மனதோரம் உந்தன் நினைவுகள்_28_ஜான்சி

0
276

Manathoram Unthan NinaivukaL_Epi 28_Jansi

அத்தியாயம் 28

பிரிவு

பிரிவில் புரிகின்ற எதுவும்

அருகில் புரிந்ததேயில்லை.

உந்தன் அருகாமை

உந்தன் பேச்சைப் போல,

தொண தொணக்கும் உந்தன்

கேள்விகளைப் போல,

எரிச்சல் மூட்டும் உந்தன்

விசாரணைகளைப் போல,

எல்லாவற்றின் பின்னாலும்

ஒளிந்திருந்த அக்கறையும் அன்பும்,

இப்போது உணர்ந்தது போல

முன்னெப்போதும் உணர்ந்ததும் இல்லை.

உன்னைப் போல

உந்தன் கதகதப்பான உடனிருப்பை போல

தாத்தா

மீராவும், கார்த்திக்கும் கிராமம் போய் சேர்ந்திருக்க ராஜா வெகு அன்போடு வரவேற்று பார்த்துக் கொண்டான். அசலில் இருந்தாலும் பந்தா காட்டாமல் சொந்த தம்பியைப் போல நடத்திய கார்த்திக்கிற்கு பதிலன்பு காட்ட கிடைத்த சந்தர்ப்பத்தை விடுவானா என்ன?

தங்கத்திற்கு மருமகன் தனது கிராமத்திற்கு வந்ததில் மிகவும் பெருமை. எவ்வளவு தான் நல்லவர்களாக இருந்தாலும் பெரும்பான்மை ஆண்கள் மனைவியின் ஊர் மற்றும் சொந்தத்தோடு உரிமையாய் பேசிப் பழக போய் வர இருப்பதில்லையே. பட்டும் படாமலுமாக உறவை பேணுவார்கள் அல்லவா? மனோகரும் அதற்கு விதிவிலக்கு அல்ல.ஆனால், மகள் சொன்னதும் அடுத்த நொடியே மருமகன் தங்கள் கிராமத்திற்கு வந்திருக்க, கிடைத்தது வாய்ப்பென்று அவரும் புறப்பட்டார். ஓரிரு நாட்கள் மனோகரும், சித்ராவும், சுசித்ராவும் கூட ஊர் சென்று திரும்பினர்.

தங்கம் மகளோடு கூட இருந்து கவனித்துக் கொண்டு, தங்கள் பிறந்த வீட்டுச் சொந்தங்களோடு உறவாடி மகிழ்வாக சில வாரங்கள் கழித்து தத்தம் ஊருக்கு திரும்பினர்.

இருவரும் ஹைதராபாத் வந்து ஓரிரு நாட்களாகின, மனதை கல்லாக்கிக் கொண்டு தாத்தாவின் வீட்டை பார்க்க புறப்பட்டுச் சென்றனர். தோட்டக்காரர் தவிர வேலைக்கு இருந்தவர்களை எல்லாம் தொகை கொடுத்து நிறுத்தி விட்டு, வாரமொரு முறை வீட்டை சுத்தம் செய்ய மட்டும் ஆளை நியமித்து இருந்தான்.

இவர்கள் வெளியில் சென்ற நேரம் தாத்தா ஏற்கெனவே ஏற்பாடு செய்தபடி அந்த முகப்பில் வீட்டு உரிமையாளன் கார்த்திக் என கொட்டை எழுத்தில் பதிக்கப் பட்டு இருந்தது. கார்த்திக்கிற்கு ‘தாத்தா இந்த இயலாத வயதிலும் என்னென்னவெல்லாம் செய்து விட்டு போயிருக்கிறார்?’ என்றிருந்தது.

இவர்கள் வீட்டில் நுழைவதை தோட்டக்காரர் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்தார். அந்த கதவை திறந்து அவர்கள் வீட்டில் நுழைந்ததும் இருந்த அந்த கொடிய வெறுமை மீராவுக்கு ஹோவென்றிருந்தது. கணவனின் கையை பற்றிக் கொண்டாள்.

தாத்தா இல்லாமல் அந்த வீல்சேர் வெறிச்சிட்டிருந்தது. இருவர் கண்களிலும் கண்ணீர் தாரை தாரையாக வடிய,

“மன்னிச்சுக்கோங்க” பின்னால் இருந்து குரல் கேட்கவே கண்களை துடைத்துக் கொண்டு திரும்பினான் கார்த்திக்.

