மனதோரம் உந்தன் நினைவுகள்_29_ஜான்சி (நிறைவுப் பகுதி)

0
401

Manathoram Unthan NinaivukaL_Epi 29_Jansi Epilougue

அத்தியாயம் 29

காதலெனும் பேருணர்வு

ஒரு காதல் என்னச் செய்யும்?!

தன்னை நேசிக்க வைக்கும்

பிறனை நேசிக்க வைக்கும்.

ஒரு காதல் என்னச் செய்யும்?!

தானும் வளர்ந்து

பிறனையும் வளர்த்து விடும்

ஒரு காதல் என்னச் செய்யும்?!

வாழ்வை அழகாக்கும்

முகங்களை பொலிவாக்கும்.

ஒரு காதல் என்னச் செய்யும்?!

சுற்றத்தை அணைக்கும்

உற்றவர்களை அரவணைக்கும்.

ஒரு காதல் என்னச் செய்யும்?!

காதல் என்னதான் செய்யாது?

கடவுள் செய்யக் கூடியதெல்லாம் –இந்த

காதலும் தான் செய்யும்.

அன்று மீராவிற்கு அலுவலக வேலைகளில்லை என்பதால் காலை எழுந்தது முதல் தனக்கும் கார்த்திக்கிற்கும் விருப்பமானவைகளை சமைத்துக் கொண்டு இருந்தாள். அவர்கள் வீட்டில் அவ்வப்போது யாருக்கு சௌகர்யமோ அவர்கள் சமைத்துக் கொள்வர். முடியாத பட்சத்தில் வெளியில் இருந்து வரவழைத்து உண்பதோ… இல்லை வெளியில் போய் சாப்பிடுவதோ என பழக்கப் படுத்தி இருந்தனர். இரண்டரை வயதான மகளுக்கு வெளி உணவு சரிப்பட்டு வராது என்பதால் பெரும்பாலும் வீட்டுச் சமையல்தான்.

மற்ற நாட்களை போல கார்த்திக் தனது அலுவல் அறையின் உள்ளே இராமல், மகளை கவனிக்கவென்று ஹாலில் அமர்ந்து மடிக்கணிணியில் வேலை செய்துக் கொண்டு இருந்தான். அவனது இத்தனை வருட அனுபவத்தில் அவன் மூளை பணம் பணம் என்றே டிசைன் செய்தது போல மிக நுட்பமாக யோசித்து செயல்படும் விதமாக மாறி இருந்தது. இந்திய பங்குச் சந்தையோ, சர்வ தேச பங்குச் சந்தையோ சூழ்நிலை சரியில்லை எனும் சூழ்நிலை வரும் போது அலட்டிக் கொள்ளவெல்லாம் மாட்டான். சில நாட்கள் இடைவெளி எடுத்து விட்டு, மறுபடியும் தொடருவான்.அகலக்கால் வைக்காமல் மிக கவனமாக பயணிக்கும் பாதை அவனுடையது.

மகிழ்தினி பெற்றோர்கள் கற்றுக் கொடுத்திருப்பது போல படுக்கையில் அசுத்தம் செய்யாமல் சிறுநீர் கழிக்க உந்துதல் வரவும் எழுந்திருந்தாள்.தூக்கம் கலைந்து எழுந்திருந்தவள் தலைமுடி கலைந்தவளாக, அழகிய குட்டிப் பொம்மையாய் தத்தி தத்தி படுக்கையினின்று இறங்கி நடந்து வெளியே வந்தாள்.

நின்றவிடத்திலிருந்து டாய்லெட் செல்ல வேண்டும் என குரல் கொடுக்க, மீரா மகளுக்கு உதவி செய்தாள். அடுத்து, தூக்கக் கலக்கத்தில் இருந்த மகளின் முகம் கழுவி, பற்களை துலக்கி விட்டு முத்தமிட்டு, பால் குடிக்க கொடுத்து இறக்கி விட அவளோ தகப்பனை நோக்கி வில்லென பாய்ந்தாள்.

‘ப்பூ”

“ம்ம்” வேலை மும்முரத்தில் கார்த்திக் திரும்பி பார்த்திருக்கவில்லை.சோஃபாவில் ஏறியவள் அருகில் வந்து நின்றாள்.

“ப்பா”

“எந்திரா பாப்பா?” (என்ன பாப்பா?)

அழைத்த பின்னும் அப்பா திரும்பாமலிருக்க சட்டென்று தன் குட்டிக் கரத்தால் கார்த்திக்கை சப்பென அடித்திருந்தாள். அடுத்த நொடியே…

‘மகிழு…”

சமையலறையில் இருந்து ஒலித்த அம்மாவின் கோபக் குரலில் சோபாவில் முகத்தை மறைத்து நின்றிருந்தது அந்த சின்னச் சிட்டு.

