மனதோரம் உந்தன் நினைவுகள்_4_ ஜான்சி

0
689

அத்தியாயம் 4

இதயக் கொள்ளளவு

உந்தன் பார்வைகளிலும்,

அகத்தீண்டல்களிலிலும்

இடையறாமல் பொழியும்

காதல் மாமழையில்

பெருக்கெடுத்து நிறைகின்றது

என் இதய அணை.

கொள்ளளவு மிகுந்து

உடைப்பெடுக்கும் முன்னே 

சேதாரங்கள் தவிர்க்க வந்து விடேன்

உந்தன் காதல் சொல்லிவிடேன்.

ஹைதராபாதில் தனது முதல் நாளை முடித்து அலுவலகத்தினின்று திரும்ப வரவேண்டி புறப்பட்டு நின்ற மீரா, எதிர்பாராத நேரத்த்க்ல் கார்த்திக் வந்ததும் அவனுக்கு முகமன் கூறி கைகுலுக்கி, சம்பிரதாய வார்த்தைகள் பேசி காம்பஸிற்கு வெளியே வந்தாள். வெளியே ஷேர் ஆட்டோக்களும், மனைவியரை அழைத்துச் செல்ல வந்திருக்கும் கணவர்களின் பைக்குகளுமாய் அந்த இடம் அமளி துமளிப்பட்டுக் கொண்டு இருந்தது.

தான் அலுவலகத்தினின்று திரும்ப வந்த அந்த ஆறு முதல் ஆறரை மணியிலான நேரம் அந்த காம்பஸில் உள்ள பெரும்பாலான அலுவலகத்தினின்றும் பணிபுரிவோர் வீட்டிற்கு திரும்பும் வழக்கமான நேரம் என அவள் புரிந்துக் கொண்டாள்.

தனது மொபைலை எடுத்து ஓலா புக் செய்ய அடுத்த அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னரே அவளுக்கு ரிக்ஷா கிடைத்தது. வீட்டிற்கு வந்தவள் தன் பெட்டியில் பத்திரமாக வைத்திருந்த மேகி நூடுல்ஸ் செய்து இரவுணவை உண்டுக் கொண்டாள்.

அதன் பின்னர் வீட்டினருக்கான நேரம் அப்பா, அம்மா மற்றும் தங்கைகள் என அலைபேசியில் நேரம் செலவழிந்தது. அந்த அவுட் ஹவுஸ் வசதிகளை வீடியோ காலில் சுற்றிக் காட்ட அவள் வீட்டினருக்கு பரம திருப்தி.

“நாளைக்கு இங்க கடை எங்கே இருக்குன்னு பார்த்து சாமான் வாங்கி சமைக்கணும்மா…”

தாய்க்கு விபரம் சொன்னவள் அலைபேசியை துண்டித்தாள். தன் அறைக்கு வந்து உள்ளே பூட்டிக் கொண்டவளாக அந்த ஒற்றைப் படுக்கையில் தலை சாய்க்க, தன்னை ஒட்டிக் கொண்டே இருக்கும் தங்கைகளை மனம் தேடியது. இத்தனை தனிமையாக தன்னை அவள் ஒருபோதும் உணர்ந்ததில்லை.

சரி, ஒரு சில வாரங்கள் தானே? நேரம் போக்க அலைபேசியை எடுக்க, வாட்சப் ஸ்டேடஸில் யார் யார் என்ன வைத்து இருக்கிறார்கள்? எனப்பார்க்க பாஸ்கரது ஸ்டேடஸ்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன.

குடும்பத்தினரோடு அவன் இருக்கும் புகைப்படங்களை வரிசையாக வர அதனடுத்து குழுவாக இருக்கும் சில புகைப்படங்கள் வர அடுத்து வந்தது அவள் எதிர்பாராதது ஜீனியர் என் டி ஆர் புகைப்படங்கள் சிலவற்றில் அவனும் இருந்தான்.

மீராவுக்கு இப்போது தாடிக் கேடிகளின் காரணம் புலப்பட்டது. அப்பப்பப்பபா தமிழ் நாட்டுக்காரங்களை விட தெலுங்கர்கள் இன்னும் அதிகமான சினிமா பைத்தியமா இருப்பாங்க போலவே?

தான் பார்த்த குழு புகைப்படங்கள் அத்தனையும் “ஜீனியர் என் டி ஆர் இரசிக மன்ற” புகைப்படங்கள் என ஒருவாறாக மீராவுக்கு புலப்பட்டது.

இரசிக மன்றத்தில் பாஸ்கர் பெரிய பொறுப்பில் இருக்கின்றவனாக இருக்க வேண்டும். அதனால் தான் நடிகரோடு சேர்ந்து புகைப்படம் எடுப்பதெல்லாம் சாத்தியமாகி இருக்கும் எனும் எண்ணம் வந்ததும் தாடியோடிருந்த மற்றொருவனது நினைவும் வந்துச் சென்றது.

கார்த்திக்…. ஐயோ கார்த்திக் அவனை எப்படி மறந்தேன்? அவனுக்கு என்னவாகி இருக்கும்? அவனை முதன் முதல் பார்த்ததும் மனதில் ஏற்பட்ட அதிர்ச்சியை மறுபடி உள்வாங்கினாள் மீரா.

கார்த்திக் குறித்து குழுவில் எத்தனை விவாதித்து இருப்போம் ஆனால், ஒருபோதும் யாரும் இதனை சொன்னதே இல்லையே?

அவனைக் குறித்து இவள் என்னென்னமோ நினைத்திருக்க அவனைக் கண்ட போதோ? அவனது வலக்கண் பழுதாகி ஒளியின்றி வெள்ளை நிறமாக அந்தப் பகுதி இருக்க அவனது தாமத வருகையும் நின்றிருந்த விதமும் அவளுக்கு சொன்னதென்ன? அத்தனை தயக்கம் அவனிடத்தில்… புதிதாய் வருகை தருகின்றவள் தன்னைப் பார்த்து அதிர்ச்சியுறுவாளோ? இல்லை பரிதாபம் கொள்வாளோ? என எண்ணியிருப்பான் போலும்.

இவளோ சாதாரணமாகப் பேசி கைகுலுக்க நீட்டியதும் பட்டும் படாமல் அவனது விரல்கள் தொட்டு விலகியதிலும் அவனிடம் பெரும் தயக்கம் வெளிப்பட்டு இருந்தது.

கார்த்திக் என்றாலே மீராவின் மனதில் இருக்கும் சில கசப்புணர்வுகள் மாறாதுதான். இன்று அவனை கண்ட பின்னரோ தாம் இங்கு இருக்கும் சில வாரங்களில் அவனுடன் எந்த பிரச்சனையும் வேண்டாம் என முடிவெடுத்தாள். ஆனால், அப்படி அவள் மட்டும் முடிவெடுத்தால் போதுமா?

அடுத்த நாள் தான் கொண்டு வந்த சில பொருட்களைக் கொண்டு சமைத்து காலையும் உண்டு, மதியத்திற்கும் கொண்டு போக அவள் செய்ய வேண்டிய வேலைகள் வரிசைக்கட்டி நின்றன.

கார்த்திக்கை காலை முதலாக அவள் காணவில்லை. பெரும்பாலான மேனேஜர்களைப் போல தாமதமாகத்தான் வருவான் போலும் என எண்ணியவள், காலை பதினொன்று முதல் வேலைக்கான அந்த மீட்டிங்கை அனுரேகா எனும் ப்ரொஜெக்ட் லீடுடன் நடத்திக் கொண்டிருக்க அவளது சீரியஸான அணுகுமுறை அனுரேகாவை வியப்பில் ஆழ்த்தி இருக்க வேண்டும்.

“உனக்கு ஏராளமான விஷய ஞானம் இருக்கின்றது.” சொல்ல மீரா முறுவலித்தாள்.

“அதுக்காக மொத்தத்தையும் நீ இன்னிக்கே முடிக்கணும்னு நினைக்கிறது தப்பு… நானே போன வாரம் தான் ஆஃபீஸ்ல சேர்ந்திருக்கேன்… நீ இத்தனை டிஸ்கஸ் செய்தால் எப்படி? ச்சில் கர்ள்” சொல்ல மீராவின் புன்னகை விரிந்தது.

“ஹைதராபாத் சுத்தி பார்த்தியா இல்லியா?”

“இனிதான்… போகணும்” தயங்கியே பதிலளித்தாள்.

அனுரேகாவின் பேச்சுக்கள் நிற்காமல் தொடர்ந்தன. பிறந்ததில் இருந்து ஹைதராபாதில் வசிக்கின்றவளாயிற்றே? ஒரு இண்டு இணுக்கு விடாமல் விபரம் சொல்ல தங்கைகளுக்காக வாங்க எண்ணி இருந்த முத்து நகைகள் வாங்க வேண்டிய இடங்களை இவளும் குறித்து வைத்துக் கொண்டாள்.

முத்துக்களுக்கு பெயர் போன ஹைதராபாத், சார்மினாராக்கு பெயர் போன ஹைதராபாத், பிரியாணிக்கு பெயர்போன ஹைதராபாத், நிஜாம்களுக்கு பெயர்போன ஹைதராபாத் அப்பப்பா எத்தனை பெருமிதம் அனுரேகாவின் ஒவ்வொரு பேச்சிலும்…

தனக்கு போரடிக்கவும் அலுவலக பேச்சை வெற்றிகரமாக மாற்றிய அனுரேகாவின் சரளமானப் பேச்சில் கொஞ்ச நேரத்தில் ஏராளமான விபரங்களை தெரிந்துக் கொண்டாள் மீரா.

இவளாக இத்தனையும் விசாரித்து தெரிந்துக் கொள்வதெல்லாம் சாத்தியமே இல்லை. கூகிளின் உதவியில் தான் அத்தனையையும் அறிந்துக் கொள்ள எண்ணி இருந்தாள்.

விபரத்தை இணையத்தில் பெற்றுக் கொள்வதற்கும், அவ்விடத்தில் வசிப்போரிடம் தெரிந்துக் கொள்வதற்கும் ஏராளமான வித்தியாசம் இருக்கின்றதே?

தனக்கு சரளமாக பேச வராவிட்டாலும் பிறர் பேச கேட்கும் பழக்கம் இருப்பதால் தட்டுத் தடுமாறி நடு நடுவே பதிலளித்துக் கொண்டு புன்னகை முகமாய் அமர்ந்திருந்தவள் அந்த அறையின் கண்ணாடிக் கதவை யாரோ தட்டுவது கேட்க திறந்தாள்.

ஹப்பா… எதிரில் நின்றவனைக் கண்டதும் இவளுக்கு மூச்சடைத்தது. முன் தினம் தயங்கி நின்றவனா இவன் எனும் படியாக இருந்தான் கார்த்திக். அவன் முகத்தில் இப்போது தாடியை காணவில்லை. முடியையும் ட்ரிம் செய்து ஒரே நாளில் பராரி நிலையில் இருந்து ஃபெராரியில் பயணிப்பவன் போல மாறி இருந்தான் அவன்.

ஆளை விழுங்கி கபளீகரம் செய்கின்றது போல ஷப்பா அதென்ன சிரிப்பு… பேஸ்தடித்து நின்றவள் அவன் அவளிடம் பேசாமல் அனுரேகாவிடம் தெலுங்கில் பேசுவதை கவனித்து நின்றாள் அவள்.

நானும் தமிழச்சி தான் நீங்க என்ன பேசினாலும் எனக்குப் புரியும் என்பதான பாவனை இவளிடம்.

இப்போது பதவிசாய் மீரா பக்கம் திரும்பினான் கார்த்திக்… அதாவது இதுவரையில் அங்கு அவள் நிற்பதை அவன் காணவில்லையாம். நம்பித்தான் ஆக வேண்டும். இவள் மட்டும் என்ன? அவனை கண்டிருந்தாளா என்ன? இப்போதுதானே அவனை கவனிக்கின்றாள். அதாவது அப்படி காட்டிக் கொண்டிருந்தாள்.

அப்போது அனுரேகா முன்பாக சில விஷயங்களை சொல்லிச் சென்ற கார்த்திக், மீராவிடம் தன்னை வந்து சந்திக்கச் சொன்னான்.

இவள் அவனை சந்தித்துதானே ஆக வேண்டும்? அவளின் ரிப்போர்ட்டிங்க் மேனேஜர் அவனாயிற்றே?

மீட்டிங்கிற்கு அப்புறமாக பாஸ்கரை சந்தித்து அனுரேகாவுடன் பேசியவைகளை விவரிக்க அவனும் சிலவைகளை பகிர்ந்துக் கொண்டான். மறந்தும் ஜீனியர் என் டி ஆர் குறித்து அவள் கேட்கவில்லை. அவரவருக்கு அவரவர் இரசனை அல்லவா?

அன்றே மீராவிற்கு கார்த்திக் ஒரு டாகுமெண்ட் தயாரிக்கும் வேலையை கொடுத்தான். தான் எந்த வேலையாக வந்திருக்கிறோமோ அதற்கும் இந்த டாகுமெண்டேஷனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே என மீரா திணறினாலும் கூட கவனமாக அதனை தயாரித்துக் கொடுக்க அதன் பின்னர் கார்த்திக்கின் மீராவிற்கான மண்டை குடைச்சல்கள் ஆரம்பித்தன.

கடந்த சில நாட்களில் மீராவிற்கு கார்த்திக் மீது இருந்த ஒரு சில எண்ணங்கள் சற்று மாறியிருந்தன. தகுதி இல்லாதவனுக்கு மேனேஜர் பதவி என அவள் எண்ணியிருக்க அவன் பிறரை சிரித்துப் பேசியே வேலை வாங்குவதில் எமகாதகனாக இருந்தான். சும்மாவா எல்லாரும் அவனை அண்ணகாரு, அண்ணகாரு என அழைக்கின்றார்கள்?

பிறரிடம் அன்பாக பேசியே வேலை வாங்குவது ஒரு திறமை அதிலும் புன்னகை மாறாமல் உரிமையாக, கிண்டலும் கேலியுமாக பேசி மிகச்சரியாக வேலை செய்ய வைத்து விடுவதெல்லாம் இதெல்லாம் தனக்கு சுட்டுப் போட்டாலும் வராதே?

மீரா அவனளவு தனக்கு திறமை இல்லை என்றே புரிந்துக் கொண்டாள். சொன்ன வேலையை சிரமேற்றுச் செய்வாள் ஆனால், பிறரை தனது கட்டுக்குள் கொண்டு வருவது? சுத்தமாக வராது.திறமையை வளர்த்துக்கொள்ள எண்ணினாள்.

கடந்த நாட்களில் கார்த்திக் இவளை இவளது தினசரி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதம், மீராவிற்கு அவனது அடக்குமுறைகள் மூச்சு முட்டிப் போய் விட்டது எனும் படி இருந்தன.

அவன் சொல்லி இவள் தயாரித்த டாகுமெண்டில் இதுவரைக்கும் ஐந்து திருத்தங்கள் சொல்லி விட்டிருந்தான். அதுவும் எப்படி முதலில் அ, ஆ படிக்கும் குழந்தைக்கு கற்றுக் கொடுக்கும் விதத்தில் தனக்கு அருகில் அமர வைத்து…ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லி…. தன்னை அவனது லேப்டாப்பில் திருத்தம் செய்ய வைத்து….அப்ப்பப்பா விட்டால் மீராவை மடியில் வைத்துக் கொள்வானோ? ஆரம்பித்தது மீராவின் சோதனைக்காலம்.

பிடித்தம்

எரிச்சல்மூட்டும்

உந்தன் ஆளுமைகள்…

கோபப்படுத்தும் உந்தன்

அதீத உரிமை பாராட்டல்கள்…

ஆக்டோபஸாய் எனை வளைத்து,

கரத்திற்குள் வைத்துக் கொள்ள முயலும்

உந்தன் முயற்சிகள்…

இவைகளில் ஒன்றும்

எனக்கு பிடித்தமாயில்லை

என்பது எவ்வளவு உண்மையோ…

என் பிடித்தமின்மை உணர்ந்து

நீ விலகிச் செல்வதும் ….

அந்நியமாய் நிற்பதுவும் கூட

எனக்கு பிடித்தமில்லை என்று…

என்றேனும் உணர்வாயா?

தீயாய் தகிக்காமல்

பனியாய் குளிராமல்

மிதமாய்க் காதல் செய்ய 

என்று கற்பாயடா நீ?

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here