“மருமகளை உங்க சித்தப்பா திட்டுனதை நான் தான் தாத்தா கிட்ட சொல்லிட்டேன். அவரால அதை தாங்கிக்கவே முடியலை. முன்ன கூட உங்களை அவங்க திட்டினதை பார்த்திருக்கிறேன். உங்க உள் வீட்டு விவகாரம் அதில தலையிடக் கூடாதுன்னு போயிருவேன். ஆனால், மருமகளை அதுவும் இந்த மாதிரி புள்ளை உண்டாகி இருக்கிற நேரம் திட்டினது சங்கடமா போச்சு. மனசு தாங்காம சொல்லிட்டேன். அவர் மனசுக்குள்ளயே போட்டு மருகிட்டார் போல? … அப்ப கார்த்திக் இங்கே தங்காததுக்கு சின்னவன் தான் காரணமான்னு?” பல நாட்கள் புலம்பிட்டே இருந்தார்.

நடந்ததை கேட்டு இருவரும் அயர்ந்து நின்றனர். தன்னை தாத்தா தவறாக எண்ணி இருப்பாரோ? எனும் குற்ற உணர்ச்சியில் இருந்த கார்த்திக் தோட்டக்காரர் பேச்சில் தெளிந்தான். தான் முன்பே நினைத்தது போல சித்தி மற்றும் சித்தப்பாவின் நடவடிக்கைகள் விபரம் சொல்லி இருந்தால் அவர் தாங்கி இருக்க மாட்டார்தான் எனத் தோன்றியது. தான் செய்தது தவறில்லையோவென ஒரு அற்ப ஆறுதல்.

பொதுவாக குடும்பத்தில் வெகு நெருக்கமான ஒருவர் மரிக்கும் போது ஏராளமான குற்ற உணர்ச்சியை குடும்பத்தினர் சுமக்க நேர்வது இயல்பு. ஒரு சின்ன சுடுசொல், ஒரு சின்ன வாக்குவாதம் மரித்தவர்கள் விட்டுச் சென்றவர்களுக்கு மனதை உறுத்த வைக்கும். அடுத்த நொடி நிலையில்லாத வாழ்வில் நமது அவ்வப்போதைய ,மனநிலைக்கேற்ப நாம் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றோமே தவிர, எப்போது என்ன நிகழும் என அறிந்தா நாம் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றோம்?

அவனுக்கு தாத்தாவின் மரணத்தினால் ஏற்பட்ட மனப்புண்ணை ஆற்ற அவரே அந்த தோட்டக்காரரை அனுப்பி வைத்தார் போல இருந்தது. அசைவற்று நின்றவன் திகைத்து நிற்கிறான் எனப் புரிந்து இவன் முதுகை வருடுகின்றது ஒரு கரம் அது அவன் வரமல்லவா?

என்னுடைய தாழ்வுணர்ச்சியால் என்னைச் சுற்றி என்ன நடக்கின்றதென்றே புரியாமல் பல காலங்கள் கண்கட்டிய குதிரை போல வாழ்ந்திருக்கின்றேன். இப்போது அது குறித்து வருந்தி என்ன ஆகப் போகின்றது? விட்டதை பிடிக்க முடியாது… இருப்பதை பாதுகாக்கலாம் அல்லவா?

அதுவும் இப்போது அவன் தனியனல்ல அவனுக்கென்று குடும்பம் ஒன்றும் இருக்கின்றதே. அவன் மனைவி அவள் அவனை பிரதிபலிப்பவள் அவன் அழுதால் அவள் அழுவாள். அவன் சிரித்தால் அவளும் சிரிப்பாள்.தாத்தாவின் நிழலின் கீழேயே இத்தனைக் காலம் வாழ்ந்து விட்ட அவன், அவரது பிரிவைத் தாளாமல் உடைந்த அவன் இப்போது தனக்கு இருக்கும் பெரும் பொறுப்பை உணர்ந்தவனாக தன்னை திடப்படுத்திக் கொண்டான். வாழ்நாளில் பெரிதும் தனிமையில் வாழ்ந்த அந்த வீரமான, அன்பான, பொறுப்பான தாத்தா இனி அவனது வாழ்வின் வழிகாட்டியாக இருப்பார்.

கார்த்திக் தன் எதிரில் நின்றிருந்த தோட்டக்காரரின் கரங்களை பிடித்துக் கொண்டான்.

