெரிய ஹால் நிறைய சமையல்கார அம்மாவுடன் சேர்ந்து அனைவருக்கும் தண்ணீர் குளிர்பானம், டீ, காஃபி என அவரவருக்கு தேவையானவைகளை பறிமாற அவனது சித்தப்பா குடும்பத்தினர் இவள் கையால் எதையும் வாங்கி உண்ணவும் விரும்பவில்லை.

அனைவரும் வந்துச் சேர தாத்தா சொல்லியபடி கார்த்திக் ஒரு பழைய ஃபைலை தூக்கிக் கொண்டு வர, அவற்றுள் ஒவ்வொரு பத்திரமாக எடுத்து வாசிக்கச் சொன்னார். மூன்று நான்கு பத்திரங்கள் வாசிக்கும் முன்பே கார்த்திக்கின் சித்தப்பா மற்றும் அவரது மகளின் முகம் தீயாய் சிவந்தன. மற்ற இரு ஆண்களும் சலனப்படாமல் அல்லது சலனப் படுவது போல காட்டிக் கொள்ளாமல் இருந்தனர்.

பழமையான அமைப்பென்றாலும் இரண்டாயிரத்து சொச்சம் ஸ்கொயர் ஃபீட் அளவில் அந்த வீட்டின் மதிப்பு இன்றைக்குப் பார்த்தால் 10 கோடி தாண்டும். தாயும் தகப்பனும் அந்த வீட்டை அவளுக்கு கொடுக்கப் போவதாக ஆசைக் காட்டியே வளர்த்திருக்க இப்போது அது அவர்களுக்கு சொந்தமில்லை என்பதாக இருந்தால் அதனை மாதுரியால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? செத்துப் போன அம்மாவை உயிரோடு கொண்டு வந்து, உலுக்கி நியாயம் கேட்க வேண்டுமென அவளுக்கு வெறியே வந்தது.

அம்மாவைச் சொல்லி குற்றமென்ன? இந்தக் குருடன் திருமணம் செய்து மனைவி குழந்தை என வாழ்வான் என அவர்கள் கனவிலும் கண்டதில்லையே? திடீரென அவனது வாழ்வு மாறி அவர்களது அத்தனை திட்டங்களும் மாறி … ம்ப்ச்ச்.

‘இத்தன வயசாகியும் சாகாம இருக்கிற இந்த கிழம், எங்கருந்தோ வந்து இங்க என் வீட்டை உரிமைக் கொள்ளுற இவ இவங்க இரண்டு பேராலையும் தான் அத்தனையும்…’ குரூரமாய் இருவரையும் முறைத்துக் கொண்டிருந்தாள் மாதுரி. கார்த்திக்கிற்கு மீராவை மாதுரி பார்க்கும் விதம் பிடித்தமாக இல்லை. எப்போதடா தங்கள் வீட்டிற்கு மனைவியை அழைத்துக் கொண்டு செல்லலாமென எண்ணினான்.

ஆம், அத்தனைக்கு பின்னும் அவன் அங்கு அதிகாரமாக கோலோச்ச நினைக்கவில்லை, தன்னையும் மனைவியையும் வாழ விட்டால் போதும் என எண்ண வைத்திருந்தன அவனது அனுபவங்கள்.

தாத்தா தொண்டையை செருமிக் கொள்ளவும் அனைவரது கவனமும் அங்கே திரும்பியது. நடக்கின்றவைகளை காணொளியாக எடுக்கவும் ஏற்பாடு செய்திருந்தார்.

“எல்லா பத்திரங்களை வாசிச்சதை நீங்க கேட்டுருப்பீங்க, என்ன நடந்ததுன்னு சொல்ல விரும்புறேன். இருபத்தியைந்து வருடங்கள் முன்பு என் சின்ன மகன் சொத்தை பிரித்துக் கொடுக்கக் கேட்டான். பெரும்பாலான சொத்துக்கள் எங்கப்பா மூலமாக எனக்கு வந்தது. குறிப்பிட்டவை நான் சம்பாதிச்சது… என் அப்பா சம்பாத்தியத்தில் வந்த சொத்துக்களை பிரிச்சப்ப இந்த வீடு இருக்கிற இடம் என் பெரிய மகன் பங்குக்கு வந்தது. இந்த வீட்டை அவன் தான் கட்டினான்…அதாவது என் மூத்த மகன்.” தொண்டையை செருமிக் கொண்டார்.

என்னோட பூர்வீக வீடு குறிப்பிட்ட ஊரைச் சொல்லி அங்கே இருக்கு… மகன் அழைக்கவும் நானும் என் மனைவியும் பெரிய மகன் கூடவே இங்கு வந்து இருந்திட்டேன். அப்புறமா என் மனைவி இறந்த கொஞ்ச வருசத்தில என் மகன் மருமக இறப்பு, பேரன் செத்துப் பொழச்சதுன்னு எப்படியோ வருசம் ஓடிப் போச்சு” கண்கள் கலங்க துடைத்துக் கொண்டார்.