நடந்த களேபரத்தை உணர்ந்து, மடிக்கணிணியை தூர வைத்தவன் மகளை அள்ளிக் கொண்டு, முதுகை வருடினான்.

“சின்ன புள்ளையை திட்டுற” என்றவனையும் மீரா பார்வையால் எரித்தாள்.

சற்று நேரத்தில் மகள் காலை உணவுக்கு தாயிடம் செல்லாமல் தகப்பனிடம் ஒன்றிக் கொண்டு தவிர்க்க, மீரா மகளை தூக்கிக் கொண்டுச் சென்று உணவூட்டினாள். உதடு பிதுக்கிக் கொண்டு அமர்ந்திருந்த மகிழ்தினியை பார்க்கவே மிக அழகாகவும், கொஞ்சம் பாவமாகவும் இருந்தது.

அடுத்து தாய்க்கும் மகளுக்கும் என்ன உரையாடல் நிகழ்ந்ததுவோ? தாய் மகளை முத்தமிட்டு சமாதானப்படுத்தினாள். தகப்பனிடம் சென்ற மகள் தான் அடித்த கன்னத்தில் முத்தமிட்டு “அப்பா ச்சாரி” என்றிருந்தாள்.

“அதெல்லாம் ஒன்னுமில்லடா…” தகப்பனுக்கும் மகளுக்குமாய் அன்பு முத்தங்கள் இடமாறின.

இரவில் கணவனுக்கும் மனைவிக்குமான வாக்குவாதத்தின் முடிவில் கார்த்திக் மகளை செல்லம் கொடுத்து கெடுக்க கூடாதென்றும், மீரா கண்டிக்கும் போது நடுவில் வரக் கூடாதென்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

“முதல் முதல்ல உன் கிட்ட பேசினப்ப இவளுக்கு பெரிய பிரின்ஸிபல்னு நினைப்புன்னு நினைச்சிருந்தேன். நிஜமாவே இப்ப பிரின்ஸிபல் கிட்ட நானும் என் புள்ளையும் மாட்டிக்கிட்டோம்.”

“ஆமா, இவங்க மாட்டிக்கிடலைன்னா இவங்களை விடறாங்க… போங்கப்பா… அப்பான்னு மரியாதை இல்லாம அதென்ன அடிக்கிறது? அடுத்த முறை இப்படி ஏதாச்சும் பார்த்தேன் உங்களுக்கும் தண்டனை இருக்கு.”

“ரொம்ப பயமா இருக்கு மீரு.”

“பயந்திடுவார் இவர் நான் நம்பணும்… கேடி”

கேடியின் அணைப்பில் துஞ்சினாள் அந்த கண்டிப்பான பிரின்ஸிபல்.

இரண்டு வருடங்கள் கடந்திருந்தன மீராவின் நிறுவனம் இப்போது எட்டு செண்டர்களாக வளர்ந்திருந்தது. என்னதான் வாரம் முழுக்க தனது நிறுவனத்தின் பணிகளில் ஈடுபட்டாலும், வார இறுதியில் எந்த வேலையும் வைத்துக் கொள்ளாமல், முழுக்க முழுக்க தனது குடும்பத்திற்கென ஒப்படைத்து விடுவாள். மாதத்திற்கு இரு முறையேனும் தாத்தா வீட்டிற்கு அதாவது கார்த்திக்கின் அப்பா வீட்டிற்கு இவர்கள் குடும்பமாகச் சென்று அமைதியாக கழித்து வருவர். வருடத்திற்கு ஒரு முறையேனும் மீராவின் பெற்றோர் மற்றும் தங்கைகள் குடும்பத்தோடும் ஊர் சுற்றுவதையும் வழக்கமாக்கி இருந்தனர்.

மகிழ்தினி வளர்ந்து பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்து இருந்தாள்.மீரா தங்கள் மகளுக்கான அத்தனை வேலையையும் கணவன் பொறுப்பிலேயே விட்டிருந்தாள். அவனுக்கு கடந்த கால கசடுகள் எல்லாம் நினைவு வருவதற்கு கூட அனுமதியாமல், தாயும் மகளும் அவன் நேரத்தையும், மனதையும் ஆக்கிரமித்திருந்தனர்.