“மன்னிப்பெல்லாம் வேண்டாம் ஐயா… மனசை வருத்திக்காதீங்க…எங்க மேல எவ்வளவு அக்கறையா இருந்திருக்கீங்கன்னு புரியுது. சொந்தங்கள் எல்லாம் பொய்க்கும் போதும் இப்படி ஒரு சிலர் பார்க்கிறப்பதான் மனசுக்கு சந்தோஷமா இருக்கு. இரத்த சொந்தம் இல்லைன்னாலும் நீங்களும் எங்க சொந்தம் தான். தாத்தா இல்லைன்னா என்ன? நாங்க இருக்கோம்… தாத்தா கிட்ட எப்படி உரிமையா இருப்பீங்களோ அப்படி இருங்க. உங்களுக்கு எதுவும் உதவி வேணும்னாலும் கேளுங்க” என்றான். மனபாரம் இறங்கியவராக அவர் திரும்பச் செல்லவும், திடமாக நின்ற கார்த்திக் மீராவிற்கு புதிதாக தெரிந்தான்.

மாதங்கள் கடந்தன… மீராவிற்கு பிரசவத்திற்கு கார்த்திக்கை தனியாக விட்டு விட்டு எப்படி தாய் வீடுச் செல்வது? என யோசனையாக இருந்தது. மனோகர் மகள் மருமகன் வந்துச் சென்றால் தங்க தனி அறை ஒன்றை கட்டி இருந்ததால் கார்த்திக்கையும் தங்களோடு தங்க வரச் சொல்லியே அழைத்தார்.

சின்னதாக வளைக்காப்பை முடித்து பெற்றவர்களுடன் மீரா புறப்பட, அடுத்த நாள் கார்த்திக்கும் சென்னை வந்துச் சேர்ந்தான்.அவன் குடும்பமாக அவர்களோடு கழித்த நாட்களிள் அந்தக் குடும்பத்தின் மூத்த மகனாகிப் போனான்.

ஒரு அதிகாலை வேளை மகளென்னும் அமிழ்தை கையில் ஏந்திய போது அவன் மனதின் பல பல காயங்கள் ஆறியிருந்தன.

“மகிழ்தினி” ஆம் அவள் பெயர் மகிழ்தினி அந்தக் குடும்பத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தாளவள். மகிழ்ச்சியால் நிரப்பிக் கொண்டிருந்தாள். சுற்றமும் உறவும் கூட்டி அச்சின்ன சொர்க்கத்தை தொட்டிலில் இட்டு “மகிழ்தினி” என்றழைத்து பெயர் சூட்டிய போது புரியாத மொழியில், பெற்றவர்கள் மனம் இனிக்க ஏதோ மிழற்றினாளவள்.

குழந்தை பிறந்த ஆறாம் மாதத்தில் அவர்கள் தங்கள் கூட்டுக்கு திரும்பினார்கள். மீராவும், கார்த்திக்கும், மகிழ்தினியுமாக அடுத்த புகைப்படம் அவ்வீட்டுச் சுவரை அலங்கரித்தது.

மீராவின் குடும்பம் மகளை பிரிந்த போது கூட இத்தனை தவித்து இருக்கவில்லை. பேத்தியை பிரிந்த போது வெகுவாய் தவிக்க… அவ்வப்போது மீராவின் வீட்டினர் வந்து தங்கிச் செல்வது வழக்கமாக இருந்தது.

வருடங்கள் சில கடந்திருந்தன… தனது கனவு என்ன? என்பதை மீரா தேடி கண்டுக் கொண்டாள். நிர்வாகத்திறன் ஒரு பக்கம், உழைப்புக்கு அஞ்சாத குணம் ஒரு பக்கம், மாமலை போல துணையிருக்கும் மன(ண)ம் கொண்டவன் மறுபக்கம் என்றிருக்க, சவாலான கல்வித்துறையை கையில் எடுத்தாள்.

நமது கல்வி அமைப்புகளில் கற்றல் மற்றும் இன்னபிற குறைபாடு உள்ளவர்களை, பிற மாணாக்கர்கள் கீழாக கருதும் நிலை அதனால் இடை நிற்கும் மாணாக்கர் எண்ணிக்கை மிக அதிகம். அப்படி இடை நின்றவர்களுக்கு உதவி புரியும் வண்ணமாக அவளது கல்வி நிறுவனம் அமைந்தது.

