மனதோரம் உந்தன் நினைவுகள்_5_ஜான்சி

0
328

Manathoram Unthan NinaivukaL_Epi 5_Jansi

அத்தியாயம் 5

அழகானவை

முகத்தை கல்லென வைத்துக் கொண்டு,
நீ காட்டும் பிரியங்கள் எவ்வளவு அழகானவை !

கேலியான பேச்சுகளுக்குள்  வெளிப்படும்
உந்தன் அக்கறைகள் எவ்வளவு அழகானவை !

நீ சொல்லாவிட்டாலும் உனை புரிந்து

புன்னகைக்க வைக்கும்


சொல்லப்படாத உந்தன்

அன்புகள் தான் எத்தனை அழகானவை!

அலுவலகத்திற்கு தினம் தோறும் செல்வதும் தான் எந்த வேலைக்காக சென்றாளோ அந்த வேலையை திறம்படச் செய்வதுவும், கார்த்திக் வந்து அழைத்ததும் சென்று அவனருகே அமர்ந்து அவன் சொல்லும் திருத்தங்களை டாகுமெண்டில் செய்வதும் எனக் கழிய நான்கு நாட்கள் கடந்த பின்னர்தான் மீராவிற்கு,‘தான் என்ன செய்துக் கொண்டிருக்கின்றோம்?’ எனும் விழிப்பு நிலை வந்தது.

‘அடப்பாவி, இவன் சும்மா சும்மா என்னை அழைத்து, அருகில் அமர வைத்து எதையாவது பேசிக் கொண்டு விளையாடிக் கொண்டு இருக்கிறான். நான் அந்த அளவிற்கு இவனுக்கு இளப்பமாய் போய் விட்டேனா?’ கோபத்தில் மீராவிற்கு சுறுசுறுவென வந்தது.

அதிலும் பாஸ்கரது சமீபத்திய செயல்களும் அவளை கடுப்பேற்றி இருந்தன. அவன் மிகவும் நல்ல மனிதன்தான் இல்லையென்றுச் சொல்வதற்கில்லை. ஆனால், தன்னிடம் விபரங்கள் கேட்டு அவன் கார்த்திக்கிற்கு சொல்வதாக இவளுக்கு உள்ளுணர்வு சொல்லியது.

அதென்னமோ தெரியவில்லை? கார்த்திக் மேல் அவர்கள் அனைவருக்கும் அப்படி ஒரு பிரமிப்பு? மதிப்பு? ஏன் அப்படி? இவனென்ன அத்தனை பெரிய இவனா? அவன்?

கார்த்திக்குக்கும் பாஸ்கரது டீமிற்கும் எந்தவித நேரடித் தொடர்பும் இல்லை. மீரா கார்த்திக்கின் டீமில் இருந்து அவர்களுக்கு உதவி செய்ய வந்திருப்பதால் அவள் சார்ந்த எல்லா வேலைகளும் சரிவர நடக்கின்றனவா? என பார்க்க வருவது போலத்தான் அவனது வருகைகள் இருக்கும்.

அதனூடே அந்த பெரிய ஃப்ளோரின் மற்றொரு ஓரத்தில் அமர்ந்துக் கொண்டு, “மீரா இங்கே வாயேன்… ஒரு வேலை…” என இவளை நான்கு நாட்களாக அலைக்கழித்துக் கொண்டு இருந்தான். இதற்கு நடுவில் பாஸ்கரது தகவல் சேகரித்துக் கொடுக்கும் சேவை. குறிப்பாக அவளுக்கு திருமணம் இதுவரை ஆகவில்லை என பாஸ்கர் நான்கு முறைகள் சோதித்து விட்டிருந்தான். அன்றைய தினம் மீராவை கார்த்திக் பார்த்த பார்வையில் இன்னும் அதிகமான வித்தியாசங்கள் இருந்தன.

என்னதான் ஆரம்பத்தில் தன்னைச் சுற்றி நடப்பவைகள் புரியாமல் இருந்தாலும் இப்போது தெளிவாகி இருந்தாளல்லவா? அத்தனையும் மீரா கிரகிக்க ஆரம்பித்தாள்.