என்னுடைய சொத்து நான் போனதுக்கு அப்புறமா இரண்டு பாகமா சரிசமமா இதில பிரிச்சு வச்சு எழுதிருக்கேன்.அதில் ஒரு பாகம் பெரிய மகன் வாரிசான கார்த்திக்குக்கும் இரண்டாவது பாகம் இரண்டாவது மகனுக்கும் சேரும் என தனது வக்கீலுக்கு கண் காட்டவும் அவர் உயிலை வாசித்தார்.

“மற்றபடி இந்த வீடு என் பெரிய மகனோடது… அதனால கார்த்திக்குக்கும் அவனோட மனைவி மற்றும் புள்ளைங்களுக்கும் மட்டும் தான் சொந்தமானது. சட்டப்படியோ வேற எந்த விதத்திலோ இந்த வீட்டுக்கும் என் சின்ன மகனுக்கும் சம்பந்தம் இல்லை. அவன் கார்த்திக்கையோ அவன் மனைவியையோ அவன் பிள்ளைகளையோ துன்புறுத்தினால் எந்த நடவடிக்கை எடுக்கவும் நான் தயங்க மாட்டேன்.” போலீசிடம் விபரங்கள் கேட்டுக் கொண்டு இருக்க,

“கூப்பிட்டு வச்சு பயமுறுத்துறாரா என்ன?” சடாரென எழுந்து விட்டிருந்தார் கார்த்திக்கின் சித்தப்பா.

“இருப்பா… எல்லாரும் இருங்க” அனைவரையும் அமர வைத்த போலீஸ்

“உங்களால உங்க அண்ணன் மகன் மனைவிக்கு, அவங்க உயிருக்கோ உடமைக்கோ எந்த ஆபத்தும் வராதுன்னு உறுதி கொடுத்து எழுதிட்டு போங்க.” என வக்கீலிடம் சில பத்திரங்களை வாங்கி கொடுத்து நால்வரிடமும் எழுதி வாங்க மனதில் எரிமலையை அடக்கிய வண்ணம் அவர்கள் கையெழுத்திட்டனர்.

எல்லாம் முடித்து அனைவரும் கலையவும் மாதுரி மீராவை நோக்கிச் செல்வதைக் கண்டு கார்த்திக் அவள் பக்கம் விரைந்தான். அதற்குள்ளாகவே மாதுரி மீராவிடம்

“உன்னை பார்த்தாலேயே நல்லா தெரியுது… பணத்துக்காகத்தானே இவனைக் கட்டிக்கிட்ட நீ?” இன்னும் கேவலமாக சில வார்த்தைகளை உமிழ, திகைத்து பதில் கொடுக்க முனைந்த கார்த்திக்கை தடுத்து நிறுத்திய மீரா…

“ஆமா, அவரோட பணத்துக்காகத்தான் அவரை கட்டிக்கிட்டேன்… ஓகேவா… இப்ப மனசுக்கு திருப்தியா? அப்படியே போயிடு… என்னிக்கும் உன் மூஞ்சை மறுபடி பார்க்க வேண்டிய சூழ்நிலை வரவேணான்னு கடவுளை கும்பிட்டுக்குறேன்.” சொன்னதும் மாதுரி விறுவிறுவெனச் சென்று விட்டிருந்தாள்.

‘ஒரே ஒரு நேரம் வீட்டை விட்டு வெளியே போன்னதும் அவளுக்கு இவ்வளவு கோபம் வருதே? வருசக்கணக்கா இப்படி ஒரு குடும்பமே இவனை வீட்டை விட்டு விரட்டிருக்கு… ச்சை என்ன ஜென்மங்களோ?’ நினைக்க நினைக்க அவளுக்கு கோபம் மீறி படபடவென வந்தது.

வேர்த்து விறுவிறுத்து இருந்தவளைப் பார்த்து ஏசி டெம்பரேச்சர் அட்ஜஸ்ட் செய்தவன், மின் விசிறியை தட்டி விட்டு அதன் கீழே அவளை அமர வைத்தான். சமையல்காரம்மாவிடம் அவளுக்கு ஜீஸ் போட்டுக் கொடுக்கச் சொல்லி விட்டு,

“இப்ப வரேன்மா… எதுவும்னா போன் செய்” என்றவன் எதையோ தாத்தாவிடம் சொல்லி விட்டு வெளியே சென்றான்.

“இந்த வீடு கிடைக்கும்னு இத்தனை வருசம் கிழவனுக்கு பார்த்துக்க ஆள் வச்சு, சம்பளம் கொடுத்து …ச்சை” கார்த்திக்கின் தம்பி பொறுமிக் கொண்டு இருந்தான்.

“Ippativaraku enta kharchayindi” (இதுவரை எவ்வளவு செலவாச்சு?) கார்த்திக் கேட்டு நின்றான்.

தம்பியாகப்பட்டவன் பிடிபட்ட திருடன் போல திருதிருவென விழிக்க, கார்த்திக் அவனிடம் விபரம் கேட்டு வீட்டுக்குச் சென்று செக்புக் எடுத்து அத்தனை பணத்திற்கும் காசோலை எழுதிக் கொடுத்தான்.