நன்கு படிக்கும் மாணாக்கர் வாழ்வில் வெல்ல துணை இருக்கும் கல்வி நிறுவனங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சுமார் அல்லது மோசமான புரிந்துக் கொள்ளும் திறன் கொண்டவர்களுக்கு புரியும் வண்ணமாக கற்க வைக்கும் சில செண்டர்களை திறந்தாள்.

அதனை செயல்படுத்தும் முன்பாக ஒரு வருடத்திற்கு குறையாமல் முன் தயாரிப்புகள் செய்து உரிய ஆசிரியர்கள் தெரிவு செய்திருந்தாள். கற்றல் குறைபாடு என்பது சாதாரண விஷயம் தான் என்பதை முன் நிறுத்தி அவளது விளம்பரங்கள் அமைந்திருந்தன.

அவளது முயற்சியின் ஆரம்ப கட்டமாதலால் அதிகமான மாணாக்கர்கள் இன்னும் சேர்ந்திருக்கவில்லை.மக்களின் நம்பிக்கையை பெற, இன்னும் சில காலமாகும் என அவளுக்குத் தெரியும் என்பதால் அவள் கவலையோ அவசரமோ படவில்லை. தன் பணி செவ்வெனே செய்து, கவலையின்றி காத்திருந்தாள்.

படிக்க வசதி இல்லாதவர்கள் தாத்தாவின் பெயரில் இயங்கிக் கொண்டு இருந்த ட்ரஸ்ட் மூலமாக படிக்க வழி வகுத்தாள். கார்த்திக் மனைவியின் தோளோடு தோள் சேர்ந்து அவளுக்கு உந்து சக்தியாக, சரி தவறு சுட்டிக் காட்டும் ஆசானாக, வழிகாட்டியாக இருந்தான். அவள் வெளியே செல்கையில் குழந்தையை அவன் பார்த்துக் கொள்வதும் வீட்டை கவனித்துக் கொள்வதுமென அது நிஜமாகவே அன்பான கூடாக இருந்தது.

அன்று சாயுங்காலம் அவள் வீட்டிற்கு திரும்ப  வந்த போது கார்த்திக் மகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தான். இலகு உடைக்கு மாறி வந்த மீரா ஃப்ளாஸ்கில் இருந்த காஃபியை ஊற்றிக் கொண்டு வந்தாள். கார்த்திக் அவள் வரும் நேரம் அறிந்து அவளுக்காக காஃபி தயாரித்து வைத்திருப்பது வழக்கமே. மகள் அவளிடம் தாவினாள். ஓரிரண்டு சொட்டுகள் காஃபிக்காக அம்மாவிடம் வெகு அழகாக கொஞ்சினாள்.

“மகிழு பாப்பா…” தாயும் மகளும் கொஞ்ச மகள் உணவு உண்டு துஞ்சிய நேரம் பெற்றோர்கள் தங்கள் நேரத்தை எடுத்துக் கொண்டனர்.

வழக்கம் போல கணவனின் மார் சாய்ந்து, அன்றைய தினத்தின் நிகழ்வுகளை பகிர்ந்துக் கொண்டாள். அதற்கு தன் கருத்துக்களை அவன் பகிர, விளையாட்டும் மகிழ்வுமாய் அவர்களுக்குள்ளே உரையாடல்கள் நிகழ்ந்தன.இருவரும் ஒருவர் மற்றவரை சீண்டுவதும் குட்டியாய் சண்டையிடுவதுமான தங்கள் பழக்கத்தை இன்னும் விடவில்லை.

அத்தனைக்கும் முடிவில் முத்தங்களும், மோகங்களும் ஆட்சி புரியும். வருடங்கள் கழிந்திருந்தாலும் அவர்களது நெருக்கங்கள் இன்னும் கூடினவே அன்றி குறைந்திருக்கவில்லை.

தாம்பத்தியத்தின் ஆரம்ப நிலையாம் மூர்க்கமும், அடங்காத தாபமும், கடந்து ஒருவரை மற்றவர் எத்தனையாய் நேசிக்கின்றனர் என்பதான வெளிப்படுத்துதலாக அமைந்த அழகான இனிமையான கூடலும், ஆழ்ந்த உறக்கமும் என அவர்கள் வரம் வாங்கி வந்த தம்பதியர்தான்.

