மனதோரம் உந்தன் நினைவுகள்_3_ஜான்சி

0
356

அத்தியாயம் 3

Manathoram Unthan NinaivukaL_Epi 3_Jansi

காதல் வியாதி

ஆணென்றும் பெண்ணென்றும்

பாலினம் பாராது…

படிப்புக்கும், பகட்டுக்கும்

வித்தியாசம் காணாது…

பேதங்கள் இன்றியே,

அனைவரையும் தாக்கும்

இந்த காதல் ஒரு தொற்று வியாதி

மீராவின் கலக்கம் இரவிலும் தொடர, தன்னையறியாமல் நான்கு மாதங்களுக்கு முன்னதான நினைவுகளில் அமிழ்ந்தாள். அன்று வழக்கம் போலொரு வெள்ளிக்கிழமை சாயுங்கால நேரம்.

வேலை நேரம் முடிகின்ற போது அவளுக்கு மேலதிகாரியிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. அவள் அந்த டைரக்டரின் கேபின் சென்று நிற்க, உள்ளே அலைபேசி அழைப்பில் ஆழ்ந்திருந்த அவர் இவளைக் கண்டதும் கண்ணாடி அறையின் உள்ளிருந்து அழைத்தார்.

அவர் பேசி முடிக்கும் வரையில் அந்த குட்டிக் கேபினில் சுற்றிப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள்.

“ஹே மீரா, நலமா?” அவளை பதில் சொல்ல விடாமல் கூட தொடர்ந்தார்.

“நான் உன்னை அழைத்ததற்கு மிக முக்கியமான அவசரமான காரணம் இருக்கின்றது. திங்கள் கிழமை நீ ஹைதராபாதில் இருந்தாக வேண்டும்.” என காரணங்கள் விபரங்கள் சொன்னவர்,

“திங்கள் காலை உனக்கு எத்தனை மணிக்கு ஃப்ளைட் பதிவுச் செய்யட்டும்? 6 மணி ஃப்ளைட்டா இல்லை 7 மணிக்கா?”

என்னவோ பக்கத்தூரு சந்தைக்குப் போகும் பஸ் விபரம் கேட்டதைப் போலிருந்தது அவரது பேச்சு.

தேவைப்பட்டால் கிளை அலுவலகங்களுக்கு பயணித்தாக வேண்டும் எனும் விதிமுறைகள் மீரா அந்த பணியில் வேலைக்கு சேரும் முன்பே அவளுக்கு தெரிவிக்கப் பட்டு இருந்ததால் தன்னால் செல்ல முடியாது என அவள் மறுப்புச் சொல்ல வாய்ப்பில்லை. இருந்தாலும் கூட கடைசி நேரம் தன்னிடம் தகவல் சொல்லி, சனி ஞாயிறு லீவை அமைதியாக கழிக்க விடாமல் துரத்தும் அந்த சுஜித் மேல் மீராவிற்கு கடுப்பு கடுப்பாக வந்தது.

“6 மணி ஃப்ளைட்டா இல்லை 7 மணிக்கா? அட்மின் டீமிடம் எந்த ஃப்ளைட்டில் உனக்கு டிக்கெட் பதிவுச் செய்யச் சொல்லட்டும்?” அவர் தன் பேச்சிலேயே இருக்க, போற உயிரு ஒரு மணி நேரம் முன்னயே போகட்டும் எனும் கடுப்பில் “ஆறு மணிக்கே இருக்கட்டும் சுஜித்” என்றாள்.

சுஜித்தின் முகம் மலர்ந்தது… அதன் காரணம் அவளுக்குத் தெரியாதா என்ன? அதிகாலை ஃப்ளைட் டிக்கெட்டுக்கள் விலை குறைவு.

‘என்னமோ காசு இவனுங்க பையில் இருந்து போடுகின்றது போலத்தான்?’ என மீரா தனது மனதில் நொடித்துக் கொண்டாலும், அவரிடம் புன்னகைத்து விடைப் பெற்றாள்.

மீராவிற்கு தன்னை யாரும் அவசரப்படுத்துவது, ஆதிக்கம் செய்வது இவையெல்லாம் பிடிக்காதது. அதனால் எதிர்த்து சண்டையிடுவாள் என்றல்ல மனதிற்குள் வைத்து குமைவாள் அதுதான் அவளது பழக்கம்.