அவனும் ஒன்றும் சும்மாவெல்லாம் இல்லை, நேரம் காலம் பாராத தனது வேலைக்கு நடுவிலும் “ராம கிருஷ்ணா ட்ரஸ்ட்”ஐ நிறுவகித்துக் கொண்டு இருந்தான். தாத்தா மூலம் வந்த சொத்தை அவரது பெயரில் ட்ரஸ்ட் ஆரம்பித்து நலக்காரியங்களை நிர்வகிக்கச் சொன்னது மீராதான். தனது நிறுவனத்தில் வரும் படிக்க விரும்பும் ஏழை மாணாக்கர்களுக்கான தேவைகளை அந்த ட்ரஸ்டின் மூலமாகவும் அவ்வப்போது நிறைவு செய்வதுண்டு.

ஒரு ஆணோ பெண்ணோ தனித்தனியாக எத்தனையோ சாதனைகள் செய்யலாம்.ஆனால், தம்பதிகளாக ஒருமனப்பட்டு செய்கின்ற செயல்கள் மிகவும் உன்னதமான சாதனைகளாகத்தான் முடியும்.

ஒருவர் முதலில் தன்னை நேசிக்கவும், பிறனை தன் வாழ்க்கைத் துணையை நேசிக்கவும் மதிக்கவும் கற்ற பின்னர் தான் சமூகத்தை நேசிக்க இயலும்.

எல்லாவற்றிலும் பணமே பிரதானம், ஒருவர் மற்றவர் உழைப்பை, அன்பை துளியும் மதிக்காமல் சுரண்டுவதான தற்போதைய திருமண அமைப்பு மாற வேண்டும்.

ஆணும், பெண்ணும் ஒருவர் மற்றவரை நேசித்து, வாழ்வின் துணையாக ஏற்று தங்களது காதலை சமூகம் நோக்கி திருப்புகையில் இப்படி உன்னத நிகழ்வுகள் நிகழக் கூடும். தன்னை நேசிக்கவும், பிறரை நேசிக்கவும் அறியாத தற்போதைய பெரும்பாலான மனிதர்களின் நிலை மாறட்டும்.

அவளது செயல்பாடுகளை பாராட்டி ஒரு சில பத்திரிக்கைகளும் அவளை பேட்டி எடுத்திருந்தன.அந்த பத்திரிக்கை பிரதிகள் அந்த அறையின் டீப்பாயை அலங்கரித்தன. அத்தனையும் கார்த்திக்கின் முகத்தில் பெருமிதமான முறுவலை வரவழைத்திருந்தன.

பல நேரங்களில் சாதனையாளர் பின்னால் பெரும் தூணாக, வெளி உலகத்திற்கு தெரிய வராத மற்றொரு சாதனையாளர் இருப்பதுண்டு. இங்கு மீராவிற்கு பின்னால் கார்த்திக் தான், கார்த்திக் மட்டுமேதான்.

பெரும்பாலும் ஆண்கள் தவிர்க்கும் மனைவியர் செய்யும் பொறுப்புக்களை எல்லாம் இங்கே இவன் ஏற்றிருந்தான். இவ்வளவிற்கும் மீராவின் செயல்பாடுகள் சமூக சேவையை முன்னிட்டதே அன்றி பொருளீட்டும் முகமாக அதனை அவள் செய்யவில்லை என்பதால் அவர்கள் வீட்டின் பொருளாதார தூணும் அவனேதான்.

நான் ஆம்பிள்ளை இதை செய்ய மாட்டேன் என்றிராமல், மனைவியின் ஆர்வமும், சாதனைகளும் கண்டு அவளுக்கு தூண்டுகோலாகவும் துணையாகவும் இருக்கின்றான். தன்னையும் அவனையும் ஒருபோதும் பிரித்துப் பாராத மீரா எப்படியோ அப்படியேதான் கார்த்திக்கும்.

மதிய நேரம் மகள் பள்ளியில் இருந்து திரும்ப நேரமிருந்தது என்பதால் கார்த்திக் லிவிங்க் ரூமில் அந்த பெரிய டிவி திரையில் மனைவியை கண்டு இரசித்துக் கொண்டு இருந்தான். சமீபத்தில் பிரபல சானல் ஒன்றிற்கு பேட்டிக் கொடுத்திருந்த மீராவின் காணொளிதான் அது.

அவன் எதையோ கண்டு பிடிக்கத்தான் கடந்த மூன்று நாட்களில் அறுபத்து ஆறாவது முறையாக அந்த காணொளியை பார்த்துக் கொண்டு இருந்தான். புதிரை கண்டு பிடிக்க இயலாமல் அவனது மனம் தடுமாறியது.

“வணக்கம் நாம் இன்று சந்திக்கவிருப்பது சாதனைப் பெண்மணியான கே எம் டுடோரியல்ஸ் நிறுவனர் ஸ்ரீமதி மீரா கார்த்திக்.”