சில மாதங்களுக்குப் பின்னர்

காலை சமையலறையில் நிற்கும் போது கார்த்திக்கிற்கு அழைப்பு வர…

“மீராம்மா இன்னிக்கு நீ பாப்பாவை பார்த்துக்கிறியா? எனக்கு வேலை இருக்கு. திரும்பி வர ராத்திரி ஆகும்.” என குரல் கொடுத்தான். அலுவலுக்கென புறப்பட்டுக் கொண்டு இருந்தவள் அலைபேசி எடுத்து தனது செண்டர்களின் பொறுப்பாளர்களிடம் செய்ய வேண்டிய பொறுப்புகளை ஒப்படைத்தாள்.

“சரி கார்த்திக்” என அவனுக்கு பதில் கொடுத்தாள்.

சாப்பாட்டு டேபிளில் இருவரும் காலை உணவை உண்டுக் கொண்டு இருக்க மகிழ்தினி தரையில் அமர்ந்து கையில் இருந்த இட்லியை பிய்த்து தின்று விளையாடிக் கொண்டு இருந்தாள்.

அடுத்த நான்காவது மணி நேரம் கார்த்திக் சென்னையில் இருந்தான். சித்ரா பணி புரியும் அந்த விளம்பர அலுவலகத்தின் புதிய முதலாளியின் அறையில் இருந்தான்.

“நான் சித்ராவின் அண்ணன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.”

எதிரில் இருந்தவன் மிக அழகனாய் வசீகரமாய் இருந்தான். முகத்தில் கள்ளத்தனம் சிறிதளவும் இல்லை.

“என்ன சார் என்னை அளந்து பார்த்தாச்சா? எப்படி நான் தேறுவேனா?”

“அதெப்படி உடனே சொல்லுறது?”

“ம்ம்ம்” விக்ரமின் புருவங்கள் ஏகின.

“ஏன் விக்ரம் எங்க வீட்டுப் பொண்ணை எதுக்கு டார்ச்சர் செய்றீங்க? நீங்க பாதுகாக்குற அளவுக்கெல்லாம் எங்க வீட்டு பொண்ணுங்க இல்லை. நல்ல துணிச்சலான பொண்ணு அவ… அவ கிட்ட போய் அட்வைஸ்லாம் சொல்றீங்களாம்?”

“வாங்க நாம வெளியே போய் பேசலாமே?”

விக்ரமும், கார்த்திக்கும் புறப்பட்டனர் அந்த நட்சத்திர ஹோட்டலின் ரெஸ்டாரெண்டில் கழிந்த சில நிமிடங்களில் இருவரும் சகஜமான பேச்சிற்கு மாறி இருந்தனர்.

“விளம்பரத்துறை குறித்து உங்களுக்குத் தெரியாததில்லை…. கொஞ்சம் அட்வான்ஸ்டா இருப்பாங்க” என்றான் விக்ரம்.

“ம்ம்… தெரியும்” என்றான் கார்த்திக்

இலண்டனில் இருந்த போது ஒரு சந்திப்பில் இதே துறையைச் சார்ந்த ஒருவன் கூறி இருந்த தகவல்கள் துண்டு துண்டாக அவனுக்கு நினைவிற்கு வந்தன. விளம்பரத் துறையில் பெரும்பான்மை பணியினருக்கு நன்கு வரையும் திறமை இருத்தல் வேண்டுமாம்.

நிர்வாண மனிதர்களை வரைவது வெளி உலகத்தினருக்கு எப்படியோ? இந்த துறையில் சேரும் முன்பே அதற்கான பயிற்சிக் கொண்டவர்களாக இருத்தல் வேண்டுமாம். அங்கே அந்த ஓவிய தேர்வின் போது நிர்வாண உடல்களைப் பார்த்து யாராவது சிரிப்பதானால் கடும் தண்டனைக்கு உள்ளாகுவார்களாம்.

அலுவலகத்தை பொறுத்த வரையில் விளம்பர சிந்தனைகளுக்காக வெகுவாக மெனக்கெடுகின்ற துறையாகும். ஒரு சில நொடிகள் கடந்துச் செல்லும் விளம்பரம் நமக்கு ஆனால், அதற்கான அவர்களது மெனக்கெடல்கள் மிக அதிகம்.

அத்துறையினர் இளைப்பாற, படம் பார்க்க, உடலுறவு காணொளிகள் காண்பது உட்பட பணிபுரிகின்றவர்களின் கற்பனை திறன்களைத் தூண்டும் எல்லா வகையான வசதிகளும் அலுவலகத்தில் இருக்குமாம்.