கடைசி நேர இந்த பயணம் பிடிக்காவிடினும், தன்னோடுச் சேர்ந்து அம்மா, அப்பா, தங்கைகள் என அனைவரும் அவளுக்கு உதவியதில் அவள் சனிக்கிழமை இரவு இரண்டரை மணிக்கு தனது பயண மூட்டைகளோடு புறப்பட்டு விட்டாள். தங்கைகள் நீளமான லிஸ்டை அவள் கையில் கொடுத்து, அவைகளில் இருந்தவற்றை ஹைதராபாதில் இருந்து வாங்கி வரச் சொல்லி கையில் திணித்திருந்தனர். ஆயிரம் பத்திரம் சொல்லி அம்மா வழியனுப்பினார். அப்பா விமான நிலையம் வரையிலும் அவளுக்குத் துணையாக வந்தார்.

இரவு மூன்றே முக்காலுக்கெல்லாம் மீரா ஏர்போர்ட் வந்திருக்க அப்பாவிடம் விடைப்பெற்று உள்ளே வந்தாள். செக் இன் செய்து விமானத்திற்காக காத்திருந்தாள். கொட்டாவியோடு தூக்கத்தை விழுங்கி பயணித்து, ஃபளைட்டில் டிக்கெட்டோடு முன்பதிவு செய்யப் பட்டிருந்த காலை உணவையும், சுடு தண்ணீர் காஃபியையும் குடித்து அவள் ஹைதராபாத் வந்துச் சேர மணி ஏழரை ஆயிற்று. புரியாத ஊரில் ஒவ்வொன்றாய் அங்கங்கே நின்று பார்த்து, லக்கேஜ் எடுத்து வெளியே வர இன்னும் அரை ஒரு மணி நேரம் கடந்திருந்தது.

இரண்டு பெரிய பெட்டிகளோடு தான் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்ல முன்பணம் செலுத்தி டாக்ஸி பிடித்துச் சென்றாள். கம்பெனியில் அந்த பணத்தை வசூலிக்க (Reimbursement) வேண்டி இருந்ததால் தனக்கு கொடுக்கப்பட்ட அந்த இரசீதை பத்திரப்படுத்தினாள்.

தனக்கு கொடுக்கப் பட்ட விலாசத்தைக் காட்டி தனக்கு அனுப்பப்பட்டு இருந்த அந்த வீட்டின் அழகான மாடி அமைப்பின் புகைப்படத்தை மறுபடி, மறுபடி சரி பார்த்து அவள் சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கின்றாள் என உணர்ந்து அங்கு இறங்கினாள்.

இப்போது காலை மணி பதினொன்றாகி இருந்தது.அந்த சுற்றுப் புறமும் இரண்டு மாடி வீடும் அம்சமாக இருந்தது. வீட்டு உரிமையாளர் இரண்டாம் தளத்தை வாடகைக்கு விட்டிருப்பதாக சக ஊழியர் ஒருவர் சொல்ல, விபரம் சேகரித்து இருந்தாள்.

இரண்டு தள வீட்டிற்கு அல்லது பங்களாவில் மின்தூக்கியும் இருந்தது. இரண்டு பெட்டிகளோடு இரண்டாம் மாடி எப்படி ஏறுவது? என திகைத்தவளுக்கு மின்தூக்கியைக் கண்டதும் ஆசுவாசமாயிற்று.

இரண்டாம் மாடியில் இறங்கி பெட்டிகளை இறக்கி அழைப்பு மணியை அழுத்தவும் கதவை திறந்த அந்த முதியவர் இவளது பொருட்களை வைக்க வேண்டிய அறையை காட்டி அவளது பெட்டிகலை அங்கு கொண்டு போய் வைக்க அவளுக்கு உதவியும் செய்தார்.

தான் இரவு தூங்காமல் இருந்ததால் கண்கள் கரித்ததையும் பொருட்படுத்தாமல் மீரா அடுத்த ஒரு மணி நேரத்தில் அலுவலகம் செல்ல ஆயத்தமானாள். “ஓலா”வில் வாடகை ரிக்ஷா பதிவு செய்து வரவழைத்து தனது அலுவலகத்திற்கு விரைந்தாள்.

அலுவலகத்திலோ யாரை சென்றுப் பார்க்க வேண்டும் என அவளுக்கு விபரம் தெரியவில்லை. இவளையும் இவளது மடிக்கணிணியையும் பலமுறைகள் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதித்தனர். உள்ளே சென்றதும் தனக்குச் சொல்லப்பட்ட இடத்தில் தனது தோள்பை மற்றும் மடிக்கணிணி பையையும் எடுத்து வைத்தாள்.

அலுவலக ஏசியின் குளுமை களைப்பாக இருந்த மீராவை கண்களைச் ணை சொக்க வைத்தது. தனது மடிக்கணிணியை உயிர்ப்பித்து சில மின்னஞ்சல்களுக்கு பதிலளித்தாள். இனி ஹைதராபாதில் செய்ய வேண்டிய வேலைகள் தெரிந்த பின்னரே அடுத்து என்னச் செய்ய வேண்டும் என வரிசைப்படுத்த வேண்டும் என எண்ணி மடிக்கணிணியை லாக் செய்தாள்.

அந்த பெரிய இடத்தின் கண்ணாடிக் கதவு சட்டென்று திறந்தது.

“ஹாய், நீங்கள் தான் மீராவா?” புன்னகைத்தவாறு ஆங்கிலத்தில் பேசி தன்னருகில் வந்தவனை மீரா கண்கொட்டாமல் பார்த்தாள். அவன் உருவமும் ஆஜானுபாகுவானத் தோற்றமும் பார்க்க, சாதாரணவல்ல மிக மிக அழகன் வகையறாவில் வரக்கூடியவனாக இருந்தான்.

“இவன் தான் கார்த்திக்கோ?” பார்த்தபடியே தனது சிந்தனையில் ஆழ்ந்தாள்.

“ஹைதராபாதில் கார்த்திக்கின் கீழ் பணிபுரியப் போகிறாய்” என சுஜித் சொல்லவும் அவன் மேல் இவளுக்கு நல்ல அபிப்ராயங்கள் இல்லாத போதிலும், சமூக வலைத்தளங்களில் எங்கும் இல்லாத, ஒருபோதும் குழுவினர் புகைப்படங்களிலும் கூட கண்டிராத அவனைக் காண அவளுக்கு ஆர்வம் எழுந்திருந்தது என்னமோ உண்மைதான்.

“ஹாய்… யெஸ் நான் தான் மீரா”, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

“நான் தான் பாஸ்கர், ப்ரொசஸ் ஹெட் ஆஃப்……” தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

“ஓ” முறுவலித்தாள்.

‘இவன் கார்த்திக் இல்லை, அப்படியென்றால் கார்த்திக் பார்க்க எப்படி இருப்பான்?’ அவளது மனதில் சில கணக்கீடுகள் இருந்தன.

அதற்குப் பின்னர் கடந்த சில மணித்துளிகளில் மீராவிற்கு, பாஸ்கருடன் பேசப் பழக மிகவும் இலகுவாக இருந்தது. அவனிடம் அவள் முதன் முறை பழகிய உணர்வே இல்லை. அத்தனை மரியாதையான பார்வை மற்றும் நடத்தைக் கொண்டவனாக, மிகுந்த நட்புணர்வுடன் பழகினான். தனக்கு முன்பின் தெரியாத அந்த இடத்தில் மதியம் சாப்பிட எங்குச் செல்வது? என அவள் அவனிடமே கேட்க அதற்கும் சில விபரங்கள் சொன்னான். ஒன்றாக பணிபுரிய வேண்டுமே தத்தம் அலைபேசி இலக்கங்களை பறிமாறிக் கொண்டனர்.

“தன்னோடு கஃபேடேரியாவிற்கு துணைக்கு வருகின்றானா?” என மீரா கேட்டுப் பார்க்க அவனோ தான் இன்று உபவாசம் எனச் சொல்லி வர மறுத்தான்.

தனது சிறிய கைப்பையை மட்டும் எடுத்துக் கொண்டு உணவைத் தேடிய அவளது பயணம் ஆரம்பித்தது. காலை வந்தது முதல் அவள் கவனித்ததில் அலுவலகத்திலும் சரி, கேஃபேடேரியாவிலும் சரி அவள் பார்த்த ஆண்கள் எல்லாரும் தத்தம் முகத்தை தாடியில் புதைத்திருந்தார்கள்.

“இது என்ன எல்லோரும் தாடியில்? இதுதான் தெலுங்கானா ஸ்டைலா?” அவள் புரியாமல் விழித்திருக்க, பாஸ்கரின் வாட்சப் ஸ்டேடஸ் அன்றிரவு அவளுக்கு வேண்டிய பதிலை தரக் காத்திருந்தது.

கேஃபேடேரியாவில் அத்தனைக் கூட்டம், கூட்டமென்றாலே அவளுக்கு ஒவ்வாமை உணர்வுதான். மூச்சடைத்த உணர்வில் கிடைத்த உணவை வாங்கி, கிடைத்த இடத்தில் அமர்ந்து பரபரவென உண்டு திரும்பினாள். இனி தனக்குத்தானே சமைத்து, மதிய உணவு கொண்டு வருவதென தீர்மானித்தாள். ‘இந்தக் கூட்டத்தில் யாரால் தினம் தினம் வர முடியும்? … ஷப்பா’

மதிய உணவு உண்ட பின்னர் தனது இருப்பிடத்திற்கு திரும்பினாள். இரவு நேர தூக்கமின்மை காரணமாக ஏசியின் குளுமையில் மீராவை நித்திரா தேவி சுற்றிச் சுற்றி வந்து தாலாட்ட, “கார்த்திக் எப்ப வருவான்?”, என மீரா பாஸ்கரிடம் கேட்டுக் கேட்டு களைத்து விட்டாள்.

“அண்ணகாரு இப்ப வருவார்”

“…”

“அண்ணகாரு அப்படி, அண்ணகாரு இப்படி” அவன் பேசியதில்

‘யப்பா உங்க அண்ணகாருவ எனக்கு ரொம்ப நல்லா தெரியும், ஃப்ராடுப்பய, யாரையோ ஏமாத்தி மேனேஜர் ஆகிருப்பான்னு நினைக்கிறேன். நீ வேற அவனை புகழ வேணாம்’ என மீரா மனதிற்குள் பொறுமிக் கொண்டாள்.

இதற்கு மேல் முடியாதென அவள் சாயுங்காலம் ஆறு மணி வரைக்கும் நேரம் கடத்தி விட்டு வீட்டிற்கு புறப்படுகையில் தான் பாஸ்கரின் குரல் உற்சாகமாய் ஒலித்தது.

“அண்ணகாரு…”

‘டேய் கார்த்திக் வந்துட்டியா நீ?’ சலிப்பில் அவனைப் பார்க்க திரும்பிய மீராவிற்கு அவனது முகத்தில் கண்கள் படிந்து மனதில் அதிர்ச்சியின் அலைகள் ஒங்கியறைய, அதனை முகத்தில் காட்டாமல் மறைத்தாள்.

“ஹே கார்த்திக் ஐயாம் மீரா…ஹவ் ஆர் யூ?” முதன் முறை பார்ப்பவனிடம் தனது மனதின் வெறுப்பு, கோபம் எதையும் காட்டாமல், ஏன் அவனது முகத்தைக் கண்டதும் எழுந்த அதிர்வையும் வெகு சாதாரணமாக புறம் தள்ளி கைகுலுக்க மீரா தன் கையை நீட்டினாள்.

மதியம் வர வேண்டியவன் அவளை தவிர்க்கவே, அன்று தாமதமாக வந்திருந்தான் போலும். வந்ததும் தன்னைக் கண்டதும் எப்படியாக அவளது முகபாவனை மாறும் என்பதை கணிக்க அவளையே பார்த்து நின்றிருந்தான்.

அவளது மாறாத முகபாவனைகள், அதிர்ச்சி இல்லாத உடனடிப் பேச்சு மற்றும் அவள் தன்னிடம் கைகுலுக்க கையை நீட்டிய விதம் எல்லாமும் அவனது மனதின் ஏதோ ஒரு ஒரத்தில் ஒரு பூவை பூத்திருக்கச் செய்திருக்க வேண்டும்.

தயங்கி நின்றவன் இன்னும் பதிலுக்கு தனது கையை நீட்டாமல் “ஹாய் மீரா” என்றான். மெதுவாக அவன் கை எழுந்து, பட்டும் படாமல் இவளது கை தழுவி கைகுலுக்கி நீங்கியது.

அவனிடம் புன்னகைத்து பேசியவள் விடைப்பெற்றுச் செல்ல, இங்கிவன் மனதிலோ புயலும், தென்றலும் மாறி மாறி வீசிக் கொண்டு இருந்தன.

மழைத்துளி

வறண்ட பாலையில்

மழைத்துளி போலவே

அன்பற்ற வனாந்திரத்தில்

நாடோடியாய் திரிந்த என்னுள்

சில்லென 

இறங்கியது உந்தன் காதல்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here