கேமரா வெளிச்சம் விழ, அங்கே மீரா பட்டுப் புடவையில், அமர்த்தலான அலங்காரத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்தாள். நிகழ்ச்சி தொகுப்பாளரின் வணக்கத்திற்கு அவள் பதில் வணக்கம் சொன்னபோது, அவள் முகம் முன்னிலும் அதிகமாக பளீரிட்டு இருந்தது.

‘அவள் அழகுதான் ஆனால், இந்த அதிகமான அழகு இதற்கு முன்பாக எப்போது பார்த்தோம்?’ விடை தேடி தலையை குடைந்துக் கொண்டான் கார்த்திக்.

“உங்களுடைய இந்த உன்னதமான முயற்சி, கல்வி இடை நிற்றல் காரணமாக பாதிக்கப்படும் மாணாக்கர் நலம் குறித்த சமூக பார்வைக்கு காரணம் என்ன?”

“இதற்கு காரணம் எங்கள் தாத்தாதான்… அவர் நிறைய குழந்தைகள் படிப்பிற்கு உதவி செய்ததை அறிந்திருந்தேன். இப்படிப்பட்ட கல்வி இடை நிற்றல் காரணமாக பாதிக்கப் படும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து அடிக்கடி பேசுவார். எங்களது உரையாடல்களின் முடிவில் எப்போதும் இவைகள் குறித்த அதிகமாக விபரங்களை தேடி அறிந்துக் கொண்டு இருந்தேன். இப்படி ஏதாவது செய்ய என் மனதிற்குள்ளாக ஒரு ஆசை இருந்தது. வாய்ப்பு கிடைத்ததும் செயல்படுத்தினேன்.”

“எல்லா ஆணின் வெற்றிக்கும் பின்னே பெண்கள் இருப்பதாக சொல்வதைப் போல உங்கள் வெற்றிக்கு பின் இருப்பது உங்கள் கணவராமே?”

அந்தக் கேள்விக்கு பதில் சொல்லும் முன்பாக அவள் வெட்கிச் சிரித்ததை அடிக்கடி ஓட்டிப் பார்த்தான்… “நிச்சயமா அவர்தான் காரணம்… நான் வழக்கமா வேலைக்கு போகணும் அப்படி எண்ணத்தோட இருந்தப்ப உனக்கு என்ன செய்யணும்னு சொல்லு செய்யலாம் என்று எல்லாவற்றிலும் அவர்தான் இன்றைக்கு வரைக்கும்… ஃபைனான்ஸ் முதலாக எனது செயல்களை ஊக்கப் படுத்துவது, தேவையான அனைத்தையும் முன்னின்று செய்வது என அவர் இல்லைன்னா நானில்லை.”

“வாவ் உங்கள் வார்த்தைகளில் உங்கள் கணவருக்கான அன்பு தெரிகின்றது என்ன காதல்! என்ன காதல்!”

அதற்கும் புன்னகைத்திருந்தவளிடம், அடுத்த கேள்வி கேட்கப் பட்டது.

“உங்கள் அகடெமியில் உருவ கேலி, மட்டம் தட்டிப் பேசுதல் முதலியனவற்றுக்கு மிகுந்த தண்டனைகள் உண்டாமே?”

இப்போது மீராவின் முகம் கண்டிப்பான பாவனைக்கு மாறி இருந்தது.

“நிச்சயமாக… ஒருவரது கற்றல் குறைபாடு அல்லது உடல் ஊனம் அது அவர்களை மற்றவர்கள் இழிவாக எண்ணுவதற்கான அனுமதி சீட்டு அல்ல. பிறரது ஊனத்தை, குறைபாடை சுட்டிக் காட்டி ஒருவரை பலவீனப்படுத்துவதாக இருந்தால் நாம் கற்கும் கல்விக்கு என்ன பொருள்?

எங்களது நிறுவனம் ஆரம்பிக்கும் முன்பாக நாங்கள் நிகழ்த்திய கருத்துக் கணிப்பின் போது பெரும்பாலான மாணாக்கரின் கல்வி இடை நிற்றலுக்கு இத்தகையான மன ரீதியான தாக்குதல்கள்தான் காரணம் என நாங்கள் அறிய வந்தோம்.அதனால், எங்கள் கல்வி நிறுவனங்களில் அவற்றை முற்றிலுமாக எதிர்க்கிறோம்.”

“மிகச் சிறப்பு.”