தன்னைக் கண்டாலே போதும் அத்தை/மாமா மகளை சீண்டுவதைப் போல கார்த்திக் சீண்டுவதும் “என்னங்க மேடம்? வேலை எப்படி போகுது?” என்பதுவும்…

“வீட்டில சமைச்சு டிஃபன் கொண்டு வர்றியா நீ… அப்படின்னா வெளியில் சாப்பிடறது இல்லையா நீ?” என அவளை ஆச்சரியமாக பார்த்த்ததுவும் என தான் செய்வதை எல்லாம் கண்கொத்திப் பாம்பாய் கவனிக்கின்றவனை அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

அவளது தனிப்பட்ட சுதந்திரத்தின் உள்ளே நுழைந்து அட்டகாசம் செய்துக் கொண்டு இருந்தானவன். அது போக மாநிலம் விட்டு மாநிலம் வந்து ஐந்து நாட்களுக்குள்ளாக இவளிடம் இப்படி நடக்கின்றானென்றால் அவன் மற்றவர்களோடும் அப்படித்தானே நடப்பானாக இருக்கும்? எனும் எண்ணம் வந்த போதே அதனை இவள் மனம் ஏற்காமல் வெகுவாக இடித்துரைத்தது.

அந்த அலுவலகத்தின் ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் அவன் அண்ணகாருவாகத்தான் இருந்தான். அவனைக் குறித்து மற்றவர்கள் அழைக்கும் விதத்தில் அத்தனை மரியாதை தொனித்தது. அதனால் அவனை பெண் பித்தனாக அவளது மனமே ஏற்கவில்லை.

‘அது என்னவாகவும் இருக்கட்டும்? முன் பின் தெரியாத என்னிடம் இவன் இத்தனை உரிமை எடுத்துக் கொள்வது எனக்குப் பிடிக்கவில்லை’ என மனதில் கடுகடுத்துக் கொண்டாள்.

பாஸ்கரிடம் பேசுகையில் முன் திட்டத்துடன் சிலவற்றை கோர்த்தாள். அப்போதுதானே செய்தி கார்த்திக்கை சென்றடையும்? கார்த்திக் தன்னை கட்டுப்படுத்துவது பிடிக்கவில்லை.கார்த்திக் அவள் எதற்காக வந்தாளோ அந்த வேலையை செய்ய விடாமல் தடுக்கிறான். எல்லாவற்றிலும் அவன் மூக்கு நுழைத்தானானால், அவள் செய்ய வேலைகளை தானே செய்வானானால் தான் எதற்கு ஹைதாராபாதில் இருக்க வேண்டும்? கார்த்திக் இப்படியே தொடர்ந்தானானால் தான் அடுத்த வாரமே சென்னைக்கு திரும்பச் செல்ல முடிவெடுத்துள்ளதாகவும், தன் டைரக்டரிடம் சொல்லி தனக்கு விமானச்சீட்டு ஏற்பாடுச் செய்ய சொல்லப் போவதாகவும் சொன்னாள்.

எப்படியும் தகவல் அவனைப் போய் சேர்ந்து விடும் அல்லவா? என்னே திட்டம்? மிக நல்ல திட்டம்.

அன்று வெள்ளிக்கிழமை… தான் ஹைதராபாத் வந்து ஐந்து நாட்களாகினவா? ஆச்சரியம் தான் மீராவுக்கு. அலுவலகத்தில் கிடைத்த ஒரு நட்புடன் அந்த வார இறுதியில் செகந்திராபாத் செல்ல திட்டமிட்டு இருந்தாள். புதிய இடம் பார்க்க எப்படி இருக்கும் எனும் ஆர்வம் இருந்தது. தங்கைகளுக்காக எதை வாங்கலாம் எனும் ஆர்வம் இருந்தது. தனக்காக எதை வாங்கவும் அவளுக்கு தோன்றவில்லை.

அவள் எதிர்பார்த்த வண்ணம் பாஸ்கரிடம் அவள் சொன்ன தகவல் கார்த்திக்கைப் போய் சேர்ந்திருந்தது. வெள்ளிக்கிழமை அவளை அவன் பார்க்க வரவில்லை, அவளை அவன் அழைக்கவில்லை, அவளுடன் பேசவில்லை. அவளை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவுமில்லை.