அந்த வீட்டை விட்டு நகரவே விருப்பம் இல்லாமல் நால்வரும் புலம்பிய வண்ணம் சென்றனர். மற்றவர்களின் கார்களும் ஒவ்வொன்றாய் அங்கிருந்து புறப்பட்டன.

இப்போது கார்த்திக் வேலையாட்களை அழைத்து பேசிக் கொண்டு இருந்தான்.சித்தப்பாவுக்கு தகவல் அனுப்புவது போன்றவை செய்யாமல் இருந்தால் தான் அவர்களை வேலையில் தொடர்ந்து வைக்க தயார் எனவும் அவர்கள் ஒத்துக் கொண்டனர். உள்ளே வந்துப் பார்த்தான்

மீரா சற்று ஆசுவாசமாகி இருந்தாள்… அவளைப் பார்த்ததும் கார்த்திக்குக்கு அவள் சொன்னவை நினைவிற்கு வரவே சுருக்கென குத்தியது. சித்தப்பா வீட்டினர் விரட்டியதும், தனது தாழ்வுணர்ச்சியில் தாத்தாவை இத்தனைக் காலம் தனியே விட்டு இருந்து விட்டானே? தாத்தாவிடம் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் இது தனக்கு சொந்தமான வீடு என்று புரிந்து இருக்கும். எதை எண்ணி எதை செய்தோம்? இத்தனைக் காலமும் முட்டாளாக இருந்து விட்டோமே? என பல்வேறு எண்ணங்களில் குமைந்தான்.

மன்னிப்பு கேட்கும் விதமாக தாத்தாவின் அருகில் சென்று அமர்ந்தான். தாத்தா தனது அறைக்குள் இருவரையும் அழைத்தவர் அறைக்கதவை பூட்டச் சொன்னார். கார்த்திக்கிற்கு ஒரு சில விபரங்கள் சொல்ல அவன் அவர் சொன்னபடியே எதையோ எடுத்து வந்தான். துணிகளில் பொதியப்பட்டிருந்தது அது.

திறந்துப் பார்க்கவும் உள்ளே இரண்டு பொட்டலங்களில் நகைகள் இருந்தன.

Idhi naa barya abharananaalalo  pedda kodukuki ichina vata, migilindhi mi attagaidhi” (என் மனைவி நகைகளில் மூத்த மகனுக்கான பாகம் இது. மீதி உன் மாமியாரோடது) என்றார்.

மீராவிற்கு மனதில் ஏதோ சரியில்லாதது போல பட “ivanni miru enthuku ippude istunaru thatha… idhani mi vadda unchukondi” (இப்ப எதுக்கு இதெல்லாம் தரணும் தாத்தா?… இது உங்க கிட்டவே பத்திரமா இருக்கட்டும்) அவளது வார்த்தைகள் நடுங்கினவோ… அழுகை வரும் போல இருந்தது… கார்த்திக்கின் கைகளை பிடித்துக் கொண்டாள்.

“செப்பண்டி கார்த்திக்” (சொல்லுங்களேன் கார்த்திக்)

“உங்க கிட்டவே இருக்கட்டும் தாத்தா…” சொல்லிப் பார்த்தான்.

மறுத்து தலையசைத்தார்… “எத்தனைக் காலம் இதெல்லாம் சுமக்குறது? எனக்கும் ஓய்வு வேண்டாமா? சரி அவளை அழைச்சுட்டு போ. நல்லா கவனமா பார்த்துக்க…”

என்றவர் மீராவிடம், “நீயும் என் பேரனை நல்லா பார்த்துக்கணும் என்ன?” எனச் சொல்ல இவள் தலையசைத்தாள்.

“களைப்பா இருக்கு… நான் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கிறேன்.” என்றவரை இரவுணவின் போது பார்த்ததுதான் அடுத்த நாள் உதயம் அவர் கண்டிருக்கவில்லை. நிஜமாகவே நிரந்தர ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தார். அவரது முகத்தில் தான் செல்லும் முன்பாக தனது கடமைகளை எல்லாம் முடித்து விட்டதான நிறைவு இருந்தது.

மீராவின் குடும்பத்தினர் இறுதிச் சடங்கிற்கு வந்திருந்தனர். அழுது தீர்த்த மீராவை ஒருவழியாக சமாளித்து இருக்க எல்லாரும் இல்லாத தனிமையில் மனைவியின் மடியில் பொங்கிப் பொங்கி அழுதுக் கொண்டிருந்தான் கார்த்திக்.

கணவனின் மனமாற்றத்துக்காகவே மீரா சில நாட்களுக்கு கணவனோடு தனது தாய்வழிச் சொந்தங்களின் ஊருக்கு பயணப்பட்டாள்.

இடமாற்றமும் சொந்தங்களின் அருகாமையும் அரவணைப்பும் அவனது மனதில் அமைதி நிலவச் செய்திருந்தன.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here