“டுடோரியல் சேர்க்கும் முன்பே நாங்கள் மாணாக்கரிடமும் அவர்கள் பெற்றோர்களிடமும் இதனை தெளிவுப் படுத்தி அதற்கான உறுதிப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி விடுவோம். அது யாராகினும் பிறரை இகழ்வாக பேசுவதாக அறிந்தால் இரண்டு முறை எச்சரிக்கை கொடுக்கப்படும். மூன்றாவது முறை அதே நடவடிக்கை தொடர்ந்தால் அவர்கள் எங்கள் டுடோரியலில் இருந்து நீக்கப் படுவர். ஆரம்பத்தில் ஒரு சிலர் நீக்கப் பட்டனர். அதன் பின்னர் அப்படியான நிகழ்வுகள் நிகழவில்லை.

“வாவ் அதிசயிக்கின்றேன், இது எப்படி சாத்தியம்?”

“முதலாவது நாங்கள் படிப்பிற்கு உரிய கட்டணம் வாங்குகின்றோம்தான் ஆனால், நிறுவனத்தை பணத்திற்காக நடத்துவதில்லை.

இரண்டாவதாக குறைகள், ஊனங்கள் இருக்கின்றவர்கள் யாரும் தாமே விரும்பி ஏற்று அவைகளை பெற்றிருப்பதில்லை. ஏற்கெனவே, அவைகளால் நொந்து போய் இருப்பவர்களை கீழ்த்தரமான வார்த்தையால், செய்கையால் சுடும் எந்த மாணாக்கரும் எமது டுட்டோரியலில் இருக்கக் கூடாதென்பதில் திண்ணமாக இருக்கின்றோம்.”

கார்த்திக்கிற்கு தான் பள்ளியில் அனுபவித்தவை வழக்கம் போல நினைவிற்கு வந்துச் சென்றன. மனைவியின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் தனது வலியும் வேதனையும் இருப்பதை உணர வைத்துக் கொண்டே இருந்தாளவள்.

இரு உடல்கள் ஓருயிர் தத்துவம் இதுதான் போலும்! இவனுக்கு காயமேற்படுத்தியவை எல்லாம் அவளை வலிக்கச் செய்திருக்கின்றனவே?!

காணொளியில் “அருமை மிக அருமை. உங்கள் டுட்டோரியலின் கற்பிக்கும் விதம் முதலில் சொல்ல முடியுமா?”

“மாணாக்கர்களால் கற்றுக் கொள்ள முடியும் என நேர் மறை எண்ணங்களை புகுத்துவது தான் எங்கள் டுட்டோரியலின் முதல் பாடமாகும். மற்றபடி நிபுணர்களைக் கொண்டு விதவிதமான பிரச்சனைகளுக்கேற்ப விதவிதமான கற்பிக்கும் திறன்கள் உள்ளன. எவ்விதமான பிரச்சனை என கண்டுக் கொண்டு அதற்கேற்ப…..”

வாயிலில் கேட்டை செக்யூரிட்டி திறக்கும் சப்தம் கேட்டதும், கார்த்திக் காணொளியை அணைத்து வாசலுக்குச் சென்றான்.

மீரா தனிப்பட்ட நேரத்தில் எல்லா வகையான உடைகள் அணிவாளெனினும் அவளின் பணி கற்பித்தல் என்றான பிறகு சேலையையே அவளது உடையாக்கிக் கொண்டிருந்தாள். காரில் இருந்து இறங்கியவள் டிரைவரிடம் ஏதோ சொல்ல அவர் முகத்தில் மகிழ்ச்சி. சீக்கிரமே வேலை முடிந்தால் மகிழ்ச்சி வராதா என்ன? காரை பார்க் செய்தவர் சாவியை மீராவிடம் கொடுத்து விட்டு, “பாய் மேடம்” எனச் சொல்லிச் செல்ல மீராவும் “பாய்” எனச் சொல்லி உள்ளே வந்தாள்.

கதவை திறந்து நின்றவன் இடுப்பை அவள் கட்டிக் கொள்ள, கதவை பூட்டினான் அவன்.

“கார்த்திக் ஓ மை கார்த்திக்” வழக்கத்திற்கு மாறாக அவனை இறுக்க கட்டிக் கொண்டு இருந்தாளவள்.

“போ, ரிஃப்ரெஷ் ஆகிக்கோ.”

“ம்ம்…” உடை மாற்றி முக்கால் பாண்டும் டிசர்ட்டுமாய் வந்தவள் மெலிந்திருந்தது இவன் கண்ணுக்கு புலப்பட்டது.

“சில நாட்களாக மனைவியை தான் சரியாக கவனிக்கவில்லையோ?” இவனுக்கு சன்னமாய் கவலை வந்தது.