இத்தனை இருந்தும் பெரும்பாலானவருக்கு டாய்லெட்டில் தான் கற்பனை ஊற்றெடுக்குமாம். இதன் காரணமாகவே அலுவலகத்தில் ஒரு சின்ன ஐடியாவிற்காக மணிக்கணக்காக டாய்லெட்டில் குடியிருப்போரும் உண்டாம். இப்படி எல்லாம் வினோதமான பலவற்றை கார்த்திக் கேட்டிருந்தும், அத்துறையில் சுதந்திரமாக பாலுறவை ஆதரிக்கும் மக்கள் அதிகம் என அறிந்தும் இருந்தான். சித்ரா தனக்கேற்ற துறையாக அதனை தெரிவு செய்த போது கார்த்திக் ஆரம்பத்தில் கவலையோடு அந்த அலுவலகத்தை குறித்து ஆராய்ந்து அறிந்து இவளது பணியில் பிரச்சனைகள் வர வாய்ப்பில்லை என புரிந்த பின்னரே அவளை அனுமதித்து இருந்தான்.

“இப்போது என்ன பிரச்சனையாக இருக்கும்?” என யோசித்துக் கொண்டு இருந்தவனை விக்ரம் கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன சார் என்னை அளந்து பார்த்தாச்சா? எப்படி நான் தேறுவேனா?” இப்போது கார்த்திக் கேட்க விக்ரம் சிரித்திருந்தான்.

“சித்ரா எல்லார் கிட்டயும் ஒன்னு போலவே பழகுறா, நல்லவங்க கெட்டவங்க தெரியறதில்லை. அதனாலத்தான் கொஞ்சம் சொன்னேன்.”

“எது கொஞ்சம்? அவ முன்னாலயே அவ பேசுர பையனை மிரட்டி இருக்கீங்க? இப்படி செஞ்சா யாரும் என்னை தப்பா பேச மாட்டாங்களான்னு அவ கலங்கி நிக்குறா… இன்னிக்கு அவ ஆஃபீஸ் கூட வரலை.”

“அச்சோ…”

“அவ யார் கூட பேசினா உங்களுக்கு என்ன சார்? எதுக்கு இத்தனை உரிமை எடுத்துக்கணும்?”

“ஆக்சுவலி ஐ லைக் ஹெர்.” (என்னன்னா அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும்)

“ரொம்ப கஷ்டம்”

“என்னதுங்க சார்”

“என்னை மாதிரியே… இல்ல இல்ல என்னை விட மோசமா ஒருத்தனை பார்க்குறேனா…. அதனாலத்தான் கேட்கிறேன். சரி நீங்க அவளை திருமணம் செஞ்சுக்கிற ஐடியாவா? இல்லை…”

“ஆமா ஆமா அப்படித்தான் ஐடியா… அவ என்னை கட்டிக்க ஒத்துக்குவாளா?”

“தெரியலை பார்ப்போம்… ரொம்ப பயமுறுத்திட்டீங்க அவளை… கொஞ்சம் ஒதுங்கி நின்னுக்கோங்க… ரொம்ப உரிமை எடுத்துக்காதீங்க… கொஞ்ச நாள் போகட்டும். பொண்ணுங்களுக்கு தவறானவங்களை இனம் கண்டு பிடிக்கத் தெரியும் விக்ரம். அவளாகவே அவன் தவறானவன்னு புரிஞ்சி விலகிக்குவா… இல்லைன்னாலும் அவளை கவனிச்சுக்க வீட்டில் நாங்க இருக்கோம் தானே?”

“ம்ம்ம்….”

“அவளும் உங்களை விரும்பினா நான் உங்க கல்யாணத்தை முன் நின்று நடத்தி வைக்கிறேன் சரியா? அது இல்லாம வேற எதுவும்னா நாங்க வேற நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும்.”

“அச்சச்சோ, நான் தவறானவனில்லை.”

“அது புரிஞ்சதாலத்தான் நான் இவ்வளவு நேரம் உங்க கிட்ட பேசினதே… இது என்னோட கார்ட்” கார்த்திக் நீட்டினான் விக்ரமும் தனது கார்டை நீட்ட பரஸ்பரம் பறிமாறிக் கொண்டனர்.