‘ஹீர்ரே, என் திட்டம் பலித்து விட்டது’ என மனதிற்குள் குதூகலித்தாள் மீரா. 

அடுத்த நாள் சனிக்கிழமை சிம்பிளாக ஜீன்ஸ் டிசர்ட்டில் புறப்பட்டு நின்றவளை அவளது அலுவலகத் தோழி ஆட்டோவில் வந்து அழைத்துக் கொண்டாள்.

மொழியில் வித்தியாசங்கள் இருந்தாலும், கனிவிலும் உபசரிப்பிலும் வித்தியாசம் இல்லாத வகையில் அவளுக்கு தெலுங்கானா மிகவும் பிடித்திருந்தது. ஜனவரியின் மூன்றாம் வாரம் அது… தாம் குடும்பத்தோடு கொண்டாடும் பொங்கலை தவற விட்டதால், அந்த ஜனச் சந்தடியில் கிடைத்த துண்டுப் போடப்பட்ட கரும்புகளை ஆசையாக வாங்கி சுவைத்தாள்.

இவளோடு வந்த தோழி ஊர் சுற்றுவதற்கு ஏற்ற துணையாக இருந்தாள். அவளது தயவில் பல கடைகள் பார்க்க கிடைத்தன. தங்கைகளுக்காக சில அழகான உடைகளை வாங்கினாள். தனக்காகவும் ஒன்றிரண்டு பொருட்களை வாங்கிக் கொண்டாள். மிக அழகான லெஹங்காக்களின் விலைகளை கேட்ட போதோ கண்கள் விரிந்தன. பார்வையால் அவைகளை பருகி விட்டு அமைதியாக இருந்தாள்.

மறுபடி ஜனச்சந்தடிக்குள் வந்த போதோ அவளை அந்த பனங்கிழங்குகள் ஈர்த்தன. நான்கு பனங்கிழங்குகள் வாங்கி பையில் போட்டவள் தோழியோடு அந்த பாரடைஸ் ஹோட்டலுக்குச் சென்றாள்.

“பாரடைஸ் ஹோட்டலில் இருந்து தினம் ஹைதராபாத் பிரியாணிகள் துபாய்க்கு ஏற்றுமதிச் செய்யப் படுகின்றன” அனுரேகா சொன்ன போது ஆச்சரியப்பட்டாள் தான். ஆனால், செகந்திராபாதில் இருந்த பெரும்பாலான உணவகங்களின் பெயர்கள் பாரடைஸாக இருக்க… இதில் எது ஒரிஜினல் பாரடைஸ்? எது போலி பாரடைஸ்? என எப்படித் தெரிந்துக் கொள்வதாம்.

ஐயோ அம்மா என்ன இது பாரடைஸீக்கு வந்த சோதனை? என எண்ணிக் கொண்டு தோழி அழைத்துச் சென்ற அந்த பெரிய உணவகம் (பெயர் பாரடைஸ்தானுங்கோ) சென்று பிரியாணி ஆர்டர் கொடுக்க ஆறி அவலாகி வந்த அந்த பிரியாணியை தோழிகள் இருவரும் மாற்றி மாற்றி பார்த்த வண்ணம், ஒரு கோக கோலா உதவியுடன் உண்டு அல்லது வயிற்றுக்குள்ளாக தள்ளி முடித்தனர்.

“இதை விட ருசியா நானே பிரியாணி சமைப்பேனே? பெயர் என்னமோ ஹைதராபாத் பிரியாணி. என் தங்கச்சிங்க எப்படி இருந்துச்சுன்னு கேட்பாங்களே? நான் என்னன்னு சொல்லுவேன்?” புலம்பிய மீராவைப் பார்த்து தோழி சிரித்து வைக்க இவளுக்கும் சிரிப்பு பீறிட்டது.

தனது அறைக்கு வந்ததும் ஊர் சுற்றி வந்த களைப்பை போக்குவதிலேயே அன்றைய தினம் கழிய, இரவு அலுப்பில் நன்றாக தூங்கி காலை எழுந்தாள். அடிக்கடி வீட்டிற்கு அழைத்து பேசினாலும், வீட்டிலிருந்து அடிக்கடி அழைப்பு வந்துக் கொண்டு இருந்தாலும், அந்த ஞாயிற்றுக் கிழமையின் வெறுமையை அவளால் சகித்துக் கொண்டு இருக்க முடியவில்லை.

தான் வாங்கி வந்த பனங்கிழங்குகளை உப்பிட்டு வேக வைத்து எடுக்க, அதை அப்படியே உண்டிருக்கலாம். ஆனால், விதி யாரை விட்டது. உப்பும் மிளகாயும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து உண்டால் என்ன? என ஆர்வமெழ, நாக்கும் சப்புக் கொட்டவே, பனங்கிழங்கை எடுத்து, நார் நாராக உரித்து துண்டுகளாக்கி மிக்சி ஜாரில் சேர்த்து அரைக்க எடுக்க மீதமிருந்த ஒரு கிழங்கும் அவளைப் பார்த்து கண் சிமிட்டியது.

சரி இதையும் போட்டுவிடலாமென, அதையும் சேர்க்க இப்போது மிக்சி ஜார் முழு அளவும் நிறைந்து விட்டிருந்தது.கவனமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு வலக்கையால் மிக்ஸி ஜார் மூடியை அழுந்தப் பற்றிக் கொண்டு இடக்கையால் ஸ்விட்சை ஆன் செய்ய அதிகளவு பொருட்கள் அதுவும் இளக்கமற்ற கிழங்கை அரைக்க வேண்டி இருந்ததால் குபீரென அழுத்தத்தில் மிக்ஸி ஜார் மேலே எழ அதை அழுத்தி கீழே இறக்கும் நொடி நேரச் செயலில் மீராவின் வலதுக் கையின் நடு மற்றும் ஆள்காட்டி விரல் மிக்ஸியின் உள்ளே இறங்க சில நொடிகளில் விளைந்து விட்டதந்த விபரீதம்.

எங்கிருந்து இரத்தம் வருகின்றதெனத் தெரியாமல் அடித்து ஊற்ற, பயந்து அலற ஆரம்பித்தாளவள். அவள் கையை உதறிய வேகத்தில் அந்த இளமஞ்சள் நிற சீலிங்கில் இரத்தத் துளிகள்.

வெளியில் நின்று அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த கேர் டேக்கருக்கு அவளது கதறல் கேட்கவில்லை. கையை பொதிய துணி தேடும் முனைப்பில் தனது அறைக்கும் சமையலறைக்கும் நடுவில் இரத்தத்தால் பலத்துளிகளில் மீரா கோடுகள் வரைந்திருந்தாள். இரத்தம் வழியும் தன் விரல்களைச் சுற்ற பழைய துணி கிடைக்க வேண்டும் எனத் தேட இது அவளது வீடா என்ன? இருந்தவைகள் எல்லாம் நல்ல உடைகளே. கையை எதனைக் கொண்டுச் சுற்ற எனத் தெரியாமல் துவைக்கப் போட்டிருந்த தனது உடை ஒன்றை எடுத்து அதில் விரல்களைச் சுற்றினாள். அத்துணி சில நொடிகளில் சிகப்பு நிறத்தில் ஈரமானது. அதை எடுத்து தள்ளிப் போட்டு விட்டு, இப்போது மற்றொரு துணியை எடுத்து சுற்றிக் கொண்டாள்.

இரவுடையில் இருந்தவள், துணி மாற்ற இப்போது நேரமில்லை என்பதை உணர்ந்தவளாக ஒரு துப்பட்டாவை இடக்கையால் எடுத்து கழுத்தை சுற்றிப் போட்டுக் கொண்டு, பணத்தையும் பர்ஸையும் எடுத்து வெளியே நடக்க ஆரம்பித்தாள்.

வாசலில் பேசிக் கொண்டிருந்த கேர் டேக்கர் இவளது வருகை பார்த்து உள்ளேச் செல்ல அங்கிருந்த இரத்தத்தைப் பார்த்து அவருக்கு தலைச் சுற்றாததுதான் மிச்சம்.

“நானும் வருகிறேனம்மா” என அவர் சொல்ல,

“இல்லை நான் அந்த ஹாஸ்பிடலை அன்று பார்த்திருந்தேன். போய் வருகிறேன் ஒன்றும் பிரச்சனையில்லை” என புறப்பட்டு வெடுவெடுவென அடுத்த தெருவில் இருக்கும் அந்த பெரிய மருத்துவமனைக்கு நடந்தே சென்று விட்டிருந்தாள்.

தெரியாத ஊரில் யாரை துணைக்கு அழைக்கவாம்? அதிலும் வீடு முழுக்க தான் இரத்த கோலம் செய்து வைத்திருக்க கேர் டேக்கருக்கு அதை துடைக்கவே சரியாக இருக்கும் என எண்ணி அவரை துணைக்கு அழைக்க விழையவில்லை.

மருத்துவமனைச் சென்று தனது விபரம் தெரிவிக்க பத்தோடு பதினொன்று என அவளை அவர்கள் உபசரிக்க, விரல்களில் கசிந்த இரத்தம் இப்போது நின்று விட்டிருந்தது.

‘இந்த கையை வைத்து எப்படி நாளை அலுவலகம் செல்வதாம்?’ என நினைவு வரவும் தனது அலைபேசி எடுத்து கார்த்திக்கிற்கு இடது கையால் சுருக்கமாக செய்தி அனுப்பினாள்.

அவனிடமிருந்து வந்த பதில் செய்தியில் மிகுந்த பதற்றமிருந்ததை கண்டும் காணாமல் அவள் தவிர்த்தாள். அவளது சிந்தனை எல்லாம் அடுத்த நாள் தாம் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகளில் இருந்தது.

அரை மணி நேரம் தாண்டியும் இவளைக் கண்டுக் கொள்ளவில்லையோ? என மீரா நினைத்திருக்க அங்கே ஒரு குட்டி ஆபரேசன் போன்ற ஏற்பாடுகள் அவளுக்காக நடந்துக் கொண்டிருந்தன.

நர்ஸ் “மேம் வாங்க” என அவளை உள்ளே அழைத்து சென்றார். மருத்துவர் இவளது விரலில் தையல் போடுவதற்கான ஏற்பாட்டோடு இருந்தார். நடுவிரலும், ஆள்காட்டி விரலும் என சின்னதான அவ்விரல்கள் இரண்டிலும் விபத்து நிகழ்ந்த மூன்று நொடிகளில் 4 பிளேடுகள் தீற்றிய 12 வெட்டுக்கள். அதுவும் அத்தனை நெருக்கமாக சீவி இருக்க அவள் விரல்கள் தப்பித்தது இறைவன் செயலோ?

இவள் ஒவ்வொரு தையலுக்கும் வெகுவாக வீறிட்டாள். தாய் தந்தை இல்லாது தனித்திருக்கும் இத்தருணம் வலிகள் மிகுந்தன போலும்.

“என்ன மேடம் இப்படி பயப்படுறீங்க? கத்துறீங்க?” மருத்துவர் சலிக்க

“ரொம்ப வலிக்குது டாக்டர்” முனகினாள்.

பெரும் பிரயாசையுடன் அடுத்த முக்கால் மணி நேரத்தில், அந்த இரண்டு விரல்களிலும் ஐந்து தையல்களை மருத்துவர் போட, களைப்பாக வெளியே வந்தவளை எதிர் கொண்டது எப்போது வந்தான் எனத் தெரியாமல் அந்த ரிசப்ஷனில் அமர்ந்திருந்த கார்த்திக் தான்.

“ஏந்திரா? சால நொப்பெஸ்துந்தரா?” (என்னடா? ரொம்ப வலிக்குதா?) என அவன் தவிப்புடன் கேட்ட போது, மொழி புரியாத போதிலும் கூட அவனது தவிப்பில் மீரா செயலற்று நின்றிருந்தாள்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here