“என்ன வேணும் சொல்லு?” சமையலறையில் இருந்து கேட்டவனிடம்

“எனக்கு ஒரு ஃபுல்… கார்த்திக்… கார்த்திக் மட்டும்தான் வேணும்.”

“ஓவர்டி” என்றவாறு கைக்கு கிடைத்த பழ ஜீஸ் ஒன்றை எடுத்தவன் ஹாலிற்கு சென்றான்.

அவன் கொண்டு வந்து தந்ததை இரண்டு மடக்கு குடித்தவள் அதை டீப்பாயில் வைத்து விட்டு, தன் அமர்ந்திருந்தவன் மடியில் படுத்த வண்ணம்

“என்ன ஸ்பெஷல் சொல்லுங்க?” கேட்டவளின் அந்த தகதகத்த அழகில் தடுமாறியவன்,

‘அதை கண்டுக் கொள்ள முடியாமத்தான் நானே திரியுறேன். இதில் என் கிட்ட கேட்கிறியா போ’ மனதில் பொருமினான்.

தன் மொபைலை அவன் பக்கம் நீட்டியவள் காண்பித்ததை பார்த்தவனுக்கு மெய் கூச்செறிந்தது. இது உண்மையா? என்பது போல அவளை எட்டிப் பார்த்தான்.

“திடீர்னு ஒரு சந்தேகம்… அதனால பரிசோதிச்சுப் பார்த்தேனா?” என்றவளை மாரோடு இறுக்க அணைத்திருந்தான். அந்த புகைப்படத்தில் அவள் கர்ப்பம் தரித்து இருந்ததற்கான அடையாளமாக பிரெக்னென்சி கிட்டின் இரண்டு கோடுகள் அழுத்தமாக பதிந்திருந்தன.

‘ஓ இவள் மகிழ்தினியை கருவுற்ற போதும் இப்படித்தான் பேரழகாக இருந்தாள்’ மனம் வெகு தாமதமாக விழித்து அவனுக்கு நினைவூட்டியது. மகிழ்தினி வளர்ந்து விட்டாள் என்பதால் சமீபத்தில் தான் தற்காப்புகளை அவர்கள் நிறுத்தி இருந்தார்கள். அடுத்த கருவுறுதல் எதிர்பார்த்தது எனினும் இம்முறை அவர்களுக்கு அறிகுறிகள் தெரியாமல் இருந்தது குறித்து ஒருவகை இன்ப அதிர்ச்சியே.

“மிஷன் 2 அவுட் ஆஃப் 3 சக்ஸஸ்” என்றவளிடம்

“போவெ” (போடி) என்றிருந்தான்.

அடுத்த நாள் மகள் பள்ளிக்குச் சென்ற பின்னர், தம்பதியர் மருத்துவரை சந்தித்த போது, “இது நாலாவது மாசம்…. மிஸ்டர் & மிஸஸ் கார்த்திக் ஹாஸ்பிடல் வர முடியாத அளவிற்கு ரொம்ப பிஸியோ?” சீண்டினார்.

“வாங்க அல்ட்ராசவுண்ட் பார்த்திடலாம்” எனச் சொல்லவும் அங்கே அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

“ட்வின்ஸ்” மருத்துவர் சொல்ல இருவருக்கும் மயிர் கூச்செரியும் நிலைதான். சில்லிட்ட கணவனின் கைகளில் மீரா கை கோர்த்தாள். மருத்துவர் அங்கிருந்து அகன்ற நொடியில்,

“கார்த்திக்”

“ம்ம்ம்”

“மிஷன் 3 அவுட் ஆஃப் 3 சக்ஸஸ்.”

“ஷ் ஷ்” அதட்டினான்… முதல் பிரசவத்தில் அவள் கஷ்டப்பட்டதை அவன் நன்கறிவான். இப்போது இரண்டு குழந்தைகள் எனும் போது அவனுக்கு மிகவும் பயமாக இருந்தது.

“எங்கம்மா நல்லாதானே இருக்காங்க” எழுந்து வயிற்றில் தடவி இருந்த ஜெல்லை துடைத்து விட்டு உடைகளை அணிந்தவள் கணவனிடம் கேட்டிருந்தாள்.

“ம்ம்…” புரியாமல் தடுமாறினான்.

“என் தங்கச்சிங்க சித்து, சுசி ட்வின்ஸ்… எங்கம்மா நல்லாதானே இருக்காங்க, நானும் நல்லாதான் இருப்பேன். பயப்படக் கூடாது” சொன்னவளை தோளோடு இறுக்க அணைத்தவன் பெருமூச்செறிந்தான். உணர்ச்சிப் பெருக்கில் தான் இருக்கும் இடம் மறந்து, அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்.

மருத்துவரிடம் ஆயிரம் விபரங்கள் கேட்டு வீட்டிற்கு சென்றனர். மகிழ்தினி “எனக்கு பாப்பாவாமா? நான் அக்காவா?” தாயின் வயிற்றின் அருகே நின்று உரையாட தன் மகளிடம் மற்றொரு மீராவை கண்டான் கார்த்திக். “ஆமாடா” மகளை தூக்கிக் கொண்டான்.

“எனக்கு ரொம்ப ஹாப்பிப்பா” சொன்ன மகளை இருவரும் அணைத்துக் கொண்டனர்.

மீராவின் வீட்டிற்கும் தகவல் சொல்ல அனைவருக்கும் அத்தனை மகிழ்ச்சி மீராவின் பெற்றோர் வந்து சில நாட்கள் தங்கிச் சென்றனர். தங்கைகளும் கணவர் மற்றும் குழந்தையோடு வந்து சில நாட்கள் தங்கி, தமக்கைக்கு தேவையானவைகள் எல்லாம் கேட்டு செய்துக் கொடுத்தனர். தனது அகெடெமியை பார்வையிடும் பணிகளை தன் உடல் நிலைக்கு குந்தகம் வராமல் மீரா பார்த்துக் கொண்டாள். அவளுக்கு முடியாத நேரங்களில், கார்த்திக் அவைகளை மேற்பார்வை பார்த்து வருவான்.

எட்டு வருடங்கள் கடந்திருந்தன.

கார்த்திக் தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளோடு இருக்கும் சமீபத்திய புகைப்படம் அவர்கள் வீட்டுச் சுவரை அலங்கரித்தது. மீராவிற்கு கிடைத்த சில விருதுகளும், மகள் மகிழ்தினி பெற்ற சில மெடல்களும், சின்னவர்களின் பாராட்டுப் பத்திரங்கள் சிலவையும் அந்த வரவேற்பறையை அலங்கரித்தன.

கார்த்திக்கும் மீராவும் அப்போதுதான் தங்கள் இரவு உணவை முடித்து அறைக்கு வந்திருந்தனர். தனது பணிகள் முடிந்து வந்தது முதலாக தூக்கத்திற்கு கண்கள் சொக்கி இருந்தவள் அப்போது அவனை கட்டிக் கொண்டு, அயர்ந்த தூக்கத்தில் இருந்தாள். கார்த்திக்கின் கண்களும் தூக்கத்திற்கு சொக்கிய நேரம் அவனுக்கு அந்த குரல்கள் கேட்டன.

கார்த்திக் மீராவின் தூக்கம் கலையாத வண்ணம், அவளை நகர்த்தி படுக்க வைத்து விட்டு கதவை சாற்றி விட்டு வெளியில் வந்தான்.

“நானா… நானா” (அப்பா) முதல் மாடியில் இருந்து மித்ரா கதறிக் கொண்டு ஓடி வர அவளை தூக்கிக் கொண்டான். அவன் தோளில் முகம் புதைத்திருந்தவள் தேம்பினாள்.

“நேனு ஏமி செய்யலேது” (நான் ஒன்றும் செய்யவில்லை) என்று மிதுன் அலட்டலாக வந்து நின்றான்.அவன் அப்படியே முடி முதல் அடி வரை கார்த்திக் தான்.

மகிழ்தினி தம்பியிடம்,“அம்மா களைப்பா இருந்தாங்க… இப்படி தூங்குற நேரம் எதுக்குடா வம்பு பண்ணுற?” கவலையாய் கேட்டாள்.

“நாங்க ஒரே ப்ரொஜெக்ட் தானே செய்றோம்… அவ எனக்கு காண்பிச்சா என்னவாம்? ரொம்பத்தான். அதனாலத் தான் பிடுங்கினேன்…” அதிகாரமாக பேசியவன் இப்போது… “கிழிஞ்சதை ஒட்டி தந்திடுவேன்” குரல் இறங்கலாக பேசவும் மகிழும், கார்த்திக்கும், மித்ராவும் திரும்பிப் பார்த்தனர்.

படுக்கையறையின் வாயிலில் அந்த இரவுடையில் வயதிற்கும் தோற்றத்திற்கும் சம்பந்தமில்லாமல் வெகு இளமையாய், தன் கைகளை கட்டிக் கொண்டு மீரா கம்பீரமாய் நின்றிருந்தாள்.

“அம்மு”

“என்னம்மா?” மகிழ் கேட்க,

“எல்லாரோட மீதி ப்ரொஜெக்டையும் நாளைக்கு செய்யலாம்… நானே ஹெல்ப் செய்றேன். மேல் ரூம்லாம் லைட் அணைச்சுட்டு வாடா” என்றாள்.

“போச்சா…” மிதுன் முகம் கோணலாக, கார்த்திக் சிரிப்பை அடக்கிக் கொண்டான். மித்ராவிற்கு முகமெல்லாம் பல் தான்… தகப்பனிடம் எதையோ குசுகுசுவென பேசி சிரித்தாள்.

“ம்மா” அதிகாரமாக எதிரில் வந்து நின்றவனை மீரா தூக்கிக் கொண்டாள்.

“வாடா” மகிழையும் தன் தோளோடு அணைத்துக் கொள்ள, படுக்கையறை ஹவுஸ் ஃபுல்லானது. தாய்க்கும் தந்தைக்கும் நடுவில் மகிழ் படுத்துக் கொண்டாள். தாய்க்கு அடுத்த பக்கம் மிதுன் இருக்க, தந்தையின் ஓரமாக மித்ரா படுத்து இருந்தாள்.

படுக்கையில் இருந்து இறங்கிய மித்ரா தாயிடம் சென்று,

“குட் நைட் அம்மா” என இடது கன்னத்தில் முத்தமிட்டு நகர, அவள் முத்தமிட்ட கன்னத்தை மிதுன் அழித்து “குட் நைட் மா” என தான் முத்தமிட்டான்.

“அம்மா சூடம்மா விட்னி…” (பாரும்மா இவன?) அழுவாரைப் போல நின்றவளை மீரா எழுந்து தூக்கிக் கொண்டாள்.

“என் செல்லக் குட்டில்ல” மித்ராவிற்கு முத்தம் வைக்கவும் “அப்ப நானு?” போட்டிக்கு வந்தவனுக்கும் முத்தம் வைத்தாள்.

தான் முத்தமிட்ட அம்மாவின் இடக்கன்னத்திலேயே மறுபடி மித்ரா முத்தமிட, அதை மறுபடி அழித்து தான் முத்தமிட்டான்.

“அம்மா…” அழுவாரைப் போல சின்னவள் நிற்க,

“உனக்குதான் அந்த கன்னம் இருக்கில்ல?” என தாயின் வலதுக் கன்னத்தை அவள் எடுத்துக் கொள்ளச் சொல்லி வெட்டி நியாயம் பேசியவனிடம் போட்டிக்கு நின்றாள்.

“அப்பா நாம இரண்டு பேரும் தூங்குவோம், குட் நைட் அப்பா” மகிழ் அப்பாவிற்கு முத்தம் வைப்பதை பார்க்கவும், மித்ரா அடித்துப் பிடித்து தகப்பனிடம் விரைந்தாள்.

“நா நானா” (என் அப்பா) கார்த்திக்கிடம் தாவினாள். அவள் மகிழை தள்ளிவிட முயலவும்,

“ஷ் ஷ் அக்கால்ல”, அதட்டிய அப்பாவின் மார்பிலேயே சட்டமாய் படுத்துக் கொண்டாள். சற்று நேரத்தில் மித்ரா தன் பிடிவாதம் குறைந்து அவனது வலதுபக்கம் படுத்தாள். கார்த்திக் எழுந்து, கட்டிலின் இரு ஓரங்களிலும் படுத்திருந்த மித்ரா மற்றும் மிதுன் விழாமல் இருக்க அவர்களுக்கு அணைவாக தலையணைகளை வைத்து விட்டு படுத்தான்.

நடுவில் படுத்திருந்த மகிழின் தலை வருடியவன் மகனை பார்க்க, அம்மாவை அடை காத்துக் கொண்டிருந்த அவன் இவனை எட்டியும் பார்க்கவில்லை. சில நிமிடங்களில் மறுபடியும் மீரா தூங்கி விட, மகிழ் தகப்பனை பார்த்த வண்ணம் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

“அப்பா கதை சொல்லுங்க” மித்ரா கேட்க, மிதுனும் அவர்களை கவனித்தான்.

“ஒரு ஊர்ல ஒரு ராஜா …”

“ம்ம்”

“அந்த ராஜாவுக்கு ஒரு ராணி” கார்த்திக்கின் கை மகளை தாண்டி, மீராவை அணைத்திருந்தது.

“அந்த ராணி நம்ம அம்மா தானே? எப்ப பாரு இதே கதையா? போரடிக்குது புதுக்கதை சொல்லுங்க நானா” மிதுன் சடைத்துக் கொண்டான். அந்த படுக்கையறை சற்று நேரம் சிரித்தடங்கியது.

நிறைவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here