அடுத்து கிடைத்த விமானம் ஏறி, கார்த்திக் வீட்டிற்கு வந்துச் சேர மணி ஒன்றாகி இருந்தது. உறங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் மகளிடையே இடம் பிடித்து தூங்கிக் கொண்டான்.

மாதங்கள் கழிந்திருந்தன… தான் விக்ரமை விரும்புவதாக சித்ரா கார்த்திக்கிடம் தான் முதலில் கூறி இருந்தாள். வேலையின் நீக்கு போக்குகளும், ஆட்களை ஆய்ந்தறியவும் அலுவலக பணியினூடே கற்றிருந்தாள்.

சித்ராவிற்காக மாமனாரிடம் பேசச் செல்லும் முன் சுசியிடம் பேசி சில முடிவுகளை எடுக்க அனுமதி கேட்டிருந்தான்.கார்த்திக்கிற்கு தெரிந்த எல்லாமும் மீராவிற்கும் தெரியுமென்பதால் அங்கே எந்த குழப்பங்களும் இல்லை.

“அதெப்படி இது கல்யாணத்தில் தான் முடியும்னு கணிச்சிங்க கார்த்திக்”, என தன்னிடம் வியப்பாக கேட்டிருந்த மீராவிடம்,

“இல்லைன்னா அவ என் கிட்ட வந்து சொல்லி இருக்க மாட்டால்ல மீரு…என்னதான் படபடன்னு பேசுர குணம்னாலும் அவ ரொம்பவே புத்திசாலிதான். பிரச்சனைன்னு வந்தா தானாகவே சமாளிச்சு இருந்திருப்பா.”

“அப்ப அவ அன்னிக்கு உங்களுக்கு அழைச்சது வந்து இந்த பையன் சரியான்னு பார்க்க சொன்ன மாதிரியா?” கேட்டவளிடம் கார்த்திக் சிரித்தான்.

“அப்படியும் இருக்கலாம், டேய் எனக்குன்னா வந்து பேச ஆட்கள் இருக்காங்க வென்று நீ உன் வேலையை பாருன்னு விக்ரம்கு காட்டுறதுக்காகவும் இருக்கலாம்.” அவன் சொன்ன விதத்தில் இவளும் சிரிக்க,

“பிரச்சனைன்னதும் உனக்கு அழைக்காமல் எனக்கு அழைச்சது உனக்கு கோபமில்லையா?” கேட்டவனிடம்,

“அதிலென்ன இருக்கு? இரண்டும் ஒன்னுதான்.” என்றாள் மீரா.

அப்படித்தான் சித்ரா மற்றும் விக்ரம் திருமணத்திற்கு ஒரு சில மாதங்கள் கழித்து சுசித்ராவிற்கும், வேந்தனுக்கும் விமரிசையாக திருமணம் நடைப்பெற்றது.

மேட்ரிமோனியலில் வெகுவாகத் தேடி சலித்து சுசித்ராவுக்காக கண்டுபிடிக்கப் பட்டவன் தான் வேந்தன். சுசி பணி புரிந்துக் கொண்டிருந்த ஃபைனான்ஸ் துறைக்கு தொடர்பற்ற இளம் பொறியாளன் வேந்தன். பணி புரிந்த துறைகள் வேறு பட்டாலும், கறாரான சுசிக்கும் கலகலப்பான வேந்தனுக்கும் மனதளவில் ஒட்டுதலோ ஒட்டுதல்தான்.

சித்ரா மற்றும் சுசிக்கும் இரண்டாவது தாய் வீடாக மீரா வீடு இருந்தது எனில் மிகையில்லை. விருந்தாளிகளுக்கெனவே அவன் வீட்டின் இரண்டு அறைகள் எப்போதும் ஆயத்தமாக இருக்கும். ஆனால், அவனது படுக்கையறைக்குள் எட்டிப் பார்க்க யாருக்கும் அனுமதி தருவது கிடையாது.

பிறர் வந்துச் செல்லும் இடமாக படுக்கை அறை இருந்தால் பிறரின் எண்ண அலைகள் தம்பதிகளை பாதிக்குமாம். கார்த்திக் சொன்னால் சரியாகத்தானே இருக்கும் என்ன சொல்கிறீர்கள்?

இப்போது கார்த்திக்கின் வீட்டுச் சுவற்றில் சித்ரா & விக்ரம், சுசித்ரா & வேந்தன் தம்பதியர் புகைப்படங்களும் சேர்ந்திருந்